பக்கங்கள்

வெள்ளி, 10 ஆகஸ்ட், 2018

தாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த நீதிக்கட்சி ஆட்சி வெளியிட்ட ஆணை

ஜூலை 16_-31 (2018) உண்மை இதழில், உங்களுக்குத் தெரியுமா பகுதியில்,

“தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவரை முதன்முதலில் அமைச்சராக்கியதும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல, தனியாக ஆணைப் பிறப்பித்ததும் திராவிடக் கட்சியான  நீதிக்கட்சிதான் என்பது உங்களுக்குத் தெரியுமா?’’

என்ற செய்தி வெளியிடப்பட்டதைப் படித்த வாசகர்கள் சிலர், முதன்முதலில் எந்த தாழ்த்தப்பட்டவரை நீதிக்கட்சி ஆட்சி அமைச்சராக்கியது? என்றும்; தாழ்த்தப்பட்டோர் பொதுவீதிகளில் செல்ல பிறப்பிக்கப்பட்ட ஆணை விவரமும் தெரிவியுங்கள் என்று கேட்டிருந்தார்கள்.

எனவே, கீழ்க்கண்டவற்றை எல்லோரும் தெரிந்துகொள்ளும் வகையில் தெரிவித்துக்கொள்கின்றோம்.   - ஆசிரியர்

 1.                    நீதிக்கட்சி ஆட்சியில் முதன்முதலாக அமைச்சராக்கப்பட்டவர் எம்.சி.இராஜா அவர்கள் அப்போது முதலமைச்சர் நீதிக்கட்சி தலைவர் கே.வி.ரெட்டிநாயுடு

(1-4-1937).

2.                     தாழ்த்தப்பட்டோர் பொது இடங்களைப் பயன்படுத்த தடையில்லை என்று பனகல் அரசர் நீதிக்கட்சி ஆட்சியில் அரசாணை வெளியிடப்பட்டு மாநிலத்திலுள்ள உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாகாக்களுக்கு அனுப்பப்பட்டது.

சென்னை அரசாங்கம்

உள்ளூர் அரசாங்க இலாகா உள்ளூர் மற்றும் மாநகராட்சி

அரசாங்க உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் பொதுச் சாலைகள், கிணறுகள் பற்றியது.

தீர்மானத்தை முன்மொழிந்தவர் திரு. ஆர். சீனிவாசன் (இரட்டைமலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றி, அதை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(ணீ) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்தக் கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும், அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(தீ) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாக நிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாகாக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.I.மூர்,

அரசாங்கச் செயலாளர்.

ஜில்லா போர்டு, தாலுகா போர்டு, நகராட்சிகள்,

கார்ப்பரேஷன், சென்னை, பஞ்சாயத்து, நகராட்சி அதிகாரிகள்,

தொழில் கமிஷனர், சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள எல்லா இலாகாக்கள்,

அரசாங்க செய்தி ஸ்தாபனம். இவைகளுக்கெல்லாம் மேற்கண்ட உத்தரவுகள் அனுப்பப்பட்டது.

சட்டக்குழு அலுவலகம்

25.6.24

- உண்மை இதழ், 1-15.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக