பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

நாட்டில் நடைபெறும் ஆணவக் கொலைகளுக்கு முடிவு தேவை


உயர்நீதிமன்ற நீதிபதி திரு.இராமசுப்பிரமணியம் அவர்களின்  ஒன்பது கட்டளைகள் வரவேற்கத்தக்கவை - செயல்படுத்தப்படவேண்டியவை!
கூலிப்படைகள் உஷார் - உடனடியாக ஒடுக்கப்படவேண்டும்
அம்பேத்கர்மீது ஆர்.எஸ்.எஸ். வீசும் தூண்டில் - எச்சரிக்கை  அவர் கொள்கையைப் பரப்புவதைவிட பாதுகாப்பதே மிகவும் அவசியம்!
ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளும் இணையர்களை - படுகொலை செய்யும் ஆணவக் கொலைகள் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் இது குறித்து பிறப்பித்த ஒன்பது வகை வழிமுறை ஆணைகள் வரவேற்கத்தக்கவை - செயல் படுத்தப்பட வேண்டியவை - குறிப்பாக கூலிப் படைகள் ஒடுக்கப்படவேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

சென்னை உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதிகளில் ஒருவரான ஜஸ்டீஸ் திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள், ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளுவோரைப் பாது காத்து, அவர்களுக்கு உரிய உரிமையைக் காக்க, காவல் துறைக்குத் தந்துள்ள உத்தரவு மிகவும் வரவேற்கத் தக்கதாகும்.

இதுவரை தமிழ்நாட்டில் - அதுவும் பெரியார் பிறந்த மண்ணில் - அண்மைக்காலமாக விசிறி விடப்பட்ட ஜாதி வெறி காரணமாகவும், மிக மலிவான தொகைக்கே கொலை செய்யும் கூலிப் படைகள் மலிந்துள்ளதாலும் இதுவரை 82 ஆணவக் கொலைகள் நடைபெற்றுள்ளன என்பது வெட்கத்தால் தலைகுனிய வைக்கக் கூடியதாகும்.
நீதிபதியின் 9 ஆணைகள்

இதனை - ஒரு வழக்கில் - கணக்கில் எடுத்துக்கொண்டு உயர்நீதிமன்ற நீதிபதி திரு.வி.இராமசுப்பிரமணியம் அவர்கள் 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார்.
இதுமாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோரை - குறிப்பாக ஆதிதிராவிடர்களுடன் தொடர்பு கொண்ட மணத் தம்பதிகள் பலரைக் கொலைகள் செய்வதும், அதற்கு “கவுரவக் கொலை‘‘ என்று பெயர் சூட்டுவதும் அநாகரிகமானது. பஞ்சாப்,  அரியானா மாநிலங்களில் ‘‘ஜாதிப் பஞ்சாயத்துக்களை‘‘ நடத்தி, தண்டனை அளித்து வந்த நிலையில், பஞ்சாப், அரியானா உயர்நீதிமன்றங்கள் இதேபோன்ற ஆணைகளை காவல்துறைக்குத் தந்துள்ளன.

அவற்றை யொட்டியே சென்னை உயர்நீதிமன்றத்திலும் மாண்புமிகு நீதிபதி அவர்கள் இப்படி 9 ஆணைகளைப் பிறப்பித்துள்ளார் என்பது நமக்கு ஆறுதலைத் தருகிறது.

1. ஒவ்வொரு மாவட்டத்தில் இம்மாதிரி ஜாதி மறுப்புத் திருமணம் செய்வோர்பற்றிய பாதுகாப்பு முதலியன தருவதற்கு ஒரு தனிப் பிரிவு (Special Cell) உருவாக்கப்படல் வேண்டும். ஜாதி மறுப்புத் திருமணங்களைச் செய்வோர் புகார் கொடுத்தால், அதன்மீது உடனடியாக விரைந்து செயல்படவேண்டும்.
மூன்று மாதங்களுக்குள்...
2. இதிலிருந்து மூன்று மாதங்களுக்குள் அத்தகைய தனிப்பிரிவு ஏற்பாடு செய்யப்படல் வேண்டும். அதில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட சமூகநல அதிகாரி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஆகியோர் இடம்பெறவேண்டும்.

3. கொலை மிரட்டலுக்குப் பயந்து தப்பி வருவோரைப் பாதுகாப்பதற்கென ஒரு தனி நிதியே (Fund) ஒதுக்கப் படவேண்டும். இந்த நிதியை அப்படி தனியே வீட்டை விட்டு வெளியே வருகிறவர்களை காப்பதற்கென தனிக்காப்பகம் - குடில் அமைப்பதற்கும், அவர்களது புதுவாழ்வு, புனர்வாழ்வு அமைவதற்கும் செலவிடப்படல் வேண்டும்.

4. 24 மணிநேரமும் தொடர்புகொள்ளக் கூடிய உதவிக்கரம் (Help line) ஒன்றை உருவாக்கி, வரும் புகார்களைப் பதிவு செய்யவும், கண்காணிக்கவும், அறிவுரை, ஆலோசனை வழங்குதல் வேண்டும்.

5. ஒவ்வொரு காவல் நிலையத்திலும் காவல் நிலைய அதிகாரி (S.H.O.) அந்த ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதி களுக்கு பாதுகாப்புத் தருதல் வேண்டும்.

6. தனிப் பிரிவுக்குத் தரப்பட்ட புகார்கள் உடனே சம்பந்தப் பட்ட காவல் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படல் வேண்டும்!

7. எல்லாக் காவல் நிலையங்களிலும் மின்தொடர்பு Electronically through the crime and criminal Tracking Network and systems (CCTNS)
முதலியவற்றை தானே இயங்கும் வண்ணம் அரசு ஏற்பாடு செய்யவேண்டும்.

8. சம்பந்தப்பட்ட ஜாதி மறுப்புத் திருமணம் செய்தவர்களை தேடி அலைவோரையும் கண்டறிந்து, தடுத்தல், பெற் றோர்களுக்கு உரிய அறிவுரை (கவுன்சிலிங்) அளிப்பது.

காவல்துறை அதிகாரிகளைப்
பொறுப்பேற்க செய்யவேண்டும்


9. எந்த அசம்பாவிதங்கள் நடைபெற்றாலும் அதற்குக் காவல் துறை அதிகாரிகளையே பொறுப்பாக்குவதோடு, அவர்கள் இக்கடமைகளிலிருந்து தவறினால், அதை மிகப்பெரிய ஒழுக்கத் தவறான நடத்தை (Major Misconduct)  என்று அறிவித்து அவ்வதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்!
இப்படி பல்வேறு முக்கிய அம்சங்கள் உயர்நீதிமன்றத்தால் தரப்பட்டுள்ளன. இதற்காக நீதிபதி அவர்களை வெகுவாகப் பாராட்டுவதுடன், இவற்றை உடனடியாக செயலுக்குக் கொணர்தல் அவசியம், அவசரம் ஆகும்!

இவைகளை தயவு தாட்சயண்மின்றி செயல்படுத்துவதோடு, மற்றொன்றும் முக்கியம்.
கூலிப்படைகள் உஷார்!

கூலிப்படைகளை முற்றாகக் கண்டறிந்து அவர்களைக் கண்டுகொண்டு அவர்களின் நடமாட்டம் இல்லாமல் செய்தால், இப்படிப்பட்ட கூலிக்கான கொலைகள் - உயிர்க் கொலைகள் நடைபெறாமல் இருக்குமே!

கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்

சென்னை
15.4.2016 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக