பக்கங்கள்

வியாழன், 2 ஆகஸ்ட், 2018

தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு


(இயக்க வரலாறான தன்வரலாறு - 200)

அகில இந்திய தலைவர்கள் கலந்து கொண்ட தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காப்பு மாநாடு

 

 

20ஆம் நூற்றாண்டில் இன அழிப்பு, நூல் அழிப்பு வரலாற்றில் மிகப்பெரும் வன்முறையாக, நிகழ்வாக கருதப்படுவது யாழ் நூலக எரிப்பு வன்செயலாகும். இந்நூலகம் கரு.கே.எம்.செல்லப்பா என்பவரால் 11.11.1933இல் அவரது வீட்டில் உருவாக்கப்பட்டது. அவர் தமது வீட்டில் இருந்த சில புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. பின்னர் 1936ஆம் ஆண்டு யாழ் நகர சபையிடம் ஒப்படைக்கப்பட்டு புதிய இடத்தில் அமைக்கப்பட்டது.

1959ஆம் ஆண்டில் திராவிடக் கட்டிடக் கலையைத் தழுவி இரண்டு மாடி அழகிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. இதில் பல அரிய தமிழ் இலக்கிய நூல்கள் சேகரிக்கப்பட்டன. தென்கிழக்காசியாவிலேயே மிகப் பெரிய நூலகமாக உருப்பெற்றது.

இலங்கையில் ஏற்பட்ட இனவெறியின்  ஒரு பேரழிவாக 1981ஆம் ஆண்டு ஜூன் முதல் நாள் இரவு, சிங்கள வெறியர்களால் எரிக்கப்பட்டது. ஏறத்தாழ 97,000 அரிய தமிழ் இலக்கிய, இலக்கண மற்றும் பல்துறை நூல்கள் எரிக்கப்பட்டன. இந்த வன்முறை கும்பலின் பின்னணியில் அன்றைய இலங்கை அமைச்சர் திசநாயக்கா உள்ளிட்ட சிங்கள அரசியல்வாதிகள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது உலக அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

இது நடந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு யாழ்ப்பாண மேயர் எனக்கு எழுதியிருந்தார். கடிதத்தில், தீக்கிரையாக்கப்பட்ட யாழ் பொது நூலகத்தை ஏராளமான பொருட்செலவில் புதிப்பிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அம்முயற்சிக்கு உதவும்படியும், புத்தகங்கள் அனுப்பும்படியும் வேண்டுகோள் விடுத்திருந்தார். நான் ஓர் அறிக்கை வெளியிட்டேன், தோழர்கள் தங்களிடமுள்ள பயனுள்ள அரிய நூல்களை எங்களுக்கு அனுப்பி வையுங்கள் என்றும், அவற்றைச் சேகரித்து கழகத்தின் சார்பில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்தத் தேவையற்ற முறையில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து அதனை அமல்படுத்த வேண்டிய கட்டாயத்தை முன்னிட்டு 18.11.1982 அன்று முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அந்த அறிக்கையில் டிசம்பர் மாதத்தில், தலைநகர் சென்னையில் ஒரு மாநாடு நடத்தப்படுவதை தெரிவித்து ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.

தமிழ்நாட்டில் உள்ள படித்த, உத்தியோகத் திலுள்ள நன்றியுள்ள தமிழர்களுக்கு நமது வேண்டுகோள் என்னவென்றால், பிரமாண்டமான இம்மாநாட்டினை நடத்த நாம் திட்டமிட்டு இறங்கியுள்ள இவ்வேளையில் தாராளமாக பொருளுதவி முதல் தங்களால் ஆன அனைத்து உதவிகளையும் செய்திட முனைப்புடன் முன்வர வேண்டும்! என்று கேட்டுக் கொண்டேன். சென்னை சைதாப்பேட்டையில் வர்த்தக சங்க திருமண மண்டபத்தில் 25.11.1982 அன்று திராவிடர் கழகத்தின் வழக்கறிஞர் வீரமர்த்தினி  -_ சைதை தென்றல் திருமணம் என்னுடைய தலைமையிலும், தி.மு.க பொதுச் செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன்  அவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. விழாவில் நான் மணமக்களை வாழ்த்தி உரையாற்றினேன். விழாவில் தென்சென்னை திராவிடர் கழகத் தலைவர் எஸ்.பி.தட்சிணாமூர்த்தி, தென்சென்னை திராவிடர் கழகத் தோழர்கள் எம்.பி.பாலு மற்றும் பி.சம்பந்தம், திருவேங்கடம் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

27.11.1982 அன்று விடுதலையின் முதல் பக்கத்தில் தமிழக அரசும் மண்டல் குழு பரிந்துரைகளும் என்ற தலைப்பில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தேன். அதில், 25.11.1982 அன்று தமிழ்நாடு பிற்படுத்தப் பட்டோர் அலுவலர் மேம்பாட்டுக் கழகத்தினைத் துவக்கி வைத்து தமிழ்நாடு வருவாய்த் துறை அமைச்சர் திரு.எஸ்.டி.சோமசுந்தரம் அவர்கள் மண்டல் கமிஷன் பரிந்துரையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டிருக்கிறது என்றும் மத்திய அரசு இந்த பரிந்துரையை அமல்படுத்த முன்வர வேண்டும் என்றும் வற்புறுத்தியிருந்தார்.

மண்டல் கமிஷன் 27 சதவீதம் இடஒதுக்கீடு தேவை என்று பரிந்துரை செய்துள்ளது. ஆனால், தமிழ்நாடு அரசு இப்போது 50 சதவீதம் இடஒதுக்கீடு அமல்படுத்தி வருகிறது. எனவே, தமிழ்நாடு அரசின் 50 சதவீதம் இடஒதுக்கீடு  இதன் காரணமாக பாதிக்கப்படக் கூடாது என்று தமிழ்நாடு மத்திய அரசிடம் வலியுறுத்தி யுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு அமைச்சர் அவர்களது இந்தப் பிரகடனம் _ தமிழக அரசின் பிரகடனக் கொள்கை நிலை என்றே நாம் கொள்கிறோம். அப்படி நாம் கருதுவது சரி என்றால், தமிழக அரசின் நிலையை நாம் மனமாரப் பாராட்டி வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டிருந்தேன்.

27.11.1982 அன்று தஞ்சை_வல்லம், பெரியார் நூற்றாண்டு மகளிர் பாலிடெக்னிக்கில் திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை குடும்பங்களின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. வெகுசிறப்பாக நடந்த நிகழ்ச்சியில், விழாவில் அனைவரையும் வரவேற்று அன்றைய கழகப் பொருளாளர் தஞ்சை கா.மா.குப்புசாமி அவர்கள் உரையாற்றினார்.

தமிழர்கள் உலகில் எங்கெங்கோ வாழ்கிறார்கள். அதுவும் மற்றவர்களுக்கு உதவக்கூடிய அளவுக்கு சிறப்புடன் பல நிலைகளில் உயர்ந்து வாழ்கிறார்கள்.

இங்கே சொந்த நாட்டில் உள்ள தமிழர்கள்தான் தாழ்வு மனப்பான்மையுடன் இருக்கிறோம். உலகின் பல்வேறு நாடுகளில் தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கக்கூடிய வாய்ப்பினைப் பெற்றிருக்கிறார்கள். எந்தெந்த நாட்டில் எல்லாம் தமிழர்கள் அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்று ஓர் ஆய்வுகூட நாம் நடத்தலாம்.

அய்யாவின் சிந்தனை எல்லோர்க்கும்தானே அவரின் உழைப்பு அனைவருக்கும்தானே. துக்ளக் ஆசிரியர் சோ என்னிடம் பேட்டி கேட்ட போதுகூட நான் சொன்னேன்; ஒரு கேள்வியின்போது நீங்கள் என்னையும் முஸ்லீம்களையும் முட்டிவிடுகின்றீர்கள் என்று.

கருத்துகளால் வேறு படுகிறோம் என்பதல்ல, ஒவ்வொருவரும் சிந்திக் கின்றோம்; எனவே, இந்தப் பிரச்சினை _ இது கருத்துத் திணிப்பல்ல. நாம் அனைவரும் இன உணர்வுடன் ஒரு குடும்பம் என்ற நிலைபெற வேண்டும். அய்யா _ மனிதாபிமானத்தை வலியுறுத்தினார். நமது இயக்கமே மனிதாபிமான இயக்கம்தான்; எல்லோரையும் நேசிப்பது உண்மையானால் இனமானம், இன உணர்வு பேசுவது முரண்பாடல்லவா? என்று சிலர் கேட்கின்றனர். முரண்பாடாகத்தான் தோணும். ஒரு தெருவில் எல்லோரும் ஒன்றாக இருக்கின்றோம், உண்மைதான். அதற்காக நான் என் வீட்டுக் கதவைச் சாத்தக்கூடாதா? அப்படி சாத்தினால் தப்பா? அல்லது சண்டை என்று அர்த்தமா?

கதவு இருக்கிறது சாத்துகிறேன். எப்ப நான் கதவை சாத்தாமல் இருப்பேன் என்றால் எப்போது கதவே இல்லை என்கிற நிலை வருகிறதோ அப்போது. என் வீட்டிலும் கதவு இருக்கிறது. அதுவரை கதவைச் சாத்துவது அவசியம்தானே! இவ்வாறு குறிப்பிட்டேன்.

05.12.1982 அன்று சென்னை சாலி கிராமத்தில் விடுதலை இல்லத்தைத் திறந்து வைத்து உரையாற்றினேன். நண்பர் கவிஞர் வைர.சிகாமணி இல்லத் திறப்பு விழா வெகுசிறப்பாக நடைபெற்றது.

இயக்கத்திற்கு விடுதலை இல்லம் என்று பெயர் சூட்டியிருப்பதைவிட இன்று இளைஞர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கக்கூடிய குட்டிமணிதான் இந்த இல்லத்திற்கு அடிக்கல் நாட்டினார் என்பதுதான் இந்த இல்லத்தின் சிறப்பு.

தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப் பட்டோரும் ஒன்று சேரவிடாமல் தடுக்கும் சூதுகளையும் சூழ்ச்சிகளையும் முறியடிக்கவும், இரு கரங்களும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கப்பட வேண்டியதை வலியுறுத்தியும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர்-பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு தலைநகர் சென்னையில் 11.12.1982 மற்றும் 12.12.1982 ஆகிய நாட்களில் நடைபெற்றது.

இம்மாநாடு முக்கியத்துவம் வாய்ந்த மாநாடு என்பதை விளக்கி இதில் பிற்படுத்தப்பட்ட _ தாழ்த்தப்பட்ட அரசு ஊழியர்கள் பங்கேற்க வசதியாக 11.12.1982 அன்று அரசு விடுமுறை அளிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில் தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்தது. 10.12.1982 நாளிட்ட விடுதலையில் இதனை வரவேற்று நன்றி தெரிவித்து அறிக்கை எழுதினேன். சென்னை பெரியார் திடலில், 11, 12.12.1982 ஆகிய இரு நாட்களும் அகில இந்திய தாழ்த்தப்பட்டோர் _ பிற்படுத்தப்பட்டோர் உரிமை காப்பு மாநாடு வெகுவிமரிசையாக முதல் நாள் மாநாடு எழுச்சியுடன் துவங்கியது. மகத்தான ஊர்வலமொன்று கடற்கரை சீரணி அரங்கிலிருந்து _ கழக தொழிலாளர் அணிச் செயலாளராக இருந்த வழக்கறிஞர் தி.இராமதாஸ் தலைமையில் புறப்பட்டது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் ஊர்வலத்தில் அணி வகுத்தனர். கழகத்தின் பல்வேறு அணியினரும், ஊழியர்களும் பதாகைகளை ஏந்தி வந்தனர். இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து மாநாட்டில் பங்கேற்ற காட்சியைத்தான் இங்கு காண முடிந்தது. மராட்டியம், ஆந்திரம், மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அசாம், கோவா, கேரளா, உ.பி., டில்லி, பீகார் மாநிலங்களிலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் பங்கேற்றதோடு தமிழ்நாட்டில் தந்தை பெரியார் உருவாக்கிய ஒடுக்கப்பட்டோர் இயக்கம் எப்படி வலிமை பெற்றிருக்கிறது என்பதை நேரிலே கண்டு உணர்ச்சி பெற்று அவர்கள் மாநிலங்களுக்குத் திரும்பியிருக்கிறார்கள். கருஞ்சட்டைப் படையினரும், அரசு ஊழியர்களும் அணிவகுத்து வந்த காட்சியைக் கண்ட வடமாநிலத் தலைவர்கள் மிகவும் வியந்து பாராட்டினர்.

மாநாட்டில் பேசிய சந்திரஜித் யாதவ் அவர்கள் _ இப்படிப்பட்ட ஓர் எழுச்சியை _ பேரணியை இப்போதுதான் நான் முதல்முறையாகப் பார்த்தேன் என்று கூறியபோது, திடல் முழுவதும் நிரம்பியிருந்த மக்கள் இடிமுழக்கம் போல் கரவொலி எழுப்பினர்.

மேனாள் பீகார் முதலமைச்சரும், தாழ்த்தப்பட்டோர் நலக் கமிஷனருமான பாஸ்வான் சாஸ்திரி அவர்கள் உடல் நலமில்லாத நிலையிலும் இரண்டு நாள் மாநாட்டிலும் கலந்துகொண்டார். இந்தப் பிரச்சினைக்கு உயிரே போனாலும் பரவாயில்லை என்று என்னிடத்தில் அவர் கூறினார். இன்றைக்கு இந்தியாவில் தாழ்த்தப்பட்டோர் _ பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினைகளுக்கு இருக்கும் ஒரே தீர்வு பெரியார் காட்டிய வழிதான் ஒரே வழி என்று அவர் பிரகடனப்படுத்தினார்.

அடுத்துப் பேசிய, தேசியப் பிற்படுத்தப்பட்டோர் ஒன்றியத் தலைவரும் முன்னாள் டில்லி முதலமைச்சரும் மாநாட்டுத்  தலைவரும் பிரம் பிரகாஷ் பேசுகையில், காந்தியை இந்த நாட்டின் தந்தை என்று சொன்னார்கள். நான் சொல்கிறேன்; தாழ்த்தப்பட்டோர் - பிற்படுத்தப்பட்டோர் இயக்கத்தின் தந்தை, தந்தை பெரியார்; அவர்தான் இந்தியாவின் மார்க்ஸ்; அவர்தான் இந்த நாட்டில் சுரண்டப்படும் மக்களுக்கான தத்துவ போதகர் என்று பூரிப்போடும் உணர்ச்சியோடும் பிரகடனப்படுத்தினார்.

ஜனதா ஆட்சிக் காலத்தில் தந்தை பெரியார் தபால்தலை வெளியிடுவதற்குக் காரணமாக இருந்த, அப்போதைய மத்திய தபால்துறை அமைச்சர் பிரிஜ்லால்வர்மா பங்கேற்று உயர்ஜாதிக்காரர்களின் மிரட்டல்களை முறியடித்துதான் தபால்தலைக் கொண்டு வந்ததை பெருமையோடு நினைவு கூர்ந்தார்.

மண்டல் கமிஷன் உறுப்பினர் சுப்ரமண்யம் பேசுகையில், சட்டரீதியாக அமைக்கப்பட்ட இந்தக் கமிஷனின் பரிந்துரையை அமல் செய்ய வேண்டியதுதான் சட்டரீதியான ஓர் அரசின் கடமை என்பதை எடுத்துக்காட்டி, அதற்குப் பெரியாரின் மண்தான் வழிநடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து நாடாளுமன்ற தி.மு.க. துணைத் தலைவர் சி.டி.தண்டபாணி பேசுகையில், இதுபோன்ற மாநாடுகள் தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப் பட்டோரும் சூத்திரர்கள்; சூத்திரர்கள் ஒன்றுபட்டுப் போராட வேண்டும் என்பதுதான் தந்தை பெரியார் வலியுறுத்திய கருத்து என்பதை தெளிவுப்படுத்தினார்.

அடுத்துப் பேசிய பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்ப்பூரிதாகூர் ஆற்றிய ஆங்கில உரையைக் கேட்டபோது, தந்தை பெரியாரின் கொள்கை வீச்சுகள் இந்தியா முழுமைக்கும் சக்தியோடு ஊடுருவி நிற்கிறது என்ற உண்மையை மேலும் உறுதிப்படுத்துவதாகவே இருந்தது.

இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய தலைவர் பெரியார் என்று குறிப்பிட்ட அவர் பார்ப்பனர்கள் முதலமைச்சர்களாக இருக்கும் வரை இந்த நாட்டில் இடஒதுக்கீடு கிடைக்காது. பார்ப்பனர் ஒருவர் பிரதமராக இருக்கும்வரை மத்திய அரசில் இடஒதுக்கீடு கொண்டுவர மாட்டார்கள்; இன்றைக்கு ஒடுக்கப் பட்டோருக்கு மிகப்பெரிய எதிரி பார்ப்பனீயம் தான்; எனவே பார்ப்பனீயத்தை ஒழித்துக்கட்டத் தயாராவீர் என அவர் அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் மாநிலத் தலைவர் அப்துல் சமது எம்.பி. தமது அழகிய தமிழால் சிறப்பான உரையை நிகழ்த்தினார்.

தொடர்ந்து சந்திரஜித் யாதவ், வெங்கலக் குரலில் ஆற்றிய எழுச்சி முழக்கம், கூட்டத்தைக் கவர்ந்து இழுத்தது. பெரியார் கருத்துக்கள்தான் எங்கள் வடமாநிலங்களுக்குத் தேவை என்று குறிப்பிட்டார்.

மாநாட்டில் பல்வேறு தீர்மானங்களை முன்மொழியுமாறு மாநாட்டுத் தலைவர் பிரேம்பிரகாஷ் கேட்டுக்கொள்ள, நான் மாநாட்டுத் தீர்மானங்களை முன்மொழிந்தேன். நான் தமிழிலும், ஆங்கிலத்திலும் மாறி மாறி எழுச்சி உரையாற்றினேன்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் ராம்விலாஸ் பஸ்வான் தீர்மானத்தை வழிமொழிந்து சிங்கமாக கர்ஜித்தார். தாழ்த்தப்பட்டோரும் பிற்படுத்தப்பட்டோரும் ஒன்று சேர்ந்துவிட்டால் இந்த நாட்டில் பார்ப்பன ஆதிக்கத்தை ஆட்சி அதிகாரத்திலிருந்து விரட்டி அடிக்க முடியும் என்று அவர் அறைகூவல் விடுத்தார்.

மாநிலங்களவை உறுப்பினர் அஜித்குமார் அவர்களும், ஆந்திர மாநில இ.காங்கிரஸ் மேலவை கொறடா சக்கரபாணி அவர்களும் தீர்மானத்தை வழிமொழிந்து உரையாற்றினர்.

இறுதியில் நிறைவு உரையாக தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார். வடமாநிலங்களில் பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் குரல் கொடுக்க நாங்கள் நிச்சயம் வருவோம் என்று உறுதியளித்தார்.

வர இருக்கும் தேர்தல்களில், மண்டல் குழு பரிந்துரைகளை தேர்தல் அறிக்கை மூலமாக ஆதரிக்கும் கட்சிகளுக்கே ஓட்டளிக்க வேண்டும் என்ற முடிவை ஒடுக்கப்பட்ட சமுதாயம் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசிடம் வாதாடி போதுமான கால அவகாசம் கொடுத்தபிறகும், போராட்டம் நடக்க வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் போராட்ட அணியில் தி.மு.கழகம் நிற்கும் என்றும் கலைஞர் பலத்த கரவொலிக்கிடையே தெரிவித்தார்.

தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஒன்றிய செயலாளர் ஜெய்பால்சிங் கஷ்யப் நன்றி தெரிவித்து, உணர்ச்சி உரை நிகழ்த்தினார்.

இந்தியாவில் உள்ள எல்லா ஒடுக்கப்பட்ட சமுதாயம் தந்தை பெரியார் கொள்கை வழிக்கு வரத் துடிக்கிறது. தந்தை பெரியார் கொள்கைதான் இந்த நாட்டில் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கான ஒரே வழி; பெரியாரின் தத்துவங்கள் _ பார்ப்பனர்களின் கட்டுப்பாடான இருட்டடிப்புகளை மீறி நாடெங்கும் ஒளிவீச ஆரம்பித்துவிட்டது என்ற உண்மையை _ நாட்டுக்கு இந்த மாநாடு உணர்த்திவிட்டது. தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் ஒற்றுமைக்கு வழிகோலும் மாநாடாகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தன்னம்பிக்கையையும் உணர்ச்சியையும் ஊட்டும் மாநாடாகவும் இந்த மாநாடு அமைந்தது மிகவும் குறிப்பிடத்தக்க சிறப்பாகும்.

19.12.1982 அன்று திராவிடர் இயக்கத்தின் இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள் மணிவிழா நிகழ்ச்சி பெரியார் திடலில் எழுச்சியுடன் நடைபெற்றது. திடல் முழுவதும் மக்கள் கடல் வழிகிறது என்று சொல்லக்கூடிய அளவிலே இருந்தது. 60ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பேராசிரியர் அவர்கள்,  தந்தை பெரியார் _ அம்மா, பேரறிஞர் அண்ணா ஆகியோர் நினைவிடங்களில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். கலைஞர், பேராசிரியர் மற்றும் தி.மு.க. தோழர்கள் பெரியார் திடலுக்கு வருகை தந்தனர். நான் அவர்கள் அனைவரையும் வரவேற்று தந்தை பெரியார் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களை சுற்றிக் காண்பித்தேன். பொதுச் செயலாளர் பேராசிரியர் அவர்கள் எனக்கு, சால்வை போர்த்தி பகுத்தறிவாளர் டைரி, பேனா வழங்கினார்.

அப்பொழுது என்னுடன் விடுதலை நிர்வாகி என்.எஸ்.சம்பந்தம், வடஆற்காடு மாவட்டக் கழக செயலாளர் ஏ.டி.கோபால் மற்றும் பல கழகத் தோழர்கள் உடனிருந்தார். மணிவிழாவில் ஏற்புரை ஆற்றிய பேராசிரியர் க.அன்பழகன் அவர்கள், தமிழர் சமுதாய உணர்வுகளைக் காப்பதே என் வாழ்நாள் லட்சியம் என்று கூறினார். மேலும் பேசுகையில், எனக்கு வழிகாட்டுவதற்கு இனி வேறு ஒருவன் வரமுடியாது. எனக்கு அறிவூட்டுவதற்கு இன்னொரு ஆசான் தமிழகத்தில் அல்ல; உலகத்திலேயே பிறக்க முடியாது. எனக்கு நெறி கற்றுத் தருவதற்கும் ஓர் அரசியல்வாதி கிடையாது. தந்தை பெரியாரிடத்தில் பயிற்சி பெற்று _ தன்மானம் பெற்றேன். மானமுள்ள மனிதனாக ஆனேன். அண்ணாவிடத்தில் அரசியல் தொண்டனாக ஆனேன். வள்ளுவரிடத்தில் திருக்குறள் பயின்றேன். எனது உள்ளத்தில் ஓரளவுக்கு தெளிவுபெற்றேன் என்று குறிப்பிட்டார்கள்.

விழாவில் நான் உரையாற்றியபோது, திராவிட இயக்கத்தின் பேராசிரியர் அவர்களுக்கு மணிவிழா! தமிழ் இனம் தலைதாழக் கூடாது என்பதற்காகவே அல்லும் பகலும் பாடுபடும் நமது பேராசிரியர் அவர்களது பணி, இன்றைய தமிழ்நாட்டிற்குத் தேவையானதொரு முக்கியப் பணியாகும்.

அய்யாவின் அறிவியக்கத்தில் சேர்ந்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்த நாள் முதல் அண்ணா கண்ட இயக்கத்தின் பொதுச்செயலாளராகப் பணியாற்றும் இந்நாள் வரை அவரது உழைப்பு, தமிழினத்திற்கு இனமானம் உண்டாக்குவதற்கே என்றால் அது மிகையல்ல!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், மாணவராக பயின்று கொண்டிருந்தபோதே பல மாணவ இளைஞர்களை அய்யாவின் சுயமரியாதை இயக்கத்திற்கு ஈர்க்கும் பெரும்பணியை இடையறாது செய்தவர்!

கழகப் பிரச்சாரங்களுக்காக வெளியூர்களுக்கு செல்வதற்கு அவர்கள் தயங்கியதே கிடையாது. இளந்தாடி நெடுஞ்செழியன், டார்பிடோ ஏ.பி.ஜனார்தனம் ஆகியோர் இவருடன் பல மேடைகளில் ஒன்றாகத் தோன்றி பேசிடும் இளஞ்சிங்கக் குட்டிகளாவார்கள்.

நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது எனது ஆசிரியர் ஆ.திராவிடமணி பி.ஏ., அவர்கள் கடலூரில் நடக்கும் பொதுக் கூட்டங்களை இவரையும் இளந்தாடி நெடுஞ்செழியனையும் அழைத்து நடத்துவார்; அப்போது இவர்களை நேரில் சந்திக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றவன். பிறகு, ஈரோட்டில் அய்யா அவர்கள் நடத்திய மாணவர் பயிற்சி முகாம் இவைகளின்போது அங்கேயும் கலந்துகொண்டபோதும் கண்டு மகிழவும் அவர்களது சொல்லாற்றல், சிந்தனைத் தெளிவு கண்டு மகிழவுமான வாய்ப்புகள் அநேகம் உண்டு.

பேராசிரியர் வாதங்கள் எப்போதும் எவராலும் மறுக்கப்படாத வகையில் தர்க்கரீதியான வாதங்களாகவே அமைந்து இருக்கும்! அது காரணமாகவே பல்வேறு இளைஞர்கள் விவரம் தெரிந்த தமிழ் மக்கள் இவர்களிடம் மிகுந்த ஈடுபாடு கொண்டு இவர்களை பல்கலைக்கழக மாணவப் பருவ வாழ்க்கையில் மலர்தேடும் வண்டுகள் போல மொய்க்க ஆரம்பித்தனர்.

அவரது நுண்ணறிவு, அவரது ஆற்றல் இன்றும் என்றும் தமிழினத்திற்குக் காவல் அரணாகக் கிடைத்துக் கொண்டே இருக்க வேண்டும்.

அவர் மணிவிழா நம் இனவிழா! அவர் வாழ்க! என்று பல்வேறு வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்காட்டி மணிவிழா உரையை நிறைவு செய்தேன். ஏராளமான தி.மு.க. தோழர்களும், தி.க. தோழர்களும், பொதுமக்களும் பெருமளவில் கூடியிருந்தனர்.

 

(நினைவுகள் நீளும்)

- உண்மை இதழ், 16-30.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக