பக்கங்கள்

திங்கள், 30 மே, 2016

மராட்டிய மாநிலம் புனே நகரில் தமிழர் தலைவர்


புரட்சியாளர் ஜோதிபா பூலே நினைவகம் - சாவித்திரிபாய் பூலே நடத்திய பெண்களுக்கான பள்ளி ஆகிய இடங்களைப் பார்வையிட்டார்
புரட்சியாளர் ஜோதிபாபூலே, சாவித்திரி பாய் பூலே சிலைகளுக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பூலே நினைவகத்தில் தமிழர் தலைவரை பூலே அறக்கட்டளையினர் மலர்க் கொத்து அளித்து வரவேற்றனர்.
புனே, மே 30- மும்பை மாநகரில் இயக்கத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட தமிழர் தலைவர் ஆசிரி யர் பூனே நகரில் மராட்டிய சமூகப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலே தொடர்பான பல்வேறு இடங்களைப் பார்வை யிட்டார். புரட்சியாளர் ஜோதிபா பூலே - சாவித்திரிபாய் பூலே ஆகியோரது அய்ந்தாம் தலைமுறை குடும்பத்தினர் விடுத்த அழைப்பினை ஏற்று தமிழர் தலைவர் மே திங்கள் 29 ஆம் நாள் பூனே நகருக்குச் சென்றார்.
பழைய பூனே பகுதியில் லோகியா நகர் பகுதியில் அமைந்துள்ள  ஜோதிபா பூலே அவர்கள் வாழ்ந்த இடத் திற்கு தமிழர் தலைவர் வருகை புரிந்தார். தமிழர் தலைவரை பூலே குடும்பத்தினர் சார்பாக நீட்டாடாய் இராமகந்த் ஹோலே பூலே (அய்ந்தாம் தலைமுறைப் பெயர்த்தி) மலர் கொத்து கொடுத்து வரவேற்றார். பூலே அவர்களது சமூக சீர்திருத்தப்பணிகளுக்காக தமது தந்தையாரால் குடும்பத்தை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில் தமது மனைவி சாவித்திரிபாய் பூலேவுடன் வாழ்ந்த வீடு இன்று வரலாற்று முக்கியத்துவ இடமாகச் சிறப்பு பெற்று வருகிறது.
‘பூலே வாடி’ என்று அழைக்கப்படும் அந்த வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள ஜோதிபா பூலே - சாவித்திரி பாய் ஆகிய இருவரது மார்பளவுச் சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் வருகை தந்த தமிழர் தலைவருக்கு பூலே குடும்ப அறக்கட்டளையினர் மராட்டிய  மாநில பண்பாட்டு வழக்கப்படி தலைப்பாகை அணிவித்து சால்வை போர்த்தி மரியாதை செய்தனர்.
பூலே நினைவகம் சீர்திருத்தம் பெற்று, சிதைந்து போன நிலையிலிருந்து மீட்டுருவாக்கப் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது. வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தமிழர் தலைவருக்கு அறக்கட்டளையினர் விளக்கிக் கூறினர். பூலே எழுதிய உயில், விதவையர் வாழ்ந்த குடியிருப்புகள், ஜாதி வேறுபாடு இன்றி பொதுமக்கள் பயன்படுத்திய கிணறு ஆகிய பகுதிகள் சுற்றிக் காண்பிக்கப்பட்டன.
பொதுக்கிணற்றைப் பார்வையிட்ட தமிழர் தலைவர், பூலே  அறக்கட்டளையினரிடம் குறிப்பிட்டதாவது:
ஜோதிபா பூலே - தந்தை பெரியார் இருவரும் சமூகப் புரட்சிப் பணியில் ஒத்த அணுகுமுறை உள்ளவர்களாக இருந்துள்ளனர். பூலே (1827-1890) அவர்கள் வாழ்ந்த காலம் சற்று முன்பு; தந்தை பெரியார் (1879-1973) பூலேவின் சமூகப் பணிகளை பற்றி தெரிந்திராத நிலையிலும், ஒத்த சமூகப் புரட்சி செய்தவர்கள் என்ற நிலையில் ஒத்த அணுகுமுறையினைக் கொண்டிருந்தனர்.
குறிப்பாக குடிநீர் பொதுப் பயன்பாட்டைப் பொறுத்த அளவில் அனைவரும் பயன்படுத்தும் கிணறு ஒன்றை வெட்டி அமைத்து அதன் பயன்பாடு ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் கிடைக்கின்ற வகையில் ஏற்பாடுகளை பூலே செய்திருந்தார். மகாத்மா காந்தியைப் போல தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக குடிநீர் பயன்பாட்டினை உருவாக்கிடும் அணுகு முறையினை பூலே கைக்கொள்ளவில்லை. தந்தை பெரியாரும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனிக் குடியிருப்பு, தனிப்பட்ட பயன்பாட்டு கட்டமைப்புகளை வலியுறுத்தவில்லை.
அனைத்து சமுதாய மக்களுக்கும் பயன்படும் வகையில் ஜோதிபாபூலே அமைத்த குடிநீர் கிணற்றை தமிழர் தலைவர் பார்வையிட்டார்
உயர்ஜாதி மக்களுடன் சேர்ந்து சமத்துவமாக வாழ்ந்திடும் நிலையினை தாழ்த்தப் பட்ட, அடக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வலியுறுத்தும் பணியினை செய்து வந்தார். இந்த நாட்டு சமூகச் சூழலில் நிலவிய ஒடுக்கு முறை சமுதாயத்தை சமத்துவ சமுதாயமாக மாற்றிட தந்தை பெரியாரும்,  ஜோதிபா பூலே ஆகிய இரு மாபெரும் சமூகப் புரட்சியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு இல்லாமல் வாழ்ந்த கால வேறுபாட்டிலும், ஒத்த சிந்தனையாளர்களாக, ஒத்த புரட்சி அணுகுமுறையினைக் கடைப்பிடித்தவர்களாக இருந்தது தனித்துவ சிறப்பிற்கு உரியதாகும்.
இவ்வாறு தமிழர் தலைவர் பூலே நினைவகத்தில் கூடியிருந்த பூலே அறக்கட்டளையினர் மற்றும் குழுமி யிருந்தோரிடம் விளக்கிக் கூறினார்.
பின்னர் நாட்டிலேயே பெண்களுக்கான முதல் கல்வியகமான சாவித்திரி பாய் பூலே நடத்திய பள்ளிக் கூடத்தினை தமிழர் தலைவர் பார்வையிட்டார்.
சிவாஜி நகர், புதுவார் பேட்டில் செயல்பட்ட மகளிர் பள்ளி முற்றிலும் சிதைந்துவிட்ட நிலையில், பூலே அறக் கட்டளையினால் மீட்டுருவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. ‘‘ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி என்பது சீர்திருத்தம் என்ற நிலையில் மகளிருக்கான கல்வி நிலையம் அமைத்து, தமது மனைவியான சாவித்திரி பாய் பூலேவிற்கு கல்வி யறிவு புகட்டி அவரையே ஆசிரியையாக அமர்த்தி பெண்களுக்கான பள்ளியினை முதன் முதலாக நடத்திய புரட்சியினை மராட்டிய மண்ணில் நடத்தியவர் மகாத்மா ஜோதிபா பூலே என்பதை நினைக்கும் பொழுது புரட்சிக்கு புது இலக்கணம் வகுத்த நிலை விளங்குகிறது'' என்று சாவித்திரி பாய் பூலே நடத்திய பெண்கள் பள்ளியினை பார்வையிட்ட தமிழர் தலைவர் குறிப்பிட்டார்.
பூலே வாடி, சாவித்திரி பாய் பூலே நடத்திய பெண்கள் பள்ளி ஆகிய நினைவிடங்களைப் பார்வையிட்ட தமிழர் தலைவர் பூலே அறக்கட்டளையினரிடம் விடை பெற்றார். பூலே அறக்கட்டளையினைச் சார்ந்த நீட்டாடாய் ஹோலே பூலே, திருச்சி - பெரியார் உலகில் நடைபெற்ற திராவிடர் கழகம் நடத்திய ஜாதி ஒழிப்பு - சமூகநீதி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-விடுதலை,30.5.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக