ராஜ்கோட், ஜூலை 26 தலித் பெண்ணை கிணற் றிலிருந்து தண்ணீர் எடுக்க விடாமல் தடுத்த 6 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து ராஜ்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் கொடிநார் தாலுகாவுக்கு உட்பட்ட சுகாலா என்ற கிராமத்தில், கடந்த 2010 ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்ட பெண் ஒருவர், பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுப்பதை, அங்குள்ள ஜாதி ஆதிக்கவெறியர்கள் 6 பேர் தடுத்தனர். அத்துடன் அந்தப் பெண்ணை 6 பேரும் அடித்து துன்புறுத்தினர்.
இதுதொடர்பான வழக்கு ராஜ்கோட் நீதிமன்றத்தில் கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதில், தலித் பெண்ணைத் தாக்கிய 6 பேரில் ஒரு பெண்ணுக்கு இரண்டரை ஆண்டுகள் சிறைதண்டனையும், மற்ற 5 பேருக்கும் ஓராண்டு சிறைதண்டனையும் வழங்கப் பட்டுள்ளது. மேலும் தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. முதன்முறை குற்றம் இழைப்பவர்களுக்கு நீதிபதி மன்னிப்பு வழங்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால், எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தீர்ப்பளித்துள்ள நீதிபதி எஸ்.எல். தாகூர், முதன்முறை குற்றவாளிகள் என்ற சலுகையை இவர்களுக்கு அளிக்க முடியாது என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
- விடுதலை நாளேடு, 26.7.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக