பக்கங்கள்

வெள்ளி, 13 நவம்பர், 2015

இந்தியாவில் தீண்டாமை

(இந்திய தீண்டாமையைப் பற்றி லண்டன் 1935 மே 1ஆம் தேதி ‘சண்டே எக்ஸ்பிரஸ்’ பத்திரிகையில் பாட்ரிக் மர்பி எழுதுவது)
சென்ற வாரம் இந்தியாவில் நாகபுரிக்குச் சமீபத்திலுள்ள கிராமத்தில் உயர்ந்த ஜாதியிற் பிறந்த ஓர் பெண், ஒரு கிணற்றில் தவறி விழுந்து தனக்கு உதவிக்கு ஓடி வரும்படி கூவி அழைத்ததின் பயனாய், இரண்டு தீண்டப்படாத வாலிபர்கள் இக்குரலைக் கேட்டு அவளைக் காப்பாற்றுவதற்காக கிணற்றண்டை ஓடி வந்தனர்.
ஆனால் மற்றக் கிராமத்தார்கள் அவர்கள் இருவரும் தீண்டப் படாதவர்கள்,  தண்ணீர் தீட்டுப்பட்டு குடிக்க உபயோகப்படாமல் போய்விடுமென்ற காரணங்களினால், அவ்விருவர்களையும் கிணற்றிலிறக்கி அப்பெண்ணைக் காப்பாற்றவொட்டாமல் தடுத்து விட்டனர். ஆகையால்  அப்பெண் மூழ்கி இறந்தாள். இது மாத்திர மல்லாமல், மற்றும் இந்த விதமான சம்பவங்கள் பல இந்தியாவில் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டே வருகின்றன.
நாம் கேட்டிராததும் நம் நாடுகளிலே இல்லாததுமான இந்தக் கொடிய பாழும் ஜாதிப் பாகுபாடுகள் இந்தியாவில் வேரூன்றித் தலை நிமிர்ந்துத் தாண்டவமாடுகின்றன.
ஜாதியில்லாப் பறையர்கள்

இந்தியாவில் குருக்கள், வீரர்கள் குடியானவர்கள், தொழிலாளிகளென நான்கு வகை ஜாதிகள் இருக்கின்றனர். அவர்கள் முறையே பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்றழைக்கப்பட்டு வருகிறார்கள்.
இவை தவிர இந்த மேல் கண்ட நான்கு ஜாதியிலேயே நூற்றுக்கணக்கான உட்பிரிவு ஜாதிகளுமிருந்து வருகின்றன.
இந்தப் பெரும் பிரிவாகிய நான்கு வகை ஜாதியைச் சேராதவர்கள் தீண்டப்படாதார் எனப்படுவர். அவர்களுக்கு ஜாதி என்பதே கிடையாது. அவர்களெல்லாம் தோட்டி வேலைகளைச் செய்து வருகிறார்கள். இவர்களின் மூலகாரணம் கீழே சொல்லப்படுகிற விதமாய்த் தோன்றியதாக நம்பப்படுகிறது.
இப்போதிருக்கும் இந்துக்களின் முன்னோர்கள், இந்தியா விற்குள் வந்தபோது திராவிடர்களென்ற கருப்பு நிற வகுப்பினரைக் கண்டனர். அவர்களுடன் உறவு கொண்டு கலியாணங்கள் முதலியவைகள் நடத்த இஷ்டப்படாதிதினால், அவர்கள் அசுத்தமானவர்களென்று புரோகிதர்கள் கூறினர். அக்கால முதற்கொண்டு அவர்கள் பறையர்களாயிருந்து வருகிறார்கள்.
தொட்டால் தீட்டு
ஆறுகோடி தீண்டப்படாதார் இந்தியாவில் இருக்கிறார்கள், அவர்களை ஒரு பிராமணரோ, ஜாதி இந்துவோ தொட்டால் சமுதாயமே அசுத்தப்பட்டுவிடும். காலஞ்சென்ற இடார் மகாராஜாவான பிரதாப்சிங் தன் அரண்மனையில் இறந்து போன பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர் ஒருவரின் சவத்தை தூக்கிச் சென்று அடக்கஞ்செய்தார். அவரின் சிநேகிதர்கள் அவரை அப்படிச் செய்ய வேண்டாமென்று எவ்வளவோ சொல்லியும் அவர் கேட்கவில்லை.
மறுநாட்காலை சில பிராமணர்கள் ஓடிவந்து சகிக்க முடியாத ஒரு காரியம் நடந்துவிட்டதென பிரதாபசிங்கிடம் கூற அதற்கு அவர் ஆம், ஒரு போர் வீரன் மாண்டு விட்டார் என்று சொன்னார். அப்பிராமணர்கள் இது மிகுதியும் மோசமான காரியமாகும் ராஜ புத்திர வம்சத்திற்கே நீர் கோடரிக்காம்பாம். உம்முடைய ஜாதிக்கும் பங்கமேற்படுத்திக் கொண்டீர் என்றல்லவா ஜனங்கள் சொல்லுகிறார்கள் என்று கூறினர்.
மஹாராஜா கோபமடைந்து, பன்றிகளே கவனியுங்கள் போர் வீரனென்ற ஜாதி தான் உலகத்திலுள்ள ஜாதிகள் யாவற்றிலும் மேன்மையானது. அது தான் எனது ஜாதியுமாகும் என்று கூறி, வேட்டைச் சவுக்கைக் கொண்டு வரும்படி ஆஞ்ஞாபிக்கவே பிராமணர்கள் ஓட்ட மெடுத்தனர். இந்தியாவில் ஜாதி மத வித்தியாசம் பாராத சிலர்களில் பிரதாபசிங் ஒருவராவர்.
நிழல் விஷமாகும் விதம்
தீண்டப்படாதவனின் நிழல் கசாப்புக்கடையில் தொங்கிக் கொண்டிருக்கும் மாமிசத்தின் மேல் விழுந்து விட்டால் உடனே எல்லா மாமிசமும் ஒன்றுக்கும் உதவாமல் பூமியில் புதைக்கப்படும். ஹூக்ளி நதிக்கரைக்கப்பாலுள்ள காட்டில் ஒரு வாலிப தாழ்த்தப்பட்டவனை ஒரு புலி துரத்துவதை அறிந்தும் சில உயர்ந்த வகுப்பினர் அவனுக்கு யாதொரு உதவியும் செய்யாமல் அவனைப் புலிக்கு இரையாக்கினர்.
தேசத்தின் கொடுமை
ஒருவர் தன் இரண்டு பிள்ளைகளை ஒரு மிஷன் பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதற்கு அழைத்துக்கொண்டு போயி ருந்தார். அவரும் அவரது இரண்டு குமாரர்களும் நல்ல சுத்தமான ஆடைகளை அணிந்திருந்தனர். தகப்பனார் தன் பிள்ளை களுக்குச் சம்பளம் எவ்வளவு கேட்டாலும் கொடுக்கத் தயாராயிருந்தார். புதிதாய்ச் சேரும் பையன்களை உபாத்தி யாயர்கள் பரிசோதித்து இன்ன வகுப்பிற்குத்தான் லாயக்கு என்று சொல்லுவது வழக்கம்.
அவ்வழக்கப்படி ஒரு உபாத்தியாயர் அவ்விரு சிறுவர்களை பரீட்சை செய்யும் தறுவாயில் வகுப்பிலிருந்து மற்றப் பையன்களெல்லாம், புதிதாய்ப் பள்ளியில் சேர விரும்புகிற அப்பையன்கள் இருவரும் தீண்டப்படாதவர் களென்றும், அவர்களைச் சேர்த்துக் கொண்டால் வகுப்பிலுள்ள சகல பிள்ளைகளும் பள்ளிக்கூடத்¬த் விட்டு விடுவதாகவும் கூறினர். அதன் பயனாக தாழ்த்தப்பட்டமக்கள் இருவரும் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.
பெரிய நகரங்களாகிய கல்கத்தா, அலகாபாத், டெல்லி முதலியவைகளிலிருப்பதைவிட இந்தியக் கிராமங்களில் தாழ்த்ததப்பட்டவர்களின் நிலைமை சகிக்க முடியாததும் ஆபத்தானதுமாயிருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களை நாம் கொடுமைப்படுத்துவதைப் போல ஜாதிப் பாகுபாடுகளில் இந்த அலங்கோலமான தற்கால வாழ்க்கையில் அதி வித்தியாசங் காட்டுவது சிறிதளவுக்கு குறைந்து இருக்கிறது.
ஹூக்னி நதியின் சர்வேயர் ஒருவர் சாமான்களை எடுத்துக் கொண்டு போக ஏற்படுத்தப்படுகிற கூலியாள்கள், கல்கத்தாத் துறைமுகத்திற்கு வந்ததும் பிராமணர்களையும், இந்துக்களையும் அவர்கள் செய்கிற கொடுமைகளுக்காக குறைகூறி அமளி செய்வார்கள். ஆனால் நாட்டுப்புறங்களில் அவர்கள் அவ்விதம் செய்யத் துணியமாட்டா னென்றும் சொல்லுகிறார்.
தீண்டாமைக்கு இலை அறிகுறி
இதே கூலியின் நிழல் ஒரு பிராமணனின் சோற்று மூட்டையில் படவே அப்பிராமணன் அவனை அடித்ததுமன்றி ஆகாரத் தையும் வீசியெறிந்து விட்டான். ஒரு தாழ்த்தப்பட்டவன் ரஸ்தாவின் வழியாய் போகும்பொழுது தான் தீண்டப்படாதவன் என பிறர் அறிந்து கொள்ளும் பொருட்டு ஒரு பச்சை ஓலையை தலையில் போடுவான்.
இதை ஒரு பிராமணன் பார்த்ததும் அவனை ஒதுங்கிப் போகும்படி சத்தம் போடுவான். அத்தாழ்த்தப் பட்டவன் அப்புறம் ஓடி, தான் இருநூறு அடி தூரத்திற்கப்பால் இருப்பதாகத் தெரிவிப்பான். தீண்டப்படாதவன் பசியாயிருந்தால் ஒரு ஹோட்டலில் சாப்பிட முடியாது, பஞ்சத்திலும், தண்ணீர் அகப்படாத, காலத்திலும், தாழ்த்தப்பட்டவர்கள் மற்றவர்களுக்காக ஊழியஞ் செய்த போதிலும் அவர்கள் கடைசியில்தான் கவனிக்கப் படுவார்கள்.
சிலர் வேலை செய்யக்கூடாது அவர்கள் ரஸ்தாவிற்கு வெகுதூரத்திலிருந்து பிச்சை கேட்க வேண்டும். அவர்கள் உரக்க சத்தமிட்டு பிச்சைகேட்டாலொழிய அவர்கள் நிற்குமிடத்தை பிச்சை கொடுப்பவர் தெரிந்து கொள்ள முடியாது.
ஒருவர் தருமமாக ஒரு காசைப் போட்டுவிட்டு கண்ணுக் கெட்டாததூரத்தில் மறைந்த பின் தீண்டப்படாதவன் ரஸ்தாவை யணுகி அக்காசை எடுக்க வேண்டும், தப்பித்தவறி அவர்கள் உயர்ந்த ஜாதிக் காரர்களை காண நேரிட்டால் தீண்டப்படாதவன், தீண்டப்படாதவனென்று சத்தம் செய்ய வேண்டும். எவ்வளவோ மாநாடுகள் கூடுகின்றன, அவைகள் துரதிர்ஷ்டமுள்ள இவர் களுக்கு உயர்ந்த ஜாதிகாரர்கள் செய்யும் கொடுமைகளைப் போக்க முடியவில்லை.
இரண்டாயிரம் வருஷங்கள் வரை இருந்தது போலவே இப்போதும் தீண்டாமையானது சமுதாயத்திற்கு ஒரு தீங்காகக் கருதப்பட்டு வருகிறது. அறிவும், சீர்திருத்த நோக்கமு முள்ள ஒரு சிலரிடத்தில்தான், தீண்டப்படாதவரிடத் திலுள்ள வெறுப்பு கொஞ்சம் குறைந்திருக்கிறது.
ஆனால், பொதுவாய் தீண்டாமை முன்னிருந்தது மாதிரியே இப்போதும் இருந்து தான் வருகிறது. அதிகக்கொடுமை மூன்று வருஷங்களுக்கு முன்புதான், இவர்களுடைய நிலைமையை இன்னும் அதிக மோசமாக்குவதற்கு ஒரு தீர்மானத்தை ஜாதி இந்துக்கள் நிறைவேற்றினர். அத் தீர்மானத்தின் அம்சங்களாவன.
தீண்டப்படாதவர்கள் முழங்கால் களுக்குக் கீழும், இடுப்பிற்கு மேலும் ஆடை அணியக்கூடாது. அவர்கள் கிராப்பு வைத்துக் கொள்வதும் மழை வெய்யிலுக்காகக் குடை பிடித்துக் கொள்வதும், செருப்புப் போட்டுக் கொள்வதும் கூடாது. அவர்களில் சிலர் வில்லை வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடாது.
அவர்கள் ஓலை கூடுகள் கட்டிக் கொண்டு வசிக்கவும் இலை, கம்புகளினால் கூடாரங்கள் கட்டிக் கொள்ளவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரு பிராமணன் ஒரு சூத்திரனைக் கொலை செய்துவிட்டு, நூறுதரம் மந்திரம் ஜெபித் தால் அவனுடைய பாவம் நீங்கி விடுகிறதென மனுதர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தீண்டப்படாதவர்களைக் கொண்டு ரஸ்தாக்களை ரிப்பேர் செய்வதைக் காட்டிலும், பாழடைந்து கிடப்பதே நலமென சென்னையில் பல பாகங்களிருக்கின்றன.
துன்பத்திற்கு ஆளாகின்றனர்
மத்திய மாகாணத்தில் ஒரு இடத்தில் ஒரு அற்ப குற்றத்திற்காக தீண்டப்படாதவன் ஒருவன், ஒரு பிராமணரால் குற்றஞ்சாட்டப் பட்டான். மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் அவன் ஆஜராவதற்குப் பயந்ததினால் தன்னை அவன் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. வங்காளத்தில் சில இடங்களில் தபால்காரர்கள் தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கடிதங்கள் கொடுக்க மறுக்கின்றனர்.
இந்தியாவில் கிட்டத்தட்ட எங்கும் ஒரு கிராமத்திற்கு ஆற்றிலிருந்து தண்ணீர் வருமானால், தீண்டப்படாதவர்கள், உயர்ந்த ஜாதிக்காரர்களுக்குப் போகும் தண்ணீரைத் தொடாமல், அப்புறமுள்ள தண்ணீரை ஆற்றிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். பல வியாதிகளாளல் கஷ்டப்படுகிற தீண்டப்படாத பெண்களும், குழந்தைகளும் சிகிச்சை சாலைகளில் உயர்ந்த ஜாதிக்காரர்களிருக்குமிடங்களுக்குச் செல்லப் பயப்படுகிறார்கள். பெண் கிணற்றில் விழுந்து இறந்த க¬தையைப் போல, இன்னும் இதைப்போன்ற சம்பவங்கள் இருக்கின்றன.”
(குடி அரசு - 1935)
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர் இவர்களைப் போன்றவர்களின் தன்னலம் கருதா கடின உழைப்பினால் இன்று இந்த நிலைமை எவ்வளவோ மாறியிருப்பினும் ஜாதி அடுக்குகளில் அதிகாரம் கொண்ட ஆதிக்க ஜாதிகள் தங்கள் மேலுள்ள பார்ப்பனரின் பார்வையில் நாம் அனைவரும் ஒன்றே என்றுணர்ந்தால் தீண்டாமைக்கு தீயிடலாம்.
-விடுதலை,7.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக