பக்கங்கள்

திங்கள், 2 அக்டோபர், 2017

காந்தியார் பிறந்த நாளில்....! காமராசர் நினைவு நாளில்....!! தமிழர் தலைவரின் சிந்தனையை தூண்டும் அறிக்கை

காந்தியார் பிறந்த குஜராத் மண்ணிலேயே தாழ்த்தப்பட்டோர் மீசை வைத்துக் கொள்ளக் கூடாது என்றும், நெய்ப் போட்டு சாப்பிடக் கூடாது என்றும் கூறி அவர்களைத் தாக்கும் கொடுமை நடக்கிறதே, - இதுதான் 70 ஆண்டு சுதந்திரத்தின் இலட்சணமா? சிந்திக்க வேண்டாமா? என்று சிந்தனைப் பொறி பறக்கும் வினாவை எழுப்பியுள்ளார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். அதுவும் காந்தியார் பிறந்த நாள், காமராசர் நினைவு நாளில் இது குறித்து சிந்திக்க வேண்டாமா? என்றும் கேட்டுள்ளார். அறிக்கை வருமாறு:

 

தேசபிதா என்று அழைக்கப்பட்ட காந்தியாரின் பிறந்த நாளில் அவர் பிறந்த மண்ணான குஜராத் - மாநிலத்திலிருந்துதான் பிரதமரும் வந்து நாட்டை ஆண்டு கொண்டுள்ளார் - கடந்த 3 ஆண்டுகளாக!

காந்தியார் பிறந்த மண்ணில் கொடூரமா?

தீண்டாமையை மட்டுமே ஒழிக்கச் சொல்லி, ஜாதி வர்ணாஸ்ரமம் மிக நல்லது என்று டாக்டர் அம்பேத்கரிடமும்,  பெரியாரிடமும் வாதாடிய அவர் பிறந்த குஜராத்தில் "சுதந்திரம்" "சுயராஜ்ஜியம்" "ஜனநாயகம்" உள்ள மண்ணில் உழைக்கும் வர்க்கமான "தலித்"துகள் என்று அழைக்கப்படும் தாழ்த்தப்பட்ட சகோதரர்களின் நிலை - 70 ஆண்டு கால

(சு)தந்திரத்திற்குப் பின்னரும் என்ன நிலைமை?

இன்றைய "டைம்ஸ் ஆப் இந்தியா" ஆங்கில நாளேட்டில்   11ஆம் பக்கத்தில் வந்துள்ள அருவருக்கத் தக்க, ஒரு செய்தி.

தாழ்த்தப்பட்டவர் மீசை வைத்துக்

கொள்ளக் கூடாதாம்!

குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தில் போர்சத் தாலுகா பதரனியா கிராமப் பகுதிகளில் இன்னமும் தாழ்த்தப்பட்ட - தலித் இளைஞர்கள் மீசை வைத்துக் கொள்ளக் கூடாதாம்!

மீசை வைத்த இளைஞர்களுக்குத் தண்டனை! அவர்களுக்கு முகச் சவரம் செய்த முடி திருத்தும் பார்பர்களுக்கும் தண்டனை, அடி, உதை, கொலையிலும் முடிந்துள்ளது.

அது மட்டுமல்ல; ஒரு ஹிந்து மதத் திருவிழா "கர்ப்பா" (நிணீக்ஷீதீணீ) என்பது; அதை அருகில் இருந்து பார்த்தமைக்காக, தாழ்த்தப்பட்ட - "தலித்" இளை ஞர்களுக்கு அடி, உதை - தலையைச் சுவரில் முட்டிய தால் மருத்துவமனையில் இறந்துள்ளார் அவ்விளைஞர்!

என்னே காட்டுமிராண்டிதனமான கொடுமை!



டாக்டர் அம்பேத்கரின் தொலைநோக்கு!

"தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது" என்று 70 ஆண்டுகளாக இந்திய அரசமைப்பு சட்டம் கூறுகிறது என்றாலும் "100 ஆண்டுகள் ஆனாலும் இந்து மதம் உள்ள இந்த நாட்டில் தீண்டாமை ஒழிக்கப்படவே முடியாது! முடியவே முடியாது", என்று டாக்டர் அம்பேத்கர் கூறினார்! - எத்தகைய தொலைநோக்கு, அனுபவப் பூர்வமான அறிவிப்பு!

எந்த காந்தியாரை மதவெறி, பார்ப்பனீயம் - ஆரியம் கொன்றதோ, அதே மதவெறிப் பாம்பு இன்று மகுடம் சூட்டிக் கொண்டு படமெடுத்தாடுகிறதே! இதுதான் சுயராஜ்யமா?

காமராசரைப் படுகொலை செய்ய முயற்சிக்கவில்லையா?

இந்திரா காந்தி மதவெறிக்குப் பலியானார்!

காமராசரை மதவெறி (பசுவதைத் தடுப்பு என்ற பெயரால்) ஆர்.எஸ்.எஸ். சாமியார்கள் நிர்வாணமாகப் பட்டப் பகலில் 1966 நவம்பரில் அகில இந்திய காங்கிரசு கட்சியின் தலைவரான அவரது வீட்டுக்குத் தீவைத்து, அவரை கொலை செய்ய முயற்சிக்கவில்லையா?

இன்று அவர்களது சிலைகளுக்கு மாலை.

ஆனால் அவரது சீலங்களுக்கு (கொள்கைகளுக்கு) வேட்டு - அதுவும் அவர் பிறந்த மண்ணான குஜராத்  - இதைவிட தலை குனிவு வெட்கக் கேடு வேறு உண்டா?

நெய்ப் போட்டுச் சாப்பிடக் கூடாதாம்!

"மனித உரிமை ஆணையம் என்ன செய்கிறது?" அதே குஜராத்தில் நடப்பதைப் பார்த்துக் கொண்டு இருப்பது ஏன்?

அது மட்டுமல்ல, தங்கள் வீட்டுத் திருமண விருந்தில் நெய் போட்டுச் சாப்பிட்டதற்காக உயர் ஜாதித் திமிர் பிடித்தவர்கள், அவர்களைக் கட்டி வைத்து அடித்துக் கொன்றுள்ளனர்!

பசுப் பாதுகாப்பு என்ற பெயரில் உனா கிராம தலித் இளைஞர்கள் நிர்வாணமாக்கிய பிறகு படுகொலை  - என்னே அநாகரிகம்! இது! (ஆதாரம்: 2.9.2017 - The Economic & Political Weekly) 70 ஆண்டுகால "சுயராஜ்யத்தில்" செவ்வாய்க்கிரகம் கூடப் போக முடிகிறது; ஆனால் அவன் கட்டிய கோயிலில் அவன் அடித்து வைத்த கடவுள் சிலை அருகில் - கர்ப்பகிரகத்திற்குள் -கால் வைக்க முடியவில்லை; அவன் ஆகமங்களை முறையே படித்து "தகுதி" பெற்ற பின்பும் கூட இந்நிலை என்பது எதைக் காட்டுகிறது?

துக்க நாள் என்று தந்தை பெரியார் சொன்னாரே!

இச்சுதந்திரம் உண்மை சுதந்திரமா?

மனிதத்தை மதிக்காத சமூகம் ஜாதியை - தீண்டாமையை - பெண்ணடிமையை உள்ளடக்கிய பிறவி பேதத்தைப் பாதுகாக்கும் சமூகத்தை எத்தனை ஆண்டு காலம் சகிப்பது?

இளைஞர்களே, சிந்தியுங்கள்! தலைவர்களைப் படங்களாகப் பார்த்து மாலை அணிவிப்பதை சடங்குகளாக்கும் நிலை எவ்வளவு காலம் தொடருவது? வெட்கப்பட வேண்டாமா?

தந்தை பெரியார் கூறியது "துக்க நாள்" என்பது எத்தகைய தொலைநோக்கு - புரிந்து கொள்க!

 

 

கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்

சென்னை
2-10-2017
விடுதலை,2.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக