பக்கங்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் பலன்


பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  63 விழுக்காடு இருப்பது தெரியவந்தது. அதேபோல் உயர்ஜாதி மக்கள் 10 விழுக்காடும் பட்டியலின வகுப்பினர் (எஸ்.சி.) 19.65 விழுக்காடும் பழங்குடியினர் (எஸ்டி) 16.8 விழுக்காடும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் குறித்து மாநிலத்தின் ஆளும் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் மீது பா.ஜ.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை மாநிலத்தின் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய்குமார் சவுதரி சமர்ப்பித்தார்.

அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது முதலமைச்சர் நிதீஷ்குமார் பேசியது: "இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டிய லினத்தவர்கள், பழங்குடியினர்கள்  உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை 65 விழுக்காடாக  உயர்த்துவதே என் விருப்பம். இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து விரைவாக முடிவெடுக்கப்பட்டு நடப்புப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற வழிவகை செய்யப்படும்.

 மேலும் வறுமையிலுள்ள 94 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இத்தருணத்தில் பீகாருக்கு சிறப்பு தகுதியை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் மீண்டும் முன்மொழிகிறேன்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு தகுதி வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்" என்றார் பீகார் முதலமைச்சர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசை பல மாநில அரசுகளும் வற்புறுத்தி வந்தும், ஒன்றிய பி.ஜே.பி. அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அதன் பின்னணியில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எத்தனை விழுக்காடு உள்ளனர். அவர்களின் கல்வி நிலை என்ன, உத்தியோக வாய்ப்பு என்ன என்ற உண்மை விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

அந்த நிலையில் கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் இவர்கள் எத்தனை விழுக்காடு உள்ளனர் என்பதை அறிந்து, தங்களின் இடஒதுக்கீட்டின் விழுக்காட்டை உயர்த்த வேண்டும் என்று போர்க் கொடி தூக்குவார்களே என்ற அச்சம்தான்.

உயர் ஜாதியினர் - பார்ப்பனர்கள் தங்கள் எண் ணிக்கைக்கு மேல் எத்தனை விழுக்காடு அனுபவிக்கின் றனர் என்ற உண்மையும் தெரிந்து விடும். இது அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான மனப்பான்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுமே என்ற சூழலில்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை உதாசீனப்படுத்தி வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரசும் சமூகநீதியில் தன் குரலை அதி வேகமாக எழுப்பி வருகிறது. இந்த நிலையில் ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் நிலைக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு விழி பிதுங்கி நிற்கிறது.

2024இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதி முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கப் போகிறது. அது பிஜேபிக்குச் சாவுமணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆம் தந்தை பெரியார் இன்றைக்கு அகில இந்தி யாவுக்கும் தேவைப்படும் தலைவராகி விட்டார்.

வெல்லப் போவது பெரியார் கொள்கை -

வீழப் போவது பி.ஜே.பி.யின் சமூக அநீதிக் கொள்கை!

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக