பக்கங்கள்

ஞாயிறு, 9 அக்டோபர், 2016

கோவில் பிரவேச மசோதா-30.10.1932, குடிஅரசிலிருந்து...



அடுத்து வரப்போகும் சென்னை சட்டசபைக் கூட்டத்தில், மாஜி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களால் சட்டமாக்கும் பொருட்டு ஆலயப் பிரவேச மசோதா ஒன்று கொண்டு வரப்போவதாக அறிகின்றோம்.
டாக்டர் சுப்பராயன் அவர்கள், சமூக சீர்திருத்த விஷ யத்தில் உண்மையான பற்றும் ஆர்வமும், செய்கையளவில் நடத்திக் காட்டும் குணமும் உடையவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆகவே இப்பொழுது அவர் கொண்டு வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதாவைக் கொண்டு, அவர் பெறும் புகழுக்காகவோ, ஏமாற்றலுக்காகவோ இக்காரியத்தைச்செய்ய முன்வந்திருக்கிறார் என்று யாரும் கூற முடியாது.
அவர் எல்லாச் சமூகத்தின்பாலும் கொண்டிருக்கும் உண்மையான சமத்துவ எண்ணத்தை அடிப்படையாகக் கொண்டே தாழ்த்தப்பட்டவர்களுக்கும் கோயில்களில் சம வுரிமை வழங்க வேண்டும் என்னும் அந்தரங்க எண்ணத் துடனேயே இம்மசோதாவைக் கொண்டு வரப்போகிறார் என்று அய்யமறக் கூறுவோம்.
இப்பொழுது வரப்போகும் ஆலயப் பிரவேச மசோதா சட்டமாகுமானால், அதன்மூலம் எல்லா வகுப்பைச் சேர்ந்த இந்துக்களும், இந்து மதக் கோயில்களில் தடையில்லாமல் செல்லுவதற்கு உரிமையுண்டாகுமென்பது நிச்சயம். ஆதலால், இத்தகைய மசோதா ஒன்று சென்னைச் சட்டசபையில் வரப்போகிறது என்று தெரிந்த உடனேயே, நமது நாட்டு வைதிகர்கள் அதைக் கண்டனம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
இந்த மசோதாவைச் சட்ட சபையில் கொண்டு வர அனுமதியளிக்கக் கூடாது என்று மேன்மை தங்கிய வைசிராய், கவர்னர் முதலியவர்களுக்கு தந்திகளும், தீர்மானங்களும் அனுப்பியிருக்கிறார்கள். இன்னும் அனுப்பிக் கொண்டி ருக்கிறார்கள்.
இன்னும் பல பொது கூட்டங்கள் என்னும் பெயரால் வைதிகர்கள் இம்மசோதாவைக் கண்டித்துக் கொண்டு வருகிறார்கள். தீண்டாதார்களுக்கு ஆலயப் பிரவேசம் அளிப்பது, சாஸ்திரங்களுக்கு விரோதம், மதத்திற்கு விரோதம், பழக்கவழக்கங்களுக்கு விரோதம். ஆகையால், தீண்டா தர்க்குக் கோயில் பிரவேசம் அளிக்கும்படியான சட்டஞ் செய்யக் கூடாது என்று கூச்சலிடுகின்றனர்.
இக்கூச்சலைச் சட்டசபை உறுப்பினர்களும், அரசாங் கத்தார்களும் ஒரு சிறிதும் லட்சியம் பண்ணாமல். டாக்டர் சுப்பராயன் அவர் களின் மசோதாவைச் சிறந்த திருத்தங்களுடன் சட்டமாகச் செய்ய ஆதரவளிக்க வேண்டுகிறோம்.
வெகுகாலமாக நமது நாட்டில் கோயில் பிரவேசத்திற்குத் தடை செய்து கொண்டிருந்த சமூகம் பார்ப்பன சமுகம் ஒன்றேயாகும். இன்று அச்சமூகத்திலும் பகுத்தறியும் மூளையற்ற - சாத்திரப்பித்தும், சுயநலப்பித்தும் கொண்ட வைதிகர்களே கோயில் பிரவேசத்திற்குத் தடை கூறிக் கொண்டிருக்கின்றவர்கள்.
ஆதலால். மற்ற சமூகங்களின் ஜனத் தொகையை விட, மிகக் குறைந்த ஜனத் தொகையையுடைய ஒரு சமுகத்திலுள்ள சில எண்ணிக்கையையுடைய வைதிகர்களின் கூச்சலுக்கோ, தடைக்கோ, பயந்து சென்னைச் சட்டசபையானது இம் மசோதா நிராகரிக்குமாயின் அதை விட பேடித் தன்மையான செயல் வேறொன்றும் இருக்க முடியாது என்பதை முன்னெச்சரிக்கை யாகவே கூறிவிட விரும்புகின்றோம்.
இச்சமயம், தீண்டாதார்களின் ஆலயப் பிரவேசத்திற்குப் பொதுஜனங்கள் விரோதமாக இருக்கிறார்கள் என்னும் சாக்குச் சொல்ல முடியாது. இந்தியா முழுவதும், சுதேச சமஸ் தானங்களிலும் கூட, தீண்டாதார்க்கு ஆலயப்பிரவேச உரிமையும், மற்றும் இந்துக்களுடன் சம உரிமையும் இருக்க வேண்டும் என்னும் கொள்கையை ஆதரித்து வருகிறார்கள்.
பொதுஜனங்களின் அபிப்பிராயம் அவர்கள் சமத்துவ உரிமைக்குச் சாதகமாகவே திரும்பி இருக்கிறது என்பதை நாட்டில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டு வரும் நிகழ்ச்சிகளைக் காண்போர் தெரிந்து கொள்ளலாம். ஆதலால் அரசாங்கத்தாரும், சட்டசபை உறுப்பினர்களும் இச் சந்தர்ப்பத்தைக் கை நழுவ விடாமலிருக்க வேண்டும். இச்சந்தர்ப்பத்தைக் கை நழுவ விட்டு விடுவார்களானால், அவர்கள் பொதுஜன அபிப்பிராயத்தை அலட்சியம் செய்த வர்களாகவும், பொது ஜன நம்பிக்கைக்குச் சிறிதும் தகுதி யில்லாத வர்களாகவும், ஆகிவிடுவார்களென்று எச்சரிக்கை செய்ய விரும்புகிறோம்.
30.10.1932, குடிஅரசிலிருந்து...
-விடுதலை,2.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக