• Viduthalai
கழகத்துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் காணொலியில் சிறப்புரை
தஞ்சை, ஜூலை 20 திராவிட மாணவர் கழகம் சார்பில் நடை பெற்ற ‘‘88 அகவையில் 78 ஆண்டுகள் பொதுத்தொண்டு சிறப்பு” - மூன்று நாள் தொடர் கூட்டங்களின் முதல் நாள் கூட்டம் 13.7.2021 மாலை 6.00 மணிக்கு காணொலி வாயிலாக நடைபெற்றது.
ஜூலை 13ஆம் நாள் மாலை 6:00 மணியளவில் மருத்துவக் கல்லூரி திராவிட மாணவர் கழகத்தால் நடத்தப்பட்ட Ô88 அகவை யில் 78 ஆண்டுகள் பொதுத்தொண்டுÕ மூன்று நாள் தொடர் கருத்தரங்கத்தின் முதல் நாளில் ‘ஒன்பதாயிரம் ரூபாய் ஆண்டு வருமான வரம்பு பொருளாதார அளவுகோலினை வீழ்த்திட’ என்ற தலைப்பில் கழகத் துணைத்தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் உரையாற்றினார்.
திராவிடர் கழக பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன்,திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரசு பெரியார் ஆகியோர் அங்கம் வகித்த இந்நிகழ்வில் மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் உ.இரா.மானவீரன் தலைமை தாங்கினார்.மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழக மாநில துணை அமைப்பாளர் சு.நாத் திகன் வரவேற்புரையாற்றினார்.திராவிட மாணவர் கழக மாநில அமைப்பாளர் இரா.செந்தூரப்பாண்டியன் இணைப்புரை வழங்கினார். திராவிட மாணவர் கழக மேட்டுப்பாளையம் மாவட்டச் செயலாளர் இரா.அன்புமதி நன்றியுரை வழங்கினார். நிகழ்வில் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் மாணவர் கழக தோழர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
கவிஞர் கலி.பூங்குன்றன்
கருத்தரங்கத்தில் கழகத் துணைத் தலைவர் கவிஞர்
கலி.பூங்குன்றன் ஆற்றிய உரை வருமாறு:
முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் அவர்களின் ஆட்சியின் போது கொண்டுவரப்பட்ட பிற்படுத்தப்பட்டோருக்கான 9 ஆயிரம் ரூபாய் அளவுகோலுக்கு எதிராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களது தலைமையில் திராவிடர் கழகம் முன்னெடுத்த போராட்டங்கள் குறித்து இந்த கருத்தரங்கில் உரையாற்றுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். 1979 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3ஆம் நாளாக இருக்கும். அன்றைய தினம் காலை 8 மணி அளவில் ஆசிரியர் திடலுக்கு புறப்பட்டு வந்தார். நான் அப்போது திடலில் நாளிதழ் வாசித்துக் கொண் டிருந்தேன். வந்தவுடன் என்னிடம் இந்த 9,000 ரூபாய் பொரு ளாதார அளவுகோலை பற்றிப் பேசினார். அன்றைய நாளில் தொடங்கிய இப்பிரச்சினையின் மீதான நம் கவனம் அது முடிவு பெறும் வரை தொடர்ந்தது. சாதாரணமாக இது போன்ற இட ஒதுக்கீடு குறித்த முடிவுகளெல்லாம் அமைச்சரவைக் கூட்டம் நடத்தி அதற்கு பிறகே இறுதி வடிவம் பெறும். ஆனால் அமைச் சரவைக் கூட்டம் போன்ற எந்த நடைமுறையையும் பின்பற்றாமல் தன்னிச்சையாக வெளிவந்ததுதான் இந்த அரசாணை. இந்த அரசாணைப்படி பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் ஒரு வர் ஆண்டு வருமானம் 9 ஆயிரம் ரூபாய் பெறும்வரை தான் இட ஒதுக்கீட்டை அனுபவிக்க முடியும்.அதற்கு மேல் வருமானம் பெற்றாரெனில் அவர் இட ஒதுக்கீடு உரிமையை பெற முடியாது. இத்தகைய முடிவு சமூகநீதி வேரில் வெந்நீரை ஊற்றுவதற்கு சமமானது என கருதப்பட்டது.
1951-லேயே முளைவிட்டது
பொருளாதார அளவுகோல் குறித்த இப்பிரச்சனை 1979ஆம் ஆண்டில் தோன்றியது அல்ல. மாறாக 1951ஆம் ஆண்டு ஏற்பட்ட முதல் அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் போதே முளைவிடத் தொடங்கியது. 1928 ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவ உரிமைக்கான அரசாணையை வெளியிட் டார். அவரது ஆட்சியின் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர் எஸ்.முத்தையா முதலியார் அவர்கள். சீர்காழிக்கு அருகில் பிறந்தவர்.
இவர் பொறுப்பேற்றிருந்த பதிவுத்துறையில் தான் வகுப்பு வாரிப் பிரதிநிதித்துவத்தை முதன்முதலாக நடைமுறைக்கு கொண்டு வந்தனர். இதற்கு முன்பே பெரியார் பல காங்கிரஸ் மாநாடுகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்த தீர்மானங் களை கொண்டு வர முயற்சி செய்தார். இருப்பினும் ஒவ்வொரு முறையும் ஏதேதோ காரணத்தைக் கூறி சமாதானம் செய்தனர்.
திருவண்ணாமலை காங்கிரஸ் மாநாட்டில் பார்ப்பனர் இதற்காக அடியாட்களையே ஏற்பாடு செய்தனர். காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் திரு.வி.க தலைமை தாங்கினார். அதில் 25 பேர் கையெழுத்திட வேண்டிய தீர்மானத்திற்கு, கூடுதலாக 30 பேரிடம் கையெழுத்து பெற்று திரு.வி.க.விடம் பெரியார் அளித்தார்.அந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துவ தீர்மானத்தை வாங்கிய உடன் திரு.வி.க. ஏற்க மறுத்தார். பெரியார் ஏன் மறுக்கிறீர் என்று கேட்டதற்கு, அதற்கு திரு.வி.க. முன்பு ஒரு எண்ணத்தில் இருந்தேன் இப்போது ஒரு எண்ணத்தில் இருக் கிறேன் எனக் கூறினார். அடிப்படையில் திரு.வி.க.வும் சமூக நீதிக்கு ஆதரவான எண்ணம் கொண்டவரே.ஆனால் அவரது இந்த செயல் வியப்பாயிருந்தது. திரு.வி.க.வின் இந்த பதிலுக்கு பெரியார் முந்தைய உங்கள் புத்தி சொந்த புத்தி, இப்போதைய உங்கள் புத்தி பார்ப்பான் சொல்லிக்கொடுத்த புத்தி என்று கூறினார்.
பெரியார் கோரியது இக்காலங்களில் 50 சதவீத இட ஒதுக்கீடு மட்டுமே. ஆனால் இன்று நாம் அனுபவிப்பது 69 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியில் இப்படி வகுப்புவாரி குறித்து உள் ளுக்குள்ளேயே போராட்டம் நடந்தது. இத்தகைய போராட்டங் களுக்கெல்லாம் செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தான் இந்த 1928 ஆம் ஆண்டு வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை அமைந்திருந்தது. அதனால் இதனை வெகுவாகப் பாராட்டும் விதமாக பெரியார், தமிழர்களின் இல்லங்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளுக்கு முத்தையா என்றும் பெண் குழந்தைகளுக்கு முத்தம்மாள் என்றும் பெயர் சூட்ட சொன்னார். இப்படி 1928ஆம் ஆண்டு தொடங்கிய வகுப்பு உரிமையானது 1950ஆம் ஆண்டு வரை நடைமுறையிலிருந்து பார்ப்பனரல்லாத மக்களின் வாழ்வில் வளத்தினை சேர்த்தது.
1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் நாள் இந்திய அர சமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னரே இதற்கு ஒரு சிக்கல் வந்தது. செண்பகம் துரைராஜன், சீனிவாசன் ஆகிய இரண்டு பார்ப்பன மாணவர்கள் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தால் எங்களுக்கான உரிமை மறுக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். சென்னை உயர் நீதிமன்றம் தனது தீர்ப்பை இவர்களுக்கு ஆதரவாக வழங்கி, வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ அரசாணையை செல்லாது என அறிவித்தது. இதனையே இவ் வழக்கின் மேல்முறையீட்டிலும் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதில் வேடிக்கையான ஒன்று உள்ளது. அது என்னவென்றால் செண்பகம் துரைராஜன் என்ற மாணவி மருத்துவக்கல்லூரிக்கே விண்ணப்பிக்காமல் வழக்கு தொடர்ந்து, அதை விசாரித்து உச்ச நீதிமன்றம் கூட தீர்ப்பு அளித்தது தான் வேடிக்கை.
இதனை எதிர்த்து பெரியாரின் தலைமையில் சென்னை மாகாணத்தில் மாபெரும் மக்கள் போராட்டம் நடைபெற்றது. அறிஞர் அண்ணா, காமராஜர் போன்றவர்களும் மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக குரல் கொடுத்தனர். இதன் விளைவால் அன்றைய பிரதமர் நேரு, அன்றைய சட்ட அமைச்சர் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் அடங் கிய நாடாளுமன்ற கூட்டம் அவசரமாக கூட்டப்பட்டது. பிரதமர் நேரு சென்னை மாகாணத்தில் நடைபெறும் மக்கள் போராட் டமும் அதன் கோரிக்கைகளும் கவனிக்கத்தக்கதாக இருக்கிறது என்றார்.
இந்த பிரச்சினைக்கான தீர்வு ஒரு சட்டத்திருத்தமே என முடிவு செய்து முதலாவது அரசமைப்பு சட்டத் திருத்தத்தை 1951ஆம் ஆண்டு கொண்டு வந்தனர். அதில் புகுத்தப்பட்ட வாக்கியம் என்னவென்றால், (Socially and Educationally backward class) சமூக ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின்தங்கியுள்ள வகுப்பு என்பதே ஆகும். ஆனால் ஜனசங்கத்தைச் சேர்ந்த சியாமளா பிரசாத் முகர்ஜி பொருளாதாரத்தையும் ஒரு காரணியாக இணைத்தல் வேண்டுமென்றார். நாடாளுமன்றத்தில் இது குறித்து நடைபெற்ற வாக்கெடுப்பில் பொருளாதார அளவு கோலுக்கு ஆதரவாக வெறும் 5 பேரும் எதிராக 243 பேரும் வாக்களித்தனர். 1951 ஆண்டிலேயே பொருளாதார அளவு கோலுக்கு எதிராக இருந்த நிலையைத்தான் மேற்கண்ட வாக்கு முடிவு காண்பிக்கிறது. பார்ப்பனர்களின் பொருளாதார அளவு கோல் கோரிக்கை பற்றி பெரியார் கூறும்போது, பார்ப்பனர்களின் தொழில் பிச்சை எடுப்பது. அதனால் அவர்கள் இப்படி பொரு ளாதார காரணியைக் கொண்டு ஊடுருவ முயற்சிக்கின்றனர் என்பார்.
எம்.ஜி.ஆரின் செயலும் விளைவும்
இத்தகைய நீண்ட சிக்கலுடைய விவகாரத்தைப் பற்றி எம்ஜிஆர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவருக்கு ஆலோசகர்களாக இருந்தவர்களுக்கு தெரியாமலில்லை. ஆனால் அவர்கள் தங்களது பணியை சரிவர செய்யாத காரணத் தினால்தான் பொருளாதார அளவுகோல் என்பதை கொண்டு வந்தார் எம்ஜிஆர். இந்த பிரச்சினைகள் குறித்து சமூகநீதியின் மீது அக்கறை கொண்ட தலைவர்களுக்குக்கூட குழப்பம் இருந்தது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஏழை மக்களின் நலனைக் கருத்தில் கொண்டுதானே இந்த ஆணை கொண்டு வரப்பட்டது என்று அவர்கள் கேட்டனர். இப்பிரச்சினை குறித்து தெளிவடையாத தலைவர்களின் இவ்வாறான கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் ஆசிரியர் 9,000 ரூபாய் பொருளாதார அளவுகோல் மிகவும் ஆபத்து என்றும், ஏழையாக இன்று இருப்பவர் பணக்காரனாக நாளை மாறலாம் என்றும்,பொருளாதார நிலை என்பது நெகிழ்வுத் தன்மை கொண்டது என்றும்கூறினார். அத்துடன் முதல் சட்டத் திருத்தத்தின்போதே இதற்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது என்றும் விளக்கமளித்தார்.
பொருளாதாரமோ வறுமையோ மட்டுமே ஒருவரது பின்தங்கிய நிலைக்கு அடிப்படையாக அமைந்து விடுவதில்லை. உணவகத்தில் ‘சர்வர்’ வேலை செய்யும் பார்ப்பான் படித் துள்ளான். ஆனால் பல கோடிகளுக்கு உரிமையாளரான ஜமீன் தார் வெறும் கைநாட்டாகவே உள்ளார். இத்தகைய உண்மையை விளக்கும் பொருட்டு ஆசிரியரின் தலைமையில் திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் பல மாநாடுகளையும் பொதுக் கூட்டங்களை நடத்தியது. அக்காலங்களில் நம்மோடு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மணிவர்மா, டி.என். அனந்தநாயகி, ரமணி பாய் போன்றோரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை சேர்ந்த தா.பாண்டியன் போன்றோரும் களத்தில் நின்று போராடினர்.
ஒருகட்டத்தில் 9 ஆயிரம் ரூபாய் அரசாணை நகலை கொளுத்தி சாம்பலை கோட்டைக்கு அனுப்பப்பட்டது. நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் தான்சார்ந்த இயக்கத்திற்கு ஏற்றாற் போல நமது போராட்டத்தை பொருட்படுத்தவில்லை. 1980ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாட்டில் 39 மக்களவைத் தொகுதியிலும், பாண்டிச் சேரியில் ஒரு மக்களவைத் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது. இத்தோடு பாண்டிச்சேரி சட்டமன்றத் தேர்தலும் ஒருங்கே நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில் அதிமுக 37 மக்களவை தொகுதியில் தோல்வி அடைந்தது. பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. எம்ஜிஆருக்கு இந்த முடிவு மிகப்பெரிய அதிர்ச்சியை அளித்தது. தமிழ்நாடு சமூகநீதி மண், தமிழ்நாடு பெரியாரால் பக்குவப்படுத்தப்பட்ட மண்,தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட மக்கள் அதிகளவு உள்ள மண்.
எனவேதான் அந்த மக்களின் சமூகநீதிக்கு பாதகம் விளை விக்கும் வகையில் செயல்பட்ட நமக்கு அவர்கள் இந்த தோல் வியை அளித்துள்ளார்கள் என்பதை உணர்ந்தார் எம்ஜிஆர். உடனே 9,000 ரூபாய் பொருளாதார அளவுகோலில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசிக்க அனைத்துக்கட்சிக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தார் அவர். இந்த கூட்டத்தில் ஆசிரியர் கலந்து கொண்டார். ஆனால் கலைஞர் கலந்துகொள்ளவில்லை. ஆசிரியரே கூட்டத்திற்கு செல்லும்போது தாங்கள் ஏன் செல்ல வில்லை என கலைஞரிடம் சிலர் கேட்க, திராவிடர் கழகம் தேர்தலில் நின்று சட்டமன்றம் செல்லாத ஓர் இயக்கம். எனவே தனது கருத்தை தெரிவிக்க இந்த கூட்டத்தில் கலந்து கொள் கின்றனர் என்றார் கலைஞர். ஆசிரியர் கிட்டத்தட்ட 40 நிமிடம் அக்கூட்டத்தில் சட்ட ரீதியாகவும் சமூக ரீதியாகவும் தனது கருத்துகளை முன்வைத்தார். அதில் குறிப்பிடத்தக்கது என்ன வென்றால் ஒரு அரசு அதிகாரி காஞ்சிபுரத்தில் பணியாற்றும்போது வருடம் 8,990 ரூபாய் ஊதியமாகப் பெறுவாரென்றும், அதே அதிகாரி சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டு பணியாற்றி னால் வருடம் 9,100 ரூபாய் ஊதியம் பெறுவாரென்றும், எம்ஜிஆர் கொண்டு வந்த பொருளாதார அளவுகோலின்படி மேற்கண்ட அரசு அதிகாரி காஞ்சிபுரத்தில் பிற்படுத்தப்பட்டவராகவும், சென்னையில் முற்பட்டவராகவும் கருதப்படுவார் என்றும் ஆசிரியர் கூறினார்.
ஆசிரியரின் இத்தகைய கருத்துக்களைக் கேட்ட பின்னர் அந்த கூட்டத்தை முடித்துக் கொண்டனர்.
பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ‘இந்து’ நாளிதழ் செய்தி யாளர் ஏன் அனைத்துக் கட்சிக் கூட்டம்? என எம்ஜிஆரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலாக, “ஒரு கட்சி ஒரு தலைவர் எனது ஆட்சி சமூக நீதிக்கு எதிரானது என 6 மாதமாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்தனர். அதன் விளைவாக நாங்கள் தோல்வி அடைந்தோம். அதற்காகவே இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம்“ என்றார் எம்ஜிஆர்.
அப்போது நான் எம்ஜிஆரிடம் ஒரு கேள்வி எழுப்பினேன். பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என வகைப்படுத் தப்பட்டுள்ளதே அவையெல்லாம் எதன் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது என்றேன். அதற்கு எம்ஜிஆரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இந்த சம்பவத்தைப் பற்றி அடுத்தநாள் ‘முரசொலி’யில் ஒரு Ôநிருபரின் கிடுக்குப்பிடிÕ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.
பின்னர் அரசாணை எம்ஜிஆர் அரசாலேயே திரும்பப் பெறப்பட்டது. பலதரப்பட்ட கொள்கையுடைய தலைவர் களையும் இந்த பிரச்சனையில் ஒருங்கிணைத்தது ஆசிரியர் அவர்களும், திராவிடர் கழகமுமே ஆகும்.
உயர்ஜாதிக்கு பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு- உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி
இப்படி கடுமையான எதிர்ப்புகளை சந்தித்த பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டினை தற்போது உயர்ஜாதி களுக்கு ஒன்றிய பாஜக அரசு வழங்கியுள்ளது. இந்த 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு புதியதல்ல.பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருக்கும்போது 10 சதவீதம் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதனை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த 10 சதவீத பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதுபோல ராஜஸ்தானில்கொண்டுவந்த 14 சதவீத இட ஒதுக்கீட்டையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இத்தனை முறை நம்மால் எதிர்க்கப்பட்டும் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதுமான பொருளாதார அளவுகோல் கொண்டு தான் தற்போது உயர்ஜாதிகளுக்கு 10 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப் பட்டுள்ளது. இந்த முறை கொண்டுவரப்பட்ட பின்னர் ஸ்டேட் பேங்க் பணியாளர் தேர்வில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட தேர்வர்களுக்கு கட் ஆப் மதிப்பெண் 60ஆக உள்ளது. ஆனால் உயர் ஜாதி பார்ப்பானுக்கு கட் ஆப் மதிப்பெண் 28 ஆக உள்ளது. பன்னிரெண்டாம் வகுப்புவரை பெற்ற மதிப்பெண்ணை குப்பைக்கு அனுப்பிவிட்டு, சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தேர்வு நடத்துகின்றனர்.
பாஜக தொடக்கத்திலிருந்தே சமூகநீதிக்கு பாதகம் விளைவிக்கும் வண்ணம் செயல்பட்டு வந்துள்ளது. மண்டல் ஆணையத்தின் அறிக்கையை அன்றைய பிரதமர் வி.பி. சிங் அமல்படுத்தியபோது பெரியாரின் கனவும்,அம்பேத்கரின் கனவும், லோகியாவின் கனவும் நிறைவேறியது என்றார். இதற்கு பின்னர் இவருக்கு அளித்த ஆதரவை பாஜக திரும்பப் பெற்றது. அப்போது வி.பி.சிங்கிடம் கேட்டதற்கு அவரோ சமூகநீதிக்கு எதிராக யார் உள்ளார்கள் என்பதையும், ஆதரவாக யார் உள் ளார்கள் என்பதையும் இதன் மூலம் மக்கள் அறிந்து கொள் ளட்டும் என்றார். “அதிமுக போன்ற கட்சிகள்கூட பாஜக உடன் சேர்ந்து வி.பி.சிங்கின் ஆட்சியைக் கவிழ்த்தனர். அப்துல் சமது போன்றவர்கள் மட்டும் மாறுபட்ட நிலையை இங்கு எடுத்தனர். இருந்தாலும் இதனை பெரிதாக பொருட்படுத்தாத வி.பி. சிங் Ôசமூக நீதிக்காக ஆயிரம் பிரதமர் நாற்காலிகளை இழக்கத் தயார்” என கூறினார். மற்ற பிரதமர்கள் காகா கலேல்கர் அறிக்கையை எடுத்து பூட்டி வைத்தது போல, வி.பி.சிங்கும் மண்டல் அறிக் கையை எடுத்து பூட்டி வைத்திருக்கலாம். ஆனால் அவ்வாறு அவர் செய்யவில்லை. மாறாக அரசியலில் அறத்தை கடைப் பிடித்தார். அதனாலேயே அவர் அரசியல் புத்தரானார்.
இட ஒதுக்கீட்டின் அவசியம்
வாழையடி வாழையாக பார்ப்பனர்கள் கல்வியிலும் மற்ற வற்றிலும் ஏகபோக உரிமை படைத்தவர்களாக இருந்தனர். ஆனால் சூத்திரனுக்கு அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டது. ஒருவேளை ஏதேனும் ஓரிரு உரிமைகள் கிடைத்தாலும் கல்வி உரிமை என்பது கிடையவே கிடையாது. அதைத்தான் சூத்திர னுக்கு எதை வேண்டுமானாலும் கொடு, ஆனால் கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது அவர்களது சாஸ்திரங்கள். சோழ மன்னர்கள் ஆட்சியில் கூட திருவாவடுதுறையிலும் பாண்டிச் சேரியிலுள்ள திருவோணத்திலும் நடத்தப்பட்ட பள்ளிகள் அனைத்தும் பார்ப்பன பள்ளிகள் ஆகும். அங்கு வேதங்களும் உபநிஷத்துக்களும் மட்டுமே கற்பிக்கப்பட்டு வந்தன. 1610 ஆம் ஆண்டு மதுரையில் மொத்தம் 10,000 மாணவர்கள் படித்தனர் என்றும், அந்த அனைத்து மாணவர்களும் பார்ப்பனர்கள் என்றும் ராபர்ட் டி நொபிலி என்பவர் எழுதியுள்ளார்.
இப்படி காலம் காலமாக ஒரு சாரார் மட்டுமே கல்வி கற்கும் உரிமையைப் பெற்றும், ஒரு சாராருக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டும் வந்த நிலையை மாற்றும் நோக்கில்தான் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த ஏற்பாடு இங்கு மட்டுமல்ல உறுதியான நடவடிக்கை (Affirmative Action) என்ற பெயரில் அமெரிக்காவிலும் நடைமுறைப்படுத்தப்பட் டுள்ளது. இந்த நடைமுறை போக்கு குறித்து மூன்று மாதத்திற்கு ஒருமுறை அங்கு அறிக்கை தாக்கல் செய்தல் வேண்டும். அதுபோல தென்னாப்பிரிக்காவில் கிரிக்கெட் போட்டியில் கூட இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. ஏனென்றால் தென்னாப்பிரிக்கா அடிப்படையில் ஒரு கருப்பர் நாடானாலும் வெள்ளைக் காரர்களின் ஆதிக்கம் அங்கு அதிகமாக உள்ளது. அதனால் இத்தகைய ஏற்பாடு அங்கு உள்ளது. இவ்வாறு உலகம் முழு வதிலும் இனத்தாலும் நிறத்தாலும் அடக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு செய்த ஏற்பாடுகளைப் போல, இந்த நாட்டில் வருணாசிரமத்தால் சூத்திரனாக்கப்பட்டு அடக்கப்பட்ட தாழ்த் தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு இட ஒதுக்கீடு என்பதை நடைமுறைப்படுத்திய இயக்கம்தான் திராவிட இயக்கம்.
முதல் தாழ்த்தப்பட்ட நீதிபதி
கல்வி என்பதில் மட்டுமல்ல வேலைவாய்ப்புகளில் கூட பார்ப்பனர் ஆதிக்கம் உச்சத்தில் இருந்தது. அன்றைய அனந்தபூர் மாவட்டத்தில் கிருஷ்ண ராவ் என்பவர் இருந்தார். இன்றைய டிஆர்ஓ பணித்தகுதி போன்று அன்று அவர் அரசுப் பணியில் இருந்தார். அந்த மாவட்டத்தில் பணியாற்றிய பணியாளர்களில் 117 பேர் இந்த கிருஷ்ணராவுக்கு உறவினர்களாவர். அதேபோல கடப்பா மாவட்டத்தில் பணியாற்றிய மொத்தம் 116 பேர் இவருக்கு உறவினர்களாவர். இதுபோல பல இடங்களில் அரசு வேலை வாய்ப்பானது பார்ப்பானின் முற்றுரிமையாக இருந்தது. தந்தை பெரியாருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏவிஎம் ராஜேஸ்வரி மண்டபத்தில் பாராட்டு விழா நடந்தது. அப்போது அய்யா ஆசிரியரை நோக்கி “மெட்ராஸ் உயர்நீதி மன்றம்“ செயல்படத் தொடங்கி எவ்வளவு நாள் ஆகிறது என்று கேட்டார். அதற்கு 110 வருடம் ஆகிறது என ஆசிரியர் கூறினார். 110 வருடமாகியும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதி கூட இல்லாததை அறிந்த பெரியார், அது என்ன நீதிமன்றமா அல்லது கர்ப்பகிரகமா என்றார். தினமும் காலையில் முதல் நாளிதழாக விடுதலையினை வாசிக்கும் கலைஞரின் கவனத் திற்கு இந்த விஷயம் சென்றது.அந்த காலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி பணியிட நிரப்புதல் மாநில அரசு சிபாரின் மூலமே நடைபெற்றது. ஆகையால் கலைஞர் உடனடியாக அதிகாரிகளை அழைத்து தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் யார் சீனியாரிட்டியில் உள்ளார் என்று கேட்டார். ஆனால் யாரும் இல்லாத காரணத்தால் கடலூரில் பணியாற்றிய ஜஸ்டிஸ் வரதராஜன் அவர்களைத் தேர்ந்தெடுத்து மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியாக நியமித்தது கலைஞர் அரசு. அதுமட்டுமல்ல உச்ச நீதிமன்றத்திற்கும் முதல் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நீதிபதியாக ஜஸ்டிஸ் வரதராஜன் சென்றார். 110 வருடங்கள் ஆகியும் ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தவர் நீதிபதியாக முடிய வில்லை என்றால், அங்கு எந்த அளவிற்கு ஜாதி ஆதிக்கம் நிலவியிருக்கும் என்பதை எண்ண வேண்டும்.
சில காலங்களுக்கு முன்புவரை உயர் உயரதிகாரிகளுக்கு தனிப்பட்ட கோப்புகள் (Personal file) என்ற நடைமுறை இருந்தது. அதில் அவர்கள் எழுதும் கருத்துகளை கொண்டே பணியாளர் பதவி உயர்வு போன்றவை வழங்கப்படும். அந்த அளவிற்கு அந்த தனிப்பட்ட கோப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது. ஈரோட்டிலே 2 தாசில்தார்கள் சம பணி மூப்புடன் பணியாற்றி வந்தனர். அவர்கள் அடுத்ததாக ஆர்டிஓ பதவிக்கு உயர்வு பெறுபவர்களாக இருந்தனர். இருப்பினும் இருவரும் சம மூப்பும் மற்றும் சமூக ஒழுங்கோடும் செயல்பட்டதால் யாரையாவது ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டிய சூழல் வந்தது. அங்கு மாவட்ட ஆட்சியராக இருந்த பார்ப்பனர் ஒருவர் அந்த இரு தாசில்தாரில் ஒருவரான ஒரு பார்ப்பன தாசில்தாருக்கு பதவி உயர்வு வழங்கிவிட்டு, அதற்கு காரணமாக தனது தனிப்பட்ட கோப்பில் அந்த பார்ப்பன தாசில்தார் தினமும் டென்னிஸ் விளையாடுகிறார் என்றும் எனவே அவருக்கு பதவி உயர்வு வழங்கவும் என்று எழுதினார். தனது ஜாதி ஆதிக்கத்தைத் உறுதி செய்ய பார்ப்பனர் எத்தகைய சூழ்ச்சியும் செய்வார்கள் இதுபோன்று. பின்னர் கலைஞர் ஆட்சியில் இந்த தனிப்பட்ட கோப்புகள் ஒழிக்கப்பட்ட பிறகு ராஜாஜி ஹாலில் இளங்கோவன் அவர்களால் பாராட்டு விழா நடத்தப்பட்டது. அதற்கு தந்தை பெரியாரையும் அழைத்து கவுரவித்தனர்.
சமூகநீதிக்கான ஆசிரியரின் போராட்டங்கள்
பெரியார் விட்டுச்சென்ற பணியை திறம்பட தொடரும் ஆசிரியரின், மண்டல் குழு அறிக்கைக்காக முன்னெடுத்த போராட்டம் குறிப்பிடத்தக்கது. தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கு வழிசெய்த மண்டல் அறிக்கை கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் நடைமுறைப் படுத்தப்படாமல் இருந்தது. இதற்காக வேண்டி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி வீட்டிற்கு முன்பாகவும் நாடாளுமன் றத்திற்கு முன்பாகவும் திராவிடர் கழகம் போராடியது. அத்துடன் தேசிய அளவில் 42 மாநாடுகளையும் 16 போராட்டங்களையும் இப்பிரச்சினை தொடர்பாக முன்னெடுத்தது. அதுபோல 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் சட்டத்தை பார்ப் பனர்களின் இசைவோடே 9ஆவது அட்டவணையில் சேர்த்து காட்டினார் ஆசிரியர். அன்று தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா ஒரு பார்ப்பனர். அன்றைய பிரதமராக இருந்த பி.வி. நரசிம்மராவ் ஒரு பார்ப்பனர். அன்றைய குடியரசுத் தலைவராக இருந்த சங்கர் தயாள் சர்மாவும் ஒரு பார்ப்பனர். இவர்களின் இசைவோடே 69 சதவீத பாதுகாப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. இவர்களில் சங்கர்தயாள் சர்மா ஒருமுறை பிராமணரின் இடத்தை வேண்டுமானால் பிடுங்கிவிடலாம், ஆனால் அவர்களின் மூளையை பிடுங்க முடியாது என்றார். அதற்கு வி.பி. சிங் அப்படிப்பட்ட கிரிமினல் மூளை எங்களுக்கு வேண்டாம் என்று பதிலடி கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு பார்ப்பானிடம் தான் கையெழுத்து பெற்று நமது 69 சதவீத இடஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்றிக் காட்டினார் நமது ஆசிரியர்.நேற்று (12.7.2021) தமிழ்நாடு அரசு நியமித்த நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை எதிர்த்து பாஜக மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன் என்ற பார்ப்பனக் கருவி சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் உச்சநீதிமன்ற வழக்கு நிலுவையிலுள்ளதை குறிப்பிட்ட நீதிபதிகள், நேற்று தங்களது கருத்தை மாற்றிக் கொண்டு நீதியரசர் ஏ.கே.ராஜன் குழுவை ஏற்றுள்ளனர். அதற்கு காரணம் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் விடுத்த அனைத்துக்கட்சி கூட்டத்தின் விளைவேயாகும். அனைத்துக் கட்சிகளும் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டதோடு மட்டுமின்றி அந்த வழக்கிலும் தங்களை இணைத்துக் கொள்ள முன்வந்தனர். அதனாலேயே நீதிமன்றத்தின் பார்வையில் மாற்றம் ஏற்பட் டுள்ளது. இருப்பினும் இது முடிவு அல்ல. இதையே ஆசிரியர் நாம் தாண்டவேண்டிய தடைகளும் கடக்க வேண்டிய தூரமும் அதிகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் அவர்கள் உரையாற்றினார்.
தொகுப்பு: வடசேரி இரா.பாலாஜி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக