பக்கங்கள்

வெள்ளி, 6 நவம்பர், 2015

பஞ்சமர்களின் பரிதாப நிலை



பரிதாபத்துக்குரிய பஞ்சமர்களின் வாழ்வின் சர்வ பாகத்தில்தான் கல் நெஞ்சம் படைத்த மிராசுதார்கள் மகத்தான கொடுமைகள் செய்கிறார்களென்றதில்லை. இன்னும் அவர்கள் ஒத்து வாழாதபடி பல சூழ்ச்சிகளையும் செய்திருக்கிறார்கள். பறை பதினெட்டு ஜாதி என்ற ஒரு கற்பனையை செய்து அவர்களிடம் ஒற்றுமை நிலவா வண்ணம் செய்திருக்கும் குழ்ச்சி மிக மிக பரிதாபகரமானதாகும்.
பரிதாபமே உருவாயமைக்க இந்தக் கூட்டத்துக்கும் இந்த பல ஜாதி கற்பனை அவர்களின் மனதை இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிறது. எப்படி தாங்கள் மிராசுதார் கூட்டத்துக்கே உழைத்துப்போட ஜென்ம மெடுத்திருப்பதாக கருதுகிறார் களோ அதேபோல்  தாங்கள் பல ஜாதிகள்தான் என்ற உணர்ச்சியையும் நியாயமாகவே கொண்டிருக்கிறார்கள்.
பஞ்சமன், பறையன், பள்ளன், வெட்டியான், கோலியன், தச்ச வரத்தான், அச்சு வேளாளன், தீயன், வள்ளுவன் போன்ற பெயர்களையுடைய ஜாதிகள் இந்த கற்பனையின் பாற்பட்டது தான். இக்கூட்டத்துக்கு கடவுள் வழிவந்ததாக சொல்லும் சில மகான்களால் அதாவது தோழர் காந்தி போன்ற மகான்களால் திருக்குலத்தான் என்றும் ஹரிஜனன் இருவிதமான ஜாதிகளை சமீபகாலத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த ஜாதி வேற்றுமையை கொடுத்திருப்பதற்கு மூலகாரணம் அக்கூட்டத்தின் ஒற்றுமையை பங்கப்படுத்துவ தோடு பிரஸ்தாப வேற்றுமையை பலப்படுத்தி மிராசு தாரன் உடல் நலுங்காமல் உட்கார்ந்து சாப்பிடவும், கொடுமைகளை செய்யவும், ஒரு பெரிய சவுகரியமாய் இருக்கிறது.
இந்த ஜாதிப் பிரிவினைகளை அடிப்படையாக வைத்துக் கொண்டு மிராசுதாரர்கள் தங்கள் காரியத்தை சாதித்து கொள்வது, உடல் நோகாமல் உட்கார்ந்து தின்பது போன்ற வைகளை அபிவிருத்தி செய்து கொள்வது வெகு விந்தை யானது. ஒரு குறிப்பிட்ட மிராசுதாரனுக்கு சில பஞ்சமர்கள் அடிமை வேலை செய்வதாக வைத்துக் கொள்வோம்.
இவர்கள் அடிமை வேலையில் ஏதாவது தவறுதல் செய்து விட்டாலோ அல்லது தவறுதல் செய்து விட்டதாக மிராசுதார் உணர்ச்சியில் கருதி விட்டாரோ அதற்கு செய்யும் பல தண்டனைகளில் ஜாதியைக் காட்டி கண்ட படி திட்டுவது, கீழ் ஜாதிக்காரனை விட்டு மான பங்கப்படுத்தச் சொல்வது போன்ற கொடுமைகளும் ஒன்றாகும்.
ஒரு பறையன் செய்த குற்றத்திற்கு பறையனை விட கீழ் ஜாதியாக கருதும் வெட்டியானைக் கொண்டு வைவது, அதாவது வெட்டியாரப் பயலை விட்டு உதைக்கக் சொல், வெட்டியாரப்பயலை விட்டு மயிரை அறுக்கச் சொல், வெட்டியாரப் பயலை விட்டு கட்டி வைத்து உதைக்கச்சொல்,
என்பது போன்ற மிக இழிவான வார்த்தைகள் பேசி திட்டுகிறர்கள், ஜாதி பேத உணர்ச்சி மிகுந்த பஞ்சமர்களுக்கு, கீழ் ஜாதிக்கார வெட்டியானை காட்டி ஆண்டைமார்கள் பேசிவிட்டார்களே என்று மனதை ரொம்பவும் புண்படுத்திவரும்.
செய்கையில் நடந்துதுவிட்டால் மனம் நொந்துவிடும். கீழ்ஜாதியாக கருதிக்கொண்டிருக்கும் வெட்டியான்களுக்கு மேல் ஜாதிக்காரர்களை கேவலப்படுத்துவதற்கு தங்களை ஏவிய பெருமை கிடைத்ததற்கு ஆண்டைமார்களால் கிடைத்ததென்ற பெருமைக்காக ஆண்டைமார்களை போற்றுவார்கள்.
இப்படியே பறை பதினெட்டு ஜாதியிலும் நிகழுவதாகும். சோத்துக்கு தாளம் போடும் இக்கூட்டத்துக்கிருக்கும் ஜாதிப் புத்தியை பாருங்கள். இந்த மனப்பான்மையை மிராசுதார்கள் பலப்படுத்திய ஒரு பாவமே அக்கூட்டத்தின் அடிமைச்சங்கிலி என்றும் அறுபடாமலிருந்து கொண்டிருக்கிறது.
இந்தப் பொல்லாத ஜாதிபாகுபாட்டால் இன்னும் சில அபாயங்கள் அவர்களுக்கிருந்து கொண்டிருக்கிறது.
இக்கூட்டத்தினரை என்றும் மீளாப்படுகுழியிலாழ்த்தும்படியான புரோகிதக் கோட்பாடுகளும் தாண்டவமாடுகின்றன.
இவர்களுக் குள்ளேயே வள்ளுவர் என்ற கூட்டத்தார் மிக உயர்ந்தவர் களாகவும், குருக்கள்களாகவும் கருதிக்கொண் டிருக்கிறார்கள் இக்கூட்டத்தார் ஜோசியம், ஆரோடம், கைரேகை, புரோகிதம், முதலான தொழில்களையே பெரும்பாலும் கொண்டவர்கள். வள்ளுவக்கூட்டத்தார்.
குறளின் ஆசிரியரான திருவள்ளுவர் மரபின் வழிவந்ததாக சொல்லி கொள்கிறார்கள் என்றாலும், உயர் ஜாதியினர்கள் இக்கூட்டத்தாரையும் தீண்டத்தகாதவர்களாவே கருதிக் கொண்டிருக்கிறர்கள். தங்களை உயர் ஜாதியார் சர்வ துறையிலும் கேவலப்படுத்துகிறார்களே என்ற மான வெட்கமில்லாமல் பஞ்சம சகோதரர்களை.
இந்த ஜாதிமான்கள் (வள்ளுவர்கள்) எல்லாத்துறையிலும் விலக்கிக் கொண்டிருப்பது வெகுவிந்தையானது.
பரிதாபத்துக்குரிய பஞ்சம சகோதரர்களுக்கு இவ்வள்ளுவக் கூட்டத்தார் மோட்ச கை காட்டி மரங்களாம்! எப்படி உயர் ஜாதி இந்துக்களுக்கு பிராமணோத்தமர்கள் மோட்ச கை காட்டிகளோ அதே போல் வள்ளுவர்கள் பறை பதினெட்டு ஜாதிக்கும் மோட்ச கை காட்டிகளாகும்.
பறை பதினெட்டு ஜாதியின் நன்மை தீமைகளுக்கு பிராய சித்த பிம்பங்கள் வள்ளுவர்கள். இந்த வள்ளுவர்கள் கூட்டத்தாரை உயர்வாகக் கருதிக்கொண்டிருக்கும் அடிமை ஜாதியார்கள் தங்களுக்குக் கிடைக்கும் மிக குறைந்த வருவாயிலும் ஒரு பகுதியை வருஷ வர்த்தனை என்ற பெயரால் பொதுவாகவும்,
அவ்வப்போது ஏற்படும் அதாவது புரோகித கற்பனையால் ஏற்பட்டிருக்கும் சில்லரை சடங்குகளின் பெயரால் சில்லறையாகவும் கொடுத்துக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.
அது ஒரு பக்கமிருக்கட்டும். அப்பித்து பலப்பட்டி ருப்பதால் சில காலத்துக்கு கிடைக்கும் கொஞ்ச வருமானத் தையும் கொடுத்து விட்டு பட்டினி கிடக்கும் காட்சி மிக பரிதாபகரமானதாய் இருக்கிறது.
ஆகவே பஞ்சமர்களுக்குள்ளும் ஜாதிப்பிரிவினயை அனுஷ்டிப்பது மிராசுதார்கள் குதிரை ஏறவும், வள்ளுவ புரோகிதர்கள் இவர்களை மென்மேலும் பைத்தியக்காரர் களாக்கவும் காட்டு மிராண்டிகளாக்கவும் ஓர் பெரிய வசதியாய் இருக்கிறது.
அதோடும் இந்த பெரும் கற்பனைகளை பரிதாப ஜாதிக்கு புகட்டிய உயர் ஜாதியாருடைய அடிப்படையான நோக்கமெல்லாம் தங்கள் பெண்டாட்டி பிள்ளைகள் பல்லாண்டு பல்லாண்டு ஷேமமாய் இருந்த விடத்திலிருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கவும் முன் ஜாக்கிரதையாக செய்யப்பட்ட சூழ்ச்சி என்பதை பரிதாப கூட்டத்தார் பூரணமாக உணரவேண்டும். பரிதாப ஜாதியாரின் மாறுதலுக்கு பாடுபடுபவர்கள் இக்கொடுமைகளையும் ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.
(புரட்சி 1934)
-விடுதலை,30.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக