முகப்புக் கட்டுரை : வேலியா தாலி?
ஒரு தனியார் தொலைக்காட்சியில் தாலி பற்றிய ஒரு விவாதம் நடந்தது. அது ஒளிபரப்பப் படவும் இருந்தது. அந்தக் காலகட் டத்தில் அதனை ஒளிபரப்பக் கூடாது.
இந்து மதத்தை அவமதிக்கிறது. தாலி இந்துப் பெண்களின் புனிதச் சின்னம் என்று இந்துமத அடிப்படைவாதிகள் எகிறிக் குதித்தனர். அந்தத் தொலைக்காட்சி நிறுவனத்தை மிரட்டினர். தொலைப்பேசிகள் மூலம் ஆபாசச் சேற்றை அள்ளி வீசினர்.
அடுத்த கட்டமாக அந்த நிறுவனத்தின் உள்ளே புகுந்து பணியாளர்களைத் தாக்கினர். பெண் ஒருவரும் தாக்கப்பட்டார். ஒளிப்பதிவுக் கருவி உடைக்கப்பட்டது. ஒளிப்பதிவாளர் தாக்கப்பட்டார். அதற்கு மேலும் ஒருபடி மேலே சென்று, டிபன் பாக்ஸ் குண்டுகளை அந்த நிறுவனத்துக்குள் வீசி அச்சுறுத்தினர்.
இந்த இடத்தில் திராவிடர் கழகம் நுழையாமல் என்ன செய்யும்? பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிர்க் கேள்வி என்ற நிலை உடைப்பெடுத்துத் தன் கம்பீரமான வருகையை திராவிடர் கழகம் பதிவு செய்தது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள் போர்க்குரல் கொடுத்தார் கொடுக்காமல் இருந்தால்தானே ஆச்சரியம். புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளில் (14.4.2015)
சென்னை பெரியார் திடலில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை அறிவித்தார். இது ஒன்றும் கழகத்திற்குப் புதிதும் அல்ல. திருமணத்தின் போதே தாலியின்றி திருமணம் செய்து கொள்வதும், தாலி கட்டித் திருமணம் செய்தோராயிருந்தால், திருமணத்திற்குப் பிறகு தாலி என்பதன் உண்மைப் பொருளறிந்தபின் கழக நிகழ்ச்சிகளில் வாழ்க்கை இணையர்கள் இருவரின் ஒப்புதலுடன் தாலி அகற்றல் நடைபெறுவதும் சர்வசாதாரணம்! மத்தியில் மதவெறி ஆட்சி மகுடம் தரித்தது என்றவுடன் இந்த அடிப்படைவாதிகள் கொஞ்சம் ஆட்டம் காட்டுகின்றனர்.
தாலியை அகற்றிக்கொள்ளும் நிகழ்வைத் தாலி அறுக்கும் போராட்டம் என்று பிரச்சாரம் செய்ய ஆரம் பித்தார்கள். திராவிடர் கழகத்தின் தலைமை நிலையம் உண்மையை வெளிப்படுத்திய நிலையில், இப்பொழுதுதான் தாலி அகற்றும் போராட்டம் என்று எழுதிட, சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
அதுகூடப் போராட்டம் அல்ல _ ஒரு சாதாரண நிகழ்வுதான். தாலி நமது பாரம்பரிய கலாச்சாரச் சின்னம், புனிதச் சின்னம் என்று சொல்லிப் பார்த்தனர். பரம்பரைச் சின்னம் என்பதற்கு ஆதாரங்கள் காட்டுங்கள் பார்ப்போம் என்று சவால் விட்டோம். சங்க இலக்கியத்தில் உண்டா என்று வினா எழுப்பினோம். அகநானூற்றில் இடம் பெறும் 86 மற்றும் 136ஆம் பாடலில் திருமணம் குறித்துக் கூறப்பட்டுள்ளதே _ அதில் தாலி குறிப்பிடப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு மூச்சுப் பேச்சு இல்லை.
தமிழர் திருமணத் தில் தாலி உண்டா? என்று டாக்டர் இராச மாணிக்கனார் தனி நூலே எழுதி இருக்கிறாரே அதற்கு இதுவரை மறுப்பு எழுதிய கொம்பர் யார் என்று கேட்டோம் கேள்வி செங்குத்தாக நிற்கிறதே தவிர, பதில் சொல்லுவாரைத்தான் காணோம். அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச் சாரியார் வேதத்தில்கூட தாலி என்பதற்கு ஆதாரம் கிடையாது என்று கடைந்தெடுத்துச் சொன்ன பிறகு வாயடைத்துப் போன நிலைதான்!
பதில் சொல்ல வக்கு இல்லை என்றாலும் சந்து முனைகளில் சிந்துகளைப் பாடிக்கொண்டு திரிகிறார்கள். பெரியார் திடலை முற்றுகை யிடுவோம் என்றெல்லாம் கருத்தில் சரக்கு இல்லை என்ற நிலையில் கைவரிசையைக் காட்டலாம் என்று நினைக்கிறார்கள். சுயமரியாதைத் திருமணச் சட்டத்தில் தாலி கட்டாயம் இல்லை என்ற விவரமாவது இவர்களுக்குத் தெரியுமா? எதையும் அறியாத தனத்தால் ஆவேசச் கூச்சல் போடுகிறார்கள்.
கடைசியாக எங்கே வந்து நிற்கிறார்கள்? தாலி பெண்களுக்கு வேலி என்கிறார்கள்.
அதாவது உண்மையா? நாட்டில் நடக்கும் பாலியல் வன்கொடுமைக்கும் இந்தத் தாலிக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டா? சிறுமிகள் முதல் முதிய பெண்கள் வரை விதிவிலக்கு இல்லாமல் மனித மிருகங்கள் வேட்டையாடுகின்றனவே _ அவை யெல்லாம் இவர்களின் கருத்துக்குப் புலப்படவே புலப்படாதா? பெற்ற மகள்களையே பெண்டாண்டான் என்று கேடுகெட்ட வெட்கத்தில் தலைகுனிய வேண்டிய செயல்களுக்கு என்ன சமாதானம்?
மும்பையில் உள்ள பெண்கள் உரிமைகளுக்கான வழக்குரைஞர் ஃபிளாவியா ஆக்னஸ் கூறும்போது, குடும்ப உறுப்பினர்களின் பொருந்தாத பாலியல் வன்முறைகள் ஏராளமாகப் பதிவாகியுள்ளன. ஆனால் புகார்கள் அவர்களின் குடும்பத் தார்களின் அழுத்தங்களால் திரும்பப் பெறப்படுகின்றன.
மும்பையில் 18 வயதுப் பெண் ஒருவர் தமக்கை மற்றும் தன்னிடமும் பாலியல் ரீதியாகத் தவறாக நடந்துகொண்ட தன் தந்தையின் மீது புகார் தெரிவித்திருந்தார். ஆனால் அந்தத் தந்தை தண்டிக்கப்படவில்லை.
அவர்மீது போச்சோ (Pocso Act) சட்டத்தின்படி அந்தப் பாலியல் உறவின்போது அப்பெண் மைனர் அல்ல என்று கூறப்பட்டது. தாலிக்கும் பாலுறவு வன்முறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? அதுபற்றிய புள்ளி விவரங்கள் உண்டா? நாள்தோறும் ஒரு செய்தி மட்டும் தவறாமல் வெளிவருகிறது. அதுதான் பெண்களின் சங்கிலிகளை அறுத்துச் செல்லும் செய்தி.
தாலி என்பதால் திருடர்கள் தவிர்த்து விடுகிறார்களா? இதில் இன்னொரு முக்கியக் கருத்தும் உண்டு. மங்களகரம் என்று அவர்கள் சொல்லிக் கொண்டு மஞ்சள் கயிற்றில் இப்பொழுது தாலி அணிபவர்கள் எத்தனை பேர்? தங்கச் சங்கிலியில் அல்லவா தாலி தொங்குகிறது? அந்த மங்களகரம் _ புனிதம் எல்லாம் பறந்துபோனது குறித்து யாராவது புலம்புகிறார்களா?
தாலி _ பெண்களுக்குத் திருமணம் ஆனதற் கான அடையாளம் என்றால் அதே கேள்வி ஆண்கள் பக்கம் திரும்பாதா? அதிகம் வெளியில் சுற்றுபவன், பெண்களை விட ஆண்களாகத்தானே இருக்கிறார்கள். அவர்களுக்குத் திருமணம் ஆனதற்கான அடை யாளம் இல்லையே ஏன் என்ற கேள்விக்கு எந்த இந்து முன்னணிகள் பதில் சொல்லி யுள்ளன? உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் தாலி அணிவிப்பது என்பது _ கணவன் மரணம் அடைந்தால் அந்தப் பெண்களை அவமானப் படுத்தும் சடங்குக்காகத் தானே இந்தத் தாலி அணிவிப்பு.
முதலில் அணிவிப்பு _ அடுத்து அறுப்பு. கணவன் இறந்த துயரம் ஒரு பக்கம் என்றால் அதனைவிடப் பெரும் கொடுமை _ அவமானம் அந்தப் பெண்ணை அமங்கலி, முண்டச்சி என்ற முத்திரை குத்தி மூலையில் ஒதுக்குவ தற்குத்தானே இந்தத் தாலி சமாச்சாரம்?
ஆனால் சுயமரியாதைத் திருமணம் என்ன சொல்லுகிறது? ஆண்_பெண் என்பவர்கள் இணையர்கள் _- வாழ்வின் இன்ப துன்பங்களில், ஏற்றத் தாழ்வுகளில் சமபங்கு ஏற்கும் உற்ற நண்பர்கள் என்ற உறுதிமொழி ஏற்று வாழ்க்கைப் பயணத்தைத் துவக்குபவர்கள். இதில் இழிவு இல்லை _ ஆணின் உரிமை பெண் என்ற நிலைப்பாடு இல்லை. தாலி என்பது பெண் என்பவள் ஆணின் அடிமை _ சொத்து என்பதற்கான தளை _ அடையாளம் என்பதுதான்.
இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளப் பக்குவம் இல்லாதவர்கள் விட்டேனா பார்! என்று பேசுவது அறிவுடைமைதானா? ஒன்றை அவர்கள் நினைத்துப் பார்க்க வேண்டாமா?
பெண்களுக்கு கல்வி உரிமை, வேலைவாய்ப் புரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவைப் பெண்களுக்கு மறுமண உரிமை, பால்ய திருமண தடுப்பு என்ற உரிமை வரிசை நீண்டதற்கு, சட்ட வடிவம் பெற்றதற்குக் குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்? தாலி பெண்களுக்கான அடிமைச் சின்னம் என்று கூறுவது இதே இயக்கத்தவர்கள் தானே? தந்தை பெரியார் அவர்கள்தானே? _ மறுக்க முடியுமா?
அதே நேரத்தில் பெண்களுக்காக வக்காலத்து வாங்குவதாக நினைத்துக் கொண்டு வரிந்து கட்டுவோர் எந்தப் பக்கத்தில் நிற்கக் கூடிய வர்கள்? படுக்கை, ஆசனம், அலங்காரம், காமம், கோபம், பொய், துரோகச் சிந்தை இவற்றினை மாதர் பொருட்டே மனுவானவர் கற்பித்தார். (மனுதர்மம் அத்தியாயம் 9, சுலோகம் 17) பெண்களையும், பிராமணரல்லாதாரையும் கொல்லுதல் பாதகமாகாது. (மனுதர்மம் அத்தியாயம் 11 சுலோகம் 66) பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனியிலிருந்து பிறந்தவர்கள் (கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)
இப்படிச் சொல்லுகின்ற இந்துத்துவா பக்கம் நிற்கிறவர்களா பெண்களுக்கான பெருமையை உயர்த்திப் பிடிப்பவர்கள்?
பெண்கள் மீது அக்கறை கொண்டவர்கள்?
பார்ப்பனரை அழைத்து விவாஹ சுப முகூர்த்தம் நடத்துகிறார்களே அந்தக் கல்யாணத்தில் பார்ப்பானர்கள் சொல்லும் மந்திரம் என்ன? ஸோம ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர த்ருத்யோ அக்நிஷ்டே பதி துரியஸ்தே மனுஷ்ய ஜா கல்யாணத்தில் மணமகளைப் பார்த்து புரோகிதப் பார்ப்பான் சொல்லும் மந்திரம் இது. முதலில் சோமன் என்ற கடவுள் கணவனாக இருந்தான், பிறகு கந்தர்வனுக்கு மனைவியாக இருந்தாள், இந்தப் பெண்ணின் மூன்றாவது கணவன் அக்னி, நான்காவதுதான் மனித ஜாதியாகப் பிறந்த இந்த மாப்பிள்ளை.
இப்படி பெண்களைத் திரும ணத்தின்போதே நான்கு பேர் களுக்கு மனைவி என்று மந்திரம் சொல்லுவதுதான் பெண்களுக்கான பெருமையா?
இப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்தாதே என்று போர்க் குரல் கொடுத்து, ஆண்களும் பெண்களும் சமம் _ சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு என்ற தத்துவத்தின் அடிப்படையில் சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி, இன்று சட் டப்படியாகவும் ஆக்கிய நாங் கள்தானே பெண்களின் பெரு மையைப் போற்றும் பெருமக்கள் _ மறுக்க முடியுமா? பெண்களுக்குத் திருமணம் உபநயனம், கணவனுக்குக் கடமை யாற்றுவது குருகுலவாசம்.
இல்லறம் காத்தலே வேள்வி என்பதை இன்றைய படித்த பெண்ணுலகம் ஏற்றுக்கொள் ளுமா?
Only when fire will cool, the moon burn, or the ocean fill with tasty water will a woman pure.
ஒரு வடமொழி சுலோகத்தை இவ்வாறு இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏடு (24.12.1990) எடுத்துக்காட்டியது. இதன் பொருள் எப்போது தீ தென்றலாக மாறுகிறதோ, நிலா நெருப்பாக மாறுகிறதோ, அல் லது கடல் சுவை நீரால் நிரப் பப்படுகிறதோ அப்போதுதான் ஒரு பெண்ணும் தூய்மையான வளாக இருப்பாள் என்று கல்லூரி வாசல்களுக்குச் சென்று பெண்களிடம் சொல்லிப் பார்க்கட்டுமே _ என்ன பரிசு கிடைக்கும் _ தெரிந்ததுதான்.
விதவைப் பெண்கள் தரிசு நிலத்திற்குச் சமமானவர்களே - ஒன்றுக்கும் உதவாதவர்கள். - ஜெயேந்திர சரஸ்வதி, (1997) (தினமணி - தீபாவளி மலர்)
வேலைக்குச் செல்லும் பெண்களில் பத்து சதவீதம்பேர்தான் ஒழுக்கமாக இருக்கிறார்கள். - காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. இவற்றை எதிர்த்து காஞ்சிக்கே சென்று போராட்டம் நடத்தியவர்கள் (9.3.1998) யார்? திராவிடர் கழக மகளிர் அணியினர்தானே?
பெண்களின் புனித தாலியைக் கொச்சைப் படுத்துவதா என்று கூக்குரலிடும் கூட்டம் அன்று விதவைப் பெண்களைத் தரிசு நிலத்திற்கு ஒப்பிட்டுப் பேசிய சங்கராச்சாரியாரை எதிர்த்து ஒரே ஒரு சொல் கூறியதுண்டா?
தாங்களாகவே உணர்ந்து தமது துணைவனின் கருத்து ஒற்றுமையோடு அடிமைத் தளையாம் தாலியை அகற்றிக் கொள்ளுதல் குற்றமா? சமதர்மப்படிதான் குற்றமா?
சட்டப்படிதான் குற்றமா? மனித உரிமைப்படிதான் குற்றமா? கணவன் அடித்தாலும் உதைத்தாலும் _ இந்த ஜான் கயிறுக்காகப் பார்க்கிறேன் என்று அந்தத் தாலிச் செயினைக் கண்களில் ஒற்றிக் கொள்ளும் அந்தக் கொடுமை நீடிக்க வேண் டுமா?
அதற்காகத்தான் தாலியை அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை எதிர்க்கிறார்களா? வெறுக்கிறார்களா? கடைசியாக ஒரே ஒரு கேள்வி. தாலி கட்டித் திருமணம் செய்து கொண்டவர்கள் விவா கரத்துக் கோரி குடும்ப நீதிமன்றத்தின் வாயிலில் நிற்பது ஏன்? அந்தப் புனிதத் தாலி எந்த வகை யில் அவர்களுக்கு உதவியாகத்தான் இருக்கிறது? எதிர்ப்பாளர்களின் வரிசையில் ஆண்களைப் பார்க்க முடிகிறதே தவிர, பாதிப்புக்குச் கார ணமான பெண்களை அதிகம் காண முடியவில்டிலயே _ ஏன்? ஏன்? ஆத்திரப்பட்டால் அறிவு வேலை செய்யாது. அமைதியாக ஆழமாகச் சிந்தியுங்கள் _ 14ஆம் தேதி நிகழ்ச்சியின் அருமை பெருமை நன்றாகவே புரியும்.
------------------
இந்து மதத்தில் பெண்கள் நிலை
பெண்களின் அந்தஸ்து பற்றி
1. நாரதர் (ஸ்மிருதிக்குக் கர்த்தாவான ரிஷி) கூறுகிறார்: எவனொருவன் வாங்கின கடனையோ, பொருளையோ திரும்பக் கொடுக்கவில்லையோ அவன், கடன் கொடுத்தவனுடைய வீட்டில் ஒரு அடிமையாகவாவது ஒரு வேலைக்காரனாகவாவது ஒரு ஸ்திரியாகவாவது, ஒரு நாலுகால் மிருகமாகவாவது பிறப்பான்.
2. மனு (இந்துச் சட்டம் செய்தவராய், வேத முறைகளை முதன்முதலில் வெளியிட்டவராய், இன்றைக்கும் மக்கள் யாவரும் பின்பற்ற வேண்டிய சட்டதிட்டங்களைச் செய்தவராய் உள்ளவர்) கூறுவது: ஒரு மனைவி, ஒரு மகன், ஒரு அடிமை ஆகியோர் சொத்துக்களை வைத்திருக்க யோக்கியதை அற்றவர்களாவார்கள். அவர்கள் என்ன சம்பாதித்தாலும் அதெல்லாம் அவர்கள் எவர்களுக்கு உரிமையுடையவர்களோ அவர்களைச் சேரும்.
3. போதாயனர் கூறுவது _: எந்த மனிதனும் பெண்களுக்கு இரவலோ, கடனோ கொடுக்கக் கூடாது; அடிமைகட்கும், குழந்தைகட்கும்கூட ஒன்றும் இரவல் தரக்கூடாது.
4. மத விதிகள் கூறும் நூல்களில் ஒன்றாகிய ராமாயணம் உரைப்பது: தப்பட்டைகள், பயிரிடுபவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள், மிருகங்கள், பெண்கள் ஆகிய இவர்கள் எல்லாம் கடுமையான முறையினால் ஒடுக்கி வைக்கப்பட வேண்டும். _ (சுந்தர காண்டம் 5)
5. மனு கூறுகிறார்: பகலும் இரவும் மாதர்கள் அவர்களுடைய சொந்தக் காரர்களை அண்டியே இருக்கும்படியாகச் செய்யப்பட வேண்டும். பெண்களைக் குழந்தைப் பருவத்தில் தகப்பன்மாரும், வாலிப காலத்தில் புருஷன்மாரும், வயது முதிர்ந்த காலத்தில் பிள்ளைகளும் காப்பாற்றுகிறார்கள் _ ஒரு பெண் ஆனவள் ஒருபோதும் சுயேச்சையாயிருக்கத் தகுதியுடையவளல்லள். அவளுடைய வாழ்வு பூராவும் நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ, அலட்சியக் காரர்களாகவோ இருக்கும்படியான மற்றவர்களுடைய இரக்கத்தினால் வாழ்பவளாகவே இருக்க வேண்டும். ஏனெனில் பெண்கள் அவ்வளவு அற்ப ஜீவர்களாகவே இருக்கிறார்கள்.
6. உத்தமஸ்திரீக்கு மனுவுரைக்கும் யோக்கியதாம்சமென்னவெனில், அவளுடைய தகப்பன் அவளை எவனுக்குக் கொடுத்திருக்கின்றானோ அவன் எப்படிப்பட்டவனாயிருந்தாலும் அவனையே அவள் மரியாதை செய்யட்டும்... ஒரு புருஷன் துர்நடத்தையுடையவனாயினும், இன்னொரு மாதினிடம் அன்பு கொண்டவனாயினும், நல்ல தன்மைகளில்லாதவனாயினும், அவனைத் தெய்வம்போலவே கருதுகிறவள்தான் புண்ணிய ஸ்திரீயாவாள். (அத். 5, 154)
7. மனு, ஒரு மாதானவள், எவ்வளவு நல்லவளாகவும், உத்தமமானவளாகவும் இருப்பினும், அவள் தன் கணவனுடைய குணங்களையுடையவளா கத்தான் இருப்பாள். மேலும் அவர் சொல்லுவது: ஒரு மங்கையானவள் தான் மணம் செய்துகொண்ட ஒரு புருஷன் என்ன குணங்களையுடை யவனாயிருக்கின்றானோ அதே குணங்களையே அவளும் அடை வாள் _ எதுபோலவெனில் கடலில் போய்க் கலக்கிற ஆற்றைப்போல்.
(அத்தியாயம் 9, 22)
(அத்தியாயம் 9, 22)
8. போதாயனர் உரைப்பது: மாதர்கள் அறிவே இல்லாதவர்கள்: அவர்கள் சொத்துரிமை கொள்ளும் யோக்கியதையற்றவர்கள்.
திராவிடர் கழகத்தை எதிர்ப்போரே - இவற்றை ஏற்றுக் கொள்கிறீர்களா?
-----------
தாலி பற்றி அண்ணல் அம்பேத்கர் என்ன
சொல்லுகிறார்?
அம்பேத்கர் பிறந்த நாளில் தாலி அகற்றிக் கொள்ளும் நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா என்று சிலர் கேட்பது புரிகிறது. ஒரு புரட்சியாளரின் பிறந்த நாளைப் புரட்சிகரமாகக் கொண்டாடுவதுதான் _ அந்தப் புரட்சியாளருக்குக் கொள்கைரீதியாக நாம் காட்டும் உண்மையான மரியாதையாக இருக்க முடியும்.
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :
இதோ பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பேசுகிறார் :
மலபார் மற்றும் அஞ்செங்ரோ கெஜட் டீரின் ஆசிரியரான திரு.சி.ஏ.இன்னஸ் சென்னை அரசாங்கத்தின் அனுமதியோடு பின்வருமாறு கூறுகிறார்: மருமக்கள்தாயம் என்னும் முறையைப் பின்பற்றும் எல்லா வகுப்பினரிடையேயும் அதேபோன்று மக்கள்தாயத்தைக் கடைப்பிடிப்போரில் பலரிடையேயும் தாலிகட்டும் திருமணம் என்னும் மற்றொரு ஏற்பாடு நடை முறையில் இருந்து வருகிறது. மலையாளி களின் திருமணப் பழக்க வழக்கங்க ளிலேயே இது நூதனமானது, தனித்தன்மை வாய்ந்தது என வருணிக்கப்படுகிறது. இதன் படி, ஒரு யுவதி பூப்புப் பருவம் எய்துவதற்கு முன்னர் அவள் கழுத்தில் தாலி (தங்கத்தாலோ அல்லது வேறு ஏதேனும் உலோகத்தாலோ செய்யப்பட்ட பதக்கம் போன்ற ஒரு சிறு ஆபரணம் நூல்கயிற்றில் கட்டப்படுவது) கட்டப்படுகிறது. அதே ஜாதியை அல்லது உயர் ஜாதியைச் சேர்ந்த ஒருவனால் இவ்வாறு தாலி கட்டப்படு கிறது.
இவ்வாறு செய்த பிறகுதான் அந்த இளம் பெண் சம்பந்தம் செய்துகொள்ள முடியும். தாலி கட்டுபவனுக்கு அல்லது மணவாளனுக்கு (மணமகன்) அந்தப் பெண் ணுடன் கூடி வாழும் உரிமை அளிப்பதற் காகவே இந்தச் சடங்கு செய்யப்படுவதாக பொதுவாகக் கருதப்படுகிறது.
கீழ்ஜாதிப் பெண்களை முதலில் அனுபவிப்பதற்கு பூதேவர்களும் (அதாவது பிராமணர்களும்), சத்திரியர்களும் உரிமை கொண்டாடி வந்ததிலிருந்தும் இந்த வழக்கம் தோன்றியிருக்கக் கூடும். (பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு, தொகுதி 16, பக்கம் 333.)
-உண்மை இதழ்,16-30.4.15
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக