பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

கோயில் நுழைவு எதற்காக?



20.11.1932- குடிஅரசிலிருந்து
மகமதிய சமூகமும், தாழ்த்தப்பட்ட மக்கள் சமூகமும் சமூகவாழ்வில் சுதந்திரம் பெற்று மற்றவர்களுடைய தயவும், பிச்சையும் அவசியமில்லாமல் தங்கள் தங்கள் கால்களிலேயே நிற்கும் படியான நிலைமை ஏற்பட்டு விட்டால் இந்து சமூகம் என்பதானது இன்று சொல்லிக் கொள்வது போல இந்தியாவில் ஒரு பெரிய பலம் பொருந்திய சமூகம் என்பதாகச் சொல்லிக் கொள்ள இடமில்லாமல் போவதோடு மகமதிய சமூகமும் தாழ்த்தப்பட்ட சமூகமும் அதனதன் சமூகக் கொள்கையின் பயனாகக் கலந்து கொள்ள ஒன்றுக் கொன்று அன்னியோன் னியம் ஏற்பட்டு விட நேரும் போது இந்து சமூகம் சிறுபான்மை சமூகம் என்று சொல்லும்படியான நிலைமைக்கும் பரிகசிக்கத் தக்க நிலைமைக்கும் வந்து விடும்.
அதோடு மாத்திரமல்லாமல் இந்து சமூகத்தில் இருக்கின்ற  காரணத்தில் இன்னும் எந்தெந்த  உள் சமூகங்கள் சமூக வாழ்வில் சுதந்திரமும் சமத்துவமும் அற்று இழிவுபடுத்தப்படுகின்றனவோ அவையெல்லாம் இப்படியே வெளிக் கிளம்பவும் நேரிட்டு விடும்.
அப்போது இந்து சமூகம் என்பது தானாகவே அழுவாரற்ற பிணமாய் ஒழிந்து விடும். இந்தக் காரணங்களாலேயே மக்களுக்கு சமூக வாழ்வில் சமத்துவமும், சுதந்திரமும் இல்லா விட்டாலுங்கூட  இந்து சமூகம் மேன்மையாய் இருந்து ஆதிக்கம் செலுத்துவதை மாத்திரம்  விட்டு விடக் கூடாது என்கின்ற இந்து சமூகத் தலை வர்கள் என்பவர்களின் எண்ணமே இந்த ஒற்றுமை மகாநாடு களுக்கும், கோவில் நுழைவுக்கும் அஸ்திவாரமாய் இருந்து வருகின்றது.
தோழர் ராம் சே மாக்டனால்டின் வகுப்பு தீர்ப்பு, ஒழிந்து தனித் தொகுதி மாறி, பொதுத் தொகுதி நிலை நின்று அரசிய லிலும் இந்து சமூகத்திற்கே ஆதிக்கம் வந்து விட்டது. என்று ஆனவுடன் கோவில் நுழைவு சுயராஜ்ஜியம் கிடைத்தப் பிறகு பார்த்துக் கொள்ளலாம். என்றும் ஒற்றுமை என்பது சுயராஜ்ஜியம் கிடைத்த பிறகு தானாகவே ஏற்பட்டு விடும் என்றும் தாராளமாய் சொல்லப் பட்டு விடும். பிறகு பழைய குருடி கதவைத் திறடி என்கின்ற நிலைமை ஏற்படுவதில் சந்தேக மிருக்க நியாயமில்லை.
தவிரவும் இந்த கோவில்களுக்கு செல்வாக்குகள் இருந்த காலத்தில் கோவில் நுழைவைப் பற்றி பேசுவது பெருத்த அப வாதமாகவும், மதத் துரோகமாகவும், கலகாதமாகவும் இருந்து வந்தது.
இன்றை தினம் உலகத்தில் கோவில்களுக்கு மதிப்பு குறைந்து சில தேசங்களில் கோவிலுக்குப் போவது முட்டாள் தனம் என்று கருதப்பட்டும் சில தேசங்களில் கோவில்கள் இடிக்கப்பட்டும் போனபின்பும்  நமது நாட்டிலும் கோவில்களின் புரட்டுகள் வெளியாகி அவற்றின் மதிப்பு குறைந்து அதன் பேரால் உயர் நிலையில்  இருப்பவர்களு டையவும், வயிற்றுப் பிழைப்பு மதக்காரர்களுடையவும் யோக்கியதை வெளியாகி அவர்கள் மக்களால் வெறுக்கப் பட ஆரம்பித்த பிறகே தான் இப்போது கோவில் நுழைவு இவ்வளவு முக்கியதானம் பெற்று விட்டது.
கோவில் நுழைவு வெற்றி பெற்றால் இந்து சமூகம் சிறிது பலப்படும் என்றும், இன்னும் கொஞ்சகாலத்திற்காவது அதற்கு அழிவு வராமல் காப்பாற்றலாம் என்றுமே இப்போது கோவில் நுழைவுக்காரர்கள் கருதி வேலை செய்கிறார்களே யொழிய சர்வ சமரச கடவுளின் தரிசனத்தையும் அருளையும் தாழ்த்தப்பட்ட மக்கள் அடைய வேண்டும் என்பதாக ஒரு புதிய உணர்ச்சி ஏற்பட்டதற்காக அல்ல என்பதைச் சிறிது யோசனை உள்ளவர்களும் உணர்ந்து விடக் கூடும்.
அன்றியும்  பகுத்தறிவையும் சம சுதந்திர நோக்கத்தையும் கொண்டு இப்போது கோவில்  நுழைவுக்கு ஆதரவு தேட எவரும் - வரவில்லையென்பதும், கோவில் நுழைவு பிரச்சாரத்தின் உபன்யாசங்களையும் எடுத்துக் காட்டும் ஆதாரங்களையும் பார்த்தால் நன்றாய் விளங்கும் மற்றறெதற்கென்றால் மதத்தில் மத சாஸ்திரத்தில் தாழ்த்தப்பட்ட மக்களின்  கோவில் நுழைவை ஆட்சேபிக்க இடமில்லை என்றுதான் சொல்லப்படுகின்றது. ஆகவே மதத்தில் மதசாஸ்திரத்தில் ஆட்சேபணை இருந்தால் அவர்கள் கதி என்ன ஆவது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். மதத்தையும் மத சாஸ்திரத்தையும் பற்றி பேசி அடைகின்ற ஆதரவை நாணயமான தென்றோ, நிலைக்கக் கூடியதென்றோ நாம் ஒருக்காலும் சொல்லி விட முடியாது.
ஏனென்றால் இந்து மதத்தில் ஆதரவு இருக்கின்றதா இல்லையா? என்பது சுலபத்தில் முடிவு கட்டக் கூடிய காரியமல்ல. ஏனெனில், இந்து மதம் என்று ஒரு மதமுண்டா? அதற்கு ஏதாவது ஒரு குறிப்பிட்ட சாஸ்திரமோ ஆதாரமோ உண்டா என்பது போன்ற விஷயங்களும் விவகாரங்களும் யாவரும் அறிந்த தேயாகும். ஆனால் ஒரு சிலரின் நன்மைக்கு ஏற்ற விதமாக மாத்திரம் சவுகரியத்துக்குத் தக்கபடி சமயத்திற்குத் தகுந்தபடி ஆதா ரங்கள் தேடலாம், வியாக்கியானங்கள் செய்து கொள்ளலாம் என்கின்ற சவுகரியம் மாத்திரம் இந்து மதம் என்னும் பேரால் இருந்து வருகின்றது.
இந்த சவுகரியமும் சந்தர்ப்பமும் தீர்ந்த பிறகு எப்படி வேண்டுமானாலும் ஆதாரம் கிடைக்கக் கூடும். எப்படி வேண்டுமானாலும் வியாக்யானம் செய்யலாம். ஆதலால் இந்த ஆதரவைக் கொண்டு கோயிலுக்குள் நுழைய விடுவது என்பது ஆபத்தானது என்பதை ஒவ்வொருவரும் ஞாபகத்தில் இருத்தல் வேண்டும்.
சாதாரணமாய் தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசத்திற்கு அஸ்திவாரமாய் இருப்பது பொருளாதார தத்துவமேயாகும்.
பொருளாதார வித்தியாச தத்துவத்திற்கு ஆதாரமாய் இருப்பது மதமேயாகும். இந்த இரண்டும் இருக்கிற வரை ஒற்றுமைக் குறைவும், தீண்டாமைத் தன்மையும் ஏதாவது ஒரு வேஷத்தில் இருந்து கொண்டுதான் இருக்கும். தீண்டாமை முதலிய ஜாதி வித்தியாசமானது. ஏதோ முட்டாள் தனத்தினால் ஏற்படுத்தப் பட்டது என்று சொல்லுவது ஒரு நாளும் ஒப்புக் கொள்ள முடியாது.
மற்றென்னவெனில் அது மிகவும் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட முன்ஜாக்கிரதையான சுயநல அயோக்கியத் தனத்தினால் ஏற்படுத்தப்பட்ட தாகும். அந்நிலை கட்டுப் பாடாகவும் நிலையாகவும் இருப்பதற்கே சாஸ்திர ஆதாரங்களும் மதக் கோட்பாடுகளும் ஏற்படுத்தப் பட்டவை களாகும். அன்றியும் இன்றையத்தினம் நமது நாட்டில் தீண்டா மையும், ஜாதி வித்தியாசமூம் செய்யும் கொடுமையின் பயனெல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பெரிதும் பொருளா தாரக் கொடுமையை விளைவிப்பதல்லாமல் மற்றபடி கடவுள் தரிசனமும் மோட்ச சாதனமும் கிடைக்காமலிருப்பதல்ல.
அப்படிப்பட்ட, அதாவது பொருளாதாரத்துறையில் கொடுமை படுத்தப்பட்ட மக்களுக்குக் கோவில் களில் உள்ள கடவுள் தரிசனத்தால் என்ன பயன் கிடைக்கக் கூடும்? ஏதோ அவர்கள் பாடுபட்டு சம்பாதித்த சிறிது பொருளையும் கோவிலுக்குக் கொண்டு போய் கடவுள் தரிசனை என்னும் பேரால் தொலைத்து விட்டு அடிமைத் தன்மையையும்  பொறுப்பற்ற தன்மையையும் பெற நேரிடுவதைத் தவிர வேறு என்ன லாபம் அடையக் கூடும்? ஆகவே இந்த கோவில் நுழைவுப் பிரசாரம் இப்போது கடவுள் பிரசாரத்துக்கும், மத பிரசாரத்துக்கும், சாஸ்திர புராண பிரசாரத்துக்கும்தான் அஸ்தி வாரமாகப் பயன்படுகிறது. என்பதே நமது அபிப்பிராயம்.
-விடுதலை,8.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக