பக்கங்கள்

திங்கள், 10 அக்டோபர், 2016

மத்திய அரசுப் பணிகளுக்குத் தேர்வான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்துவதா?



- கோ. கருணாநிதி

புதுடில்லி, ஜூலை 7 மத்திய அரசுப்பணிகளுக்கு தேர்வான பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய தகுதி நிலைகளில் பணி வாய்ப்பு வழங்கிட வேண்டும் என்று அகில இந்திய பிற்படுத்தப் பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அதன் விவரம் வருமாறு:

மத்திய பணியாளர்கள் தேர்வாணையத்தின்மூலமாக 2015ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட சிவில் தேர்வுகளில் வெற்றி பெற்ற 1078 பேர் பல்வேறு நிலைகளில் பணிவாய்ப்புக்காக தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், அதிர்ச்சியளிக்கும்படியாக, தேர்வு செய்யப்பட்ட 1078 பேரில் 926 பேருக்கு மட்டுமே பணிநியமன உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.

அதிலும் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்ற வகையில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் 120 பேருக்கு பணிவாய்ப்பு அளிக்கப்படாமல் உள்ளதாகத் தெரிகிறது.  அவர்களுக்கு உரிய பணிவாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது அல்லது, வரு வாயைக் காரணமாகக் கூறி, அல்லது பொதுப்பட்டியலில் இருப்பதாகக் கருதி, வழங்கப்பட வேண்டிய பணியை வழங்காமல், பணியின் தகுதிநிலைக் குறைத்து வழங்கப் பட்டுள்ளது. அதேபோல், 35 பேருக்கு அவர்களின் பெற்றோர் பொதுத்துறையில் பணியாற்றுவதாகக் குறிப் பிட்டு பணிநியமன ஆணை வழங்க மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் பணி நியமனம் வழங்கப்படாமல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளார்கள்.

பணிநியமன ஆணையில் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் எவரும் இடம் பெறவில்லை.  உரிய பணி யாளர் மற்றும் பயிற்சித்துறை அலுவலகத்தில் (DOPT) இதுகுறித்து கேட்டபோது அலுவலர்கள் தெரிவித்த தாவது:

பணிநியமனம் மறுப்பு அல்லது தகுதிநிலை குறைப்பு என்பது அவர்களின் பெற்றோர் வருவாயை அடிப்படையாகக் கொண்டு  முடிவு செய்யப்பட்டது என்று கூறினாலும், அத்துறையின் இணையதளத்தில் அதற்கான பதிவுகள் எதுவும் இல்லை.

பணியாளர்கள் தனிப்பிரிவு பயிற்சித் துறை சார்பில்  8.9.1993 அன்று வெளியிடப்பட்ட அலுவலக நிர்வாகக்குறிப்பில் குறிப்பிடும்போது, ஊதிய வருவாய் அல்லது விவசாய வருவாய் என எந்த விதத்திலும் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டது கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சமூகநீதி மற்றும் அதிகாரத்துறைக்கான அமைச்சகத்தின் இணை செயலாளர் 24.4.2002 அன்று கொல்கத்தா சட்டமன்ற உறுப்பினர் நேபால் மேத்தாவுக்கு எழுதிய பதிலில் கிரீமிலேயர் என்பதை ஊதிய வருவாயையோ, விவசாய வருவாயையோ கணக்கில் கொள்வதில்லை என்று பதிலளித்தார்.

துறையின் சார்பில் 15.11.1993 அன்று வெளியிடப் பட்ட (நிர்வாகக் குறிப்பு எண் 36012/22/93-Estt.(SCT)    இதர பிற்படுத்தப்பட்டவர்கள் சான்றிதழ் பெறுவது தொடர்பில் வருவாய் குறித்து குறிப்பிடும்போது, அனைத்து வகைகளிலும் பெறப்படக்கூடிய குடும்ப வருவாய் (ஊதிய வருவாய், விவசாய வருவாய் தவிர்த்து) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 24.4.2002 அன்று இணை செயலாளர் செல்வி ஸ்வப்னா ரே அளித்த இவ்வாறு பதிலில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

அண்மையில் 31.3.2016 அன்று வெளியிடப்பட்ட நிர்வாகக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளபடி (OM No. 36036/12/2013-Estt.(Res-I) பணியாளர் மற்றும் பயிற்சி துறையின் சார்பில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான சான்றிதழ் ஏற்கக் கூடிய வகையில் வடிவமைத்திட வேண்டும் என்று கோரியுள்ளது. அந்த புதிய படிவத்தில் வருவாய் பிறவகைகளில் இருந்தாலும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். ஊதிய வருவாய், விவசாய வருவாய் ஆகியவற்றுக்கு விலக்களிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 24.4.2000 அன்று கிரீமிலேயர்குறித்து குறிப்பிடும்போது தெளிவாகவே ஊதியத்தின்மூலம் பெறப்படக்கூடிய வருவாய் மற்றும் விவசாயத்தின்மூலம் பெறக்கூடிய வருவாய் ஆகியவற்றைக் கணக்கில் கொள் ளக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், 20.7.2011 அன்றும் தமிழ்நாடு அரசு வெளியிட்ட விளக்கத்திலும் இதையே வலியுறுத்திக் குறிப்பிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேச அரசு 27.12.2010 அன்று அளித்துள்ள வழிகாட்டுதலில் அனைத்து வகை வருமான சான்றி தழ்களிலும் ஊதிய வருவாய் மற்றும் விவசாய வருவாய் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

கிரீமிலேயர் நிலை குறித்து, தமிழ்நாடு அரசு, ஆந்திரப்பிரதேச அரசு, சமூகநீதி மற்றும அதிகாரத்துறை அமைச்சகம் அல்லது  தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஊதிய வருவாய் அல்லது விவசாய வருவாய் என்பதை கணக்கில் கொள்ளக்கூடாது என்று தெளிவு படுத்தியுள்ள நிலையில்,  இது நாள் வரையிலும், பணி யாளர் மற்றும் பயிற்சித்துறை பின்பற்றியதாகத் தெரிய வில்லை. இதுபோன்ற விளக்கங்களையொட்டியே பல் வேறு மாநில அரசுகளின் அலுவலர்கள் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கி வருகிறார்கள்.
விண்ணப்பதாரர்களிடம் இதர பிற்படுத்தப்பட்ட வர்கள் சான்றிதழை தொடக்கம் முதல் நேர்காணல் மற்றும் இறுதி நிலை வரை அலுவலர்கள் ஆய்வு செய் கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் அனைத்து பணி களுக்கும் பணிநியமனம் செய்யப்படுகின்ற நிலையில், அவர்களுக்கானபணி நியமனங்களை மறுப்பது என்பது அவர்களுக்கான உரிமையை மறுப்பதென்பது மிகவும் கொடுமையானதாகும்.

பணியாளர் மற்றும் பயிற்சித்துறையின் சார்பில் எந்த ஒரு ஆணையோ, அறிவிப்போ மாநிலங்களுக்கு அனுப் பாமல், வெறுமனே இதர பிற்படுத்தப்பட்டவர்கள் சான் றிதழை எப்படி நிராகரிக்கிறது? இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு எந்த அறிவிப்போ, வாய்ப்போ அளிக்கப்படுவதும் இல்லை.
சமூகத்தின் கீழ்நிலையிலிருந்து உயரே வருவதற்கான நம்பிக்கையுடன் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்கள் பெரும் கனவுடன் மத்திய அரசின் முடிவுக்காக காத்திருக்கும்போது, மத்திய அரசு கதவை அடைப்பது என்பது இயற்கை நீதிக்கும், நியாயத்துக்கும் எதிராக அமைந்துவிடுகிறது.
ஆகவே, பிரதமர் அவர்களே, இவ்விவகாரத்தில் தலையிட்டு, தேர்வாகியுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் நலனைக் காத்திடுங்கள். இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய பதவிகளில் பொருத்தமான தகுதிநிலைகளில் பணி நியமனம் செய்திட பணியாளர் மற்றும் பயிற்சித் துறைக்கு அறிவுறுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்று பிரதமர் மோடிக்கு அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செய லாளர் கோ.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-விடுதலை,7.7.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக