பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

பசி ஏப்பமா? புளி ஏப்பமா?



கி.வீரமணி,


தலைவர், திராவிடர் கழகம்


சமீபத்தில் நாடாளு மன்றத்தின் இரு அவை களிலும் தடாலடியாக ஒரே நாளில் விவாதம் வாக் கெடுப்பு நடத்தி நிறைவேற் றப்பட்டுள்ள, 10 சதவீத இட ஒதுக்கீடு (பொருளாதார அடிப்படையைக் கணக்கில் கொண்டு) முன்னேறிய வகுப்பு ஏழைகளுக்கு வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற இந்திய அரசியல் சட்டத்தின் 103-வது திருத்தத்தை ஏன், எதற்காக எதிர்க்கிறோம் என்பதை இட ஒதுக்கீடு ஏன், எதற்காக, எப்படி எப்போது ஏற்பட்டது என் பதைப் புரிந்துகொள்ள வாய்ப்பில்லாத இளைய தலைமுறையும், மேலெழுந்த வாரியாக ஏழை களுக்கும் இட ஒதுக்கீட்டை இவர்கள் எதிர்ப்பது என்ன நியாயம் என்று குழம்பியுள் ளவர்களுக்கும் தெளிவுபடுத்துவது மிக அவசியமாகும்.

இந்த சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு நமது நாட்டில் (இந்தியாவில்) ஏன் தேவைப்படுகிறது? உலகில் எங்குமில்லாத சாதி வர்ண தர்மமுறை, தீண்டாமை என்பது பிறப்பை அடிப்படையாகக் கொண்ட சமூக அமைப்பு. மனுதர்மத்தில் முதலாம் அத்தியாயம் 87 ஆவது சுலோகத்தில் "பிரம்மாவானவர் பிராமண, ஷத்திரிய, வைசிய, சூத்திர வருணத்தாருக்கு இம்மைக்கும், மறுமைக்கும் உபயோகமான கருமங் களைத் தனித்தனியாகப் பகுத்தார்". இதன்படி, பிராமணர்களுக்கே கல்வி ஏகபோகம். இதனால், கீழ்சாதிக்காரர்கள் காலங்காலமாய், கல்வியறிவுபெற முடியாதவர்களாகவும், அதன் விளைவாக அரசு வேலைவாய்ப்புகளை நினைத்துப் பார்க்க முடியாத மன ஊனம் உற்றவர்களாக ஆக்கப்பட்டார்கள்!

சர்.பி.டி. தியாகராயர், டாக்டர் நடேசன், டாக்டர் டி.எம்.நாயர் ஆகிய திராவிடர் இயக்க முன்னோடிகள் இதனைச் சுட்டிக்காட்டி, (வகுப்புவாரி உரிமை) சமூக நீதி வேண்டும் என்று கேட்டனர். தந்தை பெரியார் காங்கிரசில் இருந்தபோது 1920 முதல் 1925 வரை ஒவ்வொரு மாகாண மாநாட்டிலும் முயன்று வெற்றி பெறாத நிலையில், சமூகநீதிக்காகவே இட ஒதுக்கீட்டுப் பிரச்சினைக்காகவே காங்கிரசை விட்டு 1925 -ல் காஞ்சீ புரத்தில் நடைபெற்ற மாநாட்டிலிருந்து வெளி யேறினார். இவர்களுக்காகத்தான் 1920-ல் பதவியேற்ற நீதிக்கட்சி திராவிடர் இயக்கம் அதன் ஆட்சியின் போது வெள்ளைக்காரர்களிடம் ஆட்சியின் அதிகாரம் இருந்த இரட்டை ஆட்சி முறையிலும் முயற்சித்து, 1921, 1922 என்று இரண்டு வகுப்புவாரி ஆணைகளைப் பிறப்பித்தனர். அது சரியாக செயல்படாததால், தந்தை பெரியார் போன்ற தலைவர்களின் ஊக்கத்தினால், நீதிக்கட்சித் துணையுடன் ஆட்சி அமைத்த டாக்டர் சுப்பராயன் தலைமையில் அமைந்த அமைச்சர வையில் இடம் பெற்ற எஸ்.முத்தய்யா (முதலியார்) ஒரு புது வகுப்புவாரி உரிமை ஆணை (ஜி.ஓ.) அனை வருக்கும் இட ஒதுக்கீடு தரும் வகையில் மக்கள் தொகையில் 3 சதவீதம் உள்ள பிராமணர்களுக்கு 17 சதவீதம் இட ஒதுக்கீடு 1928 முதல் அமலுக்கு வந்தது. அதனால், வகுப்புவாரி உரிமையில், பிராமணரல்லாத வர்களில் ஆதிதிராவிடர், இஸ்லாமியர், கிறிஸ்தவர் என்று பலருக்கும் இட ஒதுக்கீடு தரப்பட்டு இட ஒதுக்கீடு ஒரு சமூகநீதியைத் தந்தது. 100 சதவீத ஏகபோகம் அனுபவித்தவர்களுக்கு 17 சதவீதத்தை ஏற்க மனமில்லை.

1950-ல் அமலான இந்திய அரசியல் சட்டத்தில் கூறப்பட்டிருக்கும் "இது சமத்துவத்திற்கு விரோதம் என்று அடிப்படை" உரிமை கோரி, செண்பகம் துரைராசன் என்பவர் போட்ட வழக்கு, கம்யூனல் ஜி.ஓ. வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்புக் கூறியதனால், 1928 முதல் 1950 வரை அமலில் இருந்த வகுப்புவாரி உரிமை ஆணை செல்லாததானது.



இதற்காக அரசியல் சட்டத்தைத் திருத்த தந்தை பெரியார் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களையும் திரட்டி, ஒரு மாபெரும் போராட்டம் நடத்தினார். அப்போதைய பிரதமராக இருந்த நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கருடன் கலந்து, முதல்முறையாக அரசியல் சட்டத்தைத் திருத்தினார். அப்போது கல்வி உத்தியோகங்களில் பிற்படுத்தப்பட்டவர்களை அடை யாளம் காண "சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும்" என்ற சொற்றொடரையே பயன்படுத்தினர். அப்போது நாடாளுமன்றத்தில் இருந்த சிலரும், பொருளாதார ரீதியாக என்பதையும் இணைக்க வேண்டுமென்று விவாதம் எழுந்தது. பிரதமர் நேரு சொன்னார், சாதியால் சமூகத்தில் ஒதுக்கப்பட்டு, கல்வி மறுக்கப் பட்டது பாரம்பரியமானது; தெளிவானது. பொருளாதார அளவுகோல் ஆண்டுக்காண்டு மாறக் கூடியது. இன்றைய பணக்காரன் நாளைய ஏழையாகவும், இன்றைய ஏழை மறுநாள் பணக்காரனாகவும் ஆகலாம். ஆனால், கீழ் சாதிக்காரன் ஒருபோதும் மேல்சாதிக்காரன் ஆக முடியாது; சுடுகாடு கூட தனித்தனிதான். பிறவி அடிப்படை என்பது மாறாத, மாற்ற முடியாத சமூக அடிப்படை. எனவே, நமது அரசியல் சட்ட கர்த்தாக்கள் அந்த இரு சொற்களைப் போட்டார்கள் என்று கருத்தை உள்ளடக்கிய விளக்கம் தந்ததை ஏற்றார்கள். எனவே, இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டமல்ல, பல ஆண்டுகளாக கல்வி, உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட சமூக ஊனம் ஏற்பட்டவர்களுக்கு ஏற்படும் அநீதியைக் களையவே. பசி ஏப்பக்காரனுக்குப் பந்தியில் முன் னுரிமை தரவேண்டிய அவசியம் போல, புளி ஏப்பக் காரனுக்குப் பந்தியில் இடம் தருதல் தேவையற்றது. வறுமை ஒழிப்புத்திட்டங்களை அரசு வகுப்பதையும், அனைவருக்கும் அனைத்தும் தருவதையும் நாம் எதிர்ப்பதில்லை. ஆனால், "இட ஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்புத் திட்டம் அல்ல" என்பதை உச்சநீதிமன்றமே பல தீர்ப்புகளில் சுட்டிக்காட்டியுள்ளது. பொருளாதார அடிப்படையை அளவுகோலாக்கும் போது அதில் ஏன் முன்னேறிய சாதி ஏழைகள் மட்டும் என்ற பாகுபாடு. ஏன் எல்லா சாதிகளிலும் ஏழைகள் இல்லையா?

பிரதமர் மோடி அரசின் அவசர கோலமாக அள்ளித் தெளிக்கும் இந்த ஏற்பாட்டின் முக்கிய நோக்கம், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு தற்போதுள்ள இட ஒதுக்கீட்டினை ஒழிப்பதற்கு முதல் முயற்சியே இது. "ஒட்டகம் கூடாரத்திற்குள் தலை நீட்டுவது" போன்ற ஆபத்தான தொடக்கம் இது. அண்மையில் நடைபெற்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில், ஆட்சிகளை இழந்த பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அதற்கு முக்கிய காரணம். அந்த மாநிலங்களில் (இந்தி மாநிலங்களில்) உள்ள உயர் சாதியினரின் கோபம் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்கள், எஸ்.சி., எஸ்.டி. சட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தடுத்ததால் தான் என்று ஆர்.எஸ்.எஸ். அமைப்பு, மோடி அரசுக்கு ஒரு ரகசிய அறிக்கை அனுப்பியுள்ளதால், வரவி ருக்கும் 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களது வாக்கு வங்கியை மீண்டும் இழக்கக் கூடாது என்ப தற்காக ஒரு தந்திர வியூகமே இது!

அது மட்டுமல்ல, மோடி தலைமையிலான பா.ஜ.க., 2014-ல் ஆட்சிக்கு வருவதற்கு முன்னால், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்ற வாக்குறுதியும், கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு வரது வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடு வோம் என்பதும் காற்றில் பறந்த வாக்குறுதியாகி விட்டதை - எங்கும் கேட்பதை மாற்றிட இப்படி "ஒரு கல்லில் பல மாங்காய் அடிக்கும்" ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் இந்த 'மாயமான் வேட்டை' மாதத்திற்கு 68 ஆயிரம் சம்பளம் வாங்குவோர் ஏழைகளா? 5 ஏக்கர் பூமி வைத்திருப்போர் ஏழைகளா? இது ஒரு நிரந்தர அளவுகோல் ஆக முடியுமா? ஆண்டுக்கு ஆண்டு மாறாதா? இப்படி ஆண்டுக்கு ஆண்டு இட ஒதுக்கீடு மாறிக் கொண்டிருக்கமுடியுமா? பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 'கிரிமீலேயர்' என்பதற்கும், இந்த அளவுகோலுக்கும் மோதல் ஏற்பட்டு குழப்பம் வராதா? "இந்திய அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவின்படிதான் நாங்கள் பொருளாதாரத்தில் பலவீன மான பிரிவினருக்கு இந்த கல்வி, வேலை வாய்ப் புக்கான ஒதுக்கீட்டை செய் துள்ளோம்" என்று கூறியி ருப்பது, அச்சட்டப் பிரிவு களைத் தவறாகப் பயன் படுத்தியுள்ளதற்கான மிகப் பெரிய திரிபுவாதமாகும். அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவு ஏன் சேர்க்கப் பட்டது என்றால், மலைவாழ் மக்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட பலவீனமான பிரிவினர் களுக்கு கல்வியிலும், பொரு ளாதாரத்திலும் முன்னேற்ற மடையச் செய்யவும், காலங் காலமாக அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி, சுரண்டல்களிலிருந்து அவர் களைக் காப்பாற்றி முன்னேற்றுவதற் கான பிரிவு ஆகும். பசியுள்ள பஞ்சைப் பராரிகளுக்கான உணவை கொழுத்தவனுக்குப் போடு வது போன்ற அக்கி ரமம் இது! மரணத்தோடு போராடும் நோயாளிகளுக்குத்தான் தீவிர சிகிச்சைப் பிரிவு. சும்மா உடம்பு "செக் அப்" செய்ப வருக்கு அல்ல என்பதைப் புரிந்தாலே, இந்த விஷமம் எவருக்கும் புரியும்.

அரசியல் சட்டத்தின் பீடிகையில் உள்ள சமூகநீதி வேறு பொருளாதார நீதி வேறு, அரசியல் நீதி வேறு என்று பிரித்துக் காட்டியுள்ள போது, சமூகநீதியை பொரு ளாதார நீதியோடு போட்டுக் குழப்பலாமா? ஏற்கனவே மண்டல் வழக்கில், இந்த பொருளாதார அளவுகோல் சட்டப்படி செல்லாது என்று தீர்ப்பு 9 நீதிபதிகள் அமர்வில் தரப்பட்டது என்பதால், இது அரசியல் சட்ட விரோதம். ஒடுக் கப்பட்ட மக்களுக்கு விரோதம். சமூக அநீதி யாகும்.

நன்றி: 'தினத்தந்தி' 15.1.2019

கீழ்க்கண்ட பத்திகள் 'தினத்தந்தி'யில் வெளியிடப் படாதவையாகும்.

* அதுமட்டுமா? அதனை மீறி கல்வி (அக்காலத்தில் வேதம்) கற்க மற்றவர்கள் முயன்றால், நாக்கை அறுக்க வேண்டும்; காதால் ஓதுவதைக் கேட்டால், காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறது மனு தர்மம் (டாக்டர் அம்பேத்கர்).

* (அந்த அடையாளம் ஏற்கெனவே பிற்படுத்தப் பட்டோர் நலம்பற்றி இந்திய அரசியல் சட்டத்தின் 340 ஆவது பிரிவில் உள்ள சொற்றொடர்களே).

* அரசியல் சட்டத்தின் 46 ஆவது பிரிவின் தலைப்பே,  Promotion of educational and economic interests of Scheduled Castes, Scheduled Tribes and other weaker sections என்பதாகும்.

-  விடுதலை நாளேடு, 17.1.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக