பக்கங்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

சம்மத வயது கமிட்டி-மதமும் சீர்திருத்தமும்


21-7-1929, குடிஅரசிலிருந்து 
இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும் தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும் வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினுடையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும் குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும் குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன.
நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்த வரை நமது நாட்டு பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும் பொறுப்பற்றவர் களுமாய் இருக்க வேண்டியவர்களாய் விட்டதால் அவர்கள் இவ்விஷயத்தில் மனிதத் தன்மையுடன் நடந்து சட்டத்தை அமலுக்குக் கொண்டு வரும்படி செய்யாமல் பொறுப் பற்ற தன்மையில் இவ் விஷயங்களில் பொதுஜன அபிப் பிராயத்திற்கு கட்டுப்பட்டு நடப்பவர்கள் போல வேடம் போட்டு இதற்காக ஒரு கமிட்டியை நியமித்து அக்கமிட்டியை பொது ஜனங்களை விசாரித்து அறிக்கைச் செய்யும்படி ஏற்பாடு செய்து விட்டார்கள். அக்கமிட்டியும் மாதக் கணக்காக பல ஆயிரக் கணக்கான ரூபாய்களை செலவு செய்து பொதுஜனங்கள் என்பவர்களை விசாரணைச் செய்து ஏகோபித்து ஒரு முடிவுக்கு வந்து கல்யாணம் செய்ய பெண்களுக்கு 14 வயதாக வேண்டு மென்றும், உடல் சேர்க்கை வைத்துக் கொள்ள கலியாணமான பெண்களுக்கு 15 வயதாக வேண்டுமென்றும், கல்யாணமாகாத பெண்கள் விஷயத்தில் உடல்சேர்க்கைக்கு 18 வயதாக வேண்டு மென்றும் அறிக்கைச் செய்திருக்கின்றார்கள். இவ்வறிக்கையில் உடல் சேர்க்கை விஷயமாய் செய்திருக்கும் வயதுக் கிரமமானது கலியாணமான பெண்ணுக்கு ஒருவிதமாகவும், கலியாணமாகாத பெண்ணுக்கு ஒரு விதமாகவும் குறிப்பிடப்பட்டிருப்பது சிறிது விவாதத்திற்கிடமான தாயிருந்தாலும், கலியாண வயது 14 என்று குறிப்பிட்டி ருப்பதும் அவ்வளவு போதுமானதாக இல்லாததாய் இருந்தாலும், ஒரு அளவுக்கு நாம் இந்த அறிக்கையை வரவேற்கின்றோம்.
முதலாவதாக, கலியாணமான பெண்ணுக்கும் ஆகாத பெண்ணுக்கும் உடல் சேர்க்கை விஷயத்தில் வித்தியாசம் கற்பிக்கப்பட வேண்டிய அவசிய மில்லை என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் பார்ப்பனர்கள் அந்தக் கமிட்டி முன் சாட்சியம் கொடுத்ததில் அநேகர் தங்கள் சமுகப் பெண்கள் பக்குவமாய் விட்டால் பரிசுத்தமாய் இருக்க முடியாதென்றும், அவர் களுக்குக் கலவி உணர்ச்சி சிறு வயதிலேயே ஏற்பட்டு விடுகின்றதென்றும், அவர் களைக் காவல் காக்க வேண்டிய பொறுப்பு தங்கள் தலையில் விழுந்து விடுமென்றம், ஏதாவது சிறிதள வாவது பேர் கெட்டுவிட்டால் பிறகு அதன் வாழ்க்கை கஷ்டமாகி விடுமென்றும் சொல்லியிருப்பதால் அவர்களின் குறைகளைத் திருப்தி செய்ய வேண்டி கலியாணமாகாத பெண்களை 18 வயதுக்கு முன் யாராவது கூடினால் கூடின ஆண் களுக்குத் தண்டனை விதிப்பதற்காக இம்மாதிரி விதித்திருக் கின்றதாக நாம் கருதுகின்றோம்.
ஆனால் இம்மாதிரி நடவடிக் கைக்குக் கட்டுப்பட்ட பெண்களுக்குத் தண்டனை ஒன்றுமில்லை. தவிரவும், பெண்கள் மீது வேறு எவ்வித அபவாதமும் ஏற்படாம லிருக்கவும் இந்த விதி உபயோகப்படலாமென்று கருதியிருக்கக் கூடுமென்றும் நினைக்கின்றோம். தவிர 14-ல் கலியாணம் செய்து கொண்டு 15 வயது வரையில் அதாவது ஒரு வருடம் வரை காத்திருக்க முடியுமா? என்றும், ஏன் கலியாண வயதையே 15-ஆக தீர்மானித்திருக்கக் கூடாதென்றும் சிலர் கேட்கலாம். ஏகோபித்த அபிப் பிராயமாக இந்த அறிக்கை இருக்க வேண்டு மென்பதை உத்தேசித்து ஒரு கட்சியார் இதில் ஒரு வருடம் விட்டு கொடுத்திருக் கின்றார்கள் என்பதாகக் கருதுகின்றோம்.
அதாவது கலியாண வயதை பிரவிடையாவதற்கு முன்னாக வே கலியாணம் செய்யத்தக்கதாய் இருக்கும்படி செய்ய மெஜாரிட்டிகள் விரும்பியிருப்பதாகத் தெரிய வருகின்றது. அம்மாதிரி செய்துவிடும் பட்சத்தில் சேர்க்கை வயது இன்னும் குறைந்தாலுங் குறையும். ஆனால் தங்கள் முக்கிய கொள்கைக்கு விரோதமில்லாமல் ஒரு ஏகோபித்த அறிக்கை அனுப்ப இடங்கிடைத்தால் தனிக்குறிப்பெழுத வேண்டிய அவசியம் வேண்டி யதில்லை என்பதை உத்தேசித்தே மெஜாரிட்டியாரும் இதற்குச் சம்மதித்திருக்கின்றார்கள் போல் காணப்படுகின்றது. அதாவது நமக்கு முக்கியமானது கலியாண வயதேயொழிய சேர்க்கை வயதல்ல. ஏனெனில் 8 வயதிலும் 10 வயதிலும் கலியாணம் செய்து கொள்ள அனுமதித்து விட்டு ஒருவருக் கொருவர் சேரக் கூடாது என்று சட்டம் செய்து ஒருவரை யொருவர் சேராமல் காவல் பார்த்துக் கொண்டிருப்பது சுத்தப் பைத்தியக்காரத்தனம் என்பதும், சாத்தியப்படாதது என்பதும், இயற்கைக்கு விரோதமென்பதுமே நமது அபிப்பிராயம். ஆதலால் நமக்குக் கலியாண வயதே பிரதானம் என்கிறோம்.
அதில் கமிட்டியார் 14 வயது என்று தீர்மானித்தது ஒரு சமயம் சிலர் போதாது என்று கருதினாலும் நாம் அதுவே போதுமென்று சொல்லுவோம், ஏனெனில் கலியாண வயது 10 என்றாலும், 13 என்றாலும் ஒன்றே தான் என்பதுபோல், 14 என்றாலும 18 என்றாலும் ஒன்றுதான் என்பது நமத பிப்பிராயம். எனவே இங்குள்ள முக்கிய விஷயமென்ன வென்றால், பெண்கள் பிரவிடையாகும் முன்புதான் கலியாணம் செய்யவேண்டும். இல்லாவிட்டால் மதத்திற்கு விரோதம், பாவம், நரகம் சம்பவிக்கும் என்கின்ற பூச்சாண்டிகள் கொல்லப்பட்டுவிட்டார்கள். ஆதலால் இந்தக் கமிட்டி அறிக்கையில் மதச் சம்பந்தமான நிர்ப்பந்தமும் கட்டுப்பாடும் ஒழிக்கப் பட்டிருப்பது பெருத்த அனுகூலமாகும். பக்குவமான பின் கலியாணம் செய்வதாயிருந்தால் பெண் விஷயத்தில் யாரும் அவசரப்பட்டுக் கொண்டு கலியாணம் செய்துவிட மாட்டார்கள். சௌகரியப்படி எதிர்பார்ப் பார்கள் பெண்களும் தாராளமாய் படிக்கவும், உல கத்தைத் தெரிந்து கொள்ளவும் சந்தர்ப்பமேற்படும். பிறகு தகப்பன் சொன்ன புருஷ னைத்தான் கட்டிக் கொள்ள வேண்டுமென்கின்ற நிர்ப்பந்தமு மிருக்காது. தனக்கும் புருஷனைத் தேர்ந்தெடுக்கத்தக்க யோக் கியதை உண்டாய் விடும். பிறகு நாள் போகப் போக சுயம்வரமும் காதல் மணமும் ஏற்பட இடமேற் பட்டுவிடும். எனவே 14 வயதுக்கு மேற்பட்டுத்தான் கலியாணம் செய்யப்பட வேண்டுமென்று செய்த அறிக்கையைப் பெண்கள் விஷயத்தில் கவலையுள்ளவர் களும், சீர் திருத்தத்தில் கவலையுள்ளவர்களும் வரவேற்பார்கள் என்றே எண்ணு கின்றோம். தவிரவும், இந்த ஒரு விஷயத்தில் மத நிர்ப்பந்தம் நீங்கினால் மற்ற விஷயங்களிலும் மனித சமுகத்தின் இயற்கைக்கும் அறிவிற்கும் விரோதமான காரியங் களிலுமுள்ள மத நிர்ப்பந்தங்கள் விலகவும் சற்று அனுகூல
மாயிருக்குமாதலால் அந்த அளவுக்கு நாம் இதை ஒப்புக் கொள்ள வேண்டியவர்களாயிருக்கின்றோம்.
-விடுதலை,8.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக