வெள்ளி, 27 நவம்பர், 2015

நீதிக்கட்சியும் தாழ்த்தப்பட்டவர்களும்


சுயமரியாதை இயக்கத்தின் 90ஆம் ஆண்டு, நீதிக்கட்சியின் நூறாம் ஆண்டு விழாவை திராவிடர் கழகம் எடுத்தாலும் எடுத்தது. சிலர் இடுப்பு வேட்டி அவிழ்வதுகூடத் தெரியாமல் அங்கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.
அதுவும் இந்து ஏடு தி டைம்ஸ் ஆப் இந்தியா ஜூனியர் விகடன் ஏடுகள், இதழ்கள்கூட நீதிக்கட்சி பற்றிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. தொலைக்காட்சிகள் எல்லாம் இந்த இயக்கங்கள் குறித்து விவாதம் செய்வது. - தவிர்க்க முடியாததாக இருந்தது. இதனைக் கண்டுபொறுக்காமல் தினமலர் ஏடு (22.11.2015) தாழ்த்தப்பட்டோரை உயர்த்த நீதிக்கட்சி என்ன செய்தது? என்று கட்டுரை ஒன்றை வெளியிட்டு, அற்ப மகிழ்ச்சியில் மிதக்கிறது.
அந்தக் கட்டுரையில்கூட நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர் களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்று குறிப்பிட முடிய வில்லை. நீதிக்கட்சிக்கு முன் தாழ்த்தப்பட்டவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்கு எதை எதையெல்லாம் செய்து கொண்டனர், முயற்சி செய்தனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளதே தவிர, நீதிக்கட்சியின் மீது குற்றஞ்சாட்ட முடியவில்லை.
தாழ்த்தப்பட்டோரை உயர்த்த நீதிக்கட்சி என்ன செய்தது? என்று கட்டுரையின் தலைப்பு கவர்ச்சியாக இருக்கிறதே தவிர எவ்வளவோ முயன்றும் நீதிக்கட்சியின்மீது குறை கூறிக் கல்லை எறிய முடியவில்லை.
முடியாததுதான் காரணம், நீதிக்கட்சி தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எவ்வளவோ செய்திருக்கிறது. லேபர் டிபார்ட்டுமென்ட் என்று தாழ்த்தப்பட்டவர்களின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்காகவே உருவாக்கி செயல்பட்டது. நீதிக்கட்சி ஆட்சியில் சாலைகள், கிணறுகள், குளங்களை தாழ்த்தப் பட்டோர் புழங்க முக்கிய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
1925 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27 வரையுள்ள போர்ட் ஸெய்ன்ட்ஜார்ஜ் கெஜெட் 1.A.
பாகத்தின் ஸப்ளிமென்டாய் பிரசுரிக்கப்பட்ட விளம்பரமானது திருத்தப்பட்டு 1925 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம். 28 வரையுள்ள மேற்படி கெஜட்டில் பின் வருமாறு பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
போர்ட் ஸெய்ன்ட்ஜார்ஜ், 1924. ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி (2660 ஆம் L&M
கவர்ன்மென்ட் உத்தரவு
நி. 1009-1924 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி சட்ட நிரூபண சபையார் சபை கூடின போது, அடியிற்கண்டபடி தீர்மானம் செய்தார்கள்.
இந்தத் தீர்மானமானது ராவ்பஹதூர் ஆர். சிறீநிவாசன் அவர்களால் சபைக்குக்கொண்டுவரப்பட்டது.
1. (9) இந்த சபையார் கவர்மென்ட்டாருக்கு அடியிற் கண்டபடி சிபாரிசு செய்கிறார்கள்; அதாவது:-
(a) எந்த வகுப்பையாவது, சமூகத்தையாவது சேர்ந்த யாதொரு நபராகிலும், நபர்களாகிலும் அல்லது கிராமத்திலுள்ள எந்தப்பொது ரஸ்தா, தெரு அல்லது கால்வழி மார்க்கமாகவா யினும் நடப்பதற்கு ஆட்சேபணை இல்லை யென்பதும்,
{b) இந்த தேசத்திலுள்ள ஜாதி இந்துக்கள் எம்மாதிரி யாகவும் எவ்வளவு மட்டிலும் யாதொரு சர்க்கார் ஆபிஸை சேர்ந்த வளவுக்குள் போகலாமோ, யாதொரு பொதுக்கிணறு, குளம் அல்லது பொது ஜனங்கள் வழக்கமாய்க் கூடும் இடங்களை உபயோகிக்கலாமோ அல்லது பொதுவான வேலை நடத்தப்பட்டுவருகிற இடங்கள், கட்டிடங்கள் ஆகிய இவைகளுக்குள் போக லாமோ அம்மாதிரியாகவும், அவ்வளவு மட் டிலும், தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த யாதொரு நபர் போவதற்காவது, உபயோகிப்பதற்காவது ஆட்சேபணை இல்லையென்பதும், கவர்ன்மென்டாரின் கொள்கையாகு மென்று அவர்கள் ஸ்பஷ்டமாய் ஒப்புக்கொண்டு அந்தப் படி பிரசித்தப்படுத்தவேண்டும்.
இந்தத் தீர்மானத்தை கவர்ன்மென்டார் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே, இது சகல பிரதேச அதிகார சபைகளுக்கும், இலாகா தலைவர்களுக்கும் சங்கதி தெரியும் பொருட்டும் அவர்கள் இதை அனுசரித்து நடந்துகொள்ளும் பொருட்டும் அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
பஞ்சமர் என்ற சொல் நீக்கப்பட்டு ஆதி திராவிடர் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது; பள்ளிகளில் கட்டாயம் தாழ்த்தப்பட்டவர்கள் சேர்க்கப்பட வேண்டும், இல்லையெனில் மான்யம் நிறுத்தப்பட வேண்டும், மான்யம் பெறுவதற்கு ஒரு நிபந்தனையாக இது வைக்கப்பட்டு இருந்தது.
1936ஆம் ஆண்டில் 9614 பள்ளிகளில் இப்படி மற்ற மாணவர்களோடு, ஆதி திராவிடர் சமுதாயத்தைச் சேர்ந்த  இருபால் மாணவர்களோடு படிப்பதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புத்தகங்கள், உடைகள் வாங்குவதற்கும் தொழிலாளர் நலத்துறை மூலமாக ஆதி திராவிடர் மாணவர்களுக்கு மான்ய உதவி அளிக்கப்பட்டது. தொடக்கத்தில் தனியார்ப் பள்ளிகளில் சேரும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கு அரைச் சம்பளம் கட்ட வேண்டும் என்றிருந்த விதிகூட மாற்றப்பட்டு, முழுச் சம்பளத்தையும் அரசே தனியார்ப் பள்ளிகளுக்கு வழங்கிட வழி செய்தது. எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் ஆதி திராவிட மாணவர்கள் தேர்வுக்கென்று கட்டணம் செலுத்த தேவை யில்லை;  தேர்வு எழுதினாலே போதும் என்கிற அளவுக்கு அவர்களின் கல்விக்குத் தாராள மனப்பான்மை காட்டப்பட்டு, இவை அல்லாமல் உதவித் தொகைகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
கல்லூரியில் சேர்ந்து படிக்க முன்வரும் அம்மாணவர் களுக்கு ஸ்காலர்ஷிப்புகள் வழங்கும் திட்டமும் ஏற்படுத்தப் பட்டது. சில படிப்புகளுக்கு ஸ்டைபன்டுகள் (Stipends) படிப்பதற்கு ஆகும் செலவில் பெரும்பகுதி வழங்குவதற்கும் வழி செய்யப்பட்டது. அவர்களில் ஆசிரியர்களாக வர விரும்பினால் பயிற்சி பெறுவதற்கு இந்த ஸ்டைபென்ட் திட்டம் மூலம் வாய்ப்பு அதிகம் ஏற்பட்டது.
ஆதி திராவிட மாணவர்கள் தங்கிப் படிக்க விடுதிகள் கட்டப்பட்டன. 1936இல் முதற் கட்டமாக இந்தவகையில் 5 விடுதிகள் உருவாக்கப்பட்டன.
அந்தக் கால கட்டங்களில் உயர் ஜாதியினர் நடத்தும் உணவு விடுதிகளின் உள்ளே சென்று உட்கார்ந்து சமமாகச் சாப்பிட முடியாது; வேண்டும் என்றால் எடுப்புச் சாப்பாடு வாங்கிச் செல்லலாம் என்ற கொடுமை! அந்தச் சூழலில் இத்தகு விடுதிகள் எத்தகைய பயனை அளிப்பதாக அமைந்திருக்கும் என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பார்த்தாலே எளிதில் விளங்குமே!
1935ஆம் ஆண்டில் தாழ்த்தப்பட்டவர்களில் கல்விக்காக நீதிக்கட்சி ஆட்சி ரூ.52 லட்சம் ஒதுக்கியது என்றால் சாதாரணமா?
வீட்டுமனை இலவசப் பட்டாக்கள் வழங்கப்பட்டன; 1935 மார்ச்சு 31ஆம் தேதி முடிய இவ்வகையில் 35,069 பட்டாக்கள் வழங்கப்பட்டன.
வீடு கட்ட கூட்டுறவு சங்கம் மூலமாகக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. அவர்களில் பல வகைப்பட்ட  தேவைகளுக் குக் கடன் வழங்குவதற்காக 2776 கூட்டுறவு சங்கங்கள் உரு வாக்கப்பட்டன என்றால் நீதிக்கட்சி தாழ்த்தப்பட்டவர்கள் மீது கொண்டிருந்த அக்கறை எத்தகையது என்பது விளங்குமே.
வேலை வாய்ப்பில் 12 இடங்கள் இருந்தால் அதில் ஓரிடம் தாழ்த்தப்பட்டவர்களுக்காக ஒதுக்கப்பட்டது. தாழ்த்தப்பட்டவர் ஒருவர் (மயிலை சின்னதம்பிராஜா) அமைச்சராக முதன் முதலில் வந்ததும் நீதிக்கட்சி ஆட்சியில்தான்.
இன்னும் எத்தனை எத்தனையோ வளர்ச்சிப் பணிகளை ஆதி திராவிட மக்களுக்குச் செய்திருக்க, வாய்ப்புளித்ததோ மாங்காய்ப் புளித்ததோ என்ற பாணியில் எழுதுவதை தினமலர்கள் நிறுத்திக் கொள்ளட்டும்!
-விடுதலை,24.11.15,தலையங்கம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக