• Viduthalai
காணொலியில் நடத்தப்பட்ட மூன்று நாள் சிறப்பு தொடர்கூட்டம்
சென்னை, ஜூலை 25- சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகம் சார்பாக ‘தமிழர் தலைவர் வியூகங்கள்’ என்னும் தலைப் பில் இரண்டாம் நாள் (14.7.2021) கூட்டம் மாலை 6.00 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது.
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகத்தால் நடத்தப்பட்ட “88 அகவையில் 78 ஆண்டுகள் பொதுத்தொண்டு'' மூன்று நாள் தொடர்கள் - கருத்தரங்கின் இரண்டாம் நாளில் “மண்டல் குழு பரிந்துரை செயலாக்கிட...” என்ற தலைப்பில் திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி உரையாற் றினார்.
கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன்,கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர்
அ.அருள்மொழி, திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் அமைப்புச் செயலாளர் ஊமை.ஜெயராமன் தொடக்கவுரை ஆற்றினார்.
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக அமைப்பாளர் கா.க.வெற்றி முன்னிலை வகித்தார். சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழக துணை அமைப்பாளர் பிரவீன்குமார் வரவேற்புரையும்,திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டியன் இணைப்புரையும் வழங்கினர். இரா.பாலாஜி நன்றி கூறினார்.
கோ.கருணாநிதி உரை
திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி உரை வருமாறு,
சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகத்தின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 88 அகவையில் 78 ஆண்டுகள் பொதுத்தொண்டு என்ற தலைப்பிலான தொடர் மூன்று நாள் கருத்தரங்கில் இரண்டாம் நாளிலே மண்டல் குழு பரிந்துரைகளை செயலாக்கிட ஆசிரியர் தமிழர் தலைவர் வகுத்த வியூகங்கள் பற்றி ஒரு சில கருத்துக்களை எடுத்துரைப் பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
மண்டல் குழுவிற்கான மூலாதாரம்
1950ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டம் சரத்து 340இன் மூலம்தான் மண்டல் குழு அமைக்கப்பட்டது. 340ஆவது அரசமைப்புச் சரத்து மட்டும் இல்லையென்றால் மண்டல் குழு இல்லை. அத்தகைய சிறப்புமிக்க இப்பிரிவு அண்ணல் அம்பேத்கரின் அறிவார்ந்த ஈடுபட்டால் உருவாக்கப்பட்டது ஆகும். மண்டல் குழுவிற்கு முன்னர் 1953ஆம் ஆண்டு ஜனவரி 29ஆம் நாள் காகா கலேல்கரின் தலைமையில் முதல் பிற்படுத்தப்பட்ட சமூக மக்களுக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. இருப்பினும் காகா கலேல்கர் குழுவின் அறிக்கை நடைமுறைப்படுத்தப் படவில்லை. தான் அளித்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் மொரார்ஜி தேசாயை பிரதமராக கொண்ட ஜனதாதள அரசாங்கம் 1979ஆம் ஆண்டு இரண்டாவது பிற் படுத்தப்பட்ட சமூகங்களுக்கான ஆணையத்தை பி.பி.மண்டல் தலைமையில் அமைத்தது. இக்குழு தனது ஆய்வு அறிக்கையினை 1980ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் அன்றையப் பிரதமர் இந்திராகாந்தியிடம் சமர்ப்பித்தது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்...
மண்டல் அவர்கள் தனது பரிந்துரைகளிலே இந்தியா முழுவதிலும் பிற்படுத்தப்பட்டவர்களாக 52 சதவிகித மக்கள் உள்ளனர் என்று கூறினார். இதற்கு அடிப்படையாக பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் நடத்தப்பட்ட 1931ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பை மண்டல் அவர்கள் கணக்கில் கொண்டுள்ளார். நாடு முழுவதிலும் 52 சதகிகித மக்கள் பிற்படுத்தப்பட்டவர்களாக உள்ளனர் என்று மண்டல் புள்ளிவிவரம் அளித்திருந்தாலும், அவரின் பரிந்துரை பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீதம் மட்டும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றது. இதற்கான காரணத்தை நாம் அறிதல் வேண்டும். ஒன்றிய அரசால் ஏற்கெனவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 15 சதவீதமும் பழங்குடி மக்களுக்கு 7.5 சதவீதமும் என மொத்தம் 22.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதைக் கணக்கில் கொண்டும், மொத்தம் 50 சதவீதத்தினைத் தாண்டி இட ஒதுக்கீடானது இருத்தல் கூடாது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை கவனத்தில் கொண்டும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்றார். மக்கள் தொகைக்கேற்ப பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென பரிந்துரைக்கும்பட்சத்தில் அது உச்சநீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாக அமைந்துவிடலாம் என்றும், அதனால் காகா கலேல்கர் அறிக்கை போல தன்னுடைய பரிந்துரை அறிக்கை யும் குப்பை தொட்டிக்கு போய்விடுமோ என்று கவலை கொண்டதன் அடிப்படையிலேயே மண்டல் அவர்கள் தனது பரிந்துரையிலே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமெனக் கூறி, பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கான இட ஒதுக்கீட்டினை 50 சதவீதத்திற்குள் கொண்டுவரலாம் எனக் கருதினார். இதனை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பலமுறை எடுத்துக் கூறியுள்ளார்.
அய்யா தந்த புத்தி
1980ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தாலும் கூட உடனடியாக அது நடை முறைப்படுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்திலும் உடனடி யாக இவ்வறிக்கையை வைக்கவில்லை. எனவே இவ்வறிக் கையை நடைமுறைப்படுத்தக் கோரி இந்தியா முழுவதும் ஆங்காங்கே மக்கள் போராட்டங்கள் நடக்கத் தொடங்கின. இருப்பினும் ஆசிரியர் வகுத்த வியூகங்கள்தான் மண்டல் குழு அறிக்கையை செயலாக்கத்திற்கான சாத்தியக்கூறுகளை உறுதிச்செய்தன என்பதை இங்கு அழுத்தமாக கூறிக்கொள் கிறேன்.
மண்டல் தனது அறிக்கையை சமர்ப்பித்த அடுத்த வாரமே மண்டல் குழு பரிந்துரைகளை புதைகுழிக்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரு தலையங்க செய்தியினை ‘இந்து’ பத்திரிக்கை வெளியிட்டது. பிரதமரிடம் வழங்கப்பட்ட பரிந்துரை அறிக்கை இன்னும் நாடாளுமன்றத்திற்குள்கூட வைக்கப்படாத நிலையில், பரிந்துரைகள் பற்றி பிரதமரை தவிர வேறு யாரும் அறிந்திருக்க முடியாத நிலையில் ‘இந்து’ பத்திரிக்கை இவ்வாறு தலையங்கம் தீட்டியது. இதனைத் தொடர்ந்து பல பத்திரிக்கை செய்தியாளர்கள் ஆசிரியரிடம் ‘இந்து’ பத்திரிக்கையின் இத்தகைய செய்தியைக் கூறி கருத்தைக் கேட்டனர்.
பரிந்துரைகளை விரைவு படுத்துங்கள்
ஆசிரியர் அவர்கள் இதற்கு முன்னரே,அதாவது இந்து பத்திரிக்கை தலையங்கம் வெளியிட்ட உடனேயே ஓர் அறி விப்பை வெளியிட்டு இருந்தார். (Hurry the Report) “மண்டல் குழு அளித்த பரிந்துரைகளை விரைவுப்படுத்துங்கள்” என்பதே அந்த அறிவிப்பு.ஆசிரியரின் இந்த அறிவிப்பு குறித்து கேட்ட செய்தியாளர்கள், தங்களுக்கு பரிந்துரைகள் என்னென்ன என்பது தெரியுமா என்றனர் ஆசிரியரிடம். அதற்கு எனக்கு அது தெரியாது என ஆசிரியர் பதிலுரைத்தார். உடனே செய்தியாளர்கள் பிறகு ஏன் தாங்கள் மண்டல் அறிக்கையை விரைவுப்படுத்துங்கள் என கூறுகின்றீர்கள் என்றனர். “வெளிவ ராத நிலையிலுள்ள மண்டல் அறிக்கையை புதைகுழிக்கு அனுப்பவேண்டுமென ‘இந்து’ பத்திரிகையில் கூறியுள்ளார்கள். அவர்களுக்கும் பரிந்துரைகள் குறித்து ஏதும் அறிந்திருக்க வாய்ப்பில்லாத சூழலிலும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக அமைக்கப்பட்ட இந்த ஆணையத்தின் பரிந்துரைகள் பிற்படுத் தப்பட்ட மக்களுக்கு நலன்புரிந்துவிடும் என்றுணர்ந்த ‘இந்து’ பத்திரிகை மண்டல் பரிந்துரைகளை முடக்க வேண்டுமென் கிறது. எனவேதான் நான் அதற்கு மாறாக மண்டல் குழு அறிக்கையை விரைவுப்படுத்துங்கள் என்று கூறினேன். இந்து பத்திரிக்கை எதை எதிர்க்கின்றதோ, அதை ஆதரிக்க வேண்டுமென்பது எங்கள் அய்யா தந்த புத்தி. எனவே அந்த புத்தியின் அடிப்படையில் நான் மண்டல் குழு அறிக்கையை விரைவுப்படுத்துங்கள் என்றேன்” என ஆசிரியர் கூறினார். ஆசிரியரின் தொலைநோக்குப் பார்வையையும் வியூகத்திற னையும் இந்த நிலைப்பாட்டின் மூலம் நாம் எண்ணிப் பார்க்கவேண்டும்.
ஒன்றியம் தழுவிய போராட்டம்
1981ஆம் ஆண்டு ஜனவரி 19ஆம் நாள் நடைபெற்ற மத்திய நிர்வாகக் கூட்டத்தில் மண்டல் குழு அறிக்கையை நாடாளு மன்றத்தில் வைத்து விவாதிக்க வேண்டும் என திராவிடர் கழகத்தின் சார்பில் ஒரு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அடுத்ததாக அதே ஆண்டு மார்ச் 1ஆம் நாள் முதல் மார்ச் 15ஆம் நாள் வரை தொடர்ந்து 15 நாள்கள் தமிழ்நாடு முழுவதும் மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக்கோரி நமது திராவிடர் கழகத்தின் சார்பில் மாநிலம் தழுவிய பல கூட்டங்கள் நடத்தப்பட்டன. இந்தியாவிலேயே மண்டல் குழு பரிந்துரைகள் குறித்து இந்த அளவிற்கு ஆசிரியரை போன்று, வேறு ஒரு தலைவர் செயல்பட்டார் என்று கூற இயலாத அளவிற்கு ஆசிரியர் கடுமையாக உழைத்தார்.
தத்துவத்தை திறம்பட செயலாற்றிய இயக்கம்
மண்டல் குழு அமைக்கப்பட்டவுடனேயே, மண்டல் அவர்கள் பெரியார் திடலுக்கு 1979ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் நாள் வந்து ஆசிரியர் அவர்களை சந்தித்தார். “தந்தை பெரியாரால் சமூகநீதி குறித்து சிறப்பாக உருவாக்கப்பட்ட தத்துவத்தை திறம்பட செயலாற்றிக் காட்டிய ஓர் இயக்கமாக திராவிடர் கழகம் திகழ்கிறது. ஆகவே திராவிடர் கழகத்தின் சார்பில் தங்கள் கருத்துகளை எங்கள் குழுவிற்கு வழங்க வேண்டுமென்றார்” மண்டல் அவர்கள் ஆசிரியரிடத்திலே. ஆசிரியர் அவர்கள் மண்டல் குழுவிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் அறிக்கையை வழங்கினார். இப்படி 1980 முதல் முன் னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்கள் 1990ஆம் ஆண்டு ஆகஸ்டு 7ஆம் நாள் மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்டோருக்கு வேலைவாய்ப்பில் 27 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்த நாள் வரையிலும், அதற்குப்பின்னால் நீதிமன்றத்தால் இந்த ஆணைக்கு ஏற்பட்ட தடை நீங்கி மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும் மொத்தம் இரண்டு கட்டமாக கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் திராவிடர் கழகம் பல மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என இதுகுறித்து நடத்தியது. அதுமட்டுமல்ல மண்டல் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டி இந்திய அளவிலே திராவிடர் கழகத்தின் சார்பில் 42 மாநாடுகளும், 16 ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்று டில்லியில் பிரதமர் வீட்டின் முன்பு போராட் டம் நடத்திய திராவிடர் கழகத் தோழர்கள் திகார் சிறையில் அடைக்கப்பட்டனர்.அந்த அளவிற்கு மண்டல் குழு பரிந் துரைகளை நடைமுறைப்படுத்துவதில் மிகவும் ஈடுபடுத்திக் கொண்டது தமிழர் தலைவரின் தலைமையிலான திராவிடர் கழகம்.
கழகத்தின் மீது ஜார்ஜ் பெர்னாண்டஸ் நம்பிக்கை
‘தலித் குரல்’ (Dalit Voice) என்ற பத்திரிகை பெங்களூரு விலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியராக ராஜசேகர் அவர்கள் இருந்தார். 1981ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் நாள் வெளியான இப்பத்திரிகையிலே, மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் ஆற்றல் தமிழர் தலை வருக்கும், திராவிடர் கழகம் என்ற இராணுவத்திற்கு மட்டுமே உள்ளது என்று செய்தி வெளியானது. அதேபோல ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் இந்த நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர். அவர் சென்னைக்கு வருகை புரிந்தபோது ஆசிரியர் அவர்களை சந்தித்தார். மீண்டும் டில்லிக்கு திரும்பியவுடன் 1981ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் நாள் ஆசிரியர் அவர்களுக்கு ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் மண்டல் குழு அறிக் கையை மக்களிடத்திலும், நாடாளுமன்றத்திலும் கொண்டு சேர்க்கும் பணியினை ஆற்ற தமிழர் தலைவராலும் திராவிடர் கழகத்தாலும் முடியும் என்றும், அதனை ஆற்ற வேண்டும் என்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் கோரினார். ஒரு நாட்டின் பாதுகாப்புத்துறை அமைச்சராகவும், தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராகவும், டில்லியிலேயே தனது காலத்தை செலவிட்டவருமான ஜார்ஜ் பெர்னாண்டஸ் அவர்கள் மண்டல் அறிக்கைக்கு செயல்வடிவமளிக்க ஆசிரி யரிடத்திலே கோருகிறார் என்றால், எந்த அளவிற்கு சமூகநீதி களத்திலே ஆசிரியரின் உழைப்பும் ஆற்றலும் இருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
தமிழ்நாடு தழுவிய போராட்டம்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி, வி.பி.சிங், ராம்விலாஸ் பாஸ்வான், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல்சமது என அனைவரையும் கொண்டு தமிழ்நாட்டில் பல மாநாடுகள் மண்டல் பரிந்துரை நடைமுறைக்காக வேண்டி தமிழர் தலைவரின் தலைமையில் திராவிடர் கழகத்தால் நடத்தப்பட்டது.
அதுமட்டுமல்ல வட இந்தியாவிலும் இதுகுறித்து சுற்றுப் பயணம் மேற்கொண்டார்.
அப்போது குடியரசுத் தலைவராக இருந்த ஜெயில்சிங் (1982-1987) அவர்களிடத்திலே மண்டல் பரிந்துரைகளை நடை முறைப்படுத்தக் கோரி ஆசிரியர் அவர்கள் கடிதம் அளித்தார்.
ஏன் இத்தகைய கடின உழைப்பு என்றால், முதல் பிற்படுத்தப்பட்டோர் குழுவான காகா கலேல்கர் குழு அறிக்கை குப்பைத் தொட்டிக்குச் சென்றது. அதுபோலவே மண்டல் குழு அறிக்கையும் வீணாகத்தான் போகிறது என்ற நம்பிக்கை யின்மை மக்களிடத்திலே இருந்தது. அதனால்தான் தொடர்ச் சியாக இத்தகைய பயணங்களையும்,சந்திப்புகளையும், கோரிக் கைகளையும் நிகழ்த்தி நம்பிக்கை விதைகளை ஆசிரியர் அவர்கள் விதைத்து வந்தார்கள். அதனால்தான் ‘யாராலும் முடியாதது நம்மால் முடியும்’ என்பார் ஆசிரியர். அது வேண்டு மென்றோ அல்லது தோழர்களை உற்சாகப்படுத்தும் நோக் கிலோ கூறுவதல்ல. மாறாக அனுபவத்தாலும் ஆற்ற லாலும் விடாமுயற்சியாலும் கூறும் ஓர் உண்மை மொழி.எனவேதான் இந்த பிரச்சினையில் தொடக்கத்திலிருந்து இறுதிவரை எள் ளளவும் தொய்வின்றி ஆசிரியர் அவர்கள் பல மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்தி கடினமாக உழைத்தார்.
மண்டல் பரிந்துரைக்கு செயலாணை
1990ஆம் ஆண்டு ஆகஸ்டில் அன்றைய பிரதமர் வி.பி.சிங் அவர்கள் மண்டல் பரிந்துரையின்படி ஆணையினை வெளியிட்டார். அவருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக உடனடியாக இந்தியாவிலேயே முதல் இயக்கமாக திராவிடர் கழகம் நன்றி அறிவிப்பினை வெளியிட்டது. இந்த 27 சதவீத ஆணையை உச்சநீதிமன்றம் தடை செய்தது. இதனை கண்டித்து திராவிடர் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத் தடையாணை நகல் கொளுத்தப்பட்டது. அத்தோடு அந்த ஆணையை வழங்கிய நீதிபதியின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. தமிழர் தலைவரோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கானோர் இதனால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.தோழர்கள் எத்தனை பேர் இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டை அனு பவித்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் தமிழர் தலைவர் அறிவித்தார் என்ற ஒரே காரணத்திற்காக தோழர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கெடுத்து சிறை சென்றனர்.
1992ஆம் ஆண்டு நவம்பர் 16ஆம் நாள் இவ்வழக்கின் (இந்திரா சஹானி எதிர் இந்திய ஒன்றியம்) தீர்ப்பை உச்சநீதி மன்றம் வழங்கியது. வி.பி.சிங் அவர்களால் அறிவிக்கப்பட்ட 27 சதவித ஆணை செல்லும் எனத் தீர்ப்பு வழங்கியது 9 பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு. உடனே 27 சதவீத ஆணை நிறைவேற்றப்பட வேண்டுமென திராவிடர் கழகத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம் நாள் ஒன்றிய நல்வாழ் வுத்துறை அமைச்சராக இருந்த சீதாராம் கேசரி அவர்கள் தனது துறையில் முதன்முதலில் இந்த 27 சதவீத ஆணையை நடைமுறைப்படுத்தினார். இதற்கு காரணமான வி.பி.சிங் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் நன்றியினை தெரிவித்தார்.
1982ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் நாள் தஞ்சை இராமநாதன் மன்றத்தில் தஞ்சை பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட மண்டல் குழு அறிக்கை விளக்க சிறப்புக் கூட்டத்தில் ஆசிரியர் அவர்கள் மிக எளிமையாக மண்டல் குழு அறிக்கை குறித்து அனைவருக்கும் புரியும் வண்ணம் உரையாற்றினார். அந்த உரை “மண்டல் குழுவும் சமூக நீதியும்“ என்ற தலைப்பிலே ஒரு நூலாக உருவாக்கப்பட்டுள்ளது. அதனை நமது சட்டக்கல்லூரி மாணவர்கள் வாங்கி வாசிக்க வேண்டும்.
மண்டல் குழு பரிந்துரையினை நடைமுறைப்படுத்த கழகம் கண்ட களங்கள்
மண்டல் குழு பரிந்துரையினை நடைமுறைப்படுத்து வதற்காக வேண்டி தமிழர் தலைவர் தலைமையிலே திராவிடர் கழகம் மேற்கொண்ட முயற்சிகளை காலவரிசைப்படி பின்வருமாறு சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிக்க விரும்புகிறேன்.
1) 22.1.1983- தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், மலைவாழ் மக்கள் ஒன்றியம் அமைப்பின் டில்லி கூட்டத்தில் ஆசிரியர் கலந்து கொள்கிறார். 18.3.1983 அன்று ஒன்றியத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடத்த முடிவு எடுக்கப்படுகிறது. இதே நேரத்தில் குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களிடத்தில் ஆசிரியர் அவர்கள் மண்டல் பரிந்துரை செயலாக்கம் குறித்த மனு அளிக்கிறார்.
2) 17.2.1983-டில்லியில் அனைத்து தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.
3) 5.3.1983-டில்லியில் அனைத்து தலைவர்கள் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. ஆசிரியர் இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
4) 6.03.1983-பஞ்சாப் குருதாஸ்பூரில் நடைபெற்ற பிற் படுத்தப்பட்டோர் மாநாட்டில் சிறப்பு பேச்சாளராக ஆசிரியர் உரையாற்றினார்.
5) 13.4.1983-ஒடுக்கப்பட்டோர் உரிமை காக்கும் மாநாடு டில்லியில் நடைபெற்றது. திராவிடர் கழக கருஞ்சட்டைத் தோழர்கள் பேரணியாக சென்றனர். தமிழ்நாட்டில் கையெழுத்து இயக்கம் மூலம் பெறப்பட்ட 5 லட்சம் கையெழுத்து அடங்கிய மனு குடியரசுத் தலைவரிடம் திராவிடர் கழகத்தின் சார்பில் வழங்கப்பட்டது.
6) 15.4.1983-குடியரசுத்தலைவர் ஜெயில் சிங் அவர்களை டில்லியில் சந்தித்து மண்டல் குழு பரிந்துரை நடைமுறை குறித்து வலியுறுத்தப்பட்டது.
7) 9.10.1983-பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு உரை யாற்றினார்.
8) 7.3.1984-டில்லியில் பாபு ஜெகஜீவன்ராம், கர்ப்பூரி தாக்கூர் ஆகியோர் பங்கேற்ற மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
9) 1.4.1984-உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு உரை யாற்றினார்.
10) 2.4.1984-ஒன்றிய அமைச்சரவையிலேஅங்கம் வகித்த ஆர்.வெங்கட்ராமன் அவர்களிடத்திலே மண்டல் குழு பரிந்துரை நடைமுறை குறித்து வலியுறுத்தப்பட்டது.
11) 5.6.1984-ஆந்திராவின் தானப்பள்ளியில் நடைபெற்ற மாநாட்டில் ஆசிரியர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
12) 9.8.1984-டில்லியில் பிரதமர் வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
13) 6.12.1985-டில்லியில் அண்ணல் அம்பேத்கரின் நினைவு தின மாநாட்டில் ஆசிரியர் கலந்துகொண்டு மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தக் கோரி உரையாற்றினார்.
14) 21.9.1986-அய்தராபாத் மாநாட்டில் ஆசிரியர் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
15) 7.10.1986-டில்லியில் நாடாளுமன்றத்திற்கு முன்பு மறியல் நடத்தப்பட்டது. ஆசிரியர் உட்பட திராவிடர் கழகத்தினர் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
16) டிசம்பர் மாதம் 1986-குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் ஆகியோரை நேரில் சந்தித்து அறிவுறுத்தப்பட்டது.
17) 27.4.1987-லக்னோவில் நடைபெற்ற மாநாட்டில் ஆசிரியர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
18) 25.5.1987-குடியரசுத் தலைவர் ஜெயில்சிங் அவர்களை சந்தித்து தஞ்சை மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
19) 18.4.1989-பெங்களூருவில் நடைபெற்ற மாநாட்டில் ஆசிரியர் கலந்துகொண்டு உரையாற்றினார்.
20) 21.6.1990-அண்ணல் அம்பேத்கரின் நூற்றாண்டு கூட்டம் வி.பி.சிங் அவர்களால் கூட்டப்பட்டது. இக்கூட்டத்தில் ஆசிரி யர் கலந்துகொண்டு மண்டல் குழு பரிந்துரை குறித்து கோரிக்கை வைத்தார்.
21) 7.8.1990-வி.பி.சிங் அவர்கள் 27 சதவீத இட ஒதுக்கீட்டு ஆணையை வெளியிட்டார்.
22) 10.10.1990-27 சதவீத இட ஒதுக்கீட்டு ஆணையை உச்சநீதிமன்றம் தடை செய்தது.
23) 13.10.1990-காஞ்சி சங்கராச்சாரிக்கு எதிராக கருப்புக்கொடி காட்டப்பட்டது. சங்கராச்சாரி மண்டல் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.
24) 30.09.1991-மண்டல் குழு பரிந்துரையை நிறைவேற்று வதற்காக வேண்டி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
25) 28.10.1991-27 சதவீத இட ஒதுக்கீடு தடையை நீக்கக்கோரி உச்சநீதிமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26) 9.11.1991-சென்னையில் குடியரசுத் தலைவர் ஆர்.வெங் கட்ராமன் அவர்களுக்கு கருப்புக்கொடி காட்டப்பட்டது.
27) 23.3.1993-27 சதவீத இட ஒதுக்கீடு ஆணை செல்லும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பினை நடைமுறைப்படுத்தக் கோரி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தலைநகரங்களில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகம் முன்பு மறியல் நடத்தப்பட்டது.
28) 21.8.1993-மதுரை தமுக்கம் மைதானத்தில் சமூகநீதி மாநாடு கூட்டப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகும் தாமதம் செய்தால் போராட்டம் நடத்தப்படும் என ஆசிரியர் அறிவித்தார்.
29) 8.9.1993-ஒன்றிய நல்வாழ்வுத் துறையில் பிற்படுத்தப் பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது.
இவ்வாறு திராவிடர் கழக வெளியுறவுச் செயலாளர்
கோ.கருணாநிதி அவர்கள் உரையாற்றினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக