பக்கங்கள்

சனி, 27 ஜூலை, 2019

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?

சமுகநீதியின் மீது விழுந்த பேரிடி

ஸ்டேட் வங்கி நடத்திய பணியாளர் தேர்வின் முடிவு காட்டுவது என்ன?


தாழ்த்தப்பட்டோருக்கான கட் ஆஃப் மார்க் 61.25;


உயர்ஜாதி ஏழைகளுக்கான கட் ஆஃப் மார்க் 28.5


பகற்கொள்ளையைத் தடுத்து நிறுத்திட ஒடுக்கப்பட்ட மக்களே கிளர்ந்தெழுவீர்!


பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு  அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!




உயர்ஜாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சூழ்ச்சி வலை என்று நாம் எச்சரித்தது உண்மையாகிவிட்டது. ஸ்டேட் பாங்க் நிர்வாகம் நடத்திய எழுத்தர் தேர்வில் தாழ்த்தப் பட்டோருக்குக் கட் ஆஃப் மார்க் 61.25; ஆனால், உயர்ஜாதி ஏழைகளுக்கோ 28.5. இந்த பயங்கரமானப்         பகற்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும்  என்றும், பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் சுழன்றடிக்கட்டும் என்றும் திராவிடர் கழகத் தலைவர்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  விடுத்துள்ள மிக முக்கிய  அறிக்கை வருமாறு:

பாரத ஸ்டேட் வங்கியின் எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் நேற்று (ஜூலை 23, செவ்வாய்க்கிழமை) இணையத்தில் வெளியிடப்பட்டன. எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கான  தேர்வை லட்சக்கணக்கானோர் எழுதி இருந்தனர்.

பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்ற பெயரில், உயர்ஜாதி ஏழை பார்ப்பனர்களுக்கு 10% இட ஒதுக்கீடு சட்டம், நரேந்திர மோடியின் பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட பின்னர் நடைபெறும் முதலாவது தேர்வு முடிவுகள் - சமுகநீதியை குழிதோண்டிப் புதைக்கும் வகையில் அமைந்துள்ளன.

தாழ்த்தப்பட்டவர்களைவிட உயர்ஜாதி  ஏழைகளுக்கான  கட்-ஆஃப் மார்க் மிகவும் குறைவு!


100 மதிப்பெண்களுக்கான இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான கட் ஆஃப் மதிப்பெண்ணை ஸ்டேட் பாங்க் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி,

பொதுப் பிரிவு - 61.25

தாழ்த்தப்பட்டோர்   - 61.25

பழங்குடியினர்  -  53.75

பிற்படுத்தப்பட்டோர் (OBC)  -  61.25

உயர்ஜாதி ஏழைகள் (EWS) -  28.5

என்ற  அதிர்ச்சி தரும் விவரம் வெளிவந்துள்ளது.

சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப் பட்ட (Socially and Educationally Backward) மக்களுக்குக் கிடைத்திருக்கவேண்டிய இடங்களை, EWS என்ற அக்கிரமமான, சட்ட விரோதமான சமுக அநீதிச் சட்டத்தின்மூலம் பார்ப்பனர்கள், உயர்ஜாதியினர் தட்டிப் பறித்துள்ளனர்.

ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானத்துக்குக் கீழ்பெறுவோர் ஏழைகள்'' என வரம்பு நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட சமுகத்தைச் சேர்ந்த ஏழைகள், உயர்ஜாதி ஏழைகளை விட மிக அதிகமான மதிப்பெண் பெற்றால்தான் வேலை பெற முடியும் என்ற நிலை இதன்மூலம் உருவாக்கப் பட்டுள்ளது.

சந்திக்கு வந்த "தகுதி - திறமை!''


பார்ப்பனர்கள் நலனுக்காக, பா.ஜ.க. அரசால் கொண்டுவரப்பட்ட இந்த சட்டம், தகுதி - திறமை' என இத்தனைக் காலம் பார்ப்பனர்கள் போட்டு வந்த தகுதி- திறமை' கூப்பாட்டை சந்தியில் நிறுத்தி இருக்கிறது.

உயர்ஜாதி பார்ப்பனர்களுக்கு 28.5% மதிப்பெண் எடுத்தால் வங்கி வேலை; அதுவே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 61.25% மதிப்பெண் எடுத்தால்தான் வேலை என்பது எவ்வளவு பெரிய அநீதி! அக்கிரமம்! சமுகநீதியின் அடித்தளத்தில் அமிலத்தை ஊற்றிய கொடுங்கோன்மை அல்லவா!

அன்றே எச்சரித்தோம் - நடந்தே விட்டது!


இட ஒதுக்கீட்டில் பொருளாதார அளவுகோலை சேர்ப்பது சமுகநீதியின் அடித்தளத்தையே நொறுக்கி விடும் என்று நாம் எச்சரித்தோம். அந்த எச்சரிக்கை இன்று நூற்றுக்கு    நூறு உண்மையாகி விட்டதே! பார்ப்பன, உயர்ஜாதியினருக்கு தனி பந்தி விரிக்கப்பட்டு, அமோக விருந்தை பா.ஜ.க. அரசு படைத்திருக்கிறது.

நியாயமாக, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு சேரவேண்டிய இடம், சூழ்ச்சியால் இன்று தட்டிப் பறிக்கப்பட்டு கபளீகரம் செய்யப்பட்டுள்ளது. சமமற்ற சமுகத்தில் -  சமத்துவத்தை ஏற்படுத்து வதற்காக சம வாய்ப்பு வழங்கிடும் இட ஒதுக்கீடு முறையை, பொருளாதார இட ஒதுக்கீடு கொண்டு வந்து ஒழித்துக்கட்டி விட்டனர்.

தகுதி - திறமைக் கூச்சல் போட்டவர்கள் எங்கே? எங்கே?


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தந்தால், தகுதியற்றவர்களும், திறமையற்றவர் களும் டாக்டர்களாக, அதிகாரிகளாக வந்துவிடுவார்கள் என்று கூப்பாடு போட்டவர்கள் இந்த அநீதிக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள்?

எந்த வாதத்தையும் அவர்களின் சுயநல தராசு தட்டில் போட்டு நிறுத்திப் பார்த்தே முன் வைப்பார்கள்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அதிக மதிப்பெண் பெற்ற  இளைஞர்களுக்குச் சேரவேண்டிய வேலை வாய்ப்பு, குறைந்த மதிப்பெண்கள் பெற்ற பார்ப்பனர்களால் பறிக்கப் பட்டுள்ள கொடுமையிலும் கொடுமையை என்ன வென்று சொல்லுவது!

பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோர், பிற் படுத்தப்பட்டோர் மூவருக்கும் கட் ஆஃப் மார்க் 61.25 என்று ஒரே நிலையில் வந்தது எப்படி? என்ன மந்திரம்', தந்திரம்?'

மற்றொரு ஆபத்து; மோசடி!


பொதுப் பிரிவினர், தாழ்த்தப்பட்டோருக்கான, கட்ஆஃப் மதிப்பெண் 61.25, பழங்குடியினருக்கான கட் ஆஃப் மதிப்பெண் 53.75 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவே ஒரு அநீதி, சட்ட விரோத ஏற்பாடோ என அச்சம் வருகிறது. 61.25-க்கும் அதிகமாக உயர்ந்த மதிப்பெற்ற எஸ்.சி., ஓ.பி.சி., மாணவர்கள், பொதுப் பிரிவினராகக் கருதப்படாமல், அவர்களது இட ஒதுக்கீட்டுப் பிரிவின்கீழ் சட்ட விரோதமாகக்  கணக்கிடப்பட்டதன்  காரணமாக, எல் லோருக்கும் ஒரே கட் ஆஃப் என அறிவிக்கப்பட் டுள்ளதோ என்ற அய்யம் எழுகிறது.

அதிக ரேங்க் எடுப்பவர்களை - அவர்கள் எந்த ஜாதியை சேர்ந்தவராயினும் பொதுப் பிரிவில் சேர்க்கப் பட்டு கணக்கிடப்பட வேண்டும்; அதுதான் சட்டம். உச்சநீதிமன்ற தீர்ப்பும் அதுதான். அனைத்தையும் புறக்கணித்து பார்ப்பான் பண்ணையம் கேட்பாரில்லை என்ற தோரணையில் வேக வேகமாக நடைபெற்றுக் கொண்டுள்ளது.

தொடக்கமே  பேராபத்து! பேராபத்து!!


தொடக்கமே பேராபத்தாக உள்ளது. நாடாளுமன்றம் நடந்துகொண்டு இருப்பதால், இந்தப் பிரச்சினையை தமிழ்நாடு உறுப்பினர்கள் கிளப்பிடவேண்டும் - கிளப்பிடவேண்டும்!

உயர்ஜாதி ஏழைகள் என்ற பசப்பு வார்த்தை எவ்வளவு ஆபத்தானது என்பதற்கு ஸ்டேட் பாங்க் தேர்வின் முடிவு மூலம் அப்பட்டமாகத் தெரிந்துவிட்டது.

கிளர்ந்தெழுவீர்! கிளர்ந்தெழுவீர்!


எந்த விலை கொடுத்தேனும் இந்த ஆபத்தினைத் தடுத்து நிறுத்தியே ஆகவேண்டும்!

போராடிப் போராடிப் பெற்ற சமுகநீதி பார்ப்பன - பனியா ஆட்சியில் சவக் குழியில் தள்ளப்படுவதை அனுமதிக்க முடியாது.

கிளர்ந்தெழுவோம்! கிளர்ந்தெழுவோம்!

பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு அலை இந்தியா முழுவதும் வெடிக்கட்டும்! வெடிக்கட்டும்!!

 

கி.வீரமணி,


தலைவர் திராவிடர் கழகம்


சென்னை

24.7.2019

வெள்ளி, 26 ஜூலை, 2019

நாக்பூரில் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் தலைவர்கள் கூட்டம்



நாக்பூர், ஜூலை 21 நாக்பூர் நகர் சட்டமன்ற விடுதி அரங்கத்தில், நேற்று (20.7.2019)  மகாராட்டிரம் மற்றும் அருகாமை மாநில  பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் தலைவர்களின் கூட்டம் பலிராஜ் தோத்தே, பிரதீப் தோப்லே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு, தற்போது பிற்படுத்தப்பட்டோர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு எதிர்த்திட வேண்டும் என்று கழகத்தின் வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான கோ.கருணாநிதி வலியுறுத்தினார்.

தந்தை பெரியார், ஆசிரியர் நூல்கள் அளிப்பு




நேற்று (20.7.2019) அன்று நாக்பூர் நகரில், மகாராட்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரகாஷ் கஜ்பியீ அவர்களைச் சந்தித்து, தந்தை பெரியாரது நூல்கள், 69% இட ஒதுக்கீடு - ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூல்கள் அளிக்கப்பட்டன. மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். தந்தை பெரியாரின் தொண்டினையும், திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகளையும் பாராட்டினர்.

- விடுதலை நாளேடு, 21.7.19

புதன், 24 ஜூலை, 2019

10 சதவிகித இடஒதுக்கீட்டை அமல்படுத்த பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களை பணிநீக்கம் செய்ய முடிவா?

டில்லி பல்கலை. பேராசிரியர்கள் கண்டனம்


புதுடில்லி, ஜூலை 18 பொரு ளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக் கீட்டை அமல்படுத்த, டில்லி பல்கலைக் கழகம் மிகவும் அவசர கதியில் நடவடிக்கை எடுத்திருப்பதன் காரணமாக தற்சமயம் பணியிலிருக்கும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் வேலை நீக்கம் செய்யப்படும் நிலை ஏற்பட் டிருக்கிறது.

இதனைக் கண்டித்து, டில்லி பல்கலைக்கழக ஆசிரி யர் சங்கத்தின் தலைமையில், ஆசிரியர்கள், இரண்டு நாட் கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.

மத்திய பா.ஜ.க. அரசு, 10 சதவிகித இடஒதுக்கீடு தொடர்பான மசோதாவை, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தபோதே, அவசரகதியில் மசோதா கொண்டுவரப்பட்டு இருப்பதாகவும், பல்வேறு கேள்விகளுக்கு இதில் சரி யான விளக்கங்கள் இல்லை என்றும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. அதனை உறுதிப்படுத்தும் வகையில், டில்லி பல்கலைக் கழக நிகழ் வுகள் நடந்துள்ளன.

டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத் தலைவர்


பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், டில்லிப் பல் கலைக் கழக நிர்வாகமானது, தற் போது பணியிலிருக்கும் தற்காலிக ஊழியர்கள் நூற் றுக்கணக்கானவர்களை வேலையை விட்டு நீக்கும் முயற்சியில் இறங்கியிருப்ப தாக, டில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ரபிப் ராய் குற்றம் சாட்டி யுள்ளார்.

டில்லி பல்கலைக் கழக நிர்வாகத்தின் நடவடிக்கை சரியல்ல என்றும், தற்சமயம் பணியிலிருக்கும் ஆசிரியர்கள் பணிநீக்கம் செய்யப்படாத விதத்தில் கூடுதல் பணியி டங்கள் உருவாக்கும்வரை, பொருளாதார ரீதியாக நலி வடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீடு அமலாக்கத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

- விடுதலை நாளேடு, !8.7.19

வியாழன், 18 ஜூலை, 2019

10 % இட உரிமைப் பற்றிய முக்கிய புள்ளிவிவரம்.

ஒவ்வொருவரும் கண்டிப்பாக படிக்கவும்; மற்றவர்களுக்கு பகிரவும்.

+2 தேர்வு எழுதியவர்கள் 9.27 லட்சம் மாணவர்கள்.

அதில்,
BC - 3.5 லட்சம் பேர் (38%),
MBC - 2.5 லட்சம் பேர் (27%),
SC - 2 லட்சம் பேர் (22%),
BCM - 60,000 பேர் (6%),
SCA - 30,000 பேர் (3%),
FC - 25,000 பேர் (3%),
ST - 10,000 பேர் (1%).

தற்போதுள்ள இட உரிமைப் படி,
BC - 26.5%,
MBC - 20%,
SC - 15%,
BCM - 3.5%,
SCA - 3%,
ST - 1%,
மீதமுள்ள 31% இடங்களில் அனைவரும் போட்டியிடலாம்.

தற்போது 10% இட ஒதுக்கீட்டை முன்னேறிய வகுப்பை (FC) சார்ந்தவர்களுக்கு அளித்தால் பாதிக்கப்பட போவது BC, MBC, BCM, SC, SCA, ST என அனைவரும் தான்.

இதில், கொழுத்த லாபம் அடையபோவது FCக்கள். தமிழ்நாட்டில் 3% உள்ள அவர்களுக்கு மூன்று மடங்கு பலன் அளிக்கும் மசோதாவை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது. +2 முடித்த 25,000 FC மாணவர்கள் அனைவருக்கும் MBBS, BE, BSC, BA என அனைத்திலும் நேரடியாக உள்ளே செல்ல வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்துள்ளது. 

BC, MBC, BCM, SC, SCA, ST என அனைவரும் விரல் சூப்பி வேடிக்கைதான் பார்க்க வேண்டும்.

தற்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை. மாநில அரசு நினைத்தால் இந்த கொடுமையை தவிர்க்க முடியும்.

இந்த புள்ளி விவரங்களை அரசின் காதுகளுக்கு செல்லும்வரை பகிரவும்.

இல்லையேல், பாதிக்கப்பட போவது நீயும் நானும் தான். பகிரவும்.

நன்றி, இளையதலைமுறை.

செவ்வாய், 16 ஜூலை, 2019

இந்திய அறிவியல் கழகத்தில்நூறாண்டுகள் கழிந்துமுதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்தார்

நேற்றைய தினம் மாநிலங்களவையில் உரையாற்றிய காங்கிரஸ் மூத்ததலைவர் பி.கே.ஹரிப்ரசாத் இந்திய அறிவியல் கழகம் (Indian institute of science) துவங்கப்பட்ட 1907 ம் ஆண்டிலிருந்து நூறாண்டுகள் கழிந்து 2007 ம் ஆண்டில்தான் முதல் பிற்படுத்தப்பட்ட மாணவர் ஒருவர் சேர்ந்ததாக சொன்னார். அதுவும் மறைந்த அர்ஜூன் சிங் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது உயர்கல்விநிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியதன் விளைவாக என்கிற கூடுதல் தகவலையும் அவர் சொன்ன போது மிகுந்த அதிர்ச்சியாகத்தான் இருந்தது..

யோசித்துப்பாருங்கள் ஒரு நூறாண்டுகளில் ஒரு பிற்பட்டவகுப்பினர்கூட நுழைய முடியாமைக்கு தகுதியின்மை மட்டுமா காரணமாக இருக்க முடியும்..? இந்த அநீதி எவ்வளவு குரூரமானது..?

இதற்கெல்லாம் வராத அறச்சீற்றம் 10% அரியவகை ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்தால் மட்டும் பொத்துக்கொண்டு வருகிறதென்றால் அது எவ்வளவு தேர்ந்தெடுத்த கயமைத்தனம்..?

பக்கத்து வீட்டில் அடுத்த தெருவில் விரும்பிய படிக்க முடியாமல் அரசு வேலை கிடைக்காமல் கிருஷ்ணா ஸ்வீட்நெய் மைசூர்பா வாங்கி உண்ண வழியில்லாமல் இருக்கும் அரியவகை ஏழைகளின் சோகம் பிழியும் கதைகளை தூக்கிக்கொண்டு வருபவர்கள் எவரும் துளிகூட நேர்மையற்ற சல்லிகள்.. இரக்கவுணர்வினை சுரண்டி எத்திப்பிழைக்கவும் எத்திப்பிழைப்பவர்களுக்கு சாமரம் வீசுபவர்களுக்கும் இந்த உண்மைகள் சுடுவதேயில்லை..

இந்த மண்ணில் சமூகநீதிக்கான போராட்டம் நேற்று துவங்கியதுமில்லை.. இன்று முடிவதுமில்லை.. நமது காலத்தில் அது தொய்வடைந்தது என்கிற அவப்பெயரின்றி இதற்காக உறுதியுடன் நின்றாக வேண்டியதொன்றே நம் வரலாற்று கடமை.. டாட்..

From Muruganantham Ramasamy
-  பகிரி வழியாக, 16.7.19

திங்கள், 15 ஜூலை, 2019

வாரணாசி: பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 3 ஆவது மாநாடு

கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்கவேண்டும்!


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவரிடம் கோரிக்கை மனு அளிப்பு




வாரணாசி, ஜூலை 15, உத்தரபிரதேசம் வாரணாசியில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மூன்றாவது மாநில மாநாடு 13.7.2019 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. நலசங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் அமிர்தான்சு அனை வரையும் வரவேற்று குறிப்புரையையும் வழங்கினார்.

மாநாட்டில் தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி, அகில இந்திய பிற்படுத் தப்பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி மற்றும் யூனியன் வங்கியின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு உரையாற்றினர்.

தனது உரையில், சமுக நீதிக் களத்தில் தமிழகம் எத்தகைய முன் னேற்றம் அடைந்துள்ளது; தந்தை பெரியாரின் உழைப்பினாலும், போராட்டத்தாலும் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் உட்பட தற்போது 69 விழுக்காடு சட்டம் நிறைவேற்றியது வரை திராவிடர் இயக்கம், பெரியார் இயக்கம் செய்த மகத்தான சாதனைகளை, காணொ லியுடன் கோ.கருணாநிதி விரிவாக எடுத்துரைத்தார். வருகை தந்த அனைவரும் பலத்த கரவொலியுடன் வரவேற்றனர்.

தமிழர் தலைவர் எழுதிய நூல் அளிப்பு




சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசுடன், திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பெரியாரும் அம்பேத்கரும்'' எனும் ஆங்கில நூல் அளிக்கப்பட்டது.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட வேண்டும், நீதித்துறை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு உள்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டு அரங்கத்தில் தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், சமுக நீதிக் காவலர் வி.பி.சிங், மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலா ஆகியோரது கருத்துக்கள் பதாகைகளாக வைக்கப்பட்டன. தந்தை பெரியாரை முதன்மைப்படுத்தி, வட நாட்டில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் வாரணாசியில் நடைபெற்ற மாநாடு இது என்பது குறிப்பிடத் தக்கது.

கோரிக்கை மனு


தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலை வரிடம் அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

மனுவின் சாராம்சம்




அகில இந்திய பிற்படுத்தப்பட் டோர் கூட்டமைப்பின் சார்பில் யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொள்ள வாரணாசிக்கு 13.7.2019 அன்று வருகை தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி அவர்களிடம், பிற்படுத்தப் பட்டோர் நலன் குறித்த கோரிக்கை மனுவினை, கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி அளித்தார்.

மண்டல் குழு பரிந்துரை முழு வதுமாக நிறைவேற்றப்பட்டு, பிற் படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக் கீடு 52 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும்; கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும்; மத்திய அரசில் பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சரவை உருவாக்கப்பட வேண்டும்; பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மற்றும் தனியார் துறையில் இட ஒதுக்கீடு; 2021- இல் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண் டும்; இணை செயலாளர்கள் பதவிக்கு நேரடி நியமனம் செய்யப்படுவதில் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; குரூப் சி மற்றும் குரூப் டி பதவிகளில் அந்தந்த மாநிலத்தில் உள்ளோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட வேண் டும்; தமிழகத்தில் உள்ளது போல், இட ஒதுக்கீடு சட்டம் நிறைவேற் றப்பட வேண்டும் ஆகிய கோரிக்கை கள் உள்ளடங்கிய மனு அளிக்கப் பட்டது.

- விடுதலை நாளேடு, 16.7.19

சனி, 13 ஜூலை, 2019

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தலைவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சந்தித்து கோரிக்கை மனு



சென்னை, ஜூலை 9- தேசிய பிற்படுத்தப் பட்டோர் ஆணையத்தலைவர்களை அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு, அரசமைப்புப்படியான தகுதியும், அதிகாரமும், அரசமைப்புச் சட்டத்தின்படி அளிக்கப்பட்ட பிறகு, அரசுப் பயணமாக முதன் முறையாக, ஆணையத்தின் தலைவர்கள் 8.7.2019 அன்று அய்தராபாத் வருகை தந்தனர். அய்தராபாத் லேக்வியூ தில்சுக் விருந் தினர் மாளிகையில் அரசு அதிகாரிக ளைச் சந்தித்த பின்னர், அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்புப் பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் நிர் வாகிகளைச் சந்தித்தனர்.

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், தேசிய பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஆணையத்தின் தலைவர் டாக்டர் பகவான் லால் ஷானி, துணைத்தலைவர் டாக்டர் லோகேஷ் குமார் பிரஜாபதி, உறுப்பினர்கள் ஆசாரி தல்லோஜி, டாக்டர் சுதா யாதவ், ஷைலேந்திர சிங் பாடீல் ஆகியோர் ஆகியோரைச் சந் தித்து, பிற்படுத்தப்பட்டோர் நலன் குறித்த கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 52 விழுக்காடாக உயர்த்தப்பட வேண்டும், மண்டல் பரிந்துரையை முழுவதுமாக நிறைவேற்றி, பதவி உயர்வு, நீதித்துறை, தனியார் துறையில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளித்திட வேண்டும், பிற்படுத்தப்பட் டோர் நலனுக்காக தனியே பிற்படுத் தப்பட்டோர் துறை அமைக்க வேண்டும், கிரிமிலேயர் தொடர்பான நாடாளு மன்ற பிற்படுத்தப்பட்டோர் குழு அளித் திட்ட அறிக்கையின் அடிப்படையில் கிரிமிலேயர் முறையை முற்றிலுமாக ஒழித்திட வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் பிற்படுத் தப்பட்டோருக்கு ஏற்பட்டுள்ள ஓபிசி சான்றிதழ் பெறும் முறை சீரமைக்கப்பட வேண்டும், 2021இ-ல் சாதிவாரி கணக்கெ டுப்பு நடத்தப்பட வேண்டும் ஆகிய முக் கிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு உள்ளன.

பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப் பின் சார்பில் ஜெ.பார்த்தசாரதி, செயல் தலைவர், கோ.கருணாநிதி, பொதுச் செயலாளர், எஸ்.ரவிக்குமார், துணைப் பொதுச் செயலாளர், துணைத்தலைவர் கள் வி.தானாகர்னா சாரி, உ.சின்னையா, செயலாளர்கள் ஜி.ராம்ராஜ், ஜி.பாண்டு, ஆரோக்கிய ராஜ், பாங்க் ஆப் பரோடா, நாகேஷ்குமார், யூனியன் வங்கி, கணேஷ், காப்பீட்டுக் கழகம்,  மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

ஆணையத்திற்கு அரசமைப்புப்படி யான தகுதியும், அதிகாரமும் அளிக் கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை, அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு புது தில்லியிலும், பல மாநிலங்களிலும் மாநாடுகள், கருத்தரங் கங்கள், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து நடத்தி, வெற்றி பெற்றது என்பது குறிப் பிடத்தக்கது.

இவ்வாறு அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் -கோ.கருணாநிதி தெரிவித்து உள்ளார்.

-  விடுதலை நாளேடு, 9.7.19

இப்பொழுது நம்முன் இருப்பது கொள்கையா? இடங்களா? என்பதே!

உருண்டையில் தேன் தடவும் வேலை

* தமிழ்நாடு அரசு ஒரு நூற்றாண்டு திராவிட இயக்க சமுகநீதியைக் காப்பாற்றவேண்டும்

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தமிழர் தலைவர் முழக்கம்




சென்னை, ஜூலை 9 மருத்துவக் கல்லூரிக்குக் கூடுதல் இடங்கள் தருவதாக மத்திய அரசு கூறுவது  விஷ உருண்டையில் தேன் தடவுவதே,  ஒரு நூற்றாண்டு திராவிட இயக்கம், சமுகநீதி வரலாற்றை  அ.தி.மு.க. அரசு காப்பாற்றவேண்டும். இல்லையெனில் வீண் பழியை  சுமக்கவேண்டும். இப்பொழுது நம்முன் உள்ளது கொள்கையா? இடங்களா? என்பதே என்று விளக்கமாக எடுத்துக் கூறினார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கூறினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் துணை முதலமைச்சர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் தலைமை யில் நேற்று (8.7.2019) மாலை  நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விளக்கமாக ஆற்றிய உரை வருமாறு:

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் - இதே அரங்கத்தில் சமுகநீதி குறித்து- அரசு கூட்டிய பல ஆலோசனைக் கூட்டங்களில் பல காலகட்டங்களில் பேசி இருக்கிறோம்.

அதன் தொடர்ச்சியாக இன்று கூடியுள்ளோம். உயர் ஜாதியினரில்,  பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு  மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடுக்கு வழி செய்யும் சட்டம் ஒன்றினை மத்திய அரசு அவசர அவசரமாக 124 ஆவது சட்டத் திருத்தமாக நிறைவேற்றியுள்ளது.  அதனை செயல்படுத்த உடனடி யாக மாநில அரசுகளுக்கு தாக்கீதும் பிறப்பிக்கப் பட்டுள்ளது.

பொருளாதார அளவுகோல் சட்டப்படி தவறானது!


முதலாவதாக இந்த அணுகுமுறையே சட்டப்படி தவறானதாகும். இட ஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அளிக் கப்படவேண்டும் என்பதுதான் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் நிலையாகும். இதில் பொருளாதார அளவு கோல் எங்கிருந்து வந்தது?

இது இப்பொழுது மட்டுமல்ல - தந்தை பெரியார் அவர்கள் கிளர்ச்சியாலும், காமராசர் போன்றவர்களின் ஒத்துழைப்பாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வந்தபோதே, நாடாளுமன் றத்தில் பொருளாதார அளவுகோலையும் சேர்க்கவேண் டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அப்பொழுது பிரதமராக நேரு சட்ட அமைச்சராக அண்ணல் அம்பேத்கர் ஆகியோர் இருந்தனர்.

பொருளாதார அளவுகோல் என்பது நிரந்தரமல்ல; அடிக்கடி மாறக் கூடிய ஒன்று. ஆனால், சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இட ஒதுக்கீடு என்பதே சரியானதாகும். அதற்கு வரலாற்றுக் காரணங்களும் உள்ளன என்று பதில் கூறப்பட்டு, அந்தக் கோரிக்கை வாக்கெடுப்புக்கும் விடப்பட்டது. பொருளாதார அளவுகோல் என்பதற்கு ஆதரவாக 5 வாக்குகளும்; எதிராக 243 வாக்குகளும் கிடைத்தன என்ற தகவலை இந்த அவைக்குத் தெரி வித்துக் கொள்கிறேன்.

பாபு ஜெகஜீவன்ராம் அவமதிக்கப்பட்டது எந்த அடிப்படையில்?


பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தாலும், தாழ்த்தப் பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் நிலை என்ன? எடுத்துக்காட்டாக ஒரு தகவலைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

பாபு ஜெகஜீவன்ராமைப்பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அவர் இராணுவ அமைச்சராக இருந்தபோது வாரணாசியில் உயர்ஜாதிக்காரரான  சம்பூரணானந்த் சிலையைத் திறந்து வைத்தார். அவ் வளவுதான், காசி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த உயர்ஜாதி மாணவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? பாபு ஜெகஜீவன்ராம் அவர்களின் ஜாதியைக் குறிப்பிட்டு இழிவாகப் பேசியதோடு மட்டுமல்லாமல், ஒரு தாழ்த் தப்பட்டவர் உயர்ஜாதிக்காரரின் சிலையைத் திறந்ததால், சிலை தீட்டுப்பட்டு விட்டது என்று கூறி, கங்கையிலிருந்து தண்ணீரைக் கொண்டு வந்து அந்த சிலையைக் கழுவினார்கள்.

ஏன் அக்கறையில்லை?


உயர்ஜாதியினரில் ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதில் இவ்வளவு ஆர்வமும், அவசரமும் காட்டும் மத்திய பி.ஜே.பி. அரசு, மத்திய அரசின் பொதுத் தொகுப்புக்கு (மருத்துவ பட்டப் படிப்புக்கு) தமிழ் நாட்டிலிருந்து 15 விழுக்காடு இடங்களைத் தந்து வரு கிறோம். அகில இந்திய தொகுப்புக்குரிய 8,000 இடங் களில் பிற்படுத்தப்பட்டோருக்கு வெறும் 165 இடங்களே கிடைக்கிறது. நியாயமாக 27 சதவிகித அடிப்படையில் 2,160 இடங்கள் கிடைக்கவேண்டும். ஏன் கிடைக்க வில்லை?


இந்தத் தொகுப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படாத  சமுக அநீதிதானே -  இதைப் பற்றி எல்லாம் மத்திய அரசுக்கு அக்கறையில்லையே ஏன்?  ஆனால், உயர்ஜாதியினரைப் பற்றித்தான் கவலைப்படுகிறது என்றார் திராவிடர் கழகத் தலைவர்.


அந்த நிகழ்ச்சி முடிந்து மறுநாள் சென்னை வந்த பாபு ஜெகஜீவன்ராம், அந்த நிகழ்ச்சியைச் சுட்டிக்காட்டி, குமுறினாரே - பெரியார் பிறந்த மண்ணில்தான் என் குமுறலை வெளிப்படுத்த முடியும் என்றாரே!

பாபு ஜெகஜீவன்ராமுக்கு இல்லாத பொருளாதாரமா? பதவியிலும், பாதுகாப்பு அமைச்சர்தான். இருந்தாலும், அவர் தகுதியை இந்த நாட்டில் பிறப்புதானே நிர்ணயிக் கிறது. எனவே, இட ஒதுக்கீடு என்பது சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்தான் என்பதுதான் சரியான ஒன்றாகும்.

பல தீர்ப்புகள் இருக்கின்றன. கமிஷன்களும் கருத்துகளைக் கூறியுள்ளன. பொருளாதாரத்தில் நலிந்தவர்கள் குறித்து 2005 இல் மத்திய அரசால் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சின்கோ தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் Sinho Commission) தனது பரிந்துரையை ஜூலை 2010 இல் அளித்தது.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு தர முடியாது. பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு  நலத் திட்டங்கள்மூலமே அவர்களுக்கு வாய்ப்பளிக்கலாம்.  (For Extending Measures Only) என்றுதான் பரிந் துரைத்தது.

பிரதமர் நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது...


திரு.நரசிம்மராவ் அவர்கள் பிரதமராக இருந்தபோது (1991 இல்) பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பாருக்கு - திறந்த போட்டியில் பங்கேற்கத் தகுதி யானவர்களில் ஒரு சாராருக்கு - 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை 25.9.1991 அன்று பிறப்பிக்கப்பட்டதும் செல் லுமா? செல்லாதா? என்று இந்திரா சகானி வழக்கில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பை ஜஸ்டீஸ் ஜீவன் ரெட்டி அவர்கள் எழுதினார்.

வழக்கின் தீர்ப்பின் 867 ஆவது பாராவில் குறிப் பிட்டுள்ளதன் சாரம்சம், அரசியல் சட்டம் பொருளாதார அளவுகோலை வைத்து இட ஒதுக்கீடு கொடுப்பதை ஏற்காத காரணத்தால், அது செல்லத்தக்கதல்ல என்பதே ஆகும்.

அதேதான் இப்போது கொண்டுவரப்படும் மத்திய அரசின் 10 சதவிகித இட ஒதுக்கீடு - முன்னேறிய ஜாதிகளில் உள்ள ஏழைகளுக்கு என்பது அரசியல் சட்டத் திருத்தமாக (103) அவசர கோலம் அள்ளித் தெளித்ததாகக் கொண்டுவரப்பட்டு, இட ஒதுக்கீடு அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தில் அடங்கிய ஒன்று (Basic Structure of the Constitution) இந்த அடிப்படையையே தகர்த்தெறிகிறது, இந்த 10 சதவிகித முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு. ஆகவே, அரசியல் சட்ட அமர்வினை செல்லத்தக்கக் கூடிய அறிக்கை எதிர்பார்க்கப்படவேண்டிய ஒன்றாகும்.

Evidently, this classification among a category outside clause (4) of Article 16 is not and cannot be related to clause (4) of Article 16. If at all, it is relatable to clause (1).  Even so, we find it difficult to sustain. Reservation of 10% of the vacancies among open competition candidates on the basis of income/ property-holding means exclusion of those above the demarcating line from those 10% seats. The question is whether this is constitutionally permissible? We think not. 

முதலமைச்சர் ஜெயலலிதா எப்படி நடந்துகொண்டார்?


1991 இல் முதலமைச்சராக செல்வி ஜெயலலிதா அவர்கள் இருந்தபொழுது, தமிழக அரசு நடத்திய பெரியார் பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டபோது நான் அவருக்கு ஒரு வேண்டுகோள் வைத்தேன்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மத்திய அரசு இட ஒதுக்கீட்டிலும் தற்போது 27 சதவிகிதத்திற்குப் பதில் 50 விழுக்காடாக அதை அதிகரிக்கவேண்டும் என்று நீங்கள் தமிழக சட்டமன்றத்தில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டதை, அந்த மேடையிலே அவர், தமிழக சட்டமன்றத்தில் அத்தீர்மானம் இன்னும் 2 நாளில் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று கூறி, அதேபோல, தீர்மானத்தையும் அ.தி.மு.க. அரசு ஒருமனதான ஆதரவுடன் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.

இதை அனைத்திந்திய முதலமைச்சர்கள் மாநாட்டு உரையிலும் சமுகநீதியை வலியுறுத்திய செல்வி ஜெயலலிதா வற்புறுத்திக் கூறினார். அவரது உரையின் இந்தப் பகுதியை, மண்டல் கமிஷன்பற்றி இந்திரா சகானி வழக்கில் தனியே விரிவான தீர்ப்பாக எழுதிய ஜஸ்டீஸ் எஸ்.ரத்தினவேல்பாண்டியன் அவர்கள் எடுத்துக் கையாண்டதில், பிற்படுத்தப்பட்டவர்களை இட ஒதுக் கீட்டுக்கு அடையாளப்படுத்துகையில், சமுக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் என்று மட்டுமே அடையாளப் படுத்தவேண்டும். இவை மாத்திரம்தான்  (alone)  என்றே அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். ஏற்கெனவே எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபொழுது 9,000 ரூபாய் வருமான வரம்பு ஆணை பிற்படுத்தப்பட்டோருக்கான பொருளாதார  அடிப்படையைக் கைவிட்டதை மனதிற் கொண்டே செல்வி ஜெயலலிதா முதல்வராக இருந்த போது இட ஒதுக்கீட்டில் இந்த உறுதியான நிலைப்பாட்டில் மாறாமல் இருந்தார்கள்.

அதனால்தான் சமுகநீதி காத்த வீராங்கனை'' என்ற பட்டத்தை திராவிடர் கழகம் அளித்தது. அந்த வர லாற்றை இன்றைய அ.தி.மு.க. அரசு மாற்றிவிடக்கூடாது. மாற்றினால், அது வரலாற்றுப் பிழையாகிவிடும் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு சுட்டிக்காட்ட விழைகிறோம்.

ஜஸ்டிஸ் இரத்தினவேல்பாண்டியன் தீர்ப்புரையில் எழுதியது என்ன?


This view of Mr.Jethmalani has been fully supported by Mr.Siva Subramaniam appearing on behalf of the State of Tamil Nadu who pointedly referred to the speech of the Chief Minister of Tamil Nadu made in the Chief Ministers’ Conference held on 10th April 1992 and produced a copy of the printed speech of the Chief Minister issued by the Government of Tamil Nadu as an annexure to the written submissions. It is seen from the said annexure that the Chief Ministers has categorically emphasised the stand of the Government of Tamil Nadu stating that the total reservation for backward classes, Scheduled Castes and Scheduled Tribes is 69%, that   it is but fair and proper that socially and educationally backward classes (alone) as a whole should be given at least 50% reservation for employment opportunities in Central Government services and its undertakings as well as for admission in educational institutions run by Central Government. It has also been pointed out that in consonance with this avowed policy; the Tamil Nadu Legislative Assembly passed unanimously a resolution on 30.9.1991 urging the Government of India to adopt a policy of 50% reservation for the Backward Classes in stead of 27% and to apply this reservation not only for employment opportunities in all Central Government departments and Puplic Sector Undertakings. But also for admission in all Educational Institutions run by Central Government.

நம் கைகளைக் கொண்டே....


தமிழக பி.ஜே.பி. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அவர்கள் பேசும்போது, பிரதமர் நரேந்திர மோடியே ஒரு பிற்படுத்தப்பட்டவர்தான். அவர்தான் இந்த சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார் என்பதைத் தெரி


வித்துக் கொள்கிறேன் என்று சொன்னபொழுது, கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறுக்கிட்டு, ஆமாம், நம் கைகளைக் கொண்டே நம் கண்களைக் குத்தச் செய்யும் வேலை' என்று பளிச்சென்று பதில் சொன்னார்.


இன்றைக்கு அவசர அவசரமாக பொருளாதார அடிப்படையில் சட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டுள் ளதே - அதற்கான அவசியம் இப்பொழுது என்ன வந்தது? அவர்கள் கல்வியில் பின்தங்கியிருக்கின்றனர் என்பதற்கான ஆதாரங்கள் உண்டா? ஆக்க ரீதியான புள்ளி விவரங்கள் உண்டா? அவசர கோலத்தில் அள்ளித் தெளிக்கலாமா?

உண்மை என்னவென்றால், உயர்ஜாதியினர் இன் றைக்கு எல்லா நிலைகளிலும் அவர்கள் விகிதா சாரத்திற்குமேல் அதிகமாகத் தானிருக்கின்றனர்.

445 உயர்கல்வி நிறுவனங்களில் 28 விழுக்காடு உயர்ஜாதி


கடந்த ஜூன் மாதம் 8 ஆம் தேதி வெளிவந்த எகனாமிக் அண்ட் பொலிட்டிக்கல் வீக்லி வார ஏடு ஒரு அதிர்ச்சியான தகவலை வெளியிட்டுள்ளது. அய்ந்து ஆய்வாளர்கள், நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது. 445 உயர்கல்வி நிறுவனங்களில் உயர்ஜாதியினர் 28 விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர். அவர்களுக்குத்தான் மேலும் 10 விழுக்காடு இடங் களாகும்.

பொதுப் போட்டியில் உள்ள 31 விழுக்காடு இடங்கள் என்பவை உயர்ஜாதியினருக்கு மட்டுமல்ல, தாழ்த்தப் பட்ட, மலைவாழ் மக்கள், பிற்படுத்தப்பட்டோர் உள் ளிட்ட அனைவரும் போட்டியிடக் கூடிய இடம். அந்த 31 விழுக்காட்டில் உயர்ஜாதி ஏழை, உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடங்களைப் பிரித்துக் கொடுப்பது சட்டப்படி சரியானதுதானா?

இந்த 10 சதவிகிதத்தில்  உயர்ஜாதியினருக்குக் கிடைக்க இந்த சட்டம் வழி செய்துவிட்டது மட்டுமல் லாமல், எஞ்சிய 21 விழுக்காட்டிலும் அவர்களுக்கு இடம் உண்டு. ஏற்கெனவே அவர்களின் சதவிகிதத்துக்கு மேல் பல மடங்கு அனுபவிப்பவர்களுக்கு மேலும் சலுகையா? மற்றவர்களுக்கும் உரிய இடத்தை எடுத்து இன்னொரு வளர்ந்த பிரிவினருக்கு அளிக்க முடியுமா? சட்டம் அனுமதிக்குமா? இந்த சட்டம் குறித்து நீதிமன்றத்தில் திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடுத்த வழக்குகளும் இருக்கும்போது, இதனைச் செயல்படுத்த முடியுமா? என்பது முக்கிய கேள்வியாகும்.

அதுமட்டுமல்ல. அரசின் அனைத்து நிர்வாகத்திலும், உயர்கல்வி நிலையங்களிலும், தங்களின் மக்கள் தொகைக்கு மிக மிக அதிகமான அளவில் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளார்கள்.

எடுத்துக்காட்டாக, மத்திய அரசின் 40 பல்கலைக் கழகங்களில், பேராசிரியர்கள் பதவிகளில், உயர்ஜாதி யினர் 95 விழுக்காடு உள்ளனர். துணைப் பேராசிரியர் பதவிகளில் 93 விழுக்காடும், உதவி பேராசிரியர் பதவிகளில் 66  விழுக்காடும் உள்ளனர். மீதம் உள்ள நிலைகளில் இட ஒதுக்கீடு உரிமை உள்ள பிற்படுத் தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் இருக்கின்றனர். குறிப்பாக, பேராசிரியர் 1125 பதவிகளில், துணைப் பேராசிரியர் 2620 பதவிகளில், ஒருவர் கூட பெரும் பான்மை மக்களைக் கொண்ட பிற்படுத்தப்பட்டோர் இல்லை.

இதேபோன்று, குரூப் ஏ பதவிகளில், உயர்ஜாதியினர் 70 விழுக்காடு பதவிகளில் உள்ளனர். பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி உள்ளிட்ட பதவிகளிலும், உயர்ஜாதியினர் 60 விழுக்காட்டிற்கும் மேலே உள்ளனர். உயர்பதவிகளில், 90 விழுக்காடு உள்ளனர்.

அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 16 (4)-ன் படி, அரசுத் துறையில் போதிய பிரதிநிதித்துவம் தருவதற்கு பிற்படுத்தப் பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க முடியும்.

ஆனால், மக்கள் தொகையில் 15 விழுக் காடு உள்ள உயர்ஜாதியினர், ஏற்கெனவே அரசின் உயர் பதவிகளில் 70 முதல் 90 விழுக்காடு வரை பிரதிநிதித்துவம் உள்ள போது, அதில் பொருளாதாரத்தில் நலிந்த மக்கள் என்று பிரித்து, மேலும் 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளிப்பது, சமுக அநீதி மட்டுமல்ல. பாபா சாகிப் அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத்தை அவமதிக்கின்ற செயலாகும்.

இட ஒதுக்கீடு வறுமையை ஒழிக்கும் திட்டமல்ல!


இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல. (NOT  A POVERTY ALLEVIATION SCHEME) சமுகத்தில் பிறப் பின் அடிப்படையில் சாதியின் காரணமாக உரிமை மறுக்கப்பட்ட மக்களுக்கு, அரசு அதிகாரத்தில் வழங்கப்படும் பங்கு என உச்சநீதிமன்ற மேனாள் நீதியரசர் ஓ.சின்னப்ப ரெட்டி அவர்கள் ஒரு வழக்கின் தீர்ப்பில் கூறியுள்ளார். உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த மக்களுக்கு, உதவி செய்ய வேண்டும் என்று நினைக்கும் அரசு, அவர்களுக்கு, கல்வி கற்க ஊக்கத்தொகை அளிக்கலாம்; கல்விக் கடன் குறைந்த வட்டியில் தரலாம். அப்படிப்பட்ட திட்டங் களும் அரசு கொண்டு வந்துள்ளது. சிறப்புப் பயிற்சி அளிக்கலாம். ஆனால், இட ஒதுக்கீடு தீர்வு அல்ல. ஏற்கெனவே, தங்களது விகிதாசாரத் திற்கு பன்மடங்கு அதிகமாக (70 விழுக் காட்டிற்கும் மேல்) அதிகாரத்தை கையில் வைத்திருக்கும், உயர்ஜாதியினர்க்கு, குறுக்கு வழியில், மேலும் 10 விழுக்காடு அளிப்பது, சமுக அநீதியாகும்; பிற்படுத் தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர் உரிமை பறிக்கும் செயலாகும்.

உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர்க்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்ற பரிந்துரையை எந்த ஒரு அரசின் ஆணையமும் தெரிவிக்கவில்லை. அப்பிரிவு மக்கள், போதிய பிரதிநிதித்துவம் பெறவில்லை என்ற புள்ளிவிவரம் எத னையும் மத்திய அரசு நாடாளுமன்றத்திலும் சரி, மக்களுக்கும் தெரியப்படுத்தவில்லை.

மத்திய அரசு ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு தர உள்ளதாக அரசின் சார்பில் சொல்லப்படுகிறது. இது மக்களை ஏமாற் றுவதற்கும், திசை திருப்புவதற்குமான சொல் தானே தவிர உண்மை அல்ல. உயர்ஜாதியில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் என்போர், ஆண்டு வருமானம் ரூ.எட்டு லட்சத்திற்கும் குறை வாக உள்ளோர் அதாவது மாதம் ரு.65,000 பெறுபவர், நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். அதேபோன்று, 1000 சதுர அடிக்கு குறைவாக அடுக்குமாடி குடியிருப் பில் உள்ளோர், அய்ந்து ஏக்கருக்கும் சற்று குறைவாக நிலம் வைத்திருப்போர் நலிந்த பிரிவில் இட ஒதுக்கீடு பெறலாம். இவர்கள் எல்லாம் ஏழைகளா?

மேற்குறிப்பிட்ட அளவுகோல் ஒன்றே, இந்த சட்டம் யாருக்குப் பயன்பட போகிறது என்பதை தெளிவாக்குகிறது. ஒருபுறம், ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சம் மேல் இருந்தால், வருமான வரி கட்ட வேண்டும் என்று அரசு சொல்லி விட்டு, இன்னொருபுறம், அவர்களை நலிந்த மக்கள் என வரையறுப்பது, கேலிக் கூத்து மட்டுமல்ல. அரசின் நோக்கமே வேறு என்பதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறது?


இன்னொரு முக்கியமாக சுட்டிக் காட்டப்பட வேண்டிய முரண்பாடு.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு  ஆண்டு வருமானம் ரூபாய் 8 லட்சம் என்றால், அவர்கள் கிரீமிலேயருக்கும் கீழே வருகிறார்கள் - அதாவது அவர் களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது. அதேநேரத்தில், உயர்ஜாதியினரின் 8 லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்களாக இருந்தால், அவர்களுக்கு இட ஒதுக்கீடு உண்டாம்.

ஏனிந்த முரண்பாடு.  பொருளாதார அளவுகோலில்கூட வருணாசிரமமா?

கடந்த மூன்று ஆண்டுகளாக (2017-18, 2018-19, நடப்பு ஆண்டு 2019-20), மருத்துவக் கல்லூரி இடங்களில், அகில இந்திய தொகுப்பில், பட்டப்படிப்பில் 8000 இடங்களில் 165 பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களே சேர்ந்துள்ளனர். அதாவது 2 விழுக்காடு மட்டுமே. பிற்படுத்தப்பட் டோருக்கான 27 விழுக்காட்டைக் கணக் கிட்டால், 2160 மாணவர்களுக்கு மருத் துவக் கல்லூரி வாய்ப்பு கிட்டியிருக்கும். இது அனைந்திய அளவில் உள்ள நிலை.

தமிழ் நாட்டை எடுத்துக் கொண்டால், இங்கு 25 அரசு மருத்துக் கல்லூரிகள் உள்ளன. 3250 மருத்துவ இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய தொகுப்புக்கு 15 விழுக்காடு இடங்கள் தரப்படுகிறது. அதாவது 490 இடங்கள். இந்த 490 இடங்களில் ஒரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவரும் சேர்க்கப்படவில்லை. அந்த இடங்கள் தமிழ் நாட்டிலேயே இருந்திருந்தால், தமிழ் நாட்டின் இட ஒதுக்கீடு படி, 245 பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்க்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்.

இதே போன்று, மேல்படிப்புக்கான இடங்களில் (POST GRADUATE COURSE) 1758 இடங்கள் தமிழ் நாட்டில் உள்ளன. இதில் 50 விழுக்காட்டை மத்திய தொகுப் புக்கு தருகிறோம். அதாவது 879 இடங்கள். இந்த இடங்களிலும், பிற்படுத்தப்பட்டோ ருக்கு இட ஒதுக்கீடு தருவது கிடையாது.

ஆக, ஆண்டு தோறும், மத்திய தொகுப்பில் தரப்படும் இடங்களில், பட்டப் படிப்பு மற்றும் மேல்படிப்பு இடங்களில் 685 இடங்கள் (245+440) பொதுப்போட் டிக்கு தரப்பட்டு, உயர்ஜாதியினர்க்கே செல்கிறது. அகில இந்திய அளவில், ஆண்டு தோறும் 5000 இடங்கள் இரு படிப்புகளிலும் சேர்த்து, பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள், பொதுப் போட்டிக்கு செல்கிறது.

இதனை சரி செய்திட எந்த நடவடிக் கையும் இதுவரை எடுக்கப்பட வில்லை.

மாறாக, ஏழை உயர்ஜாதியினர்க்கான 10 விழுக்காட்டை நிறைவேற்றிடுவதில் மத்திய அரசு அதிக அக்கறையும் வேகம் காட்டுகிறது.

எம்.ஜி.ஆர். அவர்களின் 9000 ரூபாய் ஆணையும், ரத்தும்!


1979 இல் எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட வருமான அடிப்படையிலான இட ஒதுக்கீடு (ரூ.9000-க்கு அதிகமாக ஆண்டு வருமானம் உள்ள குடும்பத்தினர்க்கு இட ஒதுக்கீடு கிடையாது) 1980 இல் நடைபெற்ற தேர்தலுக்குப் பிறகு, திரு.எம்.ஜி.ஆர். அவர்களால் திரும்ப அந்த ஆணை பெறப்பட்டது. பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு 31-லிருந்து 50ஆக உயர்த்தப்பட்டது.

இந்தியாவிற்கே சமுக நீதிக்கு வழி காட்டும் மாநிலம் தமிழ் நாடுதான். இந்தியா சுதந்திரம் அடைந்து அரசமைப்புச் சட்டம் 1950 இல் நடைமுறைக்கு வந்த நிலையில், தமிழ் நாட்டில் இருந்த வகுப்புவாரி உரிமைக்கு தடை ஏற்பட்டது. இதனை எதிர்த்து, தந்தை பெரியார் தலைமையில் அனைத்து மக்களும் போராடியதன் விளைவு, அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் சமுக நீதிக்காக, கல்வியில் இட ஒதுக்கீடு அளித்திட இந்தியா முழு மைக்கும் வகை செய்தது.

2016 ஆம் ஆண்டில் குஜராத் மாநில அரசு பொருளாதார அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 10 விழுக்காடு ஆணையைப் பிறப்பித்தது. இதுவும், உச்ச நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது.

தற்போது 10 விழுக்காட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத் திலும் வழக்கு (திமுக, திராவிடர் கழகம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, சமுக அமைப்புகள்) நிலுவையில் உள்ள நிலையில், மத்திய அரசு, பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை நிறைவேற்றிட வேகம் காட்டுவது சரியா?

இதனை அனுமதித்தால், சமுக நீதி என்ற தத்துவத்துக்கு வேட்டு வைத்தது போல் ஆகி விடும். தமிழ் நாடு அதற்கு என்றும் துணை போகாது என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர்ந்து, இதனை எதிர்க்க வேண்டும்.

விஷ உருண்டையில் தேன் - எச்சரிக்கை!


கூடுதல் இடம் தருகிறோம் என்று சொல்லி, விஷ உருண்டையில் தேனைத் தடவி தருவதை ஏற்றுக் கொண்டால், சமுக நீதி அழிந்து மீண்டும் நமது ஒடுக்கப் பட்ட மக்கள் தற்போது போராடிப் பெற்ற உரிமையை இழக்க நேரிடும்.

நமது தமிழ்நாடு அரசு (அ.தி.மு.க. அரசு) இதுவரை கொள்கையளவில், மத்திய அரசின் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு முறையை ஏற்க மறுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிவித்த பொழுதிலும், திராவிட இயக்க கொள்கையின் அடிப்படையிலும், ஏற்கெனவே முன்னாள் முதல்வர்கள் மாண்பமை எம்.ஜி.ஆர்., செல்வி ஜெய லலிதா ஆகியோர் ஆட்சிகளின்போதே நிராகரிக்கப்பட்ட, ஏற்கப்படாத பொரு ளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பதை ஒப்புக் கொள்ளாமல், ஏற்க மறுத்தது; பொறியியல் படிப்பிற்கு இவ்வொதுக்கீட்டு முறையை பின்பற்ற முன்வராது என்ற அரசின் அறிவிப்பு நம் போன்ற சமூகநீதிப் போராளி இயக் கத்தவர்களால் வரவேற்கப்படுகிறது.

இப்போது மருத்துவக் கல்லூரி இடங்களைப் பொறுத்து, மத்திய அரசு இந்த இடஒதுக்கீட்டுக் கொள்கையை ஏற்க மறுக்கும் நமது தமிழ்நாட்டு அரசிற்கு நாக்கில் தேனைத் தடவுவதுபோல், தற்போதுள்ள இடங்களைவிட கூடுதலாக 25 விழுக்காடு - பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர்ஜாதி ஏழைகளுக்கு தமி ழகத்தில் மருத்துவப் படிப்பிற்காக இடங்களை அதாவது 1000 - 1,250 மருத்துவ இடங்கள் தமிழகத்திற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் உலா வருகின்றன.

இது ஒரு மயக்க பிஸ்கட் கொடுத்து நமது சமுகநீதிக் கொள்கையின் அடிப் படையைத் தகர்ப்பதாகும்.

கூடுதல் இடங்கள் யாருக்கு?


நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண் பெற்ற தகுதியானவர்களுக்கே என்று சொல்லப்படும் நிலையில், கூடுதல் இடங்கள் யாருக்குப் பயன்படும் என்பது தான் முக்கியம். கொள்கையை விட்டுக் கொடுப்பது என்பது கண்ணை விற்று சித்திரம் வாங்கும் கதை போன்றதே!

இப்பொழுது நம்முன் உள்ள பிரச்சினை கொள்கையா - இடங்களா? என்பதுதான்.

திராவிட இயக்கத்தால் தொடங் கப்பட்ட அந்த சமுகநீதிக் கொள்கையை தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா முதலியோரால் பின்பற்றப்பட்ட இந்தத் திராவிட இயக்க சமுகநீதிக் கொள்கையைக் காப்பாற்ற போகிறோமா? அதிக இடங்கள் என்ற நப்பாசை காட்டுகிற ஒன்றில் சபலத்திற்கு ஆளாகிக் கைவிடப் போகி றோமா என்பதுதான் இந்தக் கட்டத்தில் எடுக்கப்படவேண்டிய முடிவாகும்.

இதில் கட்சியில்லை; வேறு கண் ணோட்டம் இல்லை. ஒரு நூறாண்டுக் காலமாக கட்டிக் காத்த ஒரு கொள்கையை இந்த ஆட்சி காப்பாற்றாவிட்டால், காலாகாலத்துக்கும் பழி வந்து சேரும்.

மத்திய அரசின் இந்தத் திட்டத்தை நாடாளுமன்றத்திலும், தி.மு.க., அ.தி.மு.க. எதிர்த்து இருக்கிறது என்பது முக்கியம்.

அதே நிலையைத் தொடரவேண்டும்  - இந்த ஆட்சி இதில் உறுதியாக இருக்கும் என்றும் நம்புகிறோம்.

அனைத்து  கட்சிக் கூட்டத்தில் பங்கேற்றோர்


தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொன்முடி, தே.மு.தி.க. சார்பில் பார்த்த சாரதி, இளங்கோவன், பா.ம.க. தலைவர் கோ.க.மணி, ஏ.கே.மூர்த்தி, காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, உ.பலராமன், பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், ம.தி.மு.க. சார்பில் மல்லை சத்யா, விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்  இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் பாலகிருஷ்ணன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி சார்பில் சீமான், த.மா.கா. சார்பில் ஞானதேசிகன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் முகமது அபுபக்கர், முக்குலத்தோர் புலிப்படை சார்பில் கருணாஸ், மனிதநேய ஜனநாயகக் கட்சி சார்பில் தமிமுன் அன்சாரி உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
- விடுதலை நாளேடு, 9.7.19