பக்கங்கள்

ஞாயிறு, 16 அக்டோபர், 2016

நாராயண குருவின் சாதி மறுப்பு

அ. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத் துறைத் தலைவர்
விவேகானந்தர் கல்லூரி, சென்னை


1916ஆம் ஆண்டு...
தென்னிந்திய சமூக அரசியல் வரலாற்றில்,


ஏன்? இந்திய வரலாற்றிலேயே, திருப்பு முனைகளை உருவாக்கிய ஆண்டு. உலகப்போர் மும்முரமாக நடை பெற்று வந்த காலமது... போரின் முடிவில், இந்தியர்களுக்கு அதிகமான அரசியல் வாய்ப்புகளை, சலுகைகளை ஆங்கில காலனி அரசு தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், சனாதன சமூகக் கட்டமைப்பையே மாற்ற வேண்டுமென்ற குறிக்கோளுடன் இரண்டு வரலாற்றுப் புகழ்மிக்க நிகழ்வுகள் நடந்தன.

சாதீயத்தை முற்றிலுமாக மறுத்து, சிறீநாரயண குரு என்ற புகழ்பெற்ற ஆன்மீகத்துறவி ஓர் அறிக்கையை வெளியிட்டது, அந்த ஆண்டு மே மாதம் 28ஆம் நாள் நடந்தது.
அதே ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் சென்னையில் நீதிக்கட்சி உருவானது. ஒரு மாதத்திற்குப் பின் டிசம்பர் 20ஆம் நாள் புகழ்பெற்ற "பிராமணரல்லாதார் அறிக்கை" (ழிஷீஸீ-ஙிக்ஷீணீலீனீவீஸீ விணீஸீவீயீமீstஷீ) வெளியிடப்பட்டது.

இவை இரண்டுமே சாதிக்கும், சாதி ஆதிக்கத்திற்கும் எதிராக எழுந்த வலிமை மிக்க போர்க்குரலாக அமைந்தன.

சமூக சமத்துவம் - சமூக நீதி - சமூக ஒற்றுமை ஆகிய வற்றின் மூலமாகத்தான் சமூக மாற்றம் - சமூக முன்னேற்றம் போன்றவற்றை அடைய முடியும் என்ற சித்தாந்தம் ஆன்மீகமாகவும், அரசியலாகவும் உருமாற்றம் பெற்ற ஆண்டு என 1916அய் நாம் கொண்டாட வேண்டியுள்ளது.

"பிராமணீய" ஆதிக்கம் என்பதுவே சாதி - வருண மரபை அங்கீகரிப்பதன் மூலமாக நடைபெற்று வந்துள்ளது. நாராயண குருவின் சமூகப்புரட்சியும், டி.எம்.நாயர் - பிட்டி தியாகராயர் - நடேச முதலியார் போன்றோரின் சமூக அரசியலும், சனாதன மரபு என்று பூசி மெழுகப்படும் வருண - சாதி முறையை மறுக்க வேண்டும், ஒழிக்க வேண் டும்; சமத்துவ அடிப்படையிலான புதிய சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் செயல் பட்டவை.

சாதிச் சீர்திருத்தம் பேசியோரை தேசியவாதிகளாகவும், சாதிமறுப்பு - சாதி  ஒழிப்பு பேசியோரை வட்டார வாதிகளாகவும் சிறுமைப்படுத்தி இருட்டடைப்பு செய்ய தன்னல சக்திகள் தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். சமூகநீதியிலும், சமூக ஒற்றுமையிலும் அக்கறையுள்ளவர்கள், நாராயண குரு, பெரியார் - அம்பேத்கர் போன்றவர்களது விசாலப் பார்வையைப் புரிந்து கொள்ள வேண்டும். அதன் ஒரு பகுதியாகத்தான் நாராயண குருவின் சாதி மறுப்பு அறிக்கையின் நூற்றாண்டு விழாக் கருத்தரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாராயண குரு எந்த மாதத்தில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தார் என்பது குறித்து எந்த அய்யமும் இருப்பதில்லை.

ஆவணி (சிங்கம்) மாதத்து சதயம் நட்சத்திரத்தில் பிறந்தார் என்பதில் அனைவருக்கும் உடன்பாடு உண்டு. அதனால்தான் ஓணம் பண்டிகையைத் தொடர்ந்து வரும் சதயம் நட்சத்திரத்தன்று ‘குரு ஜெயந்தி'யைக் கொண்டாடு கின்றோம்.

ஆனால், எந்த ஆண்டில் பிறந்தார் என்பது பற்றி வேறுபட்ட கருத்துகள் உள்ளன. கி.பி. 1854 என்போரும், 1855 என்போரும், 1856 என்போரும் உள்ளனர். இன்று நாராயண குரு அமைப்புகள் 1854 என்பதை ஏற்று அதனடிப்படையில் குரு சகாப்தத்தைக் கணக்கிடுகின்றனர், அதன்படி இந்த ஆண்டை (2016) குரு வருடம் 162 என்பதாகக் குறிப்பிடுகின்றனர்.
குரு வாழ்ந்திருந்த காலத்தில் குருவின் சீடர்களாலும், குருவைப் போற்றுபவர்களாலும் அவரது அறுபது ஆண்டு நிறைவு (சஷ்டியப்த பூர்த்தி) வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. குருவின் ஆலுவா அத்வைத ஆசிரமத்தில் அதனை ஆடம்பரமாகக் கொண்டாட குரு அனுமதிக்காவிட்டாலும், பிற இடங்களில் அது மிகச் சிறப்பாகவே கொண்டாடப்பட்டது

அறுபதின் சிறப்பு

இந்திய மரபுகள் சிலவற்றில், பஞ்சாங்கங்களின்படி அறுபது ஆண்டுகள் என்பது வாழ்க்கைச் சக்கரத்தின் ஒரு சுழற்சி நிறைவடையும் நிலையைக் குறிப்பதாகும். ஒரு யுகத்தின் நிறைவு. மனித வாழ்க்கையில் அது முதிர்ச்சி யையும், பக்குவப்படுதலையும், நிறைவையும் குறிக்கும். தமிழ் ‘காலண்டர்கள்' அறுபது ஆண்டுகளுக்கும் அறுபது பெயர்களைத் தருகின்றன. பிறகு மறுசுழற்சி. இந்த அறுபது ஆண்டுகளுக்கான பெயர்களின் தோற்றம் பற்றி நாரத ருக்கும், விஷ்ணுவிற்கும் ஏற்பட்ட உடலுறவால் தோன்றிய தான அருவருப்பான புராணங்கள் கற்பிக்கப்பட்டதுண்டு. அதனை தந்தை பெரியார் போன்ற பகுத்தறிவாளர்கள் கடுமையாகக் கண்டணம் செய்து நிராகரித்தும் உள்ளனர். ஆனால் நாம் இங்கே அறுபது (சஷ்டியப்தம்) என்று குறிப் பிடுவது அனுபவத்தாலும், அறிவாலும், சிந்தனையாலும், செயலாலும் ஒரு மனிதன் முதிர்ச்சி என்னும் (உதிர்ச்சி அல்ல) பக்குவ நிறைவைப் பெறும் காலகட்டம். நிறைவான வாழ்க்கையைப் பெற்றுவிட்ட ஒருவரைப் போற்றுகின்ற பண்பாட்டு மரபுதான் அறுபது அகவை நிறைவு நிகழ்ச்சி யாகும்.

ஆதிசங்கரர் அறுபதில் பாதியைத் தான் கடந்தார். ஏசுநாதரும் அவ்வாறே, விவேகானந்தர் நாற்பதோடு நின்றுவிட்டார். புத்தர் எண்பதைக் கடந்தார். மகாவீரரைப் போன்று நாராயண குருவும் 70 ஆண்டுகள் கடந்தும் வாழ்ந்தார். அந்த நாராயண குருவின் அறுபது வயது நிறைவு விழா அவரது வாழ்நாளிலேயே கொண்டாடப்பட்ட ஆண்டு... 1916. அதாவது, இன்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னர். அவரது தத்துவங்களும், லட்சியங்களும் மிகத்தெளிவாக உலகிற்கு அவராலேயே அறிவிக்கப்பட்ட ஆண்டு அது. 1916 மே 28 அன்று வெளியிடப்பட்ட அவரது அறிக்கை ‘சாதி மறுப்பு அறிக்கை' எனப் புகழ் பெறுகிறது.

"யாம் சாதி-மத பேதங்களைத் துறந்து பல ஆண்டுகள் கடந்து விட்டன. எனினும் சில குறிப்பிட்ட பிரிவினர் நம்மை அவர்களுடைய இனத்தை (சாதியை)ச் சேர்ந்த வரராக எண்ணியும் பணியாற்றியும் வருவதாகவும், அதன் விளைவாக பலருக்கும் எம்மைப் பற்றி உண்மைக்கு புறம் பான எண்ணங்கள் உருவாகி உள்ளதாகவும் அறிகிறோம்."

"யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக  நம்முடைய சீடர் குழுவிற்கும் மேற்படியுள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையிலேயே சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம். இந்த உண்மையை பொது மக்கள் அனைவரும் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்த பத்திரிகை விளம்பரம் செய்யப்படுகின்றது."

இதனை குருவின் தன்னிலை விளக்கம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். தம்மை ஒரு (ஈழவ) சாதிக்குருவாகச் சித்தரிப்பதை அவர் ஏற்க மறுக்கிறார். தமக்கு சாதி அடையாளம் தரப்படுவதை அவர் எதிர்க்கிறார். தாம் எந்த ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினரின் குருவுமல்ல; எந்த குறிப்பிட்ட மதத்தின் (இந்து மதக்) குருவுமல்ல என்று உ.றுதிபடக் கூறுகிறார்.

சாதிகளும் மடங்களும்

குரு தம்மை மட்டுமே சாதி மறுப்பிற்கு, சாதித் துறப்பிற்கு உள்ளாக்கினார் என்று விளக்க முற்படுவது விஷமத்தனமாகிவிடும். அவரது முயற்சியால் உருவான சீடர் அமைப்பு, துறவியர் அமைப்பில் சேர்ப்பதுவும், வாரிசுகளை நியமிப்பதும் சாதி என்ற அடையாளத்தை கருத்தில் கொள்ளாமல் தான் நடைபெற்று வந்தன.

அருவிப்புறத்தில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்தபின் அவர் நியமித்த பூசகர் சிவலிங்க சுவாமி ஈழவப் பிரிவினர் அல்லர். 1913இல் ஆலுவா அத்வைத ஆஸ்ரமத்தில் துறவிகளை சேர்க்கும்போதும், 1928இல் தர்ம சங்கத்தை உருவாக்கி அதில் துறவியருக்கு பொறுப்புகளை பகிர்ந்தளித்த போதும் அதில் சாதி என்ற அடிப்படை ஒரு சிறிதும் கூட இருக்கவில்லை. நாயர், "பிராமணர்" போன்ற ‘சாதி' களைக் கொண்டவர்களெல்லாம் இதில் இருந்தனர்.

அத்வைதம் பேசிய சங்கரர் உருவாக்கிய மடங்களில் "பிராமணர்" மட்டுமே வாரிசுகளாக முடியும். சைவ சித்தாந்தம் பேசிய ஆதீனங்களிலும் சாதி அடிப்படையிலேயே வாரிசுகள் நியமனம் நடைபெறுகிறது. உண்மையில் இவையெல்லாம் சாதி மடங்களாகவே இருந்தன, இருக்கின்றன. சாதி மடங்களின் நிறுவனர்கள் மட்டும் எப்படி லோக குருக்களாக முடியும்? ஜகத்குருக்களாக முடியும்? நாராயணகுரு, ஆன்மீகத்தில் சமத்துவ அத்வைதத்தையும், நடைமுறை வாழ்க்கையில் சாதீய சனாதனத்தையும் கடைப்பிடிக்கும் போலித்தனத்தைக் கொள்ளாதவர். அதைத்தான் இந்த அறிக்கையில் - "யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை. குறிப்பாக நமது சீடர் குழுவிற்கும் மேற்படி உள்ளவர்களை (சாதி - மத உணர்வில்லாதவர்களை) மட்டுமே, எம்முடைய வாரிசாக வரத்தக்க வண்ணம் ஆலுவா ஆசிரமத்தில் சேர்த்துள்ளோம் என்றும், இனி மேலும் அந்த அடிப்படையில்தான் சேர்க்க இருக்கிறோம் என்றும் அறிவித்துள்ளோம்." என்று அடிக்கோடிட்டு வலியுறுத்தியுள்ளார்.

ராமகிருஷ்ண மடம் போன்ற ஒரு சில மடங்களில் மட்டுமே சாதி கடந்தும் இளந்துறவியரை சேர்க்கும் நிலை உள்ளது. ஆனாலும் அவை சாதி - மறுப்பு மடங்களாக இருப்பதில்லை. நாராயண குருவால் உருவாக்கப்பட்ட துறவியர் அமைப்புகள்தான் சாதிகடந்து மட்டுமல்ல, சாதி மறுக்கும் தத்துவ அடிப்படையில் அமைந்துள்ளன.

(இந்த அறிக்கையில் குரு தமக்கு ஒரு (இந்து) மத அடையாளம் தரப்படுவதையும் மறுத்துள்ளார். (யாம் தனிப்பட்ட ஒரு சாதியிலோ - மதத்திலோ உள்படவில்லை) மதங்களுக்கிடையில் இணக்கம் என்ற நிலையில், மதங் களுக்கிடையில் ஆரோக்கியமான புரிதல் என்ற நோக்கில் ஆலுவா ஆசிரமத்தில் 1924இல்  ‘சர்வமத சம்மேளனம்' நடத்தப்பட்ட பொழுது குருவின் பங்கு ஆழ்ந்த பொருள் கொண்டது. அது அவரால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வமத மாநாடு. இஸ்லாம், கிறிஸ்தவம், பவுத்தம், ஜைனம், ஆரிய சமாஜம் என வெவ்வேறு மத அடையாளத்தில் உள்ளவர் களும் தத்தம் மதபோதனை களை, விளக்கி, போற்றிப் பேசினர். இந்து மதத்தை விளக்கி மஞ்சேரி ராமகிருஷ் ணய்யர் பேசினார். குரு மதங்களைக் கடந்த ஆன்மீகவாதி யாக, ஒரு வழிகாட்டியாக உரையாற்றினார். இந்து மதத் தைப் போற்றி அதனை நியாயப் படுத்தும் நிலைப்பாட்டை அவர் மேற்கொள்ளவில்லை. இந்து மதம் என்பது குறித்த அவரது கருத்துக்களை விளக்க இது தருணமல்ல. ஆனா லும் தம்மை ஓர் இந்துமத குரு என்ற நிலையில் அவர் வைத்துக் கொண்டதில்லை. ஏனெனில் அவர் மதங்கடந்த மனிதப் பொதுமையை ஏற்றுக் கொண்டவர், எடுத்துரைத்தவர்)

சாதிபேத மறுப்பு

சாதி - மதம் தொடர்பான நாராயண குருவின் முதல் அறிக்கை 1888இல் அருவிப்புறத்தில் சிவலிங்கம் பிரதிஷ் டைக்குப் பின்னர் அவராலேயே எழுதி வைக்கப்பட்டது..

சாதிபேதம் மதத்துவேஷம்
ஏதுமின்றி அனைவரும்
சோதரராய் வாழ்கின்ற
வழிகாட்டி இடமே இது.

சாதிபேதம் இன்றி என்பதற்கு ‘சாதி இன்றி' என்று பொருள் இல்லை. அவர்ண சாதியினருக்கு ஷண்மத (ஆகம)க் கடவுள் கோயில்களில் நுழைவு உரிமை மறுக்கப் பட்டிருந்த காலகட்டத்தில், அவர்ண சாதியினருக்கும் பேதமின்றி உரிமை என்ற உயரிய நோக்கம், சமூக நோக்கம் குருவின் நோக்கமாக அறிவிக்கப்படுகிறது. அது ஒரு முதல்படி, முதல் அடி மட்டுமே.

அதற்குப் பிறகு 28 ஆண்டுகளில் அவரது ஆன்மீக - சமூகப் பயணம் மேலும் உயர்வான லட்சியங்களை நோக்கி பயணித்தது. சமூகக் கொடுமைகள் என்னும் நோய்நாடி, நோய் முதல் நாடி, அது தணிக்கும் வாய்நாடி என்பதாக சாதி பேதங்களை மறுத்தவர். சாதி என்னும் சமூக நோய் முதல் நாடியை மறுக்கும் அடுத்த கட்டமாக 1916ஆம் ஆண்டு அறிக்கையைக் காண வேண்டும்.

(தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி....

மனித சாதி ஒன்றே...

1914 ஆம் ஆண்டிலேயே ‘சாதி நிர்ணயம்‘ என்ற கவிதையின் மூலம் சாதி பேதம் என்பதல்ல, சாதி என்ற அடிப்படையே பொய்மையானது, விஷமத் தனமானது என்று மிகத்தெளிவாக இயம்பினார். இக்கவிதையின் முதல் பகுதி மட்டும் சமஸ்கிருதத்திலும், பின்னுள்ள அடிகள் மலையாளத்திலும் உள்ளன.

“மனுஷ்யானாம் மனுஷ்யத்வம்
ஜாதிர்கோத்ரம் கவாம் யதா
ன பிராமணாதி ரஸ்ஸைவம்
ஹ! தத்வம் கோப்பின”

மனிதம் அனைத்தும் ஒரே ஜாதி, உடற்கூறுகள் அங்கே ஒன்றே; உடற்கூறுகளால், பிறப்பால் பிரா மணன், போன்ற சாதிகள் வேறு வகைப்படுமா? இந்த எளிய, அப்பட்டமான உண்மையை அறியாமல் இருக்கின்றனரே என்று ஏங்கும் சமஸ்கிருத பாடல் அது. எண்ணற்ற சமஸ்கிருத இலக்கியங்களில் - பெரும்பாலானவை நேரடியாகவோ, மறைமுக மாகவோ சாதி - வருண விவஸ்தையை நியாயப் படுத்தும் போக்கே காணப்படுகிறது. நேரடியாக சாதி என்ற அடித்தளத்தை மறுக்கும் ஒரேயொரு சமஸ்கிருதக் கவிதையாக இது அமைகிறது; இதை இயற்றியவராக குரு இருக்கிறார். இதனைத் தொடர்ந்து வரும் “சாதி லட்சணம்“ என்ற குருவின் படைப்பும், சாதி பேதங்களை மறுப்பது என்பதாக இல்லாமல் சாதி என்பதையே மறுப்பதாக உள்ளது. அதனால் தான் “ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதருக்கு” என்ற வாசகத்தை ஜாதி நிர்ணயத்தில் வைத்தார்.

இதற்கு முன்னும் பின்னும் பதிவு செய்யப்பட்ட குருவின் உரையாடல்கள் அனைத்திலும் குறிப்பாக காந்தியாருடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் நாம் காண்பது என்ன? சாதி சீர்த்திருத்தமல்ல; சாதி - வர்ண சனாதன மறுப்பே. சாதியின் நோக்கமே பேதங்களை நிறுவனமயப்படுத்துவதாகஇருக்கும்போதுசாதி களை பேதமின்றி சீர்திருத்துவது எப்படி சாத்திய மாகும்.

நம் சிந்தனையில் கொள்ள வேண்டிய மற்றொரு அம்சம்; குரு இங்கே உயர்சாதி உணர்வுகளை மய்யப்படுத்தவில்லை. அவர்ணர்களின் சாதி உணர்வையே முதன்மைப்படுத்தியுள்ளார். சமூகக் கொடுமைகளினின்று விடுபடுகின்ற சமூகப் பிரிவினர், தம்மை ஒரு குறிப்பிட்ட சாதிப் பிரிவினராகவே உணர்வு கொண்டு, பிற சமூகப் பிரிவுகளை அன்னிய மாகப் பார்ப்பது, சுயசாதிப் பெருமிதம், சுயசாதி நியாயப்படுத்தல் ஆகியவற்றில் புதைந்து போவது குருவை வேதனைப்படுத்தியுள்ளது.

ஜாதி முள்

சாதி முறையால் பாதிக்கப்பட்ட சமூகப் பிரிவி னரை அடையாளப்படுத்த சாதி என்னும் ஒன்றைக் கருவியாக்குவது ஒரு உத்தியாகும். ‘முள்ளை முள் ளால்  எடுப்பது’ போன்றது அது. ஆனால் எடுக்கப் போன முள்ளே ஆழமாக ஊடுருவியுள்ளதைப் போன்ற ஒரு நிலை அவர்ணர்களிடையே குறிப்பாக ஈழவர்களிடையே உருவாகியுள்ளது குருவை தாங்கொணாத் துயரில் ஆழ்த்தியது. தமது பெயரையும், தமது உருவத்தையும் சாதி அடையாளத்திற்கும் சாதிப் பெருமிதத்திற்குமாக, விசாலப் பார்வையற்ற சில ஈழவர்கள் பயன்படுத்துவதற்கு அவர் உடன்பட மறுத்தார். தாம் விரும்பிய சாதியற்ற, மதம் கடந்த, புதுமை நாடும் ‘நாராயண’ தர்மத்தை, சாதிப் பெருமித, சாதி ஆதிக்க நோக்கங்களுக்காக திரிபு செய்வதை, மலினப்படுத்துவதை அவர் தமக்கே உரிய பாணியில் மறுதலித்தார்.

சாதிப் பெருமிதம்
ஆதிக்க சாதி உணர்வே!


சாதி மறுப்பு அறிக்கை வெளியிடுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு 1916, மே மாதம், 22 அன்று குரு டாக்டர் பல்புவிற்கு எழுதிய கடிதம் அவரது சாதிமறுப்பு உறுதிக்கு மற்றுமொரு சான்றாகும். அக்கடிதம் பின் வருமாறு:

“என்னுடைய டாக்டர் அவர்களுக்கு, அமைப்பின் (எஸ்.என்.டி.பி.யின்) முடிவுகளையெல்லாம் யாம் அறியாமலே எடுத்து நிறைவேற்றி வருவதாலும், குழுவின் செயல்பாடுகள் நாம் விரும்புகின்ற நிலைப் பாட்டிற்கு ஏற்ப இல்லாததினாலும், (எஸ்.என்.டி.பி.) குழுவினருக்கு சாதிப் பெருமிதம் பெருகி வருவதாலும், முன்பே மனத்தளவில் விலகி இருந்தததைப் போன்று, இப்பொழுது சொல் - செயல் ஆகியவற்றாலும் (எஸ்.என்.டி.பி) குழுவிலிருந்து விலகியிருக்கிறோம்“.
வேதனையோடு நாராயண குரு பல்புவிற்கு எழுதிய கடிதம்; எஸ்.என்.டி.பி.யுடன் தமது தொடர் புகளைத் துண்டித்து கொண்ட கடிதம் இது. குருவின் லட்சிய தர்மத்தினின்று, எஸ்.என்.டி.பி. பிறழ்ந்து வருவதாக குரு குறிப்பிடுகிறார். ஈழவ சாதிப் பெருமிதம் பெருகி வருவதைச் சுட்டிக் காட்டுகிறார். சாதிப் பெருமிதம் என்றால், மற்ற சாதி (?)யினரை விட தம் சாதி சிறப்பானது என்ற பொருளைத் தரும். தம்மை விட தாழ்ந்துள்ள பிரிவினரிடம் உயர்சாதித்தனத்துடன் நடந்து கொள்ளத் தூண்டும். தம்மை விட மேலே வைக்கப்பட்டுள்ள சாதியினரிடம் குற்றம் காண்பவர் தாமே ஆதிக்க சாதி பெருமிதம் அடைந்துவிட்டால்; மற்ற பிரிவினர் அன்னியமாக்கப்படுகின்றனர், போட்டியாளர்களாக்கப் படுகின்றனர், எதிரிகளாக்கப்படுகின்றனர், மனித சாதி ஒரு சாதியாவது தடுக்கப்படுகின்றது.

குரு வந்தனையும்,
குரு நிந்தனையும்

சாதி அடையாளமும், சாதிப் பெருமிதமும் குரு நிந்தனைகளே; குரு வந்தனை செய்ய விரும்புவோர், குருவின் உயிர்நாடி லட்சியமான சாதி மறுப்பை நோக்கி முன்னேற வேண்டும்.
ஜாதியின் பெயராலும், பசுவின் பெயராலும் மிரு கத்தனமான கொடுமைகள் அரங்கேற்றப்படுகின்றன. ‘மண்டகப் படிகளால்’ மண்டைகள் உருளுகின்றன. உனா சித்திரவதைகள் தொடர்கின்றன. சொந்தப் புதல்விகளையே சாதிவெறி கொலை செய்கிறது. இதை “பிராமணர்கள்” செய்யவில்லை. ஆனால் “பிராமணீயம்“ விதைத்த, தூண்டிவிடுகின்ற, நியாயப் படுத்துகின்ற போலியான சாதிப் பெருமிதங்கள் இக்கொடுமைகளைச் செய்கின்றன.

தனக்கு மேலே இருக்கும் சாதிகளிடம் பக்தியுடன் நெக்குருகுபவர்கள் அல்லது அங்கலாய்க்கும் அதே சாதிகள், தமக்கு கீழே வைக்கப்பட்டிருக்கும் சமூகப் பிரிவினரிடம் ‘ஆண்டை’ களாக நடந்து கொள்கின்றன. “பொது நீதி - பொது நியாயம்“ என்பதைப் பற்றி அக்கறை கொள்ளாமல் ஒருவிதமான ‘காட்டுமிராண்டி’ நிலையிலேயே தொடர சாதீயம் காரணமாகின்றது. பொதுநீதி அல்லது பொதுமையில்லாத மக்கள் கூட்டம் எப்படி ஒரு சமூகமாக, ஒரே தேசியமாக மாற முடியும்? தமிழ்த் தேசியமோ அல்லது இந்திய தேசியமோ, எந்த தேசியமும் உருவாகாமல் வெறும் கலவரக் கும்பல்களாகவே  சீரழிந்து போவதற்கு சாதி ஆதிக்க உணர்வுகளும், சாதிப் பெருமிதங்களும் வழிவகுக்கின்றன.
மக்கள் திரளை பேதப்படுத்துவதற்காகவே தோற்றுவிக்கப்பட்ட சாதிகள் இருக்கும் வரையிலும் பேதங்களும் தொடரும். பேதங்கள் இருக்கும் வரை யிலும் அழுக்காறு, வன்மம், பகை, சுரண்டல், கலகம் ஆகியவையும் தொடரும்.

பேதங்கள் - வன்மங்கள் - சுரண்டல்கள் - ஒடுக்கு முறைகள் - கலவரங்கள் ஆகியவற்றின் ஊற்றான சாதியே இல்லாத போதுதான் பொது நியாயம். பொது நீதி மீதான பொதுமைச் சமூகம் வேர்விட முடியும்.

ராமராஜ்ய மறுப்பு

இந்த உணர்வின் அடிப்படையில் தான் நாராயண குரு, சாதியை நியாயப்படுத்தும் எந்த வாதத்தையும் திட்டவட்டமாக மறுதலித்தார்.
“பண்டைய இந்தியாவில் சாதி முறை பல அற் புதங்களை விளைவித்துள்ளது” என்ற வகையில் விவேகானந்தர் போன்றவர்கள் கூறியுள்ளதை நாரா யண குரு ஏற்றுக் கொள்ளவில்லை.
ராமராஜ்யத்தில், தவம் செய்யும் சன்னியாச உரிமை இல்லாத காரணத்தால் அயோத்தி ராமனால் அப்பாவி சூத்திர சம்புகன் தலை வெட்டப்பட்டது  என்பதைச் சுட்டிக்காட்டிய நாராயண குரு, தன்னைப்போன்ற “அவர்ணப் பிரிவினர், ஆங்கிலேயர் ஆட்சியில் அல்லவா சுதந்திரமாக அச்சமின்றி சன்னியாசிகளாக முடிகிறது, ஆகவே ஆங்கில ஆட்சியாளர்களை குரு ஸ்தானத்தில் அல்லவா வைத்துப் பார்க்க வேண்டும்“ என்று உணர்ச்சி பொங்கக் கூறியதின் பொருள் என்னவென்று விளங்கவில்லையா?
அவர்ண வெகுமக்களுக்கு சம உரிமையை மறுத்தசனாதனராமராஜ்யமும்,அவர்கள்ஆட்சியின் அடிப்படையான சனாதன வருண (அ) தர்மமும் போற்றுதற்குரியவை அல்ல, மாறாக மாற்றுதற்கு உரியவையேஎன்றகுருவின்கண்ணோட்டம்அரை குறை ஆன்மீகவாதிகள் அல்லது போலி தேசிய வாதிகள் அல்லது ஆதிக்க இந்து வெறியர்களுக்கு பெருங்குற்றமாகத்தெரியலாம்.ஆனால்இந்நாட் டின்கோடிக்கணக்கானவெகுமக்களதுசுதந்தர வேட்கையைத்தான் குருவின் குரல் தெளிவுபடுத்து கிறது.

கீதை மறுப்பு 

மனு என்ற “பிராமணன்” வருண பேத முறையை நிறுவனப்படுத்த முயன்றான். அந்த வருண அநீதிக்கு ஒரு தெய்வ அங்கீகாரம் இருப் பதான மாயையை, சூத்திர பஞ்சமரிடையே உரு வாக்குவதற்காக ‘பகவத் கீதை’யை மகாபாரதத்தில் இடைச் செருகலாகக் சேர்த்தார்கள். கருப்பு நிற, இடைக்குலத் தலைவனான கிருஷ்ணன், கடவுளின், மகாவிஷ்ணுவின் அவதாரமாக சித்தரிக்கப்படுகிறார். கருப்பரான கடவுள் அவதாரம் கூறுவது தெய்வ வாக்கு என்பதாக மட்டுமல்ல; தெய்வ கட்டளை என்றும் ஏற்கப்பட வேண்டுமல்லவா? வெகு மக் களின் வருண - சாதி மறுப்பை, எதிர்ப்பை மழுங்கச் செய்வதற்கான ‘சவர்ணச் சதி’ இது. போர்க்களத்தில், யுத்த தர்மம் பேசப்பட வேண்டிய இடத்தில், அதை மேலெழுந்த வாரியாகக் கூறிவிட்டு மிக மிக விரிவாக “வருண (அ) நியாயம்“ விளக்கப்படுகிறது; வலியுறுத்தப்படுகிறது.

(தொடரும்)
நேற்றையத் தொடர்ச்சி....

“சாதுர் வர்ணயம் மயா சிருஷ்டம்“

“நான்கு வர்ணங்களையும் நானே படைத்தேன்” என்று அவதாரக் கடவுள் தம்பட்டமடித்துக் கொள் கிறார்.

அதோடு குணகர்மங்களின் அடிப்படையில் வரு ணங்களின் பொறுப்புகளை தீர்மானிப்பதாகவும் கூறுகிறார்.

தனதுவருணத்திற்குரியகடமையைச்செய்ய மறுப்பது பாவப்பட்டியலில் இடம் பெறுவதற்குரிய தாக்குகிறார்.

வேறு வருணத்திற்குரிய பணியை திறமையாகச் செய்யும் திறனிருந்தாலும் தனது வருணத்திற்குரிய தொழிலையே, அதில் திறனும், விருப்பமும் இல்லா விட்டாலும், செய்வதுதான் வருணக் கடமை என் கிறார்.

ராமனிடமும்,சீதையிடமும்எல்லையில்லாத பெருமிதமும் ஈடுபாடும் கொண்ட மகாத்மா காந்தியின் வருண நியாயத்தை மிகத்தெளிவாக, உறுதியாக, எந்தவித சமரசமும் இன்றி நாராயண குரு மறுத்துள்ளதை அவரது உரையாடல்களில் காணலாம்.

வைக்கம் சத்தியாகிரக காலத்தில் நடந்த ஓர் உரையாடல்
பக்தர்: “மகாத்மா காந்தி வருணாசிரமம் நல்ல தென்று கருதுகிறார்”.

குரு: “வருணம், ஆசிரமம் இரண்டும் இரண் டாகும். சாதாரண சாதியைப் பற்றிச் சொல்லும்போது வருணாசிரமம் என்றே சொல்கிறார்கள். வருண மென்றால் காந்தி என்னவென்று சொல்கிறார்?”

பக்தர்: “வருணம் சாதியல்ல. வருணத்திற்கும் சாதிக்கும் தொடர்பேயில்லையென்று காந்தி சொல் கிறார்”.

குரு: “குணகர்மங்களை அடிப்படையாகக் கொண்டு இருக்கலாம். குணகர்மங்களில் நிரந்தரமாக ஒன்றும் இல்லையல்லவா? அது எப்பொழுதும் மாறிக்கொண்டேஇருக்கும்.ஒருவருடையகுண கர்மங்கள் கூட எப்பொழுதும் மாறிக் கொண்டேயி ருக்கும். பிறகு எவ்வாறு வருணத்தை நிச்சயிக்க முடியும்?”

பக்தர்: “காந்தியின் கருத்துப்படி வைதீகர்களுக்கு கொஞ்சம் வலிமை அதிகரித்துள்ளது”.

குரு: “காந்தி ஏன் இவ்வாறு கூறுகின்றார்? நன்றாகச் சிந்தனை செய்யாமல் இருந்திருக்கலாம். நம்முடைய கருத்துப்படி சாதி இல்லை. உண்டென்று எண்ணுவதால் தீமையல்லாமல் நன்மை எனன உள்ளது? மகா கஷ்டம்! இன்னும் இந்த (சாதி) நம்பிக்கை போகவில்லையே”.

பக்தர்: “சாதியினால் பல நன்மைகளும் ஏற்பட் டுள்ளதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். பரம் பரையாக ஒரே தொழிலை செய்து வந்தால் அது அந்தத் தொழிலில் நிபுணர்களை உண்டாக்குமாம். சாதியின்படிதொழிலைஏற்படுத்தினால்வாழ்க்கை யில் போட்டி குறையுமென்றும், எல்லோருக்கும் வேலைகிடைக்குமென்றும்ஒருபிரமுகர்அண்மை யில் கூறினார். நாடுகளைக் கூட சாதிகளாகப் பிரித்து ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு தனித் தொழிலுக்கு முக்கியத்துவம் அளித்தால் நாடுகளுக்கிடையேயுள்ள போட்டிகள் தீருமென்பதும் அவருடைய கருத்து”.

குரு: “சாதியினால் ஒரு நன்மையுமில்லை. அது மனிதர்களுடைய சுதந்திரத்தைத் தடுக்கின்றது. புத்தியை அழிக்கின்றது. சுதந்திரமும் புத்தியும் இல்லாமல் தொழில் எவ்வாறு சிறக்கும்? நம்முடைய ஆசாரி, கொல்லன் முதலியவர்களுக்கு ஒன்றும் தெரியாமல் ஆகிவிட்டதல்லவா! புத்தியும் கெட்டு விட்டது. சாதியினால் தொழில் கெட்டுவிடும். ஒரே விஷயத்தையே பார்த்துக் கொண்டு உலகில் பிற எதனையும் அறியாதவர்களால் எந்தவொரு வேலை யையும் நன்றாகச் செய்ய இயலாது. திறமைக்கேற்ப ஒவ்வொருவரும் தொழிலில் ஈடுபடவும் வாய்ப்பு இல்லையல்லவா.. பிறப்பின் காரணமாக ஒரே தொழி லைச் செய்ய வேண்டி வரும். வாய்ப்பும் திறமையும் இல்லையென்றாலும் அதனையே செய்ய வேண்டும். அப்பொழுது தொழில் சிறக்க ஒரு வழியுமில்லை”.

பக்தர்: “மகனுக்கு தந்தையின் தொழிலில் பொதுவாக திறமை காணப்படும் என்றே அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்”.

குரு: “அப்படியானால், பிறகு சாதி தேவையில் லையே. சாதி இல்லை என்றாலும் மகன் தந்தையின் தொழிலை மேற்கொள்வானே! கட்டாயப்படுத்தவும் 
வேண்டாம்.முழுஉரிமைகொடுக்கலாமல்லவா. அப்பொழுது அறிவியல் வல்லுநர்கள் நமக்கு ஆதரவளிக்கவே  செய்வர். மனிதனின் சுதந்திரத் தையும், அறிவையும் குறைப்பதனால் ஒரு பயனும் இல்லை. விருப்பம் போல வேலையைத் தேர்ந்தெடுக்க எல்லோருக்கும் சுதந்திரம் வேண்டும். ஒன்றை மட்டுமே படிக்க வேண்டுமெனச் சொல்லக் கூடாது. எல்லோருக்கும் எல்லாவற்றையும் படிக்கவும், பயிற்சி செய்யவும் தடைகள் இருக்கக்கூடாது”.

பக்தர்: “அவ்வாறு சுதந்திரம் கொடுத்தால் போட்டி அதிகரிக்குமாம். அதனால் உலகிற்கு சுகத்தை விட துக்கமே அதிகம் உண்டாகுமென்று அவர்கள் கூறுகின்றனர்”.

குரு: “இது சாதியைப் படைத்தவர்களின் வாதமாக இருக்கக்கூடும் இல்லையா? சாதியினால் எல்லா நன்மையும் பெறுபவர்கள் அவ்வாறு சொல்வார்கள். பிறர் துன்பப்படுவது அவர்களுடைய நன்மைக்குத் தேவையாக இருக்கலாம்.

மனிதன் வாழ்வது சாதிக்கும் உலகத்திற்குமாகவா? மனிதன் கெட்டுப்போய் உலகத்திற்கு நன்மை உண் டாவதால் என்ன நன்மை?
சாதி இல்லை; உண்டென்று எண்ணுவது மடத் தனம்“.
(நன்றி: ‘இவர் தான் நாராயண குரு’ ஜோசப் இட மருகு, கீழைக்காற்று வெளியீட்டகம், பக்கம் 57-60)

சாதிமுறையின் - வருண முறையின் தெய்வீகம், நன்மைகள், குணகர்ம அடிப்படைகள் என பகவத் கீதையில் பரவசமடைபவர்களுக்கு, குருவின் இந்தத் தெளிவான, கூர்மையான, அறிவுபூர்வமான மறுப்பு அவர்களின் போலியான மயக்கத்தைப் போக்கிடும் என்று நம்புவோம்.

ஆலுவா ஆசிரமத்தில் பத்திரிகையாளர் ஒரு வரிடம் நாராயண குரு கூறியுள்ளதையும் பார்ப்போம்.

“மனிதனுக்கு சாதி இல்லை என்று நாம் சொன்னதாக எழுதி வைப்பதில் (எனக்கு) எதிர்ப்பு இல்லை. சாதி உண்டு என்கிற எண்ணம் ஒழிய வேண்டும். அதுதான் வேண்டும்.
சாதியைக் குறிப்பிடுகின்ற பெயர்களை உப யோகிக்கக் கூடாது. எழுத்துகளில் (ஆவணங்களில்) சாதியைக் காட்டக்கூடாது. அதற்கு அரசிடம் எழுதி அனுமதி வாங்க வேண்டும். மதத்தை விருப்பம் போலச் சொல்லவும், இல்லையென்று சொல்லவும் உரிமை வேண்டும். முயன்றால் அரசிடமிருந்து எதிர்ப்பு வராது. இப்படிப்பட்ட நிலை உருவானால் சாதி தானாககே போய்விடும்“.

(“சிறீ நாராயண குரு ஸ்வந்தம் வசனங்களிலூடெ”, 
பக்கம் 16.

“இவர்தான் நாராயண குரு” - ஜோசப் இட மருகு, பக்கம் 56இல் எடுத்தாளப்பட்டது)

1916 இல் நாராயணகுரு வெளியிட்டுள்ள கருத்துகள் பத்து ஆண்டுகளுக்குப் பின் வடிவம் பெற்ற தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கோட்பாடுகளுடன் வியக் கத்தக்க வகையில் ஒத்துப்போகின்றன.

ஏனென்றால் “நிக்ஷீமீணீt னீமீஸீ tலீவீஸீளீ ணீறீவீளீமீ” அதாவது மாமனிதர்கள் ஒன்று போலவே சிந்திக்கின்றனர்.

மதவாத சாதீயம் ஓர் இந்து தாலிபானிஸமாகத் தலையெடுத்து சமூகநீதி - சமூக, தேச ஒற்றுமை மற்றும் முன்னேற்றத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இச் சூழலில், பொதுநீதி, பொதுமைச் சமூகம், புதுமைச் சமூகம் நாடும் நல்லோர்களுக்கு, புதியதோர் உலகம் படைக்க விழையும் இளம் தலை முறையினருக்கு, விடியலைத் தரும் வழிகாட்டுதல் ‘கீதோபதேச’த்தில் இல்லை.

மாறாக
“ஒருசாதி - ஒரு மதம் - ஒரு தெய்வம் மனிதருக்கு”
“சாதியைக் கேட்காதே
சாதியைக் கூறாதே
சாதியை நினையாதே”

என்ற நாராயண குருவின் நன்னெறிகள்தாம் நமக்கு விடுதலை விடியலைத் தரும் வழிகாட்டி களாகும்.

(நிறைவு)
-விடுதலை,30,31.8,1.9.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக