பக்கங்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2015

நீதிக்கட்சி முதலாளிகளுக்கானதா?


நீதிக்கட்சியா - அது மிட்டா மிராசுதார், ஜமீன்தார்கள், முதலாளிகளின் கட்சி, உயர்ஜாதிக் கட்சி என்று சகட்டு மேனிக்குக் குற்றப் பத்திரிகை படிப்போர் உண்டு.
பார்ப்பனர்களின் ஏகபோகத்தில் இருந்து வந்த கல்வி, வேலை வாய்ப்புகளில் கை வைத்ததாலும், குறிப்பாகக் கல்வியில் தாழ்த்தப்பட்டோருக்கு மிகப்பெரிய அளவில் வாய்ப்புக் கொடுத்ததாலும், தீண்டாமை அடிப்படையில் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பார்ப்பனீய வருணதரும அமைப்பின் வேரில் திராவகத்தை ஊற்றியதாலும், பொதுக் கிணறு, பொதுக் குளம், பொது வீதிகளில் தாழ்த்தப்பட்டோர் புழங்க இருந்த தடை நீக்கப்பட்டதாலும், தடை செய்வது தண்டனைக்குரிய குற்றம் என்று நீதிக்கட்சி சட்ட ரீதியாகப் பல ஏற்பாடுகளைச் செய்ததாலும் நீதிக்கட்சியின்மீது எதையாவது தூக்கிப் போட்டு பழி சுமத்தவேண்டும் என்ற வெறியில் கிளப்பி விடப்பட்ட உண்மைக்கு மாறான அழிபழி இது என்பதுதான் உண்மை.
நீதிக்கட்சியில்  நிலச் சுவன்தாரர்கள், மிட்டா மிராசுதாரர்கள் இருந்தார்கள் என்பதெல்லாம் உண்மைதான்; ஆனால், அவர்கள் யாருக்காகப் பாடுபட்டார்கள்? அவர்கள் நடத்திய மாநாட்டின் தீர்மானங்கள் என்ன? ஆட்சியில் நிறைவேற்றிய சட்டங்கள் என்ன? திட்டங்கள் என்ன? என்பதை அறிவு நாணயத்தோடு திறந்த கண்களோடு எடை போட்டுப் பார்க்கவேண்டாமா?
நீதிக்கட்சித் தலைவர்கள் பொதுவாழ்வில் தங்கள் சொத்துக்களை இழந்தவர்கள் ஆயிற்றே!
அவர்கள் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட இனாம்தாரர் ஒழிப்புச் சட்டம், லேவாதேவி சட்டம், கோவில் சொத்துக்களை தேவஸ்தான நிதிகளை பொதுநலப் பணிகளுக்குப் பயன் படுத்திக் கொள்ளலாம் என்கிற சட்டங்கள் எவற்றை அடிப் படையாகக் கொண்டவை? தொழிலாளர்கள் நலன்களுக் காகவே நான்கு சட்டங்கள் இயற்றப்பட்டன. தொழிலாளிகளின் வேலை நேரம், அவர்களுக்கு ஓய்வு, பெண் தொழிலாளர்களின் குழந்தைகளைக் கவனிப்பதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டனவே! பணியின்போது ஊனமடைந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி தருவதுபற்றி 1923 ஆம் ஆண்டில் ஆணை பிறப்பிக்கப்பட்டது. தொழிலாளர்களுக் கான தொழிற்சங்கம் அமைப்பதற்கான சட்டம் 1926 இல் நீதிக்கட்சி ஆட்சியில்தான் நிறைவேற்றப்பட்டது.
நிலமற்ற தாழ்த்தப்பட்டவர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. நீதிக்கட்சியின் முதலமைச்சரவை (1920-1923)யின் சாதனைப் பட்டியல் ஒரு தனி ஆணையின் (எண்.116) வாயிலாகவே வெளிப்படுத்தப்பட்டது.
பொதுத் துறையில் தாழ்த்தப்பட்டோர் உள்பட எல்லா மக்களுக்கும் உரிய இடங்கள். தாழ்த்தப்பட்ட பிரிவினருக்குப் பணி உயர்வு, உயர் பதவி நியமனங்கள், தாழ்த்தப்பட் டோருக்கு வீட்டுமனைக் குடியிருப்புகளும் அமைத்துத் தரப்பட்டன. அவர்களின் குழந்தைகளுக்குக் கல்விக் கூடங்கள், தாழ்த்தப்பட்டவர் முன்னேற்ற வளர்ச்சிக்கும், அவை செயல்பாட்டுக்கும் தனி அலுவலர் நியமிக்கப்பட்டார். பின்னர் தனி அலுவலர் என்பது லேபர் கமிஷனர் என்று மாற்றி அழைக்கப்பட்டார்.
தாழ்த்தப்பட்டவர் என்ற அமைப்பில் என்னென்ன பிரிவுகள் உள்ளன என்று தொகுக்கும் பணி மேற்கொள்ளப் பட்டது; குறவர்களை எல்லா வகைகளிலும் சீர்திருத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மீனவர் நலனுக்காகவும் கமிஷனர்கள் அமைக்கப்பட்டனர். வாடகைதாரர் குடியிருப் புச் சட்டமும் கொண்டுவரப்பட்டது. பி அண்ட் சி மில் வேலை நிறுத்தத்தின் காரணமாக தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டன. தஞ்சை கள்ளர் மகாசங்கத்தின் வேண்டுகோளை ஏற்று அய்ந்து பள்ளிகள் தஞ்சை மாவட்டத்தில் ஏற்படுத்தப்பட்டன.
அதைவிட முக்கியமானது நீதிக்கட்சிக்குத் தந்தை பெரியார் அனுப்பி வைத்த திட்டங்களை ஏற்றுக்கொண்டதாகும்.
ஈரோடு வேலைத் திட்டம் என்பது புகழ்பெற்ற ஒன்றாகும். தந்தை பெரியார் சோவியத்து ருசியா சென்று வந்த பிறகு ஈரோட்டில் தந்தை பெரியார், சிந்தனைச் சிற்பி ம.சிங்கார வேலர், சுயமரியாதை இயக்கத் தோழர்களால் (1932 டிசம்பர் 28, 29) கூடி விவாதித்து உருவாக்கப்பட்ட திட்டம் அது.
அத்திட்டத்தை காங்கிரசுக்கும், நீதிக்கட்சிக்கும் தந்தை பெரியார் அனுப்பி வைத்தார். காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வில்லை. அதேநேரத்தில் நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டது.
14.11.1935 அன்று சென்னை தியாகராயர் மண்டபத்தில் கூடிய நீதிக்கட்சியின் நிர்வாகக் குழு ஈரோடு வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டது. பொப்பிலி ராஜாவே அதனை முன்மொழிந்தார். அவற்றில் சில:
1. பொதுஜன தேவைக்கும், சவுகரியத்துக்கும், நன்மைக்கும் அவசியமென்று உற்பத்தி செய்யப்படும் சாமான்களின் தொழிற்சாலைகள், இயந்திர சாலைகள், போக்குவரவு சாத னங்கள் முதலியவை அரசாங்கத்தாராலேயே நடைபெறும்படி செய்யவேண்டும்.
2. ஆகார சாமான்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக் கும், அவற்றை வாங்கி உபயோகிக்கும் பொது ஜனங்களுக்கும் மத்தியில் தரகர்கள், லேவாதேவிக்காரர்கள் இல்லாதபடி கூட்டுறவு ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி அதன்மூலம் விவசாயி களின் கஷ்டத்தையும், சாமான் வாங்குபவர்களின் நஷ்டத்தையும் ஒழிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.
3. மதங்கள் என்பவைகள் எல்லாம் அவரவர்களுடைய தனி எண்ணமாகவும், தனி ஸ்தாபனங்களாகவுமே இருக்கும் படி செய்வதுடன் அரசியலில் - அரசியல் நிர்வாகத்தில் அவை எவ்வித சம்பந்தமும், குறிப்பும் பெறாமல் இருக்கவேண்டும். ஜாதிக்கென்றோ மதத்திற்கென்றோ எவ்வித சலுகையோ, உயர்வு தாழ்வு அந்தஸ்தோ, அவற்றிற்காக அரசாங்கத்திலி ருந்து தனிப்பட்ட முறைகளைக் கையாளுவதோ, ஏதாவது பொருள் செலவிடுவதோ ஆகியவை கண்டிப்பாய் இருக்கக்கூடாது.
4. மேலே கண்ட இந்தக் காரியங்கள் நடைபெறச் செய்வதில் நாமே சட்டங்கள் செய்து அச்சட்டங்களினால் அமுலில் கொண்டுவரக் கூடியவைகளை சட்ட சபைகள் மூலமும், அந்தப்படி சட்டங்கள் செய்துகொள்ள அதிகாரங்கள் இல்லாதவைகளை கிளர்ச்சி செய்து அதிகாரங்கள் பெறவும் ஏற்பாடுகள் செய்யவேண்டும்.
(பகுத்தறிவு, 23.9.1934)
பொதுவுடைமை மணம் வீசும் மேற்கண்ட திட்டங்களை நீதிக்கட்சி ஏற்றுக்கொண்டதே! தொழிலாளர்கள், தாழ்த்தப் பட்டவர்கள்மீது அக்கறை செலுத்தி - செயல்பட்டதே - செயல்படுத்தியதே - இதற்குப் பின்பும் நீதிக்கட்சி ஜமீன்தாரர் கள், உயர்ஜாதியினருக்கான கட்சி என்று எவரேனும் சொன் னால், அவர்களின் கருத்தில் ஊனம் என்று கருதவேண்டும் அல்லது பார்ப்பனர்களின் எடுபிடிகள் என்றும் கூறவேண்டும்.
-விடுதலை,00.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக