2.6.1953 தினமணியில் வெளியான செய்தி.
புது ஆரம்பக் கல்வித் திட்டம்பற்றி
ராஜாஜி விளக்கம்
பாதி நேரம் வகுப்பு; பாதி நேரம் பெற்றோர் தொழிலில் பயிற்சி
சென்னை, ஜூன் 2- ‘‘தற்சமயம் அமலில் உள்ள படோடோபமான கல்வி முறை அந்நியர் ஆட்சியைவிட அபாயகரமானது. இந்தக் கல்வி முறை வருங்கால சந்ததிகளின் மேதையைச் சிதைத்து, அவர்களுடைய உற்சாகத்தையும், ஊக்கத்தையும் அழித்துவிடுகிறது. நாட்டிற்குக் கிடைத்த சுதந்திரமும் பிரயோஜனமற்றுப் போய்விடுகிறது’’ என்று முதல் மந்திரி ராஜாஜி நேற்று நடைபெற்ற கல்வி மகாநாட்டில், புதிய ஆரம்பக் கல்வித் திட்டத்தை விளக்கிப் பேசும்பொழுது குறிப்பிட்டார்.
கிராமப் பள்ளிகள் பகலில் அரை நேரம்தான் இருக்கவேண்டும் என்றும், பள்ளி விட்டதும், குழந்தைகள் தமது குடும்பத்தினரின் ஜீவனோபாய வேலையில் நெருங்கிய தொடர்பு வைத்துக்கொள்ளச் சந்தர்ப்பம் அளிக்கவேண்டும் என்றும், தேக உழைப்பு வேலைக்கு மதிப்புக் கொடுக்கவேண்டும் என்றும், கிராம அபிவிருத்திக்கு இந்தக் கல்வித் திட்டம் அவசியம், பள்ளிகளைச் சிறைச்சாலைகளாக்கி விடக்கூடாது என்றும் கூறினார்.
‘‘இந்தப் புது ஆரம்பக் கல்வித் திட்டத்தைச் சரியான முறையில் நாம் நடத்தி வைத்தால், கிராம வாழ்க்கையின் தன்மையே அடியோடு மாறிவிடும். பள்ளிக் கூடங்களுக்கும், கிராமங்களுக்கும் இடையே பலன் தரத்தக்க தொடர்பு இருக்கும்.’’
‘‘ஜமீந்தாரி ஒழிப்பின் மூலம் நாம் சரித்திரம் செய்திருக்கிறோம். சமஸ்தானங்களையெல்லாம் அழித்து இந்தியாவுடன் இணைத்து சரித்திரம் செய்திருக்கிறோம். மீண்டும் துண்டாடுவதிலும் ஒரு அளவுக்குச் சரித்திரம் செய்து கொண்டிருக்கிறோம். வெள்ளைக்காரர்களை அனுப்பிவிட்டுக் குடியரசு ஆட்சி ஏற்படுத்திச் சரித்திரம் செய்திருக்கிறோம். ஆனால், இதெல்லாம் உண்மையான சரித்திரம் அல்ல. இப்போது நாம் ஆரம்பிக்கப் போகும் புதுக் கல்வி முறைதான் உண்மையிலேயே சரித்திரப் பிரசித்தமானதாயிருக்கும் என்று நான் நம்புகிறேன்’’ என்றார்.
-விடுதலை,18.7.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக