பக்கங்கள்

திங்கள், 9 நவம்பர், 2015

படித்தவர் ஏட்டைக் கெடுத்தார்... - மின்சாரம்


சாதியற்ற சமுதாயம் சாத்தியமே என்ற ஒரு கட்டுரையைத் தீட்டி யுள்ளார் மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் முனைவர் க.ப. அறவாணன்.
கட்டுரையின் தலைப்பைப் பார்த்த மாத்திரத்தில் களித்தோம். உள்ளுக்குள் சென்றால் -_- இவர் எப்படி அறவாணன் அய்யங்கார் ஆனார் என்று எண்ணித் திகைத்தோம்.
இடஒதுக்கீடு என்பது பிரிட்டிஷார் கொண்டு வந்தது என்றும், மக்களைப் பிரிக்க முடியாதவாறு அந்தந்த சாதிக்குள்ளேயே நிரந்தரமாக நிலைப் படுத்த பிரிட்டிஷார் இந்த ஆணையை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர். முன்பிருந்த சாதிப் பிரிவினையை இது மேலும் வலுப்படுத்தியது.
###
கல்வி நிறுவன நுழைவு, அரசு நியமனங்கள் இன்ன பிற எந்த இடத்திலும் சாதிப் பிரிவிற்கு இடமே இருக்கக் கூடாது. இம்முறை தொடருமானால் நாம் பரம்பரை பரம்பரையாக சாதிகளைக் காக்கவே கவனம் செலுத்திடுவோம்! என்று எழுதித் தள்ளி விட்டார்.
ஆரியர் --_ திராவிடர் என்பது வெள் ளைக்காரன் சூழ்ச்சி என்று பார்ப் பனர்கள் சொல்லுவதில்லையா -_ அதே பாணியில் நமது பேராசிரியரும் பேனாவை  ஓட்டியுள்ளார்.
முதலில் ஜாதியை தமிழில் சாதி யாக்கியதே அடிப்படை குற்றமாகும். இதன் மூலம் ஜாதியைத் தமிழர்க்குரிய மூலமாக மாற்றிக் காட்டப் பார்க்கிறார் நமது பேராசிரியர்.
ஜாதியின் காரணமாக கல்வி மறுக் கப்பட்ட மக்களுக்கு - _ அந்த ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கப் படுவதற்கான உளவியல், அறிவியல் கார ணத்தை அவர் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.. இன்னும் சொல்லப் போனால் அம்மை நோயைப் போக்க அம்மைக் கிருமிகளிலிருந்து தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதற்கு ஒக்கும். சூத்திரனுக்கு எதைக் கொடுத் தாலும் கல்வியைக் கொடுக்காதே என்று ஆக்கி வைக்கப்பட்ட வருண சமூக அமைப்பில், அந்த சூத்தி ரனுக்குக் கல்வியைக் கொடுக்க அந்தச் சூத்திரத் தன்மையைப் பயன்படுத்தாமல் வேறு எதைப் பயன்படுத்துவது? மருந்தில்கூட விஷம் உண்டே! அதை ஏன் பருகுகிறோம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?
இரண்டு முறை ஆச்சாரியார் (ராஜாஜி) முதல் அமைச்சராக சென்னை மாநிலத்திற்கு வந்தாரே -_  அந்த இரண்டு முறையும் அவர் செய்தது எதனை? ஏற்கெனவே இருந்த பள்ளிகளை மூடியதுதான் அவர் செய்த உயர்ந்த பட்ச சாதனை.
ஜாதியின் பெயரால் இடஒதுக்கீடு இல்லாத கால கட்டத்தில், குறிப்பாக 1914இல் நம் நாட்டின் நிலை என்ன?
சென்னை சட்டமன்ற மேலவைக் கூட்டத்தில் காலஞ்சென்ற குன்சிராமன் நாயர் கேட்ட கேள்விக்கு சென்னைப் பல்கலைக்கழகத்தில் பதிவு செய்யப்பட்ட பட்டதாரிகள் 650 பேர்களில் பார்ப்பனர்கள் 452, பார்ப் பனர் அல்லாத இந்துக்கள் 12 பேர்; பிற இனத்தவர் 74 பேர் என்று கூறப் பட்டதே _ அந்த நிலை இப்பொழுது மாறியுள்ளதற்குக் காரணம் இட ஒதுக்கீடுதானே?
சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இப்பொழுது படிக்கும் பார்ப்பனர் அல்லாத மாண வர்கள் 1,45,450 - _ சதவீத கணக்கில் 89 ஆகும்.
(சென்னை பெரியார் திடலில் நடை பெற்ற நீதிக் கட்சி 95ஆம் ஆண்டு விழாவில் உரையாற்றிய சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர் திருவாசகம் அளித்த புள்ளி விவரம் இது. 20-_11-_2010).
மருத்துவக் கல்லூரியில் சேர்வ தற்குச் சமஸ்கிருதம் படித்திருக்க வேண் டும் என்ற நிபந்தனை இருந்ததைப் பேராசிரியர் அறவாணன் அறியாதவரா? பனகல் அரசர் பிரதமராக இருந்த போதுதானே அது தூக்கி எறியப் பட்டது. அந்தத் தடை மட்டும் இருந் திருந்தால் தமிழர்களில் மருத்து வர்களைக் கண்டிருக்க முடியுமா?
2013_2014 மருத்துவக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை பற்றிய புள்ளி விவரம் என்ன தெரியுமா?
மொத்தம் 2172 இடங்கள் இதில் திறந்த போட்டிக்குரிய இடங்கள் 673.
இந்தத் திறந்த போட்டியில் உயர் ஜாதிக்காரர்கள் 50, பிற்படுத்தப்பட்டோர் 442, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 140, பிற்படுத்தப்பட்டவர் (முஸ்லிம்) 18, தாழ்த்தப்பட்டவர் 21, தாழ்த்தப்பட்டவர் (அருந்ததியர்) 1, மலைவாழ் மக்கள் -1
இடஒதுக்கீடு அடிப்படையில் பெறப்பட்ட இடங்கள்: பிற்படுத்தப்பட் டோர் 576, மிகவும் பிற்படுத்தப்பட் டோர் 434, பிற்படுத்தப்பட்டோர் (முசுலிம்) 76, தாழ்த்தப்பட்டோர் 328 தாழ்த்தப்பட்டோர் (அருந்ததியர்) 63, மலைவாழ் மக்கள் 22.
இந்த மாற்றங்கள் எப்படி நிகழ்ந்தன? இடஒதுக்கீட்டின் அடிப் படையில் தானே! இந்த வளர்ச்சி எல்லாம் கூடாது என்பதுதான் அறவாணரின் ஆசையா?
நம்முடைய அரசர்கள் காலத்தில் எல்லாம்கூட கல்வி பார்ப்பனர் களுக்குத் தானே! - அந்த வரலாற்றை யெல்லாமா நினைவூட்ட வேண்டும்?
11ஆம் நூற்றாண்டில் சோழ அரசர் கள் தென்னார்க்காடு மாவட்டத்தைச் சேர்ந்த எண்ணாயிரத்தில் ஒரு பெரிய கல்விக் கழகம் கண்டனர். அங்கே 140 மாணவர்கள் கலை பயின்றனர். 14 ஆசிரியர்கள் அறிவு புகட்டினர். ஆசிரியர்கட்கும், மாணவர்கட்கும் தினந்தோறும் நெல் அளந்து தரப் பட்டது. 45 வேலி நிலம் அக் கல்லூரிக்கு அளிக்கப்பட்டது. அங்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது என்ன தெரியுமா? வேதங்களும், சமஸ்கிருத இலக்கணமும் மீமாம்சம் வேதாந்த தத்துவங்களே! (ஆர். சத்தியநாதய்யர் -_ இந்திய வரலாறு)
இந்த வேதங்களும் மீமாம்சத் தத்துவங்களும் யாருக்குச் சொல்லிக் கொடுக்கப்பட்டன? படித்தவர்கள் பார்ப்பனர்கள் மட்டுமே தான் என் பதை முனைவர் பட்டம் பெற்ற பேரா சிரியர் அறவாணன் அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டுமா?
ஜாதியை ஒழிக்கக் கல்வி தேவை யில்லை என்பது அவரது வாதமா? ஜாதி அடிப்படையில் கல்வி மறுக்கப் பட்டதால் தான் அந்த ஜாதி அடிப் படையில் வாய்ப்பு அளிக்கப்பட்டது _ இதற்குப் பெயர்தான் சமூகநீதி என்பது!
கல்வி கற்றவர்களிடத்தில் தான் பெரும்பாலும் ஜாதி மறுப்பையும், ஜாதி மறுப்புத் திருமணத்தையும் எதிர் பார்க்கவும் முடியும்; - அது நடந்து கொண்டும் தானிருக்கிறது.
ஜாதி அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதால்தான் ஏதோ ஜாதி உயிரோடு இருப்பது போலவும், இந்த இடஒதுக்கீடு இல்லாத காலத்தில் ஜாதியே இல்லாதது போலவும் எழுது வது மெத்த படித்த பேராசிரியருக்கு அழகல்ல.
தந்தை பெரியாரும், நீதிக்கட்சித் தலைவர்களும் ஒரு நூற்றாண்டு பாடுபட்டு, சட்டரீதியாக இடஒதுக் கீட்டை நிலை நிறுத்துவதற்குப் பாடு பட்ட தன்மையைப் பார்ப்பனர்களோடு சேர்ந்து கொண்டோ, அல்லது அவர்களுக்குக் கைத்தடியாக இருந்து கொண்டோ கல்லெறிவது ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும்!
ஜாதி அடிப்படையில் இடஒதுக் கீடுக்காகப் பாடுபடும் கழகம்தான் ஜாதி ஒழிப்புக்காகவும் பாடுபடுகிறது என்பதை மறந்துவிட வேண்டாம்; ஒரு சிறு துரும்பைக் கூட ஜாதி ஒழிப்புக்காகக் கிள்ளிப் போடாமல் சமூகப் பொறுப்பு ஏதுமில்லாமல் பேனா பிடிப்பதுதான் சமுதாயத்துக்குச் செய்யும் தொண்டா?
பார்ப்பனர்களைத் தமிழர்கள் என்று முன்பொரு முறை எழுதி இப்படித் தான் சிக்கிக் கொண்டார்.
படித்த தமிழர்கள் அருள்கூர்ந்து தந்தை பெரியார் அவர்களை மேலும் படிக்க வேண்டும் _ ஆழமாக படிக்க வேண்டும் _ என்பதுதான் நமது கனிவான வேண்டுகோள்.
ஒரு தாய் வயிற்றில் பிறந்த எல்லா மக்களுக்கும் சம அனுபவம் இருக்க வேண்டும் -_ என்று கருதி, ஒன்றுக் கொன்று குறைவு, அதிகம் இல்லாமல் பார்த்துக் கொள்வது எப்படி ஒரு தாய்க்கு இயற்கைக் குணமாக இருக்குமோ, அதுபோலத்தான் எனக்கு தோன்றுகிறது. மற்றும் அந்தத் தாய் தனது மக்களில் - உடல் நிலையில் இளைத்துப் போய் வலிவுக் குறைவாய் இருக்கிற மகனுக்கு, மற்ற குழந்தைகளுக்கு அளிக்கிற போசனையைவிட எப்படி அதிகமான போசனையைக் கொடுத்து, மற்ற குழந்தைகளோடு சரி சமானமுள்ள குழந்தையாக ஆக்க வேண்டுமென்று பாடுபடுவாளோ, அதுபோலத்தான் நான் மற்ற வலுக் குறைவான பின் தங்கிய மக்களிடம் அனுதாபம் காட்டுகிறேன்.  இந்த அளவு தான் நான் பார்ப்பனரிடமும் மற்ற வகுப்புக்களிடமும் காட்டிக் கொள்ளும் உணர்ச்சி ஆகும்
_- தந்தை பெரியார், விடுதலை 1.1.1962
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், சாகுமகராஜ், மகாத்மா பாபுலே போன்ற சமூகச் சிந்தனை யாளர்கள் எல்லாம் ஏன் ஜாதி அடிப் படையில் இடஒதுக்கீடு கேட்டார்கள்? அவர்களைவிட இந்தச் சமுதாயத் தைப்பற்றி மிக ஆழமாகச் சிந்தித்து முடிவுக்கு வந்து விட்டதாக வெறும் பட்டப் படிப்பு மேதைகள் நினைக் கிறார்களா? என்று தெரியவில்லை.

ஜாதி ஒழியும் வரை
கடைசியாக நான் கூறுவது நமக்கு அழிவையும், கீழ்த் தன்மையையும், வசதியின்மை யையும் கொடுக்கிற இந்த ஜாதிகள் ஒழிந்து, மக்களுக்குச் சமமான தன்மை வரும் வரை இப்போதைய பிற்பட்ட வகுப்பினருக்கு அறிவு வளர்ந்து, நாகரிகம் அடைந்து அரசியலில் கலந்து கொள் வதற்காகக் கல்வி, உத்தியோகம் முதலியவைகளில் அவரவர்களின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விகிதாச்சாரம் அளிக்கப்பட வேண்டும் என்பதுதான்
(விடுதலை 9.4.1950)

அமெரிக்கர் அறிஞரின் பார்வையில்...
அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தேசிய சங்கம் (National  Association for Equal Opportunities) என்ற அமைப்பின் தலைவர் சார்லஸ் லியான்ஸ்  (Charles Lyons) என்பவர் 1.2.1981 அன்று சென்னையிலே செய்தியாளர்கட்குப் பேட்டி அளித்தார். இவ்வமைப்பைச் சேர்ந்த 10 உறுப்பினர்கள் இந்தியாவுக்கு வந்துள்ளனர். நசுக்கப்பட்ட மக்களுக்கு இந்தியாவில் மேல் நிலைக் கல்வி எப்படி அளிக்கப்படுகிறது என்பதை ஆராய அக்குழு இந்தியா வந்துள்ளது.
எங்கள் நாட்டில் நீக்ரோக்கள் பிரச்சினையும், உங்கள் நாட்டுத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பிரச்சினையும் ஒன்றாகவே உள்ளது. இந்தியாவில் தற்போது நடைமுறைப்படுத்தி வரும் இடஒதுக்கீடு முறை மிகவும் பாராட்டப்பட வேண்டிய சரியான முறையாகும். நிற அடிப்படையிலே வேறுபாடு காட்டக்கூடாது என்று அமெரிக்காவில் சட்டம் இருந்தாலும், வாய்ப்புகள் வழங்கப்படுவதில் மிகப் பெரிய இடைவெளி இருந்து வருகிறது.            _ இந்து 2.2.1981
// 
-விடுதலை ஞா.ம.,24.8.13

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக