இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகவுரையில் சமூகநீதி'', பொருளாதார நீதி'' அரசியல் நீதி'' என்று தனிமைப்படுத்தப்பட்டிருப்பதை புரிந்துகொள்ளாதது ஏன்?
உயர்ஜாதியினருக்குப் பொருளாதார அடிப்படை யில் இட ஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்தினை அவசர அவசரமாக மத்திய பி.ஜே.பி. அரசு நிறை வேற்றியது உள்நோக்கம் கொண்டது. இதனைப் புரிந்துகொள்ளாமல் சில எதிர்க்கட்சிகள் சட்டத் திருத்தத்திற்கு ஆதரவு அளித்ததற்குப் பிற்காலத்தில் அவர்கள் வருந்தவேண்டியிருக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள சட்ட நுணுக்கமான அறிக்கை வருமாறு:
ஒரு நாள் இரவில் (நவம்பர் 8, 2016) பண மதிப்பிழப்பு (Demonetisation) பிரதமர் மோடி அறிவித்தார்.
ஒரு நாள் இரவு நடுநிசியில் ஜி.எஸ்.டி. அமுலுக்கு வந்தது!
100 ஆண்டு வரலாற்றையும், பல்வேறு போராட்டங் களையும் வரலாறாகக் கொண்ட சமூகநீதி என்ற பெயரால் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையைத் தகர்க்கும் பொருளாதார அடிப்படையில் உயர்ஜாதியினரான ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு - வேலை வாய்ப்பு, கல்வி இரண்டு துறைகளிலும் அளிக்கப்படும் என்ற அரசியல் சட்டத் திருத்தத்தை இரண்டே நாட் களில் மக்களவை, மாநிலங்களவைகளில் நிறைவேற்றி - அவசர அவசரமாக குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெற்று, மத்திய கெசட்டிலும் வெளியிட்டு, 14.1.2019 முதல் அமுலாக்கத்திற்கு வந்துள்ளது என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் எதிர்க்கட்சிகள்
இந்திய அரசியல் சட்ட வரலாற்றில் இவ்வளவு அவசர ()காலத்தில் ஒரு சட்டத் திருத்தம் இதற்கு முன் எப்போதும் நிறைவேறியதாகத் தெரியவில்லை!
தும்பை விட்டு வாலைப் பிடித்தவர்களைப்போல, எதிர்க்கட்சிகளில் தி.மு.க.வைத் தவிர மற்றவர்கள் எதிர்த்து வாக்களிக்காமல், ஓட்டுப் போட்டு நிறைவேற விட்டுவிட்டு, பிறகு இதன் உள்நோக்கம்பற்றி விசாரிப்பது - அண்மைக்கால அரசியல் விசித்திரங்களில் ஒன்று!
அ.தி.மு.க.வில் டாக்டர் தம்பிதுரை உரை பிரமாதம்; ஆனால், வெளியேறியது வேடிக்கையான வாடிக்கை!
எந்த ஒரு நல்ல செயலாக அது இருந்தாலும், அது உள்நோக்கத்துடன் (Malafide) செய்யப்பட்டால், அது ஏற்கத்தக்கதாகவே இருக்க முடியாது.
இப்படி இதைச் சொல்லும் எதிர்க்கட்சிகள் வரும் தேர்தலில் தங்கள் எதிர்ப்பை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். திசை திருப்பி, உயர்ஜாதியினர் வாக்குகள் தங்களுக்குக் கிடைக்காமற் போய்விடுமோ என்ற குழப்பம் கலந்த துணிவின்மை, அரசியல் தெளிவின்மையால் வாக்களித்து விட்டு, வெளியே கைபிசைந்து, ஏதோ சமாதானம் சொல்லுகிறார்களே?
ஆதரவு அளித்த எதிர்க்கட்சிகள் வருந்தவேண்டிய நிலை ஏற்படும்!
உண்மையில் இட ஒதுக்கீட்டின் தத்துவமே வடநாட்டு தேசியக் கட்சிகளின் தலைமைகளுக்குப் புரிவதில்லை; உயர்ஜாதியினரையே ஆலோசகர்களாகவும், வழிகாட்டி களாகவும் எதிர்க்கட்சிகளும் கொண்டுள்ளதால் இந்த "விபத்து, ஆபத்து'' ஏற்பட்டது! ஏற்படுகிறது!!
மாநிலங்களவையில் செலக்ட் கமிட்டிக்கு விரிவாக ஆராயப்பட இது விடவேண்டுமென்று திருமதி. கனிமொழி கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து- ஆளுங்கட்சியான பா.ஜ.க.வுடன் சேர்ந்து சில எதிர்க்கட்சிகளும், ஆதரவளிக்கும் தன்மையில் வாக்களித்து, தோற்கடித்தது பின்னாளில் அவர்கள் மிகப்பெரிய அளவிற்கு வருந்தவேண்டிய முடிவாகும்! நியாயப்படுத்தப்பட முடியாத தவறு.
இது நீதிமன்றத்தில் நிற்காது' என்பதை இப்போது அவர்கள் கூறுவது இன்னும் வேதனை நிறைந்த வேடிக்கையாகும்.
சமூகநீதியில் தெற்குதான் வழிகாட்டும்!
திராவிடர் இயக்கம், தந்தை பெரியார்தான் இதற்குக் கர்த்தாக்கள் - இவர்களிடம் பாடம் கற்காதவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் முழு பரிமாணமும் புரியாது - தெற்குதான் முதல் அரசியல் சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்து இந்தியாவிற்கு வழிகாட்டியது!
இப்போது அமுலுக்கு வந்துள்ள 124 ஆவது அரசியல் சட்டத் திருத்தம் நிறைவேற்றப்பட்டு, செயலுக்கு வரும்பொழுது (103 ஆம் அரசியல் சட்டத் திருத்தமாகி உள்ள) இதன் சுய முரண்பாடு - நிலையில்லா பொருளாதார அடிப்படை அளவுகோலால் படாதபாடுபட்டு சீரழிவை சந்திப்பது உறுதி.
நாள் ஒன்றுக்கு ரூ.2,500 சம்பாதிப்போர் ஏழையா?
கிராமப்புற மக்களில் யார் நாள் ஒன்றுக்கு 27 ரூபாய் சம்பாதிக்கிறாரோ அவர் வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர் என்றும், நகர்ப்புறத்தில் 33 ரூபாய் சம்பாதிப்ப வர்கள் அதேபோல, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர் (Below The Poverty Line - BPL).
இப்போது மோடி அரசின் உயர்ஜாதி ஏழை'' நாள் ஒன்றுக்கு 2500 ரூபாய் வருமானம் உள்ளவர். இட ஒதுக்கீட்டுத் தகுதி பெற வேலை வாய்ப்பில், உயர்கல்வியில் இட ஒதுக்கீடாம்.
மோடி அரசு - ஆர்.எஸ்.எஸ். கணக்குப்படி 5 ஏக்கர் பூமி உள்ள விவசாயி ஏழை!''
எப்படி சிரிப்பது என்றே புரியவில்லை!
வருமான வரித்துறை என்ன சொல்லுகிறது?
மத்திய அரசின் வருமான வரி கணக்குப்படி, ஆண்டுக்கு இரண்டரை லட்சம் ரூபாய் வருமானம் வந்தால், அவரிடம் வருமான வரி செலுத்துங்கள் என்று ஆணையிடும் உரிமை உண்டு.
இப்போது அறிவித்துள்ள உயர்ஜாதி ஏழையின்'' வருமானம் 8 லட்சம் ரூபாய் என்றால், மூன்று மடங்கு வருமான வரி செலுத்தும் தகுதி பெற்றவர் (Income Tax Assessee) ஆகத் தகுதி பெற்றவர் என்றால், இதைவிட கேலிக்கூத்து வேறு இருக்க முடியுமா?
அய்ந்து மாநில தேர்தல் தோல்வி, ஆர்.எஸ்.எஸ். கட்டளை - இவைகளால்தானே இந்தக் கூத்து.
நீதிமன்றப் போராட்டம் ஒருபுறமிருந்தாலும், வீதிமன்ற எழுச்சி - மக்கள் எழுச்சி இனி முக்கியம்!
ஒட்டகம் கூடாரத்திற்குள் மெதுவாக தலையை நுழைத்த கதை'' இது!
அரசமைப்புச் சட்டம் என்ன கூறுகிறது?
தும்பை விட்டுவிட்ட எதிர்க்கட்சி நண்பர்களே, இனி வாலையாவது உறுதியாகப் பிடித்து முறுக்கிட, மாட்டைப் பணிய வைக்க மற்றவர்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடாமல் ஆதரவு தரத் தயங்காதீர்கள்.
இன்றேல், சமூகநீதி வரலாற்றில் உங்களுக்கு ஏற்பட்ட பழி - கறையைத் துடைக்கவே முடியாது. வரலாறும், அரசியல் சட்டமும் மன்னிக்காது, மறக்காது. காரணம், பீடிகையிலே சமூகநீதி வேறு, பொருளாதார நீதி வேறு, அரசியல் நீதி வேறு என்று பிரித்துக் காட்டப்பட்டுள்ளது என்பதை ஏனோ மறந்தீர்கள்!
கி.வீரமணி,
தலைவர் திராவிடர் கழகம்,
17.1.2019
சென்னை
- விடுதலை நாளேடு, 17.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக