பக்கங்கள்

வியாழன், 31 ஜனவரி, 2019

சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய ஜாதியினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது!

நீதிமன்றத்தில் முறையிடுவோம் - வீதிமன்றத்திலும் போராட்டக் களம் புகுவோம்!


பெங்களூரு சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரின் கருத்துரை




கருத்தரங்கில் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார். (இடமிருந்து வலம்) லட்சுமி நாராயண் (மேனாள் எம்.எல்.சி.), அரிபிரசாத் எம்.பி., (காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்), எச்.காந்தராஜ் (கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவர்), மாண்புமிகு சி.பாண்டுரங்க ஷெட்டி (கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் துறை அமைச்சர்), நீதிபதி கே.எல்.மஞ்சுநாத் (கருநாடக உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி), பேராசிரியர் ரவிவர்ம குமார் (கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரல்), ரேவண்ணா (மேனாள் அமைச்சர் & எம்.எல்.சி.,) ஆகியோர் உள்ளனர்.


பெங்களூரு, ஜன.29 சமூகநீதிக்கு எதிரான முன்னேறிய ஜாதியின ருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பானது! நீதிமன்றத்தில் முறையிடுவோம் - வீதிமன்றத்திலும் போராட்டக் களம் புகுவோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கருநாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவில் கருநாடகா பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் ஏற்பாட்டில் சமூகநீதிக் கருத்தரங்கம் 28.1.2019 அன்று நடைபெற்றது. அரசமைப்புச் (103 ஆம் திருத்தம்) சட்டம் 2019- அதன் விளைவுகள்'' (The Constitution  (103 rd  Amendment)- Act 2019 and its Consequences)   எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாளராகப் பங்கேற்றுச் சிறப்பித்தார்.

பெங்களூரு மில்லர் சாலையில் அமையப் பெற்றுள்ள தேவராஜ் அர்ஸ் நினைவு மன்றத்தில்' நடைபெற்ற கருத்தரங் கினை கருநாடக மாநில அரசின் பிற்படுத்தப்பட்டோர் நல அமைச்சர் சி.பாண்டுரங்க ஷெட்டி தொடங்கி வைத்தார். கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் பி.வசந்தகுமார் அய்.ஏ.எஸ். வருகை தந்த அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். ஆணையத்தின் தலைவர் எச்.காந்தராஜ் அறிமுக உரையாற்றினார்.

சமூகநீதித் தலைவர்களின் படத்திறப்பு


கருநாடக மாநில சமூகநீதித் தலைவரும், மேனாள் முதல்வரு மான தேவராஜ் அர்ஸ் மற்றும் சமூகப் புரட்சியாளர் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரது உருவப் படங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

சமூகநீதிபற்றிய புத்தகங்கள் வெளியீடு


கருத்தரங்க நிகழ்வில் சமூகநீதிபற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியல் வகைப்பாடு - கருத்துக்கோவை' எனும் ஆங்கில நூலினையும் மற்றும் கருநாடக மாநில பழங்குடியினர் வரலாறு, பண்பாடு - ஆய்வு அறிக்கை' எனும் கன்னட மொழி  நூலினையும் தமிழர் தலைவர் வெளியிட்டார்.

கருத்தரங்கில் பங்கேற்றோர்


சமூகநீதிக் கருத்தரங்கில் தமிழர் தலைவரோடு, கருநாடக மாநில உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி கே.எல்.மஞ்சுநாத் மற்றும் கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் மேனாள் தலைவரும், கருநாடக மாநில அரசின் மேனாள் அட்வகேட் ஜெனரலுமான பேராசிரியர் ரவிவர்ம குமார் சிறப்புப் பேச்சாளராகப் பங்கேற்று கருத்துரை வழங்கினர். மேலும் கருத்தரங்கிற்கு காங்கிரசு கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் அரிபிரசாத் எம்.பி., மேனாள் எம்.எல்.சி., லட்சுமி நாராயண் மற்றும் சமூகநீதிப் போராளியும், கருநாடக மாநில மேனாள் அமைச்சருமான ரேவண்ணா ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழர் தலைவரின் கருத்துரை


சமூகநீதிக் கருத்தரங்கில் சிறப்புரை வழங்கிய தமிழர் தலைவர் கருத்தரங்கின் தலைப்பான அரசமைப்பு (103 ஆம் திருத்தம்) சட்டம் 2019 - அதன் விளைவுகள்' என்பதுபற்றிய மிகவும் ஆழமான சட்டச் செறிவு நிறைந்த கருத்துகளை வழங்கினார். தமிழர் தலைவர் ஆசிரியர் தமது உரையில் குறிப்பிட்டதாவது:

இட ஒதுக்கீடு எனும் சமூகநீதிக் கோட்பாடு இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்பும், அது உருவாவதற்கு முன்பும் பிரிட்டிஷார் ஆண்ட பொழுது ஏற்பட்டதல்ல. சமுதாயத்தில் மக்களை வருண அடிப்படையில் பிரித்து வைத்து, ஒவ்வொரு வருணத்தாருக்கும் இந்தப் பணி என  இட ஒதுக்கீடு செய்து தொடங்கி வைத்தது மனுதர்மம் எனும் மக்கள் விரோத தர்ம நூல். அந்த தொடக்க கால இட ஒதுக்கீட்டினால் கல்வி மறுக்கப்பட்டு, வேலை வாய்ப்பு தெரிவு மறுக்கப்பட்டு, அரசியல் அதிகாரம் அன்னியப் படுத்தப்பட்டு, ஒடுக்கப்பட்ட மக்களான தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வந்தது. அந்த அநீதியினை களைந்திட, சமுதாயத்தில் சமத்துவத்தினை உருவாக்கிட கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் தற்பொழுது நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீடு. இட ஒதுக்கீட்டின் அளவு ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட வகையினருக்கு ஒதுக்கப்பட்டிருந்தாலும், நாடு அரசியல் விடுதலை பெற்று 70 ஆண்டுகளுக்கு மேலாகியும், உரிய அளவில் இன்னும் வழங்கப்படாத நிலையே நீடித்து வருகிறது. ஜாதி என்பது அனைவருக்கும் ஒரே வகையான அடையாளத்தை வழங்கிடவில்லை. ஒடுக்கப்பட்ட மக் களுக்கு ஜாதி என்பது இழிவின் அடையாளம்; அடக்கு முறைக்கு ஆட்பட்டதன் அடையாளம்; சுரண்டப்பட்ட நிலையின் அடையாளம். ஆனால், உயர் வகுப்பினருக்கு ஜாதி என்பது உயர்வுத் தன்மையின் அடையாளமாகும். பெரும்பாலான உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதின் அடையாளமாகும். இழிவுத் தன்மையினை சமத்துவமின்மையினை போக்கி சமத்துவத்தைக் கொண்டு வருவதற்கான இட ஒதுக்கீடு முன்னேறிய ஜாதியினருக்கு இப்பொழுது வழங்கப்பட இருப்பது சமூகநீதிக் கோட் பாட்டிற்கே புறம்பானது ஆகும். மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட அரசே அத்தகைய புறம்பான செயலுக்கு சட்ட வடிவம் கொடுத்துள்து. அதுதான் அரசமைப்புச் (103 ஆம் திருத்தம்) சட்டம் 2019 ஆகும்.

சமூக ரீதியாக, கல்வி அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்களை சமத்துவ நிலைக்குக் கொண்டுவர நடைமுறைப் படுத்தப்படும் இட ஒதுக்கீடு வழிமுறை சமூக ரீதியாக முன்னேறிய ஜாதியினருக்கு எப்படி பொருந்தும் - அதிலும் அரசமைப்புக் கட்டமைப்புக்கு எதிரான பொருளாதார அடிப்படையில் பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு என்பது பொருத்தமாகாது. சமூக அநீதி இழைக்கப்பட்டவர்களுக்குத்தான் சமூகநீதி வேண்டும். பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு உதவிட நிதி சார்ந்த வளர்ச்சித் திட்டங்கள், கடன் உதவித் திட்டங்களை அளித்திட அரசு முன்வர வேண்டும். அதுதான் சரியான வழிமுறை.

மேலும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது உரிய அளவில் பிரதிநிதித்துவம் பெறாத ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தான். ஏற்கெனவே அளவிற்கு அதிகமாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளவர்களுக்கு பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர் எனும் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கிட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது, அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்புக்கே விரோதமானது.

தேர்தல் நோக்கம்


இப்பொழுது கொண்டு வரப்பட்டுள்ள 103ஆம் திருத்த அரசமைப்புச் சட்டம் வர இருக்கின்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு வங்கியினை மய்யப்படுத்தி, அவசர கதியில் நாடாளுமன்றத்தில் நிறைவேறியுள்ளது. விவாதிக்க உரிய அவகாசம் தரப்படவில்லை. திருத்த மசோதா பற்றிய முன்னறிவிப்பு ஏதும் இல்லை. வழக்கமாக தெரிவுக் குழுவிற்கு (Select Committee) பரிசீலனைக்கு அனுப்பும் முடிவும் மேற்கொள்ளப்பட வில்லை. அமைச்சரவைக் கூட்டத்தில் 10 விழுக்காடு இடஒதுக்கீடு ஒப்புதல் அளிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அடுத்தடுத்த நாட்களில் நிறைவேற்றப்பட்டு, உடனே குடியரசுத் தலைவரின் ஒப்புதல்பெற்று ஒரு வார காலத்தில் நடைமுறைக்கு வந்திட அரசிதழில் வெளியிடப்பட்டு, அலுவலக விதிகள் உருவாக்கப்படுகின்றன. ஆனால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கிடும் மண்டல பரிந்துரை நடைமுறைக்கு வருவதற்கு 10 ஆண்டுகளுக்கும் மேலானது. எனவே இந்த 10 விழுக்காடு இடஒதுக்கீட்டின் நோக்கம் என்ன? பயனாளிகள் யார்? என்பது தெளிவாகப் புரியும்.

பொருளாதார அடிப்படையில் கொண்டுவரப்பட்டுள்ள நலிவடைந்த பிரிவினருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்களில் (Object and Reason) ஒன்றாக அரசமைப்புச் சட்டப்பிரிவு 46 குறிப்பிடப் பட்டுள்ளது. அரசிற்கான வழிகாட்டு நெறிமுறையாக அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றுள்ள இந்தப் பிரிவு நடைமுறைக்கு வருவதாக அரசுத் தரப்பு கூறுகிறது.

Article 46: Promotion of educational and economic interests of Scheduled Castes. Scheduled Tribes and other weaker sections - The State shall promote with special care the educational and economic interests of the weaker sections of the people, and in particular of the scheduled castes and the scheduled tribes. and shall protect them from social injustice and all forms of exploitation.

பிரிவு 46: தாழ்த்தப்பட்ட, பழங்குடி மரபின மற்றும் இதர நலிவடைந்த பிரிவினருக்கான கல்வித் தேவை, பொருளா தாரத் தேவைகளின் அடிப்படையில் முன்னேறவும்; நலி வடைந்த பிரிவினருக்கான கல்வி, பொருளாதாரத் தேவை களை நிறைவேற்றிட அரசு சிறப்புக் கவனம் செலுத்தி செயல்பட வேண்டும். குறிப்பாக நலிவடைந்த பிரிவினரில் தாழ்த்தப்பட்ட பழங்குடி மரபின வகுப்பினரான சமூக அநீதி இழைக்கப்பட்ட, அனைத்து வித சுரண்டலுக்கும் ஆளானவர் களை முன்னேற்றுவதில் கவனம் செலுத்திட முன்வர வேண்டும்.

அரசு மசோதா நிறைவேற்றத்திற்குக் குறிப்பிடப்படும் நலிவடைந்த பிரிவினர் என்பது பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினரை அல்ல; சமூக நீதி இழைக்கப்பட்ட, சமூகச் சுரண்டலுக்கு ஆளான ஒடுக்கப்பட்ட மக்களைத்தான் குறிக்கிறது. அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 46இல் கூறப்பட்டுள்ளதற்கு மாறாக அரசமைப்புச் சட்டம் திருத்தப்பட்டுள்ளது. இதுவும் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைகள் என்னும் கட்டமைப்புக்குப் புறம்பானது.

அடுத்து, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு இட ஒதுக்கீடு எனச்சொல்லி ஆண்டு குடும்ப வருமான வரம்பு ரூ. 8 லட்சம் என அரசாணை கூறுகிறது. இந்த வரம்பில் வருகின்றவர்களாக ஒரு மாத வருமானம் ரூ. 66,666/- ஆக ஒரு நாள் வருமானம் ரூ. 2151/- எனவும் கணக்கிடலாம். இப்படிப்பட்டவர்களை பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினராகக் கருதுவது எப்படிச் சரியாகும்? மேலும் வருமானவரி ஆணைப்படி ஆண்டு வருமானம் ரூ. 2.5 லட்சத்திற்கு மேலே இருந்தால் வருமான வரி கட்ட வேண்டும். இந்த வரம்பினைப் போல மூன்று மடங்கு உள்ளவர்களும் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் என அரசு வகைப்படுத்துவது -  அவர்களுக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு என்பது நகைப்புக்கு உரியது மட்டுமல்ல; ஒடுக்கப்பட்ட மக்களை மேலும் நசுக்கிட வழிவகுத்திட வல்லதும் ஆகும்.

எனவே மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசமைப்பு 103ஆம் திருத்தச் சட்டம் 2019 நீதிமன்றங்களில் ஆய்வுக்கு உள்ளாகும் பொழுது அவற்றின் பொருந்தா நிலை வெளிப்பட்டுவிடும். இதே போன்ற 10 விழுக்காடு இடஒதுக்கீடு செல்லாது என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. 103ஆம் திருத்தச் சட்டத்தின் செல்லாத தன்மை பற்றி உயர்நீதிமன்றத் திலும், உச்சநீதிமன்றத் திலும் முறையீடு செய்யப்படும். நீதிமன்ற முறையீட்டோடு நின்று விடாது. வீதி மன்றத்தில் - மக்கள் மன்றத்திலும் முறையீடு செய்யப்படும். பொது மக்களிடம் குறிப்பாக ஒடுக்கப்பட்ட மக்களிடம் தொடர்ந்து எடுத்துக்கூறி அவர்களது உரிமை பறிபோகும் நிலை பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்திடுவோம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள பொருளாதாரத்தில் நலிவடைந்தோருக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை புறக்கணிக்கும் நிலை மக்கள் மன்றத்தில் விரைவில் உருவாகும். அதற்கான முயற்சியில் சமூகநீதி ஆர்வலர்கள், அமைப்பாளர்கள் களம் இறங்கிப் பணியாற்றிட முன்வருவோம்.

- இவ்வாறு தமிழர் தலைவர் தமது உரையில் குறிப்பிட்டார்.

கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் நடத்திய சமூகநீதிக் கருத்தரங்கிற்கு பல்வேறு துறை சார்ந்த பெருமக்கள், கல்லூரி பல்கலைக்கழக மாணவர்கள் பெருந்திரளாக வருகை தந்திருந்தனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள அரசமைப்பு 103ஆம் திருத்த சட்டம்பற்றிய விரிவான கருத்தரங்கினை கருநாடக மாநில பிற்படுத்தப் பட்டோர் ஆணையம் வெற்றி கரமாக நடத்தியதை அனைவரும் பாராட்டி வரவேற்றனர்.

சமூக நீதிக் கருத்தரங்கம் - தமிழர் தலைவர் பங்கேற்பு (பெங்களூரு - 28.1.2019)

படம் 1: கருநாடக பிற்படுத்தப்பட்டோர் அமைப்பின் சார்பில் 'சமூகநீதிக் காவலர்' தமிழர் தலைவருக்கும், எச். காந்தராஜ் (கே.எஸ்.சி.பி.சி. தலைவர்) அவர்களுக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். படம் 2: விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு விழாக் குழுவின் சார்பில் ஆணையத்தின் உறுப்பினர், செயலாளர் வசந்த்குமார், அய்.ஏ.எஸ். கருநாடக மாநில பாரம்பரியம் மிக்க தலைப்பாகை அணிவித்து நினைவு பரிசு வழங்கினர். உடன்: கருநாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு பாண்டுரங்க ஷெட்டி, மாநிலங்களவை காங்கிரசுக் கட்சி உறுப்பினர் அரிபிரசாத் எம்.பி. உள்ளனர்.

விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தமிழ்நாடு, கருநாடக மாநில தோழர்களும், அரசு மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய உயரதிகாரிகளும் பயனாடை மாலை அணிவித்து வரவேற்றனர்.

கருநாடக மாநில பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தவர்கள் 'இடஒதுக்கீடு நாயகன்' என அன்போடு அழைத்து தமிழர் தலைவருக்கு ஏராளமாக மாலைகள், பயனாடைகள் அணிவித்து மகிழ்ந்தனர்.

சமூகநீதிக் கருத்தரங்கத்தில் தலைவரின் உரையைக் கேட்க திரண்டிருந்த மாணவர்களும், சமூகநீதிப் பேராளர்களும்

-  விடுதலை நாளேடு, 29.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக