பக்கங்கள்

புதன், 18 மே, 2016

இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் கோவிலுக்குள் போகலாம்


ஈரோடு தேவஸ்தானக் கமிட்டித் தீர்மானம்
நாளது மார்ச் மாதம் 30ஆம் தேதி கூடிய ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி மீட்டிங்கில், ஈரோடு சர்க்கிள் தேவஸ் தானதுக்குட்பட்ட ஐந்து தாலுக்காக்களிலும் உள்ள கோவில்கள் எல்லாவற்றிற்குள்ளும் இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தாராளமாய்ச் சென்று சாமியைத் தரிசிக்கலாம் என்பதாகவும்,
கோவிலுக்கு.ள் கர்ப்பக்கிருகம் என்பது தவிர மற்ற எல்லா இடங்களிலும் கடவுளை வணங்க உரிமை உள்ள எல்லா ஜனங்களுக்கும் சம உரிமை உண்டு என்பதாகவும் இரண்டு தீர்மானங்கள் ஒரு கனவான் தவிர மற்ற எல்லா கனவான்களாலும் ஏகமனதாய் ஒப்புக்கொள்ளப்பட்டு நிறைவேறின.
(குடிஅரசு, 31.3.1929) 


ஆலயப் பிரவேச உரிமை
ஈ.வெ.ராமசாமி சொற்பொழிவு

என்னைப்பற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும். மற்ற வெளியூர்க் காரர்களை விட உள்ளுர்க்காரர்களாகிய உங்களுக்கு என்னை நன்றாகத் தெரிய வசதி உண்டு என்று கருதியே அப்படிச் சொல்லுகிறேன்.
எனக்கு கோவில், குளம், மதம், சாமி, பூதம் போன்றவைகள் ஒன்றும் பிடிக்காது என்பதும் அவற்றைப் பற்றி நான் கவலைப்படுவது மில்லை என்பதும் நீங்கள் அறிந்ததே. அதனாலேயே இந்த ஊர் பொது ஜனங்களிடம் எனக்கு அவ்வளவு செல்வாக்கும் கிடையாது. சுமார் 1520 வருஷங்களுக்கு முன் இந்த ஊரில் அனேக வீடுகளுக்கு நான் வராவிட்டால் கல்யாணங்கள் முகூர்த்த நேரம் தவறிக்கூட லி மணி லீ மணி காத்திருக்கும். அது போலவே பிணங்கள் கூட வெளி யேறாமல் காத்திருக்கும்.
அவ்வளவு பொது ஜன செல்வாக்குப் பெற்றிருந்தவனாகிய நான் இன்று ஒரு கிராமப் பஞ்சாயத்து தேர்தலுக்கு நின்றால் கூட கட்டின பணம் கிடைக்குமா என்பது சந்தேகம் தான். (அப்படி அல்ல என்ற சப்தம்) அது எப்படியோ போகட்டும். இன்று எனக்கு மக்களிடத்தில் ஏதோ ஒரு இயக்க சம்மந்தமான நட்பு தவிர மற்றபடி உலக வழக்கமான பொதுஜன நட்பு எனக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும்.
ஏன் அப்படி சொல்லுகிறேன் என்றால் அநேக துறைகளில் பொது ஜன அபிப் பிராயத்துக்கு மாறான அபிப்பிராயம் சொல்லி எதிர் நீச்சல் நீந்திக் கொண்டு இருக்கிறேன். அப்படி இருந்தால் எப்படிப்பட்டவர் களுக்கும் இந்தக் கதிதான். ஆனால் இப்படி இருந்தும் சிறிதாவது சமாளித்துக்கொண்டு இருக்கிறேன். மற்றவர்களில் அனேகருக்கு இதுகூட சாத்தியப்படாமல் அடிக்கடி கரணம் போட்டுக் கொண்டி ருக்கிறார்கள் என்று சொல்லுவேன்.
ஜாதி, மதம், கோவில், குளம், சாமி, பூதம் கூடாது என்று நான் சொல்லுவதால் அவற்றினிடம் எனக்கு ஏதாவது தனிப்பட்ட துவேஷமா? நான் ஏதாவது எதிர் மதக்காரனா? அல்லது தீண்டாத ஜாதியா? என்றால் அப்படி ஒன்றும் இல்லை. நான் 22 வருஷம் தேவஸ்தான கமிட்டியில் முக்கியஸ்தனாகவும் தலைவனாகவும் இருந்திருக்கிறேன்.
என் அபிப்பிராயம் எப்படி இருந்தாலும் அனேக கோவிலுக்கு திருப்பணி செய்திருக்கிறேன். எனது பெற்றோர்களும் செய்திருக்கிறார்கள். இதே எதிரில் தெரியும் இந்த அம்மன் கோவில் நான் முன்னின்று கட்டி வைத்ததல்லவா? மற்றும் இவ்வூர் பிரபல கோவில்களில் எங்கள் தாயார் தகப்பனார் பெயர் போட்டிருக் கிறதல்லவா? அப்படி இருக்க நான் ஏன் இப்படிச் சொல்லுகின்றேன்? அவற்றால் ஏற்படும் கெடுதிகளை அறிந்தேதான்.
கோவில் பிரவேசத்திற்கு இந்த ஊர் தேவஸ்தான கமிட்டியில் நான்தான் என் தலைமையில் தான் முதல் முதல் ஒரு தீர்மானம் நிறைவேற்றினேன். அதை அமுலுக்கு கொண்டு வந்ததில் கோயில் பிரவேசம் செய்த சில தாழ்த்தப்பட்டவர்களையும் தோழர் ஈஸ்வரன் அவர்களையும் சர்க்காரில் தண்டித்தார்கள். அப்பீலில் விடுதலை ஆயிற்று என்றாலும் அந்த தீர்மானம் கேன்சில் செய்ய வேண்டிய தாகவும் ஏற்பட்டுவிட்டது.
அதனாலேயே நான் தேவஸ்தான கமிட்டியில் ராஜினாமா செய்தேன். அதற்கப்புறமே சாமியையும் கோவிலையும் மதத்தையும் அடியோடு அழிக்க துணிந்தேன் (31.3.1929). காரியம் வெற்றி பெற்றதோ இல்லையோ அது வேறு விஷயம். அதன் பயனாய் பல கோவில்களுக்கு வரும்படி குறைந் தது. சில சாமிகளுக்கு மதிப்பும் குறைந்தது.
திருப்பதி ராமேஸ்வரம் டிரஸ்டிகள் வரும்படி குறைந்து விட்டதாக ரிபோர்டு செய்தார்கள். கொச்சி திருவாங்கூரில் 10 லக்ஷக்கணக்கான மக்கள் தாங்கள் நாஸ்திகர்கள் என்றும் சகல மதத்தையும் சிறப்பாக இந்து மதத்தை விட்டுவிட வேண்டுமென்றும் தீர்மானம் செய்தார்கள். பதினாயிரக்கணக்கான பேர் கிறிஸ்து முஸ்லீம் சீக்கிய ஆரிய சமாஜம் முதலிய மதங்களுக்கு பாய்ந்தார்கள்.
திருவாங்கூர் பிரஜைகளில் ஏறக்குறைய பகுதிக்கு மேற்பட்ட வர்கள் ஏற்கனவே கிறிஸ்துவர் களாகவும் முஸ்லீம்களாகவும் இருக்கிறார்கள் என்பதோடு இப்போதும் கும்பல் கும்பலாய் மதம் மாற ஆரம்பித்தார்கள். எனது பிரசாரத்தின் பலனாய் நான் ஜாதிமத ஜனங்களிடையே செல்வாக்கு இழந்து மதிப்பு இழந்து வர நேருகிறது என்றாலும் மேல் கண்ட பலன்கள் இந்நாட்டில் இதற்கு முன் என்றும் இருந்ததை விட அதிக மாக ஏற்பட ஆரம்பித்து விட்டதால் பொது ஜனங்களிடையே என் மீது எவ்வளவு ஆத்திரம் இருந்தாலும் ஏதாவது ஒரு வழியில் நாஸ்திகத் தையும் கோவில் குள வெறுப்பையும் மாற்றி இந்துக்கள் மதம் மாறுவதையும் நிறுத்தித் தீரவேண்டிய அவசியம் மகா ராஜாக்கள் முதல் சாதாரண பார்ப்பனர்கள் வரை ஏற்பட்டு விட்டது.
நானோ அல்லது என்னைப் போன்ற யாராவது ஒருவரோ தனது சுயநலத் தையும் தனது செல்வாக்கையும் இழந்து பொதுஜன வெறுப்பையும் ஏற்க தயாராய் இருந்திருக்காத வரையில் இந்த மாறுதல் அதுவும் புரட்சி போன்றது ஒன்று ஏற்பட்டிருக்க முடியவே முடியாது என்பதை வேண்டுமானால் நான் ஒப்புக்கொள்ளுகிறேன்.
(குடியரசு, 1936) 
-விடுதலை,23.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக