பஞ்சாபில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜெனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அனேகப் பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாறாக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜெனரல் டயர் துரையைவிட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு, பிள்ளை குட்டிகள் பெற்றுக்கொண்டு சுகமாய் வாழ்கிறார்கள்.
இந்த டயர் களைப்பற்றி எந்த பத்திரிகை யாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன? (நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதைக் குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு கங்காதரா மாண்டாயோ? கங்காதரா மாண்டாயோ? என்று கத்த வேண்டியதுதான்).
பாவி டயராவது அவரது வகுப்புப் பெண்மீது கல் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ, மூக்கி னால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனைகள் போட்டாவது அவர் களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டில் இருக்கும் படுபாவி டயர்கள் நாம் ஒரு குற்றமும் செய்யாமல், ஒருவன் மீதும் கல் போடாமல் இருப்பதுடன், அவர் கூட்டத்திற்கும் நாம் நன்றாகச் சோறு போட்டும், பணம் கொடுத்தும் வரும் போதே, அடியோடு தெருவிலே போகக் கூடாது, கிட்டத்திலே வரக் கூடாது என்கிறார்களே,
இதைப்பற்றி யாருக்காவது உரைக்கிறதா, இதனால் நமக்கு அவமானமாக இருக்கிறதே என்று படுகிறதா? எந்தப் பத்திரிகையாவது இம்மாதிரி நடவடிக்கைகள் படுபாவி டயர்கள்தான் என்று எழுதுகிறதா என்று பார்த்தால் இல்லவேயில்லை. பாவி டயர் தன்னுடைய பிறந்த நாட்டிற்காக நன்மை செய்கிறோம் என்கிற எண்ணத்தின் பேரில் கொடுமை செய்தான். நம்முடைய நாட்டுப் படுபாவி டயர்கள் நம்மை தங்கள் நாட்டையும் காட்டிக் கொடுத்து,
தங்கள் நாட்டாரையும் வயிற்றுப் பிழைப்புக்கு மாத்திரம் கொடுமை செய்கிறார்கள். அதோடு நம் நாட்டுப் படுபாவி டயர் கூட்டத்தார் பாவி டயர் செய்த காரியத்தையும் தாங்கிப்பேசி பெரிய பெரிய உத்தியோகமும் பெறுகிறார்கள். அதைப்பற்றியும் பேசுவாரைக் காணோம். எழுதுவாரைக் காணோம். தவிரவும் ஒருவர் செத்துப் போனபிறகு பாவி செத்தான் என்பது அவ் வளவு மனிதத் தன்மையாகாது.
அதிலும், உயிருடன் இருந்துகொண்டு அதைவிட எத்தனையோ மடங்கு அதிகமான கொடுமைகளைச் செய்கிறவர்களை மூடிவைத்துக் கொண்டிருப்பவர்கள் இப்படிச் சொல்வது மிகமிக அக்கிரமமானது என்றே சொல்லுவோம்.
- குடிஅரசு - கட்டுரை - 21.08.1927
விடுதலை,26.10.13
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக