பக்கங்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!'' கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘

 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்!

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான்!

சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதிவாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்!

15
சிதம்பரம், நவ.10 சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்; சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதுதான். சமூகநீதியைக் நிலைநாட்டுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, 
நெருங்கினால் தீட்டு!

கீழ்ஜாதிக்காரர்களாக நம்மை ஆக்கியதோடு மட்டுமல்லாமல் - தொடக்கூடாத ஜாதி, பார்த்தால் தீட்டு, தொட்டால் தீட்டு, நெருங்கினால் தீட்டு.
இதற்கு என்ன அர்த்தம்?
இது வெளிநாட்டுக்காரர்களுக்குப் புரியவில்லை. ‘‘தொடக்கூடாது என்று உங்கள் நாட்டில் சொல்கிறார்களே - எங்கள் நாட்டில்கூட கருப்பர்கள் - வெள்ளையர்கள் என்ற போராட்டத்தைத்தான் நடத்திக் கொண்டிருக் கின்றோம்'' என்றார்கள்.அமெரிக்காவில் ஒருமுறை ஒருவர் கேள்வி கேட்டார் -
வாட் இஸ் காஸ்ட்? என்று கேட்டபொழுது, அதுகுறித்த விளக்கத்தைச் சொன்னோம்.

மின்சாரத்தைத் தொட்டால்தான் 
‘ஷாக்' அடிக்கும்!
நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு, தொட்டால் ஆபத்து எதில் இருக்கும் என்றால், மின்சாரத்தைத் தொட்டால்தான் ‘ஷாக்' அடிக்கும். ஆனால், உங்கள் நாட்டில் சிலர் பிற மனிதர்களைப் பார்த்தாலே தீட்டு என்று சொல்கிறார்களே, என்று ஆச்சரியப்பட்டார்.
நம்முடைய நாட்டில்தான் காலங்காலமாக படிக்கக் கூடாத சமுதாயமாக நம்மாட்களை வைத்திருந்தார்கள்.
அம்பேத்கர் அவர்கள், தந்தை பெரியாரைப் பின்பற்றி ஒரு கருத்தை சொன்னார்.ஒரு நாட்டில், படிக்காதே என்று சொல்வதற்கு ஒரு மதம் - ஒரு ஸநாதனம் - ஒரு தத்துவம்.எல்லோருக்கும் படிப்பைக் கொடுக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம்.
ஆனால், நீங்கள் படிக்கக் கூடாது என்று சொல்வதற்கு ஒரு தத்துவம் இருக்கிறது. எதைக் கொடுத்தாலும் கீழ்ஜாதிக்காரனுக்கு அறிவை, படிப்பை கொடுக்கக் கூடாது. மீறி படித்தால், அவர்களின் காதில் ஈயத்தைச் காய்ச்சி ஊற்றவேண்டும்; அப்படியும் மீறி படித்தால், அவர்களின் நாக்கை அறுக்கவேண்டும்.

சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் 
சமூக நீதி வேண்டும் என்ற குரல்!
உலகத்தில் வேறு எங்காவது இப்படி சொல்கிற மதம் உண்டா? மனித சமூகத்தில் உண்டா? ஆகவேதான், இந்த சமூக அநீதியை எதிர்த்துப் பிறந்ததுதான் சமூக நீதி வேண்டும் என்ற குரல்.
அந்த சமூகநீதியை எப்படிக் கொடுப்பது? சமூகநீதிக்கு ஒரே விளக்கம் - அனைவருக்கும் அனைத்தும்!
உயர்ஜாதிக்காரர்களை வஞ்சிக்கவேண்டும் என்று நாம் சொல்லவில்லை.
நீங்கள் 3 சதவிகிதம் இருக்கிறீர்களா? நீங்கள் 3 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளுங்கள்.30 சதவிகிதம் இருக்கிறார்களா? அவர்கள் 30 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ளட்டும்.

சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!’’ என்பதுதான்!
அவரவர்களுக்கு அந்த வாய்ப்புகள் - இதுதான் சமூகநீதி. சமூகநீதி என்றால், வேப்பங்காய் அல்ல. சமூகநீதி என்றால், யாரையும் பிடித்து கடலில் போடுவது இல்லை. சமூகநீதி என்றால், ‘‘அனைவருக்கும் அனைத்தும்!'' என்பதுதான்.
இதை எப்படி கண்டுபிடிப்பது? சமூகநீதியைக் நிறைவேற்றுவதற்காகத்தான் ஜாதி வாரியான கணக்கெடுப்பு வேண்டும் என்கிறோம்.உடலில் நோய் வந்தால், டாக்டரிடம் சென்று, ‘‘எனக்கு இதுபோன்ற பிரச்சினை'' என்று சொல்லும்பொழுது அவர் என்ன சொல்லுவார்? 

ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!’’
டாக்டர், உங்களுக்கு என்ன பிரச்சினை என்று பார்ப்பதற்கு இப்பொழுது நவீன முறைகள் இருக்கின்றன. ஸ்கேன் செய்து பார்க்கவேண்டும் என்று சொல்வார்.
இப்பொழுது டாக்டர்கள், ‘‘ஸ்கேன் வேண்டாம்'' என்று சொன்னாலும்கூட, நோயாளி சொல்கிறார், ‘‘எதற்கும் ஒரு ஸ்கேன் செய்து பார்த்துவிடலாமா?'' என்று. இது உங்களுக்கெல்லாம் இயல்பாகப் புரிகின்ற விஷயம்.
அந்த ஸ்கேன்தான் ‘‘ஜாதிவாரிக் கணக்கெடுப்பு!'' என்பதாகும்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது - என்ன நிலவரம்? யார் யார் எங்கெங்கே இருக்கிறார்கள்? என்ன சூழ்நிலை? இதைச் சொல்வதுதானே!
உடனே அவர்கள் என்ன சொல்கிறார்கள் தெரியுமா? ஜாதி வாரிக் கணக்கெடுப்பு கூடாது என்கிறார்கள்.

கணக்கெடுக்கப்பட்ட புள்ளி விவரம் இருக்கிறதா? என்று நீதிமன்றமும் கேட்கிறதே!
சமூகநீதி வேண்டும் என்று சொல்கிறவர்கள் அனைவரும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறோம்.
நாம் மட்டும் கேட்கவில்லை, சமூகநீதியை ஒழிக்க வேண்டும் என்பதற்காகவே மேலே போய் உட்கார்ந் திருக்கிறார்களே - உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் - அங்கே போனவுடன், நீதிபதி மிகவும் வசதியாக ஒரு கேள்வியை வைத்திருக்கிறார்.
‘‘கணக்கெடுக்கப்பட்ட புள்ளிவிவரம் இருக்கிறதா?'' என்கிறார்.
இல்லை என்றால், அந்த சட்டம் செல்லாது; கணக் கெடுத்துவிட்டு வாருங்கள் என்று நீதிமன்றம் கட்டளை யிடுகிறது. ஆனால், கணக்கெடுப்பை உயர்ஜாதி தடுக்கிறது; மனுதர்மக் கூட்டம் தடுக்கிறது.
இப்பொழுது மனுதர்மத்திற்கும் - மனித நேயத்திற்கும் தான் போராட்டம்.

முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்தவர் இளந்தலைவர் 
ராகுல் காந்தி
ஜாதிவாரிக் கணக்கெடுப்பிற்கு முதல் வழிகாட்டியாக இந்தியாவில் முடிவெடுத்த இளந்தலைவர் - இந்திய தேசிய காங்கிரசின் இளந்தலைவர்தான் - எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கக்கூடிய ராகுல்காந்தி அவர்கள்தான்.
அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியும் தீர்மானமாக அதை நிறைவேற்றியது.  அதன் பிறகு கருத்தரங்கம். தமிழ்நாடு வழக்கம்போல, எல்லாவற்றிற்கும் வழிகாட்டும்.நம்முடைய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் அய்யா கே.எஸ்.அழகிரிதான் அய்தராபாத்திலிருந்து வந்தவுடன், சென்னையில் கருத்தரங்கம் நடத்தினார்.
இன்று கடலூர் வழிகாட்டுகிறது - நிச்சயமாக கடலூர் வழிகாட்டும் - அதிலொன்றும் சந்தேகமேயில்லை. சிதம்பரத்தில்  இன்று கருத்தரங்கம் நடைபெறுகிறது.
ஏனென்றால், பிறவியிலேயே மேலே இருந்து வந்து, ராஜாக்கள் கட்டிய கோவில்கள் எல்லாம் எங்கள் கைகளில்தான் நாங்கள் உள்ளேயே விடமாட்டோம் என்று சொன்னார்கள். 
ஆகவே அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று போராட்டம் ஆரம்பித்தது.

ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்
ஜாதியை நினைவூட்டலாமா? ஜாதிக் கொடுமையல்லவா இது என்று கேட்கிறார்கள்.
யார் கேட்கிறார்கள் என்றால், யார் ஜாதியைப் பிடித்துக்கொண்டு, அந்த முத்திரையோடு வாழ் கிறார்களோ, யார் ஜாதி சின்னத்தைப் போட்டுக் கொள்கிறார்களோ - அவர்கள்தான் கேட்கிறார்கள்.
ஜாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தக்கூடாது என்று ஏதோ அவர்கள் பெரிய ஜாதி ஒழிப்பு வீரர்கள் போன்று வேடம் கட்டிக்கொண்டு நிற்கிறார்கள்.
ஆனால், உண்மையாகவே ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கிறவர்கள், இந்த மேடையில் இருக்கின்ற அத்துணை பேரும்தான்.
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்கிறவர்கள் அல்ல.

அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றுகிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு!
ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, அரசமைப்புச் சட்ட திருத்தத்தைக்கூட 3, 4 நாள்களிலே விவாதம் ஏதும் நடத்தப்படாமல் நிறைவேற்றுகிறார்கள்.

‘‘ஒரே ஜாதி’’ என்று சொல்லட்டுமே!
நாளைக்கே ஒரு அவசர சட்டத்தைக் கொண்டு வரட்டுமே - இனிமேல் ஒரே நாடு - ஒரே ரேஷன் கார்டு - ஒரே தேர்தல் - ஒரே மொழி - ஒரே மதம் இந்து மதம் - ஒரே கலாச்சாரம் ஆரியக் கலாச்சாரம் - எல்லாவற்றிற்கும் ஒரே, ஒரே ஒரே என்று சொல்லும் ஒன்றிய பா.ஜ.க. அரசு, ‘‘ஒரே ஜாதி'' என்று சொல்லட்டுமே!
அதை நாங்களும் ஏற்றுக்கொள்கிறோமே - மனிதர்களில் பேதமே இருக்காது அல்லவா!
ஒரே ஜாதி என்று சொல்லாமல் - ஜாதியைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறார்கள்.
எப்படி பாதுகாக்கிறார்கள்?
நாம், சமத்துவ நாள் கொண்டாடுகிறோம், சமூகநீதி நாள் கொண்டாடுகிறோம் தமிழ்நாட்டில். அதற்கு உத்தரவு போடுகிறது திராவிட மாடல் ஆட்சி.

தென்மாநிலங்களில் பி.ஜே.பி.க்கு 
கதவு சாத்தப்பட்டுவிட்டது!
ஆனால், இன்றைக்குத் தங்களுடைய ஆட்சி முடியப் போகிறது என்று சொல்லக்கூடிய கட்டத்தில் - எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நண்பர்களே, ஏற்கெனவே அவர்களுக்குத் தென்மாநிலங்களில் கதவு சாத்தப்பட்டு விட்டது. இங்கே பி.ஜே.பி. தலைகீழாக நின்றாலும்கூட, இனிமேல் கதவைத் திறக்க முடியாது.
நடைபெறவிருக்கின்ற 5 மாநில தேர்தல் முடிவுகள் வருகிறபொழுது, வடநாட்டிலும் பி.ஜே.பி.,க்குக் கதவு சாத்தப்பட்டது என்கிற நல்ல செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.
ஏனென்றால், மக்கள் அவர்களைப் புரிந்துகொண்டு விட்டார்கள். சில பேரை சில காலம் ஏமாற்றலாம்; பலபேரை பல காலம் ஏமாற்றலாம். ஆனால், எல்லோரையும், எல்லா காலத்திலேயும் ஏமாற்ற முடியாது என்பது பொதுவிதி!
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறீர்களே என்று கேட்பவர்கள், அதே செப்டம்பர் 17 இல் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள்.
இதோ பாருங்கள், ஆதாரத்தோடு உங்களுக்குச் சொல்கிறேன்.
ஒன்றிய அரசு ‘‘விஸ்வகர்மா யோஜனா'' என்ற ஒரு திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது.அந்தத் திட்டத்தில், நம்முடைய ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், நம்முடைய சகோதரர்கள் செருப்புத் தைக்கிறவர்கள்; துணி வெளுப்பவர்கள்; சவரம் செய்பவர்கள்; மலம் எடுக்கும் தொழில் செய்பவர்கள். ஒவ்வொரு கிராமத்திலும், ஒவ்வொரு ஊரிலும் இருக்கிறார்கள் பாருங்கள் பரம்பரையாக - அந்த பரம்பரை ஜாதித் தொழிலையே அவர்கள்  செய்ய வேண்டுமாம். 

2028 ஆம் ஆண்டுவரையில் 
நடைமுறையில் இருக்குமாம்!
அந்த ஜாதி இழிவு அவர்களை விட்டு நகர்ந்துவிடக் கூடாது; ஜாதி ஒழிந்துவிடக் கூடாது. அதற்காக ஒரு திட்டம்தான் விஸ்வகர்மா யோஜனா திட்டம். இந்தத் திட்டம் 2028 ஆம் ஆண்டுவரையில் நடைமுறையில் இருக்குமாம். அந்தத் திட்டத்தை படங்களுடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
ஜாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்று நாம் சொன்னால், நீதிமன்றம் கேட்கிறது; மற்றவர்கள் கேட்கிறார்கள் - ஆகவே, அது எங்களுக்குத் தேவை என்று நாம் சொல்கிறோம். 

ஜாதி ஒழிப்புக்காரர்கள் நாங்கள் எல்லோரும். ஜாதி ஒழியவேண்டும் என்பதற்காகத்தான், ஜாதி வாரிக் கணக்கெடுப்புத் தேவை என்கிறோம்.
அம்மைக் கிருமியை உள்ளே விட்டு, அம்மை நோயை ஒழிக்கின்றோம்.
‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டத்தில் 18 ஜாதிகளின் பெயர்களை வெளியிட்டு இருக்கிறார்கள். அப்பன் தொழிலை மகன் செய்யவேண்டும்.

கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்
ஆச்சாரியாரால் கொண்டுவரப்பட்ட குலக்கல்வித் திட்டம் - கல்வி வள்ளல் காமராஜரால் ஒழித்துக் கட்டப்பட்ட குலக்கல்வித் திட்டம்.
காமராஜர் என்ற மாமனிதர், தந்தை பெரியாருடைய அந்தப் போராட்டத்திற்கு வடிவம் கொடுத்து - அவர் முதலமைச்சராக வந்தவுடன், முதலில் போட்ட கையெழுத்து  ‘‘இனிமேல் குலக்கல்வித் திட்டத்திற்கு இடமில்லை'' என்பதற்காகத்தான்.

குலக்கல்வியைக் கொண்டு வந்த ஆச்சாரியாருடைய ஆட்சி இரண்டு ஆண்டுகளுக்குமேல் நீடிக்கவில்லை.
70 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்வு இது. 70 வயதிற்கு மேலாக இருக்கின்றவர்களுக்குத்தான் அந்தப் பழைய வரலாறு தெரியும். 70 வயதிற்குக் கீழே இருப்பவர்களுக்குத் தெரிவதற்கு வாய்ப்பில்லை. படித்துத் தெரிந்துகொள்ளவேண்டும்.என்றைக்கு இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்?
தந்தை பெரியார் பிறந்த நாளான செப்டம்பர் 17 ஆம் தேதி!

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
(தொடரும்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக