பக்கங்கள்

ஞாயிறு, 15 மே, 2016

நீதிக்கட்சி அரசின் சில முக்கிய சமூக சீர்திருத்த ஆணைகள்



‘கோயில் பெருச்சாளி’களிடம் முற்றாகச் சிக்கிக் கோயில்கள் கொள் ளையாய் கிடந்தன. இந்த நிலைமையை மாற்ற இந்து அறநிலையச் சட்டம் (1923)அய் நீதிக்கட்சி அரசு நிறை வேற்றிப் புதுடில்லியிலுள்ள அரசப் பிரதிநிதி (Viceroy) ஒப்புதலுக்கு அனுப் பியது. அவர் இசைவையும் பெற்றது. இச்சட்டம் அரசு இதழில் வெளியிடப் படும் என்ற குறிப்பை அரசு ஆணை எண் 29 சட்டம் (லெஜிஸ்லேடிவ்) நாள் 27.1.1925 மூலம் தெரிந்து கொள்ளு கிறோம்.
நீதிக்கட்சி அரசு ஆணை - பெண்களுக்கு வாக்குரிமை
பார்ப்பனரல்லாதார் உயர்வுக்காக உழைத்த நீதிக்கட்சி பெண்களின் உரிமைகளுக்காகவும் செயல்பட்டது. இக்கட்சி ஆட்சிப் பொறுப்புக்கு வந்த போது தான் கூறி வந்தவைகளையெல் லாம் சட்டமாகவும், ஆணைகளாகவும் ஆக்கித் தன் அறிவு நாணயத்தை வரலாற்றில் பதித்துச் சென்றுள்ளது.
பெண்கள் தேர்தல்களில் வாக்களிக் கக்கூடாது என்று இருந்த தடையை அரசு ஆணை எண் 108 லா (லெஜிஸ் லெடிவ்) நாள் 10.5.1921 மூலம் நீதிக்கட்சி அரசு நீக்கியது. இந்த ஆணை காரண மாக 1921 முதல் பெண்கள் தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைச் சென்னை மாகாணத்தில் பெற்றார்கள்.
பஞ்சமர் என்ற பெயர்
நீக்கப்பெறல் - ஆதிதிராவிடர் என அழைக்கப் பெறல்
“பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர்’’ என்ற வருணப் பிரிவுகளை _ பிறவி காரணமாகக் கற்பிக்கப்பட்ட பிரிவுகளைத் தென்புலத்திலும், ஆரியப் பார்ப்பனர் நிலைநாட்டினர். அய்ந்தாம் ஜாதியார் தாழ்த்தப்பட்டவர் ஆவர். இவர்கள் “பஞ்சமர், பறையர்’’ என அழைக்கப்பட்டனர். இவ்வாறே அரசு ஆவணங்களில் குறிப்பிட்டார்கள்.
நீதிக்கட்சி அரசு தன் ஆணை எண் 817 சட்டம் (பொது) நாள் 25.3.1922 மூலம் பஞ்சமர், பறையர் என்று தொல் திராவிடர் குடியினரை அழைக்கும், எழுதும் மரபை நிறுத்திற்று. தமிழில் “ஆதி திராவிடர்’’ என்றும், தெலுங்கில் “ஆதி ஆந்திரர்’’ என்றும் அவர்களைக் குறிப்பிட வேண்டும் என்று ஆணை பிறப்பித்தது.

2.9.1921 அன்று சென்னைச் சட்ட மன்றத்தில் டி.சி.தங்கவேலுப் பிள்ளை, பார்-_அட்_-லா எனும் நீதிக்கட்சி உறுப் பினர் முன்மொழிந்த தீர்மானத்தை யொட்டி, நீதிக்கட்சி அரசு தன் ஆணை எண் 636 சட்டம் (கல்வி) 20.5.1922 மூலம் மாணவர்களைக் கல்லூரிகளில் சேர்க்கக் குழுக்களை (Admission Committees) நியமித்தது.
நீதிக்கட்சியின் முன்னணித் தலை வர்கள் பலர் இக்குழுக்களில் இடம் பெற்றுக் கல்லூரிகளில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் சேர்க் கப்படத் தம் உழைப்பை நல்கி உள் ளார்கள்.
“தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்களைக் கல்வி நிலையங்களில் மிகுதியாகச் சேர்த்திடுக’’
சென்னை மாநகராட்சி, பிற நக ராட்சிகள், மாவட்ட நாட்டாண்மைக் கழகங்கள் (டிஸ்ட்ரிக்ட் போர்டுகள்) போன்றவை நடத்தும் பள்ளிகளில் இன்னும் மிகுதியாகத் தாழ்த்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் சேர்க்கப்பட வேண்டும் என்றும், ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் பள்ளியில் பயில்வோர் பட்டியலை அனுப்பும்போது பள்ளியில் சேர்க்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மாண வர்பற்றிய விபரங்களைப் படைக்க வேண்டும் என்றும், குறிப்பிடும் அரசு ஆணை எண் 205 சட்டம் (கல்வி) 11.2.1924 பிறப்பிக்கப்பட்டது. இந்த ஆணை முனைப்புடன் நீதிக்கட்சி அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்டது.
பார்ப்பனரல்லாத பிள்ளைகளுக்கு
தொடக்கக்கல்வி அளித்தல்
கல்வி மறுக்கப்பட்டுக் கிடந்த பார்ப்பனரல்லாதார் பிள்ளைகள் தொடக்கப்பள்ளிகளில் நிறையச் சேர்க்கப்பட வேண்டும் என நீதிக்கட்சி அரசு முனைந்து செயல்பட்டது.
இதற்காகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் மாவட்டக் கல்விக்குழு (District Educational Council) வினால் ஆக்கப்பட்டு கல்வித்துறை இயக்குந ருக்கு அனுப்பப்பட வேண்டும். இப் பட்டியல்களை அவர் ஆய்ந்து மாவட்ட அரசிதழ்களில் (District Gazettee) ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியிட வேண்டும். இதன் நகல்களை அவர் அரசுக்கும் அளிக்க வேண்டும் என்ற குறிப்புகள் அடங்கிய அரசு ஆணை எண் 849 சட்டம் (கல்வி) 21.6.1923அய் நீதிக்கட்சி அரசு வெளியிட்டது.
பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை இவ்வாறு நீதிக்கட்சி அரசு 1923இல் தயாரித்தது. டில்லி அரசாங்கம் அதற்கு எழுபது ஆண்டுகளுக்குப் பின் இன்று தயாரித்துக் கொண்டிருக்கிறது. “சமூக நீதியின் தலைநகர்’’ (Capital of Social Justice) சென்னையே அன்றோ!
சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியில் (Presidency College) பார்ப்பனரல்லாத  வகுப்பு மாணவர்களைச் சேர்ப்பது
குறித்த ஆணை
அரசு ஆணை எண் 636 கல்வி நாள் 20.5.1922இன்படி கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க குழுக்கள் (அட்மிஷன் கமிட்டிகள்) அமைக்கப் பட்டன. இதன் தொடர்பாகச் சென்னை யிலுள்ள மாநிலக் கல்லூரியில் பார்ப் பனரல்லாதார் எவ்வளவு பேர் சேர்க்கப் பெற வேண்டும் என்று வரையறை செய்யப்பட வேண்டும் எனப் பல வேண்டுகோள்கள் அரசுக்கு வந்தன.
இவற்றின்பேரில் அரசு ஆணை எண் 1880 சட்டம் (கல்வி) 15.9.1928 பிறப் பிக்கப்பட்டது. பார்ப்பன மாணவர் 40 விழுக்காடும், பார்ப்பனரல்லாத மாணவர் 60 விழுக்காடும் சேர்க்கப்பட வேண்டும் என அவ்வாணை வலியுறுத் திற்று.
வகுப்புரிமைக்காகப் பிறப்பிக்கப் பட்ட ஆணை _ அரசு அலுவல்களுக்கு நியமனங்கள் தொடங்கும் இடத்தில் இருந்து மட்டும் நடைமுறைப்படுத்தப் படும் என்று அரசு ஆணை எண் 226 (பொது) நாள் 27.2.1929 குறிப்பிடுகிறது.
சென்னை பப்ளிக் சர்வீஸ் கமிஷனை உருவாக்கல்
அரசு அலுவல்களுக்கு அந்தந்தத் துறையினரே நியமனங்கள் செய்து வந்தனர். பின்னர் நியமனங்கள் ஒருமுகப்படுத்த (Staff  Selection Board) “அலுவலர் தேர்வு வாரியம்’’ நீதிக்கட்சி அரசால் அமைக்கப்பட்டது. இது சரிவரச் செயல்படவில்லை. எனவே, ஆற்றல் வாய்ந்த சர்வீஸ் கமிஷனை நீதிக்கட்சி அரசு உருவாக்கியது.
1929ஆம் ஆண்டைய சென்னை சர்வீஸ் கமிஷன் சட்டத்திற்கு அந்த ஆண் டிலேயே மேன்மைமிகு இந்திய கவர்னர் ஜெனரல் ஒப்புதல் அளித்தார். அரச ஆணை எண் 484 சட்டம் (லெஜிஸ் லேடிவ்) 18.10.929 இதைக் குறிப்பிடுகிறது.
சென்னை அரசாங்க ஆணை
காங்கிரஸ் ஆட்சியின்போது 1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் சிறைக்குச் சென்றவர்களைக் “கிரிமினல்’’ களாகக் கருதி அரசாங்க வேலை வாய்ப்புகள் மறுக்கப்படுவதைக் சுட்டிக் காட்டி அவர்கள் “கிரிமினல்’’களாகக் கருதப்படுகிறார்களா அல்லது அரசியல் காரணத்திற்காகச் சிறையேகிய அவர்கள் அரசு அலுவல்களுக்குத் தகுதியான வர்கள் என அரசு கருதுகிறதா எனத் தென்னிந்திய நல உரிமைச் சங்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமி 19.9.1940 அன்று சென்னை அரசாங்கத் தலைமைச் செயலருக்கு ஒரு விளக்க கோரம் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
தலைமைச் செயலர் டி.ஆஸ்டின் அரசு ஆணை (G.No.2069 Public (Services) 18th October, 1940)இல் இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்ட வர்கள் அரசுப் பணிகளில் நியமனமாகத் தடையேதும் இல்லை என சென்னை மேதகு ஆளுநர் அவர்கள் தெளிவு படுத்தியிருப்பதாக அறிவித்தார்.
-விடுதலை,ஞா.ம.28.11.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக