பக்கங்கள்

ஞாயிறு, 15 ஜூலை, 2018

எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு


புதுடில்லி, ஜூலை 15 அரசுப் பணி பதவி உயர்வில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்.சி., எஸ்.டி.,) இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்து விட்டது.
நாட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில்(ஓபிசி) சமூகம் - பொருளாதார ரீதியில் முன்னேறியவர்களுக்கு (கிரீமி லேயர்) கல்வி மற்றும் வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு அளிக்கப்படுவதில்லை.
இதேபோல், எஸ்சி, எஸ்டி பிரிவிலும் கிரீமிலேயர் முறையைக் கொண்டு வர வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பாக, நீதிபதி எம். நாகராஜ் கடந்த 2006-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தார். அவர், எஸ்சி, எஸ்டி பிரிவினரை கிரீமிலேயர் வரம்புக்குள் கொண்டுவர முடியாது என்று தனது தீர்ப்பில் கூறியிருந்தார். அந்த தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், எஸ்.சி., எஸ்டி வகுப்பினருக்கு இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்குபோது, அவர்களின் பொரு ளாதார நிலையையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
அந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகி யோர் அடங்கிய அமர்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால், பதவி உயர்வு அளிப்பது தொடர்பாக பல்வேறு நீதிமன்ற உத்தரவுகளால், ரயில்வே துறையில் லட்சக் கணக்கானோர் பாதிக்கப் பட்டுள்ளனர்; எனவே, இந்த விவகாரத்தை விசாரிப்பதற்கு 7 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு அமைக்கப்பட வேண்டும்‘’ என்று வாதிட்டார்.
அப்போது, “இந்த விவகாரம் தொடர் பாக நீதிபதி எம்.நாகராஜ் பிறப்பித்த உத்த ரவுக்கு தடை விதிக்க முடியாது. ஏற்கெனவே ஒரு அரசியல் சாசன அமர்வு பல்வேறு வழக்குகளை விசாரித்து வருவதால், இந்த மனுவை வரும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில்தான் விசாரிக்க முடியும்‘’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
முன்னதாக, எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த ஊழியர்களுக்கு இடஒதுக்கீட்டின் அடிப்படையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்தும், ஆதரித்தும் வெவ்வேறு நீதிமன்றங்களில் பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அவற்றை விசாரித்த மும்பை - பஞ்சாப், அரியாணா உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை அளித்தன. ஒருபுறம் மத்திய அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறைக்கு ஆதரவாகவும், மறுபுறம் எதிராகவும் உத்தரவுகள் வெளியாகின.
இதற்கு நடுவே டில்லி உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பான மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதைப் பரிசீலித்த நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக் கீடு அளிக்கும் முறையை ரத்து செய்தது.
இத்தகைய முரண்பட்ட தீர்ப்புகளால் அந்த வகுப்பினருக்கு பதவி உயர்வு அளிப்பதில் மத்திய அரசுக்கு சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், டில்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த மாதம் 5-ஆம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு பதவி உயர்வு வழங்குவதில், சட்ட விதி களுக்குட்பட்டு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று தீர்ப்பளித்தது.
- விடுதலை நாளேடு, 15.07.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக