பக்கங்கள்

திங்கள், 13 ஆகஸ்ட், 2018

கலைஞர் ஒரு சமூகநீதி சகாப்தம்!

கி.வீரமணி , தலைவர், திராவிடர் கழகம்


திராவிடர் இயக்கமான தென்னிந்திய நலஉரிமைச் சங்கம் என்ற அதிகாரபூர்வ பெயர் கொண்டதுதான் ஜஸ்டீஸ் கட்சி என்று வெகுமக்களால் அழைக்கப்பட்ட நீதிக்கட்சி.

100க்கு 3 பேர்களான பார்ப்பனர்களே பிரிட்டிஷ் ஆட்சியில் கல்வி உத்தியோகங்களைப் பெற்று ஆதிக்கம் செலுத்தியதை எதிர்த்து அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்பதையே கொள்கை- - லட்சியமாகக் கொண்டு பிறந்ததுதான் நீதிக்கட்சி.

தந்தை பெரியார் அவர்கள் காங்கிரசில் சேர்ந்து 1920 முதல் 1925 வரை போராடியது இந்த வகுப்புரிமை சமூகநீதியைப் பெறுவதற்கே!

அங்கே உயர்ஜாதியினரான பார்ப்பனர் ஆதிக்கமே அதிகம் என்பதால் தொடர்ந்து பெரியார் எடுத்த முயற்சிகள் தோல்வியுற்ற நிலையில், கடைசியில் 1925இல் காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டிலும் வகுப்புரிமை தீர்மானம் ஏற்கப்படாமல் சூழ்ச்சி நடந்ததை எதிர்த்தே, காங்கிரசை விட்டு வெளியேறி, சமூகநீதிக்காகப் போராடிட சுயமரியாதை இயக்கம், என்ற தனி இயக்கம் கண்டு, அனைவருக்கும் அனைத்தும் என்பதே அதன் கொள்கை லட்சியம் என்று முழங்கினார்.

1928இல் அமைச்சர் முத்தையா முதலியார் முயற்சியால், நீதிக்கட்சி ஆதரவு பெற்ற டாக்டர் சுப்பராயன் தலைமையிலான அமைச்சரவையில் கம்யூனல் ஜி.ஓ. என்ற வகுப்புரிமை ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்திய அரசியல் சட்டம் அமலுக்கு வந்ததைப் பயன்படுத்தி அவ்வாணை அரசியல் சட்டத்திற்கு இது முரண் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் செண்பகம் துரைராஜன், சீனுவாசன் என்ற இரண்டு உயர்ஜாதி பார்ப்பனர்கள் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்றனர்; உச்சநீதிமன்றமும் இத்தீர்ப்பை மேல்முறையீட்டில் உறுதி செய்தது.



தந்தை பெரியார் துவக்கிய மாபெரும் போராட்டத்தின் விளைவாக இந்திய அரசியல் சட்டம் முதன்முறையாக திருத்தப்பட்டு, வகுப் புரிமை- - சமூகநீதி - கல்வியிலும் உத்தியோகத் திலும் சமூகநீதி காப்பாற்றப்பட்டது (1951).

காமராசர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்ட வர்களுக்கு (S.C, S.T) 16 சதவிகிதம், பிற்படுத்தப் பட்டோருக்கு (B.C) 25 சதவிகிதம் என்று 41 விழுக்காடு இருந்தது. எஞ்சிய 59 விழுக்காடு திறந்தபோட்டி (OPEN COMPETITION) யாகும்.  அதில் முன்னேறிய ஜாதியினர் உட்பட அனை வரும் போட்டியிட்டு இடங்களைப் பெறலாம்.

1967இல் அறிஞர் அண்ணா ஆட்சிக்கு வந்தவுடன் தந்தை பெரியாரின் அறிவுரைப்படி பல சமூக சீர்த்திருத்தங்களைக் கொண்டு வந்து, அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை என்று பிரகடனப்படுத்தினார். முதல் அமைச்சர் அண்ணாவிடம்  இடஒதுக்கீட்டை அதிகப்படுத்த உடனே முயற்சி எடுக்க கேட்டுக் கொண்டார் தந்தை பெரியார். அண்ணா ஏற்று  முயன்றபோது கெட்டவாய்ப்பாக  மறைந்து விட்டார் - முப்பெரும் சாதனைகளைச் செய்துவிட்டு.

அந்தக் காலக்கட்டத்தில் பதவியேற்ற நமது கலைஞர் அவர்கள் அய்யா அறிவுரைப்படி, அண்ணா துவக்கிய பணியைத் தொடர்ந்தார்.

A.N சட்டநாதன் தலைமையில் மூவர் அடங்கிய முதலாவது பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷனை நியமித்தார். முதல் அமைச்சராக கலைஞர்அவர்கள் பதவியேற்ற வுடன், தனக்கென பெருமைமிக்க பாரம்பரியம் ஏதும் கிடையாது, மிகவும் பிற்படுத்தப்பட்ட எளிய குடும்பத்தி லிருந்து வந்தவன். எத்தனை மிக மிக வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளுங்கள், என்று தன்னடக்கத்துடன் கூறி, ஆட்சியைத் துவங்கி விரைந்து முடிவுகள் எடுப்பதில் இந்தியாவுக்கே வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

பிற்படுத்தப்பட்டோர் நலக்கமிஷன் பரிந்துரைகளை ஏற்று,

தமிழ்நாட்டில் காமராஜர் (காங்கிரஸ்) ஆட்சியில் தரப்பட்ட சமூகநீதி, இடஒதுக்கீட்டு விகிதாச்சாரங்கள் தந்தைபெரியார் விருப்பத்திற்கு ஏற்ப,

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு (S.C, S.T) வழங்கப்பட்ட 16 சதவிகிதத்தை 18ஆக உயர்த்தியும் பிற்படுத்தப்பட்டோருக்கு இருந்து வந்த 25 சதவிகிதத்தை 31ஆகவும் உயர்த்தினார். இதன்மூலம் இடஒதுக்கீடு 49 சதவிகிதத்தை எட்டியது. எம்.ஜி.ஆர் ஆட்சி(அ.தி.மு.க அரசு) இருந்தபோது (எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தி.மு.க தலைவர் கலைஞர் அவர்கள்), எம்.ஜி.ஆர் அவர்கள் 1979 ஜூலையில் கொண்டுவரப்பட்ட சமூகநீதிக்கு வேட்டு வைக்கக்கூடிய, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஆண்டு வருமானம் ரூபாய் 9000க்கு கீழே இருந்தால் மட்டுமே அவர்களுக்கு இடஒதுக்கீடு, இன்றேல் அவர்கள் திறந்தபோட்டியில் மற்ற முன்னேறிய ஜாதியினருடன்தான் போட்டியிட்டு கல்வி, வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்ற, அரசியல் சட்டவிரோத ஆணை ஒன்றைப் பிறப்பித்தார் - அதுவும் பெரியாருக்கு நூற்றாண்டு கொண்டாடிய நிலையில்!

திராவிடர் கழகமும், திமுகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் கட்சிகள் ரீதியாக அந்த ஆணையை எதிர்த்து 6 மாதம் தொடர்ந்து போராடி வந்தோம்!

திராவிடர் கழகம் அந்த ஆணையின் நகலை எரித்து சாம்பலை மூட்டை மூட்டையாக, முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கே கோட்டைக்கே அனுப்பினோம்!

தி.க., தி.மு.க மற்றும் தோழமைக் கட்சிகளின் தொடர் பிரச்சாரத்தால் அடுத்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் (1980) எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க கட்சி படு தோல்வி அடைந்தது; 39 இடங்களில் கோபி, சிவகாசி ஆகிய இரண்டே தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றதால் எம்.ஜி-ஆர். நிலை குலைந்தார். அவசர அவசரமாக அனைத்துக்கட்சிக் கூட்டம் கூட்டி (21.1.1980), நமது கருத்து விளக்கங்களைக் கேட்ட பிறகு  அவ் வாணையை ரத்து செய்தார்! 9000 ரூபாய் வருமான வரம்பு ஆணை பிற்படுத்தப்பட்டோருக்கு புகுத்தியது ஒழிந்தவுடன், அவர் 31 சதவிகித பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டினை 50 சதவிகிதமாக உயர்த்தியதால் தமிழ்நாட்டின் மொத்த இடஒதுக்கீடு 68 (50+18)  சதவிகிதம் ஆனது.

மீண்டும் கலைஞர் 89 - 91இல் ஆட்சி அமைத்து முதல் அமைச்சரான, உடனேயே, மலைவாழ் - மக்களுக்கு ஒரு சதவிகிதம் (அவர்கள் எண்ணிக்கை ஒரு சதவிகிதம் கூட இல்லாத நிலையில்) தனியே ஒதுக்கீடு தர வேண்டுமென்ற உயர்நீதிமன்ற ஆணையை செயல்படுத்தினார்.

50 ஆக இருந்த பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவில் பெரிதும் சில ஜாதிகளே வாய்ப்பை பெறுகின்றனர் என்ற கோரிக்கை, கூப்பாட்டிற்கு மதிப்பளித்து, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கான இடஒதுக்கீட்டை (கோட்டாவை) இரண் டாக பிரித்தார்.

1. பிற்படுத்தப்பட்டோர் (B.C) 30 சதவிகிதம் 2. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் ( M.B.C ) (MOST BACKWARD CLASS) 20 சதவிகிதம் என்று பிரித்து அளிக்கப்பட்டது.

இதன் காரணமாக மிகப் பிற்படுத்தப்பட்ட சமூகத் தினர் பெரிதும் பலன் பெற்று, கலைஞரைப் பாராட்டி மகிழ்ந்தனர் என்பது மறைக்கப்பட முடியாத வரலாறு. அண்ணாவிற்குப் பிறகு கலைஞர் முதல் அமைச்சரான பின், செய்த முதல் சாதனை இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அமைச்சகம் செய்தது.

ஒடுக்கப்பட்ட சமூகத் தலைவர்களுடன் கலந்து ஒரு சமூகநீதிக் கூட்டணி உருவாவதற்கு ஒத்துழைப்புத் தந்தார்!

கிரிமிலேயர் என்ற ஒரு அடிப்படையை தமிழ்நாடு ஏற்காது செய்ததும், அவரது சரித்திர சாதனையாகும்.

எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்த நுழைவுத் தேர்வு என்ற பெயரில் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளுக்கு இருந்த தடையை தி.க.வும் தி.மு.க தொடர்ந்து 21 ஆண்டுகள் எதிர்த்து வந்தன.

கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது கிராமப்புற மாணவர்களுக்கு முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு 15 சதவிகிதம் இட ஒதுக் கீட்டுக்கு வழி செய்தார்.

பிறகு அதை ஜெயலலிதா 25 ஆக உயர்த் தியதால் அது நீதிமன்றத்தில் அடிபட்டுப் போயிற்று.

நுழைவுத் தேர்வு தேவையில்லை என்பதை கல்வி நிபுணர் குழு போட்டு - அவர்கள் பரிந்துரைப்படி அதை ஒழித்து, சட்டமன்றத்தில் சட்டமியற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, கிராமப்புற மாணவர்கள் முதல் தலை முறையினருக்கு பெருவாய்ப்பினை மருத்துவம்  - பொறியியல் படிப்புகளில் கதவைத் திறந்து விட்டார்.

இஸ்லாமியருக்கு பிற்படுத்தப்பட்டோர் கோட்டாவி லிருந்து 3 சதவிகிதமும், அதேபோல அருந்ததியினருக்கு 3 சதவிகிதம் தாழ்த்தப் பட்டோர் கோட்டாவிலிருந்தும் அளித்து, அவர் களுக்கு  மறுக்கப்பட்ட சமூகநீதி கிட்டும்படி செய்தார்.

பிற்படுத்தப்பட்டோருக்கு தனி அமைச்சகம் (SEPERATE MINISTER) துறை கிடையாது, அதை உருவாக்கி என்.வி.நடராசனை அமைச்ச ராக்கினார். புதிய துறையாக அதைப் பிரித்து சமூகநீதியைப் பரவலாக்கினார்.

110 ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் வரலாற்றில் ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட உயர்நீதிமன்ற நீதிபதியாக ஏன் வரவில்லை என்று தந்தை பெரியார் கேட்டார். உடன் கலைஞர் ராக்கெட் வேகத்தில் செயல்பட்டு தலைமை நீதிபதி கே.வீராசாமி அவர்களின் ஒப்புதலைப் பெற்று தாழ்த்தப்பட்ட சமுதா யத்தைச் சேர்ந்த மாவட்ட நீதிபதியாக 9ஆவது வரிசையில் இருந்த ஏ. வரதராசன் அவர்களை சமூகநீதிக்கு முன்னுரிமை என்ற சரியான காரணம் காட்டி, மத்திய அரசுக்கு பரிந்துரைத்து, சட்ட அமைச்சர் மாதவனை டில்லிக்கு அனுப்பி, உள்துறை அமைச்சகம், குடியரசுத் தலைவர் ஒப்புதல் வரை பெற்று உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்கச் செய்தார்!

இது ஒரு பெரும் சமூகப்புரட்சி அல்லவா! பிறகு இந்த அனுபவத்தால் முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாகவும் அவரே செல்லும் வாய்பினைப் பெற்றார். உயர்ஜாதியினர் எதிர்ப்பினை பொருட்படுத்தாது எதிர்நீச்சல் அடித்தே இதிலும் வெற்றி பெற்றார் கலைஞர்!

மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப் டோருக்கு இடஒதுக்கீடே இல்லாத குறை போக்க நியமிக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரைகளை செயலாக்க தி.கவும், தி.மு.க வும் இரட்டைக் குழல் துப்பாக்கியாக தொடர்ந்து போராடின. சமூகநீதி காவலர் வி.பி.சிங் அரசு அதனை அமல்படுத்த கலைஞர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தினார். மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்த 42 மாநாடுகள், 16 போராட்டங்களை திராவிடர் கழகம் நடத்தியது.

திருச்சியில ஒருமுறை சலவைத் தொழிலாளர்கள் கூட்டிய சமூகநீதி மாநாட்டில் தாழ்த்தப்பட்ட,  பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்வர் இடஒதுக்கீட்டின் தேவைப்பற்றி எளிமையாக விளக்கினார் முதல் அமைச்சர் கலைஞர்.

நீங்கள் அழுக்குத் துணிகளைத் தான் வெளுத்து பெட்டிபோட்டு அடுக்கி வைப்பீர்கள். சலவை செய்த துணிகளை மீண்டும் சலவை செய்வதில்லை.

அதுபோல காலகாலமாய் வாய்ப்பு மறுக்கப்பட் டோருக்குத் தானே இடஒதுக்கீடு வாய்ப்புகள் அளிக்கப்பட வேண்டியது நியாயம் என்றார்.

இதுபோல் பெண்களுக்கும் சொத்துரிமை, பணிகளில் இடஒதுக்கீடு, ஆசிரியைகளாக நியமனத்தில் முன்னு ரிமை போன்ற பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்தி சரித்திரம் படைத்தவர் மானமிகு கலைஞர்.

திருக்குவளையில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து திக்கெட்டும் புகழ் மணக்க பெருமை பெற்ற அந்த சுயமரியாதைச் சுடரொளியின் ஒளிக்கதிர்களின் வீச்சு உலகெலாம் பரவி வருகிறது. திராவிடர் இயக்கம் பூரித்துப் பெருமை கொள்கிறது. கலைஞர் தனி மனிதரல்ல: அவர் ஒரு சமூகநீதி சகாப்தம்!

நன்றி:  'தினகரன்' 13.08.2018

குறிப்பு: 'தினகரனுக்கு' எழுதப்பட்ட முழுக் கட்டுரை இது - 'தினகரன்' சுருக்கி வெளியிட்டுள்ளது)

- விடுதலை நாளேடு, 13.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக