பக்கங்கள்

புதன், 2 டிசம்பர், 2015

சமூகநீதி அணியில் ஒன்று திரளுவோம்! சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் உரை



தமிழர்களே, ஒடுக்கப்பட்ட மக்களே எச்சரிக்கை!
சென்னை சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர் சங்க நாதம்
சென்னை, ஆக.20- அன்று மோகினி அவதாரம் எடுத்து அசுரர்களை மோசம் செய்ததுபோல, இப்பொழுது சில ஒடுக்கப்பட்ட சமூகத் தோழர்களைப் பிடித்து, இட ஒதுக்கீடு கூடாது என்ற சூழ்ச்சியைப் பின்னுகிறார்கள் - நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று எச்சரித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.8.2015 அன்று சென்னை பெரியார் திடலில் இட ஒதுக்கீடு இழிவுக்குரியதல்ல-உரிமை மறுக்கப்பட்டோ ருக்கு உந்து சக்தி - என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:
நேரம் அதிகமாகிவிட்ட நிலையில்தான் எப்பொழு தும் எனக்கு ஒலிபெருக்கிக் கிடைப்பது வழக்கம். இறுதியில் பேசக்கூடிய ஒரு வாய்ப்பு என்றாலும், அதனால் ஒன்றும் குறைந்துவிடவில்லை. தோழர் அதியமான் தொடங்கி, எல்லோரும் அருமையான கருத்துகளை இங்கே எடுத் துரைத்தனர்.
தோழர் ஓவியா அவர்கள் ஒரு கோணத்தில் சொன் னார்கள்; அதியமான் அவர்கள் மற்றொரு கோணத்தில், பல பரிமாணங்கள் வரக்கூடிய அளவிற்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை சிறப்பாக எடுத்து வைத்திருக் கிறார்கள்.
அவசரமாக சில செய்திகளை மட்டும் உங்களுக்குச் சொல்லவேண்டும் என்பதற்காகத்தான், சில குறிப்புகளை உணர்த்தவேண்டும். நாம் எப்பொ ழுதும் விழிப்போடு இருக்கவேண்டும் - இருக்கிறோம் என்று காட்டுவதற்காகத் தான் இந்தக் கூட்டம்.
எதைச் சொன்னாலும், ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவர்கள் நாங்கள்!
மதுரையில் இப்படியொரு மாநாட்டை அவர்கள் போட்டிருக்கிறார்கள் என்பது புதிதல்ல. அவர்கள் வடக்கே இருந்து இங்கே வந்து ஆழம் பார்ப்பதற்காக எப்பொழுதும் ஏனோ மதுரையைத்தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். சில பேருக்குத் தெரியாது;
சில ஆண்டுகளுக்கு முன்பாக, இதே ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வழக்குரைஞர்கள் மாநாடு என்று, இப்பொழுது ஆர்.எஸ்.எஸ். குருமூர்த்தி அய்யர் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தாரே, அதுபோன்ற ஒரு ஏற்பாட்டினை அவர்கள் அப்பொழுது செய்திருந்தார்கள். இதில் யாருக் காவது சந்தேகம் இருந்தால், இந்துவினுடைய ப்ரெண்ட் லைன் பழைய மலர்களைப் பாருங்கள். நாங்கள் எதைச் சொன்னாலும், ஆதாரத்தோடு சொல்லிப் பழக்கப்பட்டவர் கள். அந்த மலரில் தெளிவாக இருக்கிறது.
குவாலியர் ராஜமாதா சிந்தியா அவர்கள் இப்பொழுது ராஜஸ்தானத்தில் இருக்கக்கூடியவருக்கு அன்னையார் அவர்கள். அந்த அம்மையார் முதலில் சுதந்திரா கட்சியி லிருந்து பிறகு பா.ஜ.க.விற்கு வந்தவர்.
மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று அந்த மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள்
அவரை அழைத்து மதுரையில் மாநாடு நடத்தி னார்கள். அந்த மாநாட்டில் அவர்கள் போட்ட தீர்மானம் - கொஞ்சம்கூட லஜ்ஜையில்லாமல் என்ற ஒரு சொல்லைத் தான் பயன்படுத்தவேண்டும். இப்பொழுது இருக்கிற அரசியல் சட்டத்தை வீசி எறிந்துவிடவேண்டும்.
அம்பேத் கர் அவர்களின் தலைமையில் உருவாக்கிய அரசியல் சட்டத்தை தூக்கி எறிந்துவிடவேண்டும். அது நம்முடைய பாரம்பரியத்திற்கும், புராதான கலாச்சாரத்திற்கும், பாரத கலாச்சாரத்திற்கும் ஏற்றதல்ல. அந்த இடத்தில் நாம் எதைக் கொண்டுவரவேண்டும் என்றால், மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கவேண்டும் என்று அந்த மாநாட்டில் தீர்மானம் போட்டார்கள். அப்பொழுது நாம் அதனைக் கண்டித்து சுட்டிக்காட்டினோம்.
இங்கே அழகாக சகோதரர் டி.கே.எஸ்.இளங்கோவன் அவர்கள் சொன்னதைப்போல, விஷக்கிருமி உள்ளே புகுகிறது என்று. எப்பொழுதுமே பறவைக் காய்ச்சல் என்பது வெளிநாட்டிலிருந்து வரும்; பன்றிக் காய்ச்சல் வெளிநாட்டி லிருந்துதான் வரும்.
வடக்கே தலை வைத்துப் படுக்காதே என்று சொல் வதைப்போல, வடக்கே இருந்து வரும் வாடை எப்பொ ழுதும் கொடுமையானது; தெற்கே இருந்து வீசும் தென்றல் காற்று சுகமானது.
இதை ஏன் வீரமணி இப்பொழுது ஞாபகப்படுத்து கிறார் என்று சிலர் நினைக்கலாம். இப்பொழுது முந்தைய அந்தத் தீர்மானத்தைப் புதுப்பித்திருக்கிறார். அதோடு அவர்கள் விடவில்லை. அதனை ஒரு நீண்டத் தொடராக, அதனைக் கொண்டு வருவதற்குத் திட்டமிட்டு, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.
எப்போது மோடி அவர்கள் ஆட்சியைப் பிடித்து, பா.ஜ.க. அறுதிப் பெரும்பான்மைக்கு மேற்பட்டு இடங் களைப் பெற்றார்கள் என்ற மகிழ்ச்சியோடு, இன்றைக்கு எதை வேண்டுமானாலும் செய்யலாம்;
கோட்சேவுக்கு அவர்கள் சிலை வைக்கலாம்; கோட்சேபற்றி நாடகம் போடலாம்; அவர் செய்தது நல்லது என்று சொல்லலாம்; காந்தியாரை இழிவுபடுத்தலாம்; நேருவை இழிவுபடுத்தலாம்; யாரை வேண்டுமானாலும் தூக்கி எறியலாம். எல்லா திட்டங்களையும் மாற்றி, ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் பெயரை வைக்கலாம் என்று துணிந்து தங்களுடைய ஆட்சி எந்திரத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
கீதையை தேசிய நூலாக்கவேண்டுமாம்!
கடந்த 7.12.2014 ஆம் தேதியன்று, டில்லியில் நடை பெற்ற மாநாட்டில், மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கலந்துகொண்டார். விசுவ இந்து பரிஷத்தினுடைய  தலைவர் அசோக்சிங்கால் மற்ற ஆர்.எஸ்.எஸ். தலைவர் கள் அந்த மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார் கள்.
கீதையினுடைய 5 ஆயிரமாவது ஆண்டு விழா என்று சொல்லி, ஒரு கற்பனையான வரலாற்றைப் புகுத்தி, கீதையை தேசிய நூலாக்கவேண்டும் என்று அந்த மாநாட்டில் பேசியவுடன், நாடு முழுக்க அதற்குக் கண்டனம் ஏற்பட்டது என்றவுடன், இப்பொழுது கொஞ்சம் தலையை உள்ளே இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றிய முக்கிய தீர்மானம் மட்டுமல்ல; அதற்குத் தலைமை தாங்கியவர் சிங்கால் போன்றவர்கள் உரையாற்றியவை நாளிதழ்களில் வெளி வந்திருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தை எடுத்துவிட்டு, மனுதர்மத்தை அரசியல் சட்டமாக்கவேண்டும்  என்று சொன்னார்கள்.
காந்தியார் சொன்ன ராமராஜ்ஜியம் வேறு
எனவே, அவர்கள் மனுதர்மத்தை குறிப்பாக வைத்துக் கொண்டு ஆளவேண்டும் என்ற ஒரு வருணா சிரம தரும ஆட்சியை நிலைநாட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ராமராஜ்ஜியம் என்று சொன்னால், காந்தியார் நினைத்து சொன்ன ராமராஜ்ஜியம் வேறு. காந்தியாரே கூறியுள்ளார், நான் நம்பும் ராமன் வேறு; ராமாயண ராமன் வேறு என்று. முழுக்க முழுக்க இவர்கள் ராமராஜ்ஜியம் என்று சொல்வது இருக்கிறதே, அது   பாபர் மசூதியை இடித்து, ராமனுக்குக் கோவில் கட்டி, இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய ஆட்சி, நீதித்துறை வரையில் சென்று, நீண்டு இருக்கிறது என்பதை வைத்துக்கொண்டு, ஒரு சாமர்த்தியமாக உள்ளே நுழைகிறார்கள்.
உதாரணத்திற்குப் பல பேருக்கு அது வெறும் செய்தி போன்று தெரியும். பல பேருக்குத் தெரியாது. பெரியாரு டைய கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான்  சரியாகத் தெரியும்.
உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி என்பவர் ஒரு வழக்குப் போடுகிறார். ஏற்கெனவே கோவில் கட்டக் கூடாது என்று தடை இருக்கிறது; பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில். அந்த இடத்தில் கூடாரம் அமைத்து ராமன் சிலையை வைத்து வணங்கி வருகிறார்கள். அதனை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அதற்கு என்ன பொருள்? நாங்கள் அறிவிக்காமலேயே கோவில் கட்டுவதற்கு ஏற்பாடு செய்துவிட்டோம்; அதற்கு உச்சநீதி மன்றத்தினுடைய முத்திரையையும் பெறுகிறோம் என்று அவர்கள்
எப்படி சாமர்த்தியமாக உள்ளே நுழைகிறார்கள்!
பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் தெரியும்
இதனை சாதாரணமாகப் பார்த்தால் தெரியாது; பெரியாருடைய கண்ணாடியைப் போட்டுப் பார்த்தால்தான் அது எவ்வளவு பெரிய ஆபத்தை உருவாக்கி இருக்கிறது என்பது தெரியும்.
எது வாசல் வழியாக உள்ளே வர முடி யாதோ - 1952 ஆம் ஆண்டு ஆச்சாரியார் அவர்கள் கொல் லைப்புற வாசல் வழியாக ஆட்சிக்கு வந்ததைப்போல, அப்படி கொல்லைப்புற வழியாக நுழைவதைப்போலத்தான் இப்பொழுது மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவர்கள் ஆழம்பார்த்து ஒத்திகை பார்த்திருக்கிறார்கள். ஃபீலர் விட்டிருக்கிறார்கள்.
இதற்காக ஒரு பெரிய திட்டம் இருக்கிறது; அந்தத் திட்டத்தினுடைய முனை தெரிகிறது. ஆங்கிலத்தில் ஒரு மரபுச் சொல் உண்டு.Tip of the Iceberg என்று சொல் வார்கள். பனிப்பாறை உள்ளே இருக்கிறது. அந்தப் பனிப் பாறையினுடைய முனை தெரிகிறது. அதுபோன்று அந்தத் திட்டத்தினுடைய முனையை லேசாகக் காட்டிப் பார்க்கி றார்கள். சில நேரத்தில் புற்றிலிருந்து பாம்பு தலையை எட்டிப் பார்க்கும். ஒரு அடி கொடுத்தவுடன், மீண்டும் உள்ளே போய்விடும். அதுபோன்று அடிக்கடி இந்தப் பணியை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்.
ஜாதியை காப்பாற்றுவது என்பது, ஏதோ பி.ஜே.பி. மட்டும், ஆர்.எஸ்.எஸ்.சுக்கு மட்டுமல்ல - முழுக்க முழுக்க அது பார்ப்பனியத் தன்மையைப் பொறுத்தது. எந்தப் பார்ப்பனராக இருந்தாலும், எந்தக் கட்சிப் பார்ப்பனராக இருந்தாலும், அவர்கள் தங்களை அறிந்தோ, அறியாமலோ இட ஒதுக்கீட்டுக்கு தங்களை எதிரிகளாக ஆக்கிக் கொண்டு, ஜாதியைக் காப்பாற்றவேண்டும் என்ற முனைப் பில் இருக்கிறார்கள்.
நல்ல விலைக்கு விற்றுக்கொள்ளமாட்டேன் என்கிறானே!
இதற்கு நம்மவர்கள் காலங்காலமாக பலியாகியிருக் கிறார்கள். அதுதானே ராமாயணம், அதுதானே விபீஷ் ணர்கள், அதுதானே பிரகலாதன்கள். எனவேதான், புரட்சிக் கவிஞர் அவர்கள் அன்றைக்கே கவிதை எழுதினார் உன்னை விற்றுக்கொள்ளாதே! என்று.
பெரியார் அவர்கள் ஒருபடி மேலே போய் சொன்னார், இங்கே அவர்கள் சொன்னபடி, தமிழன் விற்றுக் கொள்வதைப்பற்றிக் கூட எனக்குக் கவலையில்லை; நல்ல விலைக்கு விற்றுக் கொள்ளமாட்டேன் என்கிறானே என்றுதான் அவர்கள் சங்கடத்தோடு சொன்னார்.
இங்கே பேராசிரியர் அருணன் சொன்னதைப்போல, சங்கராச்சாரி யார்? என்ற புத்தகத்தில் தெய்வத்தின் குரல் என்ற நூலிலிருந்து எடுத்துக் காட்டுகிறேன்.
சந்திரசேகரேந்திர சரசுவதியின் கருத்து
மூத்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி - ஜெயிலுக்கும், பெயிலுக்கும் போய்விட்டு வந்த சங்கராச்சாரியாரைவிட, இவர் மிகவும் நல்லவர் என்று சிலர் சொல்வார்கள். நல்ல பாம்பு என்று சொல்லுவதுபோல, அதில் தான் விஷம் அதிகம் என்பது பல பேருக்குத் தெரியாது.
இன்றைக்கு குருமூர்த்தி மட்டும் சொல்லியது கிடை யாது; சந்திரசேகரேந்திர சரசுவதி பல ஆண்டுகளுக்கு முன்பு சொல்லியதுதான்.
இது சங்கராச்சாரியாரின் மூன்றாவது பகுதி: தெய்வத்தின் குரல் என்பதாகும்.
ஜாதி தர்மம், வர்ணாசிரமதர்மம் என்று தான் இருக்க வேண்டும். இதற்கு மாறுபட்டு இருக்கக்கூடாது என்று அவர் மிகத்தெளிவாகச் சொல்லுகின்றார்.
வர்ணமென்றும் ஆசிரமம் என்றும் தர்மங்களைப் பிரித்துக் கொண்டதால் தான் மற்ற எந்த மதஸ்தர்களாலும் முடியாத மிக உயர்ந்த கொள்கைகளை நம் மதஸ்தர்கள் ஏராளமானவர்கள் அநாதி காலந்தொட்டு அழியாமல் காப்பாற்றி வந்திருக்கிறார்கள்.
மற்ற மத புருஷர்களின் உபதேசத்தையே இன்றைக் கும் இருக்கிற நம்மவர்கள் எடுத்துக்கொண்டு - ஆனால் அவர்களைப்போல் ஆத்ம சம்பந்தமாகவும் இல்லாமல், பெரும்பாலும் அரசியல் நோக்கத்திலேயே எல்லோரும் ஒன்றுதான், எல்லோரும் எல்லாக்காரியங்களையும் செய்யலாம் என்று ஆரம்பித்து ஒவ்வொருவரும் இதைச் சொல்லுவது கூடாது.
சிலருடைய அனுஷ்டானத்தாலேயே சகலருக்கும் தர்ம மழை, அன்பு மழை, ஆண்டவனுடைய அருள்மழை கிடைத்து விடும்படியாக வர்ணாசிரம விவாகம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
எனவே அதிகார பேதப்படி நாலு வர்ணத்தையும் நாலு ஆசிரமத்தையும் ஒட்டி ஏற்பட்டிருக்கும் வித்தியாச மான தர்மங்களைத்தான பின்பற்ற வேண்டுமே தவிர (பிராமண ஷத்திரிய வைசிய சூத்ர என்ற தர்மங்களைத் தான் பின்பற்ற வேண்டுமே தவிர மாற்றி வேறு இடத்திற்குப் போகக்கூடாது) எல்லோருக்கும் ஒன்றுதான் தர்மம் என்று பண்ணப்படாதது என்பதிலேயே நம் சாஸ்திரங்கள் உறுதியாக இருக்கிறது என்று சொல்லி மிகத்தெளிவாக சாஸ்திரங்களை நியாயப்படுத்தி சொல்லுகின்றார்.
இங்கே இன்னொரு கருத்தைச் சொல்லுகின்றார். உலகத்தைப் பார்க்க வேண்டிய இந்த மடாதிபதி லோகத் திற்கே குருவாக இருக்கக்கூடியவர் - எதைப்பற்றி இப்போது கவலைப்படுகின்றார், மண்டல் கமிஷனைப் பற்றிக் கவலைப்படுகின்றார்.
கம்யூனல் ஜி.ஓ.வான வகுப்பு உரிமைதான் மண்டல் கமிஷனின் தத்துவம், சங்கராச்சாரி இந்த கம்யூனல் ஜி.ஓ. வைப்பற்றி கவலைப்படுகின்றார். கம்யூனல் ஜி.ஓ. விற்கு எதிராகப் பேசுகிறார்.
தன்னை லோககுரு என்று சொல்லிக் கொண்டாலும், தன்னுடைய உண்மையான உருவத்தை வெளிப்படுத்து கிறார்.
நான் சொல்வது எல்லாருக்கும்தான் என்றாலும் பிராமணர் களில் வசதியுள்ள பென்ஷனர்களுக்கு இதைக் குறிப்பாகச் சொல்கிறேன்.
லோகக் குரு என்பவருக்குப் பிராமணர்கள் என்ற பார்வை எதற்கு?
இன்னுமொரு செய்தி, பத்திரிகையில் பார்த்திருக் கக்கூடும்.
இந்த சின்ன சங்கராச்சாரிக்கு சடங்குகள் நடந்தபோது - அவருடைய பூணூலைக் கத்தரித்து எடுத்தார்களாம். காரணம் குடும்ப பந்தம், மற்ற பந்தங்கள் எல்லாம் பூணூல் இருந்தால் அதற்கு உண்டு என்று அர்த்தம் பூணூலை எடுத்து விட்டால் தான் உண்மையான சந்நியாசி - அதற்காக சம்பிரதாயமாக அதைச் செய்வது வழக்கம் என்று சொல்கிறார்கள்.
சடங்கு நடத்தி பூணூலை கத்தரித்துவிட்டு உலகத் தையே நோக்கி பார்க்கவேண்டிய சங்கராச்சாரியார் எல்லோருக்கும் என்று சொல்லாமல் பிராமணர்களுக்கு மாத்திரம் சொல்வதாகச் சொல்கிறார்.
மற்ற சமூகங்களில் நிராதரவான இளைஞர்களை ஆதரிக்க அந்தந்த சமூகத்தில் வசதியுள்ளவர்கள் நிரம்ப ஏற்பாடுகள் செய்திருக்கிறார்கள். பிராமணர்களுக்குத்தான் அந்த ஸ்பிரிட் இல்லை. காலேஜ் அட்மிஷன் உத்தியோகம் பெறுவது எல்லாவற்றிலுமே கம்யூனல் ஜி.ஓ.வந்த நாளாக பிராமணப்பசங்கள் அதிகக் கஷ்ட திசையில் இருக்கிறார் கள். இப்போதும் அந்த சமூகத்தில் சவுகர்யமுள்ளவர்கள் இதைக் கவனிக்காமலிருப்பது நியாமில்லை என்கிறார் மறைந்த சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரசுவதி.
மற்ற சமூகத்தில் வசதியுள்ளவர்கள் ஏற்பாடு செய்து தருவது  உண்மையா? யாரும் தன்னளவிற்கு வரக்கூடாது என்று நினைப்பவர்கள் தான் அதிகம், கம்யூனல் ஜி.ஓ. சங்கராச்சாரியை எவ்வளவு உறுத்துகிறது என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே மேலும் சொல்கிறார்: ஒரு காலத்தில் பிரா மணன் தலையில் கைவைத்தது பரவிப் பரவி இப்போது ஃபார்வர்ட் கம்யூனிட்டி என்று பேர் வைக்கப்பட்ட சமூகங்களிலும் இது பரவி காலேஜ் அட்மிஷன், சர்க்கார் உத்தியோகம் எல்லாவற்றிலும் பின்னால் தள்ளப்படுவதில் முடிந்திருக்கிறபடியால், இவர்கள் எல்லோரும் எதிர்கால தலைமுறை விஷயத்தில் விழிப்போடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்கிறார் சங்கராச்சாரியார்.
அவமானப்படுத்துங்கள் என்றுகூட சொல்லமாட்டேன்!
இதனை எத்தனை பேர் படித்திருக்கிறார்கள். ஆஹா, சங்கராச்சாரியார்! அவருடைய படத்தையெல்லாம் வீடு களில் மாட்டியிருப்பீர்கள். அதனைத் திருப்பி வையுங்கள்! அவமானப்படுத்துங்கள் என்றுகூட சொல்லமாட்டேன், அவர்களைப் போல.
காந்தியாருடைய மகன் ராஜகோபாலாச்சாரியா ருடைய மகளை காதல் செய்து விரும்பி விட்டார் என்ற வுடன், அதற்கு சில நிபந்தனைகளைப் போட்டு, திருமணம் செய்துகொண்டார்.
அதைப்பற்றி அய்யா அவர்கள், பச்சை அட்டைக் குடிஅரசில் நீண்ட நாள்களுக்கு முன்பு எழுதியிருக்கிறார். அது ஒரு ஆக்சிடெண்ட், அவ்வளவுதான். அதனால், ராஜகோபாலச்சாரியார் அவர்கள் மனம் மாறிவிட்டார்; ஜாதி பிரச்சினையில் அவர் எண்ணங்களை மாற்றிக் கொண்டு விட்டார் என்று சொல்லாதீர்கள்!
காமராசருடைய ஆட்சி மட்டும் வந்திருக்காவிட்டால், அவர் முதலமைச்சர் பொறுப்பிற்கு வந்திருக்காவிட்டால், இன்றைக்கு இத்தனை பொறியியல் கல்லூரிகள் வந்து, ஒரு லட்சம் இடங்கள் காலியாக இருக்குமா?
இச்சுப்பட்ன வாடுக்கு இன்ஜினியரிங் பெரியார் சொன்ன தெலுங்கு உதாரணம் இது. கொடுத்து வைத்த வர்களுக்குத்தான் பொறியியல் படிப்பு என்றிருந்தது. ஆனால், இன்றைக்குத் தடுக்கி விழுந்தால் பொறியியல் படிப்பு படித்தவர்களின்மீதுதானே விழவேண்டும். இந்தக் கோபம்தானே, இந்த ஆத்திரம்தானே அவர்களுக்கு.
அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர்
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 1928 ஆம் ஆண்டிலி ருந்து வருகிறது; இது அறிவார்ந்த அவை; அதனால் நேரமின்மை காரணத்தினால் சுருக்கமாகச் சொல்கிறேன்.
அதே அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர் அரசியல் சட்டத்தை எழுதுகிறார். வழக்கத்திற்கு மாறாக, இலவசமாக 1950 இல் வாதாடுகிறார். யாருக்காக? மனுவே போடாத, பொய்ப் பிரமாணம் கொடுத்த ஒரு செண்பகம் துரைராஜன் அவர்களுக்கு! Where there is a legal right, there is a legal remedy ஒருவருக்கு எங்கே உரிமை இருக்கிறதோ, அப்பொழுதுதான் நான் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்று மனு போட முடியும். அதுதான் ரிட் மனுவினுடைய அடிப்படை கருத்து - சட்டத்தில்.
நான் மனு போட்டிருக்கிறேன் என்று பொய் சொன் னார்; அன்றைய காங்கிரஸ் அரசு அதனைக் கண்டுபிடிக்க வில்லை. உச்சநீதிமன்றத்திற்குச் சென்று கண்டுபிடித்தார் கள் - அதனால் பயனில்லை.
இந்த வழக்கில் யார் வாதாடியது? அரசியல் சட்டத்தை எழுதிய அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர். polarisation ஒருமுனைப்படுத்துதல்.
இட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான வர்கள் அத்துணைப் பேரும் ஒன்று சேர்ந்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அத்துணை பேரும் சேர்ந்தாலும், நம்மவர்களை கருடாழ்வார்களாக ஆக்கினால்தான், அவர் கள் கழுத்திலே இவர்களை சுமந்துகொண்டு சென்றால் தான்,  வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறார்கள்.
ராஜகோபாலாச்சாரியாரின் வானொலி உரை!
ராஜகோபாலாச்சாரியார் ஜாதி இருக்கவேண்டும் என்று பேசினார். எப்பொழுது? முதலமைச்சர் ஆன பிற்பாடு, அதற்குப் பிறகு, குலதர்மக் கல்வித் திட்டத்தை யெல்லாம் ரத்து செய்து, காமராசர் அவர்கள் வந்த பிறகும்கூட, ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் ஒரு உரை நிகழ்த்தினார்.
Our Cultural Heritage நம்முடைய பாரம் பரியம்; அவர் எங்கே உரை நிகழ்த்தினார் தெரியுமா? அதிகாரபூர்வமான உரை - வானொலியில், sardar patel memorial lectures
என்று கவுரவமான ஒரு தலைப்பு. மிகப் பெரியவர்களை மட்டும் அழைத்து ஆண்டுக்கொருமுறை வானொலியில் உரையாற்றச் சொல்வார்கள்.
Reith Lectures என்று பிபிசியில் உண்டு. அதற்குச் சமமாக இதனை வைக்கவேண்டும் - சர்தார் பட்டேல் அவர்களுடைய நினைவில் என்று வைத்தார்கள். அந்த முதல் உரையை ஆற்றிய பெருமை - மேனாள் கவர்னர் ஜெனரல் ராஜகோபாலச்சாரியாருக்கு உண்டு.
அதிலே அவர் சொல்கிறார், நம்முடைய நாட்டில் கட்டுக்கோப்பாக இந்தச் சமுதாயம் இருப்பதற்குக் கார ணமே ஜாதிதான். எனவே, ஜாதி தருமத்தை நாம் குலைத்து விடக் கூடாது!
யார் பேசியது? பல ஆண்டுகளுக்கு முன்பு காந்தியா ருக்குச் சம்பந்தியானவர் - அதுதான் மிக முக்கியம். அவர் வீட்டில் தருமம் இருந்ததா?
தாழ்த்தப்பட்டவர்களின் நிலைமை மாறிவிட்டதா?

அப்பொழுதே தந்தை பெரியார் கேட்டார், மகா விஷ்ணுக்கு மட்டுமே நெருங்கியவர் அரிஜன் என்று காந்தியார் பெயர் வைத்தாரே, அதனால் தாழ்த்தப்பட்ட வர்களின் நிலைமை மாறிவிட்டதா? என்று.
அம்பேத்கர் அதைத்தான் கேட்டார், அரிஜனம் - விஷ்ணுவினுடைய பிள்ளைகள் - ஏன் சிவனுக்கு அவர்கள் வேண்டாதவர்களா?
ஆகவே, ராஜகோபாலாச்சாரியாரிலிருந்து, சங்கராச் சாரியாரிலிருந்து, மனுதர்ம காலத்திலிருந்து இன்றைக்கு குருமூர்த்தி வரையிலும் ஒருமுனைப்படுத்தப்பட்டிருக்கிறது.
இட ஒதுக்கீடு பிரச்சினை இன்றைக்கோ, நேற்றோ ஆரம்பித்தது அல்ல; தேவாசுரப் போராட்டம் - அந்தக் கதையினுடைய தத்துவம் என்ன சொல்லுகிறது? அது நடந்ததா? இல்லையா? என்பது வேறு. அதனை நம்ப வேண்டாம். ஆனால், அந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள் ளுங்கள், அது முக்கியம்.
தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் போராட்டம்; வாசுகி என்ற பாம்பின் வால் பக்கம் தேவர்கள் நின்றார்கள்; தலைப்பக்கம் அசுரர்கள் நின்றார்கள். ஏனென்றால், வீரம் என்றால் நம்மாள்; வேறு வேலை என்றால், அவாள்.
பாம்பைப் பிடித்து கடைந்து அமுதத்தை எடுத்தார் கள். தேவர்களே அந்த அமுதத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார்கள். அசுரர்களிடம் போராடி அந்த அமுதத்தைப் பறிக்க முடியாது. மகாவிஷ்ணு மோகினி அவதாரம் எடுத்தார் என்று சொல்வார்கள். அசுரர்கள் மற்ற விஷயங்களில் எல்லாம் சரியாக இருப் பார்கள். மோகினி அவதாரம்தான் அசுரர்களுடைய பல வீனமே! அன்றிலி ருந்து இன்றுவரையில் உள்ள சூழ்நிலை அதுதான், அதிலொன்றும் மாறுதல் கிடையாது.
இன்னமும் மோகினி அவதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன

ஆகவே, அப்படி மோகினி அவதாரம் எடுத்தவுடன், மொத்த அமிர்தமும் தேவர்களின் கைகளில். அசுரர்கள் ஏமாந்தவர் ஆனார்கள். இன்னமும் மோகினி அவதாரங் கள் வந்து கொண்டிருக்கின்றன.  அசுரர்களை ஏமாற்ற வேண்டும் என்று வந்து கொண்டிருக்கின்றன. அது மதுரை மாநாட்டின் ரூபமாக வரலாம். ஒவ்வொரு காலகட்டத்தில், ஒவ்வொரு இடங்களிலும் வரலாம். எச்சரிக்கையாக இருக்கவேண்டியது நமது கடமையாகும்!
(தொடரும்)
இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் கட்சியில்லை; ஜாதியில்லை; மதமில்லை - இரண்டே அணிகள்தான்! சமூகநீதி அணி-சமூகநீதிக்கு எதிரான அணி!சென்னை, ஆக.21-  இட ஒதுக்கீடுப் பிரச்சினையில் கட்சி யில்லை, மதமில்லை, ஜாதியில்லை; இரண்டே அணிகள் தான். ஒன்று சமூகநீதி அணி! மற்றொன்று சமூகநீதிக்கு எதிரான அணி என்று அணி திரளுவோம் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 18.8.2015 அன்று சென்னை பெரியார் திடலில் இட ஒதுக்கீடு இழிவுக்குரியதல்ல - உரிமை மறுக்கப்பட் டோருக்கு உந்து சக்தி - என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
இட ஒதுக்கீட்டை யாரும் தடுத்துவிட முடியாது; பறித்துவிட முடியாது. பெரியார் மண்ணின் வேர் இருக் கிறதே, அது இந்தியாவைத் தாண்டிச் சென்றுவிட்டது! அரசியல் சட்டத்தில் முதல் சட்டத் திருத்தத்தினை செய்தார்கள் என்று இங்கே சுட்டிக்காட்டினார்கள். அதில் தெளிவாக்கப்பட்டிருப்பது இட ஒதுக்கீடு 16(4), 15(4) Justice, Social Economic and Political சமூகநீதி, அம்பேத்கர் அவர்கள் இல்லை என்றால், இந்த அளவிற்கு வந்திருக்காது. பல இடங்களில் அவரை ஏமாற்றினார்கள்; அதனை அவர் பின்னாளில் சொல்லியிருக்கிறார். அது வேறு.
நாம் போராடிய காரணத்தினால் இட ஒதுக்கீடு பத்திரமாகப் பதிவாகியிருக்கிறது
அந்தச் சூழ்நிலையில் நண்பர்களே, அடிப்படை உரிமைகள் என்று இருப்பது என்ன பெயர் என்றால், வழக் குரைஞர்கள், சட்ட அறிஞர்கள் இங்கே இருக்கிறார்கள் - The Basic Structure of the Constution of India  -அடிப்படையை மாற்றவே முடியாது; இன்னொரு அரசியல் சட்டத்தைக் கொண்டு வந்தால்தான் இந்த அடிப்படையை மாற்ற முடியுமே தவிர, அந்த அடிப்படையில் இட ஒதுக்கீடு என்பது நாம் போராடிய காரணத்தினால் பத்திரமாகப் பதிவாகியிருக்கிறது. எந்தச் சக்தியாலும் அவ்வளவு எளிதாகப் பறித்துவிட முடியாது.
ஆனால், கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அரசியல் சட்டத்தையே மாற்றுகிறோம் என்று ஏமாற்றினார்கள் என்றால் என்ன செய்வது - இப்பொழுதே ஆரம்பித்து விட்டார்களே, முதலில் இருக்கக்கூடிய Secular, Socialist என்று இருக்கக்கூடிய இடத்தில், Secular என்கிற வார்த்தையே இல்லாமல் விளம்பரம் கொடுத்தார்களே, குடியரசு நாளில் - அதற்கு ஏதேதோ சமாதானம் சொன் னார்கள் என்பதையும் நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்.
எனவே, இட ஒதுக்கீடு என்பது அரசியல் சட்டத்தில் உரிமையோடு நிலைநாட்டப்பட்டிருக்கிறது என்றாலும் நாம் விழிப்போடு இருக்கவேண்டும்.
நீதிபதி ரத்தினவேல் பாண்டியனுக்கு நன்றி சொல்லவேண்டும்!
மண்டல் கமிஷன் தீர்ப்பிலே - ஜஸ்டீஸ் ரத்தினவேல் பாண்டியன் அவர்கள் தனியே ஒரு தீர்ப்பினை எழுதினார். அதற்காக நாம் அவருக்கு நன்றி செலுத்தவேண்டும். அதேபோன்று மற்ற நீதிபதிகளும் சொன்னார்கள். ஆனால், யாரும் அதிலிருந்து மாறுபட்டு இட ஒதுக்கீடு செல்லாது என்று சொல்லவில்லை; அப்படி சொல்லவேண்டும் என்று முயற்சித்தார்கள்.
முன்னேறிய சமூகத்தைச் சார்ந்த அய்ந்து நீதிபதிகள் (தலைமை நீதிபதி உள்பட) எல்லோருக்கும் சேர்ந்து தீர்ப்பு எழுதியவர் ஜீவன் ரெட்டி என்ற  ஆந்திராவைச் சேர்ந்த முன்னேறிய சமுதாயம் என்கிற பிரிவில் இருக்கக்கூடிய அவர் எழுதிய தீர்ப்பு என்னுடைய கையில் இருக்கிறது.
நீதிபதி ஜீவன் ரெட்டி எழுதிய தீர்ப்பு
இதில் குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், ஒரு பகுதியை உங்களுக்குச் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக் கிறேன்.
B.P.Jeevan Reddy J., (For himself and on behalf of  M.H. Kania, CJI., M.N. Venkatachaliah & A.M. Ahmadi, JJ.)
‘‘....Forty and three years ago was founded this republic with the fourfold objective of securing to its citizens justice, liberty, equality and fraternity. Statesmen of the highest order the like of which this country has not seen since - belonging to the fields of law, politics and public life came together to fashion the instrument of change - the Constitution of India. They did not rest content with evolving the framework of the State; they also pointed out the goal-and the methodology for reaching that goal. In the preamble, they spelt out the goal and in parts III and IV, they elaborated the methodology to be followed for reaching that goal.’’
‘‘....The Constituent Assembly, though elected on the basis of a limited franchise, was yet representative of all sections of society. Above all, it was composed of men of vision, conscious of the historic but difficult task of carving an egalitarian society from out of a bewildering mass of religions, communities, castes, races, languages, beliefs and practices. They knew their country well. They understood their society perfectly. They were aware of the historic injustices and inequities afflicting the society. They realised the imperative of redressing them by constitutional means, as early as possible - for the alternative was frightening. Ignorance, illiteracy and above all, mass poverty, they took note of. They were conscious of the fact that the Hindu religion - the religion of the overwhelming majority - as it was being practiced, was not known for its egalitarian ethos. It divided its adherents into four watertight compartments. Those outside this fourtier system (chaturvarnya) were the outcastes (Panchamas), the lowliest. They did not even believed all the caste system - ugly as its face was. The fourth, shudras, were no better, though certainly better than the Panchamas. The lowliness attached to them (Shudras and Panchamas) by virtue of their birth in these castes, unconnected with their deeds. There was to be no deliverance for them from this social stigma, except perhaps death. They were condemned to be inferior. All lowly, menial and unsavoury occupations were assigned to them. In the rural life, they had no alternative but to follow these occupations, generation after generation, century after century. It was their 'karma', they were told, the penalty for the sins they allegedly committed in their previous birth. Pity is, they believed all this. They were conditioned to believe it. This mental blindfold had to be removed first. This was a phenomenon peculiar to this country. Poverty there has been “- and there is - in every country. But none had the misfortune of having this social division - or as some call it, degradation - super-imposed on poverty. Poverty, low social status in Hindu caste system and the lowly occupation constituted - and do still constitute - a vicious circle. The founding fathers were aware of all this - and more.’’
இதன் தமிழாக்கம் வருமாறு:
பி.பி. ஜீவன் ரெட்டி ஜூனியர் (தனக்காகவும், எம். எச்.கனியா, இந்தியத் தலைமை நீதிபதி, எம்.என்.வெங்கடா சலையா மற்றும் ஏ.எம்.அஹமதி ஆகியோருக்காகவும்)
635, தனது குடிமக்களுக்கு நீதி,  சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றைப் பெற்றுத் தரும் நான்கு அடுக்கு நோக்கத்துடன் 43 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டது இந்த குடியரசு. சட்டம், அரசியல் மற்றும் பொதுவாழ்வு ஆகிய துறைகளைச் சேர்ந்த, அதன் பிறகு இந்த நாடே இன்று வரை  கண்டிராத முதிர்ந்த அரசியல் ஞானிகள் ஒன்று சேர்ந்து இந்த நாட்டின் மாற்றத்திற்குக் கருவியான அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்தனர்.
அரசின் கட்டமைப்பை உருவாக்குவதுடன் அவர்கள் மனநிறைவடைந்துவிடவில்லை. இலக்கையும் அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும் கூட அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த இலக்கினை அவர்கள் அரசமைப்பு சட்டத்தின் 3 மற்றும் 4 ஆம் பகுதிகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதுடன், அந்த இலக்கை அடைவதற்கான வழிமுறைகளையும் மிக விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.
வரையறுக்கப்பட்ட வாக்களிப்பு நடைமுறையின் அடிப்படையில் அரசமைப்பு சட்டமன்றம் தோந்தெடுக்கப் பட்டது என்றாலும், சமூகத்தின் அனைத்துப் பிரிவுகளின் பிரதிகளையும் கொண்டதாக இருப்பதாகும் அது. அனைத்துக்கும் மேலாக, தொலை நோக்குப் பார்வையும், வரலாற்று உணர்வும் கொண்ட மாமனிதர்கள் அடங்கிய இந்த அவைக்கு, குழப்பம் அளிக்கத்தக்க எண்ணற்ற மதங்கள், சமூகங்கள், ஜாதிகள், இனங்கள், மொழிகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து, ஒரு சமத்துவம் வாய்ந்த சமூகத்தை உருவாக்குவது என்பது மிகவும் எளிதான பணியன்று.
தங்களது நாட்டைப் பற்றி அவர்கள் நன்கு அறிந்திருக்கின்றனர். தங்கள் சமூகத்தைப் பற்றி அவர்கள் தெளிவாகப் புரிந்து கொண்டிருந்தனர். நமது சமூகத்தைப் பாதிக்கும் வரலாற்றுபூர்வமான அநீதிகளை யும், சமத்துவமின்மையைப்பற்றியும் அவர்கள் அறிந் திருந்தனர். கூடுமான வரை அரசமைப்புச் சட்டத்தின் மூலம் அவற்றைப் போக்க வேண்டியதன் அவசியத்தை அவர்கள் உணர்ந்திருந்தனர். இத்தகைய மாற்றத்திற்கான எந்த வித மாற்று வழியும் அச்சமூட்டக்கூடியவையாகும். அறியாமை, படிப்பறிவின்மை, அனைத்துக்கும் மேலாக, கொடிய வறுமை ஆகியவை பற்றி அவர்கள் கவனம் எடுத்துக் கொண்டிருந்தனர்.
பெரும்பான்மை மக்களின் மதமான இந்து மதம் கடைப்பிடித்து வரும் பழக்க வழக்கங்கள் சமத்துவ நோக்கைக் கொண்டவை என்று அறியப்பட்டவை அல்ல  என்ற உண்மையை அவர்கள் உணர்ந்தும் இருந் தனர்.  தங்கள் மதத்தைத் பின்பற்றுபவர்களை அது ஒன்று டன் ஒன்று சேரமுடியாத நான்கு பிரிவுகளாகப் பிரித்து வைத்துள்ளது. சதுர்வர்ணம் என்னும் இந்த நாலடுக்கு ஜாதிய அமைப்பு முறைக்கு வெளியே இருப்பவர்கள் பஞ்சமர்கள் என்றும் ஜாதியற்றவர்கள். இந்த ஜாதிய நடைமுறையின் முகம் மிகவும் அருவருக்கத் தக்கதாக இருந்தபடியால் இந்த நடைமுறையை அவர்கள் முழுமையாக நம்பவில்லை.
நான்காவது பிரிவினரான சூத்திரர்களும் கூட பஞ்சமர்களை விட சற்று மேலான நிலையில் இருந்தனர் என்றாலும், மனநிறைவடையும் நிலையில் அவர்களும் இருக்கவில்லை. இந்த சூத்திரர்கள், பஞ்சமர்களுக்கு அவர்கள் பிறப்பின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள அந்த இழிவு அவர்களது செயல்களுடன் தொடர்புடையது அல்ல. இந்த சமூகக் களங்கத்திலிருந்து, சாவைத் தவிர அவர்களது விடிவுக்கு வேறு வழியே ஏதுமில்லை. இழிவானவர்களாகக் கருதப்படவே அவர்கள் விதிக்கப்பட்டிருந்தனர்.
சுகாதாரமற்ற, அனைத்து வகை யிலும்  இழிவாகக் கருதப்படும் பணிகளே அவர்களுக்கு அளிக்கப்பட்டன. அவர்களது கிராமப்புற வாழ்க்கையில், தலைமுறை தலைமுறையாக, நூற்றாண்டுக்குப் பின் நூற்றாண்டுகளாக,  இந்த தொழில்களைச் செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறு மாற்று வழிகள் இருக்கவில்லை. அவர்களது முற்பிறப்பில் அவர்கள் செய்ததாகக் கூறப்படும் பாவங்களுக்கான தண்டனை என்னும் அவர்களது கர்மவினை அது என்று அவர்களுக்குக் கூறப்பட்டது. இதில் உள்ள சோகம் என்னவென்றால், அதனையும் அவர்கள் நம்பினர் என்பதுதான். அதனை அவர்கள் நம்பச் செய்யும் நிலைக்கு அவர்கள் உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர்களது மூளைக்கு, மனதிற்குப் போடப்பட் டிருக்கும் தடை முதலில் அகற்றப்படவேண்டும். இந்த நாட்டிற்கே உரித்தான ஒரு விசித்திரமான நிலைப்பாடாகும் இது. வறுமை என்பது முன்பும் இருந்துள்ளது; இப்போதும் இருக்கின்றது; எல்லா நாட்டிலும் இருப்பதாகும். ஆனால், இதனைப் போன்று வறுமையின் மேலே பதிக்கப்பட்டுள்ள இந்த சமூகப் பிரிவினை அல்லது சிலர் கூறுவது போன்ற சமூக இழிவு வேறு எந்த நாட்டவர்க்கும் ஏற்பட்டதில்லை. வறுமை, இந்து ஜாதிய நடைமுறையில் அளிக்கப் பட்டுள்ள இழிவான சமூக அந்தஸ்து, அதன் விளைவாக அளிக்கப் பட்டுள்ள இழிவான தொழில்கள் என்னும் ஒரு மாய வட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டேதான் உள்ளது. அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய நமது தந்தையர் இவை அனைத்தையும், அதற்கும் மேலாகவும் அறிந் திருந்தனர்.
அம்மை நோயைக் கொல்லுவதற்கு, அம்மைக் கிருமியை உடலில் செலுத்துவதைப்போல...
இன்னொரு கருத்து, அருணன் அவர்கள் இங்கே சொன்னார்கள், அது நல்ல கருத்தாகும்.
இப்பொழுது ஜாதி மறுப்பு திருமணங்கள் நடைபெறு கின்றன. கவுரவக் கொலைகள் என்கிற பெயரால் அவற்றைத் தடுக்க சில ஜாதி வெறியர்கள் முட்டி மோதிப் பார்க்கிறார்கள். அது ஒன்றும் பலிக்காது; நீங்கள் எவ்வளவு செய்தாலும், ஜாதியை இனிமேல் உங்களால் காப்பாற்ற முடியுமா? என்றால், முடியாது.
ஜாதியைப் பொறுத்தவரையில் சில கேள்விகளைக் கேட்கிறார்கள். ஜாதி வேண்டாம் என்று சொல்லிவிட்டு, பிறகு இட ஒதுக்கீடுக்கு ஜாதி வேண்டும் என்று சொல் கிறீர்களே, பள்ளிக்கூடத்தில் பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்றாலும், என்ன ஜாதி என்று கேட்கிறார்களே என்று.
பெரியார் அவர்கள் ஒரே வார்த்தையில் சொன்னார், ஆண்டிபயாடிக் மருந்தை வாங்கிப் பார்த்தீர்களேயானால், அதில் Poison (விஷம்) என்று இருக்கும்; மிகவும் அளவோடு அந்த ஆண்டிபயாடிக் மருந்தில் பாய்சனை வைத்திருப்பார்கள். அதுபோன்று, ஜாதி என்கிற கிருமியில் இட ஒதுக்கீட்டிற்கு, அந்த ஜாதிக் கிருமியைக் கொடுத்து தான் ஒழிக்கவேண்டும்; கொஞ்ச காலத்திற்கு அதை வைத்துத்தான் கொள்ளவேண்டும்; வேறு வழி கிடையாது என்று மிகத் தெளிவாகச் சொன்னார். அம்மை நோயைக் கொல்லுவதற்கு, அம்மைக் கிருமியை உள்ளே செலுத்து வதைப்போல என்று சொன்னார்.
சரி, இது எவ்வளவு காலத்திற்கு என்று கேட்டார்கள்?
பெரியார் அவர்கள், நீ எவ்வளவு காலத்திற்குச் சமத்துவத்தை உண்டாக்காமல் இருக்கின்றாயோ, அவ்வளவு காலத்திற்கு என்றார்.
எவ்வளவு காலத்திற்கு மாற்றுப் பாதையில் செல்ல வேண்டும் என்று கேள்வி கேட்டால்,
எவ்வளவு காலத்திற்கு நீ பாலம் கட்டுவதை நீட்டிக் கொண்டே செல்கிறாயோ, அவ்வளவு காலத்திற்கு மாற்றுப் பாதையில்தான் செல்லவேண்டும் - அதைப்போல, இந்த ஜாதியற்றோர் இட ஒதுக்கீடுக்காக திராவிடர் கழகத்தில் ஏற்கெனவே தீர்மானமும் போட்டோம்.
இப்பொழுது இருக்கின்ற கோட்டாக்களில், மேலும் ஒரு கோட்டாவை சேர்க்கவேண்டும். அதுதான் அய்.சி. கோட்டாவாகும். கலப்பு மணம் (இன்டர்காஸ்ட் மேரேஜ்) செய்து கொண்டவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு தேவை. அதனை நீங்கள் அதிகமாகக் கொடுக்காவிட்டாலும், மொத்தம் உள்ள 69 சதவிகிதத்தில் முதலில் 5 சதவிகிதம் கொடுங்கள்; பிறகு 10 சதவிகிதம் கொடுங்கள். நேரடி, எதிரடி விகிதம் என்கிற முறையில், ஒன்றை ஏற்றிக் கொண்டே சென்று, மற்றதினைக் குறைத்துக் கொண்டே வாருங்கள்; தானாகவே ஜாதி ஒழிந்துவிட்டது என்கிற நிலைமை வரவேண்டும். எனவே, உண்மையான ஜாதி ஒழிப்பாளர்கள் நாம்தான். அதில் ஒன்றும் சந்தேகமே யில்லை. எனவேதான், இதில் எந்தக் குழப்பமும் நமக்குக் கிடையாது.
1973 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக இழிவு ஒழிப்பு மாநாடு
இந்திய அரசியல் சட்டத்தில் ஜாதி என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதே இடத்தில், 1973 ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் நடத்திய மாநாடு; சமூக இழிவு ஒழிப்பு மாநாடு; அந்த மாநாட்டில், கடைசிப் போராட்டம் எல்லோரும் இறங்கவேண்டும் என்று சொன்ன நேரத்தில், அந்த மாநாட்டில் ஒரு தீர்மானம் போட்டார். அந்தத் தீர்மானம் மிகவும் ஆழமான தீர்மானமாகும்.
பல சட்ட நிபுணர்களை எல்லாம் கலந்தாலோசித்து, தன்னுடைய கருத்தில் ஏதாவது சிக்கல் இருக்குமா? என்று கேட்டு, அவர்கள் அதில் ஒன்றும் சிக்கல் இல்லை என்று சொன்னவுடன், அந்த மாநாட்டில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.
தீண்டாமை என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ஜாதி என்று போடுங்கள்!
இந்திய அரசியல் சட்டத்தின் 17 ஆவது விதி
‘‘Untouchability is abolished and its practice in any form is forbidden The enforcement of any disability arising out of Untouchability shall be an offence punishable in accordance with law’’
ஆனால், தந்தை பெரியார் என்ன சொன்னார் என்றால், தீண்டாமை என்பது தனியாக வராது; ஜாதியி னுடைய விளைவு அது. ஜாதி என்பதுதான் அடிப்படை யானது.
எனவே, The Word Untouchability is to be Removed; தீண்டாமை என்கிற வார்த்தையை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் ஜாதி (சிணீமீ) என்கிற வார்த்தையை அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நீங்கள் போடுங்கள்.
கீழே தெளிவுபடுத்துவதற்கு, தீண்டாமை ஒழிக்கப் பட்டுவிட்டது என்று இல்லாமல் இருந்தால், ஒருவேளை நாளைக்கு நீதிமன்றத்திற்குச் சென்று வியாக்கியானம் செய்வார்கள்.
அதற்காக Jathi (Caste) it includes  Untouchability also
என்று அதிலேயே தெளிவுபடுத்துங்கள். பிறகு யாரும் ஒன்றும் கேட்க முடியாது.
எப்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டது? செட்யூல்டு கேஸ்ட் என்று சொல்லக்கூடியவர்கள் காலங்காலமாக இன்றைக்கு அழுத்தி வைக்கப்பட்டிருக்கிறார்களே, அய்ந் தாம் ஜாதி ஆக்கப்பட்டு, உரிமை மறுக்கப்பட்ட மக்களாக, படிப்பு, வேலை வாய்ப்புகள் மறுக்கப்பட்டிருக்கிறார்களே, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டாலும், அவர்களுக்கு இட ஒதுக்கீடு என்பது எப்படி அரசியல் சட்டத்தில் பாதுகாப்பாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் இருக்கலாம் என்ற முறையில் இருக்கிறது - இட ஒதுக்கீட்டுக்கு காலகட்டம் கிடையாது - சமூகத்தின் நிலையைப் பொறுத்ததுதான் அது.
ஜாதியற்ற சமுதாயத்தை முழுமையாகப் பெறுகின்ற வரையில்...
எனவே, தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது; ஆனால், இட ஒதுக்கீடு இருக்கிறது. தேவை என்பதால், இட ஒதுக் கீட்டிற்காக ஜாதி கொஞ்சம் காலத்திற்கு இருக்கவேண்டும்; எவ்வளவு காலத்திற்கு, பாலம் கட்டுகின்ற வரையில்தான். ஜாதியற்ற சமுதாயத்தை முழுமையாகப் பெறுகின்ற வரையில் என்று ஒரு தீர்மானத்தைப் போட்டு - இதனைச் செய்யவேண்டும் என்று சொன்னார்.
எனவேதான், உண்மையாகவே ஜாதி ஒழிப்பை விரும்பக்கூடியவர்கள் நாம். சில ஜாதிகள் மட்டும் ஒழிய வேண்டும்; நாங்கள் ஒன்றாகவேண்டும் என்று சொல்லக் கூடிய குழப்பவாதிகள் அல்ல நாம்; அவர்களைப் பொறுத்த வரையில் வருண தருமத்தை விரும்புகிறார்கள்; ஜாதி தருமத்தை நிலை நாட்டுகிறார்கள்; குலதர்மத்தை மீண்டும் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இன்று நாம் வெற்றி பெற்றிருக்கிறோம்; அது எந்த அளவிற்கு என்பதற்கு ஒரு சிறிய உதாரணத்தைச் சொல் கிறேன்.
பார்ப்பனர்களுக்கு ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டுமாம்!
ஒரு நாள் திடலில் நான் இருக்கும்பொழுது, சினிமா நடிகர் திரு.எஸ்.வி.சேகர் வந்தார்; என்னைப் பார்த்து, அய்யா நான் பிராமணர் சங்கத்தின் சார்பாக உங்களிடம் பேசவேண்டும் என்று வந்திருக்கிறேன் என்றார்.
அப்படியாக, சரி, மிகவும் மகிழ்ச்சி, சொல்லுங்கள் என்றேன்.
எங்களுக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்; ஏழு சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும் என்று நாங்கள் தீர்மானம் போட்டிருக்கிறோம்; கலைஞர் அய்யா இப்பொழுது முதலமைச்சராக இருக்கிறார்; அவரை நான் சென்று பார்த்து, இதுபற்றி கூறினேன். அவரும், அதற்கென்ன செய்துவிட லாம்; முதலில் நீங்கள் நண்பர் வீரமணியைச் சென்று, அவரிடம் கேட்டுவிட்டு வாருங்கள். அதன் பிறகு செய்ய லாம் என்றார். அதற்காகத்தான் உங்களிடம் நான் வந்திருக் கிறேன் என்றார்.
நான் உடனே, நல்லது. நானும் உங்கள் இட ஒதுக் கீட்டை ஆதரிக்கிறேன். ஒரே ஒரு செய்தியை சொல்கி றேன், ஏற்கெனவே நீங்கள் எதிர்த்து வாதாடி ஒழித்த கம்யூனல் ஜி.ஓ.வில் உங்களுக்கு எவ்வளவு இட ஒதுக்கீடு இருந்தது தெரியுமா? என்று கேட்டேன்.
எனக்கு அதெல்லாம் தெரியாது என்றார் அவர்.
தெரிந்துகொள்ளுங்கள்; நீங்கள் இப்பொழுது இருப்பது மூன்று சதவிகிதம்தான். ஆனால், அப்பொழுது இருந்தது இரண்டே முக்கால் சதவிகிதம்தான் இருந்தீர்கள். அப்பொழுதே முத்தையா முதலியார் உங்களுக்கு 16 சதவிகிதம் இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறார். காரணம், நூறு சதவிகிதம் அனுபவித்தவனுக்கு 16 சதவிகிதம் கொடுத்த தினால், அவர்கள் வேண்டாம் என்று சொல்லிவிட்டு, அதை ஒழித்துக் கட்டினார்கள் கோர்ட்டுகள்மூலம். இன்றைக்கு நீங்கள் ஏழு சதவிகித இட ஒதுக்கீட்டை எங்களுக்குக் கொடுங்கள் என்று கேட்கிறீர்கள்; ஏழு சதவிகிதம் நீங்கள் இருப்பதாகத் தெரியவில்லையே, மக்கள் தொகை கணக் கெடுப்பு எடுக்கச் சொல்வோம், எத்தனை சதவிகிதம் இருக் கிறீர்கள் என்பதைத் தெரிந்துகொண்டு அத்தனை சதவிகித இட ஒதுக்கீட்டிற்கு நாங்கள் ஆதரவு தெரிவிக்கிறோம் என்றேன்.
உடனே அவர், அப்படியா? எங்களுக்கு இட ஒதுக்கீடு இருந்தது என்பதே எனக்குத் தெரியாது என்றார்.
அதனை ஒழித்ததே நீங்கள்தானே என்றேன். அதனால்தான் இவ்வளவு பெரிய பிரச்சினைகள் வந்தது. அதற்கு முன்பு அதுபோன்று கிடையாது என்பதை மிகத் தெளிவாக எடுத்துச் சொன்னேன்.
ஆகவே, பார்ப்பனர்களே ஒரு காலகட்டத்தில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்பார்கள்; சில பார்ப்பனர்கள் இட ஒதுக்கீட்டை ஒழிக்கவேண்டும் என்று சொல்வார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், பல்வேறு அவதாரங்களை எடுப்பார்கள்; எனவே, அசுரர்களாகிய நாம், பழைய அசுரர்களைப்போல் இல்லாமல், தேவர்களாகிய அவர்கள், இன்றைக்கும் பழைய தேவர்களைப் போல்தான் இருக் கிறார்கள். எனவேதான், தேவர்களுக்கெல்லாம் தலைவன் இந்திரன் என்று கதையில் உண்டு; அதிலேகூட பார்த்தீர் களேயானால், இந்திரனுக்கு நல்ல மரியாதை கிடையாது.
அதற்கு வேறு எங்கும் செல்லவேண்டாம்; என்.எஸ்.கிருஷ் ணன் - டி.ஏ.மதுரம் ஆகியோரின் நகைச்சுவையை பார்த் தாலே போதும். அவர்கள் மதுவிலக்கைப்பற்றி பேசுவார்கள்;
அதில் ஒரு காட்சி அந்தரத்தில் இருக்கும் இந்திர லோகம்;
டி.ஏ.மதுரம்: ஏ, கோமாளி மச்சான், இவர் யாரு என்று கேட்பார்!
என்.எஸ்.கிருஷ்ணன்: ஏம்மா, இவரைத் தெரியலை யாம்மா, உனக்கு? இவர்தான் இந்திரன் என்றார்.
டி.ஏ.மதுரம்: இந்திரனா?
அதான், பொட்டி மகன், இந்திரன்; உடம்பெல்லாம் ஆயிரம்..... என்பார்; அதற்கு மேலே என்.எஸ்.கே. ஹூம் என்பர்.
அதுபோன்று இந்திரனுக்கு என்ன பெயர் என்று தெரியும். அதற்குமேல் அதில் நுழையவேண்டாம்.
இரண்டே அணிகள்தான்!
இன்றைக்கு நடைமுறையில் நம்முடைய பிள்ளை கள், அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும்; அய்.பி.எஸ். அதிகாரிகளாக வரவேண்டும்; நடைமுறையில் வந்தும் கொண்டிருக்கிறார்கள். இவையெல்லாம் உறுத்திக் கொண் டிருக்கிறது அவர்களுக்கு.
எனவே, அவர்கள் விரிக்கின்ற வலையில் வீழ்ந்துவிடக் கூடாது. நாம் என்றைக்கும் விழிப்போடு இருக்கவேண்டும்; விழிப்போடு இருப்போம். இது ஒரு தொடக்கம். எனவே, இதனை ஒருமுனைப்படுத்த வேண்டும்; கட்சியில்லை, மதமில்லை, ஜாதியில்லை.
இரண்டே அணிகள்தான். சமூகநீதி அணி! சமூகநீதிக்கு எதிரான அணி என்று அணி திரளுவோம் என்று கூறி முடிக்கின்றேன்!
நன்றி, வணக்கம்!
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
-விடுதலை,20,21.8.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக