- திராவிடப் புரட்சி
பதிப்பக உரிமையாளரும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமூக ஆர்வலர் என்ற பெயரில் விளம்பரப்படுத்தப்பட்டவருமான பத்ரி சேஷாத்திரி, “The angst of the Tamil bramin: Live and let live” : (தமிழ்ப் பார்ப்பனரின் சோகம் : வாழு வாழவிடு) என்ற தலைப்பில் தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழில் 08.12.2014 அன்று ஒரு கட்டுரையை எழுதியுள்ளார். எழுதியுள்ளார் என்று சொல்லுவதை விட எழுத்தில் புலம்பியுள்ளார்.
இந்தப் புலம்பல்களை பத்ரி சேஷாத்திரி என்ற தனி மனிதரின் புலம்பலாக சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்டுரையின் தலைப்பு சொல்லுவதைப்போல இதை தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்தப் பார்ப்பனர்களின் புலம்பல்களாகக் கருதி, அதே கோணத்தில் புலம்பல்களை அணுகி, அது தொடர்பாக ஆராய்ந்து, இந்தப் புலம்பல்களில் நியாயமுள்ளதா? என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது.
ஆண்டவர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்படும் சூழலில், ஆண்டவர்கள் வரலாறு என்றால், கடவுள்கள் மற்றும் மன்னர்களின் வரலாறு மட்டுமே சொல்லித் தரப்பட்ட புதிய தலைமுறைக்கு, தங்கள் முன்னோரின் அடிமை வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தந்தை பெரியார் உள்ளிட்ட திராவிடர் இயக்கத் தலைவர்கள் மானத்தையும், அறிவையும் ஊட்டியதன் விளைவாக, இன்றைய பார்ப்பனரல்லாத தாத்தாக்களுக்கு ஓரளவிற்கு அடிமைப்பட்ட வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
அதே சமயத்தில், பதிப்பகம் நடத்தும் பத்ரி சேஷாத்திரி போன்றோருக்கு அடிமைப்படுத்திய வரலாறு தெரியாமல் இருக்காது என்றாலும், பத்ரி சேஷாத்திரி போன்றோரின் புலம்பல்கள் குறித்து நாம் ஆராய்ந்து விளக்கம் தரும்போது, பார்ப்பனரல்லாத புதிய தலைமுறைக்கும் சில செய்திகள் சென்று சேரும் வாய்ப்பிருக்கிறது.
பார்ப்பனர்களின் சார்பாகப் புலம்பியுள்ள பத்ரி சேஷாத்திரியின் புலம்பல்கள் கீழ்வருமாறு.:
1. தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருந்தாலும், எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள். அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை. 2. சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு தமிழ் மற்றும் தெலுங்குப் பார்ப்பனர்கள் அரசாங்கத்தில் பெருமளவில் இருந்தனர். ஆனால், நீதிக்கட்சியும், திராவிடர் இயக்கங்களும் கொண்டுவந்த இடஒதுக்கீடு முறையால், மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, அரசு வேலைகள் ஆகியவற்றில் முழுமையாக பார்ப்பனர்கள் விலக்கப்பட்டு விட்டார்கள். ஒரு காலத்தில் கணிசமான அளவில் கல்வி நிலையங்களில் ஆசிரியர்களாக இருந்தனர், தற்போது மிகவும் குறைந்துவிட்டனர். தமிழகத்தில் சரியான வாய்ப்பு இல்லாததால் பாம்பே, டில்லி போன்ற நகரங்களுக்கு வேலை தேடிச் சென்றனர். 3. அரசியல் அதிகாரத்தில் இருந்து முழுமையாக பார்ப்பனர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள். பார்ப்பனர்கள் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும், எல்லாவற்றிற்கும் பார்ப்பன சதி என்று குற்றம் சாட்டுகின்றன திராவிடக் கட்சிகள். தமிழ்நாட்டில் பார்ப்பன எதிர்ப்பு என்பதே அரசியல். மோடி பார்ப்பனியவாதி, ஜெயலலிதா பார்ப்பனியவாதி, மத்திய அரசு சமஸ்கிருதத்தையோ இந்தியையோ வளர்க்க முயன்றால் அதுவும் பார்ப்பனியம். விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால் அதையும் பார்ப்பனியம் என்கிறார்கள்.
4. தமிழ்த் திரைப்படங்கள்கூட பார்ப்பனர்--களைத் தவறாகச் சித்தரிப்பது வழமையான ஒன்று. அண்மையில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தின் கருவாக இருப்பது, பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி பார்ப்பன சதியால் தடுக்கப்படுகிறது என்பதே.
5. கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்களால் பார்ப்பனரல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது, மற்ற சலுகைகள் மறுக்கப்பட்டது என்று சொல்லப்படும் கூற்றினால், இப்போது நடக்கும் எல்லா-வற்றிற்கும் ஒப்புதல் வழங்கியது போல ஆகிவிட்டது. இந்தக் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் தேவையில்லை, எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை என்பதே நிலை.
6. அரசியலில் ஒதுக்கப்படும், சமூகத்தால் வெறுக்கப்படும் தமிழ்ப் பார்ப்பனர்கள், தமிழக சமூகவெளியில் பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கும் என்ன செய்வது? இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சமணர்கள் எப்படி தங்கள் நமபிக்கைகளை, சடங்குகளை, சம்பிரதாயங்களை, வழக்கங்களை, மொழியைப் பாதுகாக்கிறார்-களோ அதுபோன்ற நிலை தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களுக்கும் வேண்டும். மொத்தத்தில் தமிழ்நாடு பார்ப்பனர்கள் மீதுள்ள அரசியல் வெறுப்பை மாற்றிக்கொள்ள வேண்டும்.
இவைதான் அந்தப் புலம்பல்கள். இது-போன்ற புலம்பல்கள் புதிதல்ல வரலாற்றைத் தேடிப் படிப்பவர்களுக்கு. இஸ்லாமியர்களால் தங்கள் ஆதிக்கம் குறைக்கப்பட்ட போது ஒலித்த பார்ப்பனர்களின் புலம்பல் ஒலி வீர கம்பராய சரிதத்தில் கேட்கிறது. தமிழை சென்னைப் பல்கலைக்கழகத்தில் போதிக்கவேண்டும் என்று தமிழுணர்வாளர்கள் குரல் எழுப்பியபோது, வி.எஸ். சீனிவாச சாஸ்திரியின் புலம்பல்கள் சென்னை சமஸ்கிருதக் கல்லூரியில் ஒலித்தது. திராவிடர் இயக்கத்தின் செயல்பாடுகளால் பார்ப்பனரல்லாதோரும் உயரத் தொடங்கிய-போது, ஹிந்துவின் புலம்பல் குரல் ஒலித்தது. திராவிட இயக்கம் வலுவாக ஆட்சியில் அமர்ந்த பிறகு, சோவின் புலம்பல் குரல் ஒலித்தது வெறுக்கத்தக்கதா பிராமணியம் என்று. தமிழகப் பிராமணர்கள் யூதர்களைப் போல அடக்கு-முறைகளுக்கு ஆளாகியிருக்கிறார்கள், அவர்களால் தமிழகத்தில் இயல்பாக வசிக்க முடியவில்லை என்று அசோகமித்திரனின் புலம்பல் ஒலி ஒலித்தது. ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டுதலின்படி இயங்கும் மத்திய அரசின் செயல்பாடுகளைப் பார்த்து பார்ப்பனியம் என்று தமிழக மக்கள் பேசத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது பத்ரி சேஷாத்திரியின் புலம்பல் ஒலி வந்திருக்கிறது.
புலம்பல்களைப் படிக்கும் பார்ப்பனர்களுக்கு தங்கள் மனசாட்சியின் புலம்பல்களாகத் தோன்றும். வரலாற்றை அறியாத பார்ப்பனரல்லாதோருக்கோ அடக் கொடுமையே! என்ன பரிதாபம்? என்று தோன்றும். ஆனால் இந்தப் புலம்பல்களில் நியாயம் இருக்கிறதா? உண்மை இருக்கிறதா? என்றால் அதுதான் கொஞ்சமும் இல்லை.
உண்மைக்குப் புறம்பாகவா புலம்பியிருப்பார் ஊடகத் துறையில் இருக்கும் சமூக ஆர்வலரான பத்ரி சேஷாத்திரி? என்று பலருக்குள்ளும் ஒரு கேள்வி எழும். அதற்கான விடைகளைத்தான் நாம் இப்போது தெரிந்துகொள்ளப் போகிறோம்.
புலம்பலின் தொடக்கத்தில் உள்ள கர்வத்தைக் கவனியுங்கள். தொன்மையான சமூகங்களின் வரிசையில் பார்ப்பனர்கள் உச்சியில் இருக்கிறார்களாம். தாங்கள் உச்சியில் இருக்கிறோம் என்ற எண்ணம்தானே எல்லாச் சிக்கல்களுக்கும் காரணம் என்பதை இன்றும் சிந்திக்க மறுக்கும் மனநிலை வெளிப்படுகிறது இதில். எதார்த்தத்தில் நாடு முழுவதும் பெருமளவில் பார்ப்பனர்கள் அதிகாரமில்லாமல் இருக்கிறார்கள் என்பது உண்மையா? அதிலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலை என்பது உண்மையா?
கடந்த காங்கிரஸ் ஆட்சியிலும் தற்போதைய பி.ஜே.பி ஆட்சியிலும் மத்திய அமைச்சர்களாக இருந்தவர்கள் மற்றும் இருப்பவர்களில் எத்தனை பேர் பார்ப்பனர்கள்? மூன்றரை சதவிகிதம் இருக்கக்கூடிய பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்தவர்கள்தானே சதவிகித அடிப்படையில் மத்திய அமைச்சரவையில் பெருமளவில் பங்குபெறும் வாய்ப்பைப் பெற்றிருக்கின்றனர். இந்தியாவின் ஜனாதிபதியே ஒரு பார்ப்பனர்-தானே. அமைச்சரவை மட்டுமா? அதிகார வர்க்கத்தில் உள்ள அய்.ஏ.எஸ். மற்றும் அய்.பி.எஸ் உட்பட மத்திய அரசுப் பணிகளில் பெருமளவில் அதிகாரம் செலுத்துவது பார்ப்பனர்கள்தானே. கடந்த தி.மு.க. ஆட்சியில், மாநில அரசின் செயலாளர்களாக இருந்தவர்கள், காவல் துறை உயர் அதிகாரிகளாக இருந்தவர்கள் பார்ப்பனர்கள்-தானே.
இன்றைய அ.தி.மு.க. ஆட்சியில் தலைமைச் செயலகத்தின் அதிகார மய்யமாக இருப்பவர்கள் பார்ப்பனர்கள்தானே. அ.தி.மு.க. என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருப்பவரே தன்னைப் பாப்பாத்தி என்று சட்டமன்றத்திலேயே அறிவித்துக்கொண்ட ஒரு பார்ப்பனர்தானே. உண்மை இவ்வாறு இருக்க, அதிகாரம் இல்லை என்று போலியாகப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? இட ஒதுக்கீடு முறையால் பார்ப்பனர்களுக்குக் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை என்பது போன்ற இந்தப் புலம்பல் உண்மையா? இதை நாம் கொஞ்சம் விரிவாகப் பார்க்க வேண்டியிருக்கிறது.
- (தொடரும்)
பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -2
இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு அநீதியா?
மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப் படிப்பவர்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆங்கில மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லாத நிலையில் ஏன் அப்படி ஒரு நிலை இருந்தது? யாரால் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
சமஸ்கிருத மொழி தெரியாத பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பறிக்கும் சதி இதில் அப்பட்டமாகத் தெரிகிறதா இல்லையா?. ஆங்கிலேயர் ஆண்ட போதே இந்த நிலை என்பதைப் பார்க்கும் போது, ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? சிறிதளவு ஆட்சி அதிகாரம் பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக் கட்சியின் கைகளுக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்கி, அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பளித்தார்கள். இது தவறா? இதனால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அதிக இடம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வித்வான் தேர்வுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது. சமஸ்கிருத அறிவு இல்லாத ஒருவரை திராவிட மொழிப் புலமை இருப்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்கள். பல்கலைக்கழகத் திட்டப்படி, இரண்டு திராவிட மொழிகளைத் தெரிவு செய்து படிக்கலாம் என்ற விதி இருந்தும், ஒரு திராவிட மொழியும் சமஸ்கிருதமும் சேர்த்துப் படிக்க மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திராவிட மொழிப் படிப்பைத் தெரிவு செய்த குற்றத்துக்காக திராவிட மாணவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையெல்லாம் மாறி பார்ப்பனரல்லாதவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது திராவிடர்களின் இயக்கமான நீதிக் கட்சி. இதில் என்ன தவறு இருக்கிறது? மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டுமே படித்து அறிவு பெற அதிகம் வாய்ப்பிருந்த நிலை மாறிவிட்டது குறித்துப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் புலம்பியிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. எனவே, பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில ஆதாரங்களை அட்டவணை 1இல் காணலாம். இதுதான் 1901ஆம் ஆண்டின் நிலை. இந்நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தது நீதிக்கட்சி. கல்வியில் இந்த நிலை என்றால், வேலைவாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரம் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளது.
சுமார் மூன்றரை சதவிகிதம் இருந்த பார்ப் பனர்கள், கல்வியையும், அரசுப் பணிகளையும் மொத்தக் குத்தகை எடுத்தது போல இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பை திராவிடர் இயக்கமாம் ஜஸ்டிஸ் கட்சி எப்படி வழங்கியது என்பதற்குச் சான்று, ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டுவந்து இருக்கிறார்கள். 5 வயது முதல் 12வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் பெற்றோருக்குத் தண்டனை என்று சட்டமும் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100க்கு 99 பேர் பார்ப்பனர் அல்லாதோர் என்று குடிஅரசில் (26.10.1926) செய்தி வந்துள்ளது. மேற்கண்ட செய்தி பல தகவல்களை நமக்குத் தருகிறது. இன்றைக்கு வரலாறு தெரியாமல் திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் பார்ப்பனரல்லாத இளைய தலைமுறை யின் கேள்விக்குமான பதிலும் இதில் அடங்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிப் போய் வேலை செய்யும் நிலை வந்துவிட்டதே, இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்கள் தானே என்று புலம்புகிறார் பத்ரி சேஷாத்திரி. இது உண்மையா?
இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர் மனியின் கை ஓங்கியிருந்த போது, ஜெர்மனி தான் வெல்லும் என்ற நிலை இருந்தபோது, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றார்கள் என்பதுதானே வரலாற்றில் பதிவாகி யிருக்கும் செய்தி. ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி திராவிட இயக்கமா வலியுறுத்தியது?
சுயநலம், சந்தர்ப்பவாதம் நிரம்பிய பார்ப் பனர்கள் தங்கள் வசதிக்காக, உயர்வுக்காக இடம் மாறிச் சென்று பிழைப்பது இன்று நேற்றா நடக் கிறது? இந்தியா முழுவதும் பார்ப்பனர்கள் வசிப் பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பிழைப் பதற்காக இடம் பெயரும் அவர்களின் இயல்பான குணத்தை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இடப் பெயர்வை ஏதோ எழுபதுகளில்தான் முதன்முதலில் நடந்தது போல நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமா?
பார்ப்பனர்களைத் தவிர்த்து வேறு ஜாதியைச் சேர்ந்த யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் பணிபுரியாமலா இருக்கிறார்கள்?
பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்கவா இடம் பெயர்ந்து சென்றனர்? இல்லையே. தங்கள் வசதிக்காகச் சென்றனர்.
பத்ரி சேஷாத்திரி மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டுள்ள பலருக்குமான கேள்விகள் பின்வருமாறு :
- மாதச் சம்பளம் வாங்காத பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
- மாதச் சம்பளம் வாங்காத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
- தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
- தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
- ஏசி அறையில் வேலை பார்க்கும் பார்ப்பனர் கள் எத்தனை சதவிகிதம்?
- ஏசி அறையில் வேலை பார்க்கும் மற்ற சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
- உடல் உழைப்பில் ஈடுபடும் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
- உடல் உழைப்பில் ஈடுபடும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
- மூட்டை தூக்கியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல கூலித் தொழில் செய்யும் பார்ப்பனர்களை எங்காவது கண்டதுண்டா?
இவற்றுக்குப் பதில் சொல்ல முடியுமா?
இவற்றிற்கான பதில்களில் அடங்கியிருக்கிறது புலம்பல்களில் உள்ள நியாயமற்ற தன்மை. நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் போல பாரப்பனரல்லாதவர்கள் கேள்வி கள் கேட்டால், தலை குனிந்து நிற்க வேண்டி யிருக்கும் பார்ப்பனர்கள்.
வண்டி இழுக்காமல், வயலில் வேலை செய்யாமல், கல் உடைக்காமல், மண் சுமக்காமல், சிரைக்காமல், தைக்காமல், லாரி ஓட்டாமல், தெருப் பெருக்காமல், மலம் அல்லாமல், மரம் ஏறாமல், மீன் பிடிக்காமல், விறகு வெட்டாமல், மூட்டை தூக்காமல், அப்படி இல்லாமல், இப்படி இல்லாமல், மொத்தத்தில் உடல் நோவாமல், அழுக்குப் படியாமல், இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாமர்த்தியம் உள்ள பார்ப்பனர்கள், முட்டி மோதி முன்னேற முயற்சிக்கும் மற்ற ஜாதி மக்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இடஒதுக்கீடு என்பது போடப்படும் பிச்சை அல்ல, பெறப்படும் உரிமை. இடஒதுக்கீடு என்ற முறை இல்லையென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் குற்றங்கள் பெருகும், சட்டம் ஒழுங்கு சீர் கெடும். ஒரு நாள் பிரச்சினைகள் முற்றும், புரட்சி வெடிக்கும். புரட்சி வெடித்தால், சுரண்டிக் கொழுப்பவர்களின் தலைகள் கொய்து எறியப்படும், ஆதிக்கம் புரிபவர்கள் அழித்தொழிக்கப்-படுவார்கள். நாடே சிதறுண்டு போகும்.
இது வெறும் கருத்தல்ல, இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர்களுக்கான எச்சரிக்கை! மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க முயன்றால், அது பார்ப்பனர்களின் சதியா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. பார்ப்பனர்களின் சமஸ்கிருதத் திணிப்பு குறித்து தனியாக நீண்டதொரு கட்டுரையே எழுதக் கூடிய அளவிற்கு வரலாற்றுச் செய்திகளும் ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கும் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை, அந்த மொழிக்குத் தொடர்பே இல்லாத திராவிட மொழியான தமிழ் மொழியைப் பேசும் மக்கள் மீது திணித்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?
சமஸ்கிருதம் சீனர்களின் மொழியென்றால், அதைச் சீனர்களின் சதி என்றழைக்கலாம், அது பார்ப்பனர்களின் மொழி என்பதால், அதைப் பார்ப்பனர்களின் சதி என்றுதானே சொல்லு வார்கள். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பார்களா? அப்படித் திணிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? எனவே அதைப் பார்ப்பனர்களின் சதி என்று கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.
சமஸ் கிருதம் பார்ப்பனர்களின் மொழியல்ல, அது இந்தியர்களின் மொழி, கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்லி பத்ரி சேஷாத்திரி தப்பிக்க முடியாது. காரணம், கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போல தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நிலை வேண்டும் என்று விருப்பத்தைத் தெரிவித்துள் ளார். உங்கள் மொழியை உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், உங்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதானே சொல்லுகிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது?
- திராவிடப்புரட்சி
பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -3
விடுதலைப்புலிகள் : பார்ப்பனர்களின் நிலைப்பாடு என்ன?
விடுதலைப் புலிகளுக்கு எதிராக காங்கிரசோ பி.ஜே.பி.யோ இருந்தால், அதுவும் பார்ப்பனியமா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. நாம் இந்தியா முழுவதுமுள்ள பார்ப்பனர்களின் நிலை குறித்து ஆராய வேண்டாம், நாமறிந்த தமிழகப் பார்ப்பனர்களின் நிலைப்பாடு குறித்து கொஞ்சம் பார்ப்போம். சுப்பிரமணியன் சாமி, மணிசங்கர் அய்யர், ஜெயலலிதா ஆகிய மூவரும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதிகள்.
விடுதலைப் புலிகள் விஷயத்தில் இவர்களின் நிலைப்பாடு என்ன? துக்ளக், ஹிந்து, தினமலர், தினமணி இவை பார்ப்பனர்களால் நடத்தப்படும் பத்திரிகைகள். விடுதலைப் புலிகள் விஷயத்தில் இதன் முதலாளிகளின் நிலைப்பாடு என்ன? விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அல்லது தமிழீழத்திற்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிகளைச் சேர்ந்த பிரமுகர்களும் கருத்தை வெளியிட்டிருக்-கிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த எந்தப் பார்ப்பனச் சமூகப் பிரமுகராவது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரித்தோ அல்லது தனித் தமிழீழத்தை ஆதரித்தோ இதுவரைப் பேசியதுண்டா? தமிழ்நாட்டில் உள்ள பார்ப்பனர்கள் இந்த விஷயத்தில் எந்தவிதமான கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பது அவர்களோடு பழகும் அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் பார்ப்பனர்களின் நிலைப்பாட்டைப் பாராட்டி புகழவா செய்வார்கள் தமிழீழ ஆதரவாளர்கள்?
அண்மையில் வெளியான ஜீவா என்ற திரைப்படத்தின் கருவாக இருப்பது பார்ப்பனர் அல்லாத கிரிக்கெட் விளையாட்டு வீரர்களின் வளர்ச்சி பார்ப்பன சதியால் தடுக்கப்படுகிறது என்பதே என்று வருத்தப்பட்டிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. வெங்கட்ராமன், சிறீகாந்த், ரவீந்திர அஷ்வின், சடகோபன் ரமேஷ், டபிள்யு.வி.ராமன், சிவராம கிருஷ்ணன், ஹேமங் பதானி, லக்ஷ்மிபதி பாலாஜி, பத்ரிநாத், முரளி கார்த்திக், தினேஷ் கார்த்திக், அபினவ் முகுந்த், முரளி விஜய் என தமிழ்நாட்டில் இருந்து இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வான பார்ப்பனர்களின் நீண்டதொரு பட்டியலே உள்ளது.
வெறும் மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் எப்படிப் பெரும்பான்மை இடத்தைப் பெற முடிகிறது? என்று சிந்திக்கத் தெரிந்த யாருக்கும் சந்தேகம் எழுவது இயல்புதானே. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு? இந்த உள்ளங்கை நெல்லிக்கனியைக் கருவாக வைத்துப் படம் எடுத்து உலகிற்குப் பறைசாற்றியது கண்டு பொறுக்கமுடியாமல் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?
இரண்டாயிரம் ஆண்டுகளாக பார்ப்பனர்-களால் பார்ப்பனரல்லாதோருக்குக் கல்வி மறுக்கப்பட்டது, மற்ற சலுகைகள் மறுக்கப்-பட்டது என்று சொல்லப்படும் கூற்றை நிரூபிக்க எந்த ஆதாரமும் தேவையில்லை, எந்த ஆராய்ச்சியும் செய்யத் தேவையில்லை என்பதே நிலை என்று புலம்பி இருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. இதை அண்டப் புளுகு என்பதா? ஆகாசப் புளுகு என்பதா? ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்பதா? அயோக்கியத்தனம் என்பதா? மக்கள் வரலாற்றை இன்றைய இளம் தலைமுறையினர் பலர் அதிகம் படிப்பதில்லை என்று கருதியோ, டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் தனது கட்டுரையைப் படிப்பவர்களுக்கு திராவிடர் இயக்கத் தோற்றப் பின்னணி குறித்துத் தெரியாது என்று நம்பியோ, ஆதாரம் எதுவும் இல்லை என்பதைப் போன்று கூசாமல் எழுதியுள்ளார். பார்ப்பனர்களின் ஆதிக்கத்தால், தொடர் அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டு, வெள்ளையர் ஆட்சியில் கிடைத்த சிறிய சுதந்திர இடைவெளியைப் பயன்படுத்தி, தன்னெழுச்சியாகப் பீறிட்டு வெடித்துக் கிளம்பியதே பார்ப்பனரல்லா-தோருக்கான திராவிடர் இயக்கம். பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அதனால் திராவிட மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளும், தமிழக வரலாறு முழுவதும் பரவி இருக்கின்றது. தமிழ் மன்னனான கரிகால் சோழனைச் சதி செய்து கொன்ற பார்ப்பனர்களின் வரலாறு உட்பட, தங்கள் ஆதிக்கத்தை நிலை-நாட்டுவதற்காக விஜயநகரப் பேரரசை மதுரை மீது படையெடுக்க வைத்து நாயக்கர் ஆட்சி ஏற்பட வழிகோலியது உட்பட, நாயக்கர் ஆட்சியைப் பயன்படுத்தி பார்ப்பனர்களின் ஆதிக்கம் மீண்டும் உச்சிக்குச் சென்றது உட்பட, ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலும் ஆதிக்கம் செலுத்தியது உட்பட, ஏராளமான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன. தற்போது மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ் வழிகாட்டு-தலுடன் கூடிய பி.ஜே.பி அரசைப் பயன்படுத்துவதும்கூட வரலாற்றில் பதிவாகிக்-கொண்டுதான் இருக்கிறது.
உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற தலைப்பில், பத்ரி சேஷாத்திரியின் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட நூலில் உள்ள இட்டுக்கட்டிய தகவல்களை உடைத்து எறியும் வகையில், உடையும் இந்தியாவா? உடையும் ஆரியமா? என்ற தலைப்பில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்களால் பதிலடி நூல் வெளியிடப்பட்டதே. ஆதாரம் இல்லாமலா எழுதப்பட்டது அவரது நூல்? ஆதாரம் இல்லாமல் பேசுவது பெரியாரியவாதிகளுக்கு வழக்கம் இல்லை. அது பெரியாரிடம் இருந்து கற்றுக்கொண்ட நற்பண்பு. அதை நாம் பத்ரி சேஷாத்ரியிடம் எதிர்பார்க்க முடியாது.
இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், பார்சிகள், சமணர்கள் போல பார்ப்பனர்களை மற்றவர்கள் கருத வேண்டும் என்று விரும்புகிறார் பத்ரி சேஷாத்திரி. விரும்புவதில் தவறில்லை, ஆனால் அதற்கான முயற்சியில் அவர்கள்தானே ஈடுபட வேண்டும். மற்ற ஜாதிகளைப் போல என்று ஒப்பிடாமல், மற்ற மதங்களைப்போல என்று தனது ஜாதியை மதங்களோடு கவனமாக ஒப்பிடுகிறார் பத்ரி சேஷாத்திரி. இதுவும் ஒருவகையில் சரிதான். இந்து மதத்தைப் பார்ப்பன மதம் என்று திராவிடர் இயக்கம் சொன்னது. அதை இப்போது பத்ரி சேஷாத்திரி மறைமுகமாக ஒத்துக்கொண்டுள்ளார். மற்ற மதங்களை ஒப்பிடுபவர், அந்த மதங்களைப் போல, பிறப்பால் உயர்வு தாழ்வு பார்க்காமல், யார் வேண்டுமானாலும் தகுதி அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களில் கடவுளுக்குப் பூஜை செய்யலாம் என்ற நிலையைப் பார்ப்பனர்கள் ஏற்படுத்த வேண்டும் என்பதை ஏனோ வகையாக மறந்துவிடுகிறார்.
அரசியலில் ஒதுக்கப்படும், சமூகத்தால் வெறுக்கப்படும் தமிழ்ப் பார்ப்பனர்கள், தமிழகச் சமூகவெளியில் பாதுகாப்பாக உணர்வதற்கும், தங்கள் அடையாளத்தைக் காப்பதற்கும் என்ன செய்வது? என்று ஆதங்கத்தோடு கேள்வியை எழுப்புகிறார்.
அதற்கான சில ஆலோசனைகள் பின்வருமாறு:
பிராமணர் என்ற சொல்லை முதலில் கைவிட வேண்டும். பிராமணர் என்ற சொல்லைப் பயன்படுத்துவதன் மூலமாக மற்றவர்களைப் பிறப்பால் தாழ்ந்தவர்கள், இரண்டாம் நிலையில், மூன்றாம் நிலையில், நான்காம் நிலையில் உள்ளவர்கள் என்று நிறுவ முயலும் செயல் நிறுத்தப்பட வேண்டும்.
பிறப்பால் தாங்கள் உயர்ந்தவர்கள் என்ற எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
கோவில்களில் அனைத்து ஜாதியினரும் பூஜை செய்வதைத் தடுக்க முயற்சிக்கக் கூடாது.
தங்கள் மொழியான சமஸ்கிருதத்தை மற்ற மொழி பேசுபவர்கள் மீது திணிக்கக் கூடாது. அப்படி யாராவது திணிக்க முயற்சித்தால், அதைக் கண்டித்துத் தடுக்க முயல வேண்டும்.
நாங்கள் இந்தத் தொழில்களைச் செய்யமாட்டோம் என்று திமிரோடு அடம் பிடிக்காமல், எல்லாத் தொழில்களிலும் மற்றவர்களோடு சேர்ந்து ஈடுபட வேண்டும்.
பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் வாடகைக்கு வீடு கொடுப்போம், விற்பனை செய்வோம் என்று அராஜகம் செய்யக்கூடாது. அப்படி இருப்பவர்களை, விளம்பரம் செய்பவர்-களைத் திருத்த முயல வேண்டும்.
ஜாதியைக் காட்டும் புற அடையாளங்-களைத் துறக்க வேண்டும்.
மற்றவர்களைப் போல அந்த அந்த வட்டார மொழியைப் பேச வேண்டும், ஜாதிக்கென வைத்திருக்கும் தனிப் பேச்சு வழக்கை மறக்க வேண்டும்.
கிராஸ் பெல்ட் என்றாலே டேஞ்சரஸ் என்று பேசிக்கொள்ளும் நிலையை மாற்றும் வகையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்-கொள்ள வேண்டும்.
கலப்புத் திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி, நாடறிய கலப்புத் திருமண முகாம்களை நடத்த முன்வர வேண்டும்.
ஜாதியை ஒழித்து அனைவரும் சமம் என்ற நிலையை ஏற்படுத்த களமிறங்கிப் போராட வேண்டும். தங்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களை அதற்குப் பயன்படுத்த வேண்டும்.
மொத்தத்தில் விலகி விலகிச் செல்லாமல், நாமும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்பதை உணர்ந்து, தனித்த பழக்க வழக்கங்களை விட்டொழித்து, மனிதராய் - மாந்த நேயத்தைக் காப்பவர்களாக வாழத் தொடங்க வேண்டும்.
இதனால் பார்ப்பனர் என்ற ஜாதி அடையாளம் காணாமல் போகலாம். கடந்த நூறு நூற்றைம்பது ஆண்டுகளில் எத்தனையோ ஜாதிகள் அடையாளம் இல்லாமல் காணாமல் கரைந்து போய்விட்டன. அப்படிக் கரைந்து காணாமல் போவதில் தவறில்லை. தற்போது உள்ள தகவல் தொடர்பு வசதியால், பார்ப்பனர்கள் என்றொரு ஜாதி இருந்தது. அந்த ஜாதியைச் சேர்ந்த மக்கள் செய்த மகத்தான செயல்கள் மூலமாக, ஜாதி என்பதே ஒழிந்தது என்று வரலாறு பாராட்டோடு பதிவு செய்யும். பார்ப்பனர்கள் மீதான கசப்பான நினைவுகள் மாறி இனிமையான நினைவுகளை வருங்கால சந்ததியினர் அசைபோடுவார்கள்.
பார்ப்பனர்களுக்கு எதிரானது அல்ல திராவிடர் இயக்கம். ஆனால், பார்ப்பனர் என்ற சிந்தனை இருக்கும்வரை அதைத் தொடர்ந்து எதிர்க்கும் திராவிடர் இயக்கம். சிறுபான்மை மதங்களை ஒடுக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ் கொள்கை போன்றதல்ல திராவிடர் இயக்கத்தின் கொள்கை. பெரியாரின் மாந்தநேயக் கொள்கையைக் கொண்டது திராவிடர் இயக்கம். எல்லோரும் மனிதர்களாக, மனித நேயத்தோடு, ஏற்ற தாழ்வில்லாமல் வாழவேண்டும் என்பதே திராவிடர் இயக்கத்தின் கொள்கை.
இதன் காரணமாகத்-தான், இயக்கம் தொடங்கி நூறாண்டுகள் ஆகியும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி கிட்டத்தட்ட அய்ம்பது ஆண்டுகள் ஆகியும், இன்று வரை, திராவிடர் இயக்கக் கொள்கைக்கு நேர்எதிராக உள்ள பார்ப்பனர்கள் யாரும் கொல்லப்படவில்லை. மற்ற மாநிலங்களில் மதவெறி பிடித்து கூட்டம் கூட்டமாகக் கொன்றது போன்ற நிகழ்வுகள் பார்ப்பனர்-களுக்கு எதிராக தமிழகத்தில் நிகழவில்லை என்பதைப் பார்ப்பனர்கள் நேர்மையோடும் நன்றியோடும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அழுத்தப்பட்டுக் கிடக்கும், தாழ்த்தப்பட்டுக் கிடக்கும் ஜாதியைச் சேர்ந்தவர்கள், குப்பை அள்ளுபவர்களாக, மலம் அள்ளுபவர்களாக, சாக்கடையில் இறங்கிச் சுத்தம் செய்பவர்களாக, இரத்தம் தோய்ந்த மருத்துவமனைத் துணிகளை சுத்தம் செய்பவர்களாக, பிணவறையில் பிணத்தை அறுப்பவர்களாக, சுடுகாட்டில் பிணத்தை எரிப்பவர்களாக, இன்னும் பல மற்றவர்கள் செய்யத் துணியாத பணிகளைச் செய்து வருகின்றனர். யாரும் செய்யத் துணியாத, செய்யத் தயங்கும் பணிகளைச் செய்யும் இவர்களுக்கான கூலி மிகச் சொற்பமானதே.
இதை வைத்து இவர்கள் குடும்பம் நடத்துவதே சிரமமாக இருக்கின்றது. மோசமான சூழலில், சுகாதாரமற்ற சேரிப்பகுதியில் வாழ்கிறார்கள். மோசமான புறச் சூழலில் பிறந்து வளரும் இவர்களின் வாரிசுகள் பார்ப்பனர் வீட்டுப் பிள்ளைகளைப் போல வாழமுடியுமா? வளர முடியுமா? வாழ்வில் உயர முடியுமா? என்பதைச் சமூகத்தில் இன்றும் உயர்ந்த நிலையில் உள்ள பார்ப்பனர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
வர்ணாசிரம முறையால் உருவாக்கப்பட்ட சமூக ஏற்ற தாழ்வினால் அழுத்தப்பட்டுள்ள நிலையில், அடுத்த வேளைச் சோற்றுக்கு வழியில்லாமல் வாடும் குடும்பங்கள் ஏராளம் இருக்கும் போது, அதிகாரம் பறிபோய்விட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது? என்பதை நேர்மையோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதே வர்ணாசிரம முறையால் சமூகத்தில் உயர்நிலையில் உள்ள பார்ப்பனர்கள் சமூக ஏற்றத் தாழ்வைப் போக்க உருவான திராவிடர் இயக்கத்தைக் குறை சொல்லிக்-கொண்டு புலம்பித் திரிவதை நிறுத்திக்கொண்டு, செய்த தவறுகள் மற்றும் செய்துகொண்டிருக்கும் தவறுகளை உணர்ந்து, இனியாவது பார்ப்பனர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வர வேண்டும். பிராமணர்கள் என்று தங்களைக் கருதிக்கொண்டு வாழ்பவர்கள், தாங்களும் மற்றவர்களைப் போல மனிதர்கள்தான் என்றுணர்ந்து மாற ஆரம்பித்தால், சமூகத்தில் மாபெரும் மாறுதல் நிகழும்! பார்ப்பனர்கள் மீதான வெறுப்பை மற்றவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று விரும்பும் பத்ரி சேஷாத்திரி போன்ற அனைவரும் முதலில் தங்களை மாற்றிக்கொள்ள முயலவேண்டும்!
மற்றவர்களின் உறவினர்களாக மாற முயற்சி செய்யுங்கள்! மகிழ்ச்சியோடு உறவினராக தயாராக இருக்கிறார்கள் மற்றவர்கள்!
- திராவிடப்புரட்சி
-உண்மை இதழ்,1-15,16-31.1.,1-15.2.2015