• Viduthalai
கலி. பூங்குன்றன்
சென்னையில் நாளை (7.3.2021) பார்ப்பனர்களின் பொதுக் கூட்டமாம். எதற்காகவாம், பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு கோரியாம்!
பொதுப் பிரிவில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு கோரி இந்த பொதுக் கூட்டமாம்.
யார் யாரெல்லாம் பங்கு ஏற்கிறார்களாம்? பா.ஜ.க. முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா, நடிகர் எஸ்.வி.சேகர் உள்ளிட்ட பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., பொறுப்பாளர்கள் - அதாவது பார்ப்பனர்கள்.
இராமாயணம் என்றால் வீடணர்கள் இல்லாமலா? இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் பங்கேற்பு.
முஸ்லிம்களிலும் கோடாரிகள் உண்டே, எனவே அதிலும் சிலராம்.
இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தந்திரம் என்பது.
எல்லாருமே பார்ப்பனர்கள் என்றால் விடயம் வெளிச் சத்துக்கு வந்துவிடுமே! அதனால் அவர்கள் மொழியில் “திருஷ்டிப் பரிகாரத்துக்கு” இந்தியாதி.. இத்தியாதி ஆட்கள்!
பிரதமர் நரேந்திரமோடி கூட பிற்படுத்தப்பட்டவர் தான் இவரை ஏன் முன்னிறுத்துகிறார்கள்? பச்சையாகப் பார்ப்பன ஆதிக்கம் பார்ப்பனர் அல்லாதாரின் கண்க ளுக்குப் பட்ட வர்த்தனமாகத் தெரிந்து விடக் கூடாதே - அந்த ஏமாற்றுத்தனத்துக்குத்தான்.
“நிஜப் புலியைவிட வேஷம் போட்ட புலி அதிகம் குதிக்கும்!” என்பார் தந்தை பெரியார். அந்த வகையில் தான் பிரதமர் மோடி.
பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு பத்து விழுக்காடு இடங்கள் கல்வியிலும், வேலையிலும் இவர்களுக்கு வேண்டுமாம்.
இது சட்டப்படி சரியானதுதானா. சென்னை மாநில இடஒதுக்கீடு செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்ற மும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புச் சொல்லி விட்டபிறகு, தந்தை பெரியார் தலைமையில் தமிழ்நாடு கொதித் தெழுந்த நிலையில் வேறு வழியின்றி, நாடாளுமன்றத்தில் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே - சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்ற அளவுகோலில் பொருளாதாரத்தையும் இணைக்க வேண்டும் என்று திருத்தம் கொண்டுவந்தபோது நடை பெற்ற வாக்கெடுப்பில் பொருளாதார அளவுகோலுக்கு ஆதரவாக அய்ந்தே அய்ந்து வாக்குகளும் எதிராக 263 வாக்குகளும் பதிவாகின. (1951)
ஆக தொடக்கத்திலேயே அடி வாங்கி விட்டது இந்தப் பொருளாதார அளவுகோல்; ஆனாலும் பார்ப்பனர்கள் இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து எழுப்பிக் கொண்டே இருந்தனர்.
கல்லை எறிந்து பார்ப்போமே - ஏதாவது விழுந்தால் இலாபம் தானே என்பது அவர்களின் அணுகுமுறை.
பி.வி. நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது 1992களில் பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்ற ஒன்றைக் கொண்டு வந்தபோது உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
இன்றைய பிரதமர் - அன்றைய குஜராத் முதல் அமைச்சர் நரேந்திர மோடி மாநில அளவில் பொருளா தாரத்தில் நலிந்தோர் என்று கூறி 10 விழுக்காடு இடஒதுக் கீடுக்கு வழி செய்யும் ஆணையைப் பிறப்பித்தார். மத்திய பிரதேசத்தில் சிவராஜ்சிங் சவுகான் அதே ரீதியில் 15 விழுக் காடுக்கான ஆணை ஒன்றை கொண்டு வந்தார்.
இரண்டு ஆணைகளும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப் பட்டன. இந்தச் சூழலில் அதே நரேந்திர மோடி பிரதமரான நிலையில் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கான இட ஒதுக்கீடு என்று (10 விழுக்காடு) ஒரு சட்டத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்து ஒரு சில நாட்களிலேயே நிறைவேற்றி செயல்பாட்டுக்குக் கொண்டு வந்து விட்டாரே!
இவ்வளவுக்கும் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே செயல்பாட்டுக்கு வந்து விட்டதே!
சட்டம், நீதிமன்றம் - இவை எவற்றையுமே பொருட் படுத்தாது, தான் தோன்றித்தனமாகக் கொம்பைத் தீட்டிக் கொண்டு துள்ளிப் பாய்வதுதான் பா.ஜ.க. ஆட்சி.
இடஒதுக்கீடு காரணமாக ‘தகுதி’ ‘திறமை’ அழிந்தே போய் விடும் என்று அண்டம் குலுங்க அலறியவர்கள் இதே பார்ப்பனர்கள்தான்.
மண்டல் குழுப் பரிந்துரைக்கான போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்திக் கொண்டு இருந்தபோது - அதனை எதிர்த்து பட்டினிப் போராட்டம் நடத்தினவர்கள் இதே பார்ப்பனர்தான்!
குடியரசு தலைவர் ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று கூப்பாடு போட்டவர்களும் இவர்களே! இந்த நிலையில் இவர்கள் இடஒதுக்கீடு கேட்டு கூட்டம் போடுகிறார்களே - மாநாடு கூட்டி மார்தட்டுகிறார்களே - இப்பொழுது மட்டும் தகுதி - திறமை நாசமாகப் போய் விடாதா?
இதற்குப் பெயர்தான் பார்ப்பனத்தனம் என்பது.
1928ஆம் ஆண்டில் வகுப்புரிமை ஆணை நீதிக்கட்சி ஆதரவு பெற்ற அமைச்சரவையில், அமைச்சர் எஸ். முத்தையா முதலியார் முயற்சியால் கொண்டு வரப்பட்டதே (G.O. MS No.744 நாள் 13.9.1928) அதன் விவரம் என்ன?
பார்ப்பனருக்கு - 2,
கிறிஸ்தவருக்கு - 1,
முஸ்லிமுக்கு - 1.
ஆதி திராவிடருக்கு - 2
பிற்பட்டவருக்கு - 2
மற்ற பார்ப்பனர் அல்லாதாருக்கு - 6
அந்த வகையில் பார்த்தால் 14-இல் 2 இடங்கள் பார்ப்பனர்களுக்கு விழுக்காட்டு அளவில் நூற்றுக்கு 14 இடங்கள் கிடைத்த னவே - அதனை எதிர்த்துப் போர்க் கொடி தூக்கிய கூட்டம்தான் இப்பொழுது இட ஒதுக்கீடு கேட்டு காவடி தூக்குகிறது.
நாளை நடக்க இருக்கும் பார்ப்பனர் களின் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் திருவாளர் எஸ்.வி. சேகரைப் பற்றி ஒரு தகவல்.
பார்ப்பனர்களுக்கு 10 சதவீத இடஒதுக் கீடு கேட்டு, முதல் அமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்திக்கச் சென்றார். கலைஞர் என்ன செய்தார்?
“நேராகப் பெரியார் திடலுக்குச் சென்று தி.க. தலைவர் வீரமணியைச் சந்தியுங்கள்?” என்று வழிகாட்டி விட்டார். அந்த நடிகரும் அவ்வாறே சென்னை - பெரியார் திடலுக்கு வந்து திராவிடர் கழகத் தலைவரையும் சந்தித்தார். விவரத்தைச் சொன்னார். அப் பொழுது ஆசிரியர் வீரமணி அவர்கள் அவரை மரியாதையுடன் வரவேற்று உட்கார வைத்து கேள்வி ஒன்றை நாக்கைப் பிடுங்குமாறு நாசூக்காகத் தான் கேட்டார்.
‘ஜஸ்டிஸ் ஆட்சிக் காலத்தில் 16 சதவீத இடங்கள் உங்களுக்கு அளிக்கப்பட்டதே - மரியாதையாக அதனை நீங்கள் ஏற்றுக் கொண்டு இருந்தால் இந்த நிலை ஏற்பட்டு இருக்காதல்லவா?’ என்று சொன்னபோது அசடு வழிந்தது நடிகர் எஸ்.வி. சேகருக்கு.
இடஒதுக்கீட்டின் தத்துவம் என்பது - கல்வியிலும் சமூகரீதியிலும் ஆண்டாண் டுக் காலமாக உரிமை மறுக்கப்பட்ட மக் களுக்குத்தானே.
பார்ப்பனர்களில் ஏழைகள் இருக்கலாம், ஆனால் கல்லாதவர்கள் கிடையாதே! ஏன் இந்த நிலை? சூத்திரர்களுக்குக் கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற மனுதர்ம நிலை சமுதாயம்தானே.
பொருளாதார அளவுகோல் என்றால் பிச்சை எடுப்பதுதான் எங்கள் தருமம் என்று கூறி எளிதாகப் பார்ப்பனர் உள்ளே புகுந்து ஆக்ரமித்துக் கொள்ள மாட்டார் களா?
“பிச்சைக்காரப் பார்ப்பனத் தெரு” - என்று இன்றும் கும்பகோணத்தில் இருக்கிறதே!
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான (EWS Economically Weaker Section) சான்றுகள் மும்பையில் விலைக்கு விற்கப்பட்ட விவரம் ஏடுகளில் பட்டவர்த்தனமாக சிரிப்பாய்ச் சிரித்தனவே!
பொருளாதாரத்தில் நலிவடைந்த உயர் ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடம் அளித்ததால் ஏற்பட்ட விளைவு என்ன?
இதோ ஒரு எடுத்துக்காட்டு.
ஸ்டேட் வங்கிக்கான எழுத்தர் தேர்வில் பணி கிடைக்கப் பெற்றவர்கள் யார் யார்? வாங்கிய மதிப்பெண்கள் எத்தனை எத் தனை?
பழங்குடியினருக்கான தகுதி மதிப் பெண் (கட்ஆஃப்) - 53.75
தாழ்த்தப்பட்டோருக்கான தகுதி மதிப் பெண் - 61.25
பிற்படுத்தப்பட்டோருக்கான தகுதி மதிப்பெண் - 61.25
உயர் ஜாதி பார்ப்பனருக்கான தகுதி மதிப்பெண் - 28.5
எளிதாகப் புரியும்படிச் சொன்னால் தாழ்த்தப்பட்ட பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வேலை கிடைக்க வேண்டும் என்றால் அவர் பெற வேண்டிய மதிப்பெண் (Mark) 53.75. அதே நேரத்தில் உயர்ஜாதி ஏழைப் பார்ப்பான் வெறும் 28 மதிப்பெண் பெற்றால் உடனே வேலை.
இதுதான் பொருளாதார அடிப்படை என்பதில் உள்ள சூட்சமம்! அதற்கான பொதுக் கூட்டத்தைத்தான் நாளைய தினம் பார்ப்பனர்கள் சென்னையில் நடத்து கிறார்கள். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது - பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டத்தான். பாரதிய ஜனதா ஆட்சி என்பது பார்ப்பன ஜனதா ஆட்சியே! புரிந்து கொள்வீர்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக