பக்கங்கள்

சனி, 11 நவம்பர், 2023

ஆரிய' விகடனின் 'சனாதன' அலறல்

பிற இதழிலிருந்து...'ஆரிய' விகடனின் 'சனாதன' அலறல்

‘திராவிட மாடலின் சமூக (அ)நீதி’  - என்ற தலைப்பில் ‘ஆரிய’ விகடன் அலறி இருக்கிறது. திடீரென பட்டியலின சமூகத்தவர்மீது இவர் களுக்குப் பாசம் பொங்கி வழிகிறது. ‘என்னவாக இருக்கும்’ என்று பார்த்தால், அவர்களால் ‘கொண்டையை’ மறைக்க முடியாதது அந்தத் தலையங்கத்திலேயே இருக்கிறது.

தமிழ்நாட்டில் நடந்த மூன்று சம்பவங்களை விவரிக்கும் அந்தத் தலையங்கத்தின் உள் நோக்கம் என்ன தெரியுமா?

மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனக் கோட்பாட்டுக்கு எதிராக வலிமையான வாதங்களை எடுத்து வைக்கிறார் அல்லவா? அது விகட ஆரியக் கூட்டத்தை கோபம் கொள்ள வைக்கிறது. “மனிதத் தன்மையற்ற இந்த தாக்குதல்களையும் வன்கொடுமைகளையும் கண்டும் காணாமல் மவுனம் சாதித்து வேடிக்கை பார்க்கிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு. இது இப்படி இருக்க ‘சனாதன தர்மத்தை ஒழிப்போம்’ என்று உதயநிதி ஸ்டாலின் பேசுவது வெட்டி அரசியல் பேச்சு. பெரியார், அறிஞர் அண்ணா கோரிய சமூக நீதிக்கு திமுக அரசு செய்யும் துரோகம் இது” என்று ஆரிய விகடன் அலறுகிறது.

மக்களைப் பிளவுபடுத்தும் வர்ண சனாதனக் கோட்பாடுகளுக்கு எதிராகப் பேசியது மட்டுமல்ல; அதைத் திரும்பப் பெற மாட்டேன் என்று துணிச்சலாக நிற்கிறாரே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ற வன்மத்தை ‘திராவிட மாடல்’ ஆட்சியின் மீது காட்டுகிறது விகடன்.

‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற தத்துவத்தின் அடிப்படையில் அனைவர்க்கும் அனைத்தும் கிடைக்க வழிவகை செய்யும் ‘திராவிட மாடல்’ ஆட்சியால் அலறிக் கொண்டிருக்கிறது ஆரியக் கும்பல். அதனுடைய அலறலைத் தான் ஆளுநர் ரவியின் குரலில் நாம் காண்கிறோம். சில நாட்களுக்கு முன்பு ரவி என்ன சொன்னாரோ, அதையேதான் விகடனும் ‘தலையங்கம்’ என்ற பெயரால் வாந்தி எடுத்துள்ளது. இந்தக் கும்பலுக்கு ஒட்டுமொத்தமாக ‘ஒரே கண்டெண்ட் எடிட்டர்’ இருக்கிறார் என்பது நமக்குத் தெரியாதா என்ன?

பட்டியலின மக்கள் மீது நடந்த சில சம்பவங்களை எடுத்துப் போட்டு - தாங்கள் ஏதோ ஒடுக்கப்பட்ட மக்களின் ஒளிவிளக்கைப் போல விகடன் காட்டிக் கொள்கிறது. இந்தச் சம்பவங்களின்போது நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதை மறைத்து - இவை எதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற தோற் றத்தை உருவாக்குகிறது அந்தத் தலையங்கம்.

• நெல்லை தச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குள் -  குளித்து விட்டு வந்தவர்களிடம், பணத்தைக் கேட்டும், ஜாதியைக் கேட்டும் தகராறு செய்து இருவரைத் தாக்கிய சம்பவத்தில் ஆறுபேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டுள்ளார்கள். கொடும் காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் தாக்கிக் காயம் ஏற்படுத்துதல், வழிப்பறியில் ஈடுபடுதல், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகிய பிரிவுகளில் வழக்கு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட இருவருக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் வழங் கப்படும் முதல்கட்ட நிதி வழங்கப்பட்டுள்ளது.

• நாங்குநேரியில் மாணவரும், அவரது சகோதரியும் வெட்டப்பட்டார்கள். 3 சிறுவர் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். 11 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அந்தக் குடும்பத்துக்கு 3 லட்சம் ரூபாய் உடனடியாகத் தரப்பட்டது. உடனடியாக சபாநாயகரும் அமைச்சர்களும் சென்று பார்த்தார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், அந்த இருவரையும் சமீபத்தில் பார்த்து ஆறுதல் கூறினார்.

• கிருஷ்ணகிரி அருகே சோக்காடியில் நடந்த சம்பவத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்துக்குக் காரணமான அ.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் தலைமறைவாக இருக் கிறார். பிரச்சினையே இவரால் வந்தது தான். இவரது பெயரையே சொல்லாமல் தலையங்கம் தீட்டியதுதான் ‘விகடனின்’ பத்திரிக்கா தர்மம்!

• புதுக்கோட்டை கொப்பம்பட்டி மாணவர் தற்கொலையில் வன்கொடுமைச் சட்டப்படி வழக்குப் பதியப்பட்டுள்ளது.

• வேங்கைவயல் சம்பவம் தொடர்பாக நீதிபதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே அதுகுறித்து இங்கு எழுதுவது சரியாக இருக்காது.

• பள்ளிகளில் மாணவர்கள் மத்தியில் ஜாதிப் பிளவுகள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் தகுந்த பரிந்துரைகளை வழங்க, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

இப்படி அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப் பட்டுள்ளார்கள். கைது செய்யவில்லை என் றாலோ, அல்லது குற்றவாளிகள் காப்பாற்றப்பட்டு இருந்தாலோ அதுகுறித்து தலையங்கம் எழுதி அரசுக்கு அறிவுறுத்தலாம். செய்திகளை வரிசைப்படுத்தி, அதன்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தந்திரமாக மறைக்கிறது ‘விகடன்’ தலையங்கம்.

உண்மையில் இவர்களுக்கு சமூகநீதியில் அக்கறை இருக்குமானால், ‘ஜாதியை ஆதரித்தும் - மற்ற ஜாதிகளை இழிவுபடுத்தியும்’ பேசும் ‘திருச்சி கல்யாணராமன் போன்றவர்களை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்க முடியுமா? ‘சனாதனம்’ என்ற பெயரால்தான் இந்த ஜாதிவன்ம வார்த்தைகள் கொட்டப்படுகின்றன. இதுபோல பல நூறு வீடியோக்கள் இணையத் தளங்களில் வலம் வருகின்றன. ‘திராவிட மாடல் ஆட்சி இந்த ஜாதி வன்மப் பேர்வழிகளை ஏன் கைது செய்யவில்லை?’ என்று கேட்கும் ‘சமூக நீதி உள்ளம்’ விகடனுக்கு உண்டா? கலைஞர் கேட்பாரே; ‘உள்ளம் இருக்கிறதா? உள்ளம் இருக்க வேண்டிய இடத்தில் பள்ளம் இருக்கிறதா?’ என்று!

‘திராவிட மாடல்’ ஆட்சி நடத்தும் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு யாரும் சமூகநீதிப் பாடம் எடுக்கத் தேவையில்லை. யார் சொல் லியும் அல்ல; அவராகவே செய்யும் அக்கறையும், கொள்கைப் பற்றும் அவருக்கு உண்டு.

• ஆட்சிக்கு வந்ததும் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் அவர்கள்.

• அ.தி.மு.க. ஆட்சியில் கூட்டப்படாத மாநில விழிப்புணர்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து கூட்டி வருபவர் முதலமைச்சர் அவர்கள்.

• அண்ணல் அம்பேத்கர் பிறந்த ஏப்ரல் 14 ஆம் தேதியை ‘சமத்துவ நாளாக’ அறிவித்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி.

• அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில், அவரின் முழு அளவு வெண்கலச் சிலை நிறுவப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கரின் சிந்தனைகளைப் பரப்புவதற்காக அவரின் படைப்புகளை தமிழில் மொழி பெயர்க்க இந்த நிதியாண்டில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• அண்ணல் அம்பேத்கர் விருதுத் தொகை ரூ.5 லட்சமாக ஆக்கப்பட்டுள்ளது.

• வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டவர் களுக்கு வழங்கப்படும் தீருதவித் தொகை குறைந்தபட்சம் 85,000 ரூபாயிலிருந்து ஒரு இலட்சம் ரூபாயாகவும் அதிகபட்சம் 8 இலட்சத்து 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 12 இலட்சம் ரூபாயாகவும் உ யர்த்தப்பட்டது.

• வன்கொடுமையினால் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தைச் சார்ந்த 723 நபர்களுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம், கல்வி உதவித்தொகை, வீட்டுமனைப் பட்டா ஆகிய உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.

• வன்முறையால் பாதிக்கப்பட்டோரைச் சமூகக் கண்ணோட்டத்துடன் அணுகி, அவர் களுக்குத் தேவையான உதவிகளைச் செய்திட காவல்துறை மற்றும் வருவாய்த் துறை அலுவ லர்களுக்கு விழிப்புணர்வுப் பயிற்சிகள் வழங்கப் பட்டு வருகின்றன.

• ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் மற்றும் அவர் களுக்கு வழங்கப்பட வேண்டிய தீருதவிகள் மற்றும் மறுவாழ்வு தொடர்பான வழக்குகளை விரைந்து முடிக்க கூடுதலாக நான்கு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

• ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்களை பயன்பாட்டில் கொண்டிருக்கும் முன்மாதிரிச் சிற்றூர்களில், வளர்ச்சிப் பணிகளை மேற் கொள்ள ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கும் திட்டம் செயல்படுத்தப் பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் 70 சிற்றூர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்றுள்ளன.

• தீண்டாமையைக் கடைப்பிடிக்கப்படாமல் பொதுமக்கள் அனைவரும் நல்லிணக்கத்துடன் வாழும் கிராமங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அக்கிராமங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திடும் பொருட்டு ரூ.10 இலட்சம் நிதி வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் 37 கிராமங்கள் பயனடைந்துள்ளன.

• பொதுமக்களிடையே தீண்டாமைக்கெ திரான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் ஜனவரி மாதம் 24-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை “மனிதநேய வார விழா” நடத்தப்படுகிறது.

• ஆண்டுதோறும் ஜனவரி 26, ஆகஸ்டு 15 மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களிலும், அந்தந்த மாவட்டங்களில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் விடுமுறை நாட்களிலும் சமத்துவ விருந்து ஏற்பாடு செய்யப்படுகிறது.

• ஆதிதிராவிட மக்களின் கல்வியறிவு விகிதம் (73.26%) ஒப்பீட்டளவில் பொதுப் பிரிவினரின் கல்வியறிவு விகிதத்தினை ( 80.09%) விட குறைவாக உள்ளது. எனவே இத்துறைக்கான மொத்த நிதி ஒதுக்கீடான ரூ.3,512.85 கோடியில்; கல்விசார்ந்த திட்டங்களுக்காக மட்டும் ரூ.2,206.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

 • ஆதிதிராவிடர் நலத் துறையால் 1138 ஆதி திராவிடர் நலப் பள்ளிகள் மேம்பாட்டுக்காக ரூ.120 கோடி சென்ற ஆண்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• இத்துறையால் நடத்தப்படும் விடுதிகளைப் பழுது பார்க்க ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

• எம்.சி.இராஜா கல்லூரி விடுதி வளாகத்தில் ரூ.44.50 கோடி மதிப்பீட்டில் 10 தளங்களுடன் நவீன வசதியில் புதிய விடுதிக் கட்டடம் கட்ட முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி இருக்கிறார்கள்.

• முனைவர் பட்டப்படிப்பிற்கான உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் இதுவரை 2,954 மாணவர்களுக்கு தலா ஒரு லட்சம் ருபாய் வீதம் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• வெளிநாடுகளில் சென்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கான வருமான உச்ச வரம்பு ரூ.8 இலட்சம் ஆக உயர்த்தப்பட்டு, 18 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது.

• தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் பயனடைவதற்கான வருமான உச்சவரம்பு மூன்று இலட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

• ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச் சியை ஊக்குவிக்கும் வகையில் ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்’ என்னும் புதிய திட்டம் ரூ.100 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

• ஆதிதிராவிடர் குடியிருப்புகளை மேம் படுத்த “அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் வரும் அய்ந்தாண்டுகளில் 1000 கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப் படவுள்ளது.

• புதிரை வண்ணார் நல வாரியத்திற்குப் புத்துயிர் அளித்து, வாழ்வாதார மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்த நிதியாண் டில் ரூ.10.00 கோடி கூடுதல் நிதி ஒப்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

• இந்த நிதியாண்டில் மாநில திட்ட ஒதுக் கீடான ரூ.77,930.30 கோடியில், ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்காக ரூ.17,075.70 கோடி(21.91%) மற்றும் பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக ரூ.1595.89 கோடி (2.05%) ஒதுக்கீடு செய்யப்பட் டுள்ளது. இது மாநிலத்தில் உள்ள ஆதிதிராவிடர் (20.01%) மற்றும் பழங்குடியின மக்கள் தொகை (1.17%) விகிதாச்சாரத்தை விட அதிகமானதாகும்.

- இதுதான் ‘திராவிட மாடல் ஆட்சி’யின் சமூக நீதி ஆகும்.

முதலமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள் ளதைப் போல, ‘சுயமரியாதைச் சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்’ என்பதும் உண்மைதான். அதற்கான சட்டங்களையும் முதலமைச்சர் தீட்டி வருகிறார்கள். மனமாற்றப் பரப்புரைகளையும் தமிழ்நாடு அரசு செய்து வருகிறது. இதையெல்லாம் தாங்கிக் கொள்ள முடியவில்லை ‘ஆரிய’ விகடக் கும்பலால்.

அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது போன்ற சட்டங்களாலும் - மக்களைப் பிளவுபடுத்தும் சனாதனத்துக்கு எதிரான யுத்தங்களாலும் - நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கும் ஆரியக் கும்பல், பட்டியலின வேஷம் போடுகிறது. காலம் காலமாக போடப்பட்டு வரும் இந்தக் கபடவேடங்களை உண்மைத் தமிழ் மக்கள் உணர்வார்கள். பார்த்துப் பார்த்து பழகிய ஆரியக் கூத்துகளை நிறுத்தி திருந்தப் பார்க்கவும்.

நன்றி:

 'முரசொலி' தலையங்கம் -11.11.2023 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக