பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!’’ கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை

‘‘

 ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேல்ஜாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிக்கம்!

இதனை மாற்றி ‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும்!

1

சென்னை, செப். 26  குறிப்பிட்ட மேல்ஜாதியினர்தான் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆக்ரமித்து இருப்பதால், ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமத்துவ நெறிக் காக ஜாதிவாரி கணக்கெடுப்பு (சென்சஸ்) தேவைப்படு கிறது.  அதனை வலுப்படுத்தவே இத்தகைய கருத்தரங் குகள் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''

நேற்று (25.9.2023) மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிற்படுத்தப் பட்டோர் துறை சார்பில் ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு இந்தியாவினுடைய சமூகநீதிப் பாதுகாப்புக்கு எது அடிப்படையானதோ அந்த அடிப் படையான தேவை - ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது இந்தக் காலகட்டத்தில் மிகமிக முக்கியமானது. அதனு டைய அவசியம், அதனுடைய தேவை - முக்கியத்துவம் இவற்றையெல்லாம் எந்த மக்கள் உணரவேண்டுமோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள், அதிலும் குறிப்பாக இருக் கின்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக் களாகிய அவர்கள் உணரவேண்டும். அந்த நோக்கத்தை நாம் இந்த நேரத்தில் தெளிவுபடுத்தினால்தான், சமூகநீதி என்பது வெறும் அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப் புரையில் இருக்கின்ற ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல், மிக அழகாக எனக்குமுன் இங்கே உரையாற்றிய தலைவர்கள் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கூடிய அளவிற்கு நடத்தக் கூடிய பொருள் பொதிந்த ஒரு கருத்தரங்கம் இது.

இன்னுங்கேட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவு இருக்கிறதே, அது இன்றைக்குக் காட்டியிருப்பது இந்தியாவில் இருக் கின்ற அத்துணை மாநிலங்களுக்கும் வழக்கம்போல் தமிழ்நாடு வழிகாட்டி இருக்கிறது. அதற்காக எல்லோ ரையும் பாராட்டவேண்டும்.

எனக்குத் தெரிந்து ஒரு கருத்தரங்கம் அய்ந்து மணிநேரம் நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால், இது ஒரு வரலாறுதான். இங்கே எல்லா கருத்துகளையும் மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், தோழர்கள் - மிகவும் தேவையானதுதான்.

சமூகநீதி அரசமைப்புக்கானது - 

அதனை சீர்குலைப்பதா?

சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதையே, இப்பொழுது ஒன்றியத்தில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு பெரிய மோசடியை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்- மோசடி என்ற வார்த்தையை நான்  திட்டவட்டமாகத் தெரிவிக் கிறேன்.

இந்த இடத்தில் பேசினால், வழக்கு வரும் என்று பாலகிருஷ்ணன் சொன்னார். ஏற்கெனவே ஒரு வழக்கு வந்திருக்கிறது. அடுத்து இதற்காக ஒரு வழக்கு வந்தால் மிகவும் நல்லதுதான்.

ஏனென்றால், மக்கள் மன்றத்தில் பேசுவதைவிட, மிகவும் முக்கியம் நீதிமன்றத்தில் பேசவேண்டிய அவ சியம் - அதுவும் உச்சநீதிமன்றம் போன்ற இடங்களில் பேசவேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, அது சலுகையல்ல; நிறைய பேருக்கு இந்த அடிப்படையைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். இதுவரையில் அந்த அடிப் படையை நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை.

எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய திருப்தி என்னவென்றால், இங்கே சகோதரர் திருமா அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார். காங்கிரசே இப்பொழுது திராவிடர் கழகமாகி விட்டதா?  என்று.

உண்மையை எப்பொழுதும் ஒன்றாகத்தான் நிற் போம் நாங்கள். ஏனென்றால், எங்களைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியாக ஒன்றாகத்தான் இருக்கி றோம்.

காமராஜர் ஆட்சியாக இருந்தாலும், ஓமந்தூரார் ஆட்சியாக இருந்தாலும் - அந்தக் காலத்திலேயே ஓமந் தூராரை ‘‘தாடியில்லாத இராமசாமி இவர்'' என்றார்கள்.

காமராஜரை ‘‘கருப்புக் காக்கை'' என்று இராஜ கோபாலாச்சாரியார் வருணித்தார். 

ஆகவே, இந்தக் கொள்கைதான் மிகவும் முக்கியம்.

இப்பொழுது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது- அதுதான் சமூகநீதி.

காங்கிரசில் ஏற்பட்டுள்ள ஒரு திருப்பம்!

சமூகநீதியில், இன்றைக்கு இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருப்பதற்கு - இதுபோன்று இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருக்கவேண்டும் என்று சொல்லி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், யார் இது வரையில் அழுத்தப்பட்டு இருந்தார்களோ, யார் மிதிக்கப் பட்டு இருந்தார்களோ, அவர்களை மேலே கொண்டுவா என்று சொல்லக்கூடிய ஒரு திருப்பம் காங்கிரசில் ஏற்பட்டு இருக்கிறது என்றால், அது இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டு இருக்கின்ற திருப்பம் - வரவேற்கத்தகுந்த திருப்பமாகும்.

இங்கே சகோதரர்கள் திருமா அவர்களும், இளங்கோ அவர்களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், ‘‘இன்றைய  காங்கிரசினுடைய தலைமை, சமூகநீதிக்கே முன்னுரிமை கொடுக்கக்கூடிய தலைமை. இதற்குமுன் எந்தக் காலகட்டத்திலும் இல்லாதது  இப்பொழுது இருக்கிறது.

அன்னை சோனியா காந்தி அவர்களானாலும் - இன்றைக்கு நாடே நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்றால், அது ராகுல்காந்தி அவர்கள்தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவர் எந்தக் கட்சிக்குத் தலைவர் என்பது முக்கியமல்ல - இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு இளைய, புதிய நம்பிக்கையுள்ள ஒரு தலைவர்.

அவர்மீது என்ன உங்களுக்கு இவ்வளவு பாசம் என்று நீங்களெல்லாம் கேட்கலாம்.

கொள்கை ரீதியாக 

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

ஒரு தலைவருக்கு முதல் தகுதி என்னவென்றால், நம்முடைய கொள்கைக்கு, யார் கொள்கை எதிரிகள்? கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக யார் எதிரிகள்? கொள்கை ரீதியாக யார் நண்பர்கள் என்பதை அடையாளம் காணுவதுதான்.

அதனைத் தெளிவாக அடையாளங்கண்டு கொண் டிருப்பதுதான் இன்றைய தலைமை.

அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்திருக்கின்ற திரு.மல்லிகார்ஜூனே கார்கே. அவருடைய காலம், அற்புதமான திருப்பங்கள் ஏற்படக்கூடிய, வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்ற காலம்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டி லிருந்து, ஏன் தந்தை பெரியார் வெளியே வந்தார்? 50 சதவிகித இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகத்தான்.

1919 ஆம் ஆண்டிலேயே 

தந்தை பெரியாரின் கோரிக்கை!

50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே உயர்ஜாதிக்காரர்கள், மற்றவர்கள் வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னொரு 50 சத விகிதத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தாருங்கள்'' என்ற தீர்மானத்தை, தந்தை பெரியார் அவர்கள் 1919 இல் காங்கிரசில் சேர்ந்த நாளிலிருந்தே வலியுறுத்தி வந்தார்.

சென்னை மாகாண சங்கம் என்று ஆரம்பித் தார்கள்; காங்கிரசில் சேருவதற்கு முன்பே அந்தக் கருத்தை உண்டாக்கினார். காங்கிரசினுடைய அமைப்புகளில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் இருந்தது. 1920 இல் தலைவராகிறார் தந்தை பெரியார். 1921 இல், திருநெல்வேலி, திருவண்ணா மலை, திருப்பூர் என்று இப்படி வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அதனை உயர்ஜாதி ஆதிக்கத்தினர் தடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

அதனால்தான், வேறு வழியில்லாமல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியே வருகிறார். 

இந்த வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்.

காங்கிரசை விட்டு பெரியார் விலகியது ஏன்?

இன்றைக்கு எப்படி மாறுதல் வந்தது என்றால், ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு  ‘‘The wheel has come full circle'' என்று.

அதுபோன்று மிகமுக்கியமாக வருகின்ற நேரத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வந்தவுடன், மல்லி கார்ஜூன கார்கே ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

ராகுல் காந்தி அவர்களுடைய கருத்தே தீர்மானமாக வருகிறது.

முதலில், காங்கிரஸ் கமிட்டி அமைப்பிலேயே, வகுப் புரிமை, சமூகநீதி தத்துவம் இருக்கவேண்டும் என்று.

இதுதான் பெரியாருக்கு வெற்றி! அன்றைக்கு நான் ‘விடுதலை'யில் அறிக்கை எழுதினேன்.

இதற்காகத்தானே பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். 

‘‘அனைவருக்கும் அனைத்தும்!''

சமூகநீதியினுடைய தத்துவம் என்ன?

சமூகநீதியினுடைய தத்துவம் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று பெரியார் அவர்கள் இரண்டே வார்த்தையில் சொன்னார்.

தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளினை - சமூகநீதி நாளாகக் கொண்டாடக்கூடிய நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய ஒப்பற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாருடைய வாசகத்தையே, உறுதிமொழியில் கொண்டு வந்தார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - தயவு செய்து நன்றாக எண்ணிப் பாருங்கள். உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ, முன்னேறிய ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ இட ஒதுக்கீடு இல்லை என்று நாம் சொல்லவில்லை; கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவில்லை; அல்லது தூக்கி எறியவில்லை.

அதற்குப் பதில் என்ன சொல்லுகிறோம், ‘‘உங்கள் பங்கு எவ்வளவோ அதை அனுபவித்துக் கொள்ளுங்கள்; இவருக்கு எவ்வளவு பங்கோ, அதை இவர் அனு பவித்துக் கொள்ளட்டும்; அவரவர் பங்கை அவரவர் அனுபவிக்கட்டும் என்பதுதான் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - அதுதான் சமூகநீதி.

சரி, அவரவர் பங்கு என்பது எப்பொழுது தெரியும்?

கணக்கெடுத்தால்தான் தெரியும்.

இங்கே உரையாற்றிய அத்துணை பேரும் சொன் னார்கள்; இளங்கோ அவர்களும் சொன்னார்; நான் அந்தக் கருத்தை வழிமொழிகிறேன்.

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்போர் - ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவது ஏன்?

ஒரு விசித்திரமான கருத்தரங்கமாக இருக்கும் சில பேருக்கு. எப்படி என்றால், யார் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறார்களே என்று. இன்றைக்கும், நாளைக்கும் எங்களுடைய கொள்கை ஜாதியை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்பதுதான். Annihilation of Caste  இதுதான் அம்பேத்கர் அவர்கள் கொடுத்த தலைப்பு.

ஜாதியை அழிப்பதற்குமுன் ஜாதி இருக்கிறதே- உலக நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

மற்ற நாடுகளில் எல்லாம் மனிதர்கள் பிறக்கிறார்கள். நம்முடைய நாட்டில்தான் உயர்ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன், தொடக்கூடிய ஜாதிக்காரன், தொடக்கூடாத ஜாதிக்காரன், படிக்கக் கூடிய ஜாதிக்காரன், படிக்கக் கூடாத ஜாதிக்காரன், படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற சட்டம் இன்றைக்கும் தர்மமாக - ஸநாதன தர்மமாக இருக்கிறது அது. மனுநீதி- அந்த மனுநீதிதான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வர வேண்டும்  என்பதுதானே ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை.

அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் மனுதர்மம் இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து!

ஆர்.எஸ்.எஸ். ஏடு தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், மனுநீதி இருக்க வேண்டிய இடத்தில், இப்படி ஒரு அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? என்று கேட்கிறார்.

ஆகவே, மனுநீதியில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

உயர்ஜாதிக்காரர்கள் படிக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே தோழர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

ஆகவே, அந்த அடிப்படையை நினைத்துப் பார்க்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் தேவை.

பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை!

ஓரிடத்தில் பந்தி நடைபெறுகிறது; சாப்பாடு குறை வாக இருக்கிறது; வந்திருக்கின்றவர்களின் எண்ணிக் கையோ அதிகம். அப்பொழுது என்ன செய்யவேண்டும்? நீண்ட நாள்களாக சாப்பிடாமல் இருக்கின்றவர்களை முதல் பந்தியில் உட்கார வையுங்கள் என்று சொல்கிறோம்.

யார், யார் பசியேப்பக்காரர்கள் என்பதைக் கணக் கெடுக்கவேண்டும்; அதேபோன்று புளியேப்பக்காரன் - நிறைய சாப்பிட்டுவிட்டு, அஜீரணத்திற்காக மருந்து சாப்பிடுகிறானே அவனைக் கொண்டு போய் முன்னால் அமர வைத்து - பசியேப்பக்காரனே, நீ வராதே, நீ பார்த்தாலே எங்களுக்குத் தீட்டாயிடும்; நாங்கள் சாப்பிடுவதை நீ பார்க்கக்கூடாது என்று இப்படி ஜாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றபொழுது, ஜாதி ஒழியவேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. ஆனால், அது இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால், இந்த நாட்டில், ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறோம்.

பிறக்கும்பொழுதும் ஜாதி - சாகும் பொழுது ஜாதி - சுடுகாட்டிலும் ஜாதி. ஒரு மனிதனுக்குத் தொல்லையே, உயிரோடு வாழும் வரையில்தான். ஆனால், இந்த ஜாதித் தொல்லை இருக்கிறதே, உயிர் போன பிறகும், சுடுகாட்டில் போய் நிற்கிறது இந்த ஜாதி.

ஆகவேதான், நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்; பின் ஏன், ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல் கிறோம் என்றால், ஜாதியைக் காப்பாற்ற அல்ல. உங் களைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்ற, சமூகநீதியைக் காப்பாற்ற ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை.

ஓரிடத்தில் பாலம் கட்டவேண்டும்; பாலம் கட்டும் வரை மாற்றுப் பாதையில் செல்லவேண்டி இருக்கும். இதுதான் ஜாதி ஒழிப்பு இலக்கணம் - இலக்கு. இதுதான் இட ஒதுக்கீடு, இதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதி வேண்டும் என்றால், ஒரு மாற்றுப் பாதை தேவை.

உடனே கேட்பார்கள், எவ்வளவு நாள்கள்தான் மாற்றுப் பாதையில் சென்றுகொண்டிருக்கவேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கேட்டால், அவர்களுக்கு ஒரே பதில், ‘‘எவ்வளவு நாளைக்கு நீ பாலம் கட்டுவதைத் தாமதிக்கின்றாயோ, அவ்வளவு காலத்திற்கு இந்த மாற்றுப் பாதை தேவை.'' அது எங்களுக்காக அல்ல. 

இட ஒதுக்கீடு கொடுத்தால், நீதிமன்றத்திற்குச் செல் கிறார்கள்; அங்கே நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு எப்படி இருக்கிறது என்று எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இன் றைக்கு உச்சநீதிமன்றத்தில், மிகப்பெரும்பான்மையான இருக்கின்ற மக்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். அன்றைக்கு மண்டல் எடுத்த கணக்கெடுப்பின்படி 52 சதவிகிதம். ஆனால், இன்றைக்கு 80 சதவிகிதம்.

ராகுல்காந்தி அழகாகக் கேட்டார், ‘‘ஓபிசியினுடைய அடிப்படை என்ன? எத்தனை பேர் இருக்கிறார்கள்?'' என்று.

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் அந்த வார்த்தையை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் 

இட ஒதுக்கீடு உண்டா?

10

உச்சநீதிமன்றத்தில் எத்தனை பேர் நீதிபதியாக இருக்கிறார்கள்; 34 நீதிபதிகள். அந்த 34 பேரில், எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒன்றோ, இரண்டோதான். அதேபோன்று ஓ.பி.சி. இரண்டே பேர்தான்.  அதுவும் கருநாடகத்தில் இருந்து சென்றவர் ஒருவர், தமிழ்நாட் டிலிருந்து சென்ற இன்னொருவர்.

இவர்கள்தான், இத்தனைக் கோடி மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்பொழுது தீர்ப்பு கொடுக்கவேண்டும்.

என்ன கேட்கிறோம்? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்கிறோம் - ஜாதி ஒழிப்புக்காரர்களுக்கு என்ன அவசியம் என்பதை நன்றாகப் புரிந்து கொள் ளுங்கள்.

இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறீர்களே, எத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கிறீர்கள்?

இத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கின்றோம் என்கிறார்கள்.

சரி, உங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்கிறீர்களே, கணக்கெடுப்பு புள்ளிவிவரம் இருக்கிறதா? 

அங்கே போனால் புள்ளி விவரம் கேட்கவேண்டியது. இங்கே நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே, அவரும் சொல்லுகிறார், ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கமாட்டோம் என்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நாங்கள் சமூகநீதி அடிப்படையில் உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கமாட்டோம் என்பதுதானே அதன் அர்த்தம்.

இட ஒதுக்கீடு கொடு என்று நாங்கள் நியாயம் கேட் பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

ஜாதியைக் காப்பாற்ற அல்ல - சமூகநீதிக்காகத்தான்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பதி னுடைய அடிப்படையே, ஜாதியைக் காப்பாற்ற அல்ல; சமூகநீதியைக் காப்பாற்றத்தான் என்பதை நன்றாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

காரணம் என்னவென்றால், இட ஒதுக்கீட்டை - மனுதர்மப்படி யார் உண்டாக்கியது? இட ஒதுக்கீட்டை நாம் உண்டாக்கவில்லை.

ஒடுக்கப்பட்டவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பெண்களோ இட ஒதுக்கீட்டை உண்டாக்கவில்லை.

இன்றைக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?

அருள்கூர்ந்து நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்; புரிய வைக்கவேண்டியது நம்முடைய கடமை.

முதலில் ஆரம்பித்தது அவர்கள்தான்.

பிராமணர்களுக்குக் கல்வி

சத்திரியர்களுக்கு ஆட்சி

வைசியர்களுக்கு வியாபாரம்

சூத்திரர்கள் அடிமையாக இருக்கவேண்டும்.

பஞ்சமர்கள் அதற்கும் கீழே - 

இவை எல்லாவற்றிற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண் களும் - அது உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்.

இதைத்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘படிக்கட்டு ஜாதி முறை'' என்று.

ஏணிப் படிக்கட்டில் மேலே, கீழே, அடுத்தது, அடுத்தது என்று வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு அழகான உதாரணத்தையும் சொன்னார் - நான்கு மாடி கட்டடத்தில், மேலே வசிப்பவர் அங்கேயே இருக்கிறார்; கீழே இருப்பவர், கீழே இருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு ஒரு விசித்திரமான சூழல் என்னவென் றால், படிக்கட்டு கிடையாது. மேலே இருப்பவன், மேலேயே இருப்பான்; கீழே இருப்பவன், மேலே போக முடியாது.  மேலே இருக்கிறவன், கீழே வரமாட்டான். அந்தக் கட்டடத்திற்குப் படிக்கட்டு கட்டித்தா என்று சொல்வதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

அப்படி படிக்கட்டு கட்டினால், மேலே இருப்பவர் கீழே இறங்கி வரலாம்; கீழே இருப்பவர் மேலே போகலாம் என்றுதான் சொல்கிறோம்.

ஜாதி ஒழிந்துவிட்டதா?

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று சொல்லும்பொழுது, 100-க்கு 3 பேராக இருப்பவர்கள், அவர்களுடைய பங்கை எடுத்துக் கொள்ளட்டும்; 10 பேர் இருக்கிறார்களா, பத்து பேருக்குரிய பங்கை எடுத்துக்கொள்ளட்டும். மீதி 90 பேருடைய பங்கைக் கொடுக்கவேண்டும் அல்லவா! 

அப்படியில்லாமல், 100-க்கு 100 பங்கையும் அவர் களே அனுபவித்துக்கொண்டு, மற்றவர்களை வெளியே துரத்திவிட்டார்கள்.

இப்பொழுது, மற்றவர்களுக்கு இடம் வேண்டும் என்று கேட்கிறோம். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

ஏனென்றால், ஜாதி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது. ஜாதி ஒழிப்புக்குப் பணியாற்றுபவர்கள் வேறு. ஆனால், இன்றைக்கும் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றனவே, எப்படி?

சொந்தப் பெண், வேறு ஒரு ஜாதியில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்றவுடன், கூலிப் படையை வைத்துக் கொல்கிறார்களே, அந்த மனப்பான்மையினுடைய கொடுமை என்ன? ஜாதி மனப்பான்மைதானே!

அப்படியென்றால், ஜாதி இருக்கிறதா? இல்லையா? வெளிநாடுகளில் ஜாதி என்றால் என்னவென்று கேட்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்த ஏற்றத்தாழ்வு என்பது - பொருளாதார ஏற்றத்தாழ்வுதான்; சமூக ஏற்றத்தாழ்வு என்பது அவர்களிடையே கிடையாது.

ஆனால், அது இங்கே இருக்கின்ற காரணத்தி னால்தான், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், 

We the People, என்று தொடங்கப்பட்டு, Justice, social, economic and political   அதாவது முதலில் எடுத்தவுடன் சமூகநீதி; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

ஆகவேதான், இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்கு, சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தியாகவேண்டும்.

சமூகநீதி வளர, வளர ஜாதி ஒழியும்!

இட ஒதுக்கீடு வந்தால், சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. மிகப்பெரிய அளவிற்கு நம் மக்கள் படிக்கிறார்கள்; அதனால், சமத்துவம் வருகிறது. ஏற்படுகின்ற வாய்ப்புகள் தானாகவே ஏற்படும்.

இதற்கு நேர் எதிரானதுதான் நண்பர்களே, 

ஆர்.எஸ்.எஸ். - ஜாதியைக் காப்பாற்றுவது- வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் யாரோ ஒருவர் அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்காதீர்கள்; இன்றைக்கு வந்திருக்கின்ற விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினுடைய சூழ்ச்சி என்ன?

18 வயது நிரம்பிய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லக்கூடாது; அதற்குப் பதில் செருப்புத் தைக்கிறவர் பிள்ளை, செருப்புத் தைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; துணி வெளுக்கிறவர் பிள்ளை, துணி வெளுக்கக்கற்றுக்கொள்ளுங்கள்; சிரைக்கிறவர் பிள்ளை, சிரைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நல்ல கத்தி வாங்கிக் கொள்வதற்காக, உங்களுக்கு 500 ரூபாய் சலுகைக் கொடுக்கிறோம் என்று சொன்னால், என்னங்க அர்த்தம்?  பேனா பிடிக்கவேண்டிய நம்மு டைய பிள்ளைகள், மறுபடியும் கத்தியைப் பிடிக்க வேண்டுமா?

நாக்கில் தேனைத் தடவுகிறார்கள்; தூண்டிலில் மண்புழுவை வைத்து மீனைப் பிடிப்பதுபோன்று, வட்டியில்லாத கடன் தருகிறோம்; குறைந்த வட்டி; 5 சதவிகித வட்டி என்று சொல்கிறார்கள்.

நீதிமன்றங்கள் எழுப்பும்  

வினாக்கள் என்ன?

ஒரு லட்சம் ரூபாய் தருகிறார்களே என்று நம்மாட்கள் புரியாமல் சொல்கிறார்கள். 

அந்தப் பணத்தை கடனாகத்தான் தருகிறார்கள்; அவர் வீட்டுப் பணத்தையா எடுத்துத் தருகிறார்? நம் கட்டிய வரிப் பணத்தைத்தானே தருகிறார்கள்.

ஆகவேதான், அவர்கள் ஒருபக்கத்தில் ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள் என்று இங்கே எல்லோரும் சொன் னார்கள்.

ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதை ஒரு பக்கம் உயர்நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்; வன்னியர்கள், மற்றவர்களுக்கு எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். அப்பொழுது என்ன கேட்டார்கள், ஜாதி வாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரம் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால், அது செல்லாது என்று சொன்னார்கள்.

மகாராட்டிரத்தில் உள்ள மராட்டியர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் - அதற்கும் கணக்கெடுப்பு ஜாதி வாரியாக இருக்கிறதா? என்று நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்.

சரி, அவ்வளவு நியாயம் பார்க்கின்ற, தராசு பிடிக்கின்ற உயர்ஜாதி நீதிபதிகள், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டபொழுது கேட்டார்களா?

அது என்ன? ஏழைகளில், உயர்ஜாதி ஏழைகள். ஏழைகள் அதிகம் இருப்பதே, கீழ்ஜாதிக்குள்தான் இருக் கிறார்கள்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் 

பார்ப்பனர்களா உழைக்கிறார்கள்!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி யாற்றும் பெண்கள், ஆண்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் அதானிக்கோ, அம்பானிக்கோ சொந்தக் காரர்களா? எங்கள் சகோதரிகள், எங்கள் தாய்மார்கள், எங்களுடைய பிள்ளைகள், எங்களுடைய தோழர் கள்தானே!

எந்த உயர்ஜாதிக்காரன், எந்தப் பார்ப்பான், எந்த முன்னேறிய ஜாதிக்காரன் - உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லுகிறார்களே, அவர்களில் யார் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுங்கள் பார்ப்போம்.

ஆனால்,  அது செல்லும் - நீதிமன்றத் தீர்ப்பு. அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தைக் கேட் டார்களா?

50% இட ஒதுக்கீட்டுக்குமேல் போகக்கூடாது என்றால், உயர்ஜாதியினருக்கு 

10 விழுக்காடு கொடுத்தது எப்படி?

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு போராடி, அதில் வெற்றி பெற்று - அதனை நிலைக்க வைத்து - 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் வைத்த பிறகு, அதன் கிட்டே போக முடியவில்லை.

ஆனால், 69 சதவிகித இட ஒதுக்கீடு வரும்பொழுது, ‘‘இது என்ன அநியாயம்? 50 சதவிகிதத்திற்குமேல் போய்விட்டதே, இவர்களுக்கு; எப்படி கொடுத்தார்கள்?'' என்று கூப்பாடு போட்டார்கள்.

இப்பொழுது, இவர்களுக்கு, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் வருகிறது என்றவுடன், அதைப்பற்றி மூச்சே விடவில்லை. 

சரி, 50 சதவிகிதம் தீர்ந்து போய்விட்டதே, இந்த 10 சதவிகிதத்தை எங்கே இருந்து கொடுக்கிறீர்கள்?

உயர்ஜாதியிலிருந்து கொடுக்கிறோம் என்றார்கள்.

ஏழைகளுக்குக் கொடுக்கிறோம் என்றால், எல்லா ஜாதி ஏழைகளுக்கும் அல்லவா கொடுக்கவேண்டும். அதேபோன்று எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்பதுதான் சமூகநீதி.

எவ்வளவு பித்தலாட்டம், எவ்வளவு மோசடி இருக் கிறது என்பதற்கு அடையாளம், நமக்கு 50 சதவிகிதத் திற்குமேலே போனால், தகுதி, திறமை  கெட்டுப்போகிறது என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு, உயர்ஜாதிக் காரர்களுக்கு வந்தால், அது நியாயமாம்.

இங்கே, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. காரணம், திராவிட ஆட்சி, ‘திராவிட மாடல்' ஆட்சி நடைபெறு வதால், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என் பதில் உறுதியாக இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், புதுச்சேரியில், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக் கிறார்கள். முன்னேறிய ஜாதியினர் என்ற பட்டியலில், 5 சதவிகிதம்தான் மொத்தமே இருக்கிறார்களாம். 5 சதவிகித மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு.  இது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதையெல்லாம் எடுத்துப் பேசவேண்டும்; புரிய வைக்கவேண்டுமே!

இந்த நேரத்தில், இவற்றையெல்லாம் எடுத்து, மக்களிடம் தெளிவாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலையோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இதனை செய்திருப்பது பாராட்டத்தகுந்ததாகும்.

தோழர்களே, இதனை ஒரே ஒரு கருத்தரங்கத்தோடு நிறுத்தாதீர்கள்; ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துங்கள்.

வட மாநிலங்களில் 

பிரச்சாரம் அதிகம் தேவை!

இன்றைக்கு நமக்குப் பெரிய வாய்ப்பாக, அகில இந்திய காங்கிரசின் தலைமை - இளம் தலைமை இந்தக் கருத்தை முன்னிறுத்தி சொல்வதினால், வடபுலத்தில் இந்தக் கருத்தை அதிகமாக மக்களிடம் பரப்பவேண்டும்.

1951 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் முத லாவது திருத்தத்தை தந்தை பெரியார் போராடியதின் வாய்ப்பாகக் கொண்டு வந்து, அதனை காமராஜர் செய்தார் என்பதையெல்லாம் இங்கே சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் வகுப்புவாரி உரிமை இருந்தது. முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்ததால், வழக்கு வந்ததால் என்ன லாபம் என்றால், மறைமுக நன்மை என்னவென்றால், இந்தியா முழுவதும் உள்ள இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதனால் விடியல் ஏற்பட்டது.

ஆகவே, தமிழ்நாடு, இந்தியாவிற்குக் கொடுத்தது அன்றைக்கு. அதேபோல, இன்றைக்கும் நீங்கள் காங்கிரஸ் கமிட்டியின்மூலமாக, இந்தியா முழுமைக்கும் இதை கொண்டு போய்ச் சேர்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் கருத்தைச் சொல்லுங்கள்; தெளிவான கருத்துகளைச் சொல்லுங்கள்.

சமூகநீதி என்பது சலுகையல்ல -

சமூகநீதி என்பது பிச்சையல்ல -

சமூகநீதி என்பது நம் பிறப்புரிமை!

ஆகவே, அந்தப் பிறப்புரிமையை வலியுறுத்த வேண்டும் என்றால், எந்த இடத்தில் கண்ணிவெடி வைத் திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கண்ணிவெடியைப் புதைத்து வைத்திருக்கின்ற இடம்தான் - ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாதே'' என்று சொல்வது. அந்தக் கண்ணிவெடியைக் கண்டு பிடித்துத் தூக்கிப் போடுவதுதான் - ஜாதிவாரி கணக் கெடுப்பு என்ற ஏற்பாடு.

ஆகவே, அதை சிறப்பாக செய்துள்ள அத்துணை பேருக்கும் நன்றி!

தென்னாட்டில் பி.ஜே.பி.,க்கு இடமில்லை!

தெளிவாக, இதனை வடநாட்டுக்காரர்களுக்குச் சொல்லவேண்டும்; தென்னாட்டைப் பொறுத்தவரையில் இங்கே பி.ஜே.பி.,க்கு இடமில்லை என்று அனுப்பியாகி விட்டது.

வடநாடும் அதனை செய்யவிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.

இன்னும் 6 மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இப்பொழுது இவர்கள் செய்யாவிட்டாலும், அப் பொழுது செய்வோம். அன்றைக்கு இதேபோன்று, அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்துவோம். 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவுப் போட்ட ஒன்றிய அரசாங்கமே, வாழ்க, வருக! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கு வோம்.

அந்த முயற்சிகளைத் தொடருங்கள், தொய்வில் லாமல் தொடருங்கள்!

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி!

வருக புதுயுகம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுத் தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணை யத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர், திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், தி.மு.க அமைப்புச் செயலாளர்  நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்  கருத்தரங்க உரையாற்றி னார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கோவா மாநில பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன், ஆ.கோபண்ணா,  காங்கிரசு கட்சியின் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில பொறுப் பாளர்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப் பாளர்கள்,  கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக