கோ.கருணாநிதி
பொதுச் செயலாளர்,
அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்
நலச் சங்கங்களின் கூட்டமைப்பு
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1871, 1881, 1891, 1901, 1911, 1921 மற்றும் 1931 ஆகிய அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலும் ஜாதி தரவு வெற்றி கரமாக சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு பரப்பப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
1941 இல் கூட, அது நடந்து முடிந்துவிட்டது ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த உலகப் போர் காரண மாக நிதி தேவைக்காக அட்டவணைப்படுத்தப்பட வில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என அப்போது எந்த ஆணையரும் கூறவில்லை. ஏனெனில், இந்திய சமுதாயத்தின் முக்கியமான கூறுகளில்ஜாதி ஒன்றாகும், மேலும் ஜாதி விவரம் இல்லாமல் இந்தியா வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையடையாது என அவர்கள் கருதினர்.
ஆனால் சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினர் தவிர்த்து ஏனைய ஜாதிகள் குறித்த தரவுகள் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.
தற்போது எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், ஜாதித் தரவு இல்லாத நிலையில், அரசுகள், மீண்டும் மீண்டும், ஜாதித் தரவுகளுக்காக 1931 மக்கள் தொகை கணக் கெடுப்பு அறிக்கைக்குச் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.
ஒன்றியஅரசு முழுமையாக ‘டிஜிட்டல் இந்தியாவை' நோக்கி முன்னேறும் போது, ஜாதி மற்றும் துணை-ஜாதிப் பெயர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிவியல் தரவு சேகரிப்பு சாத்தியமற்றது என அதிகார வர்க்கம் கூறுவது ஒரு நொண்டிச் சாக்காகும்.
சுதந்திரத்திற்குப் பிறகு, மக்கள் தொகை கணக் கெடுப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தரவைச் சேகரித்து வருகிறது, ஏனையஜாதித் தரவுகள் கணக் கெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தாழ்த்தப் பட்ட, பழங்குடியின பிரிவினரின் எண்ணிக்கை உயர்த் தப்பட்டதாக அல்லது அவர்களின் மக்கள் தொகை சிதைக்கப்பட்டதாக எந்த சான்றும் இல்லை. அதிகாரி களின் அச்சம் ஆதாரமற்றது என்பதை மேலும் நிரூ பிக்கிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுடில்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, 'மொபைல் ஆப்' மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சேகரிக்கப்படும். இது முதல் முறை. 'மொபைல்' பயன்பாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். இந்தியா பேனா மற்றும் காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் தரவுக்கு நகரும், இது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் பெரிய புரட்சியாக இருக்கும் என பெருமையோடு குறிப்பிட்டார்.
தற்போது அரசாங்கங்களிடம் நம்பகமான தரவு இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர்களுக்கான இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் சட்டபூர்வத் தன்மை மாண்புமிகு நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் உட்பட அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலும் கிரீமிலேயரை அடையாளம் கண்டு அவர்களை அகற்றவும், இடஒதுக்கீடு குழுக்களுக்குள் துணை வகைப்படுத்தல் மற்றும் உயர் ஜாதியினரிடையே பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பு மிகவும் அவசிய மாகிறது.
மகாராட்டிரா, பீகார் மற்றும் ஒடிசா அரசுகள் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளன.
மூன்று மாநில அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இதனை வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் பற்றிய விவரங்கள் சேகரிப்பு:
உலக வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இனம் (ஸிகிசிணி) பற்றிய குறிப்பு கோரப்படுகிறது. கறுப்பின மக்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள், அலாஸ்கா என அனைத்து இன மக்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அந்த நாட்டு இட ஒதுக்கீடு முறைக்கு இத்தகைய தரவுகள் அரசுக்கு உதவுகின்றன. இன அடிப்படையில் கணக்கெடுப்பு நடப்பதால், அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அங்கே யாரும் ஒப்பாரி வைக்கவில்லை.
ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட் டோர் ஆணையம், காக்கா காலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான இரண்டாவது ஆணையம், ஜாதிவாரி யான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பரிந்துரைத் தது. ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தொடரில் மீண்டும் மீண்டும் எழுப்பினர்.
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப்படுத்தும் ஆணையத்திற்கு தரவு தேவை:
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப் படுத்தலுக்கான நீதிபதி ரோஹிணி (ஓய்வு) தலைமை யிலான ஆணையம், இதர பிற்படுத்தப்பட்ட பற்றிய தரவுகள் எதுவும் தங்களிடம் இல்லாததை சுட்டிக் காட்டியுள்ளது.
ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வருகிறது (இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்ட வணையின் கீழ் பிரிவு 69).ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயத்தின் நோக்கத்துக்கான விசாரணைகள், சர்வேக்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பட்டியல்94 இன் படி ஒன்றிய அரசின் பொறுப்பாகும்.
நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தல்கள் போன்று மக்கள்தொகை கணக் கெடுப்பும் ஒன்றிய அரசின் தனித்த பொறுப்பாகும். இது குறித்த உரிய பயிற்சிக்கான பணிக்குழு இல்லாத மாநில அரசுகளுக்கு இந்த விஷயத்தை ஒப்படைக்க தேவை யில்லை.
1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 5 (1) பிரிவு "மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவ ரங்களை தொகுத்து வெளியிடும் செயல்பாடு", அத் துறையின் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.
ஒன்றிய அரசால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அதிகாரம் அளித்துள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றிய தரவுகளும் அவசியமாகிறது.
வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு செய்யும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் ஜாதிபற்றி நெடுவரிசை சேர்க்கப்பட்டால், எந்த கூடுதல் முயற்சியும் அல்லது செலவும் இல்லாமல் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும். வீட்டு அட்ட வணையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், 'மதம்' என்ற ஒரு பத்தியும், 'ஜாதி / துணை ஜாதி இருந்தால்' என்ற பத்தியும், பின்னர் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் மக்கள்தொகை பற்றிய பல்வேறு பத்திகளும் இருக்க வேண்டும்.
அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவுகளை, எழுத்தறிவு, கல்வி, தொழில், வேலை பண்புகள் மற்றும் பிற குறியீடுகள் போன்ற அனைத்து சமூகப் பொரு ளாதாரத் தரவுகளையும் சேர்த்து, இரண்டு வருடங் களுக்குள் காலவரையறை திட்டத்தில் எளிதாகக் கண்டறிந்து, தொகுக்கலாம், அட்டவணைப்படுத்தலாம் மற்றும் வெளியிடலாம். அரசாங்கத்திற்கு கூடுதல் செலவுகள் இல்லாமல் இதனை செய்திட முடியும்.
காகா கலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையில் "ஜாதிகள், வகுப்புகள் அல்லது குழுக்கள் மூலம் சமூக நலத் திட்டங்கள் நிர்வகிக்கப்படும் வரை, இந்த குழுக்கள் பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட வேண்டும்; "மக்கள்தொகை கணக்கெடுப் பில் ‘ஜாதி’ பற்றிய பத்தியும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமூக-கல்வி ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கவும், பாதிக்கப் பட்ட சமூகத்தினரை சேர்த்திடவும் அர சுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தரவுகள் தேவைப்படுகிறது.
மண்டல் அறிக்கைக்கு பிந்தைய நிலை:
ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவினர்க்கான இடஒதுக்கீடு 1993-லும், பின்னர் உயர் கல்வி நிறுவனங்களில் 2008-லும் அறிமுகப்படுத்தப்பட்டது. மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரி சீலனை செய்யப்பட வேண்டும் என்று மண்டல் அறிக் கையில்கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை துணை வகைப்படுத்த லுக்கான ஆணையம் அக்டோபர் 2017 இல் நியமிக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் செயல்பட மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பிரிவினர் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்பது பற்றி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரி களுடன் 31.8.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில், அன்றைய உள்துறை அமைச்சரும் தற்போது பாது காப்புத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜ் நாத் சிங், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவித்தார்.
கருநாடக அரசு ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திட வேண்டும் என தெரிவிக்கிறார்."(எகனாமிக் டைம்ஸ் 12.7.2021).
தி.மு.க நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, "மகாராட்டிரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரங்களைச் சேகரிக்க கோரி யுள்ளன. இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளைத் தவிர மற்ற ஜாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளது என உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் 20.7.2021 அன்று பதிலளித்துள்ளார்.
ஒன்றிய அரசின் மாறுபட்ட
முடிவுக்கு என்ன காரணம்?
1. 1951 முதல் ஜாதி குறித்த விவரங்களை சேகரிக்காதது இந்தியாவை ஜாதியற்ற சமூகமாக மாற்றவில்லை.
2. தரவுகளுக்கு யார் பயப்படுகிறார்கள்? அதன் சேகரிப்பை முதலில் நிறுத்தியது யார்? கண்டிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இல்லை.
2. சமூக குறைபாடுகள், வேறுபாடுகள் மற்றும் அநீதி களின் நிலைப்பாட்டைக் காப்பாற்ற விரும்புவோர், அந்த விவரங்களை வெளிப்படுத்துவது, பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை 'அவர்களின் பின்தங்கிய தன்மை யையும்' அவர்கள் அனுபவிக்கும் சமத்துவமின்மை யையும் உணரவைக்கும் என்று பயப்படுகிறார்கள்.
முடிவுரை:
1. சமகால இந்திய சமுதாயத்தில் ஜாதி ஒரு மிக முக்கியமான கூறாக உள்ளது, எனவே அது குறித்த தரவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.
2. ஜாதிகள் குறித்த தரவுகள், அமைப்பு மற்றும் தனிப்பட்ட ஜாதிகளின் புற அமைப்பில் நீண்ட கால மாற்றங்களைக் கண்காணிக்க உதவும்.
3. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடுகள் குறித்து சட்டங்கள் இயற்றுவதற்கு (ஓபிசி பிரிவினரை புதிய பட்டியல்களை சேர்ப்பதற்கும், நீக்கு வதற்கும், கிரீமிலேயர் அளவுகோல்களை அடையா ளம் காண்பது/திருத்துதல், ஒதுக்கீடுகளுக்குள் ஒதுக் கீடுகள் போன்றவை) ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை.
4. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதித் தரவைச் சேர்ப்பது ஜாதி அமைப்பை நிலைநிறுத்தும் மற்றும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் என்று ஒரு போலி யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உண்மையில், ஜாதித் தரவைச் சேர்க்காதது ஜாதிய அமைப்பின் அநீதியை நிலைநிறுத்துகிறது, ஏனெனில் தரவின் பற் றாக்குறை சமூகத்தில் மிகவும் பலவீனமான பிரிவி னர்க்கு உதவி செய்வதற்கான உரிய வாய்ப்பை தடுக்கிறது.
5. சமூகத்தில் ஜாதி பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை - ஆரோக்கியம், கல்வி மற்றும் நீதிக்கான அணுகலில் கூட - அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வ தற்கான வழிகளை வகுப்பதற்காக அது மக்களை எவ் வாறு பாதிக்கிறது என்பதை கண்காணிப்பது முக்கியம். ஜாதிவாரியான தரவுகளை தவிர்ப்பது ஜாதிவெறியை அழிக்காது, மாறாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு "ஜாதியின் முடிவின் தொடக்கமாக இருக்கும்".
6. சான்றுகள் அடிப்படையிலான சமூகக் கொள் கைகளை வளர்ப்பதற்கும், நேர்த்தியமைப்பதற்கும் இந்தத் தகவல் நீண்ட தூரம் செல்லலாம். இது எந்த ஜாதி இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும் அல்லது பெறக் கூடாது என்பதற்கான தவிர்க்கக்கூடிய சச்சரவு களையும் குறைக்கும், நீதித்துறை கோரும் நம்பகமான ஆதாரங்களையும் வழங்கும்.
அதிகாரம் பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோர்களின் துணை வகைப்பாட்டை ஆராயும் குழு மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு (EWS) சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இன் றைய சூழலில் இந்த வாதங்கள் மிகவும் பொருத்தமானவை.
மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி குறித்த கேள்வியை சேர்க்க மறுப்பது அர்த்தமற்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியை ஒதுக்கிவைப்பது என்பது நாம் அதை விரும்பலாம் என்று அர்த்தமல்ல. மிக முக்கியமாக, வரலாற்று காரணங்களுக்காக பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினர்க்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை வழங்கும் வரை, அவர் களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதாவது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக் கையை மட்டும் எண்ணுவது அல்ல. எந்தக் குழுக்கள் பின்தங்கியுள்ளன, எந்த அளவிற்கு உள்ளன என்பதை துல்லியமாக அடையாளம் காண கொள்கை வகுப்பாளர் களுக்கு இது உதவும். இது இன்றியமை யாதது, ஏனென் றால் கருத்துப் பதிவுகளைக் காட்டிலும் உண்மையான தரவுகளைக் கொண்டு அரசு சரியான திட்டங்களைக் கையாளமுடியும், ஆனால் தற்போது எந்த அதிகாரப் பூர்வ தரவும் இல்லாத நிலையில் உள்ளது.
ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கூறியபடி, இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னமும் துவங்கப் படவில்லை என்பதால், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பரிசீலிக்குமாறு ஒன்றிய உள் துறை அமைச்சரிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்தே நடத்திட வேண்டும்.