பக்கங்கள்

ஞாயிறு, 29 மே, 2016

பாரதமாதாவின் புத்திரிகள் நம் சகோதரிகளல்லரா?

: திரு.பி.குப்புசாமி
(1929 - குடிஅரசிலிருந்து) 


எனக்குப் பெஜவாடாவில் பார்ப்பனரல்லாதார் திருமண ஊர்வலத்தைக் கண்டதும் பரிதாபமும் ஒருபக்கமும் எங்கள் மதம்போச்சு, எங்கள் சாஸ்திரம்போச்சு, வருணாசிரம தர்மத் துக்கு அழிவுவரலாச்சு, எங்கள் பணவரும்படி போச்சுது, எங்கள் தலைவிதி குடிஅரசு வந்து இப்படியாச்சுது என்று கூக்குரலிடும் சில வைதீகர்களிடம் வெறுப்பு ஒருபக்கமும் உண்டாயிற்று.
மணமகனும், மணமகளும் பல வர்ணமான, பாசிகளால் நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்த ஓர் பல்லக்கில் ஏறி பாண்டு, நாதசுரவாத்தியங்களுடன் ஊர்வலம் வந்தனர். பல்லக்கிற்கு முன்னால் பத்து முதல் பதினெட்டு வயதிற் குட்பட்ட சுமார் பத்து  அழகிய வாலிப தாசிச் சகோதரிகள் பாட்டுகள் பாடிக்கொண்டும் நடனம் புரிந்துகொண்டும் வந்தனர்,
அவர்கள் தாங்கள் பெற்றுக்கொண்டிருக்கும் பணத்திற்காக தங்கள்  மானத்தை துறந்து தாங்கள் தொழில் புரிய உதவியாகயிருக்கும் பலருடைய மனது குதூகலமடையும் விண்ணம் பலவிதமான அபிநயங்கள் செய்யுங்காலையில் அது நோக்கும் விசாலபுத்தி படைத்த எவரும் வெட்கத்துடன் துக்கப்படாமலிருக்க முடியாது.
இவ்வித இழிதொழிலும் இதுபோன்ற இன்னும் பல  அட்டூழியங்களும் நடக்கவிடாமலும், நம் சொந்த சகோதரிகள் பாரத சேய்கள் இக் தொழிலைவிட்டு நன்மார்க்கத்தையடையும் படியான புத்தினய அவர்களுக்கு கொடுக்கும்படியும், இந்தத் தொழில்செய்வதற்குக் உதவியாக இருக்கும் சிலருக்கு நல்ல உணர்ச்சி உண்டாகும்படி செய்யவும் தீவிரபிரச்சாரம் செய்யவேண்டும்.
அச்சகோதரிகளைச் சுற்றிலும் பல வாலிப மாணவர்கள் நின்று கொண்டு கேலியும் பரிகாசமும் செய்து கொண்டே வந்தனர். அப்பெண்கள் நமது சொந்த சகோதரிகளாயிற்றே ஓர் தாயான பாரத மாதாவின் அரும்புதல்விகளாயிற்றே அவர்கள் இத்தகைய இழிதொழில்புரிந்து வாழ்க்கை நடத்துவது நம்முடைய பாரத நாட்டுக்குத்தானே அவமானம் என்று உணர்ச்சி இல்லாத இந்த வாலிப மாணவர்களின் அறியாமைகுறித்து எனக்குத் துக்கம் ஏற்பட்டது.
அந்த ஊர்வலம் பிரதான வீதிகளின் வழியே சென்றது. ஆனால் நான் பார்க்கும்படி நேரிட்டது  ஒரு பார்ப்பன அக்கிரஹாரத்தின் வழியே சென்று கொண்டிருந்த பொழுதேயாகும். அந்தரஸ்தாவின் இருபுறமுமுள்ள வீடு களில் வசிக்கும் பார்ப்பனப் பெண்கள் எல்லோரும் வாசலில் நின்றுகொண்டு மேற்படி தாசி சகோதரிகள் பாடும் பாட்டுக் களைக் கேட்டும் அவர்கள் நடனம்புரிவதையும் அபிநயங்கள் செய்வதையும், பார்த்தும் சந்தோஷமடைந்தனர்.
தங்களைப் போன்ற பெண்மணிகள் இவ்வித இழி தொழிலைவிட்டுச் சீர்திருந்தும்படியான வழியை தேட கவலைப்பட வேண்டிய அவர்கள் அக்காட்சியைக் கண்டு மகிழ்ச்சியடைந்ததைப் பார்க்க நான் பெரிதும் வருந்தினேன். அவ்வூர்வலத்தை முதன்மையாக இருந்து நடத்துபவர் அந்தச் சகோதரிகளை எந்தெந்த வீட்டுவாசலில் பெண்கள் கும்பலாக இருந்தனரோ அந்தந்த இடங்களில் நிறுத்திப்பாடும்படியும் நடனம் புரியும்படியும் செய்துவந்தனர்.
இதில் இன்னும் ஓர் சம்பவம் குறிப்பிடற்பாலது. மண மகனின் சிநேகிதர்களில் சிலர் அத்தாசி சகோதரிகளில் ஒரு அழகிய மாதை அழைத்து அன்னார் கையில் ஏதோ கொஞ்சம் பணங்கொடுத்து பல்லக்கில் வந்து கொண்டிருக்கும் மணமகனுக்கும் பன்னீர்தெளிக்கும்படி கேட்டு அச்சகோதரி அவ்விதம் செய்யவே எல்லோரும் அதைப்பார்த்து மகிழ்ந்தனர்.
ஊர்வலங்களில் இந்தவிதமான வாலிப சகோதரி களை நடனம் புரியும்படி செய்ய எந்தச்சாத்திரம் இடங் கொடுக்கிறதோ அறியேன். இப்படிச் செய்வதில் அவர்கள் நோக்கம்தான் என்னவோ? இப்படிப்பட்ட சம்பவங்கள் நமது வாலிப மாணவர்கள் கெடுவதற்கும் நம்முடைய இந்திய சமூகத்தை மிஸ்மேயோ போன்ற அன்னியர் இழிவு படுத்துவதற்கும் சந்தர்ப்பங்களாக இருப்பதுமல்லாமல் இந்த தாசித் தொழிலுக்கு ஊக்கம் அளித்ததுமாகும். இது மாதிரியாக இவ்வூரில் சாதாரணமாக அநேக ஊர்வலங்களில் நடந்து வருவதாகக் கேள்விப்படுகிறேன்.
இனியாகிலும் நம் சகோதரர்கள் விழித்துக் கொண்டு சீர்திருத்துவதோடு பார்ப்பனர்களில் வைதீகர் ஓர் சாரார் தாசித் தொழில் செய்வதற்கு தங்கள் சாஸ்திரக்குப்பைகளை கிளப்பி ஆதாரம் காட்டினாலும் அப்படிப்பட்ட சாஸ் திரங்களை தீயில் இட்டுக் கொளுத்தும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.
-விடுதலை,5.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக