வெள்ளி, 14 டிசம்பர், 2018

மத்திய அரசுத் துறைகளில் இடஒதுக்கீட்டின் நிலை என்ன?

மத்திய அரசுப் பணியிடங்களில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் 1.1.2012 வரை 16.55 விழுக்காடும், 1.1.2016 வரை 21.57 விழுக்காடும் அளிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1993ஆம் ஆண்டிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசுப்பணியிடங்களில் 27 விழுக்காடு அளிக்கப்பட வேண்டும் என்பது நடைமுறைக்கு வந்தது. ஆனால், தொடர்ச்சியாக பின்பற்றப்படவில்லை என்று மக்களவையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் எழுத்துமூலமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.

சமூகநீதிக்காவலர் வி.பி.சிங் பிரதமராக இருந்தபோது, மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு  மண்டல் குழு பரிந்துரையின்படி நடைமுறைப்படுத்தப்பட்டது.

ஆனால், தொடர்ச்சியாக மத்திய அரசுப்பணிகளில் 27 விழுக்காடு நடைமுறைப்படுத்தப்படாத சமூக அநீதி அவலம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. (கல்வியில் இடஒதுக்கீடு 2006 முதல்தான் செயல்பாட்டுக்கு வந்தது)

மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு எழுத்து மூலம் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் அளித்த பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:

மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு கடந்த 1.1.2012 அன்று 16.55 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டது. 1.1.2016இல் சற்று கூடுதலாகி 21.57 விழுக்காடு அளிக்கப்பட்டது.

மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கான பிரதிநிதித்துவம் அளிக்கும்வகையில் 1993ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 27 இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதிலிருந்து, அதன்பிறகு அதைவிட குறைவாகவே  வழங்கப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசுப்பணிகளில் பட்டியல் வகுப்பினருக்கு 15 விழுக்காடு, பழங்குடியினருக்கு 7.5 விழுக்காடு, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். 1.1.2016 தேதி வரை மத்திய அரசுப்பணிகளில் இடஒதுக்கீட்டின்படி பணி நியமனங்கள் குறித்து 78 அமைச்சகங்களிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்களின்படி, பட்டியல் இனத்தவர்களுக்கு 17.49 விழுக்காடும், பழங்குடியினத்தவர்களுக்கு 7.47 விழுக் காடும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 21.57 விழுக்காடும்  அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், மத்திய அரசின் 10 அமைச்சகங்கள் மற்றும் துறைகளில்  90 விழுக்காட்டளவில் பணியாளர்களுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினத்தவர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டு இடங்களில் ஏற்கெனவே நிரப்பப்படாத இடங்களாக 92,589 உள்ளன. அவற்றில் 1.1.2017 வரை நிரப்பப்பட வேண்டிய ஒதுக்கீட்டுப்பணியிடங்கள் 63,876 ஒதுக்கீட்டின்படி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

மத்திய அரசு பணியாளர்  மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து அமைச்சகங்கள், அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது. அச்சுற்றறிக்கையின்படி, ஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட வேண்டிய பணியிடங்கள்குறித்துஆராய்ந்திட ஒரு குழுவை அமைத்திட வேண்டும். நீண்ட காலமாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதற்கான காரணத்தைக் கண்டறிய வேண்டும். அதில் உள்ள தடைகளைக் களைந்திட வேண்டும். மேலும், அதற்கெனவே தனியே பணிநியமன முன்னெடுப்புகளை செய்திட வேண்டும்" என்று மக்களவையில் எழுத்து மூலமாக அளிக்கப்பட்ட அறிக்கையில் மத்திய அமைச்சர் ஜிதேந்திரசிங் குறிப்பிட்டுள்ளார்.

இடஒதுக்கீடு சட்டப்படி இருந்தும் செயல்படுத்துவதில் எந்தளவு அநீதி தலைதூக்கி நிற்கிறது என்பதற்கு மத்திய அமைச்சரே இதன் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துவிட்டார்.

வேலை வாய்ப்பில் அளிக்கப்பட்ட புள்ளி விவரம் இது. மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப் பட்டோருக்கும், பிற்படுத்தப்பட்டோருக்கும் எந்தளவு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் முக்கியமாகும். எதிர்க் கட்சியினர் இது குறித்தும்  தகவலைப் பெற்றுத் தருவதற்கு உரிய வகையில் முயற்சி எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

சட்டங்களும், ஆணைகளும் ஏட்டுச் சுரைக் காய்களாக இருந்து  பயனில்லை. சமூக நீதியாளர்கள் மத்தியில் மேலும் விழிப்புணர்ச்சி தேவை; அந்தப் பலம்தான் சட்டத்தை காயடிக்கும் உயர் ஜாதி மனப்பான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தும்.
- கவிஞர் கலி.பூங்குன்றன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக