பக்கங்கள்

புதன், 18 மே, 2016

ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை(முதல் ஆலயப் பிரவேசம்)

ஈரோடு ஆலயப் பிரவேசம் விசாரணை
வழக்கு விசாரணை
22.4.29 தேதியில் ஈரோடு, ஸ்டேஷனிரி சப் மாஜிஸ்ட்ரேட் முன்னிலையில் பகல 12.30 மணிக்கு ஆலயப் பிரவேச வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வாதிகள் சார்பில் பிராஸிகியூட்டிங் இன்ஸ்பெக்டரும், பிரதிவாதிகள் சார்பில் நாகை பாரிஸ்டர் கே.சி.சுப்பிரமணியம் அவர்களும் ஆஜராயிருந்தனர். கோர்ட்டினுள்ளும் வெளியிலும் ஏராளமான பொது ஜனங்கள் கூடியிருந்தனர்.
முதல் சாட்சியாக முத்துசாமிக் குருக்கள் கூறியதாவது:
நான் 4ஆம் தேதி இரவு 7 மணிக்கு எல்லாச் சாமிகளுக்கும் கட்டளை பூஜை செய்துவிட்டு இரண்டாவது அதாவது துவரா பாலகர் கதவுக்குச் சமீபம் நின்று கொண்டிருந்தேன். முதல் பிரதி வாதியான ஈஸ்வரன் என்பவர் தம்முடன் வந்திருப்பவர்களுடன் கோயிலுக்குள் சென்று தாங்களே பூஜை செய்ய வேண்டும் என்று சொன்னார்.
அப்படிச் செய்வது வழக்கமில்லை என்று சொல்லி தத்தாத்திரி குருக்களை அழைத்து கதவைப்பூட்டச் சொல்லி விட்டு நான் அம்மன் கோவில் கதவைப் பூட்டச் சென்றேன் பின்பு இருவரும் கதவுகளைப் பூட்டி விட்டு இந்த விஷயம் தெரிவிக்க தருமகர்த்தா வீட்:டுக்குப் போனோம்.
அவர் ஊத்துக் குளிக்குப் போயிருந்தார். பறையர் சக்கிலியர், வள்ளுவர், பள்ளர் முதலியோர் கோவிலுக்குள் வரக்கூடாது. நவக்கிரகத்துக்குக் குருக்கள் தவிர வேறு யாரும் தொட்டுப் பூஜை செய்யக்கூடாது. பஞ்சமர் கோவி லுக்குள் வந்தால் அசுத்தமாகும். அவர்கள் வரக் கூடாதென்பதற்கு சட்டமில்லை ஆனால் வரும் வழக்கமில்லை. எதிரிகளைத் தெரியும் அவர்கள் தேங்காய் பழம் கொண்டு வந்திருந்தார்கள் இவர்கள் அசுத்தம் ஒன்றும் செய்யவில்லை.
6.4.29 இரவு 7 மணிக்கு தர்மகர்த்தாவிடம் மூவரும் விஷயத்தைச் சொல்லி கும்பாபிஷேகம் செய்தால்தான் பூஜைசெய்வோம் என்று சொன்னோம்.
இரண்டாவது குருக்கள் மேற்சொன்னபடியே சொல்லிவிட்டு கூறியதாவது: கோவில் ஈரோடு, தேவஸ்தானக் கமிட்டிக்கு உட்பட்டது. தர்மகர்த்தா அதன் உத்திரவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதாக என்னுடைய அபிப்பிராயம் - விவரமாகத் தெரியாது.
கோவில் பிரவேச விஷயமாக உத்திரவு ஏதும் வந்திருப்பதாகத் தெரியாது. கோவிலில் யாரும் இலைப்போட்டு சாப்பிட்டது கிடையாது. எதிரிகள் பூஜை செய்தது அபிஷேகம் செய்தது, சாப்பிட்டது எங்கள் இருவருக்கும் தெரியாது.
குட்டமேனன் கூறியதாவது: நான் கோவில் வேலைக்காரன், அன்றைய தினம் 10, 12 பேர் கோவிலுக்குள் வந்தனர். தேங்காய் பழம் வைத்திருந்தனர். இரண்டாங்கதவு  பூட்டப்பட்டிருந்தபடியால் கதவின் முன் பக்கம் இரண்டு வரிசையாக உட்கார்ந்து புத்தகம் பார்த்துப்பாட்டுப் படித்துக் கொண்டிருந்தார்கள.
சுமார் 10 மணிக்கு மேல் பசுபதி என்பவர் நவக்கிரகமுள்ள விடத்தில் புகுந்து சாமிக்குத் தணணீர் விட்டு தேங்காய் உடைத்து அங்கு பாடிக்கொண்டிருந்தவர் களுக்கு பிரசாதம் கொடுத்தார். பிறகு 7, 8 பேருக்குப் போதிய சாதம் வந்தது. அவர்கள் அவ்விடத்தி லேயே இலைபோட்டுச் சாப்பிட்டார்கள். அங்கேயே கை அலம்பி னார்கள், சிகரெட்டு, பீடிகளை அங்கேயே பிடித்தார்கள். பிறகு விடியற்காலம் 4 மணிக்கு காவேரிக்கு ஸ்நானம் செய்யப் போய்விட்டார்கள்.
தருமகர்த்தா ப.முத்து நாயக்கர் கூறியதாவது: நான் இருபது வருடமாக தருமகர்த்தா வேலை பார்க்கிறேன். இந்தச் செய்கை நடந்த 4ந்தேதி ஊத்துக்குளி போயிருந்தேன். 6ஆம் தேதி இரவு 8 மணிக்கு வந்தேன். தத்தாத்திரி குருக்கள் முத்துசாமி ஆகிய இருவரும் வந்து விஷயந்தெரிவித்தார்கள். நான் போலீசாருக்கு ரிப்போர்ட்டுச் செய்தேன். வழக்கு 1..5.29 ஆம் தேதி வாய்தா போடப்பட்டிருக்கிறது. - ஒரு நிருபர்
(குடியரசு 28.4.1929)
விடுதலை,9.1.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக