பக்கங்கள்

திங்கள், 30 ஜூலை, 2018

4,064 இடங்களில் 69 இடங்கள் மட்டுமே அளிக்கப்படும் அவலம்

சமூகநீதிக்குச் சவக்குழி


மருத்துவ மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் நிலை?




நாக்பூர், ஜூலை 28 நாடுமுழுவதும் உள்ள அனைத்து (193 கல்லூரிகள்) அரசு மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் அனைத்திந்திய 15 விழுக்காடு ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட வேண்டிய 27 விழுக்காடு அளிக்கப்படாமல், வெறும் 1.7விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்ட அதிர்ச்சிகரத் தகவல் தி டைம்ஸ் ஆப் இந்தியா (27.7.2018) ஏட்டில்  வெளியாகியுள்ளது.

2 வழக்குகள்


மும்பை உயர்நீதிமன்றம் மராட்டிய மாநிலத்தில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவக்கல்விக்கான மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு அளிப்பதற்கு ஜூலை 16 வரை நிறுத்தி உத்தரவு பிறப்பித்தது.  இஎஸ்அய்சியில் இளநிலை மருத்துவம், இளநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையையும் ஜூலை20வரை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

அகில பாரதிய பிற்படுத்தப்பட்டவர்கள் மகாசங்கம் சார்பில் அதன் வழக்குரைஞர் புருஷோத்தம் பாடீல் தொடுத்த வழக்கில் இளநிலை மருத்துவம், இளநிலை பல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடங்களை அளிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்திருந்தார்.

மருத்துவக் கல்வியில் அனுமதி மறுக்கப்பட்ட மாணவி சமிக்ஷா கெய்க்வாட் இஎஸ்அய்சி ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவக் கல்வியில் சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என்று வழக்குரைஞர்கள் துஷார் மண்டேல்கர், ரோகன் மால்வியா ஆகியோர் மூலமாக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இரண்டு வழக்குகளையும் விசாரணை செய்த நீதிபதிகள் பூஷண் தர்மாதிகாரி, சாகா ஹக் ஆகியோரைக்கொண்ட அமர்வு இரண்டு வழக்குகளையும் திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டது.

மேலும், மத்திய அரசு, மராட்டிய மாநில அரசு மற்றும் டில்லி பொது சுகாதார சேவை இயக்குநர் ஆகியோர் பதில் அளிப்பதற்கான கடைசி வாய்ப்பு அளிப்பதற்காக திங்கள்கிழமை வரை வழக்குகளை ஒத்திவைப்பதாக நீதிமன்ற அமர்வின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இஎஸ்அய்சி மருத்துவக் கல்லூரியில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கான ஒதுக்கீட்டில் வெற்றிடம்

மாணவி சமிக்ஷா கெய்க்வாட் தொடர்ந்த வழக்கில் இ.எஸ்.அய்.சி. (இ.எஸ்.அய். மருத்துவ கல்லூரி)  சார்பில் நீதிமன்றத்தில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

சேர்க்கை முறையை எந்த வகையில் தளர்த்தினாலும்,  தகுதியானவர்களாக உள்ள அனைவருக்கும் பாதிப்பு ஏற்பட்டு விடும். சட்டப்படி ஒதுக்கீட்டில் உறுதிப்படுத்தப்பட்ட குறிப்பிட்ட நபருக்கு சேர்க்கை அனுமதி அளிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை.  அதைவிட, இஎஸ்அய்சி தகுதிநிலைகளைப் பொறுத்தே மாணவர் சேர்க்கையை நடத்தி வருகிறது. 2017-2018 ஆம் ஆண்டுக்குரிய தகுதி நிலையை அம் மாணவி பெறத் தவறிவிட்டார். கடந்த ஆண்டிலேயே இதே நீதிமன்ற அமர்வால் அம்மாணவியின் கோரிக்கை நிராகரிக் கப்பட்டு விட்டது. 2017-2018 ஆம் ஆண்டில் மாணவர் சேர்க்கையில் இஎஸ் அய்சியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட சேர்க்கை இடங்களை வெற்றிடமாக விடுவதால் இழப்பு ஏற் படுவதாக அம்மாணவி குற்றச்சாற்று கூறியதையும் நீதிமன்ற அமர்வு கடந்த ஆண்டில் ஏற்கவில்லை என்று கூறியுள்ளது.

அரசு மருத்துக் கல்லூரிகள் 193


நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகள் 193. அனைத்திந்திய அளவிலான இடஒதுக்கீட்டுக்குரிய ஒதுக்கீடு 15 விழுக்காடு 4,064 இடங்கள். பொதுப்போட்டிக்குரிய இடங்கள் 3,083 (76 விழுக்காடு),  பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 69 இடங்கள் (1.7 விழுக்காடு), தாழ்த்தப்பட்டவர்களுக்கு 609 இடங்கள் (1.5 விழுக்காடு), பழங்குடியினத்தவர்களுக்கு 303 இடங்கள் (7.5 விழுக்காடு) அளிக்கப்பட்டுள்ளது.

சட்டப்படி மத்திய அரசால் அளிக்கப்பட வேண்டிய இடஒதுக்கீட்டுக்கொள்கையின்படி, இதர பிற்படுத்தப்பட்டவர் களுக்கு 27 விழுக்காடு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு 15 விழுக் காடு, பழங்குடி வகுப்பினருக்கு 7.5 விழுக்காடு, பொதுப் போட்டியாளர்களுக்கு 50 விழுக்காடு என்கிற முறையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெற்றிட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்திந்திய  ஒதுக் கீடான 15 விழுக்காட்டில்  பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய 27விழுக்காட்டுக்கு பதிலாக வெறும் 1.7 விழுக்காடு மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது.

அகில பாரதிய பிற்படுத்தப்பட்டவர்கள் மகாசங்கத்தின் தலைவர் பாபன் தாய்டே மற்றும் ராதிகா ராட் ஆகியோர் முத லாமாண்டு மருத்துவ மாணவர் சேர்க்கையில் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27 விழுக்காடு ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மத்திய அரசு ஒதுக்கீடு 15 விழுக்காடு போக, சில மாநிலங்களில் மாநில அரசுகளால் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் ஒதுக்கீட்டில் 4,064 இடங்கள் (15 விழுக்காடு) அளிக்கப்பட வேண்டிய நிலையில், வெறும் 69 இடங்களே (1.7 விழுக்காடு) அளிக்கப்பட்டுள்ளது.

மராட்டியத்தில் மத்திய ஒதுக்கீட்டில் ஓரிடம்கூட பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இல்லை


சட்டப்படி  இடஒதுக்கீட்டுக்கொள்கையின்படி அளிக்கப்பட வேண்டிய 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மராட்டிய மாநிலத்தில்  அளிக்கப்படவில்லை. மத்திய ஒதுக்கீட்டில் 464 இடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒரு இடம்கூட அளிக் கப்படவில்லை. தமிழ்நாடு, கருநாடகா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வந்தபோதிலும், திருப்திகரமான எண்ணிக்கையில் இல்லாத நிலை உள்ளது.

அனைத்திந்திய ஒதுக்கீட்டின்படி, அளிக்கப்படுகின்ற 15 விழுக்காடு இடங்களில் 27 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதே வழக்கு தொடர்ந்துள்ளவர்களின் கோரிக்கையாக உள்ளது.

- விடுதலை நாளேடு 28. 7 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக