பக்கங்கள்

புதன், 30 டிசம்பர், 2015

அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைபற்றிய உச்சநீதிமன்ற தீர்ப்பு


தமிழ்நாடு அரசால் 2006இல் போடப்பட்ட
அரசு ஆணை செல்லாது என தீர்ப்பில் கூறப்படவில்லை
69 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை
தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும்
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் கூறவில்லை

தமிழ்நாடு அரசால் 2006இல் பிறப்பிக்கப்பட்ட அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைக்கான ஆணையை செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவிக்காத நிலையில், தமிழ்நாடு அரசு ஏற்கனவே அர்ச்சகர் பயிற்சி பெற்றவர்களை அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
இந்துக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் தகுதி  அடிப்படையில் என்பதை வலியுறுத்தி தி.மு.க. ஆட்சி (2-12-1970)யில் நிறைவேற்றிய சட்டத்தின் பேரில் உச்சநீதிமன்றத்தில் அப்போதும் அச்சட்டம் செல்லுபடியாகும் என்றும், அந்தப்படி அர்ச்சகராக நியமிக்கப்படுவது நியமனத்தைப் பொறுத்த வரை அது அரசுக்கு அதிகாரம் உள்ள ஒரு உரிமை (Secular act) மற்றபடி அந்த அர்ச்சகர்களால் நடத்தப்பட வேண்டிய சடங்குகள், சம்பிரதாயங்கள் இவைகளை தலைகீழாக மாற்றி ஏதோ (தலைகீழ்) “ஒரு புரட்சி” செய்து விடுவார்கள் என்றும் நாங்கள் கருதவில்லை.
அப்படி ஏதாவது நடக்கும் என்று இன்று அச்சப்படும் மனுதாரர்கள், அப்போது நீதிமன்றங்களை நாடி, பரிகாரம் தேட உரிமையுண்டு, எனவே தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டம் (தமிழ்நாடு இந்து அறநிலையத்துறை திருத்தச் சட்டம்) செல்லுபடியாகும் என்று தீர்ப்பளித்தனர்.
அய்ந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வும் தமிழக அரசின் ஆணையும்
இது - அரசியல் அமர்வு பெஞ்சில் அன்றைய தலைமை நீதிபதி  ஜஸ்டிஸ் எஸ்.எம். சிக்ரி, ஜஸ்டிஸ் ஏ.என். குரோவர், ஜஸ்டிஸ் ஏ.என். ரே, ஜஸ்டிஸ் டி.ஜி. பாலேகர், ஜஸ்டிர் எம்.எச். பெய்க் ஆகிய அய்ந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு தந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகும்.
அந்த தீர்ப்பில் எழுப்பப்பட்ட அச்சங்களைப் போக்கி, சமூக சீர்திருத்த அடிப்படையில் தான் தமிழக (தி.மு.க.) அரசு இந்த திருத்தத்தைக் கொணர்ந்து நடைமுறைப்படுத்த முற்படுகிறதே தவிர, “மத சீர்திருத்த அடிப்படையிலோ, மத விஷயங்களில் தலையிட்டு  தலைகீழ் நடைமுறைகளைச் செய்யவோ முயற்சிக்கவில்லை” என்று தெளிவுபடுத்தும் வகையில், 2006இல் அமைந்த தி.மு.க. (கலைஞர்) அரசு, முதலில் தனியே ஓர் ஆணை போட்டது; (23.5.2006) அதன்படி தேவைப்படும் தகுதியும், பயிற்சியும் பெற்ற ஹிந்துவான எந்த நபரும், கோயில்களில் அர்ச்சகராக நியமனம் பெறலாம் என்று கூறியது.
தனிச் சட்டம் கொண்டு வரப்பட்டது
அவசரச் சட்டமும், அதன்பிறகு  கைவிடப்பட்டு, தனிச் சட்டமாகவே - சட்டத் திருத்தமாக (Act 15 of 2006) என்று கொண்டு வரப்பட்டது. இதனை சரியாக அமுல்படுத்த பரிந்துரைக்க செய்ய உயர்நிலைக் குழு ஒன்றை  (High Power Committee) ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே. ராஜன் தலைமையில் கீழ்க்கண்ட இந்து சமயத்துறை வல்லுநர்களைக் கொண்டு நியமித்தது.
அந்தக் குழுவில், த.பிச்சாண்டி (அறநிலையத் துறை ஆணையர்) உறுப்பினர், செயலாளர் (பதவி வழி), தவத்திரு.தெய்வசிகாமணி பொன்னம்பல தேசிக அடிகளார் (குன்றக்குடி ஆதீனம், உறுப்பினர்), பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் (உறுப்பினர்), சிறீரங்கம் சிறீரங்க நாராயண ஜீயர் சுவாமிகள் (உறுப்பினர்), பிள்ளையார்பட்டி முனைவர் பிச்சை சிவாச்சாரியார் (உறுப்பினர்), திருப்பரங்குன்றம் கே.சந்திரசேகர பட்டர் (உறுப்பினர்) ஆகியோர் இடம் பெற்றனர். அந்தக் குழுவினர் பரிந்துரைகளை அளித்தனர். (ஆணை 23.5.2006 நியமனம் 10.6.2006).
அக்குழு தனது பரிந்துரைகளை அறிக்கையாக தந்ததை தமிழ்நாடு அரசு ஏற்று (ஆணை எண் 1, 2007) ஆணையாகவும்  வெளியிட்டது! இன்றும் அது செயல்பட எந்தத் தடையும் இல்லை.
மீண்டும் சிவாச்சாரியார்கள் 
உச்சநீதிமன்றத்துக்குப் படையெடுப்பு!
இந்த வரலாற்றுப் பின்னணியில் தமிழக (தி.மு.க.) அரசு 2006இல் நியமித்த அர்ச்சகர் நியமனம்பற்றிய (23.5.2006) ஆணையை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் (அது ஆணையாகப் போடப்பட்ட உடனேயே அவசரமாக) ஆதிசைவ சிவாச்சாரியார்கள் நலச் சங்கமும் மற்றும் தென்னிந்திய திருக்கோயில்  அர்ச்சகர்கள் பரிபாலன சபை ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆணைக்கு எதிராக வழக்குப் போட்டு, தடை ஆணையும் பெற்றனர். (அந்த ஆணை பிறகு தனிச் சட்டமாக போடப்பட்டது;  அதற்காகத் காத்திருக்காமல் ஆரம்ப கட்டத்திலேயே தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து, வழக்குப் போட்டனர் (W.P. எண் 354 of 2006) அதை உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் (ஜஸ்டிஸ் ரஞ்சன் கோகாய், ஜஸ்டிஸ் ரமணா) கொண்ட அமர்வு விசாரித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்குப்பின் 16.12.2015இல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் ஆணை செல்லும்
54 பக்கங்களைக் கொண்ட அத்தீர்ப்பில், மனுதாரர்களான - ஆதி சைவ சிவாச்சாரியார்களின் சங்கத்தினரும், மற்றவர்களும் தமிழ்நாடு அரசின் 2006ஆம் ஆண்டு அர்ச்சகர் நியமன ஆணை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்ற அவர்களின் முக்கிய கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டது.
இந்த தீர்ப்பின்படி தமிழக (திமுக) அரசு கொண்டு வந்த அர்ச்சகர் நியமன அரசு ஆணை செல்லும் என்றே விளங்கி விட்டது!
மனுதாரர்களின் மூன்று வாதங்களும் நிராகரிப்பு!
இந்தஆணையை செல்லுபடியற்றதாக அறிவிக்கக் கோரிய, மனுதாரர்களின் மூன்று முக்கிய வாதங்களை தக்க விளக்கத்துடன் கூறி, ஏற்க மறுத்துள்ளது.
1) சட்ட மொழியில் சொல்லப்படும்  (‘Res judicata’  ’  - அதாவது ஏற்கனவே முந்தைய வழக்குகளில் முடிவு செய்யப்பட்டு விட்டதையே இந்த ஆணை மீண்டும் கொண்டு வந்துள்ளது. எனவே இந்த ஆணை ஏற்கத்தக்கதல்ல; செல்லாது என்பது மனுதாரர் வைத்த முதல் வாதம். அதனை ஏற்க மறுத்துவிட்டது. (தீர்ப்பு பாரா 39).
மனுதாரர்கள் தரப்பில் வைக்கப்பட்ட இரண்டாவது வாதம்,
இந்திய அரசியல் சட்டத்தின் பிரிவுகள் 25,26 ஆகியவைகளின்படி, இந்த அரசு ஆணை - தங்களது மத உரிமை, சுதந்திரம் இவைகளைப் பறிப்பதாக இருப்பதால் செல்லாது என்று அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும்.
அதற்கு அத்தீர்ப்பில், அவ்வாறு அரசியல் சட்ட அடிப்படை உரிமையான மதச் சுதந்திர உரிமை என்பது, தங்கு தடையற்ற, குறுக்கிடப்பட முடியாத உரிமை அல்ல.
அவைகளில் உள்ள முன்பகுதியில் தெளிவாக்கப்பட்டுள்ள “Subject to Public order, Morality and  health” என்று உள்ளதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
25(2))b  என்ற உட்பிரிவில் உள்ள பகுதியும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதன் மூலம் அவ்வுரிமைகளை கட்டுப்படுத்தும் அதிகாரம் அரசுக்கு உண்டு என்று பல முந்தைய பிரபல வழக்குகளின் தீர்ப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ளது உச்சநீதிமன்றம். எதிர் மனுதாரர் தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்பட்ட வாதங்களைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
ஆகமங்களே  தெரியாத அர்ச்சகர்கள் பலர் உள்ளதையும், பல ஆகமங்கள் தெளிவு இன்றி குழப்பமாக உள்ளது என்றும் உயர்நிலைக்குழுவின் பரிந்துரையையொட்டிய ஆணையையும் சுட்டிக் காட்டி, தமிழ்நாடு அரசின் வழக்குரைஞர் வாதங்களும் நன்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. (பாரா 14).
வைணவ திவ்ய தேசங்கள் 108-இல், 106-க்குச் சென்று வந்துள்ள வ.வே.வாசு நம்பிள்ளை ராமானுஜாச்சாரியார், அந்த 106 திவ்யதேசங்களில் 30 கோயில்களில் மட்டுமே ஆகமம் தெரிந்தவர்கள் அர்ச்சகராக உள்ளனர்; பெரும்பாலான கோயில்களில் ஆகமங்கள் தெரியாதவர்களே அர்ச்சகர்களாக உள்ளனர் (ஜஸ்டிஸ் திரு ஏகே. ராஜன் தலைமையிலான உயர் மட்டக் குழு அறிக்கை 16-01)
1972இல் வந்த அரசியல் சட்ட அய்ந்து நீதிபதிகள் அமர்வு, பாரம்பரிய அர்ச்சகர் நியமன முறை ஒழிப்பை ஏற்றுக் கொண்டுள்ளது. ஜாதி, பிறப்பு அடிப்படையில்தான் அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்பதையும் ஏற்கவில்லை.
இடையில் பல்வேறு விளக்கங்கள் தீர்ப்பில்  சொல்லப்பட்டுள்ளவைகளை கருத்துகளாகவே (Obiter Dicta) கொண்டு இறுதி தீர்ப்பு என்கிற வகையில் (Ratio Decidendi) என்ற முறையில் Binding உள்ள முக்கிய Operative Portion ஆகக் கொள்ளப்பட வேண்டிய பகுதி 43-44வது பாராக்களில் கூறப்பட்டுள்ளவைகளாகும்.
பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றம் செல்லலாம்
பாரா 43-இல் - கூறப்பட்டுள்ள கருத்து: ஒவ்வொரு நியமனமும் செய்யப்பட்டு, அதில் பாதிக்கப்பட்டவர் வழக்குப் போட்டால் அதன்படி வந்த சட்டப் பரிகாரமே இறுதித் தீர்வாக அமையும். இவ்வாறு பல தீர்ப்புகள் வழக்குகள் - எதிர்காலத்தில் தவிர்க்க முடியாதவை - தேவையானவையும்கூட”
(What each case of  appointment of Archakas whenever and wherever the issue is raised, the necessity of seeking specific judicial verdicts in the future is inevitable and unavoidable)
பாரா 44 தான் திட்டவட்டமான ஒரு முடிவாகக் கூறப்படுகிறது. (ratio decidendi’)
Consequently and in the light of the aforesaid discussion, we dispose of all the writ petitions in terms of our findings, observations and directions above reiterating that as held in Seshammal (supra) appointments of Archakas will have to be made in accordance with the Agamas, subject to their due identification as well as their conformity with the Constitutional mandates and principles as discussed above.
ஒரே ஒரு நிபந்தனை
இதன் சாரம், சேஷம்மாள் வழக்கில் கூறப்பட்டுள்ளபடி அர்ச்சகர் நியமனம் ஆகம விதிகளின்படி செய்யப்படல் வேண்டும் என்று கூறப்படுகிறது.
‘சேஷம்மாள் வழக்கின்படி, தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களை நியமனம் - ஜாதி அடிப்படை இல்லாது என்பதை ஏற்று மேலும் அதில் கூறியுள்ள ஒரே நிபந்தனை - பூசை செய்வதில், சடங்குகளில் தீவிர மாற்றம் ஏதும் செய்து விடக் கூடாது என்பதுதானே தவிர, வேறில்லை.
“In our opinion the apprehensions of the petitioners are unfounded. Rule 12 referred to above still holds the field and  there is no good reason to think that the State Government wants to revolutionize temple worship by introducing methods of worship not current in the several temples.”
உயர்நிலைக்குழு நியமனம்
அதை அனுசரித்து தான், தமிழ்நாடு அரசு உயர்நிலைக் குழுவை நியமனம் செய்து அனைத்து ஜாதியினரிடமிருந்தும் பார்ப்பனர் உட்பட 69 சதவிகிதப்படி நியமனம் செய்து அவர்களுக்கு வைணவ ஆகமம், சிவ ஆகமம் ஆகியவைகளில் தனித்தனியே வகுக்கப்பட்ட பாடத் திட்டத்தின்படி, பயிற்சிகளை வைணவக் கோயில்களுக்குத் தனி, சிவன் கோயில்களுக்குத் தனிப்  பயிற்சி என்று தீட்சையும் பெற்று, தயாராக உள்ள 200 பேர்களுக்கு மேல் உள்ளவர்களை, தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறைக் கோயில்களில் அர்ச்சகர்களாக உடனடியாக நியமிக்க வேண்டியது அவசர அவசியமாகும்.
இந்த அரசு ஆணை மீதிருந்த தடை (Stay) இத்தீர்ப்பு வெளியானதன் மூலம் நீக்கப்பட்டு விட்டது.
தமிழ்நாடு அரசு நியமனம் செய்யப்பட்டும்!
மேலும் உயர்நிலைக்குழு தந்த அரசு ஆணை எண் 1, - 2007 என்பது அமுலாக்கப்பட்டுள்ளது. அதன்மீது எந்த வழக்கும், தடையும் கிடையாது. அந்த ஆணைபற்றி இந்தத் தீர்ப்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. (பாரா 14)
எனவே சேஷம்மாள் வழக்கின் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளவைகளை நிறைவேற்றியதுதான் அரசு ஆணை 1, - 2007 என்பதாகும். எனவே இத்தீர்ப்பு தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்படல் வேண்டும்.


கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை 
18.12.2015 

செவ்வாய், 22 டிசம்பர், 2015

இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்களால் நிறுவனங்கள் அபார வளர்ச்சி


இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர்களால் நிறுவனங்கள் அபார வளர்ச்சியைத் தொட்டுள்ளன
அமெரிக்க -இந்திய பொருளாதார நிபுணர்களின் ஆய்வின் முடிவு வெளிக்கொணர்ந்த உண்மை
புதுடில்லி, பிப்.7_ இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்தவர் களால் நிறுவனத் தின் உற்பத்தித்திறன் அதிகரித்தது மட்டுமல் லாமல் சத்தமின்றி பல சாதனை உயரங்களைத் தொட்டுள்ளது என சமீபத்தில் வெளிவந்த ஆய்வுகளின் முடிவு வெளிக்கொணர்ந்துள்ளது.  இட ஒதுக்கீட்டால் பணியிடங்களில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படு கிறது, இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த வர்களால் நிறுவனத்தின் உற்பத்தித் திறன் பாதிக் கப்படும். அதன் வளர்ச்சி விகிதம் குறையும் என்று நீண்டகாலமாக இடஒதுக் கீட்டிற்கு எதிரானோர் கூறிவந்தனர்.
இந்தக் கூற்று எந்த அளவிற்கு உண்மை என்பதைக் கண் டறிய அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகம் மற்றும் டில்லி பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் கள் இணைந்து இந்தியா வின் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேத் துறையில் ஆய்வை மேற் கொண்டனர்.
1980ஆம் ஆண்டு முதல் 2002ஆம் ஆண்டு வரையிலான  முதல் நிலை  மற்றும் இரண் டாம் நிலை அதிகாரிகள் நிலையில் நேரடியாக நடந்த ஆய்வின் முடிவை கடந்த வியாழன் அன்று வெளியிட்டனர். இந்த ஆய்வின் முடிவில் பல் வேறு வியக்கத்தகு  உண் மைகள் வெளிவந்துள்ளன.   இந்த ஆய்வு முடிவின் படி
முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்பதவிகளில் இட ஒதுக்கீட்டின் மூலம் நியமிக்கப்பட்ட அதி காரிகள் மற்றவர்களை விட தங்களின் திறமையை மிகச்சிறப்பான முறையில் வெளியிடுகின்றனர்.
இட ஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந் தோர் அதிகமாகப் பணியா ற்றிய துறையில் பொதுப் பிரிவினரை விட உற் சாகமாகப் பணியாற்றி பல்வேறு துணிச்சலான முடிவுகளை எடுத்து அவற்றை செயலாற்றிய காரணத்தால் ரயில்வே துறை நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது.
இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேரும் அதிகாரிகளில் பெரும் பான்மையோர் முதல் தலைமுறைக் கல்வியா ளர்கள் இவர்கள் தங் களின் திறமையை வெளிக் கொண்டுவர பதவியை பெரிய தூண்டுகோலாக எடுத்துக்கொள்கின்றனர். இவர்களிடம் அதிகாரம் சேரும் போது இட ஒதுக் கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த, அவருக்கு கீழ் பணிபுரியும் அனைவருக் கும் புதிய உத்வேகத்தை கொடுக்கிறது, இதனால் சுதந்திரமாகப் பணியற்ற நல்ல வாய்ப்பு கிடைக் கிறது.
முக்கியமாக ரயில் வேதுறை என்பது இந்தி யாவின் மிகப் பெரிய பொதுத் துறை நிறுவன மாகும். உலகின் முன்னணி பொது நிறுவனங்களின் வரிசையில் முதலாவதாக இருக்கும் ரயில்வே நிறுவ னம் இட ஒதுக்கீட்டின் மூலம் பல்வேறு சமூக மக்களுக்கு அதிக அளவில் வாய்ப்பளித்துள்ளது.
இட ஒதுக்கீட்டின் மூலம் கிடைத்த இந்த வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டு நேர்மையுடனும், துணிச்சலுடனும் பணி யாற்றும் சூழ்நிலையை அவர்களாகவே உருவாக் கிக் கொள்கின்றனர்.
இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியாற்றியவர் களால் பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்ட  காரணத்தால் ரயில்வேதுறை பல்வேறு முன்னேற்றங்களை கண் டுள்ளது. நடுத்தரவர்க்க மக்களால் அதிகம் பயன் பாட்டில் உள்ள ரயில்வே துறையை அந்த மக் களுக்கு ஏற்றவாறு பல் வேறு வசதிகளை உரு வாக்கித்தர முடிந்தது என்றால் அதற்கு இட ஒதுக்கீட்டின் மூலம் பணி யில் சேர்ந்தவர்களால் தான் இது சாத்தியமானது.
ரயில்வேதுறை மாத்திரமல்ல வேறு சில பொதுத்துறை நிறுவனங் களிலும் இடஒதுக்கீட்டின் மூலம் பணியில் சேர்ந்த அதிகாரிகளால் அந்த நிறுவனம், சில தனியார் நிறுவனங்களை விட முன்னணியில் திகழ்கிறது. இது குறித்த ஆதார பூர்வமான தகவல்களும் இந்த ஆய்வுக்குழுவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. தகுதி, திறமை எங் களின் தனிச்சொத்து என்ற பார்ப்பனர்களின் வாதம், இந்த ஆய்வின் மூலம் உடைத்தெறியப் பட்டுள்ளது.
இது நாள் வரை இட ஒதுக்கீடு என்பது திறமை யில்லாதவர்களுக்கும், தகுதியற்றவர்களுக்கும் அரசியல் லாபம் காண் பதற்கான அள்ளித்தரும் செயல் எனவும் இட ஒதுக்கீட்டின் மூலமாக பணியில் சேரும் நபர் களால் நாட்டுக்கு தீமை யும் இவர்களின் மூலமாக நிர்வாகச் சீர்கேடும் பணி யிடங்களில் கடுமையான பேதங்களும் நிலவுகிறது என்று தொடக்கம் முதலே போலியான பிரச்சாரங் கள் மேற்கொள்ளப்பட் டன. இந்தப் பிரச்சாரத் திற்கு ஆதரவாக இட ஒதுக்கீட்டில் பணியில் சேர்ந்து லாபமடைந்தவர் களின் வாரிசுகளே பின் பாட்டு பாடி வருகின் றனர். இந்த ஆய்வு பொய் யர்களின் முகத்திரையை கிழித்தது மட்டுமல்லாமல் இட ஒதுக்கீட்டை சரிவரப் புரிந்து கொள்ளாத மக் களுக்கு ஒரு தெளிவையும் ஏற்படுத்தி விட்டது.  சமூக நீதிக்களத்தில் திராவிடர் இயக்கம் 1920_-களில் இருந்தே கடுமை யாகப் போராடி வருகிறது. தொடக்க முதலே இட ஒதுக்கீட்டின் நன்மை என்பது நாட்டின் வளர்ச் சிக்கு மிகவும் தேவையான ஒன்று எனக்கூறி வந்தது.
ஆனால், பார்ப்பன ஊட கங்களும், இட ஒதுக்கீட் டிற்கு எதிரான சக்திகளும் தொடர்ந்து பொய்யான பிரச்சாரங்களைச் செய்து வந்தனர். இதன் காரண மாக இன்றளவும் சமூ கத்தில் சமநிலை ஏற்படா மல் இருந்து வருகிறது இதை நாம் கண்கூடாக காண்கிறோம். இட ஒதுக்கீடு இருக் கும் இடத்தில் ஜாதிய பேதங்களும், மோதல் போக்கும் இருக்கும் என்று கூறி முட்டுக்கட்டை போடுபவர்களுக்கு சரி யான சவுக்கடியை இந்த ஆய்வு கொடுத்திருக்கிறது.
இந்த நல்வாய்ப்பைப் பயன்படுத்தி சமூகத்தில் இன்றளவும் வாய்ப்புக் களைப் பெற இயலாத நிலையில் உள்ள மக்க ளுக்கு சமூக நீதி வழங்க மத்திய மாநில அரசுகள் முன்வரவேண்டும். அரசுத் துறை மாத்திரமல்லாமல் தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீட்டை வழங்க முன்வரவேண்டும். அதற் கான சட்டங்களை உட னடியாக இயற்றும் சூழல் இந்த ஆய்வு முடிவின் மூலம் உருவாகியுள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் அந்த மக்கள் அர்ப்பணிப்பு உணர் வுடன் பணியாற்றுவார்கள்.
-விடுதலை,7.2.15

வெள்ளி, 11 டிசம்பர், 2015

பரோடாவில் ஆலயப் பிரவேசம்


சுதேச சமஸ்தானங்களில் முற்போக்கான காரியங்களை முதன்மையாகச் செய்து வரும் சமஸ்தானம் பரோடா சமஸ்தானம் ஒன்றேயென்பதை நாம் கூற வேண்டியதில்லை. அதிலும் தாழ்த்தப்பட்டவர்கள் விஷயத்தில், பரோடா அரசாங்கம் மிகவும் அனுதாபங் கொண்டு அவர்களுக்குப் பல நன்மைகள் செய்து கொண்டு வருகின்றது.
தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் ஆட்சேபணையின்றிச் சேர்த்துக் கொள்ள வேண்டுமெனச் சென்ற வருஷத்தில் பரோடா அரசாங்கத்தார் உத்தரவு பிறப்பித்தனர். இவ்வுத்தரவை அகங்காரம் பிடித்த உயர் ஜாதி இந்துக்கள் எவ்வளவோ எதிர்த்தனர்.
பள்ளிக் கூடங்களில் சேரவந்த தாழ்த்தப்பட்ட வகுப்புப் பிள்ளைகளுக்கு எவ்வளவோ கஷ்டங்களை உண்டாக்கினார்கள், தங்கள் பிள்ளைகளை ஜாதி இந்துக்களின் பிள்ளைகள் வாசிக்கும் பள்ளிக் கூடங்களுக்கு அனுப்பிய தாழ்த்தப்பட்ட வகுப்புக் குடும்பத்தினரின் குடிசைகளை நெருப்புக்கிரையாக்கினர்.
அவர்கள் தண்ணீர் எடுக்கும் கிணறுகளில் மண்ணெண்ணெய் ஊற்றிகுடி, தண்ணீருக்குத் திண்டாட விட்டனர். இவ்வாறு உயர் ஜாதி இந்துக்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு சகிக்க முடியாத கொடுமைகளைச் செய்தாலும், அவர்கள் அரசாங்கத்தார் தமக்குக் கொடுத்த சுதந்திரத்தை உபயோகிக் காமல் விட்டு விட வில்லை.
அரசாங்கத்தாரும், தாம் பிறப்பித்த  உத்தரவை மாற்றாமல், பிடிவாதமாகவே நிறைவேற்றினார்கள். இவ்வகையில் அரசாங்கம் கொண்டிருந்த உறுதியைத் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர்பால் அனுதாபம் உள்ள எவரும் பாராட்டாம லிருக்க முடியாது.
இப்பொழுது இன்னும் சிறந்த துணிகரமான காரியமாக, தாழ்த்தப்பட்டார் அனைவரும் கோயிலுக்குள் செல்ல உரிமையுண்டு என்றும் உத்தரவு பிறப்பித்ததை நாம் பாராட்டு கிறோம். இதற்கு முன் போர் சமஸ்தானத்திலும் இவ்வாறே தாழ்த்தப்பட்ட சமுகத்தார்க்கும் கோயில் பிரவேசம் அளித் திருக்கின்றனர்.
அதைப்பின்பற்றி பரோடாவும் தைரியத்தோடு வைதிகர்களின் எதிர்ப்பைச் சிறிதும் பொருட்படுத்தாமல் இக்காரியத்தைச் செய்ததைப் பாராட்டு கிறோம். இப்பொழுது தான் சென்னைச் சட்டசபையில், தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத்தக்க சட்டத்தை ஏற்படுத்துமாறு அரசாங்கத்திற்கு சிபாரிசு செய்வதாக தீர்மானம் நிறை வேறியிருக்கின்றது.
சென்னை அரசாங்கத்தார் இத்தீர்மானத்தை அனுசரித்தும் பரோடா, போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்திருக்கும் உத்தரவுகளைப் பார்த்தும் தாமதமில்லாமல் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கோயில் பிரவேசம் அளிக்கத் தகுந்த சட்டத்தை நிறைவேற்ற முன்வருமா? என்று கேட்கிறோம்.
சுதேச சமதானங்கள் இக்காரியத்தைச் செய்த பின்னும் சென்னை மாகாண பொது ஜனங்களின் பிரதிநிதியாகிய சட்டசபை இக்காரியத்தை நிறை வேற்ற வேண்டுமென்று சிபாரிசு செய்த பிறகும் சென்னை அரசாங்கம் மௌனஞ் சாதித்துக் கொண்டு வாளாவிருக்குமாயின் அது நேர்மையும் ஒழுங்கும் ஆகாது என்பதைச் சொல்ல விரும்புகிறோம்.
அரசாங்கத்தின் நோக்கம் எல்லா வகுப்பினருக்கும் சமத்துவமளிப்பதும், எல்லா வகுப்பினருக்கும் நீதி புரிவதும் அல்ல வென்று பொது ஜனங்கள் நினைக்கும் படி இருக்கும். ஆகையால் சென்னை அரசாங்கம் சிறிதும் தாமதம் இல்லாமல் பரோடா போர்பந்தர் முதலிய சமஸ்தானங்கள் செய்தது போலத் தாழ்த்தப்பட்ட வகுப்பினர்க்கு ஆலயங்களில் சம உரிமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறுகின்றோம்.
குடிஅரசு  - துணைத் தலையங்கம் - 06.11.1932

சௌந்திரபாண்டியன் வெற்றி
சமீபத்தில் நடைபெற்ற மதுரை ஜில்லா போர்டு தேர்தலில் நமதியக்கத்தோழர் சௌந்திர பாண்டியன் அவர்கள் பெரு வாரியான ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றதறிய அளவிலா மகிழ்ச்சியடைகிறோம்.
பொது ஜன சேவையில் ஆர்வமும், ஊக்கமும், செல்வாக்குமுள்ளவர் பலர் வெளியே தங்கி விடுவதும், தன்னலமும், வைதிகப்பித்தும் கொண்ட சிலர் அங்கம் பெற்று பொதுநலத்தொண்டை அறவே மறந்து சுயநலமே கருத்திருத்தி பணியாற்றுவதும் இப்போதைய ஸ்தலஸ்தாபனங்களின் இயற்கையாய் போய் விட்டது.
நமது தோழர் சௌந்திரபாண்டியன் அவர்கள் முன்னர் ராமநாதபுரம் ஜில்லா போர்டு தலைவராய் இருந்து ஆற்றி வந்த பொது நல சேவையையும், தாழ்த்தப்பட்டார் விஷயத்தில் காட்டி வந்த அனுதாபமும், வெறும் ஏட்டுச் சுரைக்காயாய் போய் விடாமல் அவைகளைச் சட்ட மூலமாய் அமலுக்குக் கொண்டுவருவான்வேண்டி எடுத்துக் கொண்ட பெரு முயற்சிகளும், தமிழ் நாட்டார் இதற்குள்ளாக மறந்திருக்க மாட்டார் களென்றே நம்புகிறோம்.
பொதுவாக மதுரை ஜில்லா வாசிகளும், குறிப்பாகத் தாழ்த்தப்பட்ட சமூகத்தாரும் தங்கள் தங்கள் நன்மைக்காக கடைசி வரை வாதாட ஒரு உண்மையும், ஊக்கமும், உறுதியும் கொண்ட இத்தகைய ஒரு அக்கத்தினரை பெற்ற பெருமைக்கு உரித்தவர்களென்றே எண்ணுகிறோம். வெற்றி பெற்ற நமதியக்கத் தோழர் சௌந்திரபாண்டியன் அவர்களுக்கு நமது மகிழ்ச்சியுரியதாகுக.
குடிஅரசு - துணைத்தலையங்கம் 07.08.1932


-விடுதலை,14.2.15

புதன், 9 டிசம்பர், 2015

சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்!

அந்தக் காலத்தில் நாதசுர இசை என்பது தமிழனுக் குரிய இசைகளில் சிறப்பான இசையாகும். நாதஸ்வரமும், தவிலும் சாதாரணமானதல்ல. அப்படி வாசித்துக் கொண்டி ருந்த காலத்தில் ஒரு சம்பவம், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய காலகட்டத்தில்,
பெரியார் அவர்கள் எந்த எதிர்ப்புக்கும் துணிந்தவர், சாதித்தவர் என்பதற்கும் அடையாளம் என்ன என்று சொன்னால்,
நாட்டுக்கோட்டை நகரத்தார்கள் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில், காரைக்குடி, செட்டிநாடு போன்ற பகுதி களில் அவர்கள் திருமணம் நடத்தும்பொழுது, பிரபல நாதசுர வித்வான்களை அழைத்து கச்சேரி நடத்தி, பெண் ஊர்வலம், மாப்பிள்ளை ஊர்வலங்களை நடத்துவார்கள்.
பெரியாரும், அஞ்சாநெஞ்சன் பட்டுக்கோட்டை அழகிரிசாமி ஆகியோர் எல்லாம் சுற்றுப்பயணம் செய்து கொண்டு வருகிறார்கள்.  பட்டுக்கோட்டை அழகிரி அவர் களுக்கு இசையில் அளவுக்கதிகமான ஈடுபாடாகும்.
மதுரை சிவக்கொழுந்து என்ற பிரபலமான நாதசுர வித்வான். அவர் நாதசுரம் வாசிக்கிறார் என்று தெரிந்த வுடன்,
அழகிரிசாமி அவர்கள் தந்தை பெரியாரிடம், அய்யா நீங்கள் போய் அறையில் தங்குங்கள். நான் கொஞ்ச நேரம் கழித்து வருகிறேன் என்று காரை விட்டு இறங்கினார். மறுநாள்தான் பெரியாருக்கு அங்கே நிகழ்ச்சி.
அங்கே நடைபெற்ற பெண் ஊர்வலத்தில், மதுரை சிவக்கொழுந்து குழுவினரின் இசை நிகழ்ச்சி தொடங்கி, கொஞ்சம் தூரம் வந்தவுடன், அப்பொழுதெல்லாம் நாதசுர வித்வான்கள் மேல் சட்டை அணியாமல், தோளில் ஒரு துண்டை மட்டும்தான் அணிந்து வருவார்கள். அதே போன்று அந்த ஊர்வலத்திலும் துண்டு போட்டு வாசித்து வருகிறார்கள். சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்! அங்கே இருந்த நகரத்தார் சொன்னார், நீங்கள் தோளில் துண்டு போட்டு நாதஸ்வரம் வாசிக்கக்கூடாது; எங்கள் முன் நீங்கள் தோளில் துண்டு போட்டு வாசிப்பதை இங்கே எதிர்க்கிறார்கள். ஆகவே, நீங்கள் துண்டை எடுத்துவிட்டு வாசிக்கவேண்டும் என்று சொன்னார்.
உடனே சிவக்கொழுந்து அவர்கள், அய்யா நான் தோளில் துண்டு போடவில்லை. முகத்தில் வழியும் வியர் வையைத் துடைப்பதற்காக அந்தத் துண்டைப் போட்டி ருக்கிறேன் என்று சொன்னார்.
உடனே அங்கே இருந்தவர்கள், முடியாது, முடியாது என்று சொல்கிறார்கள்.
சிவக்கொழுந்து அவர்களுக்கோ என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்.
அந்த இசைக் கச்சேரியைவேடிக்கைப் பார்த்துக்கொண் டிருந்தவர்களிடமிருந்து ஒரு குரல், சிவக்கொழுந்து, துண்டை எடுக்காதே! தோளில் போட்டுக்கொள்! என்று.
எல்லோரும் திரும்பி பார்க்கிறார்கள்! அங்கே பட் டுக்கோட்டை அழகிரி நின்று கொண்டிருக்கிறார்.
யார் அது? என்ன புது ஆள், இவர் வந்து கலாட்டா செய்கிறார் என்று கேட்கிறார்கள்.
அவர் ஒன்றும் புதிய ஆள் இல்லை; பெரியாரோடு வந்திருக்கிறார் என்று சொன்னவுடன், அப்பொழுது இன்னும் மோசமாக செய்வார் என்று சொன்னார்கள்.
முகத்தில் வழியும் வியர்வையைத் துடைப்பதற்காகத் தானே துண்டு போட்டிருக்கிறார். ஏன் நீங்கள் அனு மதிக்கக் கூடாது? சிவக்கொழுந்து நீங்கள் துண்டு போட்டுக் கொண்டு தான் வாசிக்கவேண்டும் என்று அழகிரிசாமி சொல்கிறார்.
தந்தை பெரியார் கோபமடைந்தார்!
பெண்ணும் - மாப்பிள்ளையும் ஊர்வல வண்டியி லேயே  இருக்கிறார்கள். வண்டியும் நகரவில்லை. கிட்டத் தட்ட அரை மணிநேரமாக அந்த விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரச்சினை பெரிதாகி, தந்தை பெரியாரிடம் சென்றார்கள்.
அய்யா நீங்கள் சொல்லுங்கள், உங்கள் ஆள் தகராறு செய்கிறார் என்று சொன்னார்கள்.
என்ன செய்தி என்று தந்தை பெரியார் கேட்டார்.
ஜாதி அடிப்படையில் நாதஸ்வரம் வாசிப்பவர் கீழ்ஜாதி. அவர் தோளில் துண்டை போட்டுக்கொண்டு வாசிக்கக்கூடாது; அது ஜாதியினுடைய பெருமைகளைக் கெடுத்துவிடுகிறது என்பது போன்று சொன்னவுடன்,
தந்தை பெரியாருக்குக் கோபம் வந்து, அப்படியா, நானும் அங்கே வருகிறேன் என்று சொல்லி, அங்கே சென்றார். கலவரத்தைத் தீர்த்து வைக்கும்படி தந்தை பெரி யாரிடம் சென்றார்கள்; பெரியாரும் அந்தக் கலவரத்தில் பங்குகொண்டார். அங்கு பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தந்தை பெரியார் அவர்கள், அழகிரி சொல்லியது நியாயம்தான் என்றார்.
வேறு வழியில்லாமல், சிவக்கொழுந்து அவர்களை தோளில் துண்டு போடாதீர்கள் என்று சொல்லக்கூடிய வர்கள் குறைந்து, துண்டை போட்டுக்கொண்டு வாசியுங் கள் என்று சொல்லியவர்கள் அதிகமானார்கள்.
பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் ஒரு துண்டை எடுத்துக்கொண்டு சென்று, சிவக்கொழுந்து அவர்களின் கழுத்தில் போட்டுவிட்டு, ஒரு விசிறியை வாங்கி, சிவக் கொழுந்து வாசிக்க, வாசிக்க, பட்டுக்கோட்டை அழகிரி அவர்கள் விசிறிக் கொண்டே நடந்து சென்றார். இதுதான் சுயமரியாதை இயக்கம்!
-சிங்கப்பூரில் ஆசிரியர் கி.வீரமணி உரை
-விடுதலை,22.11.15

ஞாயிறு, 6 டிசம்பர், 2015

திருநங்கைகளுக்குச் சம உரிமை


திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க வகை செய்யும் தனிநபர் மசோதா மாநிலங்களவையில் ஏப்ரல் 24 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த மசோதா நிறைவேற மூலகாரணமாக இருந்தவர் தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா. திருநங்கைகளுக்குத் தேசிய ஆணையமும், மாநில அளவில் ஆணையமும் அமைக்க, வகை செய்யும் திருநங்கைகள் உரிமை மசோதா 2014 மாநிலங்களவையில் தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா அவர்களால் கொண்டுவரப்பட்டது.

இந்த மசோதாவினைத் தாக்கல் செய்தபோது, அனைவருக்கும் மனித உரிமைபற்றிப் பேசுகிறோம். ஆனால் சிலர், புறக்கணிக்கப்-படுகின்றனர். பாலின அடையாளம் எதுவாக இருந்தாலும் அனைவருக்கும் மனித உரிமைகள் உள்ளன.
வாழ்வின் அனைத்துப் பிரிவுகளிலும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்துப் பாதுகாத்து சமமான சமுதாயம் அமைப்பதற்கான சட்டம் ஏற்படுத்த நான் தாக்கல் செய்த மசோதா வழி செய்யும். திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட 29 நாடுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஆனால் இந்தியாவில் மட்டும் இல்லை என்று திருச்சி சிவா குறிப்பிட்டார்.
பின்னர் இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேற்றப்பட்டது.
1970ஆம் ஆண்டுக்குப் பின்னர் 2015ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்றுதான் ஒரு தனிநபர் மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாநிலங்களவை திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் திருச்சி சிவா கொண்டுவந்த இந்த  மசோதா நிறைவேறியுள்ளது குறித்து திருநங்கைகளுக்காக தொடர்ந்து பணியாற்றும் பிரியா பாபு, எங்களுக்கான முக்கியமான மசோதா நிறைவேறியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
இது, மக்களவையில் கொண்டுவரப்பட்டு நடை-முறைப்படுத்தப்பட வேண்டும். பிற மசோதாக்கள் போல கிடப்பில் போட்டுவிடக் கூடாது. அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இதற்கான வெற்றி சாத்தியப்படும் என்றார்.
இதை வரவேற்பதோடு மட்டுமல்லாமல் இது உரிய அளவில் பயன்படக்கூடிய சட்டமாக இயற்றப்பட வேண்டும் என்கிறார் லிவிங் ஸ்மைல் வித்யா. மேலும் அவர் கூறியபோது,
வரவேற்கத்தக்க மிகவும் நல்ல விஷயம். உலக அளவில் இந்தியாவில் மட்டும்தான் திருநங்கைகள் பிச்சை எடுக்கும் நிலை உள்ளது. திருநங்கைகள் மசோதா குறித்த இடஒதுக்கீடு சட்டமாக இயற்றப்பட்டு நடைமுறைக்கு வரவேண்டும்.
திருநங்கை எனில் பெண் எனவும் திருநம்பி என்றால் ஆண் எனவும் இந்தச் சமுதாயம் நினைத்துப் பழக வேண்டும். மூன்றாம் பாலினம் எனக் குறிப்பிடக் கூடாது. மூன்றாம் பாலினம் என்கின்றனரே, அப்படியெனில் முதல் பாலினம் யார்?
குடும்ப ஆதரவின்றி, சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு, இந்தியப் பிரஜை என்ற உரிமையினை இழந்து நிற்கும் எங்களுக்கு இந்த மசோதா மூலம் நன்மை கிடைக்க வேண்டுமெனில் சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
எங்களது அடையாள அட்டையிலும் மருத்துவச் சான்றிதழிலும் பாலின மாற்றுத் திறனாளிகள் என குறிப்பிடப்பட வேண்டும்.
எங்கள் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள நாங்கள் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல. கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீட்டினை மட்டுமே. அன்று, ஒடுக்கப்பட்ட -_ தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்க்கை பெரியார், அம்பேத்கர் போன்ற தலைவர்களின் முயற்சியினால் _ போராட்டத்தினால் கிடைத்த கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு காரணமாக உயர்த்தப்பட்டது என்பதை அனைவரும் அறிவர்.
தற்போது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால் நாங்கள் எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்கும். அதன்மூலம் நாங்களும் கண்ணியமாக வாழ முடியும் என்றார்.
மனித உரிமைக்காகத் தோன்றிய திராவிட இயக்கம் ஜாதிய ரீதியில் ஒடுக்கப்பட்டவர்-களையும் பெண்களையும், மத சிறுபான்மை-யினரையும், சமத்துவ நிலைக்குக் கொண்டுவர கடந்த காலங்களில் தொடர்ந்து பணியாற்றி வெற்றி கண்டுள்ளது.
தமிழ்நாட்டில் பால் மாற்று அறுவைச் சிகிச்சைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கியதும் மலிவான சொற்களால், அழைக்கப்பட்டதற்கு மாற்றாக, திருநங்கை என்று மதிப்புறு சொல்லாக மாற்றியதும், திருநங்கைகளுக்கான   நலவாரியம் அமைத்ததும் திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்.
இன்று இந்தியா முழுமையிலும் உள்ள திருநங்கைகளுக்கான உரிமையைப் பெற்றுத் தர வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த மசோதாவைக் கொண்டுவந்து நிறை-வேற்றியிருப்பது திராவிட இயக்கச் சாதனை வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்.
இந்தச் சாதனைக்கு உரியவரான திருச்சி சிவா அவர்களுக்கு தாய்க் கழகமாம் திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி வாழ்த்துத் தெரிவித்தார்.
-உண்மை இதழ்,16-31.5.15

வேலியா தாலி?

முகப்புக் கட்டுரை : வேலியா தாலி?
ஒரு தனியார் தொலைக்காட்சியில் தாலி பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அது ஒளிபரப்பப் படவும் இருந்தது. அந்தக் காலகட் டத்தில் அதனை ஒளிபரப்பக் கூடாது.
இந்து மதத்தை அவமதிக்கிறது. தாலி இந்துப் பெண்களின் புனிதச் சின்னம் என்று இந்துமத அடிப்படைவாதிகள் எகிறிக் குதித்தனர். அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்டினர். தொலைப்பேசிகள் மூலம் ஆபாசச் சேற்றை அள்ளி வீசினர்.
அடுத்த கட்டமாக அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து பணியாளர்களைத் தாக்கினர். பெண் ஒருவரும் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி உடைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். அதற்கு மேலும் ஒருபடி மேலே சென்று, டிபன் பாக்ஸ் குண்டுகளை அந்த நிறுவனத்துக்குள் வீசி அச்சுறுத்தினர்.

இந்த இடத்தில் திராவிடர் கழகம் நுழையாமல் என்ன செய்யும்? பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்க் கேள்வி என்ற நிலை உடைப்பெடுத்துத் தன் கம்பீரமான வருகையை திராவிடர் கழகம் பதிவு செய்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் போர்க்குரல் கொடுத்தார்  கொடுக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் (14.4.2015)
சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை அறிவித்தார். இது ஒன்றும் கழகத்திற்குப் புதிதும் அல்ல. திருமணத்தின் போதே தாலியின்றி திருமணம் செய்து கொள்வதும், தாலி கட்டித் திருமணம் செய்தோராயிருந்தால், திருமணத்திற்குப் பிறகு தாலி என்பதன் உண்மைப் பொருளறிந்தபின் கழக நிகழ்ச்சிகளில் வாழ்க்கை இணையர்கள் இருவரின் ஒப்புதலுடன் தாலி அகற்றல் நடைபெறுவதும் சர்வசாதாரணம்! மத்தியில் மதவெறி ஆட்சி மகுடம் தரித்தது என்றவுடன் இந்த அடிப்படைவாதிகள் கொஞ்சம் ஆட்டம் காட்டுகின்றனர்.
தாலியை அகற்றிக்கொள்ளும் நிகழ்வைத் தாலி அறுக்கும் போராட்டம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம் பித்தார்கள். திராவிடர் கழகத்தின் தலைமை நிலையம் உண்மையை வெளிப்படுத்திய நிலையில், இப்பொழுதுதான் தாலி அகற்றும் போராட்டம் என்று எழுதிட, சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
அதுகூடப் போராட்டம் அல்ல _ ஒரு சாதாரண நிகழ்வுதான். தாலி நமது பாரம்பரிய கலாச்சாரச் சின்னம், புனிதச் சின்னம் என்று சொல்லிப் பார்த்தனர். பரம்பரைச் சின்னம் என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். சங்க இலக்கியத்தில் உண்டா என்று வினா எழுப்பினோம். அகநானூற்றில் இடம் பெறும் 86 மற்றும் 136ஆம் பாடலில் திருமணம் குறித்துக் கூறப்பட்டுள்ளதே _ அதில் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மூச்சுப் பேச்சு இல்லை.
தமிழர் திருமணத் தில் தாலி உண்டா? என்று டாக்டர் இராச மாணிக்கனார் தனி நூலே எழுதி இருக்கிறாரே  அதற்கு இதுவரை மறுப்பு எழுதிய கொம்பர் யார் என்று கேட்டோம்  கேள்வி செங்குத்தாக நிற்கிறதே தவிர, பதில் சொல்லுவாரைத்தான் காணோம். அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் வேதத்தில்கூட தாலி என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று கடைந்தெடுத்துச் சொன்ன பிறகு வாயடைத்துப் போன நிலைதான்!
பதில் சொல்ல வக்கு இல்லை என்றாலும் சந்து முனைகளில் சிந்துகளைப் பாடிக்கொண்டு திரிகிறார்கள். பெரியார் திடலை முற்றுகை யிடுவோம் என்றெல்லாம் கருத்தில் சரக்கு இல்லை என்ற நிலையில் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயம் இல்லை என்ற விவரமாவது இவர்களுக்குத் தெரியுமா? எதையும் அறியாத தனத்தால் ஆவேசச் கூச்சல் போடுகிறார்கள்.
கடைசியாக எங்கே வந்து நிற்கிறார்கள்? தாலி பெண்களுக்கு வேலி என்கிறார்கள்.
அதாவது உண்மையா? நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் இந்தத் தாலிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை விதிவிலக்கு இல்லாமல் மனித மிருகங்கள் வேட்டையாடுகின்றனவே _ அவை யெல்லாம் இவர்களின் கருத்துக்குப் புலப்படவே புலப்படாதா? பெற்ற மகள்களையே பெண்டாண்டான் என்று கேடுகெட்ட வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய செயல்களுக்கு என்ன சமாதானம்?
மும்பையில் உள்ள பெண்கள் உரிமைகளுக்கான வழக்குரைஞர் ஃபிளாவியா ஆக்னஸ் கூறும்போது, குடும்ப உறுப்பினர்களின் பொருந்தாத பாலியல் வன்முறைகள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. ஆனால் புகார்கள் அவர்களின் குடும்பத் தார்களின் அழுத்தங்களால் திரும்பப் பெறப்படுகின்றன.
மும்பையில் 18 வயதுப் பெண் ஒருவர் தமக்கை மற்றும் தன்னிடமும் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட தன் தந்தையின் மீது புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தத் தந்தை தண்டிக்கப்படவில்லை.
அவர்மீது போச்சோ (Pocso Act) சட்டத்தின்படி அந்தப் பாலியல் உறவின்போது அப்பெண் மைனர் அல்ல என்று கூறப்பட்டது. தாலிக்கும் பாலுறவு வன்முறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அதுபற்றிய புள்ளி விவரங்கள் உண்டா? நாள்தோறும் ஒரு செய்தி மட்டும் தவறாமல் வெளிவருகிறது. அதுதான் பெண்களின் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் செய்தி.
தாலி என்பதால் திருடர்கள் தவிர்த்து விடுகிறார்களா? இதில் இன்னொரு முக்கியக் கருத்தும் உண்டு. மங்களகரம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு மஞ்சள் கயிற்றில் இப்பொழுது தாலி அணிபவர்கள் எத்தனை பேர்? தங்கச் சங்கிலியில் அல்லவா தாலி தொங்குகிறது? அந்த மங்களகரம் _ புனிதம் எல்லாம் பறந்துபோனது குறித்து யாராவது புலம்புகிறார்களா?
தாலி _ பெண்களுக்குத் திருமணம் ஆனதற் கான அடையாளம் என்றால் அதே கேள்வி ஆண்கள் பக்கம் திரும்பாதா? அதிகம் வெளியில் சுற்றுபவன், பெண்களை விட ஆண்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கான அடை யாளம் இல்லையே  ஏன் என்ற கேள்விக்கு எந்த இந்து முன்னணிகள் பதில் சொல்லி யுள்ளன? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தாலி அணிவிப்பது என்பது _ கணவன் மரணம் அடைந்தால் அந்தப் பெண்களை அவமானப் படுத்தும் சடங்குக்காகத் தானே இந்தத் தாலி அணிவிப்பு.
முதலில் அணிவிப்பு _ அடுத்து அறுப்பு. கணவன் இறந்த துயரம் ஒரு பக்கம் என்றால் அதனைவிடப் பெரும் கொடுமை _ அவமானம் அந்தப் பெண்ணை அமங்கலி, முண்டச்சி என்ற முத்திரை குத்தி மூலையில் ஒதுக்குவ தற்குத்தானே இந்தத் தாலி சமாச்சாரம்?
ஆனால் சுயமரியாதைத் திருமணம் என்ன சொல்லுகிறது? ஆண்_பெண் என்பவர்கள் இணையர்கள் _- வாழ்வின் இன்ப துன்பங்களில், ஏற்றத் தாழ்வுகளில் சமபங்கு ஏற்கும் உற்ற நண்பர்கள் என்ற உறுதிமொழி ஏற்று வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குபவர்கள். இதில் இழிவு இல்லை _ ஆணின் உரிமை பெண் என்ற நிலைப்பாடு இல்லை. தாலி என்பது பெண் என்பவள் ஆணின் அடிமை _ சொத்து என்பதற்கான தளை _ அடையாளம் என்பதுதான்.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லாதவர்கள் விட்டேனா பார்! என்று பேசுவது அறிவுடைமைதானா? ஒன்றை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைவாய்ப் புரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமண உரிமை, பால்ய திருமண தடுப்பு என்ற உரிமை வரிசை நீண்டதற்கு, சட்ட வடிவம் பெற்றதற்குக் குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தாலி பெண்களுக்கான அடிமைச் சின்னம் என்று கூறுவது இதே இயக்கத்தவர்கள் தானே? தந்தை பெரியார் அவர்கள்தானே? _ மறுக்க முடியுமா?
அதே நேரத்தில் பெண்களுக்காக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டுவோர் எந்தப் பக்கத்தில் நிற்கக் கூடிய வர்கள்? படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17) பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 சுலோகம் 66) பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)
இப்படிச் சொல்லுகின்ற இந்துத்துவா பக்கம் நிற்கிறவர்களா பெண்களுக்கான பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்கள்?
பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள்?
பார்ப்பனரை அழைத்து விவாஹ சுப முகூர்த்தம் நடத்துகிறார்களே  அந்தக் கல்யாணத்தில் பார்ப்பானர்கள் சொல்லும் மந்திரம் என்ன? ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர த்ருத்யோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ்ய ஜா கல்யாணத்தில் மணமகளைப் பார்த்து புரோகிதப் பார்ப்பான் சொல்லும் மந்திரம் இது. முதலில் சோமன் என்ற கடவுள் கணவனாக இருந்தான், பிறகு கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள், இந்தப் பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி, நான்காவதுதான் மனித ஜாதியாகப் பிறந்த இந்த மாப்பிள்ளை.
இப்படி பெண்களைத் திரும ணத்தின்போதே நான்கு பேர் களுக்கு மனைவி என்று மந்திரம் சொல்லுவதுதான் பெண்களுக்கான பெருமையா?
இப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்தாதே என்று போர்க் குரல் கொடுத்து, ஆண்களும் பெண்களும் சமம் _ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, இன்று சட் டப்படியாகவும் ஆக்கிய நாங் கள்தானே பெண்களின் பெரு மையைப் போற்றும் பெருமக்கள் _ மறுக்க முடியுமா? பெண்களுக்குத் திருமணம் உபநயனம், கணவனுக்குக் கடமை யாற்றுவது குருகுலவாசம்.
இல்லறம் காத்தலே வேள்வி என்பதை இன்றைய படித்த பெண்ணுலகம் ஏற்றுக்கொள் ளுமா?
Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a woman pure.
ஒரு வடமொழி சுலோகத்தை இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.12.1990) எடுத்துக்காட்டியது. இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல் லது கடல் சுவை நீரால் நிரப் பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மையான வளாக இருப்பாள் என்று கல்லூரி வாசல்களுக்குச் சென்று பெண்களிடம் சொல்லிப் பார்க்கட்டுமே _ என்ன பரிசு கிடைக்கும் _ தெரிந்ததுதான்.
விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே - ஒன்றுக்கும் உதவாதவர்கள். - ஜெயேந்திர சரஸ்வதி, (1997) (தினமணி - தீபாவளி மலர்)
வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம்பேர்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள். - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. இவற்றை எதிர்த்து காஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியவர்கள் (9.3.1998) யார்? திராவிடர் கழக மகளிர் அணியினர்தானே?
பெண்களின் புனித தாலியைக் கொச்சைப் படுத்துவதா என்று கூக்குரலிடும் கூட்டம் அன்று விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசிய சங்கராச்சாரியாரை எதிர்த்து ஒரே ஒரு சொல் கூறியதுண்டா?
தாங்களாகவே உணர்ந்து தமது துணைவனின் கருத்து ஒற்றுமையோடு அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொள்ளுதல் குற்றமா? சமதர்மப்படிதான் குற்றமா?
சட்டப்படிதான் குற்றமா? மனித உரிமைப்படிதான் குற்றமா? கணவன் அடித்தாலும் உதைத்தாலும் _ இந்த ஜான் கயிறுக்காகப் பார்க்கிறேன் என்று அந்தத் தாலிச் செயினைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அந்தக் கொடுமை நீடிக்க வேண் டுமா?
அதற்காகத்தான் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை எதிர்க்கிறார்களா? வெறுக்கிறார்களா? கடைசியாக ஒரே ஒரு கேள்வி. தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டவர்கள் விவா கரத்துக் கோரி குடும்ப நீதிமன்றத்தின் வாயிலில் நிற்பது ஏன்? அந்தப் புனிதத் தாலி எந்த வகை யில் அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது? எதிர்ப்பாளர்களின் வரிசையில் ஆண்களைப் பார்க்க முடிகிறதே தவிர, பாதிப்புக்குச் கார ணமான பெண்களை அதிகம் காண முடியவில்டிலயே _ ஏன்? ஏன்? ஆத்திரப்பட்டால் அறிவு வேலை செய்யாது. அமைதியாக ஆழமாகச் சிந்தியுங்கள் _ 14ஆம் தேதி நிகழ்ச்சியின் அருமை பெருமை நன்றாகவே புரியும்.
------------------
இந்து மதத்தில் பெண்கள் நிலை

பெண்களின் அந்தஸ்து பற்றி
1.    நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.
2.    மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3.    போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.
4.    மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும்.  _ (சுந்தர காண்டம் 5)
5.    மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.
6.    உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)
7.    மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)
8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.
திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?

-----------

தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன
சொல்லுகிறார்?
அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :
மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.
இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.
கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)
-உண்மை இதழ்,16-30.4.15

சனி, 5 டிசம்பர், 2015

இவர்தான் சாகுமகராஜ்


சாகு மகராசர் தனது நிர்வாகத்துக் குட்பட்ட பகுதிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு அனைத்து வேலைகளிலும் 50 சதவீத இடங்களை ஒதுக்கவேண்டும் என்று 1902 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார். இது போன்ற ஒரு சமூகநீதி ஆணை பிறப்பிக்கப்பட்டது அதுவே இந்தியாவில் முதன் முறை! பிறகு தென்னகத்தில் பல பகுதிகளில் இடஒதுக்கீடு ஆணை பிறப்பிப்பதற்கு இதுவே வழிகாட்டியாக இருந்தது.
இதனைத் தொடர்ந்து 1921 ஆம் ஆண்டு மைசூர் அரசாங்கமும் அதே ஆண்டு நீதிக்கட்சி ஆட்சி நடந்த சென்னை மாகாண அரசாங்கமும் - இதே போன்ற ஆணைகளைப் பிறப் பித்தன. பின்னர் 1925 ஆம் ஆண்டு பம்பாய் அரசாங்கமும் இதே போன்ற ஆணையைப் பிறப்பித்தது.
கோலாப்பூரில் 1894 இல் 71 அலு வலர்களில் 60 பேர் பார்ப்பனர்கள். 1912 இல் 95 அலுவலர்களில் 35 பேர் மட்டுமே பார்ப்பனர்கள்! இட ஒதுக்கீட்டால் ஒடுக்கப்பட்டவர்கள் வாய்ப்புகளைப் பெற வழி ஏற்பட்டது.
சாதி ஒழிப்பு
பிற்காலத்தில், இரண்டாம் கட்டத்தில், சாதி அமைப்பையே ஒழிக்க வேண்டும் எனக் குரல் கொடுக்கத் தொடங்கினார், சாகுமகராசர்.
தாம் சார்ந்த மராத்திய சாதியாரின் சார்பாக நின்று, பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்த பொழுது, சாகுமகராசருக்கு அவர்கள் பலமான ஆதரவு அளித்தனர். ஆனால் அவரே, பிற்காலத்தில், தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றத்திற்கும், சாதி ஒழிப்பிற்கும்  உழைத்தபொழுது அவர்கள் முகம் கோணினர். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் இவர் தம் பணியைத் தொடர்ந்தார்.
தாழ்த்தப்பட்டோர்
தாழ்த்தப்பட்டவர்கள் கல்வியும், பதவியும் பெறுவதில் சாகு மகராசர் தனிக் கவனம் செலுத்தினார். அவர்களுக்கு என மாணவர் விடுதி ஒன்றை நிறுவியதை ஏற்கெனவே கண்டோம்.
அரசு மருத்துவமனைகளில் பிற நோயாளிகளுடன் அவர்களையும் சம மாகக் கவனிக்கவும், நடத்தவும் ஏற்பாடு களைச் செய்தார்.
நிருவாகத்தில் அவர்களைப் பணியமர்த்தம் செய்தார்
அரசுக் கல்வி நிறுவனங்களிலும், மான்யம் பெற்று வந்தவைகளிலும் சாதி யின் பெயரால் மாணவர்களைப் பிளவு படுத்திப் பாகுபாடு காட்டக்கூடாது என்று ஆணையிட்டார்.
கோலாப்பூர் நகர சபைக்குச் சாதியின் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்தார். தீண்டப்படாதவர் களுக்கும் போதிய இடங்களை அளித்தார். இவர் காலத்தில் முதன் முறையாகத் தாழ்த்தப் பட்டவர் ஒருவர் நகரசபையின் தலைவர் ஆனார்.
கிணறுகள், குளங்கள் முதலிய பொது இடங்களில் மற்றவர்களுடன் தாழ்த்தப் பட்டவர்களுக்கும் சம உரிமை அளித்தார். அவர்களுக்கெனத் தனியாக இருந்த பள்ளிகளை மூடிவிட்டுப் பொதுப் பள்ளி களில், எவ்வித வேறுபாடும் இன்றி அவர்களையும் சேர்க்கச் சொன்னார்.
தீண்டப்படாதவர்கள் வழக்குரைஞர் தொழில் செய்ய அனுமதி அளித்தார்
கிராமங்களில் எல்லாச் சாதியாரும் கணக்குப்  பிள்ளைகளாக (குல்கர்னி களாக) நியமனம் பெற ஆணையிட்டார். அந்தப் பதவியில் மிகப் பெரும்பான்மை யாக இருந்த பார்ப்பனர்கள் இதற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தனர்.
ஆனால், சாகுமகராசர் அதைப் பொருட்படுத்தவில்லை. தாழ்த்தப்பட்டவர் உள்ளிட்ட ஒடுக்கப்பட்டவர்கள் இந்தச் செல்வாக்கான பதவியில் அமர்ந்தனர். இந்த நடவடிக்கையால் பிற்காலத்தில் நல்ல மாற்றங்கள் நிகழ்ந்தன.
மகர்வடன்
மகர் என்ற தீண்டப்படாத சாதியார், கிராமத்தாருக்கும் அரசுக்கும் தண்டல், தலையாரி போன்ற வகையில் அடிமட்ட ஊழியம் செய்யவேண்டும். அதற்காக அவர்களுக்குச் சிறிது நிலம் அளிக்கப் பட்டது. அதற்கு மகர்வடன் எனப் பெயர். இரவு - பகலாக எல்லா வகையான கடின மான வேலைகளையும் கட்டாயமாகச் செய்து, அதற்காக அளிக்கப்பட்ட நிலத்தில் போதாத ஊதியமே பெற்று வந்தனர். சட்டப்படி வேலையை விட்டுவிட முடியாது. இவ்வாறு வேண்டாத வகையில் மகர்கள் நிலத்தோடு இறுகக் கட்டப் பட்டனர். இந்த முறையை ஒழிப்பதற்காக 1928 ஆம் ஆண்டு முதல், அவர் இறந்த 1956 ஆம் ஆண்டு வரை அண்ணல் அம்பேத்கர் பல வழிகளில் போராடினார்; முடியவில்லை. 1958 இல்தான் சட்டப்படி மகர்வடன் முறை ஒழிந்தது. அம்பேத்கர் பிற்காலத்தில் நிகழ்த்த விரும்பிய சீர்திருத்தத்தை, சாகுமகராசர் 1918 ஜூன் 25 இல் நிகழ்த்தினார். அந்த ஆண்டில் கோல்ஹாப்பூர் அரசின் மகர்வடன் முறையை ஒழிக்க ஆணை பிறப்பித்தார். ஆணையை மீறுவோர் தண்டத் தொகை செலுத்த வேண்டும் அல்லது சிறை செல்ல வேண்டும்.
(நூல் சமூகப் புரட்சியாளர் சாகுமக ராசர் - பெரியார் பேருரையாளர் கு.வெ.கி. ஆசான்)
குறிப்பு: இன்றுதான் சாகுமகராசர் முதல் இட ஒதுக்கீடு ஆணை பிறப்பித்த நாள் - 1902.