பக்கங்கள்

சனி, 11 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர் கருத்துரை

‘‘ 

 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத்தான்!

‘இந்தியா’ கூட்டணி இந்தப் பிரச்சாரத்தை சிறப்பாக செய்கிறது; சரியான நேரத்தில் இந்தக் கருத்தரங்கத்தை கூட்டியிருக்கிறீர்கள்

9

சிதம்பரம், நவ.11 ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாக செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.


ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்: கருத்தரங்கம்
கடந்த 6.11.2023 அன்று மாலை சிதம்பரத்தில், கடலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பில், ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்‘’ என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திரா விடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.அவரது கருத்துரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம்தான் 
ஒன்றிய அரசின் ‘‘விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்!
பெரியாருடைய பிறந்த நாள் சமூகநீதி நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்கு எதிராக அந்த நாளில் கொண்டு வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸினுடைய திட்டம் இது.
ஜாதிவாரியாக 18 ஜாதிகள் அந்தத் திட்டத்திற்கு.
எனவே, ஜாதியை ஒரு பக்கத்தில் ஆணி அடிக்கிறீர்கள். படத்துடன் வெளியிட்டு இருக்கிறார்கள்.
செருப்பு தைப்பது - ஷூ பாலிஸ் போடுவது - ஹிந்தி மொழியில் ஜாதிப் பெயரைப் போட்டிருக்கிறார்கள்.
இந்தத் திட்டத்திற்காக குறைந்த வட்டியில் ஒரு லட்சம் ரூபாய் கடன் கொடுக்கிறார்களாம்.
உடனே நம்மாட்கள் என்ன நினைக்கிறார்கள் தெரியுமா? ஒரு லட்சம் ரூபாயா? இதைப் போய் வீரமணி தடுக்கிறார்களே - இந்தியா கூட்டணி தடுக்கிறதே'' என்று நினைக்கிறார்கள்.

சும்மா கொடுக்கவில்லை ஒரு லட்சம் ரூபாயை அவர்கள். கடனாகத்தான் கொடுக்கிறார்கள். 5 சதவிகித வட்டியில்.
ஆனால், 25 லட்சம் கோடி ரூபாயை வாராக் கடன் என்று சொல்லி,  தள்ளுபடி செய்து முதலாளிகளுக்கு ஆதரவாக இருக்கின்ற ஆட்சி - ஒன்றிய ஆட்சி.
இன்றைய இளைஞர்கள் 18 வயதிற்குமேல் கல் லூரிக்கு செல்கிறார்கள். இன்றைக்கு இவ்வளவு பேர் வழக்குரைஞர்களாகவும், பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும் வந்திருக்கிறார்கள். ஆனால், இதைத் தடுக்கவேண்டும் என்பதற்காகவே 18 வயதான வுடன், அவரவர் அப்பன் தொழிலை செய்யவேண்டும் என்பதுதான் ஒன்றிய அரசு கொண்டுவந்திருக்கும் ‘‘ விஸ்வகர்மா யோஜனா'' திட்டம்.
நான் கேட்கிறேன், ‘‘விஷம் குடியுங்கள்; ஒரு லட்சம் ரூபாய் தருகிறோம்‘’ என்று சொன்னால், விஷம் சாப்பிட வருவார்களா? அதன்மேல் சர்க்கரைப் பூச்சு பூசியிருக் கிறார்கள்.

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று ஏன் சொல்கிறோம்?
இங்கே இருப்பவர்கள் ஜாதி ஒழிப்பு வீரர்கள். அதை அளவு பார்ப்பதற்காகத்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை என்று சொல்கிறோமே தவிர, ஜாதியை நிலை நிறுத்துவதற்காக அல்ல.
ஆனால், இப்பொழுது அவர்கள் முற்போக்கு எண்ணம் உள்ளவர்கள் போன்றும், ஜாதிக்கு எதிரானவர்கள் போன்றும் காட்டிக் கொண் டிருக்கின்றார்கள்.
குலக்கல்வித் திட்டத்தை இராஜகோபாலாச்சாரியார் எப்படி கொண்டு வந்தாரோ - அரை நேரம் படிப்பு - மீதி அரை நேரம் அவரவர் அப்பன் தொழிலை செய்ய வேண்டும் என்பது குலக்கல்வித் திட்டம்.
ஒன்றிய அரசு திணிக்கும் விஸ்கவர்மா யோஜனா திட்டத்தில் என்ன சொல்லியிருக்கிறார்கள்?
கைகளால் செருப்புத் தைக்கின்ற குலத்தொழிலை செய்யவேண்டும். அந்தத் தொழிலைப் பாரம்பரியமாக செய்யவேண்டும். ஷூ கம்பெனியில் வேலை செய்தால் கடனுதவி கிடையாது. நவீன முறையில் செய்தாலும் கடனுதவி கிடையாது. செருப்புத் தைக்கின்ற படத்தைப் போட்டு இருக்கிறார்களே, அவர்களுக்கு எவ்வளவு தைரியம் பாருங்கள். 

70 ஆண்டுகளுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டத்தை இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள்!
அதைப் பார்த்தால் நம்முடைய ரத்தம் கொதிக்கிறது. நம்முடைய தலைவர்கள் 70 ஆண்டு களுக்கு முன்பு போராடி ஒழித்த திட்டம் - அதனால்தான் இன்றைக்கு நவீன முறையில் திணிக்கிறார்கள். ஒரு காமராஜர் இல்லையானால், இன்றைக்கு இவ்வளவு பேர் பட்டதாரிகளாக வந்திருக்க முடியாது. பிள்ளைகளைப் படி, படி என்று சொன்னார்கள்.
ஆனால், படிக்காதே, படிக்காதே என்கிற கூட்டம் அன்றைக்குக் குலத்தொழிலை கொண்டு வந்தது. மீண்டும் இன்றைக்கு அந்தக் குலத் தொழி லையே கொண்டு வந்திருக்கிறார்கள் என்றால், என்ன அக்கிரமம் இது!
அந்த ஒரு லட்சம் ரூபாயை சாதாரணமாகக் கொடுத்துவிட மாட்டார்கள். செருப்பு தைக்கின்ற தொழி லைச் செய்யும் நம்முடைய சகோதரரை அழைத்து, ‘‘உங்களுக்கு எத்தனை பிள்ளைகள்?’’ என்று கேட்டால்,
‘‘எனக்கு இரண்டு பெண்; இரண்டு ஆண்’’
‘‘சரி, அவர்களுக்கு 18 வயதானவுடன் என்ன செய்வீர்கள்?’’ என்று கேட்டால்,
‘‘அவர்கள் பிளஸ் டூ முடித்ததும், அவர்களைக் கல்லூரிக்கு அனுப்புவேன்’’ என்பார்.
இப்படி சொல்லாமல், 18 வயதானவுடன், என்னுடனேயே வந்து பழைய செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்றுக்கொள்ளுங்கள் என்றா சொல்லுவார்?
அதற்காகத்தான் நீதிமன்றம் புள்ளி விவரக் கணக் கெடுப்பு வேண்டும் என்று கேட்கிறது. 
சரி, கணக்கெடுக்கட்டும்; நாங்கள் தயாராக இருக்கி றோம். இதில் என்ன சங்கடம் அவர்களுக்கு?

ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை 
நிலை நாட்டுவதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காக!
இதுதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது, ஜாதியை ஒழிப்பதற்காக - சமத்துவத்தை நிலை நாட்டு வதற்காக - சமூகநீதியை நிரந்தரமாக ஆக்குவதற்காகத் தான். இன்றைக்கு இந்தப் பிரச்சாரத்தை ‘இந்தியா’ கூட்டணி சிறப்பாகச் செய்கிறது; இந்தக் கருத்தரங்கத்தை சரியான நேரத்தில் கூட்டியிருக்கிறீர்கள். முதல் வெற்றியை நாம் பெற்றுவிட்டோம்.
அய்ந்து மாநில தேர்தல்களில் அவர்களுக்குத் தோல் வியே என்று பயந்துவிட்டார்கள். இதுவரையில், வாக்கு வங்கி மோடிக்குத்தான், மோடிக்குத்தான் என்று சொன்னார்கள்.
மிசோராமில் நாளை தேர்தல் நடைபெறவிருக்கிறது. அங்கே சென்றாரா, மோடி? இதுவரையில் பிரச்சாரம் செய்வதற்காக அங்கே போகவில்லையே!
தேர்தல் நடைபெற்ற கருநாடக மாநிலத்திற்குப் போனார், மற்ற மற்ற மாநிலங்களுக்குப் போனார். ஆனால், மிசோராமில் நடைபெறவிருக்கின்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு இதுவரை போகவில்லை பிரதமர் மோடி என்றால், இதிலிருந்து என்ன தெரிகிறது? அங்கே அவர் சென்றாலும், அவர்களால் வெற்றி பெற முடியாது என் பதைத் தெள்ளத் தெளிவாகத் தெரிந்து வைத்திருக் கிறார்கள். ஆகவேதான், பிரதமர் மோடி அங்கே போகவில்லை.
மணிப்பூர் எங்கே இருக்கிறது? அங்கே நடைபெற்ற கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களை நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் அங்கே சென்று, மக்களை சந்தித்து ஆறுதல் சொன்னார்கள்.

இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு 
இதுவரை பிரதமர் செல்லவில்லையே!
ஆனால், நம்முடைய பிரதமர் மோடி அவர்கள், அந்தக் கண்டத்திற்குப் போகிறார், இந்தக் கண்டத்திற்குப் போகிறார், எகிப்துக்குப் போகிறார், விருது வாங்குகிறார் என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. ஆனால், இந்தியாவில் இருக்கும் மணிப்பூருக்கு இதுவரை அவர் செல்லவில்லையே!
அதனால்தான், ‘இந்தியா’ கூட்டணி இந்தியாவைக் காப்பாற்றப் போகிறது. 
இப்பொழுது அமித்ஷா சொல்கிறார், ‘‘நாங்கள் ஜாதிவாரிக் கணக்கெடுப்புக்கு விரோதிகள் அல்ல; அதை ஆதரிக்கிறோம்‘’ என்கிறார்.
இதுவரையில் அதனை எதிர்த்தவர்கள் அவர்கள்; இப்பொழுது இதை சொல்கிறார்கள் என்றால், நடை முறையில் அவர்களுக்குச் சிக்கல் இருப்பதால்தான் அவர்கள் ஆதரிப்பதுபோன்று கருத்துகளைச் சொல் கிறார்கள். ‘‘முன்னே பார்த்தால் நாயக்கர் குதிரை; பின்னே பார்த்தால் ராவுத்தர் குதிரை’’ என்பார்கள்.
ஆகவேதான், ஜாதி வாரிக் கணக்கெடுப்பு என்பது தத்துவம், வரலாறு உடையது. 1941 ஆம் ஆண்டுவரையில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் அது இருந்தது.

ஜாதி என்பதை வேரடி, 
வேரடி மண்ணோடு அகற்றவேண்டும் என்றால்...
இங்கே இருப்பவர்கள் யாரும் ஜாதி இருக்க வேண்டும் என்று சொல்பவர்கள் அல்ல என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.  ஜாதி என்பதை வேரடி, வேரடி மண்ணோடு அகற்ற வேண்டும் என்றால், ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்கிற வழி சிறப்பானதாகும்.
நம்முடைய பிள்ளைகள் படிக்கவேண்டும்; அப்படி படித்தவர்களுக்கு சமூகநீதிப்படி இடம் கிடைக்கவேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கவேண்டும். யாரையும் நாம் வேற்றுமைப் படுத்தவில்லை என்று சொல்வதற்காகத்தான் இந்தக் கருத்துகள். ஜாதிவாரிக் கணக்கெடுப் பினுடைய தேவைகளை வலியுறுத்துவதற்காகத் தான் இந்தக் கருத்தரங்கங்கள்.
ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகின்ற பொழுதெல்லாம் ஒரு புதிய கோஷத்தை எழுப்பு கிறார்கள். ‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’’ என்று.
எப்பொழுதுமே அவர்கள் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுபவர்கள். ஆர்.எஸ்.எஸினுடயை தத்துவமே அதுதான்.
வள்ளலார் சொன்னார் பாருங்கள்,
‘‘உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர்
உறவு கலவாமை இருத்தல்வேண்டும்‘’ என்று.
‘‘ஒரே தேர்தல், ஒரே நாடு’’ என்று சொல்கிறார்கள். இதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?
‘‘வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நீங்கள் தவறிப் போய் எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால், இதுதான் இந்த நாடு சந்திக்கின்ற கடைசித் தேர்தல் - ஒரே தேர்தல். இனிமேல் தேர்தலே கிடையாது'' என்பதுதான்.

‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்கின்றோம்!
ஆனால், அவர்களுக்கு நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறோம் - ‘இந்தியா’ கூட்டணி சார்பாக சொல்லியிருக்கின்றோம். இதுதான் உங் களுக்கும் ஒரே தேர்தல். இனிமேல் உங்களுக்கு அந்த வாய்ப்பு என்பது கிடையாது. 
எங்களால்தான் ஒரே நாடு; உங்களால் ஒரே நாடு கிடையாது - மதத்தால், ஜாதியால், பதவி வெறியால் நீங்கள் பிரித்திருக்கிறீர்கள் என்பதால் உங்களால் ஒரே நாட்டை அமைக்க முடியாது.
எனவே, ஜாதி ஒழிப்பிற்கான ஓர் ஆயுதம்; அதற்கான ஒரு வாய்ப்பு; அதற்கான ஒரு தேவைதான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதாகும்.
கணக்கெடுப்பதற்கே அவர்கள் ஏன் பயப்படுகிறார்கள்? என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

உங்களோடு எப்பொழுதும்  கடைசிவரையில் இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்!
நான் உரையாற்றிவிட்டுச் செல்வதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், உங்களோடு எப்பொழுதும் கடைசி வரையில் இருப்பவன் நான். இந்த யுத்தத்தில் கடைசிவரையில் இருப்பவர்கள் நாங்கள். காரணம் என்னவென்றால், எங்களுக்கென்று எந்தப் பதவி நாற்காலியும் தேவையில்லை. யார் யாரை எந்தெந்த நாற்காலியில்  உட்கார வைக்கவேண்டும் என்பதுதான் எங்களுடைய வேலை. யார் உட்கார்ந்தால், ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என்பதைத்தான் நாங்கள் பார்ப்போம்.
அதனால், மிக முக்கியமாக எல்லோரையும் அரவணைத்துச் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டு. இந்த வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி யைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடைசிவரையில் உங்களோடு இருப்போம் - இறுதி வெற்றி நமக்குத்தான்.

போராடுவோம் - வெற்றி பெறுவோம் - 
புதிய சமூகத்தை அமைப்போம்!
அந்த இறுதி வெற்றியைக் காணுகின்ற வரையில் போராடுவோம் - போராடுவோம் - வெற்றி பெறுவோம் - புதிய சமூகத்தை அமைப்போம்!
இன்னும் ஆறு மாதங்களில் ‘புதிய இந்தியா’வை உருவாக்குவோம். காவியற்ற இந்தியாவை உருவாக்கு வோம்!
பாண்டிச்சேரியில் வந்து நம்முடைய பிரதமர் மோடி சொன்னார், ‘‘காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்‘’ என்று.
இதை எப்பொழுது அவர் சொன்னாரோ, அப்பொழு திருந்தே, ‘‘பா.ஜ.க. இல்லாத இந்தியாவை’’ இப்பொழுது பார்க்கப் போகிறீர்கள். அதற்கான அச்சார முயற்சி கள்தான் - அதற்கான  தொடக்க முயற்சிகள்தான் இதுபோன்று கருத்தரங்கங்கள் என்று சொல்லி, வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி! 

வளர்க புதிய சமுதாயம் - 
வருக சமதர்ம சமுதாயம்!
வெற்றி நமதே!
போராடுவோம், வெற்றி நமதே என்று கூறி விடை பெறுகிறேன்.
வளர்க புதிய சமுதாயம்!
வருக சமதர்ம சமுதாயம்!
சமூகநீதி வெல்லட்டும்!
வெற்றி தொடரட்டும்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத் துரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக