பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

சமூகநீதிக் களத்தின் சரித்திர நாயகர்கள்

திராவிடர் இயக்கமான - தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் “நீதிக்கட்சி” ((Justice Party) என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட அக்கட்சி அந்நாளில் நடத்திய ஜஸ்டிஸ் ஏட்டினையும், அதன் லட்சியமான சமூக நீதியையுமே முன்னிலைப்படுத்திடும் பெயர் கொண்டது.  அந்த  அமைப் பின் முழு வரலாற்றையும், அதற்காக அரும்பாடுபட்டு உழைத்து தமது அறிவு, உழைப்பு, அனுபவம், செல்வம் எல்லாவற்றையும் பார்ப்பனரல்லாதார் சமூகத்தின் எழுச்சிக் கும், வளர்ச்சிக்கும், கொடுத்த உத்தமத் தலைவர்கள் வாழ்வையும், வரலாற்றையும், அவர்கள் போராடி நமக்குப் பெற்றுத் தந்த உரிமைகளையும் 100 ஆண்டுகள் ஓடி விட்ட நிலையில், நமது இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து உணர்வு கொள்ள வேண்டும்.
வேர்களின் வரலாறு, விழுதுகள் அறிய வேண்டும்
டாக்டர் சி.நடேசனார்
அந்த அரும் உழவர்கள் இந்த மண்ணை சமூகநீதிக்காக பக்குவப்படுத்திட, பெரும்பான்மையான மக்களுக்கு, வெகு சிறுபான்மையோர் மனுஸ்மிருதி, வேதங்கள் என்பவை களை மூளைக்குச் சாயமாக ஏற்றியதனால் ஏற்பட்ட தற்குறித்தனம், கல்வி உரிமை மறுப்பு - அறியாமை - வறுமை - இவைகளிலிருந்து பெரும்பான்மையினரான நம் மக்க ளைக் காப்பாற்றிட பிறந்ததே பார்ப்பனரல்லாதார் கட்சியான நீதிக்கட்சி. அதன் முன் னோடிகள் தனித்தனியே தம் முயற்சிகளை மேற்கொண்டனர். 1912 முதலே, டாக்டர் சி.நடேசன் அவர்கள் கல்வி கற்றுக் கொடுக்க போராடிய பல்வேறு சாதனைகளும், 1916ல் சர்.பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் அவரோடு இணைந்த பல பார்ப்ப னரல்லாத தலைவர்களும் ஆற்றிய   அருந்தொண்டு களும், வரலாற்று பாடங்களாக்கி வழி வழியாக அறிந்து கொள்ள ஏனோ நாம் தவறிவிட்டோம்.
1967இல் அறிஞர் அண்ணாவைப் பார்த்து,
செய்தியாளர்கள் ஒரு கேள்வி கேட்டனர்:
1957இல் தேர்தலில் போட்டியிட்டு 1967இல் - பத்தே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்த பெருமை உங்கள் கட்சியின் (திமுகவின்) தனிப்பெரும் சாதனை அல்லவா? என்று அண்ணாவிடம் கேட்க, அறிஞர் அண்ணா மிகுந்த பெருமிதத்துடனும் அதே நேரத்தில் தன்னடக்கத்துடனும் சொன்ன பதில் என்ன தெரியுமா?
“எங்களுடைய வெற்றி ஏதோ 10 ஆண்டுகளில் கிடைத்த வெற்றி அல்ல; எங்கள் பாட்டன் - நீதிக்கட்சி இட்ட அஸ்திவாரத்தின் மீது ஏற்பட்ட வெற்றி. நீதிக்கட்சி அப்போது தோல்வி அடைந்த பின், காங்கிரஸ் கட்சியின் சத்தியமூர்த்தி அய்யர் ‘நீதிக்கட்சியை 500 அடி ஆழக் குழிதோண்டிப் புதைத்து விட்டோம்’ என்று கூறியது உண்மை அல்ல; இதோ நாங்கள் அதன் தொடர்ச்சியாகவே இந்த வெற்றிக் கனியைப் பறித்துள்ளோம்” என்றார்.
நீதிக்கட்சிக்கு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அக்கட்சிக்குப் புது ரத்தம் பாய்ச்சிய தந்தை பெரியார் அவர்கள் “அதென்ன அல்லாதார்?” 100க்கு 3 பேர்களாக உள்ளவர்களை வைத்து எஞ்சிய 97 பேர்களை அல்லா தார்கள் என்று  அடையாளப்படுத்திக் கொள்ளுதல், மிகவும் இழிவு - கேவலம் அல்லவா? நாம் 97 சதவிகிதத்தினர்  திராவிடர்கள் என்று வரலாற்றுப் பெருமை தரும் பெய ரையே வைத்துக் கொள்ளலாமே” என்று கூறிய பின்னர் திராவிடர் என்ற வரலாற்று பெருமை தரும் அடையாளமும், திராவிடரின்  மீது  ஆதிக்கம் செலுத்தியவர்கள் ஆரியர்கள் என்ற உணர்வும் பரவ ஆரம்பித்தது.
திராவிடர் இயக்கத்திற்கு அடிக்கல் நாட்டி, கட்டடம் எழுப்பி, ஆட்சிக் கட்டிலும் அமைத்து ஒரு மாபெரும் அரசியல், சமுதாய (கல்வி, உத்தியோக) எழுச்சியை - ஏற்படுத்திய கர்த்தாக்களை நாம் மறக்கலாமா? வரலாறு நம்மை மன்னிக்குமா? என்ற உணர்வோடு அந்தத் தலை வர்களைப் பற்றி அறிந்து கொள்ள 50 ஆண்டுகளுக்கு முன்பே முயற்சி எடுத்த திராவிடர் இயக்க எழுத் தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர், போற்றுதலுக்கு உரியவர், தலை சிறந்த திராவிடர் இயக்க எழுத் தாளர், அதிக விளம்பரம் பெறாத - விரும்பாத ஒரு பேனா மன்னர் தோழர் கோ.குமாரசாமி  என்ற மயிலாடுதுறைக்காரர்.  இவர் மத்திய அரசின்
இரயில்வே துறையில் பணியாற்றியதால் தான்  ‘திராவிடப்பித்தன்’ என்ற பெயரில் எழுதியவர். தோழர் என்.வி.நடராசன் அந்நாளில் நடத்திய திராவிடன் வார ஏட்டில் வெளியிடச் செய்தார்.
தோழர் என்.வி.நடராசன் அவர்கள் நடத்திய வாரப் பத்திரிகை - நீதிக்கட்சியின் - துவக்கத்தில் வெளிவந்த தமிழ்நாளேடான ‘திராவிடன்’ ஏட்டினை நினைவுபடுத்தவும், இன உணர்வூட்டும் வகையிலும் அப்பெயரில் அவரால் நடத்தப்பட்டது. திராவிடன் வார ஏட்டின் மலரில் மாணவ நிலையிலே கட்டுரை எழுதிடும் வாய்ப்பை தோழர் என்.வி.என். அவர்கள் என்னை போன்ற மாணவ, இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் தந்துள்ளார்.
அப்படி அதில் எழுதிய வரலாறும், பிறகு தனியே  அவை நூல்களாக வரவேண்டும், திராவிடர் இயக்க முன்னோடி களின் வரலாறு இளைய தலைமுறையைச் சேரவேண்டும் என்ற சிறந்த நோக்கத்திலும் பல்வேறு நூலகர்கள், பழகிய அறிஞர்கள், நண்பர்களை எல்லாம் சந்தித்துத் தேனீ, தேனை பல பூக்களிலிருந்து திரட்டி தேன்கூடு கட்டிட உதவுவதுபோல அரும்பணியாற்றிவர் தோழர் கோ.குமாரசாமி. (1985 மயிலாடு துறையில் 22, செங்கமேட்டுத் தெருவில் குடியிருந்தார் என்பதை மட்டுமே அறிய முடிகிறது நம்மால்). அவர்கள் மிகவும் கடினமாக உழைத்து அவர் எழுதிய நூல். 1967இல் அறிஞர் அண்ணா முதல் அமைச்சர் ஆன நிலையில் அவருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்ட “இராவ் சாகிப்” நல். முருகேச முதலியார் (இவர் ஓய்வு பெற்ற அதிகாரி மற்றும் நீதிக்கட்சி பிரமுகர்) அவர்களது முயற்சியால் 1984இல் டாக்டர் சி.நடேசனார் பற்றிய முழுதகவல்களைக் கொண்ட களஞ்சியமாக அவரது நூற்றாண்டு வெளியீடாக - தோழர் குமாரசாமி எழுதிய நூல் வெளிவந்தது!
இது போலவே சர்பிட்டி தியாகராயர் பற்றியும், டாக்டர் டி.எம்.நாயர் பற்றியும் தோழர் குமாரசாமி அவர்கள் பல்வேறு நூல்களிலிருந்து பல அரிய தகவல்களைத் திரட்டி தோழர் குமாரசாமி அவர்கள் “திராவிடப் பெருந்தகை தியாகராயர்” என்ற தலைப்பில் 1985இல் எழுதி அதை திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூல் பதிப்புக் கழகம் லிமிடெட், வெளியிட்டுள்ளது (அந்நூல் மீள் பதிப்பாக நம்மால் விரைவில் வெளிக் கொணரப்பட விருக்கிறது)
இப்படி நமது தலைவர்களின் வரலாற்றை புதைபொருள் ஆராய்ச்சிபோல் தேடித்தேடி கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. சிந்துவெளி நாகரிகத்தினை - திராவிடர் நாகரிகத்தை எப்படி சர்ஜான்மார்ஷல் (பாதர்) ஈராஸ் பாதிரியார் போன்றவர்கள் தொல்பொருள் ஆய்வு மூலம் தந்தார்களோ, அது போல நம் குமாரசாமி நமக்கு தந்துள்ள அரிய கருவூலம் ஆகும் இது. அதிலிருந்த பலவற்றையும், வேறு பல நூல்களிலிருந்து திரட்டியவைகளையும், இன்றைய தலைமுறையினர் வர லாற்றை மறந்தவர்களாகக் கூடாது என்ற நோக்கத்துடன் தொடர் கட்டுரைகளாக எழுதிட முனைந்துள்ளோம்.
வாசகர்கள் வரவேற்றுப் பயன் அடைவார்கள் என்று நம்புகிறோம்.
அடுத்த இதழ் முதல் திராவிடர் கல்வித் தந்தை டாக்டர் சி.நடேசனாரின் தியாக வாழ்வின் பல்வேறு படலங்கள் தொடரும்.
குறிப்பு: ஒவ்வொரு புதன், ஞாயிறுகளில்
இத்தொடர் வெளிவரும்.
-விடுதலை,6.7.16

1984இல் வெளிவந்த நூல் இராவ் சாயிப் நல். முருகேச முதலியார் எழுதிய முன்னுரையை முதலில் தருகிறோம். படியுங்கள். சிறப் பான முன்னுரை (இவர் அறிஞர் அண்ணா 1967இல் முதலமைச்ச ரானபோது அவரது ஆலோசகராக நியமிக்கப்பட்டவர்).

“சமீப காலத் தமிழக வரலாறு ஒருவாற்றானும் சீராக எழுதப்படவில்லை. தென்னிந்தியாவுக்கே மொழி, சமுதாயம், பண்பாடு, அரசியல் முதலிய வளர்ச்சிக்குத் தமிழகம் தாயகமாக இருந்துள்ளது. சுமார் நூறாண்டுக் கால அளவில், தமிழ்நாட்டின் வரலாறு தேசிய சரிதத்துடன் பின்னிக் கிடக்கிறது. பல சாதனை களும், சில இடர்ப்பாடுகளும் கூடிய கால அளவை இது.
தமிழ் வாழவேண்டுமெனில், மற்றையவர் தமிழ் நாட்டின் மேன்மையை அறியவேண்டுமெனில், இளைய சமுதாயம் தெளிவான சரித்திர உண்மைகளை ஆய்ந்து பார்த்தல் இன்றிய மையாதது. தமிழகம் வாழப் பாடுபட்ட பல பெரியோர்களின் வரலாறுகள் கூட மறைந்தும், மழுங்கியும் கிடக்கின்றது. இந்தக் குறைகள்தீர இப்போது நல்ல தருணமாகக் காணப்படுகிறது.
தமிழ்ப் பல்கலைக் கழகங்கள், உலகத் தமிழ்ச் சங்கம் முதலியன தோன்றும் இந்த நேரத்தில், நூல்கள் பல எழுதப்பட்டால் நலமுடைத்து. கற்றவர்களும் மற்றவர் களும் முன்நோக்கிப் பார்த்தல் மட்டுமன்றி, நிகழ்காலத்தையும், சென்ற காலத்தையும் நோக்கி, வரலாற்றுக் காரண காரியங்களின் தொடர்பை அறிந்து கூறுவதும் கடனாகும். அவ்வக் காலங்களில் வாழ்ந்த சான்றோர் களின் வாழ்க்கையையும், கொள்கைகளையும் அறிந்து கொள் வது பயன்படும் பயிற்சியாகும்.

இந்தச் சீரிய உண்மையைச் சுமார் 70 ஆண்டுகட்கு முன்பே கண்ட பெருந்தகையார், டாக்டர் சி. நடேச முதலியார் என்பதை யும், அவர் தியாகத்தையும், மக்கள் சேவையையும் இந்தச் சிறு நூல் எடுத்துக் கூறும். பிற்படுத்தப்பட்டோர் கல்வி அபிவிருத் திக்கும், முதியோர் கல்விக்கும், திராவிடர் இல்லம்(Dravidan Home)  என்ற மாணவர்  விடுதியையும். சென்னை அய்க்கிய சங்கம் (Madras United League) என்கிற ஸ்தாபனத்தையும் டாக்டர்  நடேசனார் சுயேச்சையாக, தன்னலமின்றி 1914ஆம்   ஆண்டில்  துவக்கிப் பரிபாலித்து வந்தார். இவ்விரண்டும் பொது ஜன நலனுக்கு வித்தாக அமைந்தன.

கவி ரவீந்திராத தாகூர் சாந்தி நிகேதனில் பல நாட்டுப் பண்பாளர்களையும் சேர்த்து ஒரு கல்வி  பண்ணையை ஏற் படுத்தியதுபோல், திராவிட இல்லம் பயன்பட்டது.  தென்னிந்திய மாணவர்கள் பலர் அங்குத் தங்கித் தங்கள் படிப்புகளைக் கவனித்துக் கொள்ளவும், பண்பாடு, ஒழுக்கம், நேர்மை இவை களை நல்ல சூழ்நிலையில் வளரச்செய்யவும் இது பயன்பட்டது. இந்த இல்லத்தில் பல்வேறு வருணத்தவரும் கூடிப் பழகினார்கள். பிரதி வாரமும் இளைஞர்கட்கு கல்விமான்களைக் கொண்டு அறவுரையும், அறிவுரையும் நல்க நடேசனார் ஏற்பாடு செய்தார். இதனால், குலபதி சர் .ஆர்.வெங்கடரத்தினம் போன்றவர்களின் தொடர்பு இளைஞர்கட்குக் கிடைத் தது. டாக்டர் நடேசனாரின் தனிப்பட்ட இந்த முயற்சி யைப் பாராட்டியவர்கள் பலர்.

இந்த இல்லம், அறிவாளிகள் மிகுந்த சென்னைத் திருவல்லிக் கேணியில், டாக்டர் நடேசனாரின் வீட்டின் அருகாமையிலேயே நடத்தப் பெற்றது. சமுதாயத்தில் பெரும்பாலார் மிகவும் பிற்பட்ட வர்களாகத் தங்கியதைத் தீர்க்கும் நோக்கம் ஒன்றன்றி வேறு நோக்கம் இதற்கு இல்லை என்பதை யாவரும் உணர்ந்தார்கள். வித்திட்டவரின் சான்றாண்மையைப் போற்றினார்கள்.
நடேசனார் நல்ல வேளாளர் பழங்குடியில் பிறந்து வளர்ந்து, பி.ஏ. படிப்புப் பூர்த்தியானவுடன், மேற்கூறிய மகரிஷி போல் வெள்ளை உடை தரித்த சர் . ஆர்.வெங்கடரத்தினம் நாயுடு தலைமையில் நடந்துவந்த பித்தாபுரம் மகாராஜா கல்லூரியில், உடல்கூறு (Physiology)     விரிவுரையாளராகச் சிறிது காலம் பணி யாற்றினார். பின் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து, மருத்துவப் பட்டம் பெற்றுப் பணிபுரிந்தார்; பொதுப் பணிகளிலும் ஈடுபட்டார்.

திராவிடர் இல்லம் வளர்ச்சியில் சர் பிட்டி  தியாகராயச் செட்டியார், பனகல் அரசர் போன்ற மேன்மக்களும் ஈடுபட்டார் கள். முதலாண்டு பூர்த்தி விழாவுக்குச் சென்னை கவர்னரே விஜயம் செய்தார். டாக்டர் நடேசனாரை ஊக்குவித்தவர்கள் அரசியல்வாதிகள் அல்லர். தமிழ் எழுத்து ஆராய்ச்சி வல்லுனர் (இன்ஜினியர்) பி. வி. மாணிக்க நாயக்கர், தத்துவமேதையும் சீர்திருத்தவாதியுமான டி.கோபாலச் செட்டியார், சு. வி. நடராஜன், வழக்கறிஞர்கள் எதிராஜ் முதலியார், சிவப்பிரகாச முதலியார், மதனகோபால நாயுடு முதலியவர்களே ஆவர்.
இந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்களிற் பலர் நீதிபதிகளாக வும், கவர்னர் சபை மெம்பர்களாகவும் கூடப் பிற்காலத்தில் ஆனார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்ற எல்லாப் பகுதிகளையும் குறிக்கும் ஒரே பண்பாட்டுச்சொல் திராவிடம் என்பது. பழைய நூல்களும் தென்னாட்டைத் திராவிடம் என்றே வழங்கியது. சிலர், நாம் திராவிடர் இல்லை யென்றால் இவ்வுண்மை பழுது படாது. இந்த இல் லத்தில் படித்தவர்கள் யாவரும் நல்ல யோக்கியதையும் புகழும் பெற்று விளங்கினார்கள்.
நடேசனார், தமது மருத்துவத் தொழிலில் ஜாதி மத வித்தியாச மின்றி, எல்லோருக்கும் சேவை செய்து வந்தார். பலரும் மருந் துக்கும், சர்டிபிகேட்டுகட்கும் பணம் கேட்கப் படாமலே பெற்றுச் செல்வார்கள்.

அரசியல் ஆதரவிற்கோ, நடேசனார் அவ்வாறு செய்ய வில்லை. டாக்டர் ஆல்பர்ட் சுவைட்சர் ஆப்பிரிக்காவில் அந் நியர் ஆதிக்கத்தால் படிப்பிலும் சுகாதாரத்திலும் பிற்போக்க டைந்து கிடந்த அந்நாட்டு ஜனங்களுக்கு மருத்துவப் பணி பல்லாண்டுக் காலம் புரிந்தார். அதுபோலவே, தயை என்பதே பரமதர்மம் என்று பின்பற்றி, நடேசனார் உழைத்து தம் சொத்து களையும் நாளடைவிலே இழந்தார். சொந்த சேவை மட்டுமின்றி, சென்னை மாநகர சபையில் அங்கத்தினராகி, முக்கியமாக சுகாதாரம், கல்வி தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றம் இவைகட்கு இடைவிடாது உழைத்தார்.

அக்காலத்தில் பெரும்பாலோர் கல்லூரிகளிலும், உத்தியோகங் களிலும், சட்டமன்றத்திலும் ஜனத் தொகைக்கேற்ற இடம் பெறாது, மிகத் தாழ்ந்த நிலையில் இருந்தனர். செல்வாக்கும் சிறப்புமின்றிப் பாதிக்கப்பட்டார்கள். ஒரு சமூகத்தினர் மட்டும் கல்வி முன்னேற்றத்தாலும், குடும்ப ஆதரவினாலும் பல முக்கிய  ஸ்தானங்களில் இருந்து வந்தார்கள். பிற்பட்டவர்கள் தலை யெடுக்க விரும்பிய காலத்தில், முன்னேறி விட்டவர்கள் இடம் தருவதற்கு முன் வரவில்லை. தகுதி மேன்மையடைந்தவர்கள் மேல் கொண்ட துவேஷத்தால் அவர்கள்,  முன்னேறியவர் களை வெறுக்கிறார்கள் என்றார்கள். இது உண்மையல்ல. சுமார் 1896ஆம் ஆண்டில் ரெவின்யூ போர்டார் எல்லாச் சமூகத் தாக்கு ரும் அரசாங்க உத்தியோகங்களில் ஏறக்குறைய நியாயமான பங்கு கொடுக்க வேண்டும் என்று ஏற்படுத்திய உத்தரவை, மேலதிகாரிகள் ‘தகுதி’ என்று பேரால் அமல் செய்யவில்லை. ஜனத்தொகைக் கணக்குகளிலும் இந்த உண்மை விளங்கியது.

முதல் முதலாக, குத்துப் புள்ளிகளுடன் சர். அலெக்சாண்டர் கார்டியு என்ற கவர்னர்சபை மெம்பர், பிரிட்டிஷ் அரசாங்கம் அமைத்த பப்ளிக் சர்விஸ் கமிஷனுக்குச் சமர்பித்த சாட்சியத்தில் இதை வெளியிட்டார். கல்வி உத்தியாகம் மட்டுமின்றி, கவர்னர் சபையிலும் மிண்டோ மார்லி சீர்திருத்தம் வந்த பிறகும், ஒரு சார்பாரே ஏறக்குறைய எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள் என்று காணப்பட்டது. இது முன்னேறியவர் குற்றமில்லாமல் இருக்கலாம்; ஆனால் சமநீதிக்கும் பிற்பட்டோர் முன்னடி எடுத்து வைக்கவும் வில்லங்கமாகவே இருந்தது. என்பதைப் பலர் உணரவில்லை.

ஆங்கில அதிகாரிகளிலும் கூடச் சிலர், பிற்பட்டவர் களை அதிகமாக உத்தியோகத்தில் சேர்த்தால் நிர்வாகத்தரம் குறைந்து விடுமென்ற கருத்து கொண்டிருந்தனர். பல்வேறு துறைகளில் அய்ரோப் பியர் பெரும்பான்மையைக் குறைத்து இந்திய மயம் (Indianisation) ஆக்க வேண்டுமென்ற வேண்டு கோளுக்கும் இம்மாதிரி எதிர்ப்பு இருந்தது அறிந்ததே. பிற்படுத்தப்பட்டோர் களில் சிலர் வெகு உயர்ந்த தகுதிகளில் இருந்தாலும், மேல்தரக் கல்விச்சாலைகளிலும், அலுவலகங்களிலும் ஏகபோகம் அனுப வித்து வந்தவர்கள், இவர்கட்கு இடம் கொடுப்பதற்குத் தயங்கினர்.

கல்வி, உத்தியோகம், சட்டமன்றத்தில் இடம் இவை களில் வகுப்புவாரி நீதி நல்க வேண்டுமென்று முதல் முதலாகக் குரல் எழுப்பி, ஆக்க வேலைகளில் தலைப் பட்டவர் டாக்டர் நடே சனார் என்பது வரலாற்று உண்மை. இந்த நீதியை வைசிராய் சபை முதலிய பெரிய இடங்களில் கேட்பதைவிட, கல்வி முதலிய ஆதாரத்துறைகளில் பெற்று முன்னேற்றம் அடைதலே உறுதி யளிக்கவல்லது என்பதையும் நடேசனார் அறிந்தார். பின்னர் அன்னி பெசண்டு அம்மையார் ஆரம்பித்த சுய - ஆட்சி (Home Rule) கிளர்ச்சியில், கல்வியிலும், பதவியிலும், ஆதரவிலும் ஏற்கனவே முன்னேற்றம் அடைந்தவர்கள் துரிதமாக ஈடுபடத் தலைப்பட்டார்கள். இதனால் பின் அடைந்தவர்கள் பிற்போக்கி லேயே இருந்து அவதிப்படுவார்கள் என்ற அச்சம் பல தேசிய வாதிகளிடமும் உண்டாயிற்று.

இதன் விளைவாகத் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Liberal Federation) என்ற ஒரு அமைப்பு உண்டாயிற்று. இது 1916ஆம் ஆண்டில் சர் பிட்டி தியாகராயச் செட்டியார் விடுத்த அறிக்கையில்(Manifesto) விளக்கப்பட்டது. அப்போது மகாத்மா காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் (1921) இல்லை. பிரிட்டிஷ் அரசாங்கம் கொடுத்த சில சீர்திருத்தங்களின் கீழ் (1918 சட்டம்) முதல் 1920இல் சட்டசபைத் தேர்தல்கள் நடந்தன.

(தொடர்ச்சி வரும் புதன்கிழமை (13.7.2016) வெளிவரும்)

(குறிப்பு:  அவரது சொல்லாட்சிகள்
அப்படியே தரப்பட்டுள்ளன - ஆசிரியர்)
10.7.2016 அன்று வெளிவந்த இராவ் சாயிப் நல். முருகேச முதலியாரின் முன்னுரை மேலும் தொடருகிறது.
இதில் நீதிக்கட்சி என்று பிறரால் கொடுக்கப்பட்ட பெயரால் தேர்தலில் வெற்றி பெற்று அக்கட்சி மந்திரி சபையும் அமைத்தது. நடேசனார் அந்தத் தேர்தலில் அமோகமான வெற்றி பெற்றார். பதவி வேட்கையற்ற வராகையாலே, அமைச்சரவையில் அவர் இடம் நாடவில்லை. கட்சியும் அவரது தியாகத்தை உணரவில்லை.
முதல் தேர்தலில் நடேசனார் எல்லாரையும் விட அதிக வாக்கு கள் பெற்றது கட்சியினரையும் தலைவர்களையும் பிரமிக்கச் செய்தது. எல்லா ஜாதியினரும் நடேசனாருக்கு பெருத்த ஆதரவு தந்தனர். ஒரு இனத்தார் வெறுப்பையும் சிறிதளவும் சம்பாதித்துக் கொள்ளாத சமரச மக்கள் பிரதிநிதியாக அவர் விளங்கினார். எனவே, அவரது வகுப்புவாரி வாதத்தை யாரும் எதிர்க்கவில்லை; அவரது வாதங்களை யாவரும் மதித்தனர்.
கல்வி நிலையங்களிலும், பொது அலுவலகங் களிலும் தகுதி பெற்ற திராவிடர்கட்கு நியாயமான இடங்களை ஒதுக்க வேண்டு மென்று நடேசனார் வற்புறுத்தினார். அந்நிய அரசாங்கம் தந்த சிற்சில சலுகைகளைக் கூட அதிகார வர்க்கத்தினர் பின்தங்கியவர் கட்குக் கொடுக்காததைக் கண்டித்தார். அதற்குப் புள்ளி விவரங்கள் தந்தார். இலாகா ஊழியர்கள் தேர்ந்தெடுக்கும் வாரியத்தை நீக்கி, அரசாங்கத்திற்கு உட்படாத பப்ளிக் சர்வீசு கமி ஷனை நியமிக்க வேண்டுமென்று, சட்டமன்றத்தில் பல சமயங்களில் வாதாடினார்.
ஆதி திராவிடர்கள் நலத்திற்கு நடேசனாரைவிடத் தீவிரமாகப் பாடுபட்டவர்கள் வேறு எவரும் இல்லை. மகாத்மா காந்தியடிகள் அரிஜன நலத்துக்கு இயக்கம் தோற்றுவித்ததற்கு முன்பே நடேசனார் அந்த இனத்தவர் பால் அக்கரை காட்டினார். 1918இல் எழும்பூர் ஸ்பர் டாங்க் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், ஆதிதிரா விடர்களின் உரிமை, தீண்டாமை ஒழித்தல், ஆலயப் பிரவேசம் முதலிய உரிமைகட்கு தீவிரமாகப் பேசினார்.
திவான்பகதூர் (இரட்டைமலை) ஆர்.சீனிவாசன், திரு. எம்.சி.இராஜா போன்ற ஆதிதிராவிடத் தலைவர்கள் நடேசனா ரைத் தம் இனக் காப்பாளராகக் கருதினார்கள். அவர் மருத்துவக் கூடத்திலும், அரிஜன இளைஞர்களுக்கு வேலை தந்தும், வேறு உத்தியோகங்கட்கு சிபாரிசு செய்தும் ஆதரித்து வந்தார். சுவாமி சஹஜானந்தா என்று பின்னாளில் அழைக்கப் பெற்ற ஆதிதிரா விடப் பெரியார் நடேசனாரிடம் பற்றும் தோழமையும் கொண்டி ருந்தார். ஒருசமயம் சிலர் நடேசனாரை ஏசியபோது, தானும் அவர் கட்சியும் சிறீஇராமானுஜர் ஆயிரம் ஆண்டுகட்கு முன் செய்யமுயன்றதையே செய்ய முன்வந்துள்ளதாக அவர் வீறு பேசினார். ஜாதி வேறுபாடற்ற ஆன்மீக நேய ஒருமைப் பாட்டுள்ள சமுதாயத்தைக் காண்பதுவே மகத்தான சேவையாகத் தாம் கொண்டார். வகுப்பு வாதத்தால் இந்திய சுதந்திரம் தடைப்படும் என்று ஓலமிட்டவர்களை நோக்கி, மகாத்மா காந்தி ஒருகோடி ரூபாய் சேர்த்து ஓராண்டில் சுயராஜ்யம் வாங்கித் தர முயன்றார். ஆனால், நான் நாளைக்கே சுதந்திரம் வர விரும்புவேன் என்றும், ஆனால் அந்தச் சுதந்திரத்தில் யாவர்க்கும் சமதர்மம் இருக்க வேண்டு மென்றும் கூறினார்.
புது அரசியலில் வாக்குரிமை, சொத்து, படிப்பு, வரி செலுத்தும் தகுதியுள்ளவர்கட்கே கொடுக்க வேண்டுமென்று கூறியவர் கட்கு, “ஏழைக்குடிகள் வரி செலுத்தாமலிருக்கலாம். ஆனால் அவர்களது வியர்வை உழைப்பால் மற்றவர்கட்குச் செல்வத்தை உண்டு பண்ணுகிறார்கள் என்றும், அவர்கள் வரிசெலுத்தல் ஏழைகள் உழைப்பால் என்றும் எடுத்துக் காட்டி, வாக்குரிமை யாவர்க்கும் முன்னேற்ற நாட்டில் பிறப்புரிமையாக இருக்க வேண்டுமென்று நடேசனார் வாதாடினார்.
நடேசனார் சட்டமன்றத்தில் நிகழ்த்திய பேச்சுக்கள்  அனு பவச் சான்றுடையதாகவும், ஆர்வமுடைய தாகவும் இருந்தன. அவர் வரவு செலவு திட்ட வாதங்கள் மிக்க ஆழ்ந்த அறிவும் நுட்பமும் கூடியதாகக் காணப்படும். அவர் ஈடுபடாத துறையே கிடையாது. முக்கியமாக கல்வி, பொதுநலம், நீர்ப்பாசனம், நிர்வாகம் இவைகளில் முக்கிய பங்கு எடுத்துக்கொண்டார். நீர்ப்பாசன விவாதங்களில் அவரது உரைகளை, அந்நாள் மெம்பர் சர் கே. சீனிவாசய்யங்கார் மிகவும் மெச்சியுள்ளார். சுகாதார விஷயங்களில் அவர் சிறந்த கருத்துகளைக் கூறுவார். கட்டாய ஆரம்பக் கல்வியில் மிகவும் பரிவு காட்டினார். கூட்டுறவு விஷயங்களில் மக்கள் நலத்துக்கு வாதாடினார்.
சென்னையில் பல இடங்களில் ஏழைகள் மேல்கோப்பு கட்டி, வீடுகட்டிப் பலவாண்டுகள் வாழ்ந்து வந்தார்கள். சிலசமயங்களில் திடீரென்று நிலச் சொந்தக்காரர்கள் அவர்களை வெளியேற்ற முயல்வார்கள். ஏழைகள் உரிமை இழக்காமலிருப்பதற்கு, சென்னை குடித்தனக்காரர் பாதுகாப்புச் சட்டத்தை (City Tenants Protection Bill)    ஆதரித்து வெற்றிகரமாக நிறைவேற்றினார். அவர் பேச்சுக்கள் வீண்வாதம் இன்றி, பொருள் செறிவுடையதாய்க் கம்பீரமான குரலில் நிகழ்த்தப்படும்.
சட்டமன்றச் சேவையைவிட மேலும் கவனம் பெற்றது அவரது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.  பலவாண்டுகள் அவர் அங்கத்தினராக மட்டுமன்றி, நகராட்சி மன்றத்தின் பொதுநலக் கமிட்டி(Standing committee for health) தலைவராகவும் இருந்து பல சீர்திருத்தங்களைச் செய்தார். பிரதி காலையிலும் அவர் தமது டிவிஷனில் சில இடங்களையாவது பார்த்துவிட்டுப் பின் தான் தம் மருத்துவ வேலையைத் துவக்குவார்.
பல மருத்துவ மாநாடுகளில் அவர் பங்கு கொண்டார். கிழக்கு ஆசியா மருத்துவ சம்மேளனம் கல்கத்தாவில் நடந்தது. அதில் நடேசனார் கூறிய யோசனைகள் பலராலும் பாராட்டப் பெற்றன. மருத்துவத் தொழிலில் இருந்தாலும், பலதிறப்பட்ட விஷயங்கள் அவருக்குத் தெரியும். அவரது நூல் சேமிப்பை சென்னை மாநகராட் சிக்கு பரிசாகக் கொடுத்தார். அவை ரிப்பன் மாளிகை யில் பல நாள் இருந்தன. அவர் அரசியலில் மட்டும் ஈடுபட்ட வர் எனலாகாது. அவர் ஒரு மன்பதை அன்பராகவே (Humanist) எப்போதும் விளங்கினார். பலர், அவர் தொழிலாளர் இயக்கத்தில் ஆரம்ப காலத்தில் ஈடுபட்டு, ஆர்வமுடைய பங்கும் எடுத்தவர் என்பதை அறியார். திரு.வி.க. தமது வாழ்க்கைக் குறிப்புகள் என்ற நூலில், நடே சனாரின் சேவையைப் பாராட்டிப் பலவிடங்களில் வியந்து உள்ளார். இந்தியாவிலேயே சென்னையில் தான் முதல் தொழில் சங்கம் ஏற்பட்டது.
அதனை ஆரம்பிக்கும்போது அவர் திரு.வி.க. வுக்குத் துணைபுரிந்தார். அதைவிட மகத்தான சேவை, அவர் பக்கிங்காம் கர்நாடிக் நூற்பாலை மூடப்பட்ட போது, தம் உயிர் ஆபத்தையும் பாராட்டாது கலகம் நடந்த இடங்களுக்கு நேரில் போய்ச் சமாதானம் செய்து வந்ததாகும். குளை ஆலை மூடப்பட்டபோது, புளியந் தோப்பில் நடந்த கலவரத்தில் போலீசு சுட்டுச் சிலர் உயிரிழந்தார்கள். அப்போதும் அவர் கருங் காலிகள் என்று துவேஷிக்கப்பட்ட ஆதிதிராவிடர் கட்கு அனுசரணையாக இருந்து, மற்றவர்களை வேலைக்குப் போகும்படி செய்து சமாதானம் செய்து வைத்தார்.   திரு. வி.சக்கரைக் செட்டியார் போன்ற தொழிலாளர் தலைவர்கள், டாக்டரிடம் மிகவும் மதிப்பு வைத்திருந்தார்கள்.
நடேசனார். அரசியலில் நண்பர்களாயினும் சரி தன்னை உதாசீனம் செய்தவர்களாயினும் சரி, அவர் களிடம் நட்பும் விசுவாசமும் உண்மையும் கூடிய உறவுடையவர். கொள்கையில் தீவிரவாதியாக இருந்தாலும், நண்பர்களுக்கு விட்டுக்கொடுக்கும் சுபாவமுடையவர். அவர் சென்னை மாநகராட்சி மன்றத்தில்  மூன்று  முறை  தலைவர் பதவிக்கு அபேட்சித்தார். மூன்று முறையும் நண்பர் கட்கு விட்டுக் கொடுத்தார். உதவித் தலைவர் ஸ்தானத்தைத்தான் கட்சியாளர்கள் அவருக்கு விடுத்தார்கள். அதுபோல. அவர் மந்திரி பதவிக்கும் ஆசைப்படவில்லை. ஒரு தேர்தலில், தாம் சுயேச்சையாக நின்று அமோக வெற்றி பெற்றார். ஆனால், சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், கொள்கையைக் காற்றில்  விடமாட்டேன் என்று அப்போது கூறினார். சட்டசபை யில் அவரை அந்திய காலத்தில் உப தலைவராக கண்துடைப்பாக கட்சியினர்  அமைத்தனர்.
1929ஆம் ஆண்டு தேர்தலில் கட்சி சிறுபான்மை அடைந்தது.  அது காரணமாக பனகல் அரசர் மந்திரிசபை கூட்ட விரும்பவில்லை. டாக்டர் சுப்பராயன் முதன்மையில் சுயேச்சை மந்திரிசபை இயங்கியது. டாக்டர் நடேசனார் மந்திரிசபையில் பிராமணர்கட்கு ஓரிடம்கூடத் தராததால் அவ்வினத்தாரின் முழு வெறுப்பையும் எதிர்ப்பையும் கட்சி பெறுகிறது என்று கூறி, அமைச்சரவையில் பிராமணர்க்கு ஒரு இடம் தரவேண்டுமென்று யோசனை கூறினார். அதன் விளைவாக ஒரு பிராமணர் அமைச்சரவையில் சேர்க்கப் பட்டார்.
நடேசனார் சமரசமும், உதார குணமும் உடையவர் என்பதை உலகம் அறியும். அவரது தியாகத்தைக் கண்டு, யாவரும் வியந்தனர். தமது இறுதி நாளில், தமது ஒரே மகனையும் அவர் இழந்தார். தந்தை போல் நல்ல குணம் வாய்ந்த சரவணன் என்ற மகனார் பி. ஏ. ஆனர்சு படிப்புப் படித்திருந்தார். சுரம் கண்டு அகால மரண மடைந்தார். நடேசனார் அதனால் மனமுடைந்து, உடல் மெலிந்து துக்கமடைந்தார். எனினும், பொதுக் காரியங்களில், இவர்  ஜன உப காரியாகவே உழைத்தார். கடைசி 1937ஆம் தேர்தலில், மனச்சோர் வுடன், அன்பர்கள் வேண்டுகோட்கிணங்க வேட்பாளராக நின்றார், தேர்தல் முடிவு வருவதற்கு முன்பே (18-2.1937 அன்று) நடேசனார் உடல் நீத்தார்.
ஆதிகாலத்தில் இளைஞர் நலக் காப்பாளராக இருந்தது போலவே, ஆயுள் முழுவதும் அவர் உழைத்தார். கல்லூரிகட்கு மாணவர் தேர்தல் கமிட்டி அவர் வற்புறுத்தலால் நியமிக்கப்பட்டது. பல மாணவர்கட்கு நீதியும் வாய்ப்பும் கிடைத்தது. வேறு துறை களிலுள்ள, மதன கோபால நாயுடு, திரு. ரங்கராமானுஜம், சண்டே அப்சர்வர் திரு.றி.பாலசுப்ரமணியம் போன்றவர்களைத் தம் பெற்ற பிள்ளைகள் போலவே பாவித்தார். சீர்திருத்தங்களை மேடையில்பேசி வாழ்க்கையில் கைவிட்ட பதர்கள் போல் அல்லாமல், ஒவ்வொரு நேரமும் நன்மையே புரிந்த சான்றாளராக விளங்கினார். பலர் அவரை ஒரு அரசியல் தலைவராக மட்டும் கருதாது, அன்பு நெறி காட்டிய சமயத் தலைவர்களின் வரிசையிலேயும் வைத்துப் போற்றினர்.
தமிழ்ப்பண்பாட்டின் தலையான கோட்பாடாகிய “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற இலக்கணத் துக்கு எடுத்துக்காட் டாகவே நடேசனார் விளங்கினார். எப்போதும் நல்ல உடை தரித்தலும், உண வில் மிதமும், தூய்மையும், புலாலுண்ணாமையும் கடைப்பிடித்தவர் இவர்.
நல்லவர்கட்குப் பெரிய சான்று அவர்கள் சடல ஊர்வலத்தை கண்டு மக்கள் என்ன பேசுகிறார்கள் என்பதாகும். டாக்டர் நடே சனார் சடல ஊர்வலத்துக்கு ஒரு மைல் நீளம் மக்கள் திரண்டார்கள். கையெடுத்துக் கும்பிட்டார்கள். படுதாவிலிருக்கும் முஸ்லீம் பெண்கள் கூட  நாடுபோற்றிய நல்லவரின் சாந்தமான முகத்தை தரிசித்தும், பாதத்தைக் கும்பிட்டும் கண்ணீர் வடித்தனர். அவர் பூதவுடல் மறைந்தாலும், அவர் புகழுடல் இன்றும் கண்ணிலும் கருத்திலும் நிலவுகின்றது. அவர் தொண்டு மலர்தலை உலகில் நீடு புகழோடு நிலைத்து மன்னுக.
இந்தச் சிறுநூல் இப்பெருந்தகையின் மாண்பைச் சிறிது விளக்குகிறது. அவர் பிறந்த 100ஆம் ஆண்டு நினைவுச் சின்னமாக பதிப்பித்துள்ளோம். நல்லுலகம் பெற்று உய்க.” என்று முடிகிறது அந்த முன்னுரை.
குறிப்பு: அவரது சொல்லாட்சிகள்
அப்படியே தரப்பட்டுள்ளன.  - ஆசிரியர்
- தொடரும்
“திராவிடத் தலைவர் டாக்டர் சி.நடேசனார் வாழ்வும் தொண்டும்’’ என்ற நூலைப் பதிப்பித்த, அந்நாள் தமிழ்நாடு முதல் அமைச்சரான அறிஞர் அண்ணாவின் ஆலோசகரும், ஓய்வுபெற்ற அரசு செயலாளருமான இராவ் சாகேப் நல்.முருகேச முதலியார் அவர்களது பதிப்புரையை முன்பு பார்த்தோம்.
நூலாசிரியர் தோழர் கே.குமாரசாமி அவர்கள், டாக்டர் சி.நடேசனார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, அரும்பெரும் வரலாற்றுச் சாதனைகளைத் தொகுக்க பெரும்பாடு பட்டுள்ளதை அந்நூலின் துவக்கத்தில் கண்ணீர் மல்கக் குறிப்பிட்டுள்ளார்!
நமது வேர்களின் வரலாறுகள் பாதுகாக்கப்படவேண்டிய வரலாற்றுக் கருவூலங்கள் அல்லவா?
ஏனோ நாம் செய்யத் தவறிவிட்டோமே என்ற ‘குற்ற உணர்வின்’ விளைவே நாம் மேற்கொண்டுள்ள இச்சிறு முயற்சி!
பார்ப்பனர்கள் சிலர் ஒத்துழைத்த அளவு கூட, அவரது உற்றார் உறவினர்கள், பழகிப் பயன் அடைந்த பார்ப்பனரல்லாத திராவிடர்கள் பல்வேறு தகவல்களை, தரவுகளை தரமறுத்து விட்டனர் என்னும் போது நம் இனத்தின் தனிக்குணம் இதுதான் என்று புரிந்து கொள்ள முடிகிறது.
“நீதிக்கட்சி” என்று அழைக்கப்படும் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (S.I.L.F.) என்ற ஒரு திராவிடர் அரசியல் கட்சியே - டாக்டர் நடேசனாரின் தொடர் முயற்சிகள் இல்லாவிட்டால், உருவாகியே இருக்க முடியாது என்பது இந்நூல் மூலம் ஆசிரியர் கே.குமாரசாமி ஆதாரங்களுடன் விளக்குகிறார்.
சர்.பிட்டி தியாகராயர் வரலாற்றையும் கூட இவர்   (‘திராவிடப் பெருந்தகை சர்.பிட்டி தியாகராயர்’ என்ற தலைப்பில் எழுதி, திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தவரால் (1985ல்) வெளியிடப்பட்ட முதல் பதிப்பு - இப்போது விரைவில் அது நமது இயக்கத்தால் இரண்டாம் புது பதிப்பாக வெளிவரவிருக்கிறது!) எழுதிய நூலில் டாக்டர் நாயர் பற்றியும் டாக்டர் நடேசனார் பற்றியும் அந்நூலாசிரியாரின் ஆய்வு தோய்ந்த சுருக்கமான வரலாறு, சாதனைகள் பதிவு செய்யப் பட்டுள்ளன!
நமது இளைஞர்கள் இந்தச் செய்திகளை தாங்கள் படித்தால் மட்டும் போதாது; இணையம், மற்றும் பொதுவிடங்களில் கலந்துரையாடல்களில் வெளிப்படுத்துதல் வேண்டும். மேலும் மேடைப் பேச்சுகளிலும், எழுதும் கட்டுரைகளிலும் இவர்களது முன்னோடி முயற்சிகள் நம்மை - நம் இனத்தின் கல்வி உரிமையை எப்படி மனு குலத்தவரிடமிருந்து மீட்டெடுக்க உதவின என்பதை பறையடித்துப் பாருக்குப் புலப்படுத்த வேண்டும்.
திரு.குமாரசாமி அவர்கள் திராவிடத் தலைவர் டாக்டர் சி.நடேசனார் பற்றி எழுதியுள்ள குறிப்புகளை அப்படியே தருகிறோம்:
“நாட்டுக்கு நல்லோன் டாக்டர் சி. நடேசனார்”
திவான் பகதூர் டாக்டர் சி. நடேச முதலியார் அவர்களைத் திராவிடர் இயக்கத்தின் தந்தை எனக் கூறின் அது நூற்றுக்கு நூறு உண்மையே யாகும். திராவிடப் பெருங்குடி மக்களின் உரிமையை யும் உணர்ச்சியையும் தென்னிந்தியா முழுவதும் பரவச் செய்தவரும், திராவிடர்களின் தன்னாட்சி இயக்கமாம் பிராமணரல்லாதார் இயக் கத்திற்கு அடிப்படை எழுப்பியவரும் ஆன டாக்டர் நடேசனார் அவர்களைத் திராவிடர் இயக்கத்தின் தந்தை என அழைத்திடாது வேறு எவ்வாறு அழைத்திடுவது!
இக்காலத் தலைமுறையினர் டாக்டர் நடேச முதலியார் அவர்களைப்பற்றித் தெரிந்துகொள்வதானது, தமக்குச் சொத்தும் செல்வமும்-பேரும் புகழும் தேடி வைத்துச் சென்ற தமது மூதாதையருடைய வரலாற்றைத் தெரிந்து கொள்வதனையே ஒக்கும். திராவிடரின் அரசியல்-சமுதாய உரிமை வரலாற்றைத் தெரிந்து கொள்ளத் துவங்குவோர், நாட்டுக்கு நல்லோன் டாக்டர் சி. நடேசனாரின் திருநாமத்தை முதலில் ஓதியும் உணர்ந்துமே துவங்கிட வேண்டும்!
சென்னையை அடுத்த பொன்னேரியைச் சேர்ந்த சின்னக் காவனம் என்ற சிற்றூர்தான் டாக்டர் நடேசனாரின் மூதாதையர் ஊராகும். நடேசனாருடைய மூதாதையினர் சுமார் 200 ஆண்டுகட்கு முன் சென்னை திருவல்லிக்கேணியில் குடியேறினர். பெரிய தெரு என வழங்கப்படும் வீரராகவ முதலித் தெருவில் தம் குடியிருப்பை அமைத்துக் கொண்டனர். இன்றும் அத்தெருவில் நடேசனார் இல்லத்தைக் காணலாம்.
சோலையப்ப முதலியார், கிருஷ்ணசாமி முதலியார் இருவரும் உடன் பிறந்தவர்கள். திருவல்லிக்கேணி வீரராகவ முதலித் தெருவில் வசித்து வந்தார்கள். இவர்கள் பொன்னேரி முதலியார்கள் என்று அழைக்கப்பட்டு வந்தார்கள். இவ்விருவரும் அரசாங்க அலுவல்களில் அமர்ந்து புகழ்பட வாழ்ந்து வந்தார்கள்.
மூத்தவரான சோலையப்ப முதலியாருக்கு ஒரு புதல்வர் பிறந்தார். அவர்தாம் பிற்காலத்தில் திவான் பகதூர் சி. தாதுலிங்க முதலியார் என்று புகழ் பெற்றவராவார். 1942-43இல் சென்னை நகரசபை மேயராக விளங்கியவருமாவார்.
இளையவரான கிருஷ்ணசாமி முதலியாருக்கு மூன்று புதல்வர்கள் பிறந்தார்கள். இம் மூவரில் ஒருவர்தாம் நாட்டுக்கு நல்லோன் எனப் புகழ்பெற்று விளங்கிய டாக்டர் நடேசனார். இவர் 1875ஆம் ஆண்டில் பிறந்தார்.
நடேசனார் அவரது அய்ந்தாவது வயதில் ஒரு திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். தெலுங்கு, பள்ளிக்கூடத்தின் பயிற்சி மொழியாக இருந்தது. உயர்நிலைப் பள்ளியிலும் கல்லூரியிலும் தெலுங்கு மொழியையே விருப்பப் பாடமாக எடுத்துக் கொண்டார். நடேசனாருடைய நாட்டம் மருத்துவத் துறையில் சென்றது. சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். எல்.எம்.எஸ். பட்டம் பெற்றார். உயர்ந்த பட்டம் பெற்ற டாக்டர்களைவிடச் சிறந்த டாக்டராகப் பேர் பெற்றார்.
“கைராசிக்காரர்” என்றும், அன்பும், பண்பும் உடையவர் என்றும் கூறி மக்கள் அவருக்கு மதிப்பையும் பெருமையையும் தந்தார்கள். அவருடைய மருத்துவ நிலையம் ஓய்வு ஒழிவின்றி இயங்கிக் கொண்டே இருந்தது. நோயாளிகளின் தொண தொணப்புப் பேச்சுக்களைக் கேட்டுச் சலிப்படையாமல் அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொள்ளும் பொறுமைக்குணம் டாக்டரிடம் பற்றி நின்றது. நோயாளிகள் மகிழ்வுறும் வண்ணம் பேசி, தன்னம்பிக்கை கொள்ளும் வழியில் ஆறுதல் மொழி புகன்று, அவர்களுடைய உடல்நலம் பேணி வந்தார் டாக்டர் நடேசனார். இப்படிப்பட்ட டாக்டரை யார்தாம் விரும்ப மாட்டார்கள். டாக்டரின் சிறப்பு பற்றிக் கூறிடும் திரு.வி.க, “டாக்டர் நடேசனாரை என்னென்று கூறுவேன். அன்பென்று கூறவே என் மனம் துணிகிறது”எனக் குறிப்பிட்டுள்ளார். (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் 448)
திருவாளர் கே.எம். பாலசுப்பிரமணியம், பி.ஏ., பி.எல். அவர்களுடைய எழுத்துக்கள், டாக்டர் நடேசனார் மக்களிடையே பெற்றிருந்த அன்பையும் ஆதரவையும் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
“டாக்டர் நடேசனைத் தெரியாதவர் யார்? அவருடைய பெயரையும் உருவையும் அறியாதார் யார்? சென்னையில் ஒவ்வொருவருக்கும் நண்பராகவும் தெரிந்தவராகவும் இருந்தவரல்லவா டாக்டர் நடேச முதலியார். மாடமாளிகையில் வாழும் கோடீசுவரரிலிருந்து குடிசைகளில் வாழும் ஏழைகள் வரை ஒவ்வொருவரும் டாக்டர் நடேசனாரைத் தெரிந்திருந்தார்கள்; விரும்பினார்கள்; நேசித்தார்கள். டாக்டர் நடேசனார் சென்னை நகரத்தைத் தம் அபிமான நகரமாகக் கொண்டிருந்தார். சென்னை நகரமும் அவரைத் தன் அபிமான மனிதராகக் கொண்டிருந்தது. நகரமக்கள் நடேசனார் பெயரைக் கூறுவதில் பெருமையும் புளகாங்கிதமும் கொண்டார்கள். வெளியூர் மக்களோ நடேசனார் நாமத்தைப் பக்தி நாமமாகக் கொண்டாடினார்கள். டாக்டரின் அன்பும் நேர்மையும் கட்சி விசுவாசமும் சென்னை மாகாணம் எங்கும் பரவி இருந்தன. அவருடைய பெயரைக் கேட்ட அளவிலேயே, அவருடைய பெயரை நாளிதழ்களில் வாசிக்கக் கேட்ட மாத்திரத்திலேயே, வெளியூர் மக்கள் ஒருவித மரியாதையும் பயபக்தியும் காட்டலானார்கள். (“தென்னாட்டுப் பிரமுகர்கள் (முதற்பாகம்) டாக்டர் நடேசன்” என்ற அதிகாரத்தில் (South India Celebrities)
டாக்டர் நடேசனாருடைய தோற்றத்தையும், உருவத்தையும் நாமெல்லாம் மனக்கண்முன் கண்டுகளித்திடும்படியாகத் திருவாளர் கே.எம். பாலசுப்பிரமணியம் எடுத்துக் காட்டிடுவதைப் பாருங்கள்.
“உருவத்தில் சற்றுக் குள்ளமானவர். எப்போதும் நீலநிற மேனாட்டு உடையையே அணிந்திருப்பார். அவருடைய முகமா னது முகவாய்க் கட்டையிலிருந்து சிறிது சிறிதாக அகன்று மேலே விசாலமான நெற்றியையுடைய தலை வரையில் சென்றுள்ளது. நீண்ட ஹிண்டன்பர்க் மீசையும், அடர்ந்த புருவங்களும், ஒன்றுக் கொன்று நேராகச் செல்கின்றன. ஆழத்தில் பதிந்துள்ள சிறிய கண்கள் மூக்குக் கண்ணாடியின் வழியே தம் தீர்க்கமான ஒளியைக் காட்டி நிற்கின்றன. வெளியே புறப்படும் போதெல்லாம் பிரம்பு ஒன்று கையில் தொங்கிக் கொண்டிருப்பதைக் காணலாம்.” (தென்னாட்டுப் பிரமுகர்கள் (முதற்பாகம்).
திரு.வி.க. அவர்களை யான் கண்டபோது, “நடேச முதலியார் எப்போதும் மேல் நாட்டு உடையில்தான் இருப்பார். அதில்தான் அவருக்கு விருப்பம் அதிகம். கையில் எப்போதும் ஒரு பிரம்பு வைத்திருப்பார். அவர் மீசை கருகரு என்றிருக்கும். அடர்த்தியான அம்மீசை டாக்டரின் கம்பீரத்தை அதிகப்படுத்திக் காட்டும்'' (தென்னாட்டு பிரமுகர்கள் (முதற்பாகம்) என்று கூறியதையும் இவண் குறிப்பிடுவது ஏற்றதேயாகும்.
17.7.2016இன் தொடர்ச்சி...
டாக்டர் நடேசனார் தாம் பிறந்த திராவிட சமுதாயம் மிகக் கீழ்மையாகவும், பிற்போக்காகவும் இருப்பதைக் கண்டு மனம் நொந்து போவார். இந்த அவல நிலையைப் போக்கிட வேண்டும் என்ற எண்ணம் அவர் மனத்திடையே அலைமோதும், எவ்வா றேனும், திராவிட சமுதாயத்தை நல்வாழ்வு வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவா உந்தி எழும். இவ்வாறு எண்ணியும் விரும்பியும் வந்த நடேசனார் அச்சமுதாயத்தின் முன்னேற்றத்திற் காகத் தொண்டாற்ற முடிவு செய்தார். திராவிட சமுதாயத்தினரை ஒன்று கூட்டி அவர்களின் நன்மையைக் கவனிக்க ஒரு சங்கம் இருக்க வேண்டியது அவசியம் என்பதை உணர்ந்தார். 1912ஆம் ஆண்டில் சென்னைத் திராவிடர் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கத்தை நிறுவினார். இந்தச் சங்கம்தான் பிராமணரல்லாதாரின் நலனைப் பாதுகாப்பதற்கென்று பிறந்த முதல் திராவிடர் அமைப்பாகும். இச்சங்கம் அக்காலத்தில் பிராமணரல்லாதாரான திராவிடர்களின் பாதுகாவல் இடமாக இருந்து வந்தது. 1912ஆம் ஆண்டில் இச்சங்கத்தில் தாம் பேசியதாகவும் அப்போதுதான் நடேச முதலியாருக்கும் தமக்கும் நட்பு உண்டாயிற்றென்றும் திரு.வி.க. அவர்கள் தமது வாழ்க்கைக் குறிப்பு நூலில் குறித்துள்ளார்கள்.
இச்சங்கத்தின் சார்பில் அடிக்கடி சொற்பொழிவுகள் நடைபெறு மென்றும், மறைந்த மாவீரர் மா. சிங்காரவேலர் பொதுவுடைமை, விஞ்ஞானம் போன்ற பொருள்கள்பற்றியும் பேராசிரியர் லட்சுமிநரசு பவுத்த சமயம் மற்றும் ஜாதிமதக் கேடுகள்பற்றியும், எல்.டி. சாமிக்கண்ணுப் பிள்ளை கணிதம் , ஜோதிடம் போன்ற பொருள்கள் பற்றியும் சொற்பொழி வாற்றிடுவார்களென்றும், இச்சொற்பொழிவு களை அறிஞர் குழாம் கேட்டு மகிழுமென்றும் திவான் பகதூர்
சி.தாதுலிங்க முதலியார் கூறியது இவண் நினைவு கூரத்தக்கதாகும். இவைகளுடன், பிராமணரல்லாதாரின் சமுதாய பொருளாதார அரசியல் பிற்போக்கு நிலைமையைப் போக்குவதற்குரிய யோசனை களும் கருத்துரைகளும் இடம் பெறாத சங்கக் கூட்டங்களே இருந்ததில்லையாம். பனகல் அரசர், தியாகராயர், டாக்டர் நாயர், திவான் பகதூர் இராஜரெத்தின முதலியார் போன்றவர்கள் இச்சங்கக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரை நிகழ்த்துவதுண்டாம். இவ்விவரங்களைத் தாதுலிங்க முதலியார் கூறினார்கள்.
சென்னை திராவிடர் சங்கத்தின் புகழ் மாகாணமெங்கும் பரவியது. நகரங்களிலும் ஊர்களிலும் அதன் கிளைச் சங்கங்கள் துவக்கப்பட்டன. திராவிடர் சங்கம் என்ற பெயர் அக்காலத்துத் திராவிட சமுதாயத்தாருக்கு ஒரு உணர்ச்சியூட்டும் வாயிலாக அமைந்து இயங்கி வந்தது. அவர்தம் உரிமையைப் பெற்று நல்கும் ஒருவழியாகச் செயலாற்றி வந்தது. திராவிட மக்கள் திராவிடர் சங்கத்தை ஒருமுகமாக ஆதரித்து நின்றார்கள். சங்கத்தின் வளர்ச்சி யைத் தம் சொந்த வளர்ச்சியாகக் கருதினார்கள்.
இத்தகு புகழ் மிகுந்த திராவிடர் சங்கத்தைக் கண்ட நடேசனார், திராவிடர் இல்லம் என்ற ஓர் அமைப்பையும் துவக்கி வைத்துப் பெரும்பணி ஆற்றலானார். திராவிட மாணவர் தங்கிப் படிப்பதற் கென திராவிடர் இல்லம் என்ற இந்த ஹாஸ்டல் ஏற்படுத்தப்பட்ட தாகும். அக்காலத்தில் சென்னை நகரத்திலும் பெரிய நகரங்களிலும் படித்துவந்த மாணவர்கள் தங்கவும் உண்ணவும் தேவையான ஹாஸ்டல்கள் இன்றி மிகுந்த துன்பம் அடைந்து வந்தார்கள். நடைபெற்று வந்த சில தங்குமிடங்களும் திராவிட மாணவர்களுக்கு இடமில்லை என்று கூறி அவர்களைத் துன்பப்படச் செய்துவந்தன. இந்நிலைமையைக் கண்டு மனம் வருந்திய நடேசனார் இத்துறையிலாவது தமது சிறிய பணியை ஆற்றிவர எண்ணங் கொண்டார்; செயலில் ஈடுபட்டார். செயல்-திராவிடர் இல்லமாக உருப்பெற்றது. இத் திராவிடர் இல்லமானது திராவிட மாணவர்களுக்குக் கிடைப்ப தற்கரியதொரு பேறாக அமைந்தது. சர்.ஆர்.கே. சண்முகம் செட்டி யார், ரெங்கராமானுச முதலியார் போன்றவர்கள் இத் திராவிடர் இயக்கத்தில் தங்கிப் படித்து வந்தார்கள் என்று தெரியவரும்போது நடேசனார் கண்ட திராவிடர் இல்லத்தின் பெரும் பயனும் புகழும் நன்கு தெரியவருகிறது.
திராவிடர் சங்கம், திராவிடர் இல்லம் ஆகியவைகளின் அமைப் புத் தலைவர் என்ற முறையில் ஆண்டுதோறும் பட்டம்பெற்ற திராவிட மாணவர்களுக்கு டாக்டர் நடேசனார் விருந்தளித்துப் புகழுரையும் நல்லுரையும் வழங்கி ஊக்கமும் உற்சாகமும் அளித்துப் பாராட்டுரை வழங்கி வருவதை வழக்கமாகக் கொண்டார்.
இப் பாராட்டுக் கூட்டங்களில் கலந்து கொள்ளும் பட்டதாரி களுக்குப் பல பிராமணரல்லாத தலைவர்களைக் கொண்டு திராவிட உணர்ச்சியையும் உணர்வையும் ஊட்டி அவர்களிடையே சுயமரி யாதைப் பற்றுப் பொங்கி எழுமாறு செய்து வந்தார். இவ்வாறெல்லாம் நீதிக்கட்சி ஏற்படுவதற்கு முன்னிருந்தே பிராமணரல்லாதாரிடையே திராவிட உணர்வைத் தட்டியெழுப்பி அச்சமுதாயம் விழிப்படையும் படிச் செய்துவந்த திராவிடத் தந்தையார் ஆவார், டாக்டர் நடே சனார்!
இவ்வாறு தனிமனிதனாக நின்று திராவிடரின் நன்மைக்காகப் பெருந்தொண்டாற்றிவந்த டாக்டர் நடேசனார், திராவிடரின் நல் வாழ்வுக்கெனத் தனி அரசியல் அமைப்பு ஒன்று தேவை என்பதை உணர்ந்து வந்தார். அவரது உணர்ச்சியானது முயற்சியாகவும் உருப்பெறலாயிற்று. அக்காலத்தில் காங்கிரஸ் கட்சிதான் தென்னிந் தியாவுக்கும் உரிய அரசியல் கட்சியாக இயங்கி வந்தது. அக்கட்சியில் பல தென்னிந்திய பிராமணரல்லாதாரும் பங்கு கொண்டு உழைத்து வந்தார்கள். ஆனால், அக்கட்சியில் நாளடைவில் பிராமண ஆதிக்கமும் வடநாட்டார் ஆதிக்கமும் வளர்ந்து தென்னிந்தியத் திராவிடரின் நலன்கள் புறக்கணிக்கப்படவே, பிராமணரல்லாதார் அக் கட்சியினின்றும் விலகி நிற்பாராயினர், திவான் பகதூர் பிட்டி தியாகராயர், டாக்டர். டி.எம். நாயர் போன்ற பெரிய மனிதர்களெல்லாம் காங்கிரசின் போக்கைக்கண்டு வெளியேறுவாராயினர்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய டாக்டர் நாயர், உலகப் போரில் சிறிது காலம் தொண்டாற்றிச் சென்னை திரும்பினார். டாக்டர் நடேசனார் அவரை அணுகி, பிராமணரல்லாதாரின் உரிமை களைக் காப்பாற்றி வரவும், அவர்களின் முன்னேற்றத்திற்குத் தொண்டாற்றி வரவும் தனி ஒரு அரசியல் கட்சி அமைய வேண்டி யதின் அவசியத்தை எடுத்துரைத்தார். தியாகராயரை அணுகி அவரிடமும் அவ்வுண்மைகளை விளக்கிக் கூறினார். இம் முயற்சி கள் உடனடியாகப் பயனளிக்கவில்லை என்றபோதிலும் டாக்டர் நடேசனார் தம் முயற்சிகளைக் கைவிடவில்லை. மேலும் மேலும் முயன்றார். திவான்பகதூர் ராஜரத்தினம் முதலியார் அவர்களையும் அடிக்கடி சந்தித்து இவ்விருவரும் ஒன்று கூடும்படியான முயற்சி களை மேற்கொள்ளும்படி கேட்டு வரலானார். முடிவில் இருவரும் இணங்கி வருவதில் வெற்றி கண்டார். 1916ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி நடேசனாரின் முயற்சிகள் வெற்றி பெற்றன. நீதிக்கட்சி உருவாகியது. இதனால் பிராமணரல்லாதாரின் நல்வாழ்வு மலரத் தொடங்கியது. நீதிக்கட்சியின் துவக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் திருவாளர் கே.எம். பாலசுப்பிரமணியம் கூறுவதாவது:
“சர் பிட்டி தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் நீதிக்கட்சியைத் தோற்றுவித்தனரெனவும் பனகல் அரசர் அக்கட்சியை வளர்த்து வந்தாரெனவும் பொதுமேடைகளில் பேசப்பட்டும் பத்திரிகைகளில் எழுதப்பட்டும் வருவது வழக்கமாகி விட்டது.
இப் பெரியார்களின் பெயர்களோடு மற்றொருவரின் பெயரையும் சேர்த்துக் கூறுவதானது அரசியல் மாச்சரியத்தின் பாற்படுமென்றும் மறைந்த அம்மாவீரர்களின் பெருமையை மாசுபடுத்துவதின் பாற் படுமென்றும் கூறப்படலாம். ஆயினும் உண்மையைக் கூறுவதில் தவறென்ன இருக்க முடியும். காரியங்களைப் பின்னின்று நடத்திவந்த செயல் புருடனைப் பற்றித் தெரிந்த உண்மையைக் கூறுவதில் என்ன கெடுதல் இருக்க முடியும்? உண்மையைக் கூறின் நீதிக்கட்சி யின் தோற்றத்துக்குக் காரணமாக இருந்தவர் டாக்டர் நடேசனார் அவர்களேயாகும்! சர். தியாகராயரும், டாக்டர் நாயரும் நீதிக் கட்சியைத் தோற்றுவித்துப் பெயர் சூட்டினர் என்பதில் அய்ய மில்லை! மற்ற எவராலும் சாதிக்க முடியாத அளவிற்கு அவர்களி ருவரும் அக்கட்சியை உருப்படுத்தி அடிப்படை போட்டு வளர்த் தார்கள் என்பதில் அய்யமில்லை.
அக்கட்சி நன்கு நடைபெற்று அதன் குறிக்கோளை அடைவதற் கான எல்லா வழிகளையும் அமைத்துச் சென்றனர் என்பதிலும் அய்யமில்லை. ஆனாலும், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் ஒன்று சேர்க்கப்பட்டு நட்பு என்ற அன்புக் கயிற்றினால் பிணைக்கப் படாமல் அவர்கள் போய்க் கொண்டிருந்த வேறு வேறு வழி களிலே போகவிடப்பட்டிருந்தால் நம்மால் போற்றப்பட்டு வரும் இந்த நீதிக்கட்சி பிறந்திருக்க முடியாது. இதில் ஒரு சிறிதும் அய்யமில்லை.
இந்த இரு ஒலிம்பிக் வீரர்களையும் ஒரே மேடைமீது சேரும் படியும் பிரியா நட்பில் இணைந்திருக்கும்படியும் செய்து வைத்தது சென்னை சமாதானப் பிரியர் நடேசனாரின் சலியா உழைப்பும், விடா முயற்சியும், நல்லெண்ணமுமேயாகும். பெருந்தகை யாளர் தியாகராயரின் தாய்மைக் குணமும், மாவீரர் டாக்டர் நாயரின் மறக்குணமும் ஒன்று சேர்ந்து நீண்ட காலம் இயங்கி நிலைத் திருக்கும்படிச் செய்தவர் நாட்டின் நல்லோனாகிய நடேசனார் ஆகும். திரு.கே.எம். பாலசுப்பிரமணியம் கூறும் இவ்வுண்மையைப் படித்திடும் நாம், நீதிக்கட்சி பிறப்பதற்கு மூலகாரணராய் இருந்தவர் டாக்டர் நடேசனார் என்பதைத் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறதல்லவா!
இவ்வாறு காணப்பட்ட திராவிடரின் விடுதலை இயக்கமாம் நீதிக்கட்சியை டாக்டர் நடேசனார் தம் உடல் பொருள் ஆவியைவிட உயர்ந்ததாகக் கருதி வந்தார்; பேணி வளர்த்து வந்தார்.
“டாக்டர் நடேசனார் கூட்டியுள்ள பிராமணரல்லாதார் மாநாடு களும் கூட்டங்களும் எண்ணிலடங்கா. இவைகளுக்கெல்லாம் தம் கைப் பொருளையும் செலவு செய்து செயலாற்றி வந்தார் நடேசனார். பொருளை விடக் கட்சியையே முக்கியமாகக் கருதிய மாபெரும் தியாகியாவார் நடேசனார்” என்றும், “ஆற்காடு இராமசாமி முதலியார் நீதிக்கட்சியின் மூளையாக விளங்கி வந்தாரென்றால், டாக்டர் நடேசனார் கட்சியின் இதயமாக விளங்கி வந்தார்” என்றும், திருவாளர் கே.எம்.பாலசுப்பிரமணியம் புகழ்ந்து கூறியுள்ளார்.
குறிப்பு: அவரது சொல்லாட்சிகள்
அப்படியே தரப்பட்டுள்ளன.  - ஆசிரியர்
20.7.2016இன் தொடர்ச்சி...
தம் உயர்வே கட்சியின் உயர்வு என நினைப்பவர் பலர். ஆனால், நடேசனாரோ கட்சியின் உயர்வே தம் உயர்வு என எண்ணினார். கட்சியின் வெற்றியைத் தம் சொந்த வெற்றியாகக் கருதினார். தமக்கென்று எந்தப் பதவியையும் விரும்பியவரில்லை. எப்போதும் பிறருக்காகவே போராடுவார், போராடி வெற்றியும் பெறுவார்.
கட்சிப் பேச்சுக்களைத் தவிர்த்த மற்றப் பேச்சுக்களெல்லாம் வெறும் வெற்றுப் பேச்சுக்களாகவே தோன்றும் டாக்டர் நடேசனாருக்கு, ‘கட்சி வாழ்கிறதென்றால் நீ வாழ்கிறாய். கட்சி வீழ்கிறதென்றால் நீயும் வீழ்கிறாய்’ என்று ஒவ்வொருவரையும் பார்த்துக் கூறிக் கட்சியின் ஆக்கத்துக்குப் பாடுபட்டவராவார் நடேசனார்.
சென்னை நகரசபையில் சுமார் 25 ஆண்டுகள் அங்கத்தினரா யிருந்து சென்னை மக்களுக்குத் தொண்டாற்றியுள்ளார். அவருடைய வட்டத்தின் மக்களுக்கு மட்டுமேயன்றி, மற்ற வட்டங்களின் மக்களுக் கும் அவர் பணியாற்றி வந்தார். குழாய்களில் தண்ணீர் வரவில்லை யென்றால், கழிவுநீர் கால்வாய் வேலை செய்யவில்லையென்றால், சென்னை மக்கள் டாக்டரின் உதவியைத்தான் நாடிச் செல்வார்கள். பள்ளிக்கூடங்களிலாகட்டும், மருத்துவமனைகளிலாகட்டும் சீர்திருத் தம் தேவைப்பட்டால் டாக்டர் நடேசனாரிடம் சொல்லப்பட்டவுட னேயே அக்காரியங்கள் யாவும் தாமதமின்றி நடைபெற்றுவிடும். நகரவாசிகளின்பால் அக்கறையும் அன்பும் கொண்டு பணியாற்றிவந்த ஒருசிலரில் டாக்டர் நடேசனார் முதல்வராக விளங்கினார்.
சென்னை சட்டசபையில் அங்கம் வகித்து திராவிட மக்களுக்காக அவர் ஆற்றிவந்த தொண்டும், பணியும் எழுத்தில் அடங்காதனவாகும். பிராமணரல்லாதாரின் நலனுக்குப் போராடிய, விடாது போராடிய சட்டசபை அங்கத்தினர் நடேசனார் ஒருவரே. பிராமணரல்லாத அரசாங்க அதிகாரிகள், ஊழியர்கள் நலனுக்காகவும், அவர்தம் முன் னேற்றத்திற் காகவும், தொல்லைகள் பலவற்றைச் சுமந்து பணியாற்றி யவர் நடேசனாரைத் தவிர வேறு எவரும் இல்லை எனலாம். சட்ட சபையில் கேள்வி நேரங்களை டாக்டர் நடேசனார் வீணாக்குவதில்லை. தாம் மிகுதியும் பற்றுக் கொண்டிருந்த வகுப்புநீதி பற்றியும் பிராமண ரல்லா தாரின் உத்தியோக நலனைப்பற்றியுமே கேள்விகள் கேட்பார். அவர் கேட்கும் கேள்விகள் அரசாங்கத்தாரின் கண்களைத் திறந்து விடும். அவருடைய சட்டசபை வாழ்க்கையில் அவர் கேட்டுள்ள கேள்விகளையும், அவைகளுக்கு அரசாங்கத்தார் அளித்துள்ள பதில் களையும் தொகுத்துக் கூறினால் அவைகள் யாவும் பலநூறு பக்கங்கள் கொண்ட ஒரு பெருநூலாக அமையும்.
உத்தியோக உலகில் பிராமண ஆதிக்கத்தை ஒழித்துக்கட்ட முற்பட்டவர் நடேசனார் தாம். இவருடைய ஓயாத கேள்விகளும் ஒழியாத பேச்சுக்களும் பிராமணர்-பிராமணரல்லாதார் என்றடங்கிய சென்னை மாகாண மக்களுக்கு அந்தந்த மக்கள்தொகை வீதப்படி உத்தியோகங்கள் அளிக்கப்பட வேண்டும் என்றதொரு அரசாங்க உத்தரவை 1922ஆம் ஆண்டில் பிறப்பிக்கும்படி செய்தது! இவ்வுத் தரவை அமல்படுத்த ஸ்டாப் செலக்ஷன் போர்டு என்ற ஓர் அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இறுதியில் பப்ளிக் சர்விஸ் கமிஷன் ஏற்பட்டுச் செயல்படுவதாயிற்று.
சர். சி.பி. இராமசாமி அய்யர், தனி உரிமை உடைய குழு ஒன்று சென்னை பப்ளிக் சர்விஸ் கமிஷன் என்ற பெயரில் விரைவில் அமைக்கப்படும் என்றும் ஆகவே முதலியார் தம் திருத்தத்தை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டுமென்றும் கோரினார். உடனே நடேச முதலியார், தாம் நீண்டகாலம் வரையில் பொறுத்திருக்க முடியாதென் றும், மூன்று மாத காலத்திற்குள் பப்ளிக் சர்விஸ் கமிஷன் அமைக்கப் படும் என்று உத்தரவாதம் கூறினால் தம் திருத்தத்தை வாபஸ் பெறுவ தாகவும் கூறினார்.
அவர் விரும்பியபடியே உத்தரவாதம் தரப்பட்டது. கொடுத்த தவணைக்குள்ளாகவே பப்ளிக் சர்விஸ் கமிஷனும் அமைக்கப்பட்டது. பிராமணரல்லாதாருக்கு ஓரளவுக்காவது நீதி கிடைக்கும் வாய்ப்பும் பிறந்தது. நடேசனாரின் சட்டசபை தொண்டுகளைக் காண்போர் ஆச்சரியப்படுவர். அக்காலத்தில் பெரிய சம்பளமும் அதிகாரமும் உள்ள உத்தியோகங்கள் வெள்ளைக்காரர்களாலேயே வகிக்கப்பட்டு வந்தன. இந்தியர்களுக்கும் அப்பதவிகள் கொடுக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டு வந்தது. இவ்விஷயத்தில் காங்கிரஸ் ஹோம்ரூல் கட்சிகள் மிகத் தீவிரமாக இருந்தன.
டாக்டர் நடேசனார் இக்கோரிக்கையை ஆதரித்தார். ஆதரித்தார் என்றால் பிராமணரல்லாதாருக்கும் இக்கோரிக்கையால் பயன் ஏற்பட வேண்டும் என்ற தம் கருத்தையும் வெளியிட்டு ஆதரித்தார். இந்தியர் என்ற போர்வையில் பிராமணர்கள் மட்டுமே பலன் அடைந்திட எண்ணக்கூடாது என்று கூறினார். எல்லா வகுப்பாரும் பலன் அடைய வேண்டும் என்ற பரந்த எண்ணத்தில் கோரிக்கை அமைய வேண்டும் எனப் பேசினார். இந்த நேர்மையான பேச்சு காங்கிரஸ் ஹோம்ரூல் லீகர்களுக்குக் கசந்தது. நடேசனார் வகுப்பு வாதத்தைக் கிளப்பி விடுகிறார் என்று வசைமாரி பொழிந்திடத் தொடங்கினார்கள். நடே சனார் அவர்தம் வசைமாரிகளைப் பொருட்படுத்தவில்லை.
என் கோரிக்கை நாட்டு மக்கள் எல்லாருடைய நலத்தையும் அடிப்படையாகக் கொண்டது; நேர்மையானது; நீதியின்பாற் பட்டது; இதற்கே மக்களின் ஆதரவு உள்ளது எனக் கூறி காங்கிரஸ் ஹோம் ரூலர்களின் கூச்சலை ஒதுக்கித் தள்ளினார்.
பிராமணரல்லாதாரின் நலனைப் புறக்கணிக்கும் உரிமை முழக்கங்கள் யாவும் பிராமணர்களின் நலனைப் பாதுகாக்க எழுப்பப் படும் சுயநல கூச்சல்களேயாகும் எனக் கூறிக் கண்டனக் குரல் எழுப் பினார். நடேசனாரின் இத்தகு பேச்சுக்களும் செயல்களும் பயன் அளிக்கவே செய்தன. சென்னை அரசாங்கத்தினரும் டில்லி அரசாங்கத் தினரும் பெரிய உத்தியோகங்கட்கு இந்தியர் களையும் நியமிக்கத் துவங்கியபோதெல்லாம் பிராமணரல்லா தாருக்கும் ஓரளவுக்காவது கிடைக்கும்படிச் செய்து வந்தார்கள்.
நீதிக்கட்சியை உயிருக்குயிராக மதித்து வளர்த்து பிராமணரல்லா தாரின் நலனுக்காகப் பாடுபட்டு வந்த நல்லதொரு சமயத்தில் டாக்டர் நடேசனாருக்கு எதிர்பாராதவிதமாக ஒரு பேரிடி ஏற்பட்டுவிட்டது. அருமையாகவும் பெருமையாகவும் அவர் வளர்த்து வந்த ஒரே புதல்வன் இறந்துவிட்டான். சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. ஆனர்ஸ் வகுப்பில் வாசித்து வந்தான். வயது இருபத்தொன்றுதான். அவனை சரவணன் என்று செல்லப்பெயரிட்டு அழைப்பார்கள். கிருஷ்ணசாமி என்பது அவனுக்கு இடப்பட்ட பெயராகும். அழகும் குணமும் ஒருங்கே அமையப்பெற்ற அருமையான பிள்ளை. நடேசனார் தம் பிறவியில் விரும்பியன இரண்டு. ஒன்று நீதிக்கட்சி. மற்றொன்று தம் புதல்வன் வாழ்வு. புதல்வனை நன்கு படிக்கச் செய்து நாட்டுக்கு நல்லோனாகச் செய்ய வேண்டுமென்பது நடேசனார் விருப்பம்.
ஆனால், அவ்வாருயிர் மைந்தனோ நடேசனாரை மோசம் செய்து விட்டான்! குறை ஆயுளில் தன் வாழ்க்கையை முடித்துக் கொண்டு விட்டான். டாக்டருக்குத் தீராத் துயரைக் கொடுத்துச் சென்றுவிட்டான். இயற்கையின் விளையாட்டை யாரே தடுத்தல் இயலும். தம் உயிருக்குயிராக மதித்துவந்த நீதிக்கட்சியால் எப்படி டாக்டருக்கு எவ்விதப் பயனும் ஏற்படாது போய்விட்டதோ அவ்வாறே தம் உயிருக்குயிராக மதித்துவந்த புதல்வனாலும் எவ்விதப் பயனும் ஏற்படாமல் போய்விட்டது. என்ன ஆச்சரியம். அவர் விரும்பிய இரண்டில் ஒன்று அற்ப ஆயுளில் உலகைவிட்டு நீங்கி தாங்கொணா இடும்பையைக் கொடுத்துச் சென்றது. மற்றொன்றோ உயிருடன் இருந்தே மறக்கொணாத் துரோகம் செய்து துன்பத்தைத் தந்தது. பெற்ற பயனை அடையாது செய்துவிட்டது இயற்கையின் கோரம். கண்டகாட்சியின் பயனை அடையாது தடுத்துவிட்டது பொறாமையும் வஞ்சகமும்.
இடும்பைமேல் இடும்பை வந்துற்ற காலையும், கட்சியைக் கைவிட்டாரில்லை நடேசனார். தம் மகன் மறைந்ததையும் பொருட் படுத்தினாரில்லை! தம் சந்ததியாம் ஒரே ஒளி அற்ப ஆயுளில் மறைந் ததையும் மறந்தார். கட்சியையே மகனாகப் போற்றி வளர்த்தார்! ஆனால், அக் கட்சி செய்த கைமாறு என்ன? உலகம் வெறுக்கும் துரோகம்! எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு! செய்நன்றி கொன் றார்க்கு உய்வுண்டோ? இல்லையென்று சாற்றுகின்றது தமிழ்மறை. எந்தக் கட்சியைத் தன் உடல், பொருள், ஆவியாக நினைத்துப் போற்றி வளர்த்து வந்தாரோ அதே கட்சி, அப்பெருந்தகைக்குக் கொடுக்கப்பட வேண்டிய மதிப்பையும், கவுரவத்தையும் கொடுக்க மறந்தது! மறந் திருந்த அக் கட்சிக்கு ஒரு சிலர் நினைவூட்டிய காலத்தில் கூட மறுத் தது! மாநில மாநாடு ஒன்றிலேனும் தலைமை வகிக்கும் வாய்ப்பைப் பெறமுடியவில்லை டாக்டரால்.
இதேபோலத்தான் நீண்டகாலம் அங்கத்தினராய் இருந்து சென்னை நகரசபையின் சிறப்புமிக்க தந்தை எனவும் நாட்டுக்கு நல்லோன் எனவும் புகழப்பட்டு வந்த டாக்டர் நடேசனாரை அதன் தலைவராக அமர்த்திக் கவுரவிக்க விரும்பவில்லை நீதிக்கட்சித் தலைவர்கள். சென்னை மாகாணத்தின் ஆட்சியை ஏற்று நடத்திவந்த போதும் ஒரு துரும்பளவு கவுரவும் கூடக் கொடுத்து மதித்திட விரும்பவில்லை நீதிக்கட்சித் தலைவர்கள்.
அவர் 1937இல் இறப்பதற்கு ஓர் ஆண்டுக்கு முன்னர் சட்டசபைத் துணைத் தலைவர் என்ற உதவாக்கரைப் பதவியைத் தந்தனர். கண்ணுறங்காது காவல்காத்து நிற்கும் காவலனைப் போன்றுதான் நடேசனார் நீதிக்கட்சித் தலைவர்களால் நடத்தப்பட்டு வந்தார். கட்சியை கண்ணுறங்காது பாதுகாத்து வரும் காவல் வீரனாக வாயிலில் நிறுத்தி வைக்கப்பட்டார் நடேச முதலியார் என்று திரு. கே.எம். பாலசுப்பிரமணியம் வேதனையோடு குறிப்பிட்டுள்ளார்.
இப்படியெல்லாம் நீதிக்கட்சித் தலைவர்களால் புறக்கணிக்கப்பட்ட நடேசனார் நாட்டு மக்களின் இதய கமலத்தில் வைத்துப் போற்றப்பட்டு வந்தார். பிராமணரல்லாத பெருங்குடி மக்கள் அவரைப் புகழ்ந்திடாத நாளில்லை; போற்றிடாத நாளில்லை. தம் தந்தையினும் மேலான தந்தையாகவே மதித்து வந்தார்கள். மக்களின் இவ்வன்பையே மிகப் பெரும் பட்டமாகவும் பதவியாகவும் கொண்டாடி வந்தார் டாக்டர் நடேசனார்.” என்று முடிக்கிறார் கோ.குமாரசாமி.
- (தொடரும்)
குறிப்பு: அவரது சொல்லாட்சிகள்
அப்படியே தரப்பட்டுள்ளன.  - ஆசிரியர்
29.3.1992இல் வெளிவந்த தினமணிக்கதிரில் அன்றைய சென்னைப் பிரமுகர்கள் டாக்டர் நடேச முதலியார் என்ற தலைப்பில் பிரபல விமர்சகர் கட்டுரையாளர் ‘ராண்டர்கை’ அவர்களின் கட்டுரை உள்ளது. அக்கட்டு ரையில், ‘நடேசனார் அவர்கள் இந்த திராவிடர் இனப் பெருமைகளை, சாதனைகளை மக்களுக்குப் பரப்பிடும் வகையில் 1915இல் இரண்டு நூல்கள் வெளிவர நிதி அளித்து உதவினார்’ என்ற தகவல் உள்ளது.
ஒன்று சர்.சி.சங்கரன் நாயர் எழுதிய நூல் (இவர் பிற்காலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியானாவர்) அந்த நூலுக்குப் பெயர் “Dravidian Worthies” (திராவிடர்களின் மேன்மைக்குரியவைகள் அல்லது மதிப்பும் மிகுந்தவை) என்பதாகும்.
மற்றொரு நூல் Non-Brahmin Letters எனும் நூலாகும். பார்ப்பனர் மீது பார்ப்பனரல்லாதாருக்கு இருந்த அவநம்பிக்கையும், அதிருப்தியும் அக்கால கட்ட ஆங்கிலப் பத்திரிகைகளில் கடிதங்கள் மூலமாக வெளியிடப்பட்டன. அவற்றின் எண்ணிக்கை இருபத்தொன்று எனத்தெரிகிறது.
அக்கடிதங்கள் திரட்டப்பட்டு ஒரு தனி நூலாக வந்தது. இந்த ஆங்கில புத்தகத்தின் தலைப்புதான் Non-Brahimin Letters என்பதாகும். அக்கடிதங்கள் சி.கருணாகர மேனனின் ‘தி இந்தியன் பேட்ரியாட்’ (The Indian Patriot) இதழில் 1915இல் வெளிவந்தன.
இவ்விரண்டு நூற்களையும் வெளியிட்டவர் ‘இந்து’வில் ஆசிரியர் குழுவில் இருந்தவரும் ‘இந்தியன் பேட்ரியாட்’ ஆசிரியருமான திரு.சி.கருணாகரமேனன்.
(இத்தகைய நூல்கள் இப்போது கிடைப்பதாகத் தெரியவில்லை. நம் தோழர்கள் - ஆய்வாளர்கள் - இவைபற்றிய படிவங்களோ, நகல்களோ கிடைத்தால் அனுப்பினால் மிக்க நன்றியுடையோராக இருப்போம். அதை மீண்டும் மீள் பதிப்பாக அச்சிட்டும் பரப்புவோம்).
இப்படி கடிதங்கள் உருவாகும் முன்பே, 15.5.1909 ‘இந்தியா’ வார இதழில் (ஆசிரியர் கவிஞர் சுப்பிரமணிய பாரதியார்) The Madras Non-Brahmin Association ‘சென்னை பார்ப்பனரல்லாதார்களின் சங்கம்’ என்னும் தலைப்பில் பின்வரும் செய்தி வெளிவந்துள்ளது.
“மேல் குறித்த பெயரை வரித்த ஓர் சங்கம் இப்பொழுது சென்னையில் ஏற்பட்டிருக்கிறது. இச்சங்கத்தின் நோக்கம் பிராமண வர்ணமில்லாத பிற வர்ணத்தாரின் ஸ்திதியை நன்னிலைக்குக் கொண்டு வரவேண்டுமென்ப தாம். இவ்வகுப்பைச் சார்ந்த ஏழைச் சிறுவர்களுக்கு திரவிய சகாயம் செய்து, படிப்பையும் கைத் தொழில்களையும் கற்றுக் கொள்ள வேண்டிய தேவைகளைத் தீர்மானித்துள்ளார்களாம்!” என்ற செய்தி உள்ளது.
மேற்காணும் செய்தியை வெளியிட்ட பாரதியார் அதன் மீதான விமர்சனத்தையோ, யாரால் தொடங்கப் பெற்றது என்னும் குறிப்பையோ தரவில்லை. (பிறகு நீதிக்கட்சியை பாரதியார் கடுமையாக எதிர்த்தார்).
பிரபல ஆய்வாளரான “ராண்டார்கை” (Randor Guy) பின்வருமாறு சற்று மேல் விவரம் அளித்துள்ளார்.
“1909இல் சென்னை நகரத்தில் ஓரளவிற்கு வசதியாக இருந்த இரண்டு வக்கீல்கள் எம்.புருஷோத்தம நாயுடுவும், பி.சுப்பிரணியமும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கினார்கள்.
அதன் பெயர் “தி மெட்ராஸ் நான் பிராமின்ஸ் அசோசியேஷன்’’ (The Madras Non-Brahmins Association) இவர்கள் எவ்வளவோ முயற்சி எடுத்தபோதிலும், இந்த நிறுவனம் தலைதூக்க முடியாமல் படுத்துவிட்டது.
(நீதிக்கட்சியின் திராவிடன் நாளிதழ் ஓர் ஆய்வு - பெ.சு.மணி பக்கம் 106).
இவர்கள் முயற்சி அப்போது வெற்றி பெறாவிட்டாலும் அவர்கள் விதைத்த விதை, டாக்டர் சி.நடேசனாரால் - இந்த திராவிடர் இல்லம், திராவிடர் சங்கம் என்று புதுகையில் முளைத்துக் கிளம்பி, இன்றும் அசைக்க முடியாத ஆலமரமாகி குலுங்குகிறது!
டாக்டர் சி.நடேசனாருக்கு உரிய வாய்ப்பும் பதவியும் அந்நாளைய நீதிக்கட்சித் தலைவர்களால் ஏனோ தரப்படவில்லை. அரசியல் கட்சிகள் என்றாலே தலைவர்களுக்குள் வியூகங்களும் அரசியல் அஸ்திரங்களும் ஏவப்படும். இதில் சிக்கிக் கொண்டு, நியாயமாகப் பெற வேண்டியவை களைப் பெறாமலேயே தங்கள் வாழ்வை முடித்துக் கொள்ளுபவர்களின் வரலாறு தவிர்க்க முடியாதவை!
“நீதிக்கட்சி வரலாறு” எழுதிய ‘விடுதலை’யின் முன்னாள் ஆசிரியர் பண்டித எஸ்.முத்துச்சாமி பிள்ளையின் விமர்சனம் இதோ:
... “1923 நவம்பரில் இரண்டாவது பொதுத் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் நமது பழைய மெம்பர்கள் சிலர் தோல்வியுற்றனர். ஜஸ்டீஸ் கட்சி கொள்கைக்கு முரணாக பனகால் மந்திரி சபை நடந்ததாகக் காட்டிக் கொண்டு சென்னையிலே டாக்டர் சி.நடேச முதலியார் கூட மந்திரி கட்சிக்கு எதிரிடையாகப் போட்டி போட்டு, கட்சித் தலைவரைவிட அதிக வோட்டுகளும் பெற்றார்.
சென்னையிலே தாம் முதலாவதாக வெற்றி பெற்றதனால் மந்திரிசபை அமைக்கத் தம்மையே கவர்னர் அழைப்பார் என டாக்டர் நடேச முதலியார் எதிர்பார்த்தாராம்.
ஆனால் கவர்னர், கட்சித் தலைவர் சர். தியாகராயச் செட்டியாரையே அழைத்தார். மற்றும் மந்திரி சபையில் ஒரு தமிழர் கூட இல்லையென்று தமிழர்களுக்குள் மிக்கஅதிருப்தி இருந்து வந்தது. ஆகவே கட்சித் தலைவர் யோசனைப்படி, இரண்டாவது மந்திரியான சர்.கே.வி.ரெட்டி நாயுடுவை நீக்கிவிட்டு, முதல் மந்திரி பனகால் ராஜா, திவான் பகதூர் டி.என்.சிவஞானம் பிள்ளையை அவரது ஸ்தானத்தில் நியமனம் செய்தார். அதனால் கட்சிக்குள்ளேயே மனக்கசப்பு வளர்ந்ததே தவிர குறையவில்லை. டாக்டர் நடேச முதலியாரும் ஓ.தணிகாசலம் செட்டியாரும் தமிழர்களே. அவர்கள் கட்சிக்காக வெகுநாள் பாடுபட்டவர்களும் கூட. மற்றும் பிராமணரல்லாதார் இயக்கத்துக்கு திராவிடர் சங்க ஸ்தாபகருமான டாக்டர் நடேசனே தந்தை என்று சொல்லவேண்டும். எனவே, ஒரு மாஜி டெப்டி கலெக்டரும், கட்சியுடன் அதுவரை எத்தகைய தொடர்புமில்லாதவரும், பொது வாழ்வில் ஈடுபட்டு அனுபவம் பெறாதவருமான திவான் பகதூர் டி.என்.சிவஞானம் பிள்ளையை மந்திரியாக நியமித்தது கட்சி பிரபலஸ் தர்களுக்கு மிக்க மனக் கொதிப்பை உண்டு பண்ணிற்று.’’
அரசியலில் இப்படிப்பட்ட ஏமாற்றத்திற்கு பிறகும் நடேசனார் தமது கொள்கை - தொண்டை தொடரவே செய்து வரலாற்றில் என்றும் வாழ்கிறார்.
நீதிக்கட்சி தோற்றத்திற்கு முன் நம் தலைவர்கள் முயற்சிகள் குறித்து டாக்டர் நாவலர் இரா.நெடுஞ்செழியன் அவர்கள் தாம் எழுதிய “திராவிட இயக்க வரலாறு’’ நூலில் விரிவான செறிவானத் தகவல்களைத் தருகிறார். அதில் சென்னை பார்ப்பனரல்லாதார் சங்கம், சென்னை அய்க்கிய கழகம், திராவிடர் சங்கம், திராவிடர் இல்லம் போன்றவை குறித்தும் இவ்வமைப்பு களில் டாக்டர் நடேசனார் பங்கு குறித்தும் விளக்குகிறார்.
“பார்ப்பனரின் ஆதிக்க அதிகாரத்தின் காரணமாக, அரசியல் பொருளியல் - சமூகவியல் ஆகிய துறைகளில் சீரழிந்துவந்து கொண்டி ருந்த பார்ப்பனரல்லாத சமூகத்தினரின் நலன்களும், உரிமைகளும், எல்லா வகையிலும் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தை அடிப் படையாகக் கொண்டு, 1909 ஆம் ஆண்டில், சென்னை நகரில் வாழ்ந்து வந்து, திரு. பி.சுப்பிரமணியம் மற்றும் திரு எம். புருஷோத்தம் நாயுடு ஆகிய இரு வழக்கறிஞர்கள், சென்னைப் பார்ப்பனரல்லாதார் Non-Brahmin Association) அமைப்பு ஒன்றினைத் துவக்கினர். அந்த அமைப்பின் குறிக்கோள்கள் என்ன என்பதை, அந்த இரு வழக்கறிஞர் களும், செய்தித்தாள்களின் மூலம், வெளிப்படுத்தி, நாட்டினர்க்கு உணர்த்தினர்.
அவையாவன: (1) பார்ப்பனரல்லாத சமூகத்தினரைத் தாழ்ந்த நிலையிலிருந்து மேம்படுத்தப் பாடுபடுதல்; (2) அவர்கள் சமூகத்தின் உயர்ந்த தகுதியைப் பெறுவதற்கு ஏற்ற முறையில், அவர்களைத் தூக்கிவிடுதல்; (3) ஏழைகளாகவும், அறிவாற்றல் மிகுந்தவர்களாகவும் காணப்படுகின்ற பார்ப்பனரல்லாத மாணவர்கள் உயர் கல்வியைப் பெறச் செய்ய உதவிகள் புரிதல்; (4) பார்ப்பனரல்லாத இளைஞர்கள் வெளிநாடுகள் சென்று தொழில் நுட்பக் கல்விப் பயிற்சிபெற்று, இந்த நாட்டிற்குத் திரும்ப வந்து, புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு எல்லாவித ஊக்கங்களும் அளித்தல், (5) சென்னைப் பார்ப்பனரல்லாதார் சங்கம் அரசியல் சார்பற்ற முறையில், முழுக்க முழுக்கச் சமுதாய முன்னேற்ற அமைப்பாகச் செயல்படுதல் போன்றவைகளாகும்.
இந்தச் சங்கம் அமைக்கப்பட்ட சிலநாட்களில், திரு.வி.வண்ணமுத்து என்பவர்,1909 மே திங்கள் 6 ஆம்நாள்’ மெட்ராஸ்மெயில்’(Madras Mail) என்ற, ஆங்கிலச் செய்தி ஏட்டில், கடிதம் ஒன்றினை எழுதி வெளியிட் டிருந்தார். அவர், அதில், தென்னிந்தியாவில் வாழுகின்ற பார்ப்பனரல்லா தார் அனைவரும், திராவிட வழிவழித் தலைமுறைகளைச் சேர்ந்தவர் ஆவர். எனவே, புதிதாகத் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் சங்கத்திற்குச் சென்னைத் திராவிடச் சங்கம் (The Madras Dravidian Association)என்று பெயர் இடுவது சாலச் சிறந்ததாக அமையும் என்று குறிப்பிட்டிருந் தார். திரு.எம்.பி.என். என்பவர், பார்ப்பனரல்லாதார், அறிவிலும், ஆற்ற லிலும் வேறு எவர்க்கும் தாழ்ந்தவர்கள் அல்லர். அவர்கள் முறைப்படி முயற்சி செய்தால், சிறந்த வகைகளில் மேலோங்கி நிற்பார்கள் என்பது திண்ணம். இந்த நிலை ஏற்பட புதிய சங்கத்தினர்,மேலை நாடுகளில் சிறந்து விளங்கும் கற்றறிந்த பெருமக்களை, இந்த நாட்டிற்கு வரவழைத்து, அவர்களின் சீரிய பரிந்துரைகளையும், ஆக்க நிறைவான உதவிகளையும் பெறத்தக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வேண்டு கோளைச் செய்தித்தாள்கள்மூலம் வெளியிட்டார்.
‘சென்னைப் பார்ப்பனரல்லாதார் சங்கம்‘ என்ற பெயரில், புதிய அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்பட்டதற்குப் பெருத்த எதிர்ப்புத் தெரிவித்து, நந்தியால் என்ற ஊரைச் சேர்ந்த திரு.இ.ஏகாம்பர அய்யர் என் பவர், 1909 சூன் 2ஆம் நாள் வெளிவந்த மெட்ராஸ் மெயில் ஆங்கில ஏட்டில், நீண்டதொரு கடிதத்தை வெளியிட்டிருந்தார்.
அந்தச் சங்கத்திற்கு ஒரு பக்கத்தில் ஆதரவும், மற்றொரு பக்கத்தில் எதிர்ப்பும் பரவலாகத் தோன்றத் தொடங்கின. சங்கத்திற்கு 1000 உறுப் பினர்களைச் சேர்த்தபிறகு, 1909 அக்டோபர் திங்களில்,  அதன் துவக்க விழாப் பொதுக்கூட்டத்தை வைத்துக்கொள்ளப் போவதாகச் சங்கத்தின் பொறுப்பாளர்கள் அறிவித்திருந்தனர். சங்கத்தினர் எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவும், வசதியும், ஏற்படாததால், சங்கம் சரியானபடி இயங்கமுடியாமல் இருந்து வந்தது. காரணம், சங்கத்தைத் தோற்றுவித்த இருவழக்குரைஞர் களும் செல்வாக்கு அற்றவர்களாகவும், வசதி அற்றவர்களாகவும் இருந் ததே ஆகும்.
சென்னை அய்க்கியக் கழகம்
அப்பொழுது அரசுப் பணிகளில் ஈடுபட்டிருந்த பார்ப்பனரல்லாத பணியாளர்களில் சிலர், தாங்கள் பார்ப்பன அதிகாரிகளால் பெரிதும் அழுத்தி வைக்கப்படுவதைத் தாங்கமுடியாமல், தங்களுக்குப் பாதுகாப் பைத் தேடிக் கொள்ளவேண்டி, அரசுப்பணியாளர்களையும், பொதுவாழ்க் கையில் ஈடுபட்டிருந்த செல்வாக்கு மிகுந்தோர் சிலரையும் சேர்த்துக் கொண்டு, 1912ஆம் ஆண்டில், சென்னை அய்க்கியக் கழகம் (The Madras League) என்றபெயரில், புதியதொரு சமுதாயத் தொண்டு அமைப் பைத் தோற்றுவித்தனர்.
அந்த நாட்களில், செல்வாக்கு மிகுந்த மருத்துவ வல்லுநராக விளங்கிய டாக்டர் சி.நடேச முதலியார் அவர்கள், அந்தக் கழகத்தில் தம்மை ஈடு படுத்திக்கொண்டு, அதன் செயலாளர் பொறுப்பை ஏற்றுப் பொதுத் தொண்டு புரியலானார். திரு. எஸ். ஜி. அரங்கராமானுசம் அதன் துணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தக்கழகம் ஆற்றத் தொடங் கிய சீரிய பணிகளில் மிகவும் முக்கியமாகக் குறிப்பிடத்தகுந்த பணி, முதியோரின் கல்வியறிவைப் பெருக்கவேண்டி, முதியோர் கல்வி பயிற்சி வகுப்புகளைத் துவக்கியதாகும். அந்தக் கழகத்தைச் சேர்ந்த கற்றறி வாளர்கள் சிலர், கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியப் பொறுப்பை ஏற்றிருந் தனர். தொண்டு செய்யும் பணியாகக் கருதி, அவர்கள் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தனர்.
சென்னைத் திராவிடச் சங்கம்
1913ஆம் ஆண்டு, அந்தக் கழகத்தின் முதல் ஆண்டு நிறைவு விழா, மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அப்பொழுது, ‘சென்னை அய்க் கியக் கழகம்‘ என்று அமைந்திருந்த பெயரை எழுச்சித்தரக் கூடிய வேறொரு பெயரால் அமைக்கவேண்டும் என்ற உணர்வு பலர்க்கு ஏற் பட்டது. சிலர், அதனைப் பார்ப்பனரல்லாதார் சங்கம் என்று பெயர் மாற்றி அமைக்கவேண்டும் என்று பரிந்துரை செய்தனர். டாக்டர் சி.நடேச முதலியார் அவர்கள், பார்ப்பனரல்லாதார் சங்கம் என்ற எதிர்மறைப் பெயரைக் கழகத்திற்குச் சூட்டுவதைவிட, சென்னைத் திராவிடச் சங்கம் என்ற நேர்முகப் பெயரைச் சூட்டுவதுதான், எல்லா வகையிலும் பொருத்த முடையதாக இருக்கும் என்று வலியுறுத்தினார். டாக்டர் சி.நடேசமுதலியார்.அவர்களின் கருத்தை அனைவரும் ஏற்றனர். அதற்கான தீர்மானம் ஒன்று அந்த ஆண்டு விழாக் கூட்டத்தில், முன்மொழியப்பட்டு, வழிமொழியப் பட்டு, எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 1913ஆம் ஆண்டிலிருந்து, ‘சென்னை அய்க்கியக் கழகம்‘ என்ற அமைப்பு, சென்னைத் திராவிடச் சங்கம் என்று அழைக்கப் பெறலாயிற்று.
(தொடரும்)
27.7.2016 அன்றைய தொடர்ச்சி...
‘திராவிட என்ற இனத்தைக் குறிக்கும் சொல், 1913இல்தான், முதன் முதல் ஒரு அமைப்புக்குப் பெயராக இடப்பட்டது என்பது உண்மை அல்ல. 1892ஆம் ஆண்டிலேயே, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த படித்தறிந்த சிலர், தங்கள் நலன்களைப்பாதுகாத்துக்கொள்ளவேண்டித் திராவிட ஜன சபை (Dravida Jana Sabha)  என்ற பெயரில் ஒரு அமைப்பை ஏற்படுத்தினர்.
‘சென்னைத் திராவிடச் சங்கம்‘ தொடர்ந்து பல சிறப்புக்குரிய கூட்டங் களைக் கூட்டியதோடு, முக்கியமான பல பிரச்சினைகளைப் பற்றி, அவ்வப்போது விவாதித்துத் தக்க முடிவுகளை எடுத்துவந்தது. அந்தச் சங்கம் இலக்கியக் கூட்டங்களையும் அவ்வப்போது நடத்திச் சங்க உறுப்பினர்களிடையே இலக்கிய ஆர்வத்தையும், இலக்கிய அறிவையும் வளர்த்து வந்தது. அந்தச் சங்கம், ஆண்டுதோறும், சென்னைப் பல் கலைக்கழகத்திலிருந்து, பட்டங்கள் பெற்று வெளியேறும், பார்ப்பன ரல்லாத பட்டதாரிகளைப் போற்றிப்பாராட்டி, வரவேற்க, வரவேற்பு விழா நிகழ்ச்சியையும் தொடர்ந்து செய்து வந்தது. அத்தகைய விழா நிகழ்ச்சி கள், பார்ப்பனரல்லாத மக்களிடையே, ‘பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியையும், பார்ப்பனரல்லாத தன் மதிப்பு ஆதரவு உணர்ச்சியை யும் ஊட்டுவதற்குப் பெரிதும் பயன் படுவனவாக அமைந்தன, அப் பொழுது, சென்னை மாநகரில் வாழ்ந்த, முக்கிய பார்ப்பனரல்லாத பெரு மக்கள் அனைவரும் பெருந்திரளினராக வந்து, விழா நிகழ்ச்சிகளில்கலந்து கொள்வது என்பது, சிறப்புப் பொருந்திய தன்மை வாய்ந்ததாக இருந்தது.
முதல் ஆண்டுவிழா, பட்டதாரிகளைப் பாராட்டுவதற்கு என்று ஏற்பாடு செய்யப்பட்டபோது, அது, சென்னை, திருவல்லிக்கேணி, இந்து உயர்நிலைப் பள்ளியின் மண்டபத்தில் நடைபெற்றது. விழாவிற்கு திரு.பி. கேசவப்பிள்ளை தலைமை தாங்கினார். சர்.ஆர்.கே.சண்முகம் செட்டி யார் அவர்கள் அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். விழா நிகழ்ச்சிக்குச் சர்.பி.தியாகராயர், பனகல் அரசர் போன்ற முக்கிய தலை வர்கள் வருகைதந்து, விழாவினைச் சிறப்புச் செய்தனர்.
திராவிட இல்லம்
‘சென்னைத் திராவிடச் சங்கம்‘ ஆற்றிய பணிகளில்,பாராட்டு வதற்குரிய மிகச் சிறப்பானதொருபணி, பார்ப்பனரல்லாத மாணவர்க்கு என்று,1916 சூலைத்திங்களில், உணவுமற்றும் தங்கும்விடுதி ஒன்றினை ஏற்படுத்தியதாகும். அந்த விடுதிக்குத் ‘திராவிட இல்லம்‘ (Dravidian Home) என்று பெயரிடப்பட்டது. அந்த விடுதி டாக்டர் சி.நடேசமுதலியார் அவர்களின் நேரடி மேற்பார்வையின் கீழ்ச் சிறப்பாக இயங்கிவந்தது. இந்தத் திராவிட இல்லத்தில், மாணவர்க்குப் பயன்படுவதற்கு என்று, ஒரு சிறப்பான நூலகமும் திறக்கப்பட்டது. அந்த இல்லத்தில் தங்கிப் படித்தவர்கள்தாம், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துணைவேந்தர் களாகப் பணியாற்றிய, திரு.டி.எம். நாராயணசாமிபிள்ளை, மற்றும் நீதிபதி எஸ்.சுப்பிரமணிய நாடார் போன்றவர்கள் ஆவர்.
அந்த இல்லத்தில், 1914 மே 15ஆம் நாள் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில், சிந்தனைச் சிற்பி திரு.ம.சிங்காரவேலு அவர்கள் கலந்து கொண்டு, ‘நமது தற்காலச் சமூகத் தேவைகள்’ (Our Present Social Needs) என்ற தலைப்பில், அரிய சொற்பொழிவாற்றினார். அன்னிப் பெசன்ட் அம்மையார், பார்ப்பனரல்லாதார் இயக்கத் திற்குப் பகைவராக மாறுவதற்கு முன்பு, 1914 அக்டோபர் 30 ஆம் நாள், திராவிட இல்லத்தில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு ‘முன்னேற்றத்திற்கான சூழ்நிலைகள்’ (The Conditions of Progress) என்னும் பொருள் பற்றிச் சிறப்புரையொன்று ஆற்றினார் என்பது குறிப் பிடத்தக்கது.
திராவிட உணர்ச்சி
சென்னைத் திராவிடச் சங்கம், மற்றும் திராவிட இல்லம் ஆகியவற் றின் சிறப்பான பணிகள், பார்ப்பனரல்லாத பெருங்குடி மக்களிடையே, நல்ல விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அடிப்படைக் காரணங் களாக அமைந்தன.
டாக்டர்சி.நடேசமுதலியார் அவர்களாலும், அவரைச் சார்ந்தோரா லும், எழுப்பப்பட்ட திராவிட உணர்ச்சியானது.அப்பொழுது காங்கிரசு அரசியல் உலகில் புகழோடும், பெருமையோடும் திகழ்ந்து வந்த சர்.பி. தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர்போன்ற பார்ப்பனரல்லாத தலைவர் களைப் பெரிதும் கவர்ந்தது.
பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு உணர்ச்சியின் காரணமாக உந்தப்பட்ட பெருமக்கள் 21 பேர்கள், அவ்வப்போது எழுதிய எழுச்சிமிக்க கொள்கை விளக்கக் கடிதங்கள் 21அய், ஒன்றாக இணைத்து, திரு.எஸ்.கே.என். என்பவர் ‘பார்ப்பனரல்லாத சமூகம்‘  (The Non-Brahmin Community) என்ற பெயரில், நூல் ஒன்றினை வெளியிட்டார். அந்த நூல் பலராலும் விரும்பி வாங்கிப் படிக்கப்பட்டது. அந்த நூலில், ‘திராவிட மகா சபை’ (Dravida Maha Sabha) என்ற பெரியதொரு அரசியல் அமைப்பு காணப் படவேண்டும், அதன் கிளைகள் மாவட்டம் - வட்டம் - நகரம் - பேரூர் - சிற்றூர் ஆகிய நிலைகளில் நிறுவப்பட வேண்டும் என்பனபோன்ற சீரிய கருத்துக்கள் பல வற்புறுத்தப்பட்டிருந்தன.
சி.சங்கரன் நாயர் அவர்கள், 1915ஆம் ஆண்டில், ‘திராவிடரின் சிறப்புக்கள்’ (Dravidan Wordhies) என்ற தலைப்பில் அரிய தொரு ஆராய்ச்சி நிறைந்த ஆங்கில நூல் ஒன்றினை வெளியிட்டார். அதுவும் மேலே சுட்டிக் காட்டப்பட்ட இரண்டு நூல்களும் பார்ப்பனரல்லாத மக்களிடையே உணர்ச்சியையும், எழுச்சியையும் பரவலாக ஏற்படுத் தின என்று கூறினால், அது மிகையாகாது.
1916ஆம் ஆண்டு சூலை 19ஆம் நாளில் வெளிவந்த மதராஸ் மெயில்’ (The Madras Mail) என்னும் ஆங்கில நாளேடு, திராவிடச் சங்கம் காலப்போக்கில் ஒரு வித விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதோடு, பல சமூகத் தடைகளை நாளடைவில் தகர்த்தெறிந்தும் வந்திருக்கிறது. வாய்ப்பு அளிக்கப்பட்டால், தகுதியிலும், திறமையிலும் தாங்களும் பெருமளவுக்கு வளரமுடியும் என்பதைப், பார்ப்பனரல்லாத சமூகத்தினர் காட்டிவிட்டனர் என்று, நிலைமையைத் தெள்ளத் தெளிவாக எழுதியிருந்தது, கூர்ந்து கவனிக்கத்தக்கது.
பார்ப்பனரல்லாதார்க்கு என்று
தனி அரசியல்அமைப்பு
பார்ப்பனரல்லாதார்க்கு என்று பெரியதொரு, பரந்த, சிறந்த அரசியல் அமைப்பு ஒன்று தோற்றுவிக்கப்படவேண்டும் என்று, பார்ப்பனரல்லாத தலைவர்கள் பலரும் கொண்டிருந்த சீரிய எண்ணத்திற்குக், காங்கிரசுப் பேரியக்கப் பார்ப்பனர்களின் ஆதிக்க போக்கும், தியா சாபிக்கல் சொஸைட்டியின் இந்து தரும நடவடிக்கைகளும், அன்னிப் பெசன்ட் அம்மையாரின் பார்ப்பன ஆதிக்கச் சார்பான சொற்பொழிவுகளும் காரணமாக அமைந்தன. இவற்றிற்கெல்லாம் பார்ப்பனத் தலைவர்களும், பார்ப்பன ஏடுகளும் ஊக்கத்தோடும், உறுதியோடும் அளித்து வந்த ஆதரவும்,’தன்னாட்சி இயக்கம் நடத்திவந்த ‘நியூஇந்தியா’ (New India) என்ற ஏட்டின் போக்கும் நெய்வார்த்தன. அதனை மேலும் மேலும் தூண்டிவிட்டு வளர்ப்பதற்கு, அவை காரணங்களாக அமைந்து விட்டன என்றும் கூறவேண்டும்.
பொறுப்பு வாய்ந்த பிரதிநிதித்துவ
ஆட்சியாற்றிய உணர்வு
இந்த நிலையில்,1914ஆம் ஆண்டு தொடங்கிய உலகப்பெரும் போரில், இந்தியா, பிரிட்டனுக்கு ஆதரவாக இருந்து, பேருதவிகள் பல புரிந்து வந்ததன் காரணமாக, உலகப் பெரும் போருக்குபிறகு, பிரிட்டன், இந்தியாவில்,பொறுப்புவாய்ந்த-பிரதிநிதித்துவம் கொண்ட தன்னாட்சி அமைப்பு ஏற்பட இடம் வகுத்துத்தரும் என்ற நம்பிக்கை, எல்லாரிடத் திலும் பரவலாக ஏற்பட்டிருந்தது.
அப்படி ஒருநிலை ஏற்பட்டுவிட்டால், திராவிட நாட்டின் அரசியல் - ஆட்சி - ஆட்சிப்பணி ஆகியவற்றில், காங்கிரசுக் கட்சியின் மூலம், பார்ப்பனர்களின் ஆதிக்கம் மேலும், மேலும் வளர, வழிவகைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அய்யப்பாடும், அச்சமும் பார்ப்பனரல்லாத தலைவர்களிடையே தோன்ற ஆரம்பித்தன. இத்தகைய அச்சவுணர் வோடு, தென்னிந்திய அரசியல் உலகில் உலாவந்து கொண்டிருந்த சர்.பி.தியாகராயர், காங்கிரசுக் கட்சியில் பார்ப்பனத் தலைவர்களின் ஆதிக்கம் தலை தூக்கி நிற்பதையும், காங்கிரசின் நடவடிக்கைகள் பார்ப்பனர்க்கு மட்டுமே பயனளித்து வருவதையும், காங்கிரசுக் கட்சி யின் மேடைதோறும் கட்டிக்காட்டி, அத்தகைய போக்குகளை வன்மை யாகக் கண்டித்து வந்தார். சர்.பி.தியாகராயரின் அறிவுரைகளையும், எச்சரிக்கைகளையும், கண்டனங்களையும், காங்கிர சுக்கட்சியின் பெருந்தலைவர்கள் செவிமடுக்காமல் அவற்றையெல்லாம் அசட்டை செய்து, புறக்கணித்தே வந்தனர்.
மேலும், 1916 ஆம் ஆண்டில், இந்திய சட்டமன்றத்திற்கு உறுப்பினர் களைத் தேர்ந்தெடுக்க நடைபெற்ற தேர்தலில், திராவிடத் தலைவர்கள் பலர், வஞ்சிக்கப்பட்டுப், பார்ப்பனத் தலைவர்களால், தோற்கடிக்கப் பட்டனர். அந்தத் தேர்தலில், டாக்டர் டிஎம்.நாயர் அவர்களை எதிர்த்து போட்டியிட்ட திரு.வி.எஸ்.சீனிவாச சாஸ்திரி அவர்கள் வென்றார்; பனகல் அரசரான திரு.இராமராய நிங்கரை எதிர்த்துப் போட்டியிட்ட திரு.கே.வி.அரங்கசாமி அய்யங்கார் வென்றார். அதே தேர்தலில், மற்றொரு திராவிடத்தலைவரான திரு.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களும் தேல்வியுற்றார். திராவிடரின் மாபெருந்தலைவராகத் திகழ்ந்த சர்.பி. தியாகராயர் அவர்களும் அந்தத் தேர்தல் தோல்வியைத் தழுவினார். வெற்றி பெற்றவர்களில் பெரும்பாலோரும் பார்ப்பனர் களாகவே விளங் கினர். பார்ப்பனத் தலைவர்களில் ஒருவரான திரு.டி. பிரகாசம் அவர் களே பார்ப்பனர்களின் சுயநலப் போக்கும், அவர்கள் அரசு அதிகாரத் தில் கொண்டிருந்த ஆதிக்கமும் சேர்ந்துதான். பார்ப்பனரல்லாத பெருந் தலைவர்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்தன என்று வெளிப் படையாகவே ஒப்புக் கொண்டார்.
தனி இயக்கம் காண ஆர்வம்
சர்.பி.தியாகராயரும், டாக்டர் டி.எம். நாயரும் தமக்குக் காங்கிரசுக் கட்சியிலே, மதிப்போ, மரியாதையோ, கிஞ்சிற்றும் இல்லை என்பதை நாளடைவில் உணர்ந்து கொள்ளத் தலைப்பட்டனர். பார்ப்பனரின் ஆதிக்க வெறிபிடித்த அதிகார அரசியலிலிருந்து, திராவிடப் பெருங்குடி மக்களை மீட்பதைத்தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு இரு பெருந்தலைவர்களும் வந்தனர்.
ஏற்கனவே டாக்டர் சி. நடேச முதலியார் உருவாக்கி வைத்திருந்த திராவிடர் பற்றிய உணர்வும், எழுச்சியும், அவர் தீட்டிவைத்திருந்த திட்டங்களும் அவ்விருவரின் முயற்சிகளுக்குப் பெருந்துணையாக அமைந்தன. திராவிட மக்கள் விழிப்புணர்ச்சி பெற்று எழுவதற்கும், ‘திராவிட இயக்கம் தோற்றம் பெறுவதற்கும் அடிப்படை வித்திட்டவர் டாக்டர் சி.நடேச முதலியார் என்று கூறினால், அது நூற்றுக்கு நூறு உண்மையான கூற்றாகும்‘’ என்கிறார் டாக்டர் நாவலர்.
டாக்டர் நடேசனார் மறைவு குறித்து தந்தை பெரியாரின் உளமார்ந்த இரங்கல் அறிக்கை படித்தால் டாக்டர் நடேசனாரின் எளிமையும் தொண்டும் எளிதில் விளங்கும். “டாக்டர் சி. நடேச முதலியார் நலிந்தார் என்ற சேதி கேட்டு நம் நாட்டில் திடுக்கிடாத பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் எவரும் இருக்க மாட்டார்கள். அவரது சேவையைப் பாராட்டி அவருக்கு நன்றி விஸ் வாசம் காட்டக் கடமைப்படாத தமிழ் மகன் எவனும் எந்நாட்டிலுமிருக்க மாட்டான். தேழர் நடேச முதலியாரிடம் உள்ள அருங்குணங்களில் சூது வஞ்சகம் அற்ற தன்மையே முதலாவதும் இரண்டாவதும் மூன்றா வதுமாகும்.
சூதற்றவனும் வஞ்சகமற்றவனும் உலகப்பேட்டியில் ஒரு நாளும் வெற்றிபெறமாட்டான் என்கின்ற தீர்க்கதரிசன ஆப்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக இருந்த நடேசன் அவர்கள் தனது தெண்டிற்கும், ஆர்வத்திற்கும், உண்மையான கவலை கெண்ட ஊக்கத்திற்கும் உள்ள பலனை தன் செந்தத்துக்கு அடையாமல் பேனதில் நமக்கு சிறிதும் ஆச்சரியமில்லை. ஏன்? தனக்கென வாழாதார் தான் பிறர்க்கு என வாழ முடியும். ஆதலால் நடேசன் அவர்களால் தமிழ் மக்களுக்கு எண் ணரிய நன்மைகள் ஏற்பட்டிருப்பதை அவரது எதிரிகளும் மறுக்கார். சென்னை வாசிகள் யாரும் கேபித்துக் கெள்ளக்கூடாது என்கின்ற வேண்டுகேளின் மீது ஒருவார்த்தை செல்லுகிறேம். அதாவது நடேசன் நலிவால் சென்னை நகரத்தில் பார்ப்பனரல்லாதார் மக்கள் முன்னேற்ற விஷயத்தில் உண்மையான பற்றும் கவலையும் இருந்த மக்களில் தலைவர் குழாத்தில் முதன்மையானவர் மறைந்து விட்டார் என்று செல்கிறேம். அது மாத்திரமா என்றால் இன்று அவருக்கடுத்த நிலையில் இரண்டாவதவர் மூன்றாவதவர் தான் யார் என்று தேடித்திரிய வேண்டிய நிலையில் தமிழ்மக்களை விட்டு மறைந்து விட்டார் என்றும் செல்ல வேண்டியிருக்கிறதை நினைக்கும்பேது நடேசன் நலிவால் தமிழ் மக்கள் உள்ளத்தில் துக்க தீப்பெறி குடிகெண்டு விட்டது என்றே கூறுவேம்.
ஒரு தனிப்பட்ட மனிதனை நம்பிவாழும் நாடே சமூகமே சுதந்திரமும் வீரமும் உள்ள நாடே சமூகமே ஆகாது. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததாலேயே தமிழ் மக்களுக்கு உழைக்கும் தயாளர் இல்லை என்ற நலி ஏற்படக்கூடாது என்பதே நமது அவா. ஆதலால் ஒரு நடேசன் நலிந்ததால் நாம் நலிவு கெண்டுவிடாமல் 1000 நடேசனைக் காணுவேமாக. நாம் ஒவ்வெருவரும் நடேசனே ஆக நாடுவேமாக.”
‘குடி அரசு’ - இரங்கல் கட்டுரை - 21.02.1937”
- தொடரும்
சமூக நீதிக் களத்தின் சரித்திர நாயகரான சர்.பிட்டி தியாகராயர்
திராவிடர் இயக்கத்திற்கு வித்தூன்றக் காரணமான ‘திராவிடர் இல்லம்’ அமைத்து, கல்வியை ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு அளித்து, தன்னுடைய வருமானத்தின் பெரும்பகுதியை இத்தகைய திராவிடர் சமூக மாணவர்களுக்கும் - பொதுவாக அனைத்து மக்களுக்கும் செலவு செய்து அருந்தொண்டாற்றிய டாக்டர் சி.நடேசனாரின் மிகப் பெரிய ஆலோச னையை ஏற்று, 1916இல் நவம்பர் 20இல் ‘நீதிக்கட்சி’ உருவாகியது.
அதன் பெயர் தென்னிந்திய நல உரிமைச் சங்கம் (South Indian Riberal Federation - S.I.L.F.) என்பதாகும். அந்த நீளப் பெயரை வெகு மக்கள், அந்த இயக்கம் தொடங்கி நடத்திய ஆங்கில நாளேடான ‘ஜஸ்டிஸ்’ ஏட்டை நினைவு கூர்ந்து ‘ஜஸ்டிஸ் கட்சி’ என்றே அழைத்து, புழக்கத்தில் கொண்டு வந்து நிலை நிறுத்தினர்.
இந்த இயக்கம் தோன்றுவதற்கு இவ்விதை ஊன்றுவதற்கு, மூலகாரணமான முப்பெரும் பெரியார்கள் டாக்டர் சி.நடேசனார், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் டி.எம்.நாயர் ஆகியோர் ஆவர்!
கட்சித் தலைமைப் பொறுப்பும் மற்ற முக்கியப் பொறுப்புகளும் சர்.பிட்டி அவர்களிடமும் டாக்டர் டி.எம்.நாயர் அவர்களிடமுமே பெரிதும் இருந்தன.
சர்.பி.தியாகராயர் என்ற மாபெரும் வணிக வேந்தர் ‘வெள்ளுடை வேந்தர்’ என்றே அழைக்கப்பட்டார்!
மிகப் பெரிய செல்வவான் அவர்கள்! அந்நாளில் ஏற்றுமதி தொழிலில் ஈடுபட்டவர் நம்முடைய சர்.பிட்டி தியாகராயர் பெருமான்!
“தம் குடும்பத்தார் நடத்தி வந்த தோல் பதனிடும் தொழிலையும், தோல் ஏற்றுமதி வணிகத்தையும் திறம்பட நடத்தியவர். இவர்களால் பதனிடப்பட்ட தோல் ‘பிட்டி’ என்ற முத்திரையுடன் மேல் நாடுகளில் புகழ்பெற்றன. அவை உறுதியும் தரமும் தூய்மையும் வாய்ந்தவையாக இருந்தமையால், எவ்வித சோதனைக்கும் உட்படுத்தாமல் ஏற்றுக் கொள்ளப்பட்டன!
இவரது பரோபகாரச் சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு;
இவரது தொழிற்சாலையில் பணியாற்றிய தொழிலாளர் களுக்குக் குடியிருப்புக்கள் அமைத்துக் கொள்வதற்காக பரந்த நிலப்பரப்பை தியாகராயர் இலவசமாகவே வழங்கியுள்ளார்.
அப்பகுதியைச் சார்ந்துள்ள மக்கள் தியாகராயபுரம் என்றே அக் காலத்திலேயே பெயரிட்டு தங்களது நன்றி உணர்ச்சியைப் புலப்படுத்தினர்!
சென்னைத் தலைநகரில் இன்றும் கூட தென்சென்னைப் பகுதியில் உள்ள, தியாகராயர் நகர் என்பதைப் பார்ப்பனர்கள் திட்டமிட்டே அதைச் சுருக்கி டி.நகர் (T.Nagar) என்றே குறிப்பிடும் ‘லாவகமான’ விஷமத்தைச் சன்னமாகச் செய்து சந்தோஷப்படுகிறார்கள்.
“மானமிகு கலைஞர் தான் கேட்டார். சுருக்கத்திற்காகத்தான் தியாகராயநகரை டி.நகர் என்று அழைக்கிறோம் என்கிறார்கள் சிலர். அவர்களைக் கேட்கிறோம். திருவல்லிக்கேணி என்பதை யாராவது டி.வி.கேணி அல்லது டி.கேணி என்று அழைக்கிறார்களா?” என்று.
இதைப் புரிந்து கொள்ள பெரியார் நுண்ணறிவு தேவை அல்லவா?
நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்திற்கு வித்தூன்றிய தியாகராயர் பெருமானின் தொண்டு மட்டும் அன்று இல்லையானால், திராவிடர் வாழ்வு கல்வி அறிவற்ற, வெறும் உடல் உழைப்புக்காரர்கள் ஆகவும், ஒரு காலத்தில் ஆப்பிரிக்க நாட்டு கறுப்பின மக்கள் - (இன்றல்ல) வாழ்ந்தது போன்ற நிலைதானே நமக்கும் நீடித்திருக்கும்.
நமது வேர்கள் - பாரம்பரியத்தை திராவிடர்கள் என்று உணருவதற்கு உழைத்த அந்த உத்தமர்களின் வரலாறு நமது இன்றைய இளைய தலைமுறைக்கும், எதிர்காலத் தலைமுறைக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கத்தின் வெளிச்சமாகப் பயன்படட்டும் என்பதற்காக அதனை சுருக்கி நாம் இந்த கட்டுரைத் தொடரில் தருவதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
அது மட்டுமல்ல, மிகப் பெரிய செல்வந்தர்களான நமது நீதிக்கட்சித் தலைவர்கள், ஏழை, எளிய, தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும், நமது மகளிரின் உரிமைகளையும் பற்றிக் கவலைப்பட்டு அவற்றிற்காக தமது உடல், பொருள், உயிர் அத்தனையையும் ஈந்த ஈகையாளர்கள் ஆவார்கள்!
அவர்கள் அத்துணை பேரின் வரலாறும், தியாக வரலாறுகள். அவர்கள் பொது வாழ்க்கையினால் பொருள் சேர்த்தவர்கள் அல்லர், பொருளை இழந்தவர்கள். ஒருவேளை அவர்கள் புகழ் சேர்த்திருப்பார்களே தவிர, பொது வாழ்வினால் லாபம் ஈட்டிய பெரும் லட்சாதிபதிகளாகவோ, கோடீஸ்வரர்களாகவோ ஆனவர்கள் என்று எவரைப் பார்த்தும் விரலை நீட்டவே முடியாது!
இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்ற ஓரிரு ஆண்டுகளிலேயே தியாகராயர் பொதுத் தொண்டில் நாட்டம் கொண்டு பொது வாழ்வில் இறங்கினார். சென்னை மாநகராட்சியில் (சென்னைக் கார்ப்பரேஷன்) மாநகராட்சி உறுப்பினராக ஏறக்குறைய 41 ஆண்டு ஆறு மாதங்கள் பணியாற்றி நீண்ட வரலாறு படைத்தவர்.
1920ஆம் ஆண்டில் அம்மாநகராட்சி மன்றத்தின் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பெற்றார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்திய தலைவர் இவரே! தொடர்ந்து நான்காண்டுகள் அப்பதவி வகித்தவர்.
1910-1912 ஆண்டுகளில் மாநகராட்சிப் பிரதிநிதி என்ற முறையில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு தொண்டாற்றினார்!
சென்னை மகாஜன சபை, அகில இந்திய காங்கிரஸ் பேரவை - ஆகியவற்றிலும் முறையே 1924, 1928 ஆண்டுகள் பணியாற்றிய இவருக்கு அவ்வியக்கங்களின் உண்மைத் தன்மை புரியலாயிற்று.
இவை யாவும் வெகுச் சிறுபான்மையினரான பார்ப்பனர் நலனுக்கும் ஆதிக்கத்திற்கும் பாடுபடுபவன என்பதை தனது மனதாலும், அனுபவத் தாலும் உணர்ந்து கொதித்தெழுந்தார்! அப்படி உணர்ந்ததோடு, பார்ப்பன வர்ணாஸ்ரமக் கொடுமையை அவர் நேரில் அனுபவித்த ஒரு சம்பவம்:-
ஏற்கெனவே காங்கிரசில் இவரும் டி.எம்.நாயரும் நண்பர்களாக இருந்து, பிறகு சில நிகழ்வுகளால் கருத்து மாறுபாடு கொண்டவர்களாக இருந்தவர்கள், எதிர்பாராத வகையில் மாச்சரியம் வைத்து மிக நெருக்கமான நண்பர்களானார்கள் அந்த சம்பவம் என்ன?
பிட்டி. தியாகராயர் எவ்வளவுதான் பிரபல செல்வந்தர், பெரு வணிகர் என்ற உயர்ந்த சமூக அந்தஸ்து பெற்றவராகவும், சென்னை மாநகராட்சி மன்றத்தின் உறுப்பினர் என்ற பெருமைகளைப் பெற்றிருந்தவரானாலும், ஒரு நிகழ்ச்சியில் பார்ப்பனர்கள் அவரை மேடையில் அமர வைக்காமல் சிறுமைப்படுத்தி, கீழே நாற்காலி போட்டு உட்கார வைத்துவிட்டார்கள்.
சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடப்பதற்கு இவர் அக்காலத்திலேயே ரூபாய் பத்தாயிரம் நன்கொடை கொடுத்தவர். (இக்காலத்தில் பல கோடி மதிப்பு ஆகும்). இவர் என்னவிருந்தாலும் “சூத்திரர்” அல்லவா? எனவே இவரைக் கீழே உட்கார வைத்தனர். அவருக்கு அதற்கு மேல் இன்னொரு அதிர்ச்சி!
இவரிடத்தில் அலுவலகத்தில் சாதாரண வேலை பார்க்கும் ஒரு பார்ப் பனரை மேலே உட்கார வைத்திருந்த காட்சி அவரது ‘சுயமரியாதை’யை கிளர்ந்தெழச் செய்தது!
இத்தனைக்கும் இவர் பக்தர், திருவல்லிக்கேணி மயிலாப்பூர் கோயில் களுக்கு “திருப்பணி” என்பவைகளுக்கு வாரி, வாரி வழங்கிய பக்தி மான் வள்ளல். என்றாலும் ‘பிறவியில் இவர் சூத்திரர்தானே! எனவேதான் ‘கீழ் இடம்’ இவருக்கு!
ஆத்திரம் கொப்பளிக்க உடனே தியாகராயர் அவ்விடத்திலிருந்து வெளியேறி தன் காரில் அமர்ந்து, தனது ஓட்டுநரை நோக்கி நேரே டி.எம்.நாயர் வீட்டுப் போ’ என்று ஆணையிட்டு, அங்கே சென்று இருவரும் இணைந்தனர்!
டாக்டர் நாயரும் பார்ப்பனர் சூழ்ச்சி - ஆணவம், நம்பிக்கை துரோகத்தை தன் அனுபவம் மூலம் உணர்ந்த ஒரு சம்பவம் அதற்கு சில மாதங்கள் முன்பு நிகழ்ந்தது!
டாக்டர் நாயர் நகராட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு, டெல்லி சட்டமன்றத்திற்கு (இம்பீரியல் சட்டமன்றம்) 1916ஆம் ஆண்டு சென்னை சட்டமன்ற உறுப்பினர்களிலிருந்து ஓர் உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், இப்பொறுப்பிற்கு தாம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று விரும்பினார் டாக்டர் டி.எம்.நாயர். இந்த விருப்பத்தை நண்பர்களிடம் கூறினார். பார்ப்பனரும் ஆதரவு தருவர் என்று நம்பினார். இறுதியில் இவருக்கு வெறும் 4 வாக்குகள் மட்டுமே கிடைத்தது.
வடக்குப் பகுதி, தெற்குப் பகுதி என்ற இரண்டு இடங்களுக்கு நடந்ததில் பி.என்.சர்மாவும், தெற்கு வி.எஸ்.சீனிவாச சாஸ்திரியும் வெற்றி பெற்றனர்! டாக்டர் நாயரை திட்டமிட்டே பார்ப்பனர் காலை வாரிவிட்டனர்! அன்றே திட்டவட்டமான முடிவுக்கு வந்தார். பார்ப்பனர் ஆதிக்கத் திற்கு முடிவு கட்டினால் ஒழிய, திராவிடர்களுக்கு இனி விடிவு கிடையாது என்று.
ஏற்கெனவே டாக்டர் சி.நடேசனாரின் திட்டம், இவ்விரு மேதைகளின் ஒருமித்த கருத்து - திராவிடர் இயக்கத்தைப் பிரசவித்தது!
‘நீதிக்கட்சி’ இயக்கம் ஆரம்பித்த அடுத்த ஆண்டு (1917இல்) சென்னையில் நடைபெற்ற முதல் மாகாண ஜஸ்டிஸ் கட்சி மாநாட்டில் தியாகராயப் பெருமான் முழக்கம் இதோ:
“பிறப்பினால் உயர்வு தாழ்வு கற்பிப்பது ‘திராவிட மரபன்று’; திரு வள்ளுவர் முதலிய திராவிடத் தலைவர்கள் பிரம்மனின் முகத்திலிருந்து பிறந்தோம் யாம் என்று பெருமை பேசினாரில்லை. பிறப்பினால் ஏற்ற தாழ்வு கற்பித்தோரும், நால்வகை ஜாதியை இந்நாட்டில் நாட்டினோரும் ஆரியரே. அவ்வருணாச்சிரமக் கோட்டையை இடித்தெறிய 2400 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய புத்தர் முயன்றார். முடியவில்லை. பின் வந்த பற்பல சீர்திருத்தவாதிகள் முயன்றனர். தோற்றனர். இராமனுஜரும் புரோகிதக் கொடுமைகளைக் களைந்தெறிய ஒல்லும் வழி முயன்றார். தோல்வியே கண்டார்.
பார்ப்பனர் பிடி மென்மேலும் அழுத்தமுற்றே வந்தது. தீண்டாமை - அண்டாமை முதலிய சமுதாய சீர்கேடுகளும் படிப்படியே பரவிப் பெருகலாயின. அத்தகைய பலம் பொருந்திய ஜாதிக் கோட்டையைத் தகர்த்தெறிய இதுவே தக்க காலம்; இதுவே தக்க வாய்ப்பு”
- சர்.பி.தியாகராயர் உரையில்)
தியாகராயரின் ஒழுக்க சீலம், பற்றிய அக்கால அவரது அரசியல் எதிரியான (காங்கிரஸ் தலைவர்) தமிழ்த் தென்றல் திரு.வி.கல்யாணசுந்தரம் முதலியார் எழுதிய இரங்கலுரை படிப்போர் அனைவரையும் நெக்குருகச் செய்யும் ஒன்றாகும்.
அதன் ஒரு முக்கிய பகுதி இதோ:
ஒழுக்கசீலர்
“தியாகராஜர் பிரிவை உன்னுங்கால் அப்பிரிவு ஆறும் மலையும், கூவலும், குளமும், கலையும், தொழிலும், மக்களும், ஒழுக்கமும் பலபடச் செறிந்த ஒரு பெருந் திருநகரம் திடீரென மறைந்தது போல் எமக்குத் தோன்றுகிறது. அந்தோ! தியாகராஜ மலையுஞ் சாய்ந்ததோ! என்று அழுகிறோம், ராஜ கெம்பீரத் தோற்றமும், திருநீற்றொளியும் சிங்க நோக்கும் மலர்ந்த முகமும், பீடுநடையும், அஞ்சா நெஞ்சும், ஆவின் இயல்பும் உடைய ஒரு பெரு வடிவை இனி என்றே காண்போம்! எமதாருயிர்த் தியாகராஜரை இனி என்றே காண்போம்!
தியாகராஜ செட்டியார், இந்தியக் கைத்தொழில் வளர்ச்சியிலும் இந்திய வைத்திய முயற்சியிலும் பெருங்கவலை செலுத்தி வந்தார். சுருங்கக்கூறின், செட்டியார்க்குச் சுதேசி இயக்கத்தில் இடையறாப் பேரன்பு உண்டு என்று கூறலாம். தியாகராஜ செட்டியார் வாழ்வில் அறியக்கிடக்கும் நறுங்குணங் கள் பல. அவைகளுள் தலையாயது அவர்பால் சுயநலமின்மை என்பது.
லார்ட் வெல்லிங்டன் காலத்தில் தமக்கு நல்கப்பட்ட மந்திரி பதவியை வேண்டாமென்று செட்டியார் மறுத்ததொன்றே அவரது சுயநல மின் மையை வலியுறுத்தும். இக்குணம் அவர் பாலிருந்தமையாலன்றோ சென்னை வாசிகள் அவரைச் சட்டசபை அங்கத்தவராகத் தெரிந் தெடுத்தார்கள்.
ஒழுக்கத்திற் சிறந்த செட்டியார் எவர்க்கும் அஞ்சாது தமது மனச் சான்றுக்குத் தோற்றுவதை உள்ளவாறே வெளியிடுவர். பிறர் புகழ்வதை எதிர்நோக்கிச் செட்டியார் எதையும் மறைத்துப் பேசமாட்டார்.
இல்லறத்திலிருந்து இத்துணைத் தொண்டு செய்த ஒருவர் வாழ்வு, பின் வருவோர்க்கு இலக்கியம் போன்றதென்பது மிகையாகாது.” என்றார் தமிழ்த் தென்றல் திரு.வி.க..
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக