பெரியார் மண்ணின் எதிர்ப்பு கந்தகக் குரல்கள்!
புதுடில்லி, ஜன.10 உயர்ஜாதியினருக்கு இட ஒதுக்கீட்டில் பொருளாதார அடிப்படையில் 10 விழுக்காடு என்பதற்கு தந்தை பெரியார் பிறந்த மண்ணின் மைந்தர்கள் எதிர்ப்புக்குரலை நாடாளுமன்றத்தில் உரக்கப் பேசினர்.
கனிமொழி எம்.பி.,
மாநிலங்களவையில் தி.மு.க. குழுவின் தலைவர் கவிஞர் கனிமொழி எம்.பி., உரை யாற்றுகையில்,
பெரியார் பிறந்த மண்
நான் சமூகநீதிக்கென நூறு ஆண்டுகளுக் கும் மேற்பட்ட வரலாற்றைப் பெற்றிருக்கும் பெரியாரின் மண்ணில் இருந்து வந்திருக் கிறேன். பெண்களுக்கு முதன் முதலில் வாக்குரிமை அளித்த மண் எங்கள் மண். முதன் முதலாக இந்த நாட்டில் வகுப்புவாரி ஒதுக்கீட்டை நீதிக்கட்சியின் ஆட்சியில் கொண்டுவந்தது எங்கள் மண். நாட்டில் முதன் முறையாக 1969 ஆம் ஆண்டில் பிற் படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தவர் எங்கள் தலைவர் கலைஞர். இதன்மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 25% இல் இருந்து 30% ஆக அதிகரிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டமன்றத்தில் பேசிய எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பொருளா தார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டைக் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.
பொருளாதார இடஒதுக்கீடு!
உச்சநீதிமன்றம் மறுப்பு!
பி.வி.நரசிம்மராவ் அவர்கள் பிரதம ராகஇருந்தபோது பொருளாதாரஅடிப் படையிலான இட ஒதுக்கீடு கொண்டு வர முயற்சிக்கப்பட்டது. ஆனால் உச்சநீதி மன்றம் இது தொடர்பான வழக்கில், பொருளாதாரஅடிப்படையில் இட ஒதுக்கீடு நிர்ணயிக்க முடியாது'' என்று திட்ட வட்டமாகச் சொல்லிவிட்டது. சமூகரீதியாகப் பின் தங்கியவர்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கியிருக்கும் பட்சத்தில் இடஒதுக்கீடு வழங்குவதில் தவறில்லை. ஆனால் இட ஒதுக்கீட்டுக்கு பொருளாதாரத்தை மட்டுமே அடிப்படைக் காரணியாகக் கருதவே முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.
இந்த அரசு ஓர் இரவில் கொண்டு வரு கிறது. ஆனால் அதுபற்றி எழும் சில எதிர்ப்புக் குரல்களையும் அடக்கலாமா?
பண்டித நேரு மறுத்த பொருளாதார இடஒதுக்கீடு!
நாட்டின் முதல் பிரதமர்பண்டித ஜவகர்லால் நேரு கொண்டுவந்த முதல் அரசியல்சாசனத் திருத்தத்தில் சமூக,கல்வி ரீதியாகப் பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்தார். அதில் பொருளாதார அடிப்படையில்'' என்ற வார்த்தையைச் சேர்ப்பதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்தார். ஆனால், இன்று பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்று இந்த அரசு சொல்கிறது. நான் கேட்கிறேன்; பத்து சதவிகிதம் என்று எந்த அடிப்படையில் தீர்மானித்தீர்கள்? அரசு ஆய்வு ஏதும் நடத்தியதா? தி.மு.க. அரசாங்கம் தமிழகத்தில் சட்டநாதன் ஆணையம், அம்பா சங்கர் ஆணையம் உள்ளிட்ட ஆணையங்களை அமைத்து அறிவியல் ரீதியாக பல கட்ட சமூக ஆய்வுகள் நடத்தப்பட்டு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது
மண்டல் கமிஷன் அமைத்து அதன் அடிப்படையில் மத்தியிலும் இட ஒதுக் கீடு வழங்கப்பட்டது. ஆனால் இன்று திடீரென பத்து சதவிகிதம் இடஒதுக்கீடு என்கிறீர்கள். இந்த எண்ணிக்கையை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? அது தொடர்பாக என்ன மதிப்பீட்டாய்வு செய்தீர்கள்?
மத்திய அரசுப் பணிகளில் இன்றுவரை பிற் படுத்தப்பட்ட, பட்டியலின மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. குரூப் ஏ' பணிகளில் 17% இடஒதுக்கீடும், குரூப் `பி பணிகளில்14% இட ஒதுக்கீடும், குரூப் சி'பணிகளில் 11% இட ஒதுக்கீடும், குரூப் டி' பணிகளில்10ரூ இடஒதுக்கீடும் தான் வழங்கப்பட்டுவருகிறது. முதலில் இந்த இடஒதுக்கீட்டையே உங்களால் ஒழுங்காக நடைமுறைப்படுத்த இயல வில்லை. பிறகு எதற்கு வேறு கனவு களுக்கு வண்ணம்பூசுகிறீர்கள்?
நேற்று மாண்புமிகு நிதியமைச்சர் அருண்ஜேட்லி அவர்கள் பேசும்போது, இந்த மசோதா இரு அவைகளிலும் நிறை வேற்றப்பட்ட பிறகு மாநிலங்களுக்கு அனுப்பப்படாது'' என்று கூறியிருக்கிறார். அவர் நாட்டின் மிகச் சிறந்த சட்ட மூளைக்காரர். அவரது அறிவுக்கூர்மையை நான் வியக்கிறேன். ஆனால், இது எப்படிச் சாத்தியம்? இந்த மசோதா நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தையும் பாதிக்கும். இந்த மசோதா நாடாளுமன்றத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். இதுபற்றி நான் ஏற்கெனவே தாக்கீது கொடுத்திருக்கிறேன்!
இவ்வாறு கனிமொழி எம்.பி., மாநிலங் களவையில் உரையாற்றினார்.
124 ஆவது சட்ட திருத்தம் என்பது மோடி அரசின் மோசடி: வைகோ கண்டனம்
மத்திய பாஜ அரசு சமூகநீதி தத்துவத்தின் அடித்தளத்தை தகர்த்து தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரி வித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை வருமாறு: பாஜ அரசு சமூகநீதித் தத்துவத்தின் அடித்தளத்தையே தகர்த்துத் தரைமட்டம் ஆக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது கடும் கண்டனத்துக்கு உரியது. மக்களவையில் நிறை வேற்றப்பட்ட அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த முன்வடிவு, மோடி அரசின் மோசடியை அம்பலப்படுத்தி இருக்கிறது. பொருளாதார அளவுகோல் என்பது அவ் வப்போது மாறக்கூடியது என்றும், அதனை ஏற்க முடியாது என்றும் முதல் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோதே வரை யறை செய்யப்பட்டுவிட்டது. தற்போது பாஜ அரசு உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு என்று சட்ட முன்வடிவு கொண்டு வந்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது மட்டுமல்ல, இடஒதுக்கீட்டு கோட்பாட்டையே சீர்குலைக்கும் சதி வலைப் பின்னல் என்பதை எவரும் மறுக்க முடியாது.
இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
10 சதவீத இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது: அதிமுக எம்.பி. நவநீதகிருஷ்ணன்
மாநிலங்களவையில் இந்த மசோதா மீதான விவாதத்தில் அதிமுக எம்.பி நவநீதி கிருஷ்ணன் பேசியதாவது:-
10% இட ஒதுக்கீடு அரசியல் சாசனத்திற்கு எதிரானது. நரசிம்மராவ் ஆட்சியில் 10% இடஒதுக்கீடு கொண்டுவந்தபோது ஏற்கனவே நீதிமன்றம் தடைவிதித்தது. இடஒதுக்கீடு என்பது தனிப்பட்ட நபருக்கு இல்லாமல் ஜாதிவாரியாகத்தான் இருக்கவேண்டும். தமி ழகத்தில் 69% இடஒதுக்கீடு கொண்டுவர மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்.
பொருளாதார அடிப்படையிலான இந்த மசோதாவை அதிமுக கடுமையாக எதிர்க் கிறது. எந்தவொரு ஆவணமும் கணக் கெடுப்பும் இல்லாமல் மத்திய அரசு 10% இடஒதுக்கீட்டை கொண்டு வருகிறது என்றார். இதனையடுத்து பொதுப்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலங்களவையில் அதிமுக வெளிநடப்பு செய்தது.
10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது: அரவிந்த் கெஜ்ரிவால்
பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப் பிரிவினருக்கு (உயர் ஜாதியினர்) அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்காக, அரசியல் சட்டத்தில் 124- ஆவது சட்ட திருத்தம் செய் யும் மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது.
இதையடுத்து, மசோதாவை நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் நேற்று தாக்கல் செய்தார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கு இடையே மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் பொருளாதார ரீதியாக நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசின் முடிவுக்கு ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டில்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரி வால் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியி ருப்பதாவது;
10% இட ஒதுக்கீடு வழங்குவது மிகவும் ஆபத்தானது. ஏழைகளுக்கு உதவு வதை இலக்காகக் கொள்ளவில்லை. ஜாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை ஒழிப்பதற்கான சதித்திட்டம், அரசின் இந்த முடிவுக்கு பின்னால் ஒளிந்திருப்பதாக கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்
சமூக நீதியைக் காப்பாற்றவும், பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையைத் திணிக்கும் சதி முயற்சியை முறியடிக்கவும் ஏதுவாக, சமூகநீதி சக்திகளை ஒருங்கிணைக்கும் வகையில் வரும் 11.1.2019 அன்று சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் ஒருங்கிணைக்கப்படுகிறது. இந்த ஆர்ப்பாட் டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் அனைத்து தரப்பு ஜனநாயக சக்திகள் யாவரும் தவறாமல் பங்கேற்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறைகூவி அழைப்பு விடுக்கிறது என தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 10.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக