பக்கங்கள்

திங்கள், 16 மே, 2016

ஒடிசா மாநிலத்தில் சமூகநீதிக்கான கி.வீரமணி விருது - 2014 வழங்கும் விழா!


தமிழர் தலைவரின் புவனேசுவரப் பயணம்! ஒரு தொகுப்பு
- வீ.குமரேசன்
உலகில், புரட்சிகரமான சிந்தனை களும் செயல்பாடுகளும் பல்வேறு நாடு களில் தோன்றி மானிடத்தை மேம்படுத் தியுள்ளன. மானிட மேம்பாட்டிற்கான சிந்தனைக்கும், செயல்பாட்டிற்கும் ஊற் றாகப் பல்வேறு அறிஞர்கள் தோன்றி, வாழ்ந்து, வழிகாட்டி மறைந்துள்ளனர். புரட்சிகர சிந்தனைகள் மற்றும் செயல் பாடுகள் என்பது நடைமுறையில் எளி தான ஒன்றல்ல. சிந்தனைகளை உரு வாக்கி வெளிப்படுத்தும் அறிஞர்களை அடுத்து செயல்வடிவம் கொடுக்கும் தலைவர்கள் வருவது இயல்பு. புரட்சிகர மாற்றம் என்பது ஒரு தலைவரது வாழ்நாளில் மட்டுமே வெற்றி கண்டுவிடுவதில்லை காரணம் புரட்சிகர சிந்தனைகளை மக்களிடம் எடுத்துச் சொல்லி மனமாற்றம் கொள்ளச் செய் வதற்கே ஓரிரு தலைமுறைகளுக்கு மேலாகிவிடும். செயல்வடிவம் கொண்டு வர அடுத்த தலைமுறைத் தலைவர் கள்தான் முன்வரவேண்டும். இதுவே புரட்சிகர சிந்தனைகள், செயல்பாடுகள் நிலைபெறுவதற்கான இயல்புக் கூறு களாகும்.
ஆளும் தரப்பினரால் அடக்கு முறை அதிகமாகும் பொழுது ஆயுதம் ஏந்தி புரட்சிகர செயல்பாடுகளினால் சமூக அரசியல் மாற்றங்கள் ஏற்படக் கூடும். இத்தகைய மாற்றங்கள், வெகு மக்களின் உண்மையான மனமாற்றம் மற்றும் செயல்பாட்டு ஈடுபாட்டால் மட்டுமே நீடித்திட முடியும். கொள்கை அடிப்படையில்  மக்களிடம் முழுமை யான மனமாற்றம் ஏற்படாவிட்டால் புரட்சிகர மாற்றங்களும் நாளடைவில் நீர்த்துப்போய் வீரியம் குறைந்து, எதிர் திசையில்  சமூகப் பயணம் திரும்பிடக் கூடும். உண்மையான புரட்சிகர மாற்றங் கள் ஆயுதம் ஏந்துதலை விட அறிவு விளக்கம் மூலம் ஏற்பட்டால்தான் நீடித்து நிலைத்திட முடியும். சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அடக்கு முறை களை அடையாளம் கண்டு, சிந்தித்து, கருத்துவிளக்கம் அளிப்பதோடு மட்டு மல்லாமல், துணிச்சலாக செயல்பாட் டிலும் இறங்கி போராட்டக் களம் கண்டு தனிமனித செயல்பாட்டளவில் நின்று விடாமல், இயக்கம் கண்டு கொள்கைப் போராளிகளை உருவாக்கி, தமது காலத்திற்குப் பின்னரும் தொடர்ந்து பிரச்சாரமும் அதன்மூலம் மக்களிடம் மனமாற்றத்தினை ஏற்படுத்திடும் செயல் பாடுகளும் தொடர்ந்து நடைபெற வழிவகுத்து சமூக முன்னேற்றம் காணும் சாதனைகளை நடத்திடவல்ல  சமூக புரட்சியாளர்கள் வரலாற்றில் மிக மிக அரிது. அறுதியிட்டுச் சொன்னால் இல் லவே இல்லை. தாம் வாழ்ந்த காலத்தில் மட்டும் கருத்து விளக்கம் அளித்து, விட்டில் பூச்சிகளாய், வாழ்ந்த காலத்தில் மட்டுமே போற்றப்பட்டு, பின்னாளில் வெறும் வரலாற்றுக் குறிப்புகளாக அமைந்து விட்ட சமூக தலைவர்கள் பெரும்பாலோர்.
சமூக மாற்றத் தேவைக்கான சூழலை முழுவதும் புரிந்துகொண்டு, துணிச் சலுடன் இதுவரை கடந்த காலங்களில் பயணப்படாத புத்தாக்கப் பாதையில் சமு தாயப் பணி ஆற்றி, உடலால் மறைந் தாலும் பகுத்தறிவுக் கொள்கை வழி காட்டுதலால்,  வருங்காலத்தில் வழி நடத்தும் உரிய ஆளுமையினை அடை யாளம் காட்டி,  உலக வரலாற்றில் ஆயு தம் ஏந்தாமல் அறிவுப் புரட்சிமூலம் சமுதாயத்தில் முன் எப்பொழுதும் ஏற் படாத மாபெரும் மாற்றத்தினைக் கண்ட தலைவர் தந்தை பெரியார் ஒருவரே. தந்தை பெரியாரின் சிந்தனைகள், கருத்துகள் கொள்கை வடிவம் அளிக் கப்பட்டு தத்துவ நிலை அடையும் நிலை மைகள் உருவாகி வருகின்றன. தந்தை பெரியார்தம் சிந்தனையில் விளைந்த கருத்துகளை உலகளாவிய அளவில் பரப்பிட தந்தைப் பெரியாரின் கொள்கை வழித்தோன்றல் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பல நேரங்களில், பல்வேறுபட்ட அணுகுமுறைகளை மேற் கொண்டு, இயக்கத்தினை வழிநடத்து கிறார்.
தந்தை பெரியாரை உலக மயமாக்கல் - எனும் உன்னதப் பணியில் கருத்துப் பரவலை எந்நாளும் எந்நேர மும் நினைத்து தமிழர் தலைவர் சமுதாயப் பணி ஆற்றி வருகிறார் அமெரிக்காவில் தலைமையிடத் தைக் கொண்டு செயல்பட்டு வரும் பெரியார் பன்னாட்டு மய்யம் (Periyar International) தமிழர் தலைவரின் பெயரால் ஒரு விருதினை -சமூக நீதிக்கான கி.வீரமணி விருது - நிறுவி 1996 ஆம் ஆண்டு முதல் வழங்கி வருகிறது. சமூகநீதிக்கு பாடுபட்டு வரும் உலகின் பல நாடுகளில் உள்ள தலை வர்களைப் போற்றி ஒவ்வொரு ஆண் டும் ஒரு பெருமகனாருக்கு அந்த விரு தினை வழங்கி வருகிறது. இதுவரை இந்திய நாட்டில், உத்தரபிரதேசம், தமிழ் நாடு, (ஒன்றுபட்ட) ஆந்திரபிரதேசம், கர்நாடகம், மகாராஷ்டிரம், டில்லி மற்றும் சிங்கப்பூர், துபாய், மியான்மார் ஆகிய நாடுகளில் வாழும் பெருமக்களுக்கு சமூகநீதிக்கான விருதினை  வழங்கி வந்துள்ளது. 2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதி விருது ஒடிசா மாநில சமூக நீதிப் போராளியும், ஒடிசா மாநில பகுத் தறிவாளர் சங்கத்தின தலைவருமான பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர் களுக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத் தலைநகர் புவனேசுவரத்தில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் பங்கேற்றிட தமிழர் தலைவர் 2014 நவம்பர் 22ஆம் நாள் சென்னையி லிருந்து விமானம் மூலம் கிளம்பினார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன்தமிழ் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் ஆகி யோர் உடன் சென்றிருந்தனர்.
தமிழர் தலைவர் புவனேசுவரம் சென்றடைவு - விமான நிலையத்தில் வரவேற்பு சென்னையிலிருந்து காலை 7.20 மணிக்கு கிளம்பிய விமானம் புவனே சுவரத்திற்கு 10.50 மணிக்கு வந்து சேர்ந் தது. இடையில் அரைமணிநேரம் விசா கப்பட்டினத்தில் பயணிகள் இறங்கி, புதிய பயணிகள் ஏறிட விமானம், நிலையத்தில் நின்றது. புவனேஸ்வரம் - பிஜூபட்நாயக் விமானநிலையத்தில் இறங்கி பயணிகள் தம் உடமைக்காகக் காத்திருந்த வேளையில், அதே விமா னத்தில் பயணம் செய்த சென்னையைச் சார்ந்த மருத்துவக் கருவிகள் விற்பனை அதிபர் திரு.ரங்கநாதன் தமிழர் தலை வரிடம் தம்மை அறிமுகம் செய்து கொண்டு தமது தந்தையாருக்கு தந்தை பெரியார் தலைமையில் திருமணம் நடைபெற்ற செய்தியினை பெருமை யுடன் நினைவு கூர்ந்தார். வணிகச் செயல்பாடாக தாம் புவனேசுவரம் வந்த செய்தியினைத் தெரிவித்துவிட்டு, தமிழர் தலைவரின் ஒடிசா மாநிலப் பயண நோக்கம் பற்றி அறிந்து மகிழ்ந் தார். பயண உடமைகளை பெற்றுக் கொண்டு விமானநிலைய வெளி வாயி லுக்கு வந்த பொழுது தமிழர் தலைவரை பேராசிரியர் தானேஸ்வர் சாகு வர வேற்றார். முனைவர் இலக்குவன் தமிழ் அவர்களையும் வரவேற்று, எங்களை புவனேசுவரம் நகரின் மய்யப் பகுதியில் அமைந்துள்ள ஒடிசா மாநில அரசின் சுற்றுலாத்துறை விடுதிக்கு அழைத்துச் சென்று தங்க வைத்தனர். ஒடிசா மாநி லத்திற்கு தமிழர் தலைவர் வருகை புரிவது இது இரண்டாவது முறை.
2013 அக்டோபர் மாதம் புவனே சுவரத்தில் நடைபெற்ற பெரியார் ராச்சனா எனும் முதன் முதலாக ஒடியா மொழியாக்க தந்தை பெரியாரின் சிந்தனைத் தொகுப்பினை வெளியிட வருகை புரிந்திருந்தார். முன்னர் ஒரே ஒருமுறை புவனேசுவரத்திற்கு வருகை தந்திருந்தாலும், விமான நிலையத்தி லிருந்து, விடுதிக்கு வரும் வரை பயண வழியில் உள்ள பல்வேறு கட்டிடங்கள், இடங்கள் பற்றி (பேராசிரியர் தானேஸ் வரர் சாகு கல்விப் பணி ஆற்றி, பணி நிறைவு பெற்ற கல்லூரி உட்பட) சரியாக நினைவுபடுத்தி உரையாடிக் கொண்டு வந்தார். விடுதி அறைக்கு வந்து சேர்ந்த பின்னர், அடுத்தநாள் நடைபெறவிருக் கும் விருது வழங்கிடும் விழா பற்றிய ஏற்பாடுகள் பற்றி கூட்ட ஏற்பாட்டாளர் கள் தமிழர் தலைவரிடம் எடுத்துரைத் தனர். நண்பகல் உணவினை விடுதி யிலேயே அருந்திவிட்டு சற்று நேரம் இளைப்பாறினார். மாலை 4 மணி அளவில் கூட்ட ஏற்பாட்டாளர்கள் புவ னேசுவரம் நகரத்தைச் சுற்றியுள்ள புத்த, சமண வரலாற்று நினைவிடங்களான தவுலகிரி, காந்தகிரி மற்றும் உதயகிரி -தொல்லியல் முக்கியத்துவம் நிறைந்த இடங்களைக் காண தமிழர் தலைவரை அழைத்துச் சென்றனர்.
ஒடிசா மாநிலம், குறிப்பாக புவனே சுவரப் பகுதிகள் ஒரு காலத்தில் புத்த, சமண மத வாழ்வியல் நெறிகளைக் கொண்ட மன்னர்கள் ஆண்டவை ஆகும். மவுரிய வம்சத்து மன்னர் சாம்ராட் அசோகன், கலிங்கப் போர் புரிந்து புத்த மார்க்கத்தை தழுவியது புவனேசுவரத்தின் தென்பகுதியில் ஓடு கின்ற தயாநதிக் கரையில்தான் எனக் கூறப்படுகிறது. வரலாற்றுக் குறிப்புகள் கல்வெட்டு வடிவில் உள்ளன. அசோக மன்னர் வாழ்ந்த காலம் கி.மு.304-232 ஆகும். அவர் இறுதியாகப் போர்புரிந்து கலிங்கத்தின் மீதுதான். பல்லாயிரக் கணக்கில் போர்வீரர்கள் மடிந்து இரத்த ஆறாக தயாநதி காட்சி அளித்ததாகக் கூறப்படுகிறது. அசோக மன்னர் மனம் மாறி புத்தமார்க்கம் தழுவியதை நினைவு படுத்தி, புத்தருக்கு நினைவுச் சின்னமாக தவுலகிரி மலை மீது மிகப் பிரம் மாண்ட புத்தரின் சிலை நிறுவப்பட் டுள்ளது. ஜப்பான் நாட்டு புத்த சங்கமும், கலிங்க புத்த சங்கமும் இணைந்து அந்த நினைவிடம் 1970 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்திய அரசின் தொல் லியல் துறை கட்டுப்பாட்டின், பராமரிப் பில் உள்ளது. தவுலகிரி - புத்தநெறி வரலாற்றுச் சிறப்பிடம் புவனேசுவரத்தின் தெற்குப் பகுதி யில் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள தவுலகிரி புத்த நினைவிடத்திற்கு தமிழர் தலைவர் செல்வது இது இரண் டாவது முறை. 2013 ஆம் ஆண்டில் புவனேசுவரம் வருகை தந்த பொழுது இந்த நினைவிடத்தினைப் பார்த்துச் செல்ல வந்தார். மாலை 6 மணிக்கு மேல் ஆகி இருட்டிவிட்ட காரணத்தால் நினைவிடம் குறித்த குறிப்புகளை தமிழர் தலைவர் முழுமையாக அப் பொழுது பார்த்திட இயலவில்லை. எனவே மீண்டும் ஒருமுறை தவுலகிரி நினைவிடத்திற்குச் சென்று நினைவிடத் தில் ஒவ்வொரு சிறப்பினையும், கல் வெட்டுக் குறிப்புகளையும், தொல்லியல் துறை அளித்துள்ள தகவல்களின் அடிப் படையில் அறிந்து கொள்ள விரும் பினார்.
அறிவியல், தொழில்நுட்பம், போக்குவரத்து வசதிகள் அவ்வளவாக இல்லாத அந்தக் காலத்தில், செவிவழிச் செய்தியாக, பகுத்தறிவுச் சிந்தனையின் அடிப்படையில் புத்தநெறி பரவியது - அன்றைய ஆட்சியாளர்களின் ஆதர வோடு சிறப்புற்று விளங்கியது. புத் தருக்குப் பின், பகுத்தறிவின் அடிப் படையில் மனிதநேயம் தழைத்திட, மானிடம் மேம்பட இயக்கம் கண்டு சமுதாயப் பணி ஆற்றியவர் பேராசான் தந்தை பெரியார் ஆவார். பின்னாளில் புத்த மார்க்கம் தடம் புரண்டு, மதமாக அடையாளப் படுத்தப்பட்டு புத்தர் கடவுள் நிலைக்கு ஆளாக்கப்பட்டது.  தந்தை பெரியார்தம் இயக்கத்தில் அத் தகைய திசை திருப்பல்கள் இடம்பெறாத வகையில், தொடக்கம் முதல் பலமான அடிப்படை இயக்கவிதிமுறைகள் உரு வாக்கப்பட்டன. தந்தை பெரியாரது கொள்கைகள் திரிபுவாதத்திற்கு ஆட் படாத வகையில் பெரியாரைக் கடவுள் நிலைக்கு ஆளாக்கிவிடாதவாறு கடவுள் இல்லை; கடவுள் இல்லை; கடவுள் இல்லவே இல்லை எனும் முழக்கத் தினை தந்தை பெரியார் கொள்கைச் செல்வமாக அளித்துள்ளார். புத்தமார்க் கத்தை விட, பரந்துபட்டு செல்லக்கூடிய கொள்கை வலிமை பெரியாரது சிந் தனைகளுக்கு உண்டு.
பெரியாரது கொள்கைகள் விரை வாக பரந்துபடாததற்கு அதனுடைய தொலைநோக்கு முன்னேற்றக் கருத் துகள், பல்வேறு தலைமுறைகளையும் கடந்து நிலைகொண்டு முற்போக்கு முத்திரையுடன் திகழத் தக்கவை என்று தமிழர் தலைவர், புத்தர் நினைவிடத்தில் பெரியார் தம் கொள்கை பரவலைப் பற்றியே நினைத்துக் கொண்டும், உடன் சென்றவர்களுடன் உரையாடிக் கொண் டும் இருந்தார். சுமார் ஒரு மணிநேரம் தவுலகிரி புத்த நினைவிடத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு காந்தகிரி, உதயகிரி வரலாற்றுச் சிறப்பிடங்களைப் பார்வை யிட கிளம்பினார்.
காந்தகிரி - உதயகிரி இரட்டை மலை - சமணத் துறவியர் வாழ்ந்த உறைவிடங்கள்
புவனேஸ்வரம் நகரத்தின் மேற்குப் பகுதியில் 5 கி.மீ தொலைவில் அமைந் துள்ள சமணத்துறவியர் வாழ்ந்த குடை வரை உறைவிடங்கள் இரட்டை மலை யான காந்தகிரி-  உதயகிரி மலைகளில் உள்ளன. ஒடிசாவின் முதல் மன்னரான காரவேலா - மகாகேவாகனா காலத்தில் அமைக்கப்பட்டவை. காந்தகிரி-  உதய கிரி மலை உறைவிடங்கள். காந்தகிரி மலையில் 15 குடைவரை உறைவிடங் களும், உதயகிரி மலையில் 18 குடை வரை உறைவிடங்களும் உள்ளன. மலையினைக் குடைந்து அமைக்கப் பட்ட உறைவிடங்கள் அந்த காலத்தில் சமணத் துறவியர் வாழ்ந்த ஒளிமையான வாழ்வினை எடுத்துக்காட்டுவதாக இருந் தன. இந்த வரலாற்றுச் சிறப்பிடங்கள் இன்று வழிபாட்டுக்குரியவையாக அல் லாமல்  தொல்லியல் துறையின் பாது காப்பில் இருப்பது ஒரு பெரும் சிறப்பு ஆகும்.
- தொடரும்
தமிழர் தலைவரின் புவனேசுவரப் பயணம்! - ஒரு தொகுப்பு    (2)
- வீ.குமரேசன்
வழிபாட்டுக்குரியவையாக பராமரிக் கப்பட்டிருந்தால் வரலாற்று உண்மை நிலை திரிபு செய்யப்பட்டிருக்கும். வர லாற்றுச் சிறப்பிடங்கள் பல வழிபாட்டுத் தலங்களாக மாற்றப்பட்டு உண்மைக்கு முற்றிலும் மாறான அடையாளத்துடன் கோயில்களாக மாறியுள்ள நிலைமைக்கு ஏராளமான எடுத்துக்காட்டுகளை சுட்டிக் காட்டிட இயலும். சுற்றுலாப் பயணி களை கவர்ந்திடும் வகையில் ஆங் காங்கே புல்தரை அமைத்து, தொல்லி யல்துறை காந்தகிரி - உதயகிரி இரட்டை மலையில் உள்ள சமணர் உறைவிடங்களை பாதுகாத்து வருவது பாராட்டுக்குரியது. தொல்லியல்துறைக் குறிப்புகளை தமிழர் தலைவர் மலை யின் அடிவாரத்தில் இருந்த நிலையி லேயே பார்த்து, கேட்டு அறிந்து கொண் டார். இலக்கு வன்தமிழ் மலை முழு வதும் சுற்றிப் பார்த்துவிட்டு இறங்கி வந்தார். தமிழர் தலைவர் மலை அடிவாரப் பகுதியில் இருந்தபொழுது சுற்றுலா வந்த தமிழர் ஒருவர் தமிழர் தலைவரை அடையாளம் கண்டு, நலம் விசாரித்து அவருடன் ஒளிப்படம் எடுத் துக் கொண்டார். சற்று நேரம் தமிழர் தலைவருடன் உரையாடிவிட்டு விடை பெற்றார்.
விடுதிக்கு திரும்பிய பின்பு குளித்து முடித்து இரவு உணவினை சுற்றுலா விடுதியில் உள்ள உணவகத்திலேயே தமிழர் தலைவர் அருந்தினார். உண விற்குப் பின் சற்றுநேரம் உரையாடி விட்டு, அடுத்தநாள் காலையில் வங்கக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள கோனார்க் சூரியன் கோயில் தொல் லியல் சிறப்பிடத்திற்கு செல்ல வேண் டிய ஏற்பாடுகள் குறித்து அறிந்த பின்னர் உறங்கச் சென்றார். உடன் சென்றிருந்த அனைவரும் அந்த விடுதியிலேயே தங்கினோம்.
தொல்லியல் பெருமைமிகு கோனார்க் சூரியன் கோயில்
புவனேசுவரம் நகரத்திலிருந்து கிழக்கு நோக்கி 50 கி.மீ பயணித்தால் வங்கக் கடற்கரை ஓரம் அமைந்துள்ள கோனார்க் சூரியன் கோவில் - தொல்லியல் சிறப்பிடத்தைச் சென்ற டையலாம் . கோனார்க் என்னும் வட மொழிச் சொல், கோனா (மூலை) - ஆர்கா(சூரியன்) ஆகியவற்றின் கூட்டு. கடற்கரையோரம் 857 X 540 பரப் பளவில் அமைந்துள்ளது கோனார்க் தொல்லியல் சிறப்பிடம். இது கலிங்கக் கட்டிடக் கலையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கோயி லாகும்.
நான்காம் நரசிம்ம மன்னரின் (கி.பி.1305அல்லது 1384) ஆட்சிகால  தாமிரப் பட்டயத்தின் மூலம் இந்தக் கோயில் சரியான நிலையில் இருந்தது என தெரியவருவதால் - இந்தக் கோயில் 13ஆம் நூற்றாண்டு காலத்தில் எழுப்பப் பட்டது எனக் கருதலாம். முழுவதும் கொண்டலைட் கற்களால் (Khondalite) கட்டப்பட்டது.
மய்யக் கருவறைக் கோயிலின் விமானம் 229அடி உயரமுள்ளது. 128அடி உயரம் கொண்ட பார்வையாளர்அரங்கம் சிதிலமடைந்து காட்சி அளிக்கிறது. இதைஒட்டி நாட்டிய அரங்கமும், உணவு அருந்தும் அரங்கமும் உள்ளன. 12 இணை கல் சக்கரங்கள் (ஒவ்வொன்றும் 3 மீட்டர் விட்டம்) கொண்ட சாரட் வண்டியினை 7 குதிரைகள் (வலது பக்கம் 4, இடது பக்கம் 3) இழுத்துச் செல்லும் நிலையில் அதில் சூரியக் கடவுள் கோயிலாக அமர்ந்திருப்பது போன்ற கல்வேலைப் பாடுதான் கோனார்க் தொல்லியல் பெருமையின் மய்யக் கூறாகும். கிழக்கு- மேற்கு பக்கவாட்டில் அமைந் துள்ள கோவிலில் சூரிய உதயத்தின் பொழுது, சூரிய ஒளிக்கதிர்கள் கோயில் நுழைவுப் பகுதியில் இயற்கையாகப்  படிந்து பரவுகிறது. பாலியல் செயல்களைக் காட்டிடும் சிற்பங்கள் பல, கோயில் முழுவதும் நிரம்பியுள்ளன.
ஏறக்குறைய 12 ஆண்டு காலம், அரசு வருவாய் முழுவதையும் கொண்டு, 12,000 தொழிலாளர்கள் மற்றும்  சிற்பிகளின் உழைப்பில கட்டப்பட்டு வந்தநிலையில் அன்றைய மன்னன், பொறுமை இழந்து,  கோயிலை விரை வாகக் கட்டி முடித்திட ஆணையிட்ட தாகக் கூறப்படுகிறது. இதனால் அவசர கதியில் முடிக்கப்பட்டு கோயில் வழிபாட்டுத்தலமாக நிலவி வந்தது. மேல் கட்டுமானத்தின் சுமை, வலிமை குன்றிய மண்பாங்கு சூழல் காரணமாக 1837ஆம் ஆண்டு மய்யக் கோவில் விமானம் கீழிறங்கி விட்டது. அதற்கும் முன்னதாக 1627ஆம் ஆண்டில் அன் றைய குர்தா மன்னன் கருவறையில் இருந்த சூரியச் சிலையினை பெயர்த்து எடுத்து பூரி ஜெகந்தாதர் கோவிலில் வழிபாட்டிற்கு வைத்துவிட்டான்.
1929இல் நடைபெற்ற ஆய்வுகளின்படி 1573ஆண்டிலேயே இந்த இடத்தில் வழிபாடு கைவிடப்பட்டது. கோயில் சிதலமடைந்ததற்கு பல்வேறு கார ணங்கள் கூறப்பட்டாலும், இந்தக் கலைச்சின்னங்கள் வழிபாட்டுத் தலமாக இல்லாமல் இருப்பது ஒருவகையில் நன்மையே. காரணம், வழிபாட்டுத் தலமாக தொடர்ந்திருந்தால், தலபுரா ணம் என ஆன்மீகவாதிகள் தங்களுக் குத் தோன்றியதை சொல்லி ஆவணப் படுத்தியிருப்பார்கள். கலைப் பண்பாட் டுச் சிறப்பினைக் கட்டிக் காத்து வரு வதில் தொல்லியல் துறையின் பங்கு அதிகம். கோனார்க் கலைச் சிறப்பினைப் பார்த்து வங்கக் கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் கல்மொழி, மனிதமொழியினை யும் கடந்து பெருமை பறைசாற்றி வருகிறது (Here the language of stone surpasses the language of man)  எனக் குறிப்பிட்டது கோனார்க் கலைச் சிறப்பின் பெருமைக்கு சான்றாகும்.
1984ஆம் ஆண்டில் இந்த கோனார்க் தொல்லியல் சிறப்பு உலக பாரம்பரிய பெருமைகளுள்(World Heritage Site) ஒன்றாக யுனெஸ்கோ நிறுவனத்தால் அறிவிக்கப்ட்டது.
கோனார்க் கலைச் சிறப்பினை முன்னமே அறிந்திருந்த தமிழர் தலைவர் அவசியம் அந்தச் சிறப்புகளை நேரில் காண வேண்டும் என ஆவல் கொண்டிருந்தார். ஏறக்குறைய ஒரு மணி நேரப் பயணத்தில் புவனேசுவரத் திலிருந்து கோனார்க்
வந்தடைந்தோம். சுற்றுலா வழிகாட்டியின் துணையுடன் ஒவ்வொரு கலைஅம்சத்தின் சிறப் பினை, அதன் பின்புலத்தினை தமிழர் தலைவர் அறிந்துகொண்டார். அன்று நிலவிய கடுமையான வெயிலிலும், ஒவ்வொரு பகுதியினையும் பொறுமை யாக, விளக்கம் கேட்டு, கலை உரு வாக்கச் சின்னங்கள் குறித்து வியப் படைந்தார். கலைப்பெருமை என்பதன் பெயரால் அரசு வருவாயும், மக்கள்
உழைப்பும் அளவுக்கும் அதிகமாகவே பயன்பட்டு இருப்பதையும் மறுப்பதற் கில்லை. இந்த வருவாயும், உழைப்பும் அன்றைய மக்களின் வாழ்வு மேம் பாட்டுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந் தால், மனிதர்கள் மேலும் வளப்பட்டி ருப்பார்களே என்ற எண்ண ஓட்டமும் அச்சமயம் தோன்றியது. மொத்தத்தில் கோனார்க் கலைச் சின்னங்களின் இன்றைய பெருமைக்கு முதற்காரணம் அது வழிபாட்டுத்தலமாக இல்லாமல், தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்து வருவதே ஆகும். வழிபாட்டுக் கட்டுப்பாட்டில் இருந்திருந் தால்,   இந்த கலைச் சின்னங்களின் முறையான பராமரிப்பு ஆன்மீக நம்பிக்கை களுக்கு புறம்பானது என ஆதிக்க சக்திகளால், கற்பிக்கப்பட்டு இதன்மூலம் கிடைத் திடும் வருவாய், பொதுநலத் திற்கு பயன் படுவதை விட, தனிநபர் பயன்பாட் டிற்கே ஆளாகி இருக்கும்.
நண்பகல் 12 மணி ஆகிவிட்ட நிலை யில், கோனார்க்கிலிருந்து கிளம்பி மீண்டும் புவனேசுவரம் வந்தடைந்து, விடுதி உணவகத்திலேயே நண்பகல் உணவினை அருந்திவிட்டு மாலையில் நடைபெறவிருந்த சமூக நீதி விருது வழங்கும் விழா நிகழ்ச்சியில் பங்கேற் றிட தமிழர் தலைவர் அணியமானார்.
- தொடரும்
தமிழர் தலைவரின் புவனேசுவரப் பயணம்! - ஒரு தொகுப்பு    (3)

- வீ.குமரேசன்

சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கும் விழா
2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதிக் கான கி.வீரமணி விருது ஒடிசா மாநில பகுத்தறிவாளர் சங்கத்தின் தலைவரும், தத்துவப் பேராசிரியருமான தானேஸ்வர் சாகு அவர்களுக்கு வழங்கும் விழா வினை ஒடிசா மாநில பகுத்தறிவாளர்கள் மற்றும் சமூகநீதி ஆர்வலர்கள் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.
புவனேசுவரம் நகரின் மய்யப் பகுதியில்  பேருந்துநிலையம் மற்றும் இந்திராகாந்தி பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள அய்டிசிஓஎல் (IDCOL - The Industrial Development Corporation of Odisha Limited)  அரங்கத்தில் விருது வழங்கும் விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
சரியாக 6 மணிக்கு துவங்கிய விழா நிகழ்ச்சிக்கு தத்துவப் பேராசிரியரும், ஒடிசா மாநில பகுத்தறிவாளர் மன்றத் தின் துணைத் தலைவருமான முனை வர் பிரதாப்குமர் ராத் தலைமை வகித் தார்.  பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக்குநர் முனைவர் இலக்குவன்தமிழ் முன்னிலை வகித்தார். சமூகநீதிக்கான கி.வீரமணி விருது நிறுவப்பட்டதன் நோக்கம் பற்றியும், கடந்த காலங்களில் விருது பெற்ற பெருமக்கள்  தமிழ்நாடு, பிற மாநில மற்றும் அயல்நாட்டு சான்றோர் பற்றி யும் உரை ஆற்றினார்.
அரங்கத்தில் அமர்ந்திருந்தோரின் பலத்த கையொலிக்கிடையே சமூகநீதிக் கான கி.வீரமணி விருதினை முனைவர் இலக்குவன்தமிழ், பேராசிரியர் தானேஸ் வர் சாகு அவர்களுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்.
விருது வழங்கப்பட்ட பேராசிரியர் தானேஸ்வர் சாகு அவர்களை வாழ்த் திப் பேசுவதற்கு முன்பாக தமிழர் தலைவர் ஆசிரியர், விருது நாயகர் தானேஸ்வர் சாகுவின் வாழ்விணையர் திருமதி பிரதிமா சாகு அவர்களை மேடைக்கு வரவழைத்து இருவருக்கு மாக சேர்த்து சால்வை அணிவித்து பாராட்டி வாழ்த்தினார். பின்னர் தானேஸ்வர் சாகு அவர்களுக்கு கல்வி கற்பித்த பேராசிரியர் பெருமக்கள் முனைவர் தானேஸ்வர் மொகபாத்ரா, முனைவர் விஜயானந்தகர் மற்றும் முனைவர் சரோஜ்குமார் மொகன்டி ஆகியோர் அமர்ந்திருந்த இடம் சென்று அவர்களுக்கும் சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டிப் பெருமைப்படுத்தினார்.
தமிழர் தலைவரின் உரைச் சிறப்பு
கல்வியாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், அறிஞர் பெருமக்கள், சமூகநீதி ஆர்வலர்கள் பலர் வருகை தந்த அந்த நிகழ்ச்சியில் சமூகநீதி வரலாறு பற்றிய நீண்டதொரு உரை யினை தமிழர் தலைவர் வழங்கினார். தந்தை பெரியாரின் பொதுவாழ்க்கைப் பண்பின் தனிச்சிறப்பு பற்றிக் குறிப் பிடுகையில் (Reigning without Ruling)  அரசு அதிகாரம் இன்றி ஆளுமை கொள்வது  எனக் குறிப்பிட்டதையும், (Periyar fought for not mere transfer of political power but transformation of political power to the oppressed section in the society)  (தந்தை பெரியார் பாடுபட்டது வெறும் அரசியல் மாற்றத்திற்காக அல்ல, அரசியல் அதி காரம் மாற்றத்திற்காக) எனக் குறிப் பிட்டதை வருகை தந்த பெருமக்கள் மிகவும் உணர்ந்து மகிழ்ந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பெருமக்கள்
விழாவில் ஒடிசா மாநில ஆளும் அரசியல் கட்சியான பிஜூ ஜனதா தளத்தின் சட்டமன்ற உறுப்பினர் ராணடராபிரசாத் ஸ்வெய்ன், எப்.எம். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் முனைவர் எஸ்.பி.அதிகாரி, பக்கீர் மோகன், முனைவர் பி.சி.ரண்டா, முனைவர் பிரிதீஷ் ஆச்சார்யா, டாக்டர் நிகார் மொகபாத்ரா, பேராசிரியர் பிரசான் கே.ஆர்.சாகு, ஹேமலதா மருத்துவமனையின் டாக்டர் எஸ். ஆர்.பதி, முனைவர் டி.கே.பெஹரா, ஓய்வுபெற்ற அரசுத்துறையின் தலை மைப் பொறியாளர் முனைவர் நந்த நந்தன்தாஸ், முனைவர் கைலாஷ் சந்திரதாஸ், மேனாள் செய்தித்துறை ஆணையாளர் பேராசிரியர் ராதா மோகன், முனைவர் சச்சீந்தரா ரௌத், பெர்காம்பூரிலிருந்து ஒடிசா பகுத்தறி வாளர் மன்றத்தினைச் சார்ந்த மதுசூதன யாதவ், பாகாம்பெர் பட்நாயக், பிரதிய சேத்தி, இ.டி.ராவ், முகமது சுக்குர், சத்ருகாபூடியா அய்.ஏ.எஸ் அதிகாரி ஆர்.எஸ்.கோபாலன் மற்றும் பல சான்றோர் பெருமக்கள் வருகைதந் திருந்தனர்.
இதுவரை வழங்கப்பட்ட விருது வழங்கும் நிகழ்ச்சிகளில் ஆங்கிலத் துடன்  மண்டலமொழியிலும், கலந்து கொண்டோர் உரையாற்றுவது வழக்கம். ஆனால் புவனேசுவரத்தில் நடைபெற்ற விழாவில் தொடக்கம் முதல் நிறைவு வரை ஒவ்வொரு நிகழ்வும், உரை வீச்சும் ஆங்கிலத்தில்தான் அமைந்தது. ஆங்கில மொழி மேன்மை என்பதற்காக அல்லாது, கலந்துகொண்ட அனை வரும் உயர் கல்வியாளர்கள் சான்றோர் பெருமக்கள் என்பதை புலப்படுத்தும் நோக்கம் கருதியே இச்செய்தி குறிப் பிடப்படுகிறது.
பெரியார் இயக்கத்தின் பிளாட்டோ
ஏற்புரை ஆற்றிய விருது நாயகர் தானேஸ்வர் சாகு பேசும்போது கிரேக்க தத்துவஞானி சாக்ரடீஸ்க்கு கிடைத்த பிளாட்டோ போல தந்தை பெரியா ருக்கு தலைவர் கி.வீரமணி அமைந் துள்ளார் எனக் குறிப்பிட்டார்.
விழா முடிந்தபின்னர், பல மணித் துளிகள், வருகையாளர்கள் தமிழர் தலைவருடன் அவரது பேச்சு பற்றியும் சமூகநீதிப்பணி பற்றியும் உரையாடிக் கொண்டு இருந்தனர். அனைவரிடமும் விடைபெற்று தமிழர் தலைவர்  விடு திக்கு வந்தார்.  உணவருந்திய பின்னர், ஒடிசா பெருமக்களுடன் உரையாடி விட்டு உறங்கச் சென்றார்.
அடுத்தநாள் 24ஆம் நாள் சென் னைக்கு திரும்பிட ஆயத்தப் பணி களை துவக்கிய நிலையில் (AIMOFI – Anti- Caste Marriage and One - Child Family Organisation of India) நிறு வனச் செயலாளர் ராமச்சந்திர சி.எஸ்.டி. வால்டேர் தமது அமைப்பின் சாதி மறுப்பு திருமண பதிவு நிலைய செயல் பாடுகள் குறித்து தமிழர் தலைவரிடம் விளக்கமாக எடுத்துக் கூறினார். பின்னர் ஓய்வுபெற்ற தலைமைப் பொறியாளர் முனைவர்  நந்த நந்தன்தான் சமூக பொருளாதார முன்னேற்றம்  பற்றிய தமது புத்தாக்கத் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். அவரை, பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கு வருகை புரிந்து மாணவ, ஆசிரிய பெருமக்களிடம் உரையாற்றிட தமிழர் தலைவர் அழைப்பு விடுத்தார்.
விடுதியிலிருந்து காலை 10 மணி அளவில் கிளம்பி தமிழர் தலைவர் சென்னை செல்ல விமானநிலையம் வந் தடைந்தார். தமிழர் தலைவர், இலக்கு வன்தமிழ் ஆகியோரை பேராசிரியர் தானேஸ்வர் சாகுவும், பகுத்தறிவாளர் தோழர்களும் வழியனுப்பி வைத்தனர். விமான அமர்வுச்சீட்டு பாதுகாப்பு சோதனை முடிந்த பின்னர், வழக்கம் போல விமானநிலையத்தில் அமைந் திருந்த புத்தக நிலையத்தில் தமிழர் தலைவர் சற்றுநேரம் செலவழித்தார். 1 மணிக்கு விமானம் கிளம்பியது. பயணம் முழுவதும் இலக்குவன்தமிழ் சுயமரி யாதை இயக்க வரலாறு பற்றிய விளக்க வேண்டுதலுக்கு தமிழர் தலைவர் விரிவாகவே உரையாடிக் கொண்டு வந்தார். தந்தை பெரியார், சமுதாயப் பணியில் உடன் வருபவர்களின் தன் முனைப்பு நடவடிக்கைகள் பற்றியும், துரோகச் செயல்கள் பற்றியும் கிஞ் சிற்றும் கவலைப்படாமல் கொண்ட கொள்கையினை  நிறைவேற்றிட தன் வாழ்நாள் முழுமையும்  முனைந்தார்; வெற்றிகள் பல கண்டார் என்ற சாராம் சத்தில் தமிழர் தலைவரின் விளக்கம் அமைந்தது மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தோம்.
விமானத்திலிருந்து இறங்கி வெளி யில் வருவதற்கு முன்பு சற்று புதிய அனுபவம் கிடைத்தது. பயணச்சுமை களை பெறுவதற்காக சுற்றி வரும் சுமை கடத்தி முன் காத்திருந்த வேளையில் எமது பயணப் பையின் வண்ணம், வடிவமைப்பினை ஒத்த பயண சுமை யுடன்  விமானத்தில் வந்த பார்ப்பன தம்பதியர் தவறுதலாக எமது பயணப் பையை, முன்னமே நின்று எடுத்து விட்டனர்.
எமது பயணப் பைக்காக காத்திருந்தபொழுது அவர்களது பயணப் பை மட்டும் எடுப்பார் இல்லாமல் சுற்றி வந்துகொண்டிருந்தது. இதனைக் கவனித்த தமிழர் தலைவர் சரியாகக் கணித்து சுற்றி வந்த பயணச் சுமை பற்றி விமான நிலைய பணியா ளிடம், எங்களது பயணப்பையினை மாறி எடுத்துச் சென்றதை விளக்கினார். சற்றும் தாமதிக்காமல் விமான நிலையப் பணியாளர் சுற்றி வந்த பயணச் சுமை யின் மீது ஒட்டப்பட்டிருந்த குறிப்பு களின் துணைகொண்டு உரியவர்களை செல்பேசியில் தொடர்பு கொண்ட வேளையில் அவர்கள் விமான நிலை யத்தை விட்டு வெளியில் செல்ல வில்லை என்பது தெரியவந்தது. உடனே அந்தப் பார்ப்பன தம்பதியினர் தமிழர் தலைவரிடம் வந்து, எங்களது உடமை யினை தவறுதலாக எடுத்துச் சென்று விட்டதற்கு வருத்தம் தெரிவித்தனர். இது எதார்த்தமாக நடந்த மாறுதல். அதனால் ஒன்றும் இல்லை. நீங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியில் சென்றிருந்தால் எங்களது உடமை களைப் பெறுவது சற்று இன்னலா யிருக்கும், என தெரிவித்து அவர்களது உடமையினை எடுத்துச் செல்ல பணித்தார்.
பார்ப்பன தம்பதியினர் தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித் தனர். இந்த நிகழ்ச்சியின் மூலம், விமானப் பயணத்தில் நமது பயணச் சுமையின் அடையாளம் வேறுபாடு தெரிகின்ற வகையில், பார்த்தவுடன் பளிச்சென தெரிகின்ற வகையில் அடையாளத்துடன் குறியீடு இடுதல் அவசியம் எனும் பட்டறிவு புலப்படடது. சென்னை விமான நிலையத்திலிருந்த படியே மதுரைக்கு விமானம் மூலம் பயணப்படவிருந்த இலக்குவன் தமிழி டம் தமிழர் தலைவர் ஒடிசா விழாச் சிறப்பு பற்றி மகிழ்ச்சி தெரிவித்து விடை பெற்றார். விமான நிலையத்திலிருந்து வெளிவந்து வாகனத்தில் அமர்ந்த பொழுது அன்றைய விடுதலையில் புவனேசுவரத்தில் நடைபெற்ற சமூகநீதி விருது வழங்கும் நிகழ்ச்சி பற்றிய செய்தி, ஒளிப்படங்களைப் பார்த்து படித்தவாறே தமிழர் தலைவர் அடை யாறில் உள்ள இல்லம் வந்தடைந்தார்.
கடந்த காலங்களில் 16 சான்றோர் களுக்கு சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கப்பட்டுள்ளது. ஒவ் வொரு விருது வழங்கிடும் நிகழ்ச்சியும் தனித்துவச் சிறப்பு வாய்ந்தது. 2014ஆம் ஆண்டுக்கான சமூகநீதி விருது வழங் கிய விழாவும் ஒரு தனிச்சிறப்புடன் அமைந்து விட்டது.
- நிறைவு
-விடுதலை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக