பக்கங்கள்

செவ்வாய், 22 ஜனவரி, 2019

பத்து சதவிகித இட ஒதுக்கீடு - சமுகநீதிக்கு சாவுமணியா?

ஆ.பழனியப்பன்




ஒரே இரவில் பண மதிப்பிழப்பு நடவடிக்கை, மற்றோர் இரவில் ஜி.எஸ்.டி அமலாக்கம் என சர்ஜிக்கல்' தாக்குதல்களை நடத்திய மத்திய பி.ஜே.பி அரசின் சமீபத்திய அட்டாக்' பொதுப்பிரிவினர் எனப்படும் முன்னேறிய ஜாதியினருக்கு பொருளாதார அடிப் படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு வழங்க சட்டம்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், உயர் ஜாதியினரின் வாக்குகளைக் கவரவே, இந்த இடஒதுக் கீட்டை நரேந்திர மோடி அரசு கொண்டுவந்துள்ளது என்ற விமர்சனம் முன் வைக்கப்படுகிறது. மேலும் சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின் தங்கியவர்கள் என்ற அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை முன்னேற்று வதற்காக இடஒதுக்கீடு என்ற ஏற்பாடு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் இருந்துவரும் நிலையில், பொருளாதார அடிப்படையிலும் இடஒதுக்கீடு என்று கொண்டுவருவது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. பொருளா தாரரீதியாக நலிவடைந்த' முன்னேறிய ஜாதியினருக் குத்தான் இந்த இடஒதுக்கீடு என்றால் அதுவும் அர்த்தமிழக்கிறது. ஆண்டு வருமானம் எட்டு லட்சம் என்று வரையறுக்கும்போதே பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீடு' என்ற அடிப்படையே தகர்ந்துவிடுகிறது. பிறகு ஏன் இந்த இட ஒதுக்கீடு, அதுவும் யாரும் இதற்கான கோரிக்கைகளை வைத்து தீவிரமாகப் போராடாமல்?

தேர்தல் ஆதாயத்துக்காக பி.ஜே.பி அரசு இதைக் கொண்டுவந்துள்ளது என்று விமர்சிக்கும் காங்கிரஸ் கட்சி, சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகளே, இந்த மசோதா வுக்கு ஆதரவாக வாக்களிக்கவும் செய்துள்ளன. பி.ஜே.பி-யின் அடிமை' என்று அ.தி.மு.க விமர்சிக்கப் படும் நிலையில், பி.ஜே.பி அரசு கொண்டுவந்த இந்த மசோதாவைக் கடுமையாக விமர்சித்தார், அ.தி.மு.க-வின் தம்பிதுரை. "ஏழைகளை மேலே தூக்கிவிட வேண்டு மென்றால், நீங்கள் அளித்த வாக்குறுதியின் படி அனைவரின் வங்கிக் கணக்குகளிலும் ரூ.15 லட்சம் போடுங்கள்" என்று தம்பிதுரை நாடாளுமன்றத்தில் பேசிய பேச்சு, பி.ஜே.பி முகாமை அதிரவைத்தது. ஆனாலும், மசோதா மீதான வாக்கெடுப்பில் அ.தி.மு.க எம்.பி-க்கள் கலந்து கொள்ளவில்லை. தி.மு.க-வின் மாநிலங்களவை எம்.பி-யான கனிமொழி, நாடாளு மன்றத்தில் இந்த மசோதாவைக் கடுமையாக விமர்சித்துப் பேசினார். தி.மு.க தலைவர் ஸ்டாலினும், "இந்த இடஒதுக் கீட்டுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்" என்று குரல் எழுப்பியுள்ளார். இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிரான குரல் தமிழகத்தில் பலமாக ஒலிக்கும் சூழலில், பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்களிடம் பேசினோம்.

"ஜாதியின் பெயரால் மறுக்கப்பட்ட உரிமைகளை, ஜாதியின் பெயரால் கோருவதுதான் இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம். பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்ற பேச்சுக்கே இடமில்லை. இடஒதுக்கீடு ஒன்றும் வறுமை ஒழிப்புத் திட்டம் கிடையாது" என்று பேச ஆரம்பித்தார், திராவிடர் இயக்கத் தமிழர் பேர வையின் பொதுச்செயலாளரான பேராசிரியர் சுப.வீரபாண்டியன்.

"பொருளாதார அடிப்படையிலான இடஒதுக்கீட்டில் ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் வருமானம், அய்ந்து ஏக்கர் நிலம், ஆயிரம் சதுர அடியில் வீடு என்று உச்சவரம்பு வைக்கப்பட் டுள்ளது. ஆண்டுக்கு எட்டு லட்சம் ரூபாய் என்றால், மாதம் 65,000 ரூபாய், நாளொன்றுக்கு 2,500 ரூபாய். இவர்கள் ஏழைகளா?  நாலரை ஏக்கர் நிலம் வைத்திருப்பவர்கள் ஏழைகள் என்றால், நிலமே இல்லாமல் கூலிகளாக இருக்கும் கோடிக்கணக்கான மக்களை எப்படி அழைப்பது? இவர்கள் இருவரும் சமமா? கிராமப்புறங்களில் நாள் ஒன் றுக்கு 27 ரூபாய்க்கும் குறைவாக, நகர்ப் புறங்களில் 33 ரூபாய்க்கும் குறை வாகவும் வருமானம் உடையவர்களை வறுமைக் கோட்டுக்கீழே உள்ளவர்கள் என்று இதே அரசு சொல்கிறது. ரூ.8 லட்சம் சம்பாதிப்பவர்களுக்கும் இட ஒதுக்கீடு என்பது, இடஒதுக்கீட்டின் நோக்கத்தையே கேலிக்குரியதாக்கு கிறது" என்றார்.

பொருளாதார நிபுணரான பேராசிரியர் ஜெயரஞ்சன், "மனிதனை உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று ஜாதி அமைப்பு பிரித்துவைத்துள்ளது. இது, மிகப்பெரிய அநீதி. இதைச் சரிசெய்வது தான், சமூகநீதி. சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்  பின்தங்கிய சமூகத்தினரை முன்னேற் றுவதற்கான ஏற்பாடுதான், இடஒதுக்கீடு. கொள்கை முடிவுகளை எடுக்கக்கூடிய இடத்தில், இந்தச் சமூகத் தினரின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும் என்பது இட ஒதுக்கீட்டின் நோக்கம்.  முன்னேறிய ஜாதியினர் பொருளாதார ரீதியில் பின்தங்கியிருந்தால், வேலைவாய்ப்புகளை அதிகரித்து அவர்களுக்கு வேலை கொடுக்கலாம். அவர்களுக்கு கல்வி வாய்ப்பு வேண்டு மென்றால், நிறைய கல்லூரி களைத் திறந்து அவர்களுக்கு கல்விபெற வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம். மாறாக, அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது" என்றார்.

இந்த இடஒதுக்கீட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தபோதிலும், இதற்கான மசோதாவை ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்துள்ளது. இதற் கான காரணத்தை நம்மிடம் விளக்கினார் மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணன்.

"இடஒதுக்கீட்டின் விரோதியான பி.ஜே.பி-யே ஓர் இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டுவருகிறது என்றால், நிச்சயம் அது நல்ல நோக்கமாக இருக்க முடியாது. பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகிதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற மண்டல் கமிஷனுக்கு எதிராக வட மாநிலங்களில் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டவர்கள் இவர்கள். மத்திய பிரதேசம் உள்ளிட்ட அய்ந்து மாநிலத் தேர்தல்களில் வாங்கிய பலத்த அடி, பி.ஜே.பி-யின் செல்வாக்கு எந்தளவுக்கு சரிந்துள்ளது என்பதற்கு உதாரணம். எனவேதான், நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து இப்படியொரு ஏமாற்று நாடகத்தை அரங்கேற்றுகிறார்கள். ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை என்ற வாக்குறுதியை இவர்கள் நிறை வேற்றவில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி போன்ற காரணங்களால் இந்தியாவில் வேலை யின்மை அதிகரித்துள்ளது. அதை, இந்த இடஒதுக்கீட்டின் மூலம் மறைக்கப் பார்க்கிறார்கள்.

உயர் ஜாதியினர் அதிகமுள்ள உ.பி உள்ளிட்ட வட மாநிலங்களில், அவர்களின் வாக்குகளைப் பெறுவதற் கான தந்திரமாகவே இந்த இடஒதுக்கீட்டை பி.ஜே.பி கொண்டுவந்துள்ளது. இதற்கு எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தால், தேர்தலின்போது அதைப் பெரிய பிரச் னையாக்கி, வெற்றிபெற்றுவிடலாம் என்பது பி.ஜே.பி- யின் கணக்கு. எனவேதான், எதிர்தந்திரமாக இந்த மசோதாவை ஆதரிப்பது என்று முடிவெடுத்தோம். இந்தச் சட்டம் நீதிமன்றத்தில் செல்லுபடியாகாது" என்றார்.

"பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு" என்ற வாக்குறுதி பி.ஜே.பி-யின் தேர்தல் அறிக்கையில் மட்டுமல்ல, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையிலும் 2014-ம் ஆண்டு இடம்பெற்றிருந்தது. அப்புறம் ஏன் இந்தச் சட்டத்தை விமர்சிக்கிறீர்கள் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பீட்டர் அல்போன்சிடம் கேட்டோம். "பொருளாதார ரீதியில் இடஒதுக்கீடு என்பதை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறது. நரசிம்ம ராவ் ஆட்சியில், இது ஓர் அரசாணை மூலமாக வெளியிடப்பட்டது. சட்டமாக இயற்றும் அளவுக்கு பெரும்பான்மை பலம் இல்லை. அதனால், அரசாணையாக வெளியிடப்பட்டது. அதை, உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டது. நரேந்திர மோடி அரசுக்கு அந்த நிலைமை இல்லை. பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெற்ற இந்த அரசு, நான்கரை ஆண்டுகள் காலதாமதம் செய்துவிட்டு, தேர்தல் வரப்போகும் சமயத்தில் அவசர அவசரமாக இதைக் கொண்டுவந்துள்ளது. மதத்தை வைத்து வாக்கு வங்கியை உருவாக்க முடியும் என்று நினைத்த பி.ஜே.பி-யினர், அது முடியாது என்று தெரிந்த பிறகு ஜாதியை வைத்து வாங்குவங்கியை உருவாக்கப் பார்க்கிறார்கள். ராமர் கோயில் பிரச்சினையும், சபரிமலை பிரச்சினையும் அகில இந்திய பிரச்சினைகளாக மாறும், அதை வைத்து இந்துக்களின் வாக்குகளைத் திரட்டிவிடலாம் என்ற பி.ஜே.பி-யின் கணக்கு பொய்த்துவிட்டது. எனவே, இப் போது ஜாதியைக் கையிலெடுத்துள்ளார்கள்.  அதனால் தான், இந்த இடஒதுக்கீடு.

பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களைக் கண்ட றிவதற்கான எந்தவித ஆய்வோ, விவாதமோ செய் யாமல், இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டுவந்துள்ளனர். இதனால், இதன் பலன்கள் உரியவர்களுக்குப் போய்ச் சேராது. மேலும், மோடி அரசின் நோக்கம் இடஒதுக்கீடு வழங்குவது அல்ல. வரும் தேர்தலில் காங்கிரஸையும், சமூக நீதியை நம்பும் மற்ற கட்சிகளையும், மக்களுக்கு விரோதமாகத் திருப்புவதுதான். அந்தச் சூழ்ச்சிக்கு காங்கிரஸ் பலியாக விரும்பவில்லை. எனவே, மசோதா வுக்கு ஆதரவாக வாக்களித்தோம்" என்றார் பீட்டர் அல்போன்ஸ்.

சமூக ரீதியிலும், கல்வி ரீதியிலும் பின்தங்கியவர் களுக்கு மட்டும்தான் இடஒதுக்கீடு, பொருளாதார ரீதியிலான இடஒதுக்கீடு செல்லாது என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு ஏற்கெனவே தீர்ப்பளித்துள்ளது. எனவே, இந்தச் சட்டம் உச்ச நீதி மன்றத்தில் செல்லுபடியாகாது என்பது பலரின் கருத்தாக உள்ளது. ஆனால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத் தம் செய்துவிட்டதால், எந்தச் சிக்கலும் இருக்காது என் கிறார்கள் பி.ஜே.பி-யினர்.

"இந்த இடஒதுக்கீடு உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய் யப்பட்டாலும் பிரச்சினை வரும், ரத்து செய்யப்படா விட்டாலும் பிரச்சினை வரும்" என்று எச்சரிக்கிறார், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளரான விடுதலை ராஜேந்திரன்.

"பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு கொண்டுவந்து 28 வருடங்கள் ஆகின்றன. ஆனால், இன்றுவரை அது முழுமையாக அமல்படுத்தப் படவில்லை. குரூப் ஏ பிரிவு பணிகளில் ஏழு சதவிகிதம், எட்டு சதவிகிதம் என்ற அளவிலேயே அது அமல்படுத் தப்பட்டுள்ளது. நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச் சராக நாராயணசாமி இருந்தபோது, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் இது குறித்த விவரங்கள் உள்ளன. பிரதமர் அமைச்சகத்தில் முக்கிய முடிவுகளை எடுக்கக்கூடிய கேபினட் செகரடேரியேட்' எனப்படும் கேபினட் செயலகத்தில் மொத்தம் 64 பதவிகள் உள்ளன. அவற்றில் ஒரு தலித் அதிகாரியோ, ஒரு பிற்படுத்தப்பட்ட அதிகாரியோ கிடையாது. தனியார் நிறுவனங்களில் உயர் அதிகாரிகளாக இருப்பவர்களில் 90 சதவிகிதம் பேர் உயர் ஜாதியினர்தான்.

மோடி அரசு, எந்தவிதமான ஆய்வும் புள்ளிவிவரமும் இல்லாமலேயே இந்த இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்துள்ளது. இதை உச்ச நீதிமன்றம் ரத்துசெய்துவிட்டால் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவரும் இடஒதுக்கீட்டிலிருந்து ஒரு பகுதியை எடுத்து முற்பட்ட வகுப்பினருக்குக் கொடுக்கக் கூடிய ஆபத்தும் வரலாம் - என்கிறார்" விடுதலை ராஜேந்திரன்.

தாங்கள் கொண்டுவந்துள்ள இடஒதுக்கீட்டை, அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சிகள் விமர்சிக் கின்றன என்கிறார்கள் பி.ஜே.பி-யினர். "மண்டல் கமிஷனை அமைத்ததே நாங்கள்தான், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டைக் கொண்டு வந்ததே நாங்கள்தான்" என்று மார்தட்டுகிறார், பி.ஜே.பி-யைச் சேர்ந்த நாராயணன்.

மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் ஆட்சியில்தான், மண்டல் குழு அமைக்கப் பட்டது. அந்தக் குழு அளித்த அறிக்கையை, பத்து ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டது காங்கிரஸ் ஆட்சி. 1989ஆம் ஆண்டு பி.ஜேபி-யின் தேர்தல் அறிக்கையில், மண்டல் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவோம் என்று உறுதியளித்திருந்தோம். பி.ஜே.பி-யின் ஆதரவு பெற்ற வி.பி.சிங் அரசுதான், மண்டல் குழு பரிந்துரையை அமல்படுத்தியது. 2014 தேர்தல் அறிக்கையில், பொருளா தார ரீதியில் இடஒதுக்கீடு வழங்குவோம் என்று உறுதி யளித்தோம். எனவே, இப்போது அதைக் கொண்டு வந்திருக்கிறோம். இதனால், தமிழகத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயருக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு எட்டு லட்சம் ரூபாய் என்று உள்ளது. அதே தொகை தான் இந்த 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக வைக்கப் பட்டுள்ளது. இதில் எந்தத் தவறும் கிடையாது. பிற்படுத்தப்பட்டவர்களில் கிரீமிலேயர் என்பது எப் படியோ, அதுபோலத்தான் முன்னேறியவர்களில் நலி வடைந்தவர்கள். அவர்களுக்காகத்தான் இந்த இட ஒதுக்கீடு. இதன் மூலம், இந்துக்கள் மட்டுமல்லாமல் கிறிஸ்தவர்களில் சில பிரிவினரும், முஸ்லீம்களில் சில பிரிவினரும் பயன்பெறுவார்கள்.

இந்த இடஒதுக்கீட்டுக்கு எதிராக சிலர் தவறான பிரச்சாரம் செய்கிறார்கள். மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறாது என்றார்கள். ஆனால், அங்கு நிறைவேறி குடியரசுத் தலைவரின் ஒப்புதலும் பெறப் பட்டுவிட்டது. அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்யப் பட்டுவிட்டதால், நீதிமன்றத்திலும் இது நிச்சயம் வெற்றி பெறும்" என்று நம்பிக்கையுடன் கூறினார், நாராயணன்.

அரசியல் கட்சிகள் வைத்துள்ள விமர்சனங்களுக்கு அப்பால், "பொதுப் பிரிவினருக்கு பொரு ளாதார அடிப் படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு என்பது குளறுபடியான சிந்தனை'. நாட்டில் உள்ள அனைவரையும் இடஒதுக்கீட்டின் கீழ் கொண்டுவந்து விட்டால் அது, ஒட்டு மொத்தமாக இட ஒதுக்கீட்டையும் நீக்குவ தாகிவிடும்" என்று நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் அமர்த்யா சென்  தெரிவித்துள்ள கருத்து மிகவும் கவனம் பெற்றுள்ளது.

இட ஒதுக்கீடு என்பது ஜாதிரீதியிலானது என்றாலும் தாழ்த்தப்பட்டவரோ, பிற்படுத் தப்பட்டவரோ பலன் பெற்றவர்களே மீண்டும் மீண்டும் பலன் பெறுவதை எப்படித் தடுப்பது?', எந்தெந்த ஜாதிகள் எல்லாம் இதுவரையிலான இட ஒதுக் கீட்டால் முன்னேறியுள்ளனர் என்பதற்கான முறையான தரவுகள் உள்ளனவா?', பொருளாதார அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு என்றால் ஒருவரின் பொருளாதார நிலையைக் கண்டறிவதற்கான நம்பகமான ஏற்பாடுகள் உள்ளனவா, வருமானச் சான்றிதழ் உள்ளிட் டவற்றை ஏமாற்றிப் பெற முடியுமே', 'பொருளாதாரம் என்பது மாறக்கூடிய ஒன்றாகவும் ஜாதி என்பது மாறாத ஒன்றாகவும் இருக்கும்போது எதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது சரியானதாக இருக்கும்?', ஏற்கெனவே ஜாதிரீதியிலான மக்கள்தொகைக் கணக் கெடுப்பை எடுத்திருக்கும் மத்திய அரசு அதை ஏன் வெளியிட வில்லை?, மக்கள்தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு என்பது சரியான தீர்வுதானா?', அரசுத்துறைகள்  மேலும் மேலும் தனியார் மயமாக்கிக்கொண்டிருக்கும் இந்நிலையில் இட ஒதுக்கீடு என்பதே கண் துடைப்பு தானா, 'தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமா, அதைக் கண் காணிப்பதற்கான, வரைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் என்ன?', பொருளாதாரரீதியாக முன்னேறிய ஜாதியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசு நீதித்துறை உள்ளிட்ட சில துறைகளில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்த மறுப்பது ஏன்?'

இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகள் இட ஒதுக்கீட்டைப் பற்றி இருக்கும்போது, மோடி அரசு கொண்டுவந்துள்ள இந்த பத்து சதவிகித இட ஒதுக்கீடு உண்மையிலேயே முன்னேறிய ஜாதியினருக்காவது பலன் அளிக்குமா,  பி.ஜே.பி-க்காவது வரும் நாடாளு மன்றத் தேர்தலில் பலன் அளிக்குமா என்பது கேள்விக் குறிதான்.

நன்றி: 'ஆனந்தவிகடன்' 23-1-2019

-  விடுதலை நாளேடு, 18.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக