பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

நீதிமன்றங்கள் தந்தை பெரியாருக்குச் சூட்டும் வெற்றி மாலைகள்! - கலி.பூங்குன்றன்


1928இல் (மே 28) அருப்புக் கோட்டையை அடுத்த சுக்லநத்தம் என்னும் கிராமத்தில் முதல் சுயமரி யாதைத் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தார் தந்தை பெரியார். அந்நாள் முதற்கொண்டு நாட்டில் புரோகித எதிர்ப்புத் திருமணங்கள் (Anti Prohit Marriages) நடக்கத் தொடங்கின.
தொடக்க கால கட்டத்தில் எதிர்ப் புகள் கிளம்பியதுண்டு என்றாலும் நாளடைவில் மக்கள் பக்குவப்படுத்தப் பட்டார்கள்.
அதிலும் குறிப்பாக சுயமரியாதைத் திருமண மேடையை தந்தை பெரியார் பயன்படுத்திய விதம் - உலகில் வேறு எங்கும் காணப்படவே முடியாததாகும்.
செய்யாறை அடுத்த வாழ்குடை என்னும் ஊரில் (மணமகன் வி.எஸ். கிருஷ்ணசாமி, -_ போலீஸ்காரர்) நடைபெற்ற திருமணத்தில் தந்தை பெரியார் மூன்று மணி நேரம் உரையாற்றியிருக்கிறார் என்றால் சாதாரணமானதுதானா?
அந்த மேடையில் சுயமரியாதைத் திருமணம் ஏன்? வைதிக முறையில் நடக்கும் திருமணத்தில் இடம் பெறும் மூடநம்பிக்கைகள், ஆரியக் கலாச்சாரத் திணிப்பு, பெண்ணடிமைத் தன்மை, வேதம், சாஸ்திரப் புராணம் என்பதில் அடங்கியுள்ள பிற்போக் கான கருத்துக்கள், பகுத்தறிவுச் சிந்தனைகள், கர்ப்ப ஆட்சியின் அவசியம் குறித்துத் தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதைத் திருமணத் தில் ஏராளமான கருத்துக்களையும் தகவல்களையும் வாரி வழங்குவார்கள்.
தந்தை பெரியார் உரையைக் கேட்கும் எவராக இருந்தாலும் அதில் உள்ள நியாயத் தன்மையை உணர்ந்து கருத்தால் ஈர்க்கப்படுவார்கள்.
ஒரு திருமண மேடையை சமூக மாற்றத்திற்கான கருவியாகப் பயன் படுத்தி வெற்றி கண்டதில் தந்தை பெரியாருக்கு நிகர் தந்தை பெரியாரே!
அத்திருமண மேடைகளில் தந்தை பெரியார் அவர்களால் எடுத்து வைக் கப்பட்ட கருத்துக்கள் வலியுறுத்தப் பட்ட உரிமைகள் பிற்காலத்தில், மாநில மத்திய அரசுகளால் சட்ட அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளன.
பெண்களுக்குத் திருமண வயது, கல்வி உரிமை, வேலை வாய்ப்பு உரிமை, சொத்துரிமை, விவாகரத்து உரிமை, விதவையர் திருமண உரிமை, வாரிசுரிமை குறித்துத் தந்தை பெரியார் தெரிவித்த கருத்துக்கள் இன்று சட்டமாக்கப்பட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டு வருகிறார்கள்.
தந்தை பெரியார்பற்றி அறிஞர் அண்ணா கூறுவார்.
எந்த நாட்டிலும் இரண்டு நூற்றாண் டுகளில் செய்து முடிக்கக் கூடிய காரியங்களை இருபதே ஆண்டுகளில் தந்தை பெரியார் செய்து முடித்தி ருக்கிறார். அய்ரோப்பா கண்டத்தை எடுத்துக் கொண்டால் நாட்டினுடைய விழிப்பிற்கு 50 ஆண்டுகள். அமைந்த ஆட்சியை மாற்றுவதற்கு 50 ஆண்டு காலம் என்ற அளவில் ஒரு பகுத்தறிவு மனப்பான்மையைத் தோற்றுவிப்ப தற்காக ஒரு வால்டேர், ஒரு ரூஸோ இப்படித் தொடர்ச்சியாகப் பலர் வந்து இரண்டு மூன்று நூற்றாண்டுகள் பாடுபட்டுதான் பகுத்தறிவுப் பாதையில் அந்த நாடுகள் செல்ல முடிந்தன. இப்படி இரண்டு நூற்றாண்டுகளில் செய்ய வேண்டிய காரியங்களை பெரியார் அவர்கள் இருபதே ஆண்டுகளில் செய்து முடிக்க வேண்டுமெனக் கிளம்பினார்கள் திட்டமிட்டார்கள்.
அந்தத் திட்டத்தின் அடிப்படையில் பணியாற்றிக் கொண்டு வருகிறார்கள். ஆங்கிலத்தில் சொல்லுவார்கள். “Putting Centuries Into a Capsule’’ என்று சில மருந்துகளை உள்ளடக்கிச் சில மாத்திரைகளிலே தருவது போல பல நூற்றாண்டுகளை இருபது ஆண்டுகளில் அடைத்து அவர்கள் தம்முடைய வாழ் நாளி லேயே சாதித்துத் தீர வேண்டுமென்று அறிவோடும், உணர்ச்சியோடும் நெஞ்சில் ஊக்கத்தோடும், யார் வரு கிறார்கள் -யார் போகிறார்கள் - என்பதைக் கூட இரண்டாந்தரமாக வைத்துக் கொண்டு, எந்தளவு முன்னேறுகிறோம் என்பதைக் காண்பதிலேயே அவர்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டக் களத்தில் நின்றிருக்கிறார்கள் என்று தந்தை பெரியார் அவர்களை அவ்வளவுக் கன கச்சிதமாகப் படம் பிடித்தார் அறிஞர் அண்ணா (திருச்சியில் நடைபெற்ற தந்தை பெரியார் 89 ஆவது ஆண்டு பிறந்த நாள் விழாவில் 17.9.1967 -அன்று அண்ணா ஆற்றிய உரையின் ஒரு பகுதி)
தங்கள் மகத்தான பணி மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்த வாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நம் நாட்டில் என்று அமெரிக்காவி லிருந்து அண்ணா அவர்கள் எழுதிய ஒரு கடிதத்திலும் குறிப்பிட்டுள்ளார் (10.10.1968)
சுயமரியாதைத் திருமணத்தில் கலந்து கொண்டபோது மணமகன் பெயருக்குப் பின்னாலும், மணமகள் பெயருக்குப் பின்னாலும் படிப்புக்கான பட்டம் (Degree) குறிப் பிடப்பட்டு இருந்தால் தந்தை பெரியார் அவர்களின் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது, மேடையிலே துள்ளிக் குதித்து உற்சாகத் துடன் அதனைக் குறிப் பிட்டுப் பேசுவார்கள்.
பெயருக்குப் பின்னால் ஜாதிப் பட்டம் போட்டுக் கொண்டிருந்த ஒரு நாட்டிலே,  பெயருக்குப் பின்னால் படிப்புப் பட்டம் போட வைத்தது தந்தை பெரியார் அவர்களின் மகத்தான தொண்டின் விளைச்சலால் அல்லவா?
இப்படி ஆயிரக்கணக்கில் சுய மரியாதைத் திருமணங்கள் நடந்து கொண்டு இருந்தாலும்  சட்டத்தின் முன் நீதிமன்ற பார்வையில் பெரியார் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்ற நிலைதான்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற ரெங்கம்மாள், கோட்டை யூர் ராம. - அழ. -சிதம்பரம் சுயமரி யாதைத் திருமணம் சம்பந்தமான வழக்கில்தான் அவ்வாறு தீர்ப்புக் கூறப்பட்டது.
இவர்கள் யார் என்றால் நமது கழகத் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்களின் மாமனார் _ மாமியார் ஆகியோரின் திருமணம் _ 1934ஆம் ஆண்டில் திருச்சிராப்பள்ளி கருணாநிதி பூங்காவில் தந்தை பெரியார் தலைமையில் சுயமரியாதைத் திருமணமாக நடைபெற்றது. மணமகன் சிதம்பரம் அவர்கள் துணைவியை இழந்தவர். அதுபோலவே ரெங்கம் மாள் அவர்கள் இளம் வயதிலேயே துணைவரை இழந்தவர். புரட்சிகரமான மறுமணம் மற்றும் ஜாதி மறுப்புத் திருமணம் அது. இன்றைக்கு 79 ஆண்டுகளுக்கு முன் இத்தகைய புரட்சித் திருமணம் என்றால் ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
சிதம்பரம் அவர்களின் மறைந்த முதல் மனைவியின் குடும்பத்தினர் (மருமகள் தெய்வானை ஆச்சி) சொத்துத் தொடர்பாக வழக்கொன்றைத் தொடர்ந்தார். சிதம்பரம் அவர்கள் திரண்ட சொத்துக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிதம்பரம் ரெங்கம்மாள் ஆகியோரின் திருமணத் தில் சடங்கு ஆச்சாரங்கள் நடக்கவில்லை. அது சுயமரியாதைத் திருமணம் எனவே சட்டப்படி செல் லாதாகையால், அவர்களின் பிள்ளைகளுக்குச் சொத் தில் பங்கு கிடையாது என் பது தான் அந்த வழக்கு.
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ராஜகோபாலன், அய்.சி.எஸ்., சத்திய நாராய ணராவ்  இருவரும் அந்த வழக்கினை விசாரித்தனர் (வழக்கு 1955 4) M.L.J. 128).
26.8.1953 அன்று தீர்ப்பு வழங்கப் பட்டது. குறிப்பிட்ட சிதம்பரம் -_ ரெங் கரம்மாள் திருமணம் சுயமரியாதைத் திருமணம் என்று கூறப்படுகிறது. இது சாஸ்திரங்களின்படி நடைபெறவில்லை. சப்தபதி என்ற ஏழு அடி எடுத்து வைத்தல், ஒமம் வளர்த்தல் போன்ற எந்த சடங்கும் நடத்தப் பெறாமல் நடைபெற்றுள்ளது. இப்படி நடப்பது (Customary Marriage) வழமையான திருமணமா என்றால் அதுவும் இல்லை. எனவே இது சட்டப்படி செல்லத்தக்க திருமணமே அல்ல.
யாரோ சிலர் கூடி தங்கள் விருப் பத்திற்கேற்ப நாங்கள் இத்திருமணம் நடத்துகிறோம் என்று கூறி அவர்கள் விருப்பத்திற்கேற்ப ஒரு தற்காலிக ஏற்பாடாக (In Some Hoc Form) செய்ய அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
இவர்கள் இருவருக்கும் பிறந்த பிள்ளைகள் அனைவரும் சட்டப்படி யான பிள்ளைகளாகவே கருத முடியாது. இந்து மதத்தில் வைப்பாட்டி களாக இருப்பதற்கும், அவர்களுக்குப் பிள்ளைகள் பிறப்பதற்கும், அப்பிள்ளைகளுக்குத் தகப்பன் சொத்தில் பங்கும் பெற உரிமை உண்டு என்பதால் இவர்களது பிள்ளை களுக்குச் சொத்தில் பங்கு உண்டு; ஆனால் இவர்கள் சட்ட விரோத வைப்பாட்டிகளாகவே கருதப்படுவார் கள் என்று இரு பார்ப்பன நீதிபதிகள் தீர்ப்புரையாக வழங்கினர்.
இந்தத் தகவல்களை சென்னையில் பெரியார் திடலில் 30.6.2013 ஞாயிறு அன்று நடைபெற்ற செல்வர்கள் க. தமிழ்ச்செல்வன் - க. வினோதினி  ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவிற்குத் தலைமை வகித்த தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் விவரித்து விட்டு - ஒரு முக்கியமான இன்னொரு தீர்ப்பை ஒப்பிட்டுக் காட்டி, தந்தை பெரியார் அவர்கள் எத்தகு இமாலய வெற்றியின் உச்சிக்குச் சென்றுள்ளார் என்பதை அவருக்கே உரித்தான தனித் தன்மை யுடன் விளக்கினார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சி.எஸ். கர்ணன் அவர்கள் சில நாட்களுக்குமுன் (17.6.2013) வழங்கிய ஒரு தீர்ப்பை ஒப்பிட்டுக் காட்டியது அருமையிலும் அருமையே!
கோவை பகுதியைச் சேர்ந்தவர் பாத்திமா (வயது 35). இவருடைய கணவர் முகமது. (இரண்டு பேரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). முகமது செருப்பு தயாரித்து விற்பனை செய்பவர். இவர்களுக்கு 16.9.94 அன்று இஸ்லாமிய முறைப்படி திரு மணம் நடந்ததாக கூறப்படுகிறது. திருமண வாழ்க்கையின் பலனாக 23.12.96 மற்றும் 1.1.99 அன்றும் முறையே இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.
1999-ஆம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு முகமது பிரிந்து சென்றுவிட்டார். மீண்டும் அவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. ஆனால் அனைத்தும் வீணாய்ப் போய்விட்டன. முகமதுவுக்கு மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம் வருகிறது. எனவே அவரிடம் இருந்து மாதம் ரூ.5 ஆயிரம் கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத் தில் பாத்திமா வழக்கு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை குடும்பநல நீதி மன்றம் விசாரித்தது. விசாரணையின் போது, புகைப் படங்கள், முகமதுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை பாத்திமா தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய் யப்பட்டன. செருப்புக் குடோனில் வேலை பார்த்தபோது தன்னுடன் பழகி, அதன் பிறகு தன்னை முகமது திருமணம் செய்ததாக பாத்திமா தரப்பில் வாதிடப்பட்டது. இரண்டாவது குழந்தைக்கான பிறப்பு அறிக் கையில், தந்தை முகமது என்றும், தாய் பாத்திமா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதை டாக்டர் சாட்சியாகக் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த குடும்பநல நீதிமன்ற நீதிபதி, இரண்டு குழந்தைகளும் முகமதுக்குத் தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
ஆனாலும், முகமதுவை திருமணம் செய் ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் பாத்திமாவுக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தர விட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் பாத்திமா மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதி சி.எஸ்.கர்ணன் விசாரித்தார். அவர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-
தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத் தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை.
இந்த இரண்டு குழந்தைகளையும், முகமதுக்கு முறைதவறிப் பிறந்தவை என்று குடும்பநல நீதிமன்றம் நீதிபதி கூறியுள்ளார். குழந்தை பிறப்பின் போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையொப்பமிட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.
திருமணத்தை நடத்துவது, சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் ஒன்று. ஆனால் சட்டத் தின் அடிப்படையில் அவை கட்டாய மல்ல.
இந்த வழக்கில் முகமது மற்றும் பாத்திமாவை, வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்தக் நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறை யானவைதான். ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி, (ஏற்கெனவே திருமணம் ஆகாத நிலை யில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவன் கணவன் என்றும் கருதப்பட வேண் டும் என்பது இந்த நீதிமன்றத்தின் கருத்து.
ஒருவேளை அவள் கர்ப்பம் தரிக் காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்ப தற்கான ஆதாரம் இருந்தால், இரு வருமே கணவன், மனைவி உறவுக்கு உட்பட்டவர்கள்தான். எனவே அப்படிப்பட்ட பாலியல் தொடர்புடைய இரண்டு பேருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், சட்டப்பூர்வமாக மனைவியிடம் இருந்து நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்ற பிறகுதான், மற்றொரு வரை கணவன் திருமணம் செய்ய முடியும்.
ஒரு பெண்ணுடன் உடல் ரீதியான தொடர்பு ஏற்பட்டுவிட்டது என்பதால், அவரிடம் இருந்து சட்டப்பூர்வமான விவாகரத்து பெறாமல் மற்றொரு திருமணத்தை கணவன் செய்ய முடியாது. சட்டப்பூர்வமான வயதை அடைந்த இரண்டு பேரும் பாலியல் ரீதியான தொடர்பை ஏற்படுத்திக் கொண்டாலே, பின் விளைவுகளைக் கொண்ட ஒரு அர்ப்பணிப்புக்கு உள்ளாகி விடுகின்றனர்.
அப்படி சட்டப்பூர்வ வயதை அடைந்த ஆண், பெண் இரண்டு பேர் (ஏற்கெனவே திருமணம் ஆகாதவர்கள்), பாலியல் உறவுகளை வைத்துக் கொண்டால், அவர்களின் செயல் பாட்டை திருமணம் என்றும் அவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றும் கருதலாம். சட்டப்பூர்வமான வயதைக் கடந்த பிறகு கிடைக்கும் சுதந்திரத்தின் அடிப்படையில் அவர்கள் விருப்பப்படி தேர்வு செய்துகொள்கின்றனர்.
தாலி கட்டுவது, மாலை, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமு தாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத் தான் பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதி யான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது.
எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம் என்னவென்றால், அது அந்த இணையர்க்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். இந்த வழக்கில் அப்படிப்பட்ட உறவு நடந்தேறியுள்ளது. எனவே தங்களுக்கு இடையே பாலியல் உறவு இருந்ததற்கான ஆதாரங்களை குடும்பநல நீதிமன்றத் தில்  தாக்கல் செய்து, திருமணம் நடந்ததை அவர்கள் நிரூபிக்கலாம்.
அப்படி திருமணம் நடந்ததை நிரூபிக்கும் பட்சத்தில், தன்னை முகமதுவின் மனைவி என்று அரசு ஆவணங்களில் பாத்திமா பதிவு செய்து கொள்ளலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக் கொள்ளலாம்.
திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால் தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும். பாத்திமா விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான்.
பராமரிப்புக்காக பணம் வழங்கப்பட வேண்டும்
ஆகவே, கணவன் முகமது தனது மனைவி பாத்திமாவுக்கு மாதம் ரூ.500-ஐ பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும். 2000-ஆம் ஆண்டு செப் டம்பரில் அதற்கான வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருந்ததால், அந்த ஆண்டில் இருந்து கணக்கிட்டு 3 மாதங்களுக்குள் பாக்கித் தொகையை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
1953 ஆகஸ்டு 26ஆம் தேதியன்று இதே சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் ராஜகோபாலன், சத்திய நாராயணராவ் ஆகியோர் வழங்கிய தீர்ப்பில் என்ன கூறினார்கள்?
ரெங்கம்மாள் - சிதம்பரம் ஆகி யோருக்கு நடைபெற்ற திருமணம் சடங்குகள் இல்லாமல் செய்யப்பட்டது - அதனால் செல்லாது என்று தீர்ப்பு வழங்கப்பட்டது இன்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பு.
இன்றைக்கு நீதியரசர் கர்ணன் தீர்ப்பு என்ன கூறுகிறது? சடங்குகள் திருமணமாகாது என்று கூறப்பட்டுள்ளது.
ஒரு கணம் மறுபடியும் 1953ஆம் ஆண்டையும், 2013ஆம் ஆண்டை யும் ஒப்பிட்டுப் பாருங்கள். காலங் கடந்தாலும் தந்தை பெரியார் அவர்கள் அல்லவா வென்றிருக்கிறார்கள். வெற்றிச் சிரிப்பின் வெகுமதி தந்தை பெரியார் அவர்களின் மடியில் அல்லவா விழுந்திருக்கிறது.
இப்பொழுது இன்னொரு கூடுதல் தீர்ப்பும் தந்தை பெரியார் அவர்களின் கழுத்தில் மிகப் பெரிய வெற்றி மாலையாக விழுந்திருக்கிறது.
அந்த வெற்றியானது உச்சநீதிமன் றத்திலிருந்து தந்தை பெரியாரை நோக்கி விரைந்து வந்திருக்கிறது.
அந்தத் தீர்ப்பு இதுதான்.
திருமணம் செய்து கொள்வதாக பொய்யான வாக்குறுதி அளித்து பெண்ணின் சம்மதத்துடன் அவ ருடன் உறவு கொண்டவரை நிரபராதி என விடுவிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது பாலியல் வன்முறை குற்றத்தை சாட்டி சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை  எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.சதாசிவம், ஜெகதீஸ்சிங் கேஹர் அடங்கிய அமர்வு இவ்வாறு தீர்ப்புக் கூறியுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து, பெண்ணுடன் கார்த்திக் பாலியல்ரீதியாக உறவு வைத்துள்ளார். இதுபோன்று பல முறை நிகழ்ந்துள்ளது. பின்னர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் கூறியபோது, மறுத்துள்ளார். இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டில் நிகழ்ந்துள்ளது. அப் பெண் தரப்பில் காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கார்த்திக் மீது கைது நடவடிக்கை எடுக்கப் பட்டது.
நீதிமன்றத்தில் கார்த்திக் மீது பாலியல் வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தை கார்த் திக் நாடினார். அங்கும் அவருக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டது. இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
திருமணம் செய்துகொள்வதாக பொய்யாக வாக்குறுதி அளித்து பெண் ணிடம் பலமுறை பாலியல் உறவு கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடு விக்க வேண்டுமென்ற அவரது கோரிக் கையை ஏற்க முடியாது என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
பாலியல் உறவு என்பதே திரும ணத்திற்கு முக்கியமானது என்பதை உச்சநீதிமன்றமும் உறுதி செய்து விட்டது - பெண்ணை ஏமாற்றிப் பாலி யல் உறவு கொண்டு பின் ஏமாற்றும் ஆண் கூட்டத்திற்குக் கசையடி கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு அல்லவா இது?
சடங்குகள் இல்லாவிட்டாலும் தாம்பத்ய உறவு இருந்திருக்கிறது. எனவே செல்லும் என்று சடங்குகளுக்குச் சாவு மணி உச்சநீதிமன்றத்திலும் அடிக்கப் பட்டு விட்டதே!
தந்தை பெரியார் கணித்தது எல்லாம் இனியும் ஒவ்வொன்றாக நடைமுறைக்கு வரத்தான் போகிறது.
பெரியாரை உலக மயமாக்குவோம் என்றார் தமிழர் தலைவர். அது படிப் படியாக நடந்து கொண்டேதானிருக்கிறது.
வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு!!
-விடுதலை ஞா.ம.,6.7.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக