பக்கங்கள்

புதன், 10 ஜூலை, 2019

உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்னும் புதிய சட்டத்தில் ஒரு சதி இருக்கிறது! - ஆ.ராசா

துரோணாச்சாரியாக இருக்கக்கூடிய உங்கள் மனப்பான்மை மாறட்டும்


நாங்கள் ஏகலைவர்களாக இருக்கமாட்டோம்; இருக்கப்போவதில்லை


மக்களவையில் ஆ.இராசா எம்.பி., முழக்கம்




புதுடில்லி, ஜூலை 3 துரோணாச்சாரிகளாக இருக்கக் கூடிய  உங்கள் (பி.ஜே.பி. ஆட்சி) மனப்பான்மை கட்டாய மாக மாறத்தான் வேண்டும். இனிமேலும் நாங்கள் ஏகலைவர்களாக இருக்கமாட்டோம் - இருக்கப் போவ தில்லை என்றார் மேனாள் மத்திய அமைச்சரும், மக்களவை உறுப்பினருமான ஆ.இராசா.

மக்களவையில் 2019 ஜூலை  ஒன்றாம் ஆம் தேதி யன்று தி.மு.க. உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க.வின் கொள்கை பரப்புச் செயலா ளருமான திரு.ஆ.இராசா  அவர்கள் ஆற்றிய உரையின் தமிழாக்கம் வருமாறு:

இந்த மசோதா மீது பேசுவதற்கு என்னை அனுமதித் ததற்காக  நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பொருளாதாரத்திலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை மேற்கொள்ளும் முயற்சியை தி.மு.க. ஆதரித்துள்ளது என்ற உணர்வில், இந்த மசோதாவின் ஒரு பகுதியை நான் ஆதரிக்கிறேன். அதே நேரத்தில் பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள  பகுதியினருக்கு இட ஒதுக்கீடு அளிப் பதற்கு  எதிராக பதிவு செய்யப்பட்ட  பல மனுக்கள் உயர் நீதிமன்றங்களிலும், உச்சநீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ளன என்பதால், இந்த மசோதா கொண்டு வருவதும் காலம் தாழ்ந்ததே ஆகும். அந்த மனுக்கள் நிலுவையில் இருக்கும் வரை நாங்கள் இந்த மசோதாவை எதிர்ப்போம். ஒன்று இந்த மசோதா நாடாளுமன்ற தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும் அல்லது இந்த மசோதா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்படவேண்டும். முதல் பகுதியில், இந்த மசோதாவில் தெரிவித்துள்ளபடி பொருளாதார நிலையிலும், சமுக அளவிலும் பின்தங்கியுள்ள பகுதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். ஏன்? இதற்கான காரணத்தை நான் விளக்கிக்  கூறுகிறேன். அரசமைப்பு சட்ட 103, 104 ஆவது திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட போது நாங்கள் மக்களவையின் ஒரு பகுதியாக இருக்கவில்லை. இப்போது கால தாமதம் ஆகிவிட்டது. கடந்த மக்களவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத்த மசோதாவையே அடிப்படை யாக இந்த மசோதாவும் கொண்டிருப்பதாக நான் நினைக்கிறேன். இந்த விவகாரம் உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பதால், இது பற்றி சில குறிப்புகளைத் தெரிவிப்பது ஓரளவுக்குப் பொருத்தமானதாகவே இருக்கும் என்று நான் கருது கிறேன்.

எஸ்.எஸ். அலுவாலியா வர்த்தாமான், துர்காபூர்: ஓர் உறுப்பினராக அதற்கு நீங்களும் ஒரு தரப்பாக (Party) இருந்திருப்பதால், அதில் தங்களுக்கு உள்ள ஆர்வ முரண்பாட்டையும் கூறவேண்டும்.

அவைத்தலைவர்: திரு.ஆ.இராசா அவர் கூறுவதற்கு நீங்கள் இடம் தருகிறீர்களா?

ஆ.இராசா  (நீலகிரி): இது ஒன்றும் ஆர்வ முரண் பாடல்ல. இதில் ரகசியம் ஏதுமில்லை. இது ஒரு அரசமைப்பு சட்ட விளக்கமாகும். உங்கள் கேள்விக்கு நான் வருகிறேன். இந்தக் கேள்விக்கு பதில் அளிப்பதன் மூலம் இந்த அவைக்குக்  கூடுதலான தகவல்களை என்னால் அளிக்க முடிகிறது என்பதற்காக  நான் நண்பர் அலுவாலியாவுக்கு நன்றி கூறவேண்டும்.

பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி யினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு, கடந்த மக்க ளவையில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத் தத்தின் அடிப்படையிலானது என்பதை இந்த மசோதா வின் நோக்கங்களும், காரணங்களும் தெளிவாகத் தெரிவிக்கின்றன. அது என்ன மசோதா? அதில் இரண்டு பகுதிகள் இருக்கின்றன. அந்த மசோதாவின் நோக்கங் களும், காரணங்களும் கூறுவதாவது: இப்போது பொருளாதார நிலையில் பலவீனமாக இருக்கும் மக்களில் பெரும் பகுதியினருக்கு, அவர்களது நிதிப் பற்றாக்குறை காரணமாக, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்து கல்வி பயில்வதற்கு  இயலாத நிலை இருக்கிறது.''

அந்த மசோதாவின் 2 ஆவது குறிப்பு கூறுவதாவது: அரசமைப்பு சட்டத்தின் 46 ஆவது பிரிவினை நிறை வேற்றும் கண்ணோட்டத்திலும், உயர் கல்வி பெறு வதிலும், அரசு பணி வாய்ப்புகளிலும் ஒரு நியாயமான வாய்ப்பினை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி மக்களுக்கு அளிப்பதை உறுதிப்படுத்திக் கொள் வதற்காகவும், இந்திய அரசமைப்பு சட்டத்தினைத் திருத்துவது என்ற முடிவு மேற்கொள்ளப்பட்டது.''

அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவது பொருளாதார நிலையில் நலிந்த பிரிவினர் கல்வி நிறுவன சேர்க்கையிலும், அரசுப் பணி நியம னத்திலும் ஒரு நியாயமான பிரதிநிதித்துவம் பெற்றிருக்க வில்லை என்பது. இரண்டாவது,  இந்த சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவு வகை செய்கிறது என்று அவர்கள் தெளிவாகக் கூறுகிறார்கள்.

அதன் அடிப்படையில் அந்த சட்டத்தை அவர்கள் கொண்டு வந்தார்கள். அந்த சட்டத்தின் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

2500 ஆண்டுகளுக்கு முன்னர்தான் வர்ணாசிரம அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறை


அய்யா, இட ஒதுக்கீடு என்பது இந்தியர்களுக்குத் தெரியாதது ஒன்றும் இல்லை. 2500 ஆண்டுகளுக்கு முன்பே இட ஒதுக்கீட்டு முறை நடைமுறையில் இருந்துள்ளது. 2500 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வாறு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்க முடியும் என்று வியப் படைந்து சிலர் கேட்கலாம். அந்த இட ஒதுக்கீடு மனிதத் தன்மையற்றதும், மக்களாட்சி நடைமுறைக்கு விரோத மானதும் ஆகும். எவ்வாறு அது மனிதத் தன்மையற்றது, மக்களாட்சி நடைமுறைக்கு எதிரானது என்பதை நான் விளக்குகிறேன்.

மக்கள் சமுகம் பார்ப்பனர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வர்ணங்களாகவும், எந்த  வர்ணத் திலும் சேர்க்கப்படாத தாழ்த்தப்பட்ட மக்கள் பிரிவாகவும் பிரிக்கப்பட்டிருந்தது.

அனைத்துத் தொழில்களும், பணிகளும் இந்த நான்கு பிரிவினர்களாலேயே நடத்தப்பட்டு வந்தன. அதனால், அதுவும் ஒரு இட ஒதுக்கீட்டு நடைமுறையே ஆகும். அந்த இட ஒதுக்கீட்டு  நடைமுறை மனித நேயத்துக்கு எதிரானதும், மனித நேயமே அற்றதும், மக்களாட்சி நடைமுறைக்கு எதிரானதும் ஆகும்.

இந்திய அரசமைப்பு சட்டத்தின் முன்னுரை என்ன கூறுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.

இந்திய மக்களாகிய நாம் இந்தியாவை  இறையாண்மை மிகுந்த, சமதர்ம, மதச்சார்பற்ற, மக்களாட்சி, குடியரசு  நாடாக உருவாக்கிக் கொள்ள  உறுதியுடன் முடிவு செய் துள்ளோம்.

ஆனால் அரசமைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு மனிதநேயம் கொண்டதும், மக்களாட்சி நடைமுறைப் படியானதும் ஆகும். மக்களாட்சி என்பது வெறும் ஒரு அரசின் வடிவம் மட்டுமல்ல. சகமனிதர்கள் மீது மரியாதையையும், பரிவை யும் காட்டுவதற்கு மிகவும் தேவையான ஒரு கருவியாகும்.

எனவே, அந்த உணர்வில்தான் இட ஒதுக்கீடு என்பது இந்தியர்கள் அறியாத ஒன்றல்ல என்று நான் கூறுகிறேன். ஆனால் இதில் உள்ள ஒரே வேறுபாடு, அந்த பழைய இட ஒதுக்கீடு மனித நேயமற்றதும், மக்களாட்சி நடைமுறைக் கும் ஏற்றது அல்ல என்பதும், ஆனால் இந்த இட ஒதுக்கீடு மனித நேயம் மிகுந்ததும், மக்களாட்சி  நடை முறைப்பாடியானதும் ஆகும்.

எங்கள் தந்தை பெரியாரும், தலைவர்களும் பாடுபட்டனர்


அய்யா, தி.மு.க.வின் ஓர் உறுப்பினன் என்ற முறையில்,  எங்கள் முன்னாள் தலைவர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களும், அவரது ஆசான் அறிஞர் அண்ணா என்ற சி.என். அண்ணாதுரையும், தமிழ்நாட்டின் தந்தை  என்று போற்றப்படும்  பெரியாரும் 1951 ஆம் ஆண்டில் அரச மைப்பு சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே, இட ஒதுக்கீட்டுக்காக பாடுபட்ட முன்னோடிகள் என் பதை இங்கே தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன். திராவிட இயக்கத்தின் காரணமாகவே, சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியிருந்த பிரிவு மக்களுக்கு அளிக் கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டு சலுகை மறுக்கப்பட்ட  1951 இல் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கான முதல் திருத்தம் வந்தது.

அதற்கும் முன்பே 1927 ஆம் ஆண்டில் எங்கள் திராவிட அரசு ஆட்சியில் இருந்த போது, சமுக அள விலும்,  கல்வியிலும் பின்தங்கியிருந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு, முஸ்லிம்கள் உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட பிரிவு மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது என்பது இந்த அவையில் உள்ள பலருக்கும் தெரியாமல் இருந்திருக்கலாம். அதைப் பற்றி அப்போது எவர் ஒருவரும் கனவு கூட கண்டதில்லை.

எனவே, அந்த உணர்வில், அது பழைய மசோதாவோ அல்லது புதிய மசோதாவோ, அதைப் பற்றிய சில செய்திகளைக் கூறுவதற்கு நாங்கள் உரிமை பெற்றுள் ளோம் என்பதை நான் மிகுந்த கர்வத்துடன் கூறிக் கொள்கிறேன். உரிய மரியாதையுடன் அரசமைப்பு சட்டப்படியான தகுதி நிலைநாட்டப்பட வேண்டும். அந்த உணர்வில் மேலும் அய்ந்து அல்லது பத்து நிமிடங்கள் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

அய்யா, நான் குறிப்பிட்டது போல இந்த மசோதாவில் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பொருளாதார நிலையில் நலிவடைந்தவர்களுக்குப் போதிய பிரதிநிதித்துவம் இல்லை என்பதும் இரண்டாவதாக அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவும்.

முதலில் அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவிற்கு நான் வருகிறேன். அது கூறுவதாவது: நலிந்த பிரிவு மக்களின், குறிப்பாக தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களை சிறப்பு அக்கறையுடன்  மேம்படுத்தி சமுக அநீதியில் இருந்தும், அனைத்து வடிவங்களிலும் அவர்கள் ஏமாற்றி சுரண்டப்படுவதில் இருந்தும் அரசு  அவர்களைப் பாதுகாக்க வேண்டும்.

இந்த அரசமைப்பு சட்டப் பிரிவில் பயன்படுத்தப் பட்டுள்ள ஒரு புதிய சொல்லாடல், பொருளாதார நலன்கள் எனப்படுவதாகும். ஆனால் அரசமைப்பு சட்ட 15 மற்றும் 16 ஆவது பிரிவுகள் சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கி இருக்கும் மக்கள் பிரிவினர் அரசு நியமனங்களிலும், கல்வி நிலைய சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு பெறுவதற்கு உரிமை பெற்றவர்கள்'' என்று கூறுகின்றன. இன்று இங்கு கொண்டு வரப்பட்டிருக்கும் மசோதா வுக்கு அடிப்படையாகக் காட்டப்படும்  அரசமைப்பு சட்ட 46 ஆவது பிரிவில் பிரிவினர் என்று குறிப்பிடப்பட்டுள்ள போது,  இந்த மசோதாவில்  பகுதியினர் என்று குறிப் பிடப்பட்டுள்ளது. பிரிவுக்கும், பகுதிக்கும் ஒரு வேறுபாடு உள்ளது. அரசமைப்பு சட்ட 14 ஆவது பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தெளிவான விளக்கம் அளித்துள்ளது. அதன்படி,  சட்டத்தின் வழியாக நாடாளுமன்றத்தினாலோ  அல்லது நீதிமன்றத்தாலோ நியாயமாக வகைப்படுத்துவது செய்யப்பட இயலும். ஒரு குறிப்பிட்ட பகுதியினருக்காக பிரிவு சட்டம் இயற்றப்பட முடியாது. பல வழக்குகளில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள தெளிவான விளக்கம் இதுதான்.

சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும்...


எனவே இடஒதுக்கீட்டை ஒரு நியாயமான முறையில் வகைப்படுத்துவது என்பது சமுக அளவிலும், கல்வி யிலும் பின்தங்கியவர்கள் என்று வகைப்படுத்துவதே ஆகும்.

பிரிவு சட்டம் என்பது என்ன? பொருளாதார நிலை யில் பலவீனமான பகுதியினர் என்று ஒரு புதிய அளவு கோலை அல்லது ஒரு புதிய மதிப்பீட்டை, அல்லது ஒரு புதிய சொல்லை அவர்கள் இடைச்செருகல் செய்திருக் கின்றனர். (திருமதி.ரமாதேவி அவைத் தலைவர் இருக்கையில்)

அம்மையீர், பொருளாதார நிலையில் இருக்கும் பலவீனமான  பகுதியினருக்கு நாங்கள் ஒன்றும் எதிரிகள் இல்லை. பொருளாதார நலன்கள் என்ற சொற்கள்தான் அரசமைப்பு சட்ட மதிப்பீடுகளிலோ அல்லது அரச மைப்பு சட்ட புத்தகத்திலோ பதிவு செய்யப்பட்டுள்ள சொற்களாகும். அப்படியானால் மேலும் மேலும் படிப்புதவித் தொகைகளைஅவர்கள் வழங்க வேண்டி யிருக்கும்; மேலும் மேலும் கடன்களை அவர்கள் வழங்க வேண்டியிருக்கும்; அத்தகைய பொருளாதார நிலையில் பலவீனமான பகுதியினருக்காக ஒட்டு மொத்த கல்விக் கட்டணங்களும் முழுமையாக ஒதுக்கப்பட்டது என்று அறிவிக்கவும் செய்யலாம்.

ஆனால் இந்த 10 சதவிகித ஒதுக்கீட்டை இட ஒதுக்கீடாகக் கொண்டு வந்ததன் மூலம், உண்மையாகவே  அடக்கி ஒடுக்கப்பட்ட,   பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டில் ஏதோ ஒரு இடத்தில் ஏதோ ஒரு வகையில் எல்லை தாண்டி இவர்கள் செயல்பட இருக்கின்றனர் என்றே நான் கருது கிறேன்.

நடந்த நிகழ்வுகளைப் பற்றி  இதுவரை ஒரு மேலோட்டக் கோணத்தில் மட்டும் தான்  நான் கூறி வந்துள்ளேன். அதன் காரணம், இட ஒதுக்கீட்டுக் கொள்கை என்பது ஏதோ ஒருவர் விருப்பப்பட்டு தருவதோ அல்லது தர்மமோ அல்ல.  முன்னர் ஆங்கிலேய ஆட்சியின் போதும் நிலை நிறுத்தப்பட்ட ஓர் உரிமை அது. அதன் தோற்றமோ அல்லது ஆணிவேரோ அல்லது இன்னமும் சரியாகக் கூறுவதானால் இட ஒதுக்கீட்டின் தோற்றம், நடைமுறை மற்றும் மேம்பாடு 1880 ஆம் ஆண்டில் இருந்தே இந்தியாவில் இருந்து வந்துள்ளது. இதற்கான விவரங்களை என்னால் தர முடியும்.

இடஒதுக்கீடு பற்றிய முதல் கலந்துரையாடல், 1880 ஆம் ஆண்டில் வெளிவந்த  கேலண்டர்-மேர் தொகுப் பில் இடம் பெற்றுள்ளது. படிப்பறிவு இல்லாதவர்கள் அல்லது உள்நாட்டு மக்கள் குழுக்களை விவரிக்க பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்ற சொல் அப்போது பயன்படுத்தப்பட்டுள்ளது. துவக்கப் பள்ளிகளில் படிப்ப தற்கு நிதி உதவி என்ற முறையில் படிப்புதவித் தொகை பெற உரிமை பெற்றவர்களாக அவர்கள் இருந்தனர். படிப்புதவித் தொகை அளிப்பதற்கு பிற்படுத்தப்பட்ட என்ற சொல் புதிதாக உருவாக்கப் பட்டதுதான் முதல் இட ஒதுக்கீடாகும். பின்னர் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களே பெரும்பான்மையினராக இருந்த பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்காக பள்ளிகளுக்கு மான்ய உதவி வழங்குவதற்கு 5-1-1885 இல் வெளியான அரசிதழ் எண் 40 வகை செய்திருக்கிறது. அது சென்னை மாகாணத்தால் செய்யப்பட்டது.

இட ஒதுக்கீடு தோன்றிய வரலாறு


பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை, குறிப்பாக தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்பட்ட மக்களை மேம் படுத்துவதற்காக தெரிவிக்கப்பட்ட மாண்டேகு செம்ஸ் போர்ட் சீர்திருத்தங்களில் கோலாப்பூர் மகாராஜா 1917 ஆம் ஆண்டில் ஆர்வம் காட்டினார். பொருளாதார நிலையில் பின்தங்கியவர்கள் என்ற சொல் எங்குமே இடம் பெற்றிருக்கவில்லை. இந்த சொல்  நாடாளுமன் றத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ அல்லது பிராந்திய அரசுகளிலோ  ஆங்கிலேயர்களால் பயன்படுத்தப்பட்ட இந்த சொல் எப்போதுமே பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட என்றே இருந்து வந்துள்ளது. அதில் தீண்டத்தகாதவர்கள் என்று கருதப் பட்ட மக்களும் அடங்குவர்.

பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களை அரசு பணிகளை மேற்கொள்ளச் செய்வது பற்றி ஆராய்வதற்காக ஒரு குழுவை மேதகு மைசூர் மகாராஜாவின் அரசு 1918 ஆம் ஆண்டில் நியமித்தது.  ஒரு கூட்டுத் தேர்வுக் குழு 1920 ஆம் ஆண்டில் அளித்த, ஒடுக்கப்பட்ட மற்றும் பிற் படுத்தப்பட்ட பிரிவு மக்களின் கல்வி வாய்ப்பு மேம் பாட்டை வலியுறுத்தும் ஓர் அறிக்கையை இங்கிலாந்து அரசு மறுஆய்வு செய்தது. பின்னர் 1921 இல்  சலுகை காட்டி நியமனம் செய்யும் குழு என்ற அமைப்பு லண்டனில் அரசுப் பணிகளில் போதுமான பிரதி நிதித்துவம் பெறாத பார்ப்பனர் அல்லாத அனைத்து சமுகங்களும் பிற்படுத்தப்பட்ட பிரிவு சமுகங்களே என்று விளக்கம் அளித்துள்ளது. 1925 ஆம் ஆண்டில் சீர்திருத் தங்கள் பற்றிய அமைச்சக அறிக்கை ஒன்று அரசுப் பணிகளில் போதிய பிரதிநிதித்துவம் அற்ற பார்ப்பனர் அல்லாத அனைத்து இதர சமுகங்களுமே பிற்படுத் தப்பட்ட சமுகங்களாகும் என்று தெரிவித்துள்ளது.

பின்னர் 1925 ஆம் ஆண்டில் சீர்திருத்தத் துறை அமைச்சக அறிக்கை ஒன்றில், பிற்படுத்தப்பட்ட பிரிவுகளைப் பற்றிய சீர்திருத்த ஆய்வு ஆணையத்திற்கு இந்த சொல்லாடலைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்காமல் போனது என்றாலும்,  தீண்டத் தகாதவர்கள் என்று கருதப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவுகளை, பார்ப்பனர் அல்லாத முரண்பட்டவர்களைக்  குறிப்பிடுவதற்கான அதன் பயன்பாட்டைப் பற்றி அமைச்சக அறிக்கை குறிப்பிடுகிறது   என்று கூறப் பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்பதற்கு  ஒடுக்கப்பட்ட பிரிவுகள், பழங்குடிமக்கள், மலைவாழ் மக்கள் மற்றும் குற்றவியல் மரபினர் போன்ற கல்வியில் பின்தங்கியி ருக்கும் ஜாதிகள் அல்லது பிரிவுகள்'' அனைத்துமே பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்று 1928 ஆம் ஆண்டில் ஹார்டோக் குழு விளக்கம் அளித்துள்ளது. பழங்குடி மக்கள் மற்றும் குற்றவியல் மரபினர் மற்றும் பிரிட்டீஷ் இந்தியாவில் வசிக்கும் மக்களில் மிகக் குறைந்த அளவில் முன்னேற்றம் அடைந்துள்ள இதர மக்களையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் பிரச்சினையை 1929 ஆம் ஆண்டில் இந்திய மத்திய குழு வேறுபடுத்திக் காட்டி யுள்ளது.

1930 இல் பம்பாய் மாகாணத்தில் நியமிக்கப்பட்ட  ஸ்டார்டி குழு, பழங்குடி மக்கள், மலை வாழ் மக்கள் மற்றும் இதர மக்களைப் பற்றி மட்டுமே விவரித்துள்ளது.  பிற்படுத்தப்பட்ட பிரிவு மற்றும் ஒடுக்கப்பட்ட பிரிவு என்று எவ்விதக் குறிப்பும் அளிக்காமல், சைமன் குழு 1930 ஆம் ஆண்டு அறிக்கை ஒன்றில் இடைப்பட்ட ஜாதிகள்  பார்ப்பனர் அல்லாத மக்களின் இயக்கம் என்றே குறிப்பிட்டுள்ளது. மறுபடியும் 1932 ஆம் ஆண்டில் இந்திய வாக்குரிமைக் குழு, பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட பிரிவுகள் மற்றும் சூத்திரர்களைப் பற்றிப் பேசியுள்ளது. சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியிருக்கும் மக்களைக் குறிப்பிடுவதற்கு  பிற்படுத்தப்பட்ட பிரிவு இந்து என்பதே மிகவும் பொருத்தமான பெயராக இருக்கும் என்று அய்க்கிய மாகாண இந்து பிற்படுத்தப்பட்ட பிரிவு சங்கம் அரசுக்கு அளித்த ஒரு விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.

பல பார்ப்பனர் அல்லாத சமுகங்களும் சேர்க்கப்பட்ட தால் ஏற்பட்ட, சென்னை மாகாணத்தின் பிற்படுத்தப்பட்ட பிரிவுகளின் பெருக்கம் பற்றிய ஒரு செய்தியை  1936 ஆம் ஆண்டில் டைம்ஸ் ஆப் இந்தியா'' வெளியிட்டு உள்ளது. மறுபடியும் 1937 ஆம் ஆண்டில், பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பிரிவுகளையும் சேர்த்து பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்ற சொல் திருவிதாங்கூர் சமஸ்தானத்தால் கையாளப்பட்டுள்ளது. 1947 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட  பொதுத் துறைஅரசாணை எண் 3437   மூலமாக இந்து பிற்படுத்தப்பட்ட 145 சமுகங் களுக்கு அரசு பணிகளில் தனி இட ஒதுக்கீட்டினை  சென்னை  மாகாண அரசு அளித்துள்ளது.

1947 ஆம் ஆண்டிற்குப் பிறகு அரசமைப்பு சட்ட மன்றத்தில் விவாதங்கள் தொடங்கின. அந்த விவாதங் களால் என்ன நிகழ்ந்தது? பிற்படுத்தப்பட்ட பிரிவுகளே மிகுந்த பாதிப்புக்கு உள்ளானவர்கள் என்று வட இந்திய பிரதிநிதிகள் ஊகித்துக் கொள்வதால், அது தாழ்த்தப்பட்ட பிரிவுகளைக் குறிக்கும் ஒன்றாக இருக்கிறது என்று பிற்படுத்தப்பட்ட பிரிவுகள் என்ற பெயருக்கு உத்தரப் பிரதேச மாநிலப் பிரதிநிதி பண்டிட் ஹிருதய நாத் குன்ஸ்ரூ ஒரு விளக்கத்தை அளித்தார். பின்னர் திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு என்ன நடந்தது? ஜாதிகளின் அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கும் நடைமுறையை நாம் கடைபிடிக்கக்  கூடாது என்று அவர் கூறினார். அதற்கு அரசமைப்பு சட்ட மன்றத்தில் டாக்டர் அம்பேத்கர் பதிலளித்தார். உங்களது இரு குறிப்புகளை மறு பரிசீலனை செய்வதற்கான சூத்திரம் ஒன்றை  அரசமைப்பு சட்ட வரைவுக் குழு உருவாக்க வேண்டும் என்று அவர் கூறினார். முதலாவதாக அனைவருக்கும் சம வாய்ப்புகள் இருக்க வேண்டும். அரசு நிர்வாகத்தில் இதுவரை பிரதிநிதித்துவமே பெற்றிராத சில குறிப்பிட்ட சமுகங்களுக்கு ஆதரவு அளிப்பதற்கான காரணங்கள் இருக்க வேண்டும் என்பது இரண்டாவது.

இதுதான் திரு.டி.டி.கிருஷ்ணமாச்சாரிக்கு டாக்டர் அம்பேத்கர் அளித்த பதிலாகும்.  இவற்றையெல்லாம் இங்கே நான் ஏன் திரும்பத் திரும்பக் கூறுகிறேன்? இடஒதுக்கீட்டுக்கான ஆணிவேர் 1880 ஆம் ஆண்டில் இருக்கிறது என்பதால்தான். அரசமைப்பு சட்டத்திற்கான முதல் திருத்தம் 1951 ஆம் ஆண்டில் கொண்டு வரப் பட்டது. கடந்த மக்களவை வரை, ஆங்கிலேய ஆட்சி காலத்து சட்டங்களின் அனைத்து இடங்களிலும், பொருளாதார நிலையில் பின்தங்கிய பிரிவுகள் என்ற சொல் குறிப்பிடப் படவே இல்லை என்பதுடன், அது அரசமைப்பு சட்டத்திலோ அல்லது  ஒடுக்கப்பட்ட பிரிவுகளுக்கான இட ஒதுக்கீட்டுக்கான  வேறு இதர நிர்வாக ஆணைகளிலோ  சேர்க்கப்படவில்லை, ஆனால், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதி யினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதற்கு வகை செய்யும் அரசமைப்பு சட்ட திருத்தம் ஒன்றை திடீரென நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அதனால்தான் அது ஒரு தேர்வுக் குழுவிற்கு பரிசீலனைக்காக அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் கூறுகிறோம். இது பற்றி நீதிமன்றங்களில் மேல்முறையீடுகள் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகள் முடிவடையும் வரை பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியி னருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பது தற் காலிகமாக நிறுத்தி வைக்கப்பட வேண்டும். பொரு ளாதார நிலையில் பின்தங்கிய பகுதியினர் என்று கூறப்படுவதும்  கூட உச்ச நீதிமன்ற பரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டியதே ஆகும். (குறுக்கீடுகள்)

பொருளாதார அளவுகோல் நிரந்தரமானதா?


பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியி னருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை  நீங்கள் கொண்டு வந்துள்ளீர்கள். அதனைப் பற்றிய பகுத்தாய்வுதான் என்ன? அது என்ன நிரந்தமானதா? ஒரே நிலையில் இருப்பதா? அரசமைப்பு சட்ட 14 ஆவது பிரிவின்படி அது நியாயமானதா? அது தவறாகப் பயன்படுத்தப்பட்டுள் ளதா,  அல்லது தீய நோக்கத்துடன் கொண்டு வரப் பட்டதா? பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியினருக்கு அரசமைப்பு சட்டப்படி 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதைப் பற்றி பரிசீலனை செய்ய கடந்த அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.சின்ஹாவின் தலைமையில் ஓர் ஆணையத்தை நியமித்தது. மிகவும் குறிப்பான ஒரு கேள்வி அது. அதன் காரணங்களும், நோக்கங்களும் மிகவும் தெளிவாக அளிக்கப் பட்டிருந்தன. சமுக நல திட்டங்களை விரிவுபடுத்து வதற்காக மட்டுமே பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் பிரிவுகளை அரசுகள் அடையாளம் காண முடியும். சமுக அளவிலும், கல்வியிலும் பின்தங்கியுள்ள பிரிவு மக்களுக்கு மட்டுமே  ஓர் ஆக்கபூர்வமான உதவி அளிப்பதே இந்திய சூழலில் இட ஒதுக்கீடு அளிப்பது என்பதாகும், அரசுப் பணி களிலும், கல்வி நிறுவன சேர்க்கையிலும் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு பொருளாதார நிலையில் பின்தங்கியிருப் பதை ஓர் அளவு கோலாக எடுத்துக் கொள்ள முடியாது  என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

புதிய மசோதாவின் பின்னணியில் ஒரு சதி!


அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட ஆணையத்தால் கூறப்பட்டது இது. அரசு ஒரு ஆணையத்தை நியமித்தது. முடிவான அறிக்கை ஒன்றை அந்த ஆணையம் அளித்துள்ளது. அந்த அறிக்கையை பரிசீலனைக்கு எடுத்துக் கொள் ளாமல் நீங்கள் புறக்கணிக்கிறீர்கள். சூழ்ச்சி செய்யும் ஒரு முறையில் இந்த மசோதாவை நீங்கள் கொண்டு வருகிறீர்கள். இதில் ஒரு சதி இருக்கிறது  என்று என்னால் கூறமுடியும். அதன் காரணம் மசோதாவின் நகல்கள் கூட இன்னமும் சுற்றுக்கு விடப்படவில்லை. (குறுக்கீடுகள்) மக்களவை அலுவல் பட்டியலிலும் அது இடம் பெற்றிருக்கவில்லை. அலுவல் பட்டியலில் சேர்க்காமலேயே அரசமைப்பு சட்டத்திற்கு ஒரு திருத்தம் கொண்டு வருவது என்பது அரசுக்கு மிகப் பெரிய அவமானத்தையும் வெட்கத்தையும் ஏற்படுத்துவதாகும். முதன் முறையாக, மக்களவை அலுவல் பட்டியலில் இடம் பெறாமலேயே ஓர் அரசமைப்பு சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 1991 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் நடந்த சஹானி வழக்கில், இது போன்றதொரு சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அப்போது பிரதமராக இருந்த திரு பி.வி.நரசிம்மராவ் விரும்பினார். அது உச்ச நீதிமன்றத்தால் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது. (குறுக்கீடுகள்) பின்னர் அது பற்றி பொருளாதார அரசியல் வார இதழ்  ஒரு பகுத்தாய்வினை மேற்கொண்டது.

நாடாளுமன்ற விவகார இணை அமைச்சரும், கனரக தொழில் துறை மற்றும் பொதுத்துறை நிறு வனங்களின்  இணை அமைச்சருமான  திரு அர்ஜூன் ராம்மேக்வால்:நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு நீங்கள் சவால் விடுகிறீர்களா?  (குறுக்கீடுகள்)

திரு .ஆ.இராசா (நீலகிரி): நாடாளுமன்றத்தின் அதிகாரத்துக்கு நான் சவால் விடவில்லை. இந்த சட்டத்தை நீங்கள் கொண்டு வந்த வழிதான் மிகுந்த சந்தேகங்களுக்கு இடமளிப்பதாக இருக்கிறது. (குறுக்கீடுகள்). அதனால்தான்  தேர்வுக் குழு ஒன்றுக்கு அது அனுப்பப்பட வேண்டும் என்று நான் கூறுகிறேன். (குறுக்கீடுகள்).

அம்மையீர். இந்த விஷயத்தில் நான் மிகவும் தெளி வாகவும், உறுதியாகவும் இருக்கிறேன். (குறுக்கீடுகள்) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசமைப்பு சட்ட திருத்தத்துக்கு நான் சவால் விடவில்லை. அந்த திருத்தம் கொண்டு வந்த வழிதான் பல சந்தேகங் களுக்கு பெருமளவில் இடம் கொடுப்பதாக இருக்கிறது என்று தான் நான் கூறுகிறேன்.

எனவே, இந்த காரணங்கள் அனைத்திற்காகவும், பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள பகுதியின ருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிப்பதை நான் எதிர்க்கிறேன். உங்களது மனப்பான்மை துரோணரது மனப்பான்மை போல இருக்கிறது அல்லவா? அத்தகைய மனப்பான்மை கட்டாயமாக  மாறத்தான் வேண்டும். இனியும்  நாங்கள் ஏகலைவர்களாக இருக்கப் போவதில்லை என்பதை நாங்கள் கட்டாய மாக மெய்ப்பிப்போம். நன்றி. அம்மையீர்!

- இவ்வாறு ஆ.இராசா தனது உரையில் குறிப்பிட்டார்.

- விடுதலை நாளேடு, 3.7.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக