பக்கங்கள்

வெள்ளி, 27 நவம்பர், 2015

மக்கள் தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் நீதிக்கட்சி ஆட்சிதான் அமல்படுத்தியது



ஓர் அரசாங்கத்தின் சாதனை என்பது என்ன? சப்பாத்தி போடுவதா, இட்லி போடுவதா, எங்கோ ஒரு தட்பவெப்ப நிலையில் வளர்ந்த ஆட்டை வாங்கிவந்து நம் தலையில் கட்டுவதா, வரிசையில் நின்று வாங்கிய வேகத்தில் சித்தூருக்குக் கொண்டுபோய் தெருவில் நின்று கூவி விற்கும் அளவுக்கு மோசமான கிரைண்டர் மிக்ஸி கொடுப்பதா, கட்சி மூலமாகச் செய்ய வேண்டி யதை எல்லாம் ஆட்சி மூலமாகச் செய்துகொண்டு. 'ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையே! என்று நடந்துகொள்வதா?

எது ஆட்சி? ஒர் ஆட்சி, எப்படி இருக்க வேண்டும்? இரட்டையாட்சிமுறைப்படி சென்னை மாகாணத்தில் 1920இல் நடந்த முதல் தேர்தலில் வென்று ஆட்சியைப் பிடித்த நீதிக்கட்சி நடத்தியதே. அதுதான் ஆட்சி. மாளிகையில் மன்னன் இருந்தாலும் மண் குடிசையில் மனசு இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர் கையில் ஆட்சி இருந்தால் அந்த ஆட்சி காசு பார்ப்பதாக மட்டும் இல்லாமல் மக்கள் மாசு துடைப்பதாக அமையும்.

ஏழைகளைப் பற்றி அறிய ஏழையாகப் பிறந்திருக்க வேண்டும் என்பது அவசியம் அல்ல. ஒடுக்கப்பட்டவர் களது துன்பம் உணர ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந் திருக்க வேண்டும் என்பது விதி அல்ல.... ‘ஒரு பெண்ணின் மனதை ஒரு பெண்தான் புரிந்துகொள்ள முடியும்’ என்பதைப் போல பிற்போக்குவாதம் எதுவும் இல்லை. ஒரு பெண்ணின் ஆட்சியில் ஒரு பெண்ணே, அதுவும் டி.எஸ்.பி. அதிகாரத்தில் இருந்த பெண்ணே தற்கொலை செய்து கொண்டு செத்துப்போகும் தலைஎழுத்து இருப்பதை எந்தக் கோயிலில் போய்ச் சொல்வது? வாழும் நிலத்தின் மணத்தையும் குளத்தையும் இதயத்துக்கும் மூளைக்கும் எவனொருவன் கொண்டு செல்கிறானோ அவனால்தான் எல்லார் துன்பங்களையும் உணர முடியும் ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்’ என்று பாடியது வேப்பமரம் அல்ல, வள்ளலார்தான். அருட் பெருஞ் ஜோதிக்கு மட்டும்தான் தனிப்பெரும் கருணை இருக்க வேண்டுமா என்ன? அது எல்லா ஆட்சியாளர் களுக்கும் இருக்க வேண்டியது. நீதிக் கட்சியில் இருந்தவர்கள் ஏழைகள் அல்ல. அன்றாடச் சாப்பாட்டுக்கு அலைந்த கூலிகள் அல்ல. வறுமையின் வாசலைத் தொட்டவர்கள் அல்ல. நெசவுத் தொழிலும் தோல் பதனிடும் தொழிலும் வைத்திருந்து தனக்குச் சொந்தமான இடங்களைப் போய்ப் பார்க்க சாரட் வண்டியில் பயணப்பட்டவர் சர்.பிட்டிதியாகராயர். தரவாட் மாதவன் நாயரும், நடேசனாரும் சொந்தக்காசை கட்சிக்குச் செலவழிக்கும் அளவுக்குப் புகழ்பெற்ற மருத்துவர்கள்.

அந்தக் கட்சியில் இருந்தவர்கள் எல்லாம் யார்? பனகல் ராஜா பி.ராமராய நிங்கார், பொப்பிலி ராஜா ராமகிருஷ்ண ரங்காராவ், வெங்கடகிரி மகாராஜா வேணுகோட்டி கோவிந்த கிருஷ்ணா யகேந்திரருல, லாரு பகதூர் டெலப்ரோல் ஜமீன்தார் ராஜா ரங்காராவ், ஊத்துக்குளி ஜமீன்தார் எம்.ஆர்.காளிங்கராயர், சிங்கம்பட்டி ஜமீன்தார், செல்லம்பள்ளி ராஜா ரீமந் ராஜா. ராமநாதபுரம் ராஜா ராஜேஸ்வர சேதிபதி என்கிற முத்துராமலிங்க சேதுபதி, சூனாம்பேடு ஜமீன்தார் சி.அருணாசல முதலியார். ராஜாசர் அண்ணாமலை செட்டியார், ராஜாசர் முத்தையா செட்டியார், விருதுநகர் வி.வி.ராமசாமி, ஆயக்குடி ஜமீன்தார், மீனாம்பள்ளி ஜமீன்தார் கே.சி.எம். வெங்கடாசல ரெட்டியார்... என்று ஜமீன்தார்களும், ராஜாக்களும், நிலச்சுவான்தார் பண்ணை களும், பணக்காரர்களும் பங்கெடுத்த கட்சி, நீதிக்கட்சி. ஆட்சியில் உட்கார்ந்தவர்களும் இவர்கள்தான்.

அரசாங்க ஆவணங்களின் கிடங்கில் 1921 முதல் 1926 வரை நீதிக்கட்சி ஆட்சியால்நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை, சட்டங்களை, விதிமுறைகளை எடுத்துப் பார்த்தால் இந்தப் பணக்கார ஜமீன்தார்கள் எல்லாம் சேர்ந்து பாவப்பட்ட மக்களின் கோரிக்கைகளில் பலவற்றை நிறைவேற்றி இருப்பதை உணர முடியும்.

“தென்னிந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட சமுதாயங்கள் ஒவ்வொன்றும் கல்வி, சமூகவியல், பொருளியல், அரசியல், அறவாழ்வு ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடையச் செய்தலே நமது கட்சியின் லட்சியம்' என்று டி.எம்.நாயர் போட்டுக்கொடுத்த பாதையில் பயணித்தது அந்தக் கட்சி. கல்வி, வேலைவாய்ப்பில் அனைத்துச் சமூகத்தினருக்கும் அவர்களது மக்கள்தொகை பிரதிநிதித்துவத்தின் அடிப் படையில் சம வாய்ப்புத் தரப்பட வேண்டும் என்பதை நீதிக் கட்சி ஆட்சிதான் அமல்படுத்தியது. ஆனாலும் இது நீதிக் கட்சியின் கண்டுபிடிப்பு அல்ல.
1854-ம் ஆண்டு மார்ச் மாதம் 5-ம் தேதி பிரிட்டிஷ் அரசு, சென்னை மாகாணத்தில் இருந்த மாவட்ட கலெக்டர்களுக்கு ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. அரசாங்கத்தில் வேலைக்கு ஆட்களை எடுக்கும்போது அனைத்துச் சாதியில் இருந்தும் பரவலாக எடுக்க வேண்டும் என்பதே அந்த உத்தரவின் மய்யக்கரு. உத்தரவு போட்டது பிரிட்டிஷ் அரசு. ஆனால், அதனை இங்கிருந்தவர்கள் அமல்படுத்தவிடாமல் தடுத்துக் கொண்டு இருந்தார்கள். இந்த ஆணையை உடைத்தது நீதிக் கட்சி ஆட்சி. 1921 செப்டம்பர் 21-ஆம் நாளும், 1922 மே 15-ஆம் நாளும் பிறப்பிக்கப்பட்ட வகுப்புரிமை தீர்மானங்களே அதுவரை அரசு நிர்வாகத்துக்குள் போகாமல் தடுக்கப்பட்ட வர்களுக்கு வாசலைத் திறந்தது.

அந்தக் காலத்தில் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கை என்பது அந்தந்த கல்லூரி முதல்வர்களின் விருப்பமாக இருந்தது. சாதி பார்த்து, நிறம் பார்த்து, உறவு பார்த்து, யாரையும் சேர்க்கலாம், தடுக்கலாம். முதன்முதலாக ஒவ்வொரு கல்லூரிக்கும் ஒரு தேர்வுக்குழு போட்டு அந்தக் குழுவே மாணவர்களைத் தேர்வு செய்யும் சட்டம் கொண்டு வந்ததும் நீதிக் கட்சிதான். மருத்துவம் முழுக்க முழுக்க அய்ரோப்பியர் வசம் இருந்தது. அதில் இந்தியர்களைப் புகுத்தும் சட்டத்தை நீதிக் கட்சியே எடுத்துவந்தது.மருத்துவம் படிப்பவர்களுக்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற விநோதமான விதி இருந்தது. அதனை நீதிக் கட்சி நீக்கியது. சித்த மருத்துவத்துக்கு கல்வி நிலையம் உருவாக்கியதும் நீதிக் கட்சி ஆட்சியே.

சென்னை மாகாணத்தில் உள்ள அனைத்துத் தண்ணீர் எடுக்கும் கிணறுகளிலும் பொதுச் சத்திரத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும், பஞ்சமர்களுக்கும் உள்ள தடையை நீக்க வேண்டும் என்று பட்டியலின மக்களின் தலைவர் எம்.சி.ராஜா 1919-ல் தீர்மானம் கொண்டு வந்தபோது, அன்றைய உள்துறை அமைச்சர் சர் சைக்ஸ் தோதுண்டா மறுத்தார். இதில் அரசாங்கம் எதுவும் செய்ய முடியாது' என்று கை விரித்தார். மத விவகாரங்களில் நாங்கள் தலையிட முடியாது என்று கவர்னர் வில்லிங்டன் தட்டிக் கழித்தார். இதே மாதிரியான தீர்மானத்தை பீதாபுரம் மகாராஜாவும், பட்டிவீரன்பட்டி டபிள்யூ பி.ஏ.சௌந்தரபாண்டியனும் கொண்டு வந்தார்கள் இரட்டைமலை சீனிவாசன் இதே தீர்மானத்தை எடுத்து வந்தார். நீதிக் கட்சி ஆட்சியின் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர், சமத்துவ சமுதாயத்தை உருவாக்க எந்தத் தீர்மானத்தையும் கொண்டுவரலாம் என்றார். 1924-ஆம் ஆண்டு ஜூன் 25-ஆம் நாள் இது தீர்மானமாகவே நிறைவேற்றப்பட்டது.
பஞ்சமர் என்ற சொல்லை நீக்கி. ஆதிதிராவிடர் என்ற பெயரால் அழைக்கப்பட வேண்டும் என்றும் ஆதிதிராவிடர் களுக்கு வேளாண்மை செய்வதற்காக நிலம் ஒதுக்கும் முடிவை மாவட்ட கலெக்டர்கள் எடுக்கலாம் நிலங்களைப் பெறுபவர்கள் ஆதிதிராவிடர்களுக்கு மட்டுமே விற்கலாம் என்றும் ஒரு பள்ளிக் கூடத்துக்கான இடத்தை கையகப் படுத்தும்போது அது ஆதிதிராவிட மற்றும் இதர மக்கள் வந்து செல்லும் இடத்தில் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும் என்றும் பெண்களுக்குக் கழிப்பறை கட்ட எந்த நிலத்தைக் கைப்பற்றலாம் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றியது நீதிக் கட்சி ஆட்சி.

கோயில்களையும், அறநிலையங்களையும் ஒழுங்குப் படுத்தும் இந்து சமய அறநிலையப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்ததும் நீதிக் கட்சி ஆட்சியே. இது நீதிக் கட்சியின் சிந்தனையில் உதித்தது அல்ல. மதுரையில் இருந்து செயல்பட்டு வந்த தரும இரட்சண சபை அல்லது அறக்கட்டளை பாதுகாப்புச் சங்கம் என்ற இயக்கம் 1907ஆம் ஆண்டு முதல் வலியுறுத்தி வந்த கருத்து இது. பெரும்பாலும் பிராமண வழக்கறிஞர்கள் உறுப்பினராக இந்த அமைப்பில் இருந்ததாக அந்தக் காலத்து மெட்ராஸ் மெயில் பத்திரிகை சொல்கிறது. இவர்களது கோரிக்கையைத் தான் நீதிக் கட்சி செயல்படுத்தியது. இந்தச் சட்ட முன்வடிவை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய சட்டமன்ற சிறப்பு உறுப்பினராக இருந்த என்கோபால்சாமி அய்யங்கார் இவர் பிற்காலத்தில் நேருவின் அமைச்சரவையில் இடம்பெற்றவர். இவரால் உருவாக்கப்பட்ட இந்து சமய அறநிலையப் பாதுகாப்புக் குழுவுக்குத் தலைவராக சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒய்வுபெற்ற நீதிபதி சர்.டி.சதாசிவ அய்யர் இருந்தார்.

சென்னை பப்ளிக் சர்விஸ் கமிஷனை உருவாக்கியதும், கட்டாயக் கல்வியை சட்டம் ஆக்கியதும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உருவாக்கியதும், நீதிபதிகளில் தகுதிவாய்ந்த இஸ்லாமியரை நியமிக்க வேண்டும் என்றதும், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பாதிக் கட்டணம் கட்டினால் போதும் என்றதும் லேபர் கமிஷனின் எல்லையை விரிவு படுத்தியதும், தஞ்சை மாவட்டத்தில் கள்ளர் சமூகத்தினருக்குப் பள்ளிகள் திறந்ததும். எனச் சொல்லிக்கொண்டே போகலாம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதி குப்பத்தில் குடிப்பழக்கம் அதிகமாக இருந்தது என்பதால், அங்கிருந்த தொழிலாளர்களுக்கு சிற்றுண்டிச் சாலை அமைத்துக் கொடுத்து அவர்கள் மனதை சிறு தொழில் பக்கம் திருப்பிய ஆட்சியையும் தீபாவளிக்கு டாஸ்மாக் இலக்கை ஆண்டுதோறும் அதிகப்படுத்திக் கொண்டு போகும்.ஆட்சியையும் நினைத்துப்பார்க்கும் போது  எங்கே தொடங்கி எங்கே வந்து நிற்கிறோம் என்ற குற்ற உணர்ச்சிதான் மனதைப் பிடித்து ஆட்டுகிறது.

அன்றைய ஜமீன்தார்கள் சாமானியர்களைப் பற்றி யோசித்தார்கள். இன்றைய சாமானியர்கள் அமைச்சர்கள் ஆனதும் ஜமீன்தார் துரைத்தனத்துடன் நடந்துகொள் கிறார்கள்.
திருநின்றவூரில் பிரேமா  மெடிக்கல் ஷாப் வைத்திருந்த பி.வி.ரமணா இன்று பால்வளத் துறை அமைச்சர் சக்தி முருகன் ரோடுவேஸ் வைத்து மணல் லாரி ஒட்டிக்கொண்டிருந்த தோப்பு வெங்கடாசலம், இன்று சுற்றுச்சூழல் அமைச்சர். சேலம் எடப்பாடியில் வெல்ல மூட்டைகள் வியாபாரம் பார்த்து வந்த எடப்பாடி பழனிச்சாமி நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர். ஒரத்தநாடு பன்னீர் சைக்கிள் கடை நண்பர்கள் உதவியால் தேர்தலில் நின்ற ஆர்.வைத்தி லிங்கம் விட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மை அமைச்சர். மதுரை தியாகராயர் கல்லூரியில் படித்துக்கொண்டே மதுரை பேருந்து நிலையத்தில் தனியார் ஆம்னி பேருந்து நிறுவனத்தில் பகுதி நேர வேலைபார்த்து வந்த ஆர்.பி.உதயகுமார் வருவாய்த் துறை அமைச்சர்.

இப்படி எல்லோருமே அடித்தட்டில் இருந்து வந்தவர்கள். இது கேவலம் அல்ல. சாமானியர்கள், அதிகாரத்தைப் பிடிப்பதுதான் ஜனநாயகத்தின் அடிப்படை அழகு. அப்படிக் கைப்பற்றுபவர்கள் கால் நிற்கும் தரையை மறந்து தலை முட்டும் கனத்தோடு வலம் வருவது நல்லாட்சியின் இலக்கணமா, பொல்லாட்சியின் இலக்கணமா?
- நன்றி ஜீனியர் விகடன் (25.11.2015)
-விடுதலை,20.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக